தலித் இலக்கியம் : 2000 க்கு முன்னும் பின்னும்


தொலைபேசியில் அழைத்த அவர் பல்கலைக்கழக இலக்கியத் துறையொன்றில் பணியாற்றி விட்டு ஓய்வு பெற்றவர். தலித் இலக்கியப் படைப்புகளை மதிப்பீடு செய்து நூல் ஒன்றை எழுதப் போவதாகக் கூறி யாரையெல்லாம் படிக்க வேண்டும் என்று கேட்டார். காலச்சுவடு பதிப்பக வெளியீடான தமிழினி 2000 பெருந் தொகுப்பில் இருக்கும் எனது தமிழ் தலித் இலக்கியம் என்ற கட்டுரையைப் படித்தீர்களா? என்று கேட்டேன். அக்கட்டுரையை வாசித்து விட்டேன்.அதில் குறிப்பிடப்பட்டுள்ள படைப்பாளிகளின் படைப்பு களைத் தொகுத்து வைத்துள்ளேன்; வாசித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் அதற்குப் பிறகு - அதாவது 2000-க்குப் பிறகு வந்துள்ள படைப்பாளிகள் மற்றும் படைப்புகள் விவரம் வேண்டும் என்றார்.

 கவி சுகிர்தராணியும் சிறுகதையில் அழகிய பெரியவனும் ஜே.பி.சாணக்யாவும் நினைவுக்கு வர அவர்களின் தொகுதிகளின் பெயரைச் சொன்ன போது திரும்பவும் இரண்டு நாள் கழித்துத் தொலைபேசியில் அழைப்பதாகக் கூறி வைத்து விட்டார்.

தனித்துவத்தைநிலைநாட்டிக் கொண்டு தொடர்ந்து படைப்புகளைச் செய்துவரும் தலித் படைப்பாளிகளின் பெயர்கள் நினைவுக்கு வருவது போலப் புதிய பெயர்கள் எதுவும் நினைவுக்கு வரவில்லை. 2000-க்கு முன் தமிழ்க் கருத்தியல் தளத்திலும் படைப்புத்தளத்திலும், விமரிசனத் தளத்திலும் தவிர்க்க முடியாத சொல்லாகவும், சொல்லாடலாகவும் இருந்த தலித், தலித்தியம், தலித் கலை இலக்கியம் ஆகியன அடைய நினைத்த இலக்குகளை அடைந்து விட்டதால் இனிச் செய்ய வேண்டியது எதுவும் இல்லை என அங்கேயே தங்கி விட்டதா? ஆரம்பித்த வேகத்தில் சில பத்து எழுத்தாளர்களை அடையாளப் படுத்திய தலித் இலக்கியப் போக்கு அடுத்த கட்ட நகர்வினை முன்னெடுக்கும் படைப்பாளிகளை உருவாக்காமல் நின்று போய்விட்டது என்றால் புனைகதையாசிரியர் சோ.தர்மன் சமீபத்தில் ‘தலித்தியம் பின் தங்கி விட்டது’ என்று சொன்னது சரியான கூற்று தானா? [தலித்தியம் பின் தங்கி விட்டது ! –சோ.தர்மனிடம் நேர்காணல் செய்த தீராநதி (ஜூன்,2008) அந்நேர்காணலுக்குத் தந்திருந்த தலைப்பு இது]. பின் தங்கி விட்டது உண்மை தான் என்றால் அதற்கான காரணங்கள் என்னவாக இருக்கக் கூடும் ?இடது சாரி இயக்கங்கள் சார்ந்து இயங்கும் படைப்பாளிகளின் தொடர்ச்சியில் இப்படியான அசைவின்மையும் வெற்றிடமும் ஏற்படாத போது தலித் இயக்கங்களுக்கு மட்டும் இத்தகைய நிலை ஏற்படுவதற்கான காரணங்களும் சாதியம் சார்ந்ததுதானா? என்றெல்லாம் யோசித்துப் பார்க்க வாய்ப்பாக அமைந்த அந்தப் பேராசிரியரின் தொலைபேசி அழைப்புக்கு நன்றி சொல்லி விட்டு அசைபோடத் தொடங்கினேன்.

தீண்டாமை காரணமாகத் நான் ஒதுக்கப்படுகிறன் என்பதைத் தன்னுணர்வோடு- அதனால் உண்டாகும் வலியோடும் கோபத்தோடும் சொல்வதைத் தனது தனித்துவமான அடையாளமாக முன் மொழிந்து எழுந்தது தமிழ் தலித் இலக்கியம். 2000-க்கு முன்பு பாமாவின் கருக்கும் சங்கதியும் தொடங்கி வைத்த அந்தத் தனித்துவம் தொடர்ந்து வளர்த்தெடுக்கப் படாமல் போனதற்கான காரணங்கள் என்னவாக இருக்கும்? தலித் இலக்கியப் பரப்பில் தன் வரலாறுகளுக்கு இடமில்லை என உறுதியாகக் கூற முடியுமா? என்று கேள்வியை எழுப்பி விமரிசன ரீதியாகத் தக்க காரண காரியங்களோடு அவ்வகை எழுத்துகளைக் கைவிட்டதாகச் சொல்ல முடியாது. வந்த வழி எதுவோ அந்த வழியிலேயே வெளியேறியும் விட்டன தன் வரலாறுகள்.

