வரையறுக்கப்பட்ட நாடகவெளிகள் என்று சொல்லி

இந்தக் கண்காணிப்புப்பணி இன்னும் இரண்டு நாட்களில் முடிந்து போகிறது. கடந்த நான்கு வாரங்களாக ஞாயிறு தவிர ஆறுநாட்களும் அதே பேருந்தில் பயணம். குறிப்பிட்ட காலம் சார்ந்த வினைகள் எப்பொழுதும் ஒழுங்கினை உண்டாக்கி விடத்தக்கன. தேர்வுகள் குறிப்பிட்ட காலத்தில் நடத்தப்பட வேண்டியன. அதில் சிறு பிசகு நேர்ந்தாலும் மொத்த ஒழுங்கும் குலைந்து விடும் அபாயம் உண்டு. அப்படியானதொரு அபாயம் நிகழ்ந்து விடாமல் இருக்க, நான் கண்காணிப்பாளனாக அனுப்பப் பட்டேன். கண்காணிப்பு ஒருவிதத்தில் நம்பிக்கையின் அடையாளமும், இன்னொரு விதத்தில் நம்பிக்கை யின்மையின் வெளிப்பாடும்கூட . தனக்குக் கீழ் இருப்பவன் கண்காணிக்கப் பட்டால் ஒழுங்காகச் செயல்படுவான் என்பதான நம்பிக்கை.
ஒரு கல்லூரியின் நிர்வாகம் சார்ந்தும், மாணவர்கள் சார்ந்தும், அதில் பணியாற்றும் ஆசிரியர்கள் சார்ந்தும் சிக்கல்கள் எழுகின்றபொழுது, பல்கலைக்கழகம் தனது பணியாகக் கண்காணிப்பை மேற்கொள்ளும். அதற்கெனத் தொடங்கிய அந்தப் பயணம் இன்னும் இரண்டு நாளில் முடிந்துவிடும். இப்படிச் சொல்லும் பொழுது எனக்குத் தோன்றுவது வருத்தமா..? மகிழ்ச்சியா… உங்களுக்கு தெரிந்திருக்க நியாயம் இல்லை. ஏனென்றால் எனக்கும் கூடச் சொல்ல முடியவில்லை. முதலில் அலுப்பாக இருந்த அந்தப் பயணமும் வேலை களும் ஒரு வாரத்தில் சுவாரசியமாக மாறிவிட்டன. சரியாக ஒன்றரை மணிநேரப் பயணம்.பேருந்தில் ஏறி உட்கார்ந்து விட்டால் இடையில் மூன்று நிறுத்தங்களில் மட்டுமே அந்தப் பேருந்து நிற்கும். வரையறுக்கப்பட்ட நிறுத்தப் பேருந்து.பாடல்கள் வேறு உண்டு. அலுப்பில்லாமல் பயணம், சுவாரசியமாக மாறியதற்கு இவை மட்டுமே காரணமாக இருக்க முடியாது. கிளம்பி அரை மணிநேரங் கழித்து நிற்கும் முதல் நிறுத்தத்தில் ஏறும் அந்த ஆசிரியையும் கூடத்தான். அவரும் அந்தக் கல்லூரிக்கான புறத்தேர்வாளராக வருகிறவர்தான். முதல் மூன்று நாட்கள் நான் அவரைக் கவனிக்கவே இல்லை. நான்காவது நாள் தேர்வு நடக்கும் மையங்களைச் சுற்றி வரும் பொழுது அவராகவே பேசினார். நான் வரும் அதே பேருந்தில் தானும் வருவதாகச் சொன்னார். ஏறும் இடம் பற்றியும், தனது கல்லூரியைப் பற்றியும், மாணவிகளைப் பற்றியும் பேசினார்.அன்று தேர்வு முடிந்தவுடன் சிநேகமான ஒரு சிரிப்புடன் போய்விட்டார். 


அடுத்த நாள் பேருந்து கிளம்பியதிலிருந்து அவர் ஏறக்கூடும் என்று மனம் சொல்லியது. அந்த நிறுத்தத்தில் நின்ற வுடன் வெளியில் எட்டிப் பார்த்தேன். இன்னும் சிலருடன் அவர் நின்றிருந்தார். ஏறினார்.என்னைக் கடந்து சென்றார். கவனிக்கவில்லை. தயாராக வைத்திருந்த புன்னகையை விழுங்கிக் கொள்ள நேர்ந்தது. பேருந்து நின்றவுடன் இறங்கிக் காத்திருந்தேன். அவர் வேறு ஒரு பெண்ணுடன் திரும்பிப் பேசியபடியே இறங்கினார். அந்தப் பெண்ணுடன் இன்னொரு ஆண்.மூவருமாக இறங்கிக் கடந்து சென்றனர்.என்னைக் கவனிக்கவில்லை. ஒருவேளை கவனிப்பதாக இல்லை என்று முடிவு கட்டியிருக்கலாம்.
அந்தக் கல்லூரிக்குள் நுழைந்து பத்தடி தூரம் தான் கடந்திருப்பேன். ‘குட்மார்னிங் சார்..’ அந்தக் குரலுக்குத் திரும்பி கையை உயர்த்தியபோது எதிர்ப்பட்டது அவர்தான். இப்பொழுது தான் என்னைப் பார்ப்பதான பாவனை அவரிடம் வெளிப்பட்டது. பேருந்தில் பார்க்கவில்லையா..? பேருந்து நிலையத்தில் இறங்கி நின்ற என்னை உண்மையிலேயே கவனிக்கவில்லையா..? இவ்வளவு கவனமாகப் பாவங்களை வெளிப்படுத்த முடியுமா..? குழப்பத்திற்குப் பின் நான் வெளிப்படுத்திய புன்னகையை வாங்கிக் கொண்டு அந்த அறைக்குள் போனவரை நான் மறந்து விட்டேன். மொத்தத் தேர்வுக் கூட ஆசிரியர்கள் பதினைந்து பேரில் அவரும் ஒருவராக ஆகிப் போனார். தேர்வு முடிந்து மதிய வேளையில் ‘’சாப்பிட்டாச்சா..? ‘’ என்று கேட்ட மூன்று பேரில் அவரும் ஒருவர் என்பது மட்டும் நினைவில் இருக்கிறது.

அடுத்த நாள் அதே நிறுத்தம். அவர் ஏறினார்.என்னைக் கடந்து செல்லும்பொழுது கவனிக்காமல் இருக்க வேண்டுமே என்று நினைத்தாரோ என்னவோ, ஏறியவுடனேயே இருந்த ஓரிடத்தில் அமர்ந்து விட்டார். பயணத்தின் முடிவில், நான் வருவதற்குள் இறங்கிப் போய்விட்டார்.கல்லூரிக்குள் நுழைந்து, கூட்டத்திற்குள் மறைந்து விட்டார். அவர் இருந்த அந்த வகுப்பறைக்குள் நான் நுழைந்த போது, மற்றவர்களிடமிருந்து வரும் புன்னகையை விடக் கூடுதலான புன்னகை அவரிடம் வெளிப்பட்டதாக ஒரு கணிப்பு. என்னுடன் ஒரே பேருந்தில் பயணம் செய்யும் சக பயணி என்பதற்கான அடையாளமாக இருக்கலாம்.

அடுத்த நாள் நான் அவரை எதிர்பார்க்கவில்லை. கையில் வைத்திருந்த பத்திரிகை காரணமாக இருந்திருக்கலாம். நான் கவனிக்கவில்லை என்பதால் அவர் நின்று கவனித்திருக்கலாமோ.? பயணம் முடியப் பத்து நிமிடம் இருந்த பொழுது பத்திரிகையின் பக்கங்கள் தீர்ந்திருந்தன. நிமிர்ந்¢து பார்த்தேன். எனக்கு முன்னால் உள்ள வரிசையில் அவர். கூந்தலின் கற்றை ஒன்று காதுக்கு முன்புறமாக இறங்கி, கன்னத்திலும் உதடுகளிலுமாக வழிந்து கொண்டிருந்தது. வெளியிலிருந்து வந்த காற்றா..! வண்டியின் வேகமா..! கூந்தல் அலைதலின் காரணம் தெரிய வில்லை. அளவில் பெரியதாக நாசி.கழுத்தும் கூட.. அளவில் நீளம் தான். நேற்றுப்பார்த்த பொழுது கண்கள் பெரியனவாகத் தெரிந்தன. ஒருவேளை மனம் தான் இவ்வாறு கற்பனை செய்துகொண்டு, பிடித்தமான நபர் களின் அடையாளங்களைப் பதிவு செய்கிறதோ.. தேர்வுப் பணிக்கென வந்த அந்த பதினைந்து பேரில் எட்டுப் பேர் ஆண்கள். அவர்களில் ஒருவரைக் கூட அப்படிப் பதிவு செய்யவில்லை.இந்த இருபத்தி நான்கு நாட்களில் அவர் என்னிடம் பேசியது அதிகமானதாகத் தோன்றவில்லை. தேர்வுகள், மாணவிகள், கல்லூரி, பல்கலைக்கழகம் எனச் சுற்றிச்சுற்றிப் பணிசார்ந்த பேச்சுக்கள் தான்.என்றாலும் சில நாள்களில் சாப்ட்டாச்சா..? குட்மார்னிங்..வெயில் ரொம்ப இல்லே.. மழை வர்ர மாதிரி இருக்கு.. என்றும் சொல்லியிருக்கிறார்.

அவரது கணவர், குடும்பம்,வாசிப்பு பற்றியெல்லாம் கேட்க நினைத்ததுண்டு.கேட்கும் வாய்ப்பு வரவில்லை. திருமணம் ஆகாமல் கூட இருக்கலாம். ஆடைகள் தேர்வு செய்வதிலும் அணிந்து கொள்வதிலும் கவனம் உடையவராக இருந்தார். அதிகமும் மாறுபாடில்லாத வண்ணங்களில், அதே நேரத்தில் ஒற்றை வண்ணம் என்று சொல்லிவிட முடியாதபடி மென்வண்ணமும் வன்வண்ணமும் கலந்த உடைகள். அவைகளைவிடவும் அவர் வெளிப்படுத்தியன புன்னகைகள் தான்.தூரத்தில் பார்த்தால் அகலமான கண்களும் மூக்கும் விரிய, கைகளை அளவாக உயர்த்தி, வணக்கம் சொல்வதாகப் பாவனை செய்வார்.நெருக்கமாகப் பார்க்க நேர்ந்த பொழுது,உடம்பை ஒடுக்கிக் கொண்டு, மிக மெலிதான புன்னகையுடன் நகர்ந்து விடுவார்.பிறகெப்படி அவர் என்னுள்- என் மனதிற்குள் நிற்கிறார். அந்தப் பதினைந்து பேரில் ஒருவர் கூட, அந்த ஏழு பெண்களில் இன்னொருவர் என்மனதிற்குள் நுழையாமல் போனது எப்படி..?. மற்றவர்களுக்கும் இவருக்குமான வேறுபட்ட அம்சம் என்பது, அந்த முக்கால் மணிநேரம் பயணம் என்பதுதான். நான் பயணம் செய்த பேருந்தில் ,அவரும் பயணம் செய்தார் என்பதற்கு மேலாக வேறெதுவும் இல்லை.

ஒருவேளை அந்த முக்கால் மணிநேரப் பயணத்தை, ஒவ்வொரு நாளும் சாமர்த்தியமாகத் தவிர்த்தாரே, அதுவே காரணமாக இருக்குமோ.. அப்படித்தான் இருக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் அந்த முக்கால் மணிநேரத்தை நினைவில் இல்லாக் காலமாகக் கருதிக் கொள்ளும்படி செய்த மாயம் விந்தையானது தான். இந்த நான்கு வாரத்தில், ஒருநாள் கூட பேருந்துப் பயணத்தின்போது, என்னைத் தெரிந்த நபராகக் காட்டிக் கொண்ட தில்லை. வணக்கம் சொல்லும் பாவனையோ , புன்சிரிப்பு அசைவுகளோ அவரிடம் வெளிப்பட்டதில்லை. பஸ் படிக்கட்டில் ஏறி, இறங்கி, அந்தக் கல்லூரியின் வளாகத்திற்குள் நுழைவது வரை, அவர் யார் என்பது அவருக்கே தெரியவில்லையா..? அல்லது நான் யார் என்பது எனக்குத் தெரியவில்லையா..? ஆம் எனக்குத் தான் தெரியவில்லை. நான் எல்லா இடங்களிலும் பேராசிரிரியராக.. தேர்வுகளைக் கண்காணிக்கச் செல்லும் அதிகாரியாக இருந்திருக்கிறேன்..
அவர் அப்படி இருக்கவில்லை. கல்லூரி வளாகத்திற்குள் அவரது கதாபாத்திரம் ஆசிரியை.கல்லூரிப் பேராசிரியை. சக மனிதர்களுடன், அவர்கள் பெண்ணாயினும் ஆணாயினும் சகஜமாகப் பழகும் பாத்திரம் அது. ஆனால் வெளியில்.. பேருந்துப் பயணத்தின்போது.. பேருந்து நிலையத்தில் நிற்கும்போது, கடைவீதியில் நடக்கும்போது.. சந்தையில் பொருட்களை வாங்கும்போது அவள் ஒரு பெண்.ஓர் இந்தியக் குடும்பத்துப் பெண். அங்கு அவளது பாத்திரங்கள் மகள், மனைவி, சகோதரி, தாய் என்பதானவை. இவையெல்லாம் ஓர் ஆணின் தயவால் கிட்டும் அடையாளங்கள்.தனது உறுப்பான ஒரு பெண்ணுக்கு, இந்தியக்குடும்பங்கள் கற்றுத் தந்துள்ள பாடம், ‘உன் எதிரே நிற்பது ஆணாக இருந்தால்- அவர் அறிமுகமானவராயினும், அதிகாரியாயினும், உடன்பணியாற்றும் நபரே ஆயினும்-தவிர்க்கப்பட வேண்டியவர். குடும்ப வெளிக்கப்பால் அவரோடு பேசுவதையோ, புன்னகைப்பதையோ, அருகிருப்பதையோ குடும்பத்தார் விரும்புவதில்லை. நமது குடும்பத்தை அறிந்த நபர்களும் விரும்புவதில்லை. சுற்றமும் உறவும் விரும்பாத ஒன்று உனக்கு உவப்பானதாகத் தோன்றினாலும் தவிர்க்கப்படக் கூடியது’ என்பது தான். தேர்ந்த நடிப்பு என்பது. வெளிகளைப் பிரிக்கும் மாயக்கோட்டினை உணரும் திறனும், அந்த மாயவெளியில் புனைவு நபர்களாய் அலையும் விதமும் தான்.

நடிப்புத்திறன் என்று சொன்னவுடன்,ஒருமுறை பேரா.சே. ராமானுஜன்( ஓய்வு பெற்ற தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழக நாடகத்துறைப் பேராசிரியர்) படச்சட்டக மேடை பற்றி- அதன் மாயக்கோடு பற்றி வகுப்பு எடுத்தது நினைவுக்கு வருகிறது. மேடையில் அந்தக் கோடு எங்கே இருக்கிறது என்று நடிகன் தேடிப் பிடித்து நகர்வ தில்லை. அவனது உருவம் பார்வையாளர்களின் பார்வைத் தடவலை உணரும்பொழுது, வேறு ஓர் உடலாக மாறிவிட வேண்டும் என்றார். மொத்தப் பார்வையாளர்களின் கண்கள் உங்கள் மேல் பட வேண்டும் என்பதல்ல; ஒரு பார்வையாளன் பார்க்கிறான் என்றாலும், அவன் நம்பும்படி நகர்பவனே நடிகன்; அந்த நம்பிக்கையை உண்டாக்கும் கோடு தான், நாடகக் கலையில் அற்புதங்களை விளைவிக்கும் மாயக் கோடு (Magic line) . அடுத்தநாள் பஸ்ஸில் ஏறியவுடன் நேற்றைய நினைவு தொடர்ந்தது. அத்துடன் நான் ஒரு தீர்மானம் எடுத்துக் கொண்டேன். இன்று ஒரு வேளை கடைசி நாள் என்பதால் , அந்தப் பெண் பேருந்திலேயும், நிறுத்தத்திலேயும் பேசுவது என முடிவு செய்து பேசத் தொடங்கினால், ‘ தவிர்த்து விட்டு, அவரை அறியாத கதாபாத்திரமாக மாறி விடுவது’ என்பது தான் அந்தத் தீர்மானம். மிகச் சுலபமாக மாயக் கோட்டிற்குள் நுழைந்து வேடம் தாங்கிக் கொள்வது, இருபத்தி நான்கு நாட்களாக அவருக்குச் சாத்தியமானது போல, இன்று ஒரு நாள் எனக்குச் சாத்தியமாகாமல் போய்விடுமா என்ன.? அது ஒன்றும் புதிதும் கூட இல்லை. ஏற்கெனவே பல தடவை அவ்வாறு நடித்த ஒன்றுதானே..
முப்பது வருடங்களுக்கு முன்னாள்.. கல்லூரியில்விடுதியில் தங்கிப் படித்த நேரம். நானும் அவனும் ஒரே கல்லூரியில் ஒரே விடுதியில். நான் படித்தது பி.ஏ., அவன் பி.காம். அப்போது அப்படிப்புக்கு ராயல் பி.காம் என்று பெயர். கல்லூரியிலும் விடுதியிலும் அவனும் நானும் நண்பர்கள்; ஒரே ஊர்க்காரர்கள். அடுத்தடுத்த அறைகள்.மெஸ்ஸில் அருகருகே உட்கார்ந்து சாப்பிடுவோம். இன்று நான் சாப்பிடும் தட்டு நாளை அவனுக்கும் .. அவனது தட்டு எனக்கும் இடம் மாறுவதும் உண்டு. Êசட்டை, பேண்டுகளையெல்லாம் கூட மாற்றிப் போட்டுக் கொண்டதுண்டு. பெரிய அளவில் வேறுபாடுகள் எழுவதில்லை; நினைப்பதும் இல்லை. இருவரும் ஒரே நேரத்தில் கிளம்பி பேருந்து நிலையத்தில் போய் ஒன்றாகவே டிக்கெட் வாங்குவோம். ஆனால் உட்காரும்பொழுது வேறுவேறு இருக்கைகளில் அமர்ந்து கொள்வோம்.

காரணம் அந்தப் பேருந்து எங்கள் ஊருக்குப் போகும் பேருந்து .அதில் எனது உறவினர்களோ, ஊர்க்காரர்களோ இருக்கக் கூடும்; ஏறக்கூடும்; பார்க்கக் கூடும். ஒரு சேரிக்காரனுடன் ஒன்றாக உட்கார்ந்து பயணம் செய்வதை அவர்கள் எவ்வாறு எடுத்துக் கொள்வார்கள் என்ற நினைப்பே எனது மாயக்கோடுகளைத் தீர்மானிக்க, வேடம் மாற்றிக் கொள்வேன். நான் ஆண்டையின் மகன்; என் நண்பன் அடிமையின் மகனாக ஆகி விடுவான் . எனக்குள் இருக்கும் ஆதிக்க சாதி மன உணர்வை- அந்த மாயக் கோட்டைப் போட்டுத் தந்துவிடும் எனது கிராமவெளி. அவன் சேரிக்காரனாக மாறிக் கொள்ள நான் ஊர்க்காரனாக ஆகிக் கொள்வேன்.
விடுமுறையில் இருவரும் ஒரே ஊரில் அலையும் போது நேருக்குநேராகச் சந்தித்துக் கொண்டாலும் அறியாதவர்கள் போல் ‘பாவனை’ கொள்வோம். எங்களின் அன்னியோன்யத்தைக் குலைத்த பாவவெளியாக எங்களின் கிராம வெளி பரவி நிற்கும். நான் அவனது வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்றோ, அவன் எனது வீட்டிற்குள் வர வேண்டும் என்றோ நினைத்துக் கொண்டது கூட இல்லை.

அவனது வீடும் எனது வீடும் அளவிலும் வசதிகளிலும் பெரிய வேறுபாடுகள் இல்லாதவைகள் தான். குடும்பப் பொருளாதாரத்திலும் கூடச் சிறிய அளவு தான் வேறுபாடுகள் உண்டு. கடும் உழைப்பும் போதாமையும் எங்கள் ஊரின் பெரும்பாலான குடும்பங்களின் உடைமைகள் தான். புதிய ஆடைகள், அரிசி உணவு, என்பன விசேச நாட்களின் உணவுகள் தான்.அதிலும் வேறுபாடுகள் இல்லை. என்றாலும், சேரியில் வாழ்ந்தவர்கள், ஊர்க் காரர் களை ‘அய்யா’ என்றும் ‘சாமி’ என்றும் அழைக்க வேண்டும் என்பதில் குறியாக இருப்பார்கள். என்னை எனது நண்பனின் தந்தை ‘அய்யா’ என்று அழைக்கும்பொழுது மனம் குறுகுறுத்தது இல்லை. அந்தக் குறுகுறுப்புத் தோன்றாமல் தடுத்தது எது? என்பது அப்பொழுதும் புரிந்து தான் இருந்தது. சாதிகளாகப் பிளவுண்டு இந்த அடுக்கில் நான் மேலே இருக்கிறேன் என்ற நினைப்பே என்னை அவ்வாறு நடந்து கொள்ளச் செய்தது என்பது இப்பொழுது புரிகிறது. என் மனதில் மாற்றங்கள் தோன்றிவிட்டன. ஆனால் நடப்போ.. இன்னும்..இன்னும் .. அப்படியே நீள்கின்றன..

எனது கல்லூரி வாழ்வுக்கான பெரும்பங்கைச் செலவு செய்தது அரசாங்கம் தான். விடுதிக் கட்டணத்திற்கெனப் பணம் தந்தது அரசின் பிற்பட்டோர் நலத்துறை தான்.எனக்கு வேலை கிடைத்து கூட இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தான்.‘ பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீடு ‘ இல்லாமல் இருந்திருந்தால் நான் பேராசிரியராக ஆக முடியாமல் போயிருக்கலாம். அந்த இடத்தில் என்னைவிடக் கூடுதல் மதிப்பெண்களும், சிபாரிசு செய்ய ஆட்களும் உடைய இன்னொருவன் -மேல்சாதியாக நம்பும் இன்னொருவன் - அதில் அமர்ந்திருக்கக் கூடும்.

எனக்கு மட்டுமே இந்தச் சலுகை வழங்கப்பட்டது என்பதில்லை. எனது மகளுக்கும் மகனுக்கும் கூட இந்த அடிப்படையில் சலுகைகள் கிடைக்கத்தான் செய்கின்றன. ஆனாலும் நானும் என்போன்றோரும் சில வேலை களில் மௌனிகளாக நிற்கிறோமே அது எப்படி..?

‘இட ஒதுக்கீட்டின்படி தலித்துக்கள் மட்டுமே பலன் அனுபவிக்கிறார்கள்; அவர்கள் அரசாங்கத்தின் செல்லப் பிள்ளைகள்’என்ற சொல்லாடல்களின் போது மற்றவர்கள்- பிற்படுத்தப்பட்ட சாதியினரும் மிகப் பிற்படுத்தப் பட்ட சாதியினரும் தலித்துகளின் பக்கம் சேராமல்,இட ஒதுக்கீட்டிற்கு எதிரான சொல்லாடல்களுடன் கலந்து விடுவது எப்படி..? கற்பனையான மாயக்கோட்டிற்குள் நுழைவது தானா இதுவும். இழப்பு வரும் என்றாலும் நடிக்க முடிகிறதே.. வரையறுக்கப்பட்ட கோடுகளை மீறுவது சாத்தியம் இல்லையா..?

கேள்விகளாகவே நீள்கின்றன எல்லாம்

கருத்துகள்

ராம்ஜி_யாஹூ இவ்வாறு கூறியுள்ளார்…
அருமையாக ஆரம்பித்தீர்கள். ஆறுநாட்களும் அதே பேருந்தில் பயணம். குறிப்பிட்ட காலம் சார்ந்த வினைகள் எப்பொழுதும் ஒழுங்கினை உண்டாக்கி விடத்தக்கன.

பின்னர் ஆண் பெண் என்று போனதும் எனக்கு குமுதம், முத்தாரம் இதழ்களில் வரும் ஒரு பக்க கதை போன்ற உணர்வு வந்து விட்டது. மன்னிக்கவும், இரண்டாம் பத்தியில் இருந்து சுவார்சய்மா இல்லாமல் வேகமாக வாசித்து முடித்து விட்டேன்.

இருந்தும் மூன்று நிறுத்தங்கள் உள்ள பேருந்து என்ற உடன் எந்த பக்கம் உள்ள கல்லூரி என்று அறியும் ஆர்வம் வந்து விட்டது. தென்காசி பக்கம், தூத்துக்குடி பக்கம் அல்லது அம்பை பக்கம் அல்லது ஸ்ரீவை பக்கம்..

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்