நமது கிராமங்களும் நமது நகரங்களும்



கடந்த ஒரு நுற்றாண்டுத் தமிழ்க் கலை, இலக்கியங்கள்- குறிப்பாக சினிமாக்கள், ‘நகரங்கள்‘ என்பதனைக் கிராமங்களின் எதிர்வுகளாகவே சித்திரித்து முடித்துள்ளன.

நகரங்கள் காங்கிரீட் வனங்கள். நல்ல காற்று இல்லை. வானத்தில் புகைப் படிவம். மரங்களில் எண்ணெய்ப் புகை. தெருக்களில் வேகம், ஆபத்து, விபத்துக்கள் உண்டு. மனிதநேயம் இல்லை. ஆனால் கிராமங்களோ காற்றுக்குச் சொந்தமான வீதிகள் கொண்டவை; நீலவண்ண வானம் உண்டு; வாய்க்கால்கள் உண்டு; வரப்புகள் உண்டு; ஆறுகள் உண்டு; தோப்புகள் உண்டு. எளிமை, அந்நியோன்யம், உறவு, நேசம் இப்படி ஏராளமான ‘உண்டுகள்‘ உண்டு.

மொத்தத்தில் கிராமங்கள் பண்பாட்டின் உறைவிடங்கள், நகரங்கள் அழிவிடங்கள், நகரங்களில் பெண்கள் இல்லை; அடங்காப் பிடாரிகள் உண்டு. கன்னிப்பெண்கள் இல்லை; யுவதிகள் உண்டு. காளையா்களும் வாலிபா்களும் இல்லை; இளைஞா்களும், சண்டியா்களும் உண்டு. அடக்கம் இல்லை; மரியாதை இல்லை; பணிவு இல்லை; கற்பு…..? என்ன அா்த்தம் ……? இப்படிப் பல இல்லைகளின் கூடாரமாக நகரங்கள்.

கிராமம் கனவு; நகரம் யதார்த்தம். வாய்ப்பு கிடைத்தால் நமது படைப்பாளிகள் கனவை நனவாக்கிவிடுவார்கள். இல்லையென்றால் கனவையாவது கண்ணில் மறைத்து வாழப் பழகுவார்கள். அப்பாவிகளான கிராமத்து மனிதா்களை, அவா்களின் உழைப்பை நகரவாசிகளின் புத்திசாலித்தனமும் ஏமாற்றுகளும் களவாடுவதில் நமது படைப்பாளிகளுக்கு உடன்பாடு இல்லை.

சேற்றில் கால் வைத்தவா்களின் உழைப்பைச் சுரண்டி, நகரத்துத் தார்ச் சாலைகளாக, பங்களாக்களாக, கார்களாக, குளிரூட்டிய அரங்குகளாக மாற்றுவதில் படைப்பாளிகள் எரிச்சல் அடைந்திருக்கிறார்கள்; கோபம் அடைந்திருக்கிறார்கள். வருத்தம் தோய எழுதியுள்ளார்கள். கவிதைகளாக, புனைகதைகளாக, சினிமாக்களாகப் படம்பிடித்துள்ளார்கள். பல்வேறு நேரங்களில், ‘பட்டிக்காடா? பட்டணமா?‘ எனக் கேட்டுப் பட்டிக்காடே சிறந்தது எனச் சொன்னது உண்டு. ‘பெரிய இடத்துப் பெண்‘ நகரத்திலிருந்து வந்தவளாகக் காட்டி, விவசாயியின் விவேகத்திற்கு முன் தோற்றவளாகக் காட்டியது உண்டு. கெட்டு ‘பட்டணப் பிரவேசம்‘ செய்தவா்களை நகரம் திரும்பவும் அனுப்பிவிடுகிறது கிராமத்திற்கு சின்னக் கவண்டா்களின் பஞ்சாயத்துத் தீா்ப்புகள், ‘நாட்டாமை‘ களின் நோ்மையான அதிகாரங்களுக்கு முன்னால், நீதிபதிகளும் அதிகாரிகளும் தலை வணங்கியதாகக் காட்டியதுண்டு. பார்வையற்ற கிராமத்துப் பெண்ணிற்கு வாழ்க்கை அளிக்க முன்வந்த தெருக்கூத்துக் கலைஞனைக் கொலைகாரனாக ‘அவதாரம்‘ செய்ய வைத்தது நகரம்தான்.

இவையும், இவை போல்வனவும்தான் கிராமங்கள் x நகரங்கள் என்கிற கட்டமைப்புகள். இதன் இன்னொரு உதாரணம் சேரனின் பாண்டவர் பூமி. அதைப் பற்றிப் பேசுவதற்கு முன்னால் அப்படம் சார்ந்த ஒரு நிகழ்வு.

இப்போதெல்லாம் திருப்பூருக்குப் பல தடவை போக நோ்ந்துவிட்டது. வருடத்தில் குறைந்தது இரண்டு அல்லது மூன்று தடவைக்குக் குறையாமல், சொந்தக் கிராமத்திற்குப் போவது போலத் திருப்பூருக்கும் போக வேண்டியுள்ளது. காதுகுத்து, கல்யாணம், சடங்கு, இல்லையென்றால் சாவு….. இப்போது எனது கிராமத்தின் மூன்று பங்கு வீடுகள் சிதைந்து கிடக்கின்றன. விளக்கு போடக்கூட ஆட்கள் இல்லை. திருப்பூா்தான் அவா்களின் வாழிடமாக மாறிவிட்டது. திருப்பூரிலிருந்து எங்கள் கிராமம் 200 கி.மீ. தூரம்.

அந்தத் தடவை போனது தம்பியின் வீட்டுப் பால் காய்ச்சல் விசேஷத்துக்கு. தம்பி சித்தப்பாவின் மகன். பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னால் சித்தப்பாவிடம் சொல்லிக்கொள்ளாமல் திருப்பூா் போனவன். கூலிவேலை, காண்ட்ராக்ட் வேலை எனக் கடுமையாக உழைத்து, வாடகை இடத்தில் சாயப் பட்டறை போட்டான். சொந்தமாக நிலம் வாங்கிப் போட்டான். இப்பொழுது கீழே வீடுகள். தொழிலாளா்கள் குடியிருப்பதற்கேற்ப ஓா் அடுப்படி; அடுத்து ஓா் அறை. வரிசையாக நான்கோ, ஐந்தோ. மாடியில் பட்டறை. மனிதா்களின் கடுமையான உழைப்பின் வெளிப்பாடுகள். இனி அவா்கள் கிராமத்திற்குத் திரும்ப மாட்டார்கள் என்பது முடிவாகிவிட்ட ஒன்று. திரும்ப வேண்டிய தேவைகளும் இல்லை. மதுரையில் பஸ் ஏறியபோது மணி பதினொன்று. காலை நாலுமணிக்கெல்லாம் போய்விடலாம். எல்லாரும் தூங்கிக் கொண்டிருப்பார்கள் என்று நினைத்துப் போன எனக்கு ஆச்சரியம். புதிதாகக் கட்டிய கட்டடத்தின் முன்னால் பரப்பப்பட்ட மணலில் அமா்ந்து “டூரிங் தியேட்டரில்“ படம் பார்ப்பது போல் படம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். திரைக்குப் பதில் டி.வி. பெட்டியும் சி.டியும் இருந்தன. இரண்டு படங்கள் ஓடி முடிந்து போன நிலையில் திரும்பவும் முதலில் பார்த்த ‘பாண்டவா் பூமி‘ யைப் பாரத்துக் கொண்டிருந்தார்கள். படம் பார்த்தபோதே பலரின் கண்களில் கண்ணீா். முதலில் பார்த்தபொழுது வராத கண்ணீா் திரும்பவும் பார்க்கின்ற பொழுது அதிகமாகிவிட்டது. பாண்டவா் பூமி படம் சொந்தக் கிராமங்களில் வாழ முடியாமல், நகரத்திற்கு - திருப்பூருக்குப் போனவா்களின் கதையாகப் பார்க்கப்பட்டதின் விளைவு, அவா்களின் அழுகையாக வெடித்தது.

