விசித்திரமான இந்தியா


காலைத் தினசரியைக் கூட வாசிக்கத் தொடங்கியிருக்கவில்லை. தொலைக்காட்சி- தொழில் நுட்பம்- பண்பாடு பற்றித் தீவிரமான ஆய்வுகள் செய்து கட்டுரைகள் எழுதியுள்ள ரேமாண்ட் வில்லியம்ஸின் கட்டுரை கையில் இருந்தது. தொலைக்காட்சிகள் உருவாக்கும் பண்பாட்டுயைப் பற்றி எழுதிய அந்தக் கட்டுரையை மொழி பெயர்த்து விட வேண்டும் என நினைத்து இரண்டாவது முறையாகப் படித்துக் கொண்டிருந்தேன். அகராதியில் அர்த்தம் பார்க்க வேண்டிய வார்த்தைகளைக் குறித்துக் கொண்டிருந்த போது அந்தத் தொலைபேசி அழைப்பு வந்தது. அழைத்தவர் தொலைக்காட்சியைப் பார்க்கச் சொன்னார். பொதுவாக எங்கள் வீட்டில் காலையில் தொலைக்காட்சியை திறந்து விடுவதில்லை.

தொலைக்காட்சியின் விசையை முடுக்கியவுடன் பொதிகைத் தொலைக்காட்சியில் தொடங்குவது வழக்கம். பொதிகையில் பார்த்தாக வேண்டியதாக ஒன்றும் இல்லை. அலைவரிசைகளைத் தாண்டிக் கொண்டே போன போது கலைஞர் தொலைக்காட்சி அலைவரிசையையில் அந்த முக்கியச் செய்தி நகர்ந்து கொண்டிருந்தது. தொடர்மழை காரணமாகத் தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை விடப்படுவதான அரசின் அறிவிப்பைப் பார்த்தவுடன் மதியச் சமையலை நிறுத்தி விடும் நோக்கத்தில் மனைவியிடம் சொன்னேன்.
அரசுச் செய்தியை அரசின் தொலைக்காட்சியான பொதிகை அலைவரிசையில் சொல்லாமல் ஆளுங் கட்சியின் ஆதரவு அலைவரிசியில் சொல்வது தமிழ்நாட்டிற்குப் புதிதல்ல. இதற்கு முன்பு சன் அலைவரிசை சொன்னது; அதற்கும் முன்பு ஜெயா அலைவரிசை தான் சொன்னது. ஆளுங்கட்சியின் ஆதரவுத் தொலைக்காட்சியை அரசின் தொலைக்காட்சியாக ஏற்றுக் கொள்ளும் பக்குவம் தமிழக மக்களுக்கு ஏற்பட்டுச் சில பத்தாண்டுகள் ஆகி விட்டன. கட்டுரையைப் படித்து முடித்த போது மணி பத்தரை ஆகி இருந்தது.
21-10-2008 அன்று விடுமுறை என்று அறிவிப்புச் செய்த கலைஞர் தொலைக்காட்சியைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்தோம். ஆஸ்திரேலியாவிற்கும் இந்தியாவுக்கும் இடையே மொகாலியில் நடக்கும் இரண்டாவது கிரிக்கெட் டெஸ்டின் கடைசி நாள். ஆஸ்திரேலியாவை உறுதியாக வெல்லும் வாய்ப்புண்டு.ஆங்கிலச் செய்தி அலைவரிசைகள் பக்கம் தாவினேன். இந்திய அணி வெற்றியின் வாசனையை நெருங்கிக் கொண்டிருப்பதாக ஆங்கில எழுத்துக்கள் வந்த போய்க் கொண்டிருந்தன. ஒவ்வொரு விக்கெட்டின் வீழ்ச்சியையும் இந்திய அணியினர் வெளிப்படுத்தும் உற்சாகத்தோடு பார்வையாளர்களுக்குச் சொல்லி விட வேண்டும்; காட்டி விட வேண்டும் என அந்த அலைவரிசைகள் ஆர்வம் காட்டுவதில் போட்டி போடுவதை மாற்றி மாற்றிப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை அபாரமாக வென்றது என்ற தகவலைச் சொல்லுவதற்கு முன்பு இன்கிரிடபிள் இண்டியா (Incredible India) ஆங்கிலச் சொற்கோவையைப் பயன்படுத்தியது ஒரு தொலைக்காட்சி.அந்த வார்த்தைக்கான தமிழ் அர்த்தம் நம்ப முடியாத ஒன்று. இந்தியா ஆஸ்திரேலியாவை வென்றது நம்ப முடியாத ஒன்று தான். கிரிக்கெட் விளையாட்டில் ஆஸ்திரேலியாவின் இடம் அனைவருக்கும் தெரிந்தது. தொடர்ந்து முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கும் அந்த அணியை 320 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது நம்ப முடியாத ஒன்று தான். குதூகலத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்த அந்த நேரத்தில் இன்னொரு மின்னல் செய்தியும் இடையே வந்து விட்டுப் போனது.
