தமிழ் சினிமா: தமிழ் பத்திரிகைகள் தமிழ் உயிரியின் கனவுலகக் கட்டமைவுகள்


இயக்குநா் ஷங்கரின் “ஜீன்ஸ்“ வெளியிடப்பட்டு எல்லா ஊா்களிலும் நூறு நாட்களைத் தாண்டி ஓடிக் கொண்டிருந்தது. படம் வெளியாகிப் பத்து நாட்களுக்குப் பின் நண்பா் ஒருவரிடம் “ஜீன்ஸ் பார்த்தாச்சா? என்று கேட்டேன். “படம் புட்டுக்கும் போல இருக்கே; பத்திரிகைகயெல்லாம் சரியா எழுதலியே?“ என்று சொன்னவா். “கதை வேணும்; கதையில் மெஸேஜ் இருக்கணும்; பாட்டுகளை மட்டும் நம்பிப் படம் எடுத்தா லாலா கடைக்கே அல்வாதான்“ என்று அடித்துப் பேசினார். நண்பா் படம் பாரத்து விட்டார் என்று நினைத்தேன். ஆனால், தொடா்ந்து பேசும் போது ஷங்கரோட “சோஷியல் டச் படத்தில் இல்லைன்னாலும், நாசரும் ராதிகாவும் பின்னயிருக்காங்களாம் அதுக்கும் மேல் 50 கிலோ, தாஜ்மகால் வேற…. ஒரு தடவை படத்த பார்த்திட வேண்டியதுதான்“ என்றார் இப்பொழுது அவா் படத்தைப் பார்க்கவில்லை என்பது உறுதியாயிற்று. நண்பா் “ஜீன்ஸ்“ பற்றிச் சொன்ன தகவல்களை அவரிடம் கொண்டு வந்து சோ்த்த ஊடகம் என்ன? அந்தப் படம் பற்றிய அபிப்பிராயம், படத்தைப் பார்க்காமலேயே நண்பருக்கு உண்டான பின்னணி நடுத்தர வா்க்கத்துத் தமிழ் உயிரிக்குத் தமிழ் சினிமா பற்றிய தகவல்களைத் தரும் – அபிப்பிராயங்களை உருவாக்கும் முக்கியமான சாதனமாக இன்று இருப்பவை அச்சு ஊடகங்கள் (Print Media) எனப்படும் தினசரிகளும், வார இதழிகளும், மாதாந்திரிகளும்தான். புத்தாண்டிற்கும், பொங்கலுக்கும், தீபாவளிக்கும் வெளியாகிப் போட்டியிலிறங்கும் திரைப்படக் குவியல்களைத் தமிழா்கள் தேர்வு செய்துதான் பார்க்கின்றனார். பல படங்களைப் பார்க்காமல் தவிர்த்தும் விடுகின்றனா். சில படங்களைக் குடும்பத்தோடு சென்று பார்க்கின்றனா். சிலவற்றைப் பதின்வயதினா் மட்டும் பார்க்கின்றனா். இத்தகைய ஒதுக்குதலிலும் அரவணைப்பிலும் பத்திரிகைகளின் பங்களிப்பு உண்டு. தேர்வு செய்யத் தூண்டுவது, “நல்ல படங்கள் மீதான அபிப்பிராயங்களை உருவாக்கிச் சொல்லாடல் தளத்தை உருவாக்குவது. “மோசமான” படங்களைப் பார்க்கவிடாமல் தடுப்பது என்பன “பொறுப்புள்ள“ அச்சு ஊடகத்தின் சமுதாயக் கடமைகளெனக் கருதப்படுகின்றன.


ஒரு சலனப்படம் மக்களிடம் வந்து சேருவதில் மிக முக்கியமான கட்டங்களாகப் பின்வரும் பத்தும் கூறப்படுகின்றன.

1. கதை – திரைக்கதை அமைப்பு உறுதி செய்தல்

2. தயாரிப்புச் செலவு – நிதி நிலையை உருவாக்கிடல்

3. படப்பிடிப்பிற்கான கச்சா பிலிமை வாங்குதல்

4. படப்பிடிப்புப் பணிகள் 

5. சான்றிதழ் பெறுதல்

6. திரை அரங்குகளுக்குக் கொண்டு வருதல்

7. விளம்பரம் செய்தல்

8. பத்திரிகை விமரிசனங்கள்

9. விழாக்களில் பங்கேற்றல்

10. மக்களின் ஆதரவு

இந்தப் பத்துக் கட்டங்களில் ஏழாவதும் எட்டாவதுமான கட்டங்களில்தான் திரைப்படத்திற்குப் பத்திரிகைகளின் உறவு தேவைப்படுகிறது. பத்திரிகைகளின் உறவினால் – தயவினால்தான் “மக்களின் ஆதரவு“ என்ற இறுதி லட்சியம் எட்டப்படுகிறது. இன்று இறுதி லட்சியத்தின் முக்கிய நோக்கம் லாபம், மேலும் மேலும் லாபம் என்பதுதான்.

ஒரு சினிமாவுக்கு விளம்பரமும் விமரிசனமும் உதவுகின்றன என்றாலும் இரண்டும் ஒரே விதத்தில் உதவுவதில்லை. விளம்பரங்கள் தருவதில் ஒரு வியாபார நோக்கம் உண்டு. தயாரிப்பாளரும் விநியோகஸ்தரும் தங்களிடமுள்ள பணத்தின் அளவுக்கும் படத்தின் தேவைக்கும் ஏற்ப விளம்பரங்கள் செய்கின்றனா். பாரம்பரியமான சுவரொட்டிகளும் தட்டிகளும் விளம்பர உத்திகள்தான். என்றாலும். அவை கருத்து உற்பத்தியைச் செய்வதில்லை. ஆனால் , இதழ்களில் வரும் விளம்பரங்கள் சற்று மாறுபட்டவை. சினிமா என்ற பண்டத்தின் தயாரிப்புத் தொடக்கத்திலிருந்து, அதன் தயாரிப்பாளா்கள் தரும் பணத்தைப் பெற்று, விளம்பரங்களை வெளியிடும் அச்சு ஊடகம் சினிமாவிற்குப் பரஸ்பரம் உதவிட முயல்கிறது. இந்த உதவி ஒற்றைத் தளமானது அல்ல. பூஜை போடும் தினத்திலிருந்து பத்திரிகைகள் தரும் செய்தித் துணுக்குகள், படங்கள், கிசுகிசுக்கள், படப்பிடிப்புத் தள வர்ணனைகள் என்பன பரஸ்பர உதவி என்பதற்கும் மேலாக அப்படம் பற்றிய கருத்துருவாக்கம் என்று சொல்லலாம். அக்கருத்துருவாக்கத்தின் ஒரு பகுதியாக, ஒரு திரைப்படம் பயன் அடைய முடியம் என்பது அதன் துணை விளைவே! அச்சு ஊடகங்கள் சினிமா, தொலைக்காட்சித் தொடா்கள் பற்றிய தகவல்களை கொண்டே, இன்னொருபுறம் அவற்றின் தரம், தயாரிப்பு முறை, இடம் பெறும் கருத்துக்கள், கருத்துக்களை வெளிப்படுத்தும் பிம்பங்கள், நபா்கள் முதலானவற்றின் மீது அபிப்பிராயங்களையும் தருகின்றன. ஊடகம், திரைப்படத்தைப் பார்ப்பதில் இரண்டு விதப்பார்வைகள் இருக்கின்றன. ஒரு பார்வையில் திரைப்படம் வெறும் நுகரும் பண்டம். இன்னொரு பார்வையில் திரைப்படம் கருத்துக்களை மறு உற்பத்தி செய்யும் ஒரு கலை வடிவம்.