மாராட்டிய மொழியிலிருந்தும், கன்னடத்திலிருந்தும் தன் வரலாறுகளை மொழி பெயர்த்துப் பெற்ற உந்துதலிலிருந்து ஏராளமான தன் வரலாறுகள் வரக் கூடும் என்ற எதிர்பார்ப்பு இருந்ததுண்டு.ஆனால் வந்தனவோ மிகக் குறைவு. அவையும் முழுமையான தன் வரலாறுகள் அல்ல. பேராசிரியர் கே.ஏ.குணசேகரனின் தன் வரலாற்றுக் கதையான வடுவும், அழகிய பெரியவனின் தகப்பனின் கொடியும் தன் வரலாற்றுச் சாயல் கொண்ட நெடுங்கதைகள் என்பதை வாசித்தவர்கள் உணர்ந்திருக்கக் கூடும்.

2000-க்கு முன் தீவிரமான தலித்திய விமரிசகராகவும் தலித்தியக் கருத்தியல்களை உருவாக்கித் தந்தவருமான ராஜ் கௌதமன், தலித்திய விமரிசனத்தைத் தள்ளி வைத்து விட்டு 2000-க்குப் பின் இரண்டு நாவல்களை எழுதி வெளியிட்டுத் தலித் சொல்லாடல் வெளியிலிருந்து ஒதுங்கி விட்டார். ராஜ்கௌதமனின் இரண்டு நாவல்களும் –– சிலுவை ராஜ் சரித்திரம், காலச்சுமை-ஒருவிதத்தில் தன் வரலாற்றுத் தன்மை கொண்ட நாவல்கள் தான். இவை தவிர 2000-க்குப் பின் வந்த பெரும்பாலான தலித் நாவல்கள் தன் வரலாற்று போக்கிலிருந்து விலகிச் சென்றனவாக அடையாளம் பெற்றன. பாமாவின் மூன்றாவது நாவலான வன்மம் தலித் சாதிகளாக - ஒடுக்கப் பட்ட சாதிகளாக அடையாளப் படுத்தப் பட்ட குழுக்களுக்கிடையே உருவாகி வரும் முரண்பாட்டை- வன்மத்தை- விவரித்தது. உருவாகும் வன்மத்தால் ஆதிக்க சாதிகள் அடையும் பலன்களை விரிவாகப் பேசாமல் உள்முரண்பாட்டை மட்டுமே பேசியதால் கூடுதல் கவனம் பெறாமல் போய்விட்டது என்றே சொல்ல வேண்டும்.

2000-க்கு முன் தனது உப்பு வயல் நாவலை வெளியிட்டிருந்த ஸ்ரீதர கணேசன் தொடர்ந்து நாவல்களை எழுதி வெளியிடுபவராக உள்ளார். ஆனால் அந்நாவல்கள் சாதிய அடையாளங்கள் கொண்டன என்றாலும் வர்க்க முரண்பாட்டை மையப்படுத்தியே வடிவமைக்கப் பட்ட கதை வடிவத்தைக் கொண்ட பிரதிகளே.

விரிவான வாசக கவனத்தையும் விமரிசனப் பார்வைகளையும் எதிர்கொண்டு அங்கீகாரத்தைப் பெற்ற சோ.தர்மனின் கூகையையும், இமையத்தின் செடலையும் தலித் இலக்கியப் பட்டியலில் சேர்க்கலாம் என நினைக்கும் போது கொஞ்சம் தயக்கமும் இருக்கிறது. காத்திரமான படைப்புச் செயலில் ஈடுபடும் இவ்விருவரும் தங்களை- தங்கள் படைப்புகளை- தலித் என்னும் கூண்டுக்குள் அடைக்க விரும்பவில்லை என்று உரத்து முழங்கி வருகின்றனர். ஆனால் அந்தக் கூண்டு தரும் பாதுகாப்பையும் அங்கீகாரத்தையும் வேண்டாமென விலக்குபவர்களாகவும் தெரியவில்லை.

தலித் இலக்கியம் தனது வரையறைகளை உருவாக்கிக் கொள்ளத் தொடங்கி எல்லைகளை விரிவாக்கிய போது இவ்விருவரின் எழுத்துகளும்- குறிப்பாக அவ்விருவரது நாவல்களும் சிறுகதைகளும் அந்த வரையறைகளுக்கும் போக்கிற்கும் காத்திரமான பங்களிப்பைச் செய்தன என்பதை விமரிசனபூர்வமாக நிறுவ முடியும். இமையமும் சோ.தர்மனும் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தலித் இலக்கியத்தின் அழகியலையும் கருத்தியலையும் இவ்விருவரது படைப்புகளும் உருவாக்கித் தந்துள்ளன என்ற நேர்மறைக் கூற்றைப் புறந்தள்ளி விட முடியாது. சூழல் உருவாக்கும் நெருக்கடி அல்லது சலுகைகளைத் தனி மனிதர்கள் மீறிச் சென்று விட முடியாது என்றே தோன்றுகிறது.

தலித்தியம், தலித் இலக்கியம், அதன் அழகியல் போன்றவற்றை உருவாக்குவதற்கான பங்களிப்பைச் செய்துள்ள படைப்பாளி சிவகாமியின் ஈடுபாடுகள் 2000-க்கு பின் பல தளங்களில் கிளை பிரிந்து நிற்கின்றன. புதிய கோடாங்கி என்னும் இதழின் வழி அறிய வரும் அவரது செயல்பாடுகள் பண்பாட்டுத் தளங்களிலிருந்து விலகிப் பொருளாதார நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் தரும் போக்காக மாறி வருவதைக் காட்டுகின்றன. தலித்துகள்-அரவானிகள் கூட்டமைப்பு, பெண்கள் ஐக்கியப்பேரவை, தலித் நில உரிமை இயக்கம், எஸ்.சி. எஸ்.டி ஊழியர்கள் மாநாடு எனத் தாவித் தாவிச் செல்லும் நிலையில் அவரது படைப்பாளி அடையாளம் குறைந்து செயலாளி அடையாளம் மேம்பட்டுக் கொண்டிருப்பதைக் காண முடிகிறது.

செயலாளியாக மாறினாலும் தொடர்ந்து எழுதும் ஆற்றல் கொண்டவர் சிவகாமி. பழையன கழிதலும் ஆசிரியர் குறிப்புகள் (ப.க.ஆ.கு.) நாவலில் அவர் வைத்த தன் விமரிசன பாணியிலிருந்து விலகிச் சூழலை விமரிசிக்கும் பாணியைப் பின்பற்றி எழுதி வரும் ‘புதியவர்கள்’ நாவல் முழு வடிவம் பெறும்போது அதன் வீச்சும் இலக்கும் எதுவெனச் சொல்ல முடியும்.

அங்கீகரிக்கப் பட்ட சிறுகதை வடிவம், உத்தி, நுட்பங்கள் என்பனவற்றைப் பொருத்திப் பார்த்து விமரிசிக்கும் போது இவையெல்லாம் தேறாது என ஒதுக்கத் தக்கனவாக இருந்தன என்றாலும், தொண்ணூறுகளில் வெவ்வேறு வட்டாரப் பின்னணியின் சாதிய முரண்பாடுகளைக் கதைகளாக எழுதி வெளியிட்ட விழி பா. இதயவேந்தன், பாப்லோ அறிவுக்குயில், அறிவழகன், அபிமானி, பாமா, போன்றவர்கள் தங்களின் படைப்புலகத்தையும் கருத்துலகத்தையும் புதிய தளங்களுக்குள் நகர்த்தாமல் அங்கேயே தங்கி விட்டார்கள் என்றே சொல்லத் தோன்றுகிறது.

அழகிய பெரியவன் தொடர்ந்து எழுதுபவராக இருக்க சுதாகர் கத்தக், வெ.வெங்கடாசலம், ஜே.பி.சாணக்யா போன்றவர்கள் தொடர்ந்து எழுதும் முயற்சியிலிருந்து விலகி நிற்கின்றனர் என்றே சொல்லத் தோன்றுகிறது. அப்படி விலகி நிற்கத் தனிநபர் சார்ந்த காரணங்கள் இருக்கக் கூடும் என்றாலும் இயக்கம் சார்ந்து உருவாகும் படைப்பாளிகள் இயக்கத்தின் திசைமாற்றத்தோடு ஒத்துப் போக முடியாமல் பின் தங்கி விட நேர்வதுமுண்டு என்பதையும் மறுத்து விட முடியாது.

இந்த நேரத்தில் முற்போக்கு இலக்கியம் என்ற எல்லைக்குள் செயல்படுவதாக நம்பும் ஆதவன் தீட்சண்யாவின் படைப்புச் செயல்பாடு அப்படி நின்று போகவில்லை என்பதை நினைத்துப் பார்க்க வேண்டியுள்ளது. தொடர்ந்து அவர் எழுதும் கவிதைகள், கதைகள், கட்டுரைகள் என அனைத்தும் சாதீயத்தின் மீதான விமரிசனங்களாகவே இருக்கின்றன. காத்திரமான விமரிசனங்களை வைக்கத் தக்க இடங்களைக் கண்டு பிடித்து தீவிரமாக அதைத் தாக்குவதற்குரிய மொழியையும் புதிய புதிய படைப்பு முறையையும் கைக் கொள்வதைப் பிரக்ஞையோடு செய்கிறார் என்றே தோன்றுகிறது.

இந்தப் பிரக்ஞை அவர் செயல் படும் முற்போக்கு இலக்கியப் போக்கில் இல்லாத ஒன்று. பொருளாதார விடுதலையை அல்லது சமத்துவத்திற்கான குரல்களை எழுப்புவர்கள் தங்களின் குரல்களை முற்போக்குக் குரல்கள் என்று முன் மொழிந்த போதும் பண்பாட்டுத் தளத்தில் அக்குரல்கள் என்ன மாற்றத்தைச் செய்யும் எனச் சொல்ல முடியாத தயக்கத்தைக் கொண்டவர்களாக இருந்தனர் ; இருக்கின்றனர். ஆனால் ஆதவன் தீட்சண்யாவின் எழுத்துக்கள் அப்படிப் பட்டவை அல்ல. இந்திய சமுதாயத்தில் பொருளாதார சமத்துவம் இல்லாத காரணத்தால் பாரதூரமான வேறுபாடு நிலவுகிறது என்பதைத் தனது படைப்புகளில் மையப் படுத்தாமல், தீண்டாமை சார்ந்து-

சாதி காரணமாக -ஒதுக்கப்படும் புள்ளிகளையே மையப் படுத்துகின்றார். சாதி வேறுபாடு சார்ந்த புள்ளியை அடையாளப் படுத்தித் தாக்குதல் தொடுக்கும் தீட்சண்யா, பிற முற்போக்கு அல்லது இடதுசாரிப் படைப்பாளிகளைப் போல இயக்கம் கற்றுத் தந்துள்ள முன் முடிவை நோக்கி நகர்த்தாமல் விட்டு விடுவதன் மூலம் அவர்களிடமிருந்து வேறுபட்டும் நிற்கிறார். இதுவே கூட இன்றைய நிலையில் ஒரு தலித் படைப்பாளி தன்னைத் தக்க வைத்துக் கொள்வதற்குப் போதுமான பாதுகாப்பு அரண் என்று சொல்லலாம். அதன் மூலம் ஒரு தலித் வாசகரிடம் கோபத்தையும், தலித் அல்லாத வாசகரிடத்தில் குற்றவுணர்வையும் உண்டாக்கி சாதியத்தின் மீதான கவனத்தைக் குவித்தல் சாத்தியம் என்றே தோன்றுகிறது. சுகிர்தராணியின் பெண் மையக் கவிதைகளும் தலித் மையக் கவிதைகளும் இந்த எல்லை வரை வந்து நிற்பதன் மூலமே கவனிக்கத் தக்க கவிதைகளாக ஆகியுள்ளன என்று சேர்த்தே குறிப்பிடலாம்.

தலித் கலை இலக்கியம் சார்ந்த புதிய படைப்புகளும் படைப்பாளிகளும் கவனம் பெறத்தக்க வகையில் வெளிப்படவில்லை என்ற போதிலும் சமூக நிகழ்வுகள் சார்ந்த கவன ஈர்ப்பும் வெளிப்படுத்துதலும் 2000-க்குப் பிந்திய ஆண்டுகளில் கூடுதலாகியுள்ளன. ஊடகங்களின் கவனத்துக்கே வராமல் போயிருக்கக் கூடிய பல நிகழ்வுகள் தலித் இயக்கங்களின் செயல்பாடுகளால் அரசு எந்திரங்களின் கவன ஈர்ப்பைப் பெற்றுள்ளன. மேலவளவு வன்முறை தொடங்கி, பாப்பா பட்டி,கீரிப்பட்டி, நாட்டார் மங்கலம், கொட்டக்காச்சியேந்தல் நக்கலமுத்தன் பட்டி, செடப்பாளையம்,காக்கி வாடன் பட்டி வரை ஜனநாயக எல்லைக்குள் நின்று கிடைக்க வேண்டிய குடிமை உரிமைகளுக்கான போராட்டங்களை நடத்தும் தைரியமும் பாதுகாப்பு உணர்வும் கிடைக்கக் காரணம் புதிய தலித் எழுச்சியின் பின் விளைவுகள் தான்.