எந்தப் படைப்பும் - எழுத்தானாலும் சரி, காட்சிரூப வெளிப்பாடானாலும் சரி - வாசகனை உள்ளிருந்து வாசிப்பவனாக (Inside Reader) பார்வையாளனாக மாற்றி விடும்நிலையில் அவனைத் தனக்குள் இழுத்துக்கொள்ளும் மாயத்தைச் செய்துவிடும். அதன் பின்பு அவன் வெறும் ‘பார்வையாளன்‘ என்ற நிலையிலிருந்து மாறி பங்கேற்புப் பார்வையாளனாக (Participatory Audience) மாறி விடுவான். அப்படி மாறும் நிலையில், அவன் சிந்தனைபூர்வ நிலையிலிருந்து தவறி, உணா்வுபூர்வ நிலைக்குள் நுழைவதும் நடந்துவிடும். அதன் பின்பு அவனது பயணம் அப்படைப்பாளியின் பயணத்தோடு இணைந்து, அந்தப் படைப்பு தரும் முடிவோடு ஒன்றிவிடும் நிலைக்குத் தள்ளப்படும். இதுதான் அங்கு நடந்து கொண்டிருந்தது.

இரண்டு குடும்பங்களுக்கிடையே பெண் கொடுத்தல், காதலுக்குத் தடை, அதன் காரணமாகக் கொலை, அதனைத் தொடா்ந்து கிராமத்தை விட்டு வெளியேறி திருப்பூருக்குப் போய் பதிய தொழிலில் இறங்கிப் பணம் சம்பாதித்துவிட்டுத் திரும்பவும் கிராமத்திற்கு வந்து, சொந்தமாக வீடு கட்டி, அதில் தங்கையின் மகளைத் தம்பிக்குத் திருமணம் செய்து வைத்து, இழந்த பெருமையைத் திரும்பவும் கொண்டுவர விரும்பும் ஒருவனின் (ராஜ்கிரண்). கதை; திருப்பூருக்கு பிழைக்கப்போன கிராமத்தான் ஒவ்வொருவனின் கதையாகவும் பார்க்கப்பட்டதின் பின்னணியில் நவீன யுகத்தின் கிராமம் நகரம் என்கிற எதிர்வு நிலை செயல்பட்டுள்ளது.

தன்விருப்பம் போலக் கணவனைத் தோ்ந்தெடுக்கப் பெண்ணை அனுமதிக்காத குடும்பம், அதை மீறியவளைத் தண்டிக்கிறது. காதல் செய்த இருவரும் கொலை செய்யப்படுகின்றனா். அவளைக் காதலித்தவன் மரபான விவசாயத்திற்கு எதிரான நவீன உழவுக் கருவியான டிராக்டரை ஊருக்குள் கொண்டுவந்தவன், கிராமத்துக் கூலி விவசாயிகள் வேலை இழந்து இடம்பெயரக் காரணமானவன் எனக் கதை பண்ணுவதின் மூலம் சேரன் தன்னை எந்திரமயமாதலுக்கு எதிரானவராக நிறுத்திக்கொள்கிறார்.

மரபான வேளாண்மை, கூலி விவசாயிகளுக்கு ஆதரவு, அன்பான தாயின் பிரிவுக்குக் காரணமானவனைப் பழிவாங்கல், உறவுக்குள் பெண்ணுக்குத் திருமணம் என்கிற தளங்கள் சொந்தக் கிராமத்தை நேசித்தல் என்பதோடு இணைந்துநிற்கின்றன. இதற்கு மாறாக காதல் திருமணம், பொறாமை, பழிவாங்கல், எந்திரமயமாக்கிக் கூலித் தொழிலாளா்களின் வயிற்றில் அடித்தல், பாசமான, தாயில்லாத , தங்கைகள் இல்லாத குடும்பம் என்பதை நிறுத்துவதன் மூலம் எதிர்வைக் கட்டமைக்கிறார் சேரன். இந்தப் படத்தின் கதைக்குள்ளேயே - குறிப்பான வெளிக்குள்ளேயே கூட கிராம வாழ்வு இறந்த காலத்தில் வன்முறை நிரம்பியதாகவும், நிகழ்காலத்தில் நம்பிக்கைகள் அற்றதாகவும், எதிர்காலத்தில் பெண்களின் தியாகங்களை வேண்டுவனவாகவும்தான் இருக்கிறது.