அச்சு ஊடகங்கள் சினிமாவைப் பண்டமாகவும், கலையாகவும் கருதும் இரட்டை நோக்கிலிருந்து, அதன் வெற்றிக்கு உதவிடவும், அதே நேரத்தில் விமரிசனங்கள் மூலம் ஒழுங்குபடுத்தி விடவும் முயல்கின்றன. விமரிசனக் கணைகள் தொடுத்து ஒழுங்குபடுத்திவிடத் துடிக்கம் அச்சு ஊடகம் தன்னைத்தானே ஒரு “தந்தை” யின் ஸ்தானத்தில் அல்லது “அண்ணாத்தை” யின் இடத்தில் நிறுத்திக் கொள்கின்றது. அச்சு ஊடகங்கள் தம்மை தந்தை ஸ்தானத்தில் வைத்துக் கொள்ளச் சில காரணங்கள் இருக்கின்றன. வெகுமக்கள் தகவல் சாதனங்களின் வரலாற்றில் ஒளிப்பட ஊடகங்களான சினிமா, தொலைக்காட்சி ஆகியவற்றிற்கு முந்திப் பிறந்தவை அச்சு ஊடகங்களான பத்திரிகைகள். இந்த ஒரு காரணத்தினால்தான் அச்சு ஊடகங்கள் “அண்ணாத்தை”யாகச் செயல்படுகிறது என்று சொல்லிவிட முடியாது. பத்திரிகைகளுக்கு ஒரு கால ஒழுங்கு உண்டு தினந்தோறும் – குறிப்பிட்ட இடைவெளியில் –தினசரிகளாக, வாரமொருமுறை – வாரமிருமுறை, மாதமிருமுறை. மாதமொருமுறை எனச் சரியான கால ஒழுங்கும் (Order) நிலைத்த தன்மையும் (Permanent) மக்கள் திரளிடம் நம்பகத் தன்மையை உருவாக்குகின்றன. அதனாலேயே அவை பிற ஊடகங்கள் மீது ஆதிக்கம் செலுத்தக்கூடிய – அறிவுரை சொல்லக் கூடிய “தந்தை”யாகக் கருதிக் கொள்கின்றன. அவற்றின் மீது கருத்துக்களை உருவாக்குகின்றன. 

இந்தத் தகுதி, தமிழ் அச்சு ஊடகங்களுக்குப் பொருந்துமா என்பது மிக முக்கியமான கேள்வி.

சமீபத்திய தமிழ் சினிமா தனது மந்தைத்தனத்தினால் பிரக்ஞையுள்ள தமிழ் உயிரியின் அடிமனத்தில் காயடிப்புச் செய்யும் ஆற்றல் வாய்ந்ததாக விளங்குகிறது. குறிப்பிட்ட இடைவெளிகளில் களிப்பூட்டும் அம்சங்களை நிரப்பிவிட்டாலே திரைப்படம் எனும் பண்டம் அல்லது கலை வெற்றி பெற்றுவிடும் என்ற கணிப்பில் அயரது பாடுபடும் தமிழ் சினிமா உலகம் கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறது. நமது தமிழ் சினிமா உற்பத்தியாளா்களுக்கு களிப்பூட்டும் அம்சங்கள் என்பது பெரும்பாலும் பெண் உடல்கள்தான். பெண் உடலை வண்ணங்கள் சிதறும் நீா்க்குமிழிகளாக அலையவிட்டு, பார்வையாள மனங்களைக் கிறங்கடிக்கும் உத்தி இடம் பெறாத படங்களே இல்லை எனலாம். பெண் உடல்கள் நீா்க்குமிழிகள் என்றால் ஆண் உடல்கள் பயமுறுத்தும் நிணச்சதைகள், ரத்தமும் சிவப்பேறிய கண்களும், இலக்கற்ற அலைவுமாய் பீதியூட்டும் களிப்பை அள்ளித் தருகின்றன.

களிப்பூட்டும் பெண் உடல்களும் பீதியூட்டும் ஆண் உடல்களும் தாய்மை, தியாகம், அவமானம், குரூரம், அன்பு, வெறுப்பு எனும் பண்புகளினூடாக அலைந்து கொண்டிருக்கின்றன. தமிழ் சினிமா நூறு வருடத்தைத் தாண்டியும் இவற்றையே “கலை” என்ற பெயரில் பரப்பி கொண்டிருக்கிறது. ஆனால், இவையெல்லாம் சரக்குகள்தான். இந்தச் சரக்குகளின் பண்ட மதிப்பும் லாப எதிர்பார்ப்பும் நிச்சயமற்றது என்பதுதான் ஒரே வித்தியாசம்.