மும்பையில் கைது செய்யப்பட்டுள்ள மகாராஷ்டிர நவ நிர்மான் அமைப்பின் ராஜ் தாக்ரே நீதிமன்றத்தில் நிறுத்தப் பட உள்ளார் என்பது அந்த மின்னல் செய்தி. உடனேயே ஏராளமான போலீஸ் நீதிமன்ற வாசலில் பதற்றத்துடன் நிற்கும் காட்சி காண்பிக்கப் பட்டது. தமிழ் நாட்டில் பெருமழைக்காகப் பள்ளிகளும் கல்லூரிகளும் அடைக்கப் பட்ட செய்தியைத் தமிழ் அலைவரிசைகள் சொன்னது போல மும்பையில் கலவரத்திற்குப் பயந்து கல்வி நிறுவனங்கள் அடைக்கப்படுவதாக ஆங்கில அலைவரிசைகள் காட்சிகளைக் காட்டத் தொடங்கிஅன.
கைது செய்யப்பட்ட ராஜ்தாக்ரே ஒப்பனை குலையாமல் நிதானமாக நீதிமன்றத்திற்குள் நுழைந்து கொண்டிருந்தார். அவரது நிதானத்தின் மறுதலையாகச் சாலைகளில் கலவரக்காரர்கள் அட்டகாசங் களும் ஆரம்பித்தன. அடித்து நொறுக்கப்படும் கடைகள், பற்றி எரியும் வாகனங்கள், பஸ்நிறுத்தங்கள், மிரண்டோடும் அப்பாவிகள். சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டிய காவல்துறையோ இறுக்கத்துடன் ஆங்காங்கே கலவரக்காரர்களை விரட்டிக் கொண்டிருந்தது. அன்றைய பொழுது முழுவதும் ஆங்கிலச் செய்தி அலைவரிசைகளுக்கு மொகாலியில் இந்திய கிரிக்கெட் அணி அடைந்த வெற்றியும், மும்பையில் ராஜ் தாக்ரேயின் ஆர்ப்பாட்ட அரசியலும் நேரடிக் காட்சிகளாகக் காண்பிப்பதற்குப் போதுமானதாக இருந்தன.
ஆங்கிலச் செய்தி அலைவரிசைகளின் நடுநிலைமையும் பாரபட்சமின்மையையும் பாராட்ட வேண்டும். ஆஸ்திரேலியாவை இந்திய அணி வென்றதைப் பார்வையாளர்களுக்குத் தருவதில் எவ்வளவு ஆர்வம் காட்டினார்களோ அதே அளவு ஆர்வத்துடன் ராஜ் தாக்ரேயின் முகத்தையும் காட்டினார்கள், அவரது ஆதரவாளர்களின் குதூகலத்தையும் ஆர்ப்பாட்டத்தையும் கூட அதே கவனத்துடன் காட்டத் தவற வில்லை. இவ்விரண்டு காட்சிகளும் ஏதோ ஓரிரு முறை காட்டப்பட்டன என்று நினைத்து விட வேண்டும். அன்று காலை தொடங்கி மாலை வரை கிரிக்கெட் வெற்றியும், ராஜ் தாக்ரேயின் குண்டர் ராஜ்ஜியமும் பக்கத்தில் பக்கத்தில் வைத்துக் காண்பிக்கப் பட்டுக் கொண்டே இருந்தன.
வெவ்வேறு மாநிலத்திலிருந்து வீரர்களைத் தேர்ந்தெடுத்து உண்டாக்கிய விளையாட்டு அணியின் வெற்றியைக் காட்டும் தொலைக்காட்சி அலைவரிசை, தேசத்தைத் துண்டாடுவதற்குரிய அரசியலை முன்னெடுக்கும் ஒருவரின் போக்கையும், ஆதரவாளர்கள் செய்யும் அழிம்பு வேலைகளையும் அதே கரிசனத்தோடு காட்டும் நோக்கம் என்னவாக இருக்கும் என்ற கேள்வி யாருக்கும் எழப்போவதில்லை.
மொகாலியில் கிரிக்கெட் நடந்தது; இந்திய அணி வென்றது; அதனைக் காட்டுகின்றார்கள். மும்பையில் ராஜ் தாக்ரேயின் கைதும், அதனைத்தொடர்ந்து அங்கு கலவரமும் நடந்தன. அதனையும் காட்டு கிறார்கள். நடப்பனவற்றைக் காட்ட வேண்டியதும், செய்திகளைப் பாரபட்சமின்றிச் சொல்ல வேண்டியதும் ஊடகங்களின் வேலை என்றும் நாம் நினைக்கலாம். ஆனால் ஊடகங்கள் உருவாக்கும் மனித மனத்தின் போக்கைத் தொடர்ந்து கவனித்து ஆய்வு செய்யும் ஊடக ஆய்வாளர்கள் அப்படி நினைப்பதில்லை.
தொலைக்காட்சிகளில் தொடர்ந்து காட்டப்படும் பிம்பங்களுக்குப் பார்வையாளர்களின் கண்களும் மனமும் பழகிப் போவதை ஒருவரும் தடுத்து நிறுத்தி விட முடியாது. மென்மையான காட்சிகளுக்கும் தகவல் களுக்குப் பழக்கப்படுவது போல வன்மையான காட்சிகளுக்கும் அதிர்ச்சியூட்டும் தகவல்களுக்கும் கூட மனித மனம் பழக்கப்பட்டு விடும். தொடர்ந்து அத்தகைய காட்சிகளே காணக் கிடைத்தால் அதை ரசிக்கத் தொடங்கி விடும். பின்னர் அத்தகைய காட்சிகளையும் தகவல்களையும் பற்றிய கேள்வி களைக் கூட எழுப்பாமல் அதன் வசமாகும் இயல்புக்குள் சென்றுவிடும். இந்த ஆபத்தான பணியைத் தான் ஆங்கிலச் செய்தி அலைவரிசைகள் தொடர்ந்து செய்கின்றன.
உலகமயப் பொருளாதாரத்தின் விளைவாகக் கடந்த பதினைந்து ஆண்டுகளில் நடந்த மாற்றங்கள் ஒருபுறம் இந்திய நகரங்களை வீங்கச் செய்து கொண்டே இருக்கின்றன. தகவல் தொழில் நுட்பம் மற்றும் மென் பொருள் குழுமங்கள் இந்திய இளைஞர்களின் திறமையின் மேல் மட்டும் நம்பிக்கை வைத்து ஒன்றாகத் திரட்டிப் பெங்களூர், ஹைடிராபாத், சென்னை, நொய்டா, பூனா போன்ற நகரங்களில் குடியேற வைத்துக் கொண்டிருக்கின்றன. கூடுதல் பயிற்சிக்காக அயல் நாடுகளுக்கும் அனுப்பி வைக்கின்றன. அப்படிப் போகிறவர்களில் பலர் அங்கேயே தங்கித் தங்கள் வருமானத்தை இந்தியாவிற்கு அனுப்பிக் கொண்டிருக்கின்றனர்.
மாநிலம், மொழி, மதம், சாதி போன்ற வேறுபாடுகள் முன்னிருந்த நிலைமையில் தொடராத நேர்மறைக் கூறுகள் வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் இதே நேரத்தில் தான் ராஜ் தாக்ரே போன்ற பிரிவினைவாதச் சக்திகளும் தீவிரமாகத் தலை எடுக்கின்றன. மகாராஷ்டிரம் மகாராஷ்டிரர்களுக்கே என்ற கோஷம் அங்கு மட்டும் தான் இருக்கின்றன என்று நினைத்து விட வேண்டாம். கர்நாடகாவிலும், ஆந்திரா விலும் கூட மண்ணின் மைந்தர்கள் என்ற பெயரில் இந்தப் பிரிவினைவாதிகள் சுயநலத்திற்காக அப்பாவி இளைஞர்களைத் தூண்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் கூடச் சில சுவர் விளம்பரங்களை நீங்கள் பார்க்கலாம். தமிழ்நாடு தமிழர்களின்நாடா? வந்தேறிகளின் காடா?
எல்லாவற்றையும் காட்சிக்கு வைத்து இன்பமூட்டும் தொலைக்காட்சி பயன்படுத்திய அந்த ஆங்கில வார்த்தைக்கான -Incredible India- அர்த்தத்தை அகராதியில் தேடிப்பாருங்கள். நம்பமுடியாத என்ற அர்த்தத்தோடு இன்னொரு சொல்லும் இருக்கும். அந்தச் சொல்– விசித்திரமான என்பது. ஆம் நமது இந்தியா விசித்திரமான இந்தியா தான்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

இவை ஒரு நகரத்தின் கவிதைகள்