சல்லிக்கட்டு - பொங்கல் - புத்தாண்டு.


பண்பாட்டுத் தளத்தை முதன்மைப்படுத்தித் தமிழ் நாட்டின் ஆட்சியைத் திராவிட முன்னேற்றக் கழகம் பிடித்து அரைநூற்றாண்டு ஆண்டு ஆகப்போகிறது. ஆயிரத்தித் தொள்ளாயிரத்து அறுபத்தியேழில் சி.என். அண்ணாதுரை முதல்வராக ஆனவுடன் முதன்மை அளித்துச் செய்தவைகள் இரண்டு. ஒன்று சென்னை மாகாணம் என அழைக்கப் பட்ட பெயரைத் தமிழ்நாடு என மாற்றும் சட்டத்தைக் கொண்டு வந்தது. இரண்டாவது படியரிசித் திட்டத்தை நிறைவேற்றியது. இந்த இரண்டில் ஒன்று லட்சியம் சார்ந்தது; இன்னொன்று வாக்குறுதிகள் சார்ந்தது.
1967- லிலும் தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் வெற்றி பெற்றது. அதுமுதலே, தனியொரு கட்சியாக வெற்றிபெற முடியும் என்றாலும் கூட்டணி அமைத்துக் கொண்டுதான் திராவிட இயக்கங்கள் தேர்தலைச் சந்திக்கின்றன. கடைசியாக 2007 இல் ஆட்சியைப் பிடித்த தி.மு.க. - அதன் தலைவர் திரு மு.கருணாநிதி- அந்த ஐந்தாண்டுக்காலத்தில் நிறைவேற்றியவைகளில் பெரும் பாலானவை வாக்குறுதிகள் சார்ந்தவைகள் தான். இலவச வண்ணத் தொலைக் காட்சித் திட்டம் , இரண்டு ரூபாய்க்கு ஒரு படி அரிசி; அரசு ஊழியர்களின் நிறுத்தி வைக்கப்பட்ட உரிமைகளையும் சலுகைகளையும் வழங்கியது;நிலமற்றோருக்கு நிலப்பட்டா வழங்குதல் என்பவையெல்லாம் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகளாகத் தரப்பட்டவை.

ஓர் அரசியல் இயக்கத்திற்கு வாக்குறுதிகளின் நிறைவேற்றம் என்பது உடனடி விளைவுகளைத் தரவல்லவை. எந்தக் கட்சி ஆட்சிப் பொறுப்பேற்றாலும், மக்கள் நல அரசாங்கத்தை நடத்துவதாகக் காட்டிக் கொள்ளவேண்டிய அவசியம் ஜனநாயக அரசியலில் இருக்கிறது. அப்படி நிறைவேற்றப்படும் வாக்குறுதிகள் பெரும்பாலும் ஒட்டுமொத்தப் பரப்பையும் கணக்கில் கொண்டு அளிக்கப்படுவன அல்ல. சமூகத்தின் சில தரப்பினரை அல்லது ஒரு சில குழுக்களைத் திருப்திப்படுத்தும் நோக்கம் கொண்டவை. ஆட்சிக்கு வரும் கட்சி இத்தகைய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதன் மூலம்தான் தொடர்ந்து வாக்கு வங்கியைத் தக்க வைக்க இயலும். தொடர்ந்து வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தும் அரசு அவ்வப்போது வாக்குறுதிகளைத் தாண்டி இலட்சியங்களை நினைத்துப் பார்க்கவும் வேண்டும்.

தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிக்கு வரும்போதெல்லாம் லட்சியங்களை நினைத்துப் பார்த்து சில முன்மொழிதல்களைச் செய்வதுண்டு. 2011 இல் செம்மொழியாகத் தமிழ்மொழியை அறிவிக்கச் செய்தது அப்படிப்பட்ட ஒன்று. இன்னொன்று 2008 இல் சென்னை சங்கமம் என்னும் பெருந்திருவிழா நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தபோது செய்த அறிவிப்பு இன்னொன்று. அதன் சாரம் இதுதான் : இனிவரும் ஆண்டுகளில் தைமாதம் முதல் தேதி, தமிழ்ப் புத்தாண்டின் முதல் நாளாகக் கொள்ளப்படும்; அதற்கான அறிவிப்பை அரசாங்கம் செய்யும் என்பது அந்தப் பேச்சின் சுருக்கம். அந்த அறிவிப்பு அவர் ஆட்சிப்பொறுப்பிலிருந்த 2011 வரை நடைமுறையிலிருந்தது.

மனிதர்கள் கூட்டமாகப் புத்தாண்டின் பிறப்பை வரவேற்றுக் கொண்டாடும் நிகழ்வுகள் உலகெங்கும் உள்ள பல்வேறு சமூகங்களில் பல்வேறு விதமாக நிகழ்கின்றன. அந்நிகழ்வுகளில் எல்லாம் ஒருவித ஒற்றுமை காணப்படுவதாக சமூக மானிடவியல் ஆய்வுகள் சொல்கின்றன. வாழிடம் உருவாக்கும் வாழ்க்கை முறையின் மகிழ்ச்சியான கால கட்டத்தைக் கொண்டாட்ட காலமாகக் கொள்வது பழஞ்சமூகங்களின் பொது இயல்பு. கொண்டாட்டக் காலத்தின் தொடக்கத்தை ஆண்டுத் தொடக்கமாகக் கொள்வதும் அப்பொது இயல்பினுள் அடங்கும். வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகம் எனத் தொல்காப்பியத்திற்குப் பாயிரம் எழுதிய பனம்பாரனர் தமிழர்களின் வாழிட எல்லைகளைச் சