பண்பாட்டு வரலாற்றுக்கொரு புது வரவு


ஒவ்வொரு சமூகத்தின் இருப்பையும் இயக்கத்தையும் அச்சமூகத்தில் நிலவும் கருத்தியல்களே தீர்மானிக்கின்றன. கருத்தியல்கள் உருவாகக் காரணமாக இருப்பவை அச்சமூகத்தில் நிலவும் பகை முரண்களின் வெளிப்பாடுகள். பகை முரண்களைத் தீர்மானிப்பவை அக்காலகட்டத்தின் பொருளாதார அடித்தளம் என்பது மார்க்சியம் சொல்லும் ஒரு சூத்திரம்.
நிகழ்காலத் தமிழ் வாழ்வில் நாம் உணரும் முரண்பாடுகள் பலவிதமானவை. சில முரண்கள் தற்காலிகத் தன்மை கொண்டவை; சில முரண்கள் நிரந்தரத் தன்மை கொண்டவை. விரிந்த எல்லைப் பரப்பு தேவைப் படாததாகவும் உடனடி வெளிப்பாடுகள் கொண்டதாகவும் இருக்கும் தற்காலிக முரண் பாடுகள்,பொருளாதார அடித்தளத்தோடு நெருக்கம் கொண்டனவாக இருக் கின்றன.ஆனால் நிரந்தரமான முரண்பாடுகள் எல்லா நேரத்திலும் பொருளா தார அடித்தளத்தோடு நேரடித் தொடர் புடையனவாகக் காட்டிக் கொள்வ தில்லை.அதற்கு மாறாகப் பண்பாட்டியல் அடையாளங்களோடு உறவு கொண்டனவாகக் காட்டிக் கொள்கின்றன.

சிந்திப்பவர்களாகக் கருதிக் கொள்ளும் தமிழ்நாட்டுத் தமிழர்களின் கருத்தியல் அடியோட் டத்தில் தீர்மானகரமான ஒரு முரணாகப் பார்ப்பணர் x பார்ப்பணர் அல்லாதோர் என்ற முரணிலை இருந்து கொண்டே இருக்கிறது. பார்ப்பணர் x பார்ப்பணர்அல்லாதார் முரண்பாடு போலவே தமிழர்-வட இந்தியர்(வடமொழி); தமிழ்- பிறமொழி(யினர்) போன்ற முரண்பாடுகள் எல்லாம் இன்று தமிழகத்தில் தூக்கலாக இருக்கின்றன. பார்ப்பணர் அல்லாதோர் இயக்கம் தோற்றுவிக்கப் பட்ட இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்திற்குப் பின்பு தான் தமிழ் நாட்டுத் தமிழ் மனம் இப்படியான முரணிலைகளின் அடிப்படையில் சிந்திக்கிறதா? இன்று இடதுசாரி இயக்கங்கள் திரும்பவும் பார்ப்பணர் x பார்ப்பணர் அல்லாதார் என்ற முரணிலயைத் தொட்டு விவாதிக்கும் புள்ளியை நெருங்கிக் கொண்டிருப்பதன் காரணங்கள் எவை? சாதிக் கட்டு மானத்தைத் தகர்ப்பது என வெளிப்படையான நோக்கத்தோடு தொடங்கும் தலித் இயக்கங்கள் கடைசியில் பார்ப்பணர் x பார்ப்பணர் அல்லாதார் என்ற முரண்பாட்டிற்குள் வந்து நுழையும் நிலை ஏன் ஏற்படுகிறது? இந்த முரணிலையைத் தவிர்த்து விட்டு ஒரு தமிழ் மனம் சிந்திப்பது இயலாது என்ற நிலை உருவாக்கப்பட்டது எப்படி? இப்படிப் பல வினாக்களுக்கு விடை தேட நினைக்கும் போது செய்ய வேண்டிய ஆய்வாக வைதீக சமயம் பற்றிய ஆய்வு முன்னிற்கிறது.

வைதீக சமயம் வெளியில் இருந்து வந்த பார்ப்பணர்களின் சமயம் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு விவாதிக்கப்படும் இத்தகைய முரண்பாடுகள் பண்பாடு சார்ந்து தங்கள் அடையாளத்தைத் தேடும் நோக்கம் கொண்டவை என்ற போதும் தூய்மை வாதம் என்னும் அடிப்படைவாதத்தோடு நெருங்கிய தொடர்பு கொண்டவை என்பதையும் மறந்து விடக் கூடாது. பூமி புத்திரர்கள் அல்லது மண்ணின் மைந்தர்கள் என்னும் கருத்தியல் சார்ந்து இயங்குபவர்கள்,தங்கள் அடையாளங்கள் எவை எனத் தேடும் போது அவர் களை அறியாமல் மற்றமை மீது வெறுப்பை உண்டாக்கிக் கொண்டே போவதும் தவிர்க்க முடியாமல் நிகழ்ந்து கொண்டே இருக்கும். இந்தக் காரணம் பற்றியே இடதுசாரி விமரிசகர்கள் இம்முரணிலையைத் தவிர்த்து விட்டுப் பொருளாதார முரண்பாடுகளின் அடிப்படையில் மட்டுமே சிந்திக்கும் படி தூண்டினார்கள். ஆனால் இந்திய சமூகத்திற்குச் சாதி வேறுபாடுகள் என்ற கருத்தியலையும், அதன் அடிப்படையிலான ஒடுக்குமுறை வடிவத்தையும் கொண்டு வந்து சேர்த்தது பார்ப்பணீய நலனை மையப்படுத்திய வைதீக சமயம் என்பது பாரதூரமான உண்மையாக இருக்கும் நிலையில் வைதீக சமயத்தின் தோற்றம், அவற்றின் பரவல், அதிகாரத்தைக் கைப்பற்ற அது பின்பற்றிய கருவிகள் போன்றவற்றைக் கண்டறிந்து சொல்ல வேண்டிய கட்டாயம் அறிஞர்கள் முன்னே இருக்கும் முக்கிய கடப்பாடு. அந்தக் கடமையை மேற்கொள்ளும் போது முன்னரே குறிப்பிட்டபடி நிகழ்காலச் சமூகத்தில் மோதல்களைத் தூண்டிவிடும் ஆபத்திருக்கிறது என்ற எச்சரிக்கை உணர்வுடனும் செய்ய வேண்டும்.

அத்தகைய எச்சரிக்கை உணர்வுடன் ஆய்வு செய்திட மார்க்சிய இயங்கியல் என்னும் முறையியல் தொடர்ந்து தமிழ்ச் சிந்தனையாளர்களுக்கு ஒரு கைவிளக்காக இருந்து வந்துள்ளது.அந்த விளக்கின் வெளிச்சத்திலேயே திறனாய்வாளர் தி.சு.நடராசன் வரலாறும் வக்கணைகளும் என்றொரு துணைத்தலைப்புடன் தமிழகத்தில் வைதீக சமயம் என்றொரு நூலை எழுதியுள்ளார்.

பார்ப்பணர் x பார்ப்பணர் அல்லாதார் என்ற நிகழ்கால முரணை அதே சொல்லாடலில் தேடாமல் வைதீக சமயத்தின் தோற்றம், தமிழகத்தில் அதன் வளர்ச்சி, இடத்திற்கும் நேரத்திற்கும் தக்கவாறு வைதீக சமயம் தன்னைத் தகவமைத்துக் கொண்ட பாங்கு, தகவல்களின் நிரல் வரிசையான வரலாற் றையும் கருத்தியல் உருவாக்கத்தின் முக்கியக் கருவியான இலக்கியத் தையும் வைதீக சமயம் பயன்படுத்திக் கொண்ட விதம் என்பதை ஒரு நேர்கோட்டு வரலாறாகச் சொல்லாமல் முன்னும் பின்னுமாகப் போய் விவரிக்கும் கதையாடல் பாணியில் சொல்கிறது இந்நூல்.
1. தொடரும் சமயப் பேச்சு
2. தமிழ்ச் சூழலும் பார்ப்பணர் வருகையும்
3. வைதீக வருணப்பகுப்பு: தமிழ்ச் சூழலோடு
4. அந்தணர் நூலும் மன்னவன் கோலும்
5. மறுவாசிப்பில் சிலம்பு: சமயநிகழ்வுகளை முன்னிட்டு
6. வேள்விக்குடிகளும் வேதவாக்கும்
7. பக்தி இயக்கம்
8. வைதீக சமயம்: பயணங்கள் பாதைகள்
9. வேதமும் கடவுளரும் தமிழ் அடையாளமும்
என அமைக்கப்பட்ட ஒன்பது இயல்களும் வைதீக சமயத்தின் வரலாற்றைச் சொல்வதை முதன்மை நோக்கமாகக் கொண்டவை என்றாலும், அதனூடாகத் தமிழ் இலக்கிய வரலாற்றின் முக்கியப் பனுவல்களைச் சமுதாயவியல் அணுகுமுறை மற்றும் கட்டவிழ்ப்பு முறையியலைப் பயன்படுத்தித் திறனாய்வு செய்வதையும் துணைமை நோக்கமாகக் கொண்டுள்ளன.
முதல் நான்கு இயல்கள் சங்க இலக்கியப் பனுவல்களை ஆதாரமாகக் கொண்டு வைதீக சமயத்தின் தமிழக வருகையை உறுதி செய்ய ஐந்தாவது இயல் தமிழின் தனிப்பெரும் காப்பியமான சிலப்பதிகாரத்தை மறுவாசிப்பு செய்வதன் மூலம் புதிய முரண்பாடுகள் அதன் காலத்தில் எப்படி இருந்தன என்பதைக் காட்டுகிறது. இளங்கோவடிகளின் கண்ணகி உருவாக்கம் தமிழ் அடையாள உருவாக்கம் என்பதைச் சொல்லும் அக்கட்டுரை, சிலம்பில் காணப்படும் மறையோர் என்ற சொல் பிரயோகத்தையும், மாடல மறையவன் என்ற துணைக் கதாபாத்திர வார்ப்பையும் மட்டும் விளக்கிக் காட்டுவதன் மூலம் சாதித்துக் காட்டுகிறது. இதன் மூலம், தமிழ் திறனாய்வுப் போக்கிற்கு அக்கட்டுரை ஒரு புதுவகைத் திறனாய்வு முறையை அறிமுகம் செய்துள்ளது. அதனை அடுத்து அமைந்துள்ள இயல் வரலாற்றுச் சான்றுகளை மறுவாசிப்புச் செய்ய வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தித் தமிழக வரலாற்றின் திருப்பு முனை ஆதாரமான வேள்விக்குடிச் செப்பேடுகளை மறு வாசிப்பு செய்வதன் மூலம் அச்செப்பேடுகள் ஏறத்தாழ ஆறு நூற்றாண்டுகளை உறையச் செய்த புனைவு வரிகள் எனக் காட்டுகிறார். இவ்விரு கட்டுரைகளும் இந்நூலின் ஆகச் சிறந்த கட்டுரைகள் எனலாம். பண்டைய தமிழ் இலக்கியப் பயிற்சி உள்ளவர்கள் இக்கட்டுரையைப் படிக்கும் போது ஒரு புனைகதையை வாசிக்கும் அனுபவத்தைப் பெறுவார்கள்.

பின்னர் வரும் கட்டுரைகள் பக்தி இலக்கியங்களைத் தரவுகளாகக் கொண்டு சைவx வைணவ அடையாளங்களைத் தக்கவைப்பதற்குள் வைதீக சமயம் தன்னை வளர்த்துக் கொண்ட பின்னணி சொல்லப்படுகிறது. அப்படிச் சொல்லும் போது பக்தி இயக்கமே வைதீக சமயத்தைத் தமிழ்ச் சமயமாக ஆக்கியது என்பதை அழுத்தமாகச் சுட்டிக் காட்டுகிறார் தி.சு.நடராசன். இதன் தொடர்ச்சியாகச் சிற்றிலக்கியங்களை ஆதாரங்களாகக் கொண்டு இன்னொரு கட்டுரை எழுதிச் சேர்க்கப் பட்டிருக்க வேண்டும். பக்தி இயக்கம் தன்னைத் தமிழ் அடையாளத்தோடு வளர்த்துக் கொண்டதன் தொடர்ச்சி அறுபட்டதை அவ்விலக்கியங்கள் தங்கள் வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் கொண்டிருப்பதை அதன் மூலம் எடுத்துக் காட்டியிருக்க முடியும். அத்தோடு வைதீக சமயம் தமிழல்லாத பிறமொழியாளர்களின் ஆட்சியில் இறுக்கமான சமூகக் கோட்பாடுகளைத் தனக்குள் வாங்கிக் கொண்ட காலகட்டம் அது என்பதையும் அக்கட்டுரை மூலம் சுட்டிக் காட்டலாம். இதனைச் செய்தவர்கள் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட புலவர்கள் அல்ல; தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட சைவப் புலவர்கள் என்ற உண்மையை விளக்கிக் காட்டி அதன் காரணங்களையும் நூலாசிரியர் பேசியிருக்க முடியும்.
நிகழ்காலத் தமிழ்ச் சிந்தனைத் தளத்திலும் அரசியல் தளத்திலும் செயல்படும் பலரும் இந்நூலில் உள்ள ஒவ்வொரு கட்டுரையையும் ஒவ்வொரு விதமாக விவாதப் படுத்தக் கூடும். அதற்கான வாய்ப்புகளை உருவாக்கித் தந்துள்ளன இக்கட்டுரைகள். இலக்கியங்களிலிருந்து தேவையான சான்றாதாரங்களைத் தொகுத்துக் கொண்டு கல்வித்துறை முறையியலைச் சரியாகப் பின்பற்றிச் செல்லும் இந்நூல் கல்வியியல் ஆய்வாளர்கள் முன்மாதிரியாகக் கொள்ளத்தக்க ஒரு நூல் என்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.

இப்படிச் சொல்லும் அதே வேளையில் தமிழகப் பண்பாட்டு வரலாற்றைத் தமிழ் இலக்கியங்களை ஆதாரமாகவும் மார்க்சீய இயங்கியல் ஆய்வு முறையை ஆய்வுக்கருவியாகவும் கொண்டு ஆய்வுகள் செய்துள்ள க.கைலாசபதி, கா.சிவத்தம்பி, நா.வானமாமலை, க.சுப்பிரமணியன், கோ.கேசவன் போன்றவர்களிடமிருந்து தி.சு.நடராசன் வேறுபடும் விதம் ஒன்றைச் சுட்டிக் காட்டவும் வேண்டியுள்ளது. அவர்கள் தங்கள் நூலை வாசிப்பவர்களைப் பலராகக் கணித்து படர்க்கைநிலைக் கூற்றில் எழுதிட, தி.சு.நடராசன் தன்னுடைய கட்டுரைகளை ஒரேயொரு வாசகனோடு உரையாடும் முன்னிலைக் கூற்றாக அமைத்துள்ளார் என்பதைச் சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது. இம்முன்னிலைக் கூற்று வாசகனை வேறுபக்கம் திசைமாறி விடாமல் கைப்பிடித்து அழைத்துச் செல்லும் நோக்கம் கொண்டது. தான் காட்டும் இடங்களை யெல்லாம் பார்த்தே ஆக வேண்டும் என்று வலியுறுத்துவது. விவாதங்களை உள்வாங்கி தாங்களே கருத்துக்களை உருவாக்கிக் கொள்ள வேண்டிய சிந்தனை சார்ந்த - வரலாற்றுக்குள் நுழையும் இவ்வகை நூலுக்கு அத்தகைய வலியுறுத்தல் எவ்வளவு தூரம் ஏற்புடையது என்பதும் யோசிக்க வேண்டிய ஒன்று.
தமிழகத்தில் வைதீக சமயம்
வரலாறும் வக்கணைகளும்
தி.சு.நடராசன்
முதல் பதிப்பு: டிசம்பர்,2008
நியூசெஞ்சுரி ஹவுஸ் (பி)லிட், சென்னை-600098, விலை : ரூ.110/-

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்