சுதந்திரம் என்னும் பெருநெருப்பு
" எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு -நாம் எல்லோரும் சமமென்பது உறுதியாச்சுசங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே - இதைத் தரணிக்கெல்லாமெடுத்து ஓதுவோமே ‘’என்று கவி பாரதி பாடிய சுதந்திரப் பள்ளு தேசத்திற்கான விடுதலையை மையப்படுத்தியது என்பதில் நமக்குச் சந்தேகம் இல்லை.
பாரதி இப்படிப் பாடிய போது இந்திய சுதந்திரம் உறுதியாகி இருக்கவில்லை. அவன் பாடிய அந்த ஆண்டிலோ அல்லது அதற்கடுத்த ஆண்டிலோ கூட இந்தியாவிற்கு விடுதலை கிடைத்து விட வில்லை. பாரதி மறைந்து (கவி பாரதி மறைந்தது 1921, செப்டம்பர் 11.) இருபத்தாறு ஆண்டுகளுக்குப் பின்பு - 1947 ஆகஸ்டு 15. இல் தான் இந்திய தேசத்திற்கு ஆங்கிலேயர் களிடமிருந்து சுதந்திரம் கிடைத்தது. இருபத்தாறு ஆண்டுகளுக்குப் பின் சாத்தியமான ஒன்றை உறுதியாகி விட்டது என்று பாரதியார் சொன்னார்.
ஒருவேளை பாரதி தனது காலத்தில் இருந்த விடுதலைக்கான வேட்கையையும், போராட்டங்களின் வேகத்தையும் கண்டதால் அடிமை நிலை நீண்டகாலம் இருக்காது; சுதந்திரம் அடைவது வெகு சீக்கிரத்தில் நடக்கப் போகிறது எனக் கருதியதால் அப்படிப் பாடி இருக்கலாம். ஒரு படைப்பாளியை வாசகர்களுக்கு அல்லது பின் சந்ததியினருக்கு அறிமுகப் படுத்த விரும்பும் அவனது வாரிசுகள் அல்லது அபிமானிகள் அந்தப் படைப்பாளியின் சாராம்சமான குணம் எது எனக் கண்டு பிடித்து அதன் பொருட்டு அவனைக் கற்க வேண்டும் என வலியுறுத்துவதுண்டு. கவி பாரதியை எதன் பொருட்டுத் தமிழர்கள் கற்க வேண்டும் என வலியுறுத்தும் அவனது அபிமானிகள் முதன்மையாகச் சொல்வது தேசியக் கவி என்னும் சாராம்சத்தைத்தான் .
இந்திய விடுதலைப் போராட்டதையும் அதன் விளைவான நாட்டு விடுதலையையும் தான் பாரதியும் முதன்மையாகக் கருதினான் எனச் சொல்லுவதற்கு, ‘எமக்குத் தொழில் கவிதை; நாட்டுக்குழைத்தல்; இமைப்பொழுதும் சோராதிருத்தல்’ என்ற அவனது வரிகளே சான்றுகள் தான். என்னைக் கேட்டால் பாரதிக்குத் தேசியக் கவி என்னும் அடையாளத்தை விடவும் சுதந்திரக் கவி என்னும் அடையாளமே முழுமையாகப் பொருந்தும் சாராம்சம் எனச் சொல்லுவேன். தேசியக் கவி என்னும் அடையாளமும் சுதந்திரக் கவி என்னும் அடையாளமும் வேறல்ல; இரண்டும் ஒன்று தான் ஒருவர் வாதிடலாம். ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. பாரதி நினைத்தது நாட்டின் விடுதலையை மட்டும் அல்ல. நாட்டின் விடுதலையோடு சேர்ந்து அவன் வேண்டிய விடுதலை பல.
ஆண்டான் என்றும் அடிமை என்றும் மக்களைப் பிரித்து வைத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கும் சாதித்தளையிலிருந்து இந்தியா விடுதலை அடைய வேண்டும் என்பது பாரதியின் முதல் கனவு. பறையருக்கும் இங்கு தீய புலையருக்கும் விடுதலை வேண்டும் என ஆசைப் பட்டதோடு ‘ விடுதலைக்கு மகளிரெல் லோரும் வேட்கை கொண்டனம்’ எனப் பெண்களின் பகுதியாக மாறிக் குரல் கொடுத்தவன் பாரதி.
மகளிர்விடுதலையையும் சுதந்திரத்தையும் முன் நிபந்தனையாக்கிய பாரதி ‘ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவிலோங்கி இவ்வையம் தழைக்குமாம்’ என்று சொன்னான். அரசியல் விடுதலை, சமூக விடுதலை, பெண் விடுதலை எனப் பாரதி பேசிய அனைத்து விடுதலைகளும் தனி மனித விடுதலையை நோக்கியதே என்பதைப் பாரதியைச் சரியாகப் படிப்பவர்கள் உணரக்கூடும். சுதந்திரத்தின் குறியீடாகப் பாரதி சொன்னது சிட்டுக் குருவி.
விட்டு விடுதலையாகி ஒரு சிட்டுக் குருவியைப் போலத் திரியும் வாழ்க்கையை அவாவிய பாரதியின் மனம் தனிமனித சுதந்திரத்தையே உச்ச பட்ச விடுதலையாகக் கருதியது. இந்திய ஆன்மீகத்திலும், வேதாந்தக் கல்வியிலும் ஆழ்ந்த புலமை பெற்ற பாரதி கண்ணனைக் காதலனாகவும், அரசனாகவும், சேவகனாகவும், காதலியாகவும், குருவாகவும் சீடனாகவும் பாடியவன். எல்லாப் பொருளிலும், எல்லாப் பாத்திரத்திலும் அவனே இருக்கிறான் என்னும் அத்வைத வேதாந்தத்தின் மாற்று வடிவம் தான் கண்ணன் பாட்டு.
எல்லாப் பாத்திரங்களையும் தானே செய்யும் ஆசை கொண்ட நடிகரின் வெளிப்பாடு தசாவதாரம். கடவுளைக் காண விரும்பும் கவிஞனும், கடவுளாக ஆகவிரும்பும் நடிகனும் சந்திக்கும் புள்ளியாக இருப்பது நவீனத்துவம். நவீனத்துவம் ஐரோப்பிய மறுமலர்ச்சியின் குழந்தை என்பதை நாம் மறந்து விடக் கூடாது. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற முத்திற முன்மொழிதலைச் செய்த பிரெஞ்சுப் புரட்சியின் விளைவுகளைக் கவிதைகள் வழியாகவும், புதுச்சேரியின் நகரத்தெருக்களில் அலைந்த போது பிரெஞ்சுக்காரர்களின் நேரடித் தரிசனத்தின் மூலமும் தனிமனித சுதந்திரத்தை அறிந்து ரசித்தவன் பாரதி.சுதந்திரம் என்பதும், சுதந்திர உணர்வு என்பதும் ரசித்து மகிழும் உணர்வு என்பது இன்று பலருக்கும் புரியாமல் இருக்கிறது.
தங்களுக்கு வழங்கப் பட்ட சுதந்திரத்தை எப்படி அனுபவிப்பது என்று தெரியாமல் தனக்கு மேல் ஒரு அதிகாரம் வேண்டும் என்றே பலரும் நினைக்கின்றனர். தனது சுதந்திரம் என்பது தனது கடமையைச் சரியாகச் செய்வதில் இருக்கிறது என்பதை முதலில் மனிதர்கள் உணர வேண்டும்.சிறிய நிறுவனம் ஆனாலும், பெரிய நிர்வாகமானாலும் ஒவ்வொருவருக்கும் உரிய கடமைகளைச் சரியாகப் பங்கிட்டுக் கொள்வதிலும், அதை உரிய காலத்தில் நிறைவேற்று வதிலுமே சுதந்திரச் செயல்பாடு அடங்கி இருக்கிறது.
சுதந்திரம் என்ற சொல்லோடு தொடர்புடைய சுயாட்சி, தன்னாட்சி போன்ற சொற்கள் இந்திய விடுதலைக்குப் பின்பு அதிகமாகப் புழங்கிக் கொண்டிருக்கின்றன. மாநில சுயாட்சி; மத்தியில் கூட்டாட்சி என்பது புகழ் பெற்ற வாசகம். தன்னாட்சிப் பொறுப்புடைய பொதுத்துறை நிறுவனங்கள், துறைத் தலைவர்கள், தன்னாட்சி அதிகாரம் கொண்ட கல்வி நிறுவனங்கள் என்பன வெல்லாம் இங்கே சோதனை முயற்சிகளாகப் பரிசீலனை செய்யப் பட்டன என்றாலும், அவற்றின் பலன் முழுமையாக இல்லை என்பதே விடையாக இருக்கின்றன.
ஒரு கல்லூரி பல்கலைக்கழக நிர்வாகத்தின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப் பட்டு தன்னாட்சி பெற்றதாக மாறுகிறது என்றால்,. நிர்வாகத்திற்குத் தரப்பட்ட சுதந்திரத்தை , அந்நிர்வாகம் தனது உறுப்பினர்களான ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள், ஊழியர்கள் வரை நீட்டிக்கும் போது தான் தன்னாட்சியின் முழுப் பலன் கிடைக்கும்.
இங்கு நடப்பதோ நேர்மாறானதாக இருக்கிறது.அதிகாரம் கைமாறியதாக நினைத்துக் கொண்டு ஆசிரியர்களையும் மாணாக்கர்களையும் அச்சுறுத்து வதற்கும், கூடுதல் பணிகளைச் செய்வதற்கு வலியுறுத்துவதற்கும் தன்னாட்சிப் பொறுப்பைப் பயன்படுத்துகிறார்கள். அல்லது நிர்வாகத்தின் மதம் அல்லது சாதி அடையாளத்தை வலுப்படுத்தும் குறுகிய நோக்கத்தோடு செயல்படுகிறார்கள். பணிகளை ஒதுக்குவது தொடங்கிப் பாடத் திட்டங்களை உருவாக்குவதை வரை தன்னாட்சி முறை பாதுகாப்புக் கருவியாகி விடுகிறது.
தன்னாட்சிக் கல்லூரி என்பது ஒரு உதாரணம் மட்டும் தான். தன்னாட்சி நிர்வாக அமைப்புகளை கொண்ட அரசுக் கழகங்கள், வாரியங்கள், கூட்டுறவு அமைப்புகள், உள்ளாட்சி அமைப்புகள் என அனைத்தின் செயல்பாடுகளிலும் இந்தப் பிரச்சினைகள் கண்கூடாகத் தெரிகின்றன. இவைகளின் செயல்பாடுகள் எல்லாம் சேர்ந்து இந்திய ஜனநாயகத்தின் சாத்தியப் பாடுகளைக் கேள்விக் குறியாக்கி விடுகின்றன என்பதை மறுக்க முடியாது.
ஜனநாயகக் கடமை என்பது பொறுப்பை நிறைவேற்றுவதில் மட்டுமல்ல; நிறைவேற்றாத நபர்களைத் தட்டிக் கேட்பதிலும் தங்கி இருக்கிறது. கடமையைச் செய்யாத ஒருவர் சுதந்திரத்தை மட்டும் வேண்டும் போது பிரச்சினைகள் எழுவது தவிர்க்க இயலாதது. இருபுறமும் கூர்மைப் படுத்தப் பட்ட கத்தியை விடவும் ஆபத்தானது சுதந்திரம். சுதந்திரம் என்பது அக்கினிக் குஞ்சு. புரிந்து கொள்ளாதவர் கையில் அதுவே பெருநெருப்பாகி விடும்.
கருத்துகள்