கிறிஸ்தவ மதத்திற்குள் செயல்படும் ஒதுக்கல்கள் இன்று வெளிப்படையாகப் பேசப்படுவதன் பின்னணியில் தலித் இயக்கங்கள் இருக்கின்றன. சாதி வேறுபாட்டின் ஆறாத ரணமாக இருந்துவரும் உத்தப்புரம் கலவரங்களின் வரலாறு அரை நூற்றாண்டைத் தாண்டியது என்றாலும் இந்த முறை தான் ஊடகங்களாலும் அரசாலும் கவனம் பெறும் நிகழ்வாக ஆகியுள்ளது. அதன் பின்னணியிலும் தலித் அரசியலும் தலித் இயக்கங்களின் பருண்மையான வெளிப்பாடுகளும் தான் என்ற போதிலும் தீண்டாமை ஒழிப்பு என்ற பண்பாட்டு நடவடிக்கைகளை மையப்படுத்திய இயக்கங்கள் இங்கு எடுக்கப்படாமலேயே நின்று போய்விட்டன. அதற்கான அமைப்புகளும் பண்பாட்டுத்தளச் செயலாளிகளும் தளர்ச்சி அடைந்துவிட்டதாகவே தோன்றுகிறது.

அந்தத்தோற்றம் ஓரளவு உண்மை தான் என எடுத்துக் கொண்டு அதற்கான காரணங்கள் என்னவாக இருக்கக் கூடும் என யோசிக்கலாம். நிலவுடமை சார்ந்த வாழ்க்கை முறையிலிருந்து பணம் சார்ந்த வாழ்க்கை முறைக்குத் தமிழர்களை/ இந்தியர்களை மாறச் சொன்ன காலனிய ஆட்சிக் காலம் தான் இந்திய நடுத்தர வர்க்கத்தை உருவாக்கியது.

காலனியப் பொருளியல் நடைமுறைகளாலும் கருத்தியலாலும் உருவாக்கப் பட்ட இந்திய நடுத்தர வர்க்க மனிதர்கள் அசலான இந்தியர்களாக இருக்க முடியாமல் தவித்ததன் விளைவுகளே நவீன இந்தியச் சிந்தனைப் போக்குகளும், இலக்கியப் போக்குகளும் என்பதைத் திரும்பவும் விரித்துச் சொல்ல வேண்டியதில்லை. அசலான இந்தியர்களாக இருப்பது என்பது வேறொன்றுமில்லை.
ஒரு மனித உயிரியின் வாழ்நிலைக்கும் இருப்பிற்கும் அதன் கர்மம், முன் வினைப் பயன் ஆகியனதான் காரணம்; அதிலிருந்து விடுபடுதல் மனித சாத்தியங்கள் அல்ல. எல்லாவகை வேறுபாடுகளையும் ஏற்றுக் கொண்டு வாழ்வதுதான் இந்தப் பிறவியின் சாத்தியங்கள். இதிலிருந்து விடுபடுதல் என்பது ஆன்மாவின் விடுதலையாக மட்டுமே இருக்க முடியும் என்பதுதான்.

அரூபமான ஆன்ம விடுதலையைப் பேசிய மரபிலிருந்து விலகி பருண்மையான மனிதர்களின் விடுதலையைப் பேசும் நவீனச் சிந்தனைகள் –அவற்றின் தொடர்ச்சியான நவீன இலக்கியப் போக்குகளும் இலக்காகக் கொண்டதும் விடுதலை என்ற சொல்லைத் தான். ஆனால் இரண்டு விடுதலைகளும் ஒன்றல்ல. தனி மனிதனின் ஆன்ம விடுதலைக்குப் பதிலாக மனிதர்களின் விடுதலையை- கூட்டத்தின் விடுதலையை முன் மொழிந்தன என்பதுதான் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பின்பாதியில் தோற்றம் கொண்ட இயக்கங்கள் மற்றும் இயக்கங்கள் சார்ந்த இலக்கியப் போக்குகளின் வேறுபாடுகள்.தேச விடுதலை என்னும் பருண்மையான ஒன்றிற்காக- பறையர் தொடங்கிப் பார்ப்பணர் வரையிலான - அனைத்து மனிதக் கூட்டத்தை உள்ளடக்கிய தேசத்தின் விடுதலையை முன் மொழிந்த பாரதியைத் தமிழின் முதல் நவீனக் கவி என்று சொல்வது இந்தப் பின்னணியில் தான்.

பருண்மையான தேச விடுதலைக்குப் பின்னர் ஒட்டுமொத்த தேச மக்களுக்குமான விடுதலை என்ற குரல் பின்னுக்குத் தள்ளப்பட அதற்குள் இருக்கும் வெவ்வேறு அடையாளங்கள் கொண்ட குழுக்களுக்கான விடுதலைக் குரல்கள் இந்தியாவில் எழுப்பப்பட்டன. அப்படி எழுப்பப் பட்டதற்கான சூழலும் வரலாறும் பின்னணிக் காரணங்களும் வெளிப்படையானவை. '''''

முதலில் அரசியல் இயக்கமாகத் தொடங்கி திரள் மக்களிடம் அறிமுகம் பெற்ற பின்னர் கலை இலக்கியப் பண்பாட்டு இயக்கங்களை வளர்த்தெடுத்த போக்காகத் தேசிய இயக்கத்தைச் சொல்ல முடியும் என்றால் திராவிட இயக்கத்தை இதன் மறுதலையாகத் தான் சொல்ல வேண்டும். முதலில் பண்பாட்டுத் வெளியில் வெளிப்பாடுகளைக் காட்டி விட்டு அரசியல் இயக்கமாக மாற்றம் பெற்றது அது. வெகுமக்களைச் சென்றடைய விரும்பும் எந்த ஒரு இயக்கத்திற்கும் அரசியல் பொருளாதாரக் கோஷங்கள் அல்லது ஆயுதங்கள் உதவுவதைக் காட்டிலும் பண்பாட்டுக் கோஷங்களே அதிகம் பயன்படும் என்பது தமிழக வரலாறு உணர்த்தியுள்ள பாடம்.

துணைக் கண்டத்தை ஒத்த தேசம் என்னும் பெருவெளியில் மொழி சார்ந்த தேசிய இனக்குரல்கள் காணாமல் போய்விடும் என்று கருதியவர்கள் அதற்கான குரல்களை முதலில் கலை இலக்கியத்துறையில் பதிவு செய்ததன் தொடர்ச்சியாகவே திராவிட இயக்க அரசியலைப் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. திராவிட இயக்கங்களின் முன்னோடியான நீதிக் கட்சியின் ஆயுதம் பிற்பட்டோருக்கான இடது ஒதுக்கீடு என்றாலும் திராவிடர் கழகமாகவும், திராவிட முன்னேற்றக் கழகமாகவும் மாறித் தமிழகத்தில் வெகுமக்கள் அரசியல் தளத்தைக் கைப்பற்றியதும் ஆட்சி அதிகாரத்தைச் சுவைத்துக் கொண்டிருப்பதும் அவ்வியக்கத் தினர் கையிலெடுத்த பண்பாட்டு ஆயுதங்களின் தெரிவுகளால் தான்.

சமஸ்கிருத எதிர்ப்பு, சமஸ் கிருதத்தைப் புனித மொழியாக முன்னிறுத்திய பார்ப்பணர் எதிர்ப்பு, பார்ப்பண மேலாண்மைக்கு வழி வகுத்த இந்துக் கடவுள் பிம்பங்கள் மீதான வெறுப்பு என்பதில் தொடங்கி இந்தி எதிர்ப்பையும் கையிலெடுத்த போது தான் திராவிட இயக்கம் ஆட்சிக் கட்டிலை நெருங்க முடிந்தது.

ஆட்சி அதிகாரத்தை நெருங்கியபின், ஆயுதமாகப் பயன்பட்ட எல்லாவகையான எதிர்ப்பு களையும் கைவிட்டதோடு அதன் மறுதலையாகச் செய்திருக்க வேண்டிய தமிழ் வளர்ச்சி, தமிழர் முன்னேற்றம், தமிழ்ப் பண்பாட்டைக் கட்டி எழுப்புதல் முதலான தமிழ் அடையாளங்கள் எதனையும் பற்றிய அக்கறைகளுக்குள் திராவிட இயக்கங்கள் செல்லவில்லை என்பதும் திரும்பவும் சொல்ல வேண்டிய செய்திகள் அல்ல.
தமிழ் மொழி, தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை இலக்கியங்கள் ஆகியவற்றை நவீனப் படுத்தி, உலகக் கலை இலக்கிய வளர்ச்சியோடும், சொல்லாடல்களோடும் உறவு கொள்ளத்தக்க மொழியாகத் தமிழை மாற்றுவதைப் பற்றிய அக்கறைகள் இங்கு முன் மொழியப்படவில்லை. அதற்கு மாறாகப் பின் நோக்கிச் செல்வதைப் பற்றிய பேச்சுகளே இலக்கிய வளர்ச்சியாகவும் பண்பாட்டு வளர்ச்சியாகவும் காட்டப்படும் சூழலில் மாற்றம் எதுவும் நிகழவில்லை. தாங்கள் முன் வைத்த பண்பாட்டு அடையாளங்களின் இலக்குகள் எவை என்பதிலும், அவற்றை அடைவதற்கான வழிமுறைகள் இத்தகையன என்பதிலும் தெளிவின்மை ஏற்படும்போது நகர முடியாத அசைவின்மை தவிர்க்க இயலாத ஒன்று. பண்பாட்டுத் தளத்தில் இலக்குகள் இல்லாதது போலவே அரசியல், பொருளாதாரத் தளத்திலும் தனித்துவமான அடையாளங்களையோ இலக்குகளையோ கூட திராவிட இயக்கங்கள் முன் வைத்ததில்லை. அதனால் தான் தமிழகத்தின் நிலவியல் சுழலைக் கவனத்தில் கொண்டதாகத் திட்டங்களை முன் வைக்காமல் திரள் மக்களை வாக்கு வங்கிகளாக மாற்றிக் கட்டமைக்கும் அரசியல் முன்மொழிவுகளையே முன் வைக்க நேர்கிறது.

இந்த அவலம் ஐந்தாண்டுக்கொரு முறை மாறி மாறி நிகழ்ந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து வாக்குகளைக் கவர்வதற்கான இலவசங்கள் சார்ந்த நலத்திட்டங்களின் பெருக்கத்தை இந்த விதமாகத் தான் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.

இருபதாம் நூற்றாண்டின் கடைசிப் பத்தாண்டுகளில் எழுந்த தலித் எழுச்சியைப் பேச வேண்டும் எனத் தொடங்கி விட்டு அந்த நூற்றாண்டின் முன்பாதியில் தோன்றிய திராவிட இயக்க எழுச்சியைப் பற்றிப் பேசுவது ஏன் எனத் தோன்றலாம். இரண்டுக்கும் ஒற்றுமைக் கூறுகள் அதிகமாகவும் வேறுபாடுகள் குறைவாகவும் இருக்கின்றன என்பதனால் திராவிட இயக்கங்களைக் குறித்துப் பேச நேர்ந்தது.

இயக்கத்திற்கான கட்டமைப்பு, அதன் தலைமை குறித்த பிம்ப உருவாக்கம், அரசியலற்ற திரளை தலைமையின் பேச்சின் மூலம் மட்டுமே வழி நடத்துதல், வெகுமக்கள் ஊடகங்களை உருவாக்குவதிலும் பயன்படுத்துவதிலும் தீர்மானமற்ற ஈடுபாடு, குறுகிய கால லாபத்தை மையப்படுத்தி அணி மாறுதல் எனப் பல ஒற்றுமைகள் தலித் இயக்கங்களுக்கும் திராவிட இயக்கத்துக்கும் காணப்படுகின்றன என்றாலும் அதன் தோற்றக் காலத்தில் குறிப்பான வேறுபாட்டோடு கிளர்ந்து எழுந்தது தலித் இயக்கம் என்பதை மறக்க முடியாது.

ஒட்டு மொத்தத் தமிழர்களின் வாழ்வுரிமை பற்றிய அக்கறைகளை வெளிப்படுத்துவதாகப் பாவனை செய்ததில்லை தலித் இயக்கங்கள். இந்து சமயத்தின் சமூகக் கட்டமைப்பான சாதியத்தின் மீது கறாரான விமரிசனத்தையும் அதனைப் புரட்டிப் போடும் நோக்கங்களையும் முன் மொழிந்த தலித் இயக்கங்கள் - அதற்கு முந்திய இட ஒதுக்கீட்டு அரசியலிலிருந்து குறிப்பான விலகலை முதன்மைப் படுத்தின என்பதை நாம் நினைவு படுத்திக் கொள்ள வேண்டும். அப்படியொரு நெருக்கடியைத் தமிழ்நாட்டின் தென் மாவட்டக் கலவரங்களும், அம்பேத்கர் நூற்றாண்டு விழாவின் அறிவார்ந்த சூழலும் உருவாக்கித் தந்தன.

‘கற்பி; ஒன்றுசேர்;போராடு’ என்ற அம்பேத்கரின் வாசகங்களைச் சொன்னதோடு ‘அடங்க மறு ; அத்து மீறு; கலகம் செய்’ என்ற கோஷங்களையும் தீவிரமாக முன் வைத்து வெளிப்பட்ட போது, அதற்கு முன்பிருந்த சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டுப் போராட்டங்கள் பின் தங்கி நின்றன. தலித் இயக்கங்கள் ஏற்பாடு செய்த மாநாடுகள், கருத்தரங்குகள், கலை விழாக்கள் போன்ற பருண்மையான வெளிப்பாடுகளும், எழுத்து வடிவில் வந்த படைப்புகளும் தீண்டாமை ஒழிப்பை முதன்மையாகக் கொண்டு நிலவியல் வெளியிலும், பண்பாட்டு வெளியிலும் தலித்துகளுக்கு மறுக்கப்பட்ட இடங்களைக் கைப்பற்றுவதை நோக்கி நகர்ந்ததை பாரதூரமாகவே காண முடிந்தது.

குறிப்பாகக் கலை இலக்கிய வெளியில் மற்ற எல்லாப் போக்குகளையும் பின்னுக்குத் தள்ளி விட்டு தவிர்க்க முடியாத ஒன்றாகத் தலித் கலை இலக்கியங்கள் வரிசை கட்டின. தலித் கவிதை, தலித் நாடகம், தலித் புனைகதைகள், தலித் விமரிசனம் என அதன் வீச்சை இரண்டாயிரத்தின் கடைசிப் பத்து ஆண்டுகளின் சிறுபத்திரிகைத் தொகுப்புகளை வாசிப்பவர்கள் உணர முடியும். தலித்துகள் எழுதுவது தலித் இலக்கியம் என்ற நிலையிலிருந்து மாறி தலித் எழுத்துக்களை தலித்துகளே எழுத வேண்டும் என்ற கோஷமாக ஆக்கப் பட்டதின் எதிர்மறை விளைவுகளை இந்த நேரத்தில் விவாதிக்க வேண்டியுள்ளது.
இந்திய சாதியத்தின் கருத்தியல் பரிமாணமான ஒதுக்கி வைத்தலும் ஒதுங்கி நிற்றலும் தீவிரமாகச் செயல்பட அந்தக் கோஷம் காரணமாகி விட்டதோ என்ற ஐயம் தோன்றுகிறது. எல்லாவற்றையும் சந்தேகப்படுதல் தேவை என்ற போதிலும் நம்பிக்கையின்மையின் தொடர்ச்சியால் ஆதரவு சக்திகளும் ஜனநாயகக்குரல்களும் தலித்தியச் செயல்பாடுகளிலிருந்து விலகிச் சென்றன என்பதைக் கவனத்தில் கொண்டு மறுபரிசீலனைகள் செய்யப்படும் திறப்புகள் நடைபெற்றிருக்க வேண்டும். அத்திறப்பைச் செய்ய வேண்டிய அமைப்புகளே உள்முரண்பாடுகளைச் சரி செய்ய முடியாமல் தவிக்கும் பிளவுண்ட கூறுகளாகவும், மைய நீரோட்ட அரசியலில் கலக்கும் வேகத்தோடும் இருந்ததால் அத்தகைய மறுபரிசீலனைகள் சாத்தியமாகாமல் போய்விட்டது.

இதே போல் தலித் இயக்கங்களும் இலக்கியவாதிகளும் மறுபரிசீலனை செய்ய வேண்டிய புள்ளிகள் பலவும் உள்ளன.வரலாற்றைப் பயன்படுத்துவது பற்றியும், மத அடையாளத்தைக் கைவிடுவது அல்லது உருவாக்கிக் கொள்வது பற்றியும் கூட விரிவான விவாதங்கள் நடத்தப்பட வேண்டும். மாறி வரும் உலகமயச் சூழலைச் சாதகமாகப் பயன்படுத்துவது பற்றியும், அதற்கேற்ற மனிதவளமாக மாறுவது பற்றியும் சிந்திக்க வேண்டியுள்ளது.

கிடைக்கின்ற கல்வி தேவையான கல்வியா என்ற கேள்வியைக் கேட்டு நிராகரிக்கத் தக்க கல்வி என்றால் கைவிடவும் தயாராக வேண்டியுள்ளது. இட ஒதுக்கீடு என்பது அளிக்கப்பட வேண்டிய உரிமை என்பதாகப் பார்க்கப் படாமல் பெற வேண்டிய சலுகை என்பதாக நம்ப வைக்கப் பட்ட வரலாற்றை உரத்துச் சொல்ல வேண்டியுள்ளது. அரசியல் சுதந்திரம் அடைந்த காலத்திற்கும் முன்பிருந்தே நடைமுறையில் இருந்துவரும் இடஒதுக்கீடு இலக்கியப் படைப்பின் மையமாக ஆகாமல் ஒதுங்கிப் போன கருப்பொருள்களுள் முதன்மையானது என்பதைத் தமிழ் இலக்கியப் பரப்பை வாசிப்பவர்கள் உணரக் கூடும். இப்படிச் சொல்வதன் நோக்கம் தலித் இயக்கங்கள் இட ஒதுக்கீட்டைக் கைவிட வேண்டும் என்பதல்ல; அது ஒன்றே சர்வரோக நிவாரணி என்ற கருத்தினைக் கைவிட வேண்டும் என்பதுதான்.

இத்தகைய விவாதங்களை எல்லாம் நடத்தித் தனியான அடையாளங்களை உருவாக்கிக் காட்ட முடியும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்திய அறிவுஜீவிகளையும் படைப்பாளிகளையும் கொண்டிருந்த இயக்கமாகத் தோற்றம் தந்த தலித் எழுச்சி 2000-க்குப் பின் திருவிழாக் கூட்டத்தில் திசை தப்பிய குழந்தையாக நிற்கிறது என்பதை முதலில் ஒத்துக் கொள்ள வேண்டும். தேர்தல் அரசியல் என்னும் திருவிழாவிற்குள் திராவிட இயக்கம் திசை மாறியது போலத் தலித் இயக்கங்களும் திசை குழம்பி நிற்கின்றன. அந்தத் திசைக் குழப்பம் திரும்பவும் இட ஒதுக்கீடு என்னும் மாயமானை மட்டும் விரட்டும் கவனத்தை உண்டாக்கி விடும் சாத்தியங்கள் நிறைய உள்ளன.

கருத்துகள்

ஜ்யோவ்ராம் சுந்தர் இவ்வாறு கூறியுள்ளார்…
ஐயா, பத்தி பிரித்து பதிவிட்டால் வாசிக்க இலகுவாயிருக்கும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

இவை ஒரு நகரத்தின் கவிதைகள்