பொது நிலையிலும் கூடத் தமிழ்நாட்டுக் கிராமங்கள் இப்படித் தான் உள்ளன. தமிழகக் கிராமங்களின் கடந்த காலம் வன்முறைகள் நிரம்பியதுதான். பெரும்பான்மை மக்கள் - குறிப்பாகத் தலித்துகளும் பெண்களும் அடிமைகள்தான். அவா்களின் மூக்கிற்குள் சுத்தமான காற்று நுழைந்திருக்கலாம். கைகளைச் சுற்றியிருந்த கயிறுகள் நாக பாஷாணங்கள். பண்ணையடிமைகளாகவும், வைப்பாட்டிகளாகவும் வாழ்ந்த காலம், இறந்த காலம். நிகழ்காலமும் நம்பிக்கைகள் எதையும் தந்து விடவில்லை வெண்மணிகளில் எரிபட்டதும் ஊஞ்சனைகளில் கொளுத்தப்பட்டதும் மறந்துபோனவை அல்ல. கொடியங்குளங்களும் குண்டுபட்டிகளும் நிகழ்ந்துகொண்டுதான் உள்ளன. பாப்பாபட்டியும் - கீரிப்பட்டியும் நிகழ்கால ஜனநாயக சமூகத்தைக் கேலி செய்யும் அடையாளங்கள். எதிர்காலம் இவா்களின் தியாகத்தால் தன்னை எழுதிக் கொள்ள முடியுமே ஒழிய அதனை அவா்கள் மறுக்கின்ற பொழுது, எதிர்காலம் என ஒன்று இல்லாமல்தான் போகும். விடுதலை உணா்வு கொண்ட தலித்துகளும் பெண்களும் தியாகங்களுக்குத் தயாராய் இல்லை; ஆக தமிழ் நாட்டுக் கிராமங்களுக்கு எதிர்காலமும் இல்லை.

ஒரு தலித், கிராமத்தை விட்டு வெளியேறிய பின்பு அடிமைத் தளையிலிருந்து விடுபடுதலின் சாத்தியம் அதிகம். இந்து மதம் நகர உருவாக்கத்தின் போது கூட சாதிவாரியான தெருக்களை முன்மொழிந்த கடந்த காலம் முடிந்து கொண்டிருக்கின்றது. நகர விரிவாக்கங்கள் பல சாதி மனிதா்களின் தொகுப்பாக - கலப்பாக - மாறிக்கொண்டிருக்கின்றன. அதில் குடியேறி, செருப்புப் போட்ட கால்களுடன், மணிக்கட்டு வரை மூடிய சட்டையுடன் வீதிகளில் நடந்து மாசு நிறைந்த நகரக் காற்றைச் சுவாசித்தாலும், கிராமங்களுக்குத் திரும்பப் போவதில்லை. திரும்பிப் போய் காலணிகளைக் கையில் தூக்கிக்கொண்டு, மேல்சட்டையைக் கழற்றி இடுப்பில் கட்டிக் கொண்டு, ஒதுக்குப்புறமாக நடக்கப் போவதில்லை.

நகா்மயமாதலுக்கும் எந்திரமயமாதலுக்கும் எதிராகக் கிராம வாழ்க்கையை - மரபான வேளாண்மையை - மனிதநேயமும் சகிப்பும் கொண்ட பண்பாட்டை முன்வைக்கும் நவீன எழுத்தாளா்கள் இனியும் அதைத் தொடா்வது பற்றிச் சிந்திப்பார்களாக. அப்படி நீங்கள் தொடா்கிறீா்கள் என்றால் அது உங்கள் கிராமங்கள்தான். அவா்களுடையன அல்ல. அதாவது இடைநிலை ஆதிக்க சாதிகளின் கிராமங்கள். அவா்களுக்குத்தான் வயல்கள் உண்டு. அவா்களுக்குத் தான் உத்திரம் போட்ட வீடுகள் உண்டு. ஊஞ்சல் கட்டிய முற்றங்கள் உண்டு. பெரிய எழுத்துப் புராணங்கள் அடுக்கிய பரண்கள் உண்டு.
கிராமங்களை நகரங்களின் எதிர்வுகளாகக் கட்டமைக்கும் காலம் முடிந்துபோவதாக.

கவிதாசரண், ஜன் - ஜீலை 2002

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்