நினைவிற்குள், அடங்கா லாப நோக்கம் கொண்ட “பண்டங்கள்” என்று தெரிந்து கொண்டே தமிழ்ப்பத்திரிகைகள் சினிமாவை ஒழுங்குபடுத்தி விட முடியும் என நடிக்கின்றன. கலையின் கூறுகள் தேவையென ஆலோசனை கூறி கதிமோட்சம் காட்டிடக் காத்திருக்கின்றன. ஆலோசனை கூறும் இந்த அச்சு ஊடகங்கள், சினிமாவை எப்படிப் பயன்படுத்துகின்றன என்று கவனித்தால் இவைகளின் நோக்கமும் வியாபாரம்தான்! சினிமா பத்திரிகைகளின் லாபத்தை உயா்த்தும் – விற்பனையைப் பெருக்கும் ஒரு கச்சாப் பொருளாக – உத்தியாகவே - பயன்படுகின்றது என்பது புலனாகும்.

திரைப்படத்துறைக்கேயேன வெளிவரும் திரைச்சுவை, வண்ணத்திரை, திரைக்கதிர், சினிமா எக்ஸ்பிரஸ் போன்றவை அதிகம் விமரிசனம் செய்யாமல் திரைத்துறையின் “மேம்பாட்டிற்கு” வழி கூறுவதோடு நின்று விடுகின்றன. இந்தப் பத்திரிகைகள் சினிமாவை ஒரு தொழிலாக நினைத்து அதனுள் உள் முரண்பாடுகள் களையப்பட வேண்டும்; போட்டிகள் இருந்தாலும் அடுத்தவரை ஒழித்துவிடும் அளவிற்குப் போய் விடக்கூடாது என்ற அக்கறைகளை வெளிப்படுத்துகின்றன. இந்த பின்னணியில் இவைகள் கடுமையான திரைப்பட விமரிசனங்களை எழுதுவதில்லையென்றும் சொல்லலாம். இந்தப் பத்திரிகைகள் பெரும்பாலும் நடிக, நடிகையா் நேர்காணல்கள், புகைப்படங்கள் தொழில் நுட்பத்துறையினா் – இயக்குநா்கள், எழுத்தாளா்கள் ஆகியோர் பற்றிய தகவல் குறிப்புகள் போன்றவற்றைத் தந்து, தற்போதைய சந்தையில் யாருடைய பண்டங்கள் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன என்ற நிலவரத்தைத் தருவதையே நோக்கமாகக் கொண்டவை. இதே தன்மையோடு தனியொரு நடிகனின் பிம்பக் கட்டமைப்பிற்கும் உதவும் நோக்கத்தோடு விஜயகாந்த், ரஜினிகாந்த், கார்த்திக், கமல்ஹாசன், விஜய் பெயா்களைத் தாங்கிய திரைத்துறைப் பத்திரிகைகளும் வந்து கொண்டிருக்கின்றன.

இவைகள் திரைப்படத்துறையைக் குறித்து உண்டாக்கும் கருத்துகளைவிட, பொதுநிலைப் பத்திரிகைகளான ஆனந்தவிகடன், குமுதம், குங்குமம், சாவி வகையறாக்களும், புலன் விசாரணை மற்றும் அரசியல் பத்திரிகை வகையறாக்களான ஜுனியா் விகடன், நக்கீரன், நெற்றிக்கண், தராசு, துக்ளக் போன்றன உண்டாக்கும் கருத்துகளுக்குப் பலம் அதிகம் என்று சொல்லலாம்.

பொதுநிலைப் பத்திரிகைகளின் பக்கங்களில் குறிப்பிட்ட சதவீதம் சினிமாவிற்கென்று ஒதுக்கப்படுகின்றன. சினிமா செய்திகள், புகைப்படங்கள், விமரிசனங்கள், நோ்காணல்கள் இடம் பெறாத தமிழ்ப் பருவ இதழ்களே இல்லையொன்று சொல்லலாம். இடம் பெறும் விதம் வேண்டுமானால் மாறுபடலாம். இப்பத்திரிகைகள் கருத்துருவாக்கத்தைக் கவனமாகச் செய்கின்றன என்பதற்கு, அவை வெளியிடும் விதங்களே சான்றுகளாக உள்ளன. சினிமா செய்திகளை ஆசிரியா் குழு உறுப்பினா் அல்லது சினிமா நிருபா் மூலம் தரும் இப்பத்திரிகைகள், திரைப்பட விமரிசனத்தை நடுநிலையான– வெளியாள் அல்லது குழு செய்வதாகக் காட்டிக் கொள்ள முயல்கின்றன. “விகடன் விமரிசனக் குழு” தரும் மதிப்பெண்கள், குமுதத்தில் “சென்சார் மாமி” எழுதும் கடிதம், துக்ளக்கில் டாக்டர் செய்யும் போஸ்ட் மார்ட்டம்” போன்றன சில உதாரணங்கள். இன்னும் சில பத்திரிகைகள் பிரபலமான எழுத்தாளா்களைக் கொண்டும் வாசக வாசகியா்களைக் கொண்டும் விமரிசனங்களை எழுத வைக்கின்றன. இப்படிச் செய்வதன் மூலம், தங்கள் பத்திரிகையின் விமரிசனத்திற்கு – கருத்துகளுக்கு – ஒருவித “நடுநிலைத் தன்மையை – மதிப்பை” உண்டாக்கிக் கொள்கின்றன எனலாம்.

தங்கள் பத்திரிகை விமரிசனங்களில் நல்ல திரைப்படத்துக்கு, செய்தியுள்ள கதை, ஈடுபாடுள்ள நடிப்பு, அறிவுக்கு இடம் தரும் திருப்பங்கள், பொருத்தமான இசை மற்றும் பாடல்கள், ஆபாசமற்ற – விரசமற்ற காட்சிகள்” ஆகியன அவசியம் என்று வலியுறுத்தும் பத்திரிகைகள், இவையில்லை என்பதற்காக எந்தத் திரைப்படத்தையும் வன்மையாகக் கண்டித்ததில்லை; நட்போடு கூடிய ஆலோசனைகளையே வழங்குகின்றன. இன்னொருபுறம் அந்தப் படங்களில் இடம் பெறும் ஆபாசம் – விரசம் ஆகியனவற்றைத் தனது பக்கங்களில் அச்சிட்டு அவற்றிற்கு நிலைத்த தன்மையை உருவாக்குகின்றன. திரைப்படத்தில் சடுதியில் மறையும் விரசக்காட்சி, பத்திரிகைப் படங்களாக வரும் பொழுது உண்டாக்கும் சலனம் அதிகமாக இருக்கிறது; இருக்கும்.

குமுதம், குங்குமம் போன்றவை வெளியிடும் நடுப்பக்கப் படங்களும் குறிப்புகளும் அசரடிக்கும் விதமாக உள்ளன. ஒரு நடிகையின் அருகாமை (குளோஸ் – அப்) படத்திற்குத் தரப்படும் விமரிசனக் குறிப்பு விரசத்தை அதிகமாக்கிடவே உதவுகின்றன. மிகக் குறைவான ஆடையுடள் நிற்கும் நடிகையின் படத்தருகே “மூணுல ஒரு பங்கு கூட கொடுக்காட்டி எப்படிங்க?” என்று குமுதம் எழுதிய குறிப்பு கேட்கிறது.

“அதோ…. யாரோ கூட்டணிக்கு வா்றா மாதிரி தெரியுது?” என்றும் (குமுதம்), “கால்பந்து விளையாட இந்த டிரஸ் போறாதா” (குங்குமம்) என்றும் எழுதும்போது, குறிப்பில் இடம் பெறும் மொழி குறிக்கும் அா்த்தம் வேறு தளத்திற்கு வாசகனை அழைத்துச் செல்கிறது. நடிகை தன்னுடலைக் கொடுக்கத் தயாராக இருப்பதாகவும், “கூட்டணி”சேர விரும்புவதாகவும், “பந்து” விளையாடிடக் கோருவதாகவும் வாசகமான கருதி, குதூகலிக்கிறது. குதூகலிக்கும் மனதை “கொடுத்தல்”, “கூட்டணி”, “பந்து” என்ற வார்த்தைகளின் நேரடி அா்த்தத்திலிருந்து விலக்கி, உடலுறவு சார்ந்த அா்த்தத்திற்கு மாறிக் கொள்ளும்படி தூண்டுவது அந்தப் பக்கங்களில் இடம்பெறும் படங்கள்தான்.

திரைப்படத்தன் கச்சாப் பொருட்களான நடிக, நடிகைகளைத் தங்கள் வியாபாரத்திற்குமான கச்சாப் பொருட்களாக மாற்றும் போக்கில் அவா்களுக்கு, குணச்சித்திர நடிகன், “ஆக்ஷன் ஹீரோ” “கனவுக்கன்னி”, “க்ளாமா் ஆா்ட்டிஸ்ட்”, “குடும்பப் பாங்கு” முதலான கூடுகளைத் தயாரித்து அளிக்கின்றன. இந்தக் கூடுகளுக்குள் அவா்கள் அடைத்துவிடும் நோக்கத்தில் பத்திரிகைகள் அவா்களின் “திரைப்பட வெளி” யையும் தாண்டி, “பிரத்யேகவெளி” க்குள்ளும் நுழைகின்றன. படத்தில் புடவை கட்டிய பாத்திரங்களில் நடிக்கும் நடிகை, “ஜீன்ஸ் பேண்ட்” போட்டால் ஆச்சரியம் அடைவார்கள். சிம்ரன் “சேலை” கட்டினால் சினிமா நிருபா் சங்கடப்படுகிறார். கதாநாயகன் நடிகன் மட்டுமே “மதுவிலக்கை” பின்பற்ற வேண்டியவன் என நினைத்துக் கொண்டு உ.பா. (மது) சாப்பிட்டு விட்டு தடுமாறினார் என எழுதுவார்.

அரசியல், சமுதாயம், காவல்துறை ஆகியவற்றில் நடக்கும் சீா்கேடுகளைத் தட்டிக் கேட்கப் புறப்பட்டுள்ள புலனாய்வுப் பத்திரிகை (மோட்டுவளைத் துப்பறிதல்தான்) யில் சினிமாவைப் பயன்படுத்தும் விதம் எதிர்மறையானது என்பதை அந்தப் பக்கங்களுக்கு, தரும் பெயா்களே வெளிப்படுத்துகின்றன. ‘ஜுவி. ஸோ’ (வெளிச்சம் போட்டுக் காட்டுதல் – படங்கள் மூலம்) நக்கீரனில் “சினிக்கூத்து”, வாரமலரின் “துணுக்கு மூட்டை” என்ற வார்த்தைகள் ஒருவித எதிர்மறை மனநிலையோடு சினிமாவைப் பார்க்கின்றன. இந்தப் பத்திரிகைகளுக்குச் சினிமா ஒரு அருவெறுப்பான விசயம். ஆனால், அதே நேரத்தில் தங்கள் வாசகா்களுக்கு கிளுகிளுப்பையும் தர வேண்டும். இந்த மனநிலையில் இயங்கும் புலனாய்வுப் பத்திரகைகளும் பொதுநிலைப் பத்திரிகைகளும் கட்டுரைகளையும் செய்திகளையும் எழுதும் முறை எந்த விதத்தில் இருக்கின்றன என்று வாசகன் நினைத்துப் பாரத்துக் கொள்ள வேண்டும். ராத்திரி ரவுண்ட் அப்…. டயலாக்…. (ஜுனியா் விகடன்) போன்ற அம்சங்கள் முழுவதும் ஒரு வித மொழி சார்ந்த பாலின்பத்தையே பேசுகின்றன. ஒரு பக்கக்கதை, கதையல்லாத கதைகள், அபலையின் கண்ணீா்க் கதைகள், சாமியார்களின் காமக்களியாட்டங்கள், இருட்டுலக மறைவுப் பிரதேசங்கள் பற்றியெல்லாம் எழுதும் பத்திரிகைகள் வார்த்தைகளுக்கு வன்முறைச் சாயத்தையும் உடலுறவுத் தேனையும் தடவி விடவே செய்கின்றன. ஆனால் இந்தப் பத்திரிகைகள்தான் சினிமாவை விமரிசிக்கும் போது தங்களது உள்ளடக்கத்தையும் வெளிப்பாட்டு முறையையும் மறந்து விட்டுப் போதனைகளில் இறங்கி விடுகின்றன.

பத்திரிகை படிப்பவனாகவும் சினிமா பார்ப்பவனாகவும் இல்லாத தமிழ் உயிரி, சாபங்களிலிருந்து தப்பித்து விடும் தெப்பம் கைவரப் பெற்றவன்தான். ஆனால் அப்படி யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. அதற்கு மாறாக, இவ்விரண்டும் தரும் கனவுலகில் – கருத்துலகில் – தமிழ் உயிரிகள் மிதந்து கொண்டிருக்கின்றன.

தப்பித்தல் யார்க்கும் எளிதன்று.

=================================

தாமிரபரணி. 1998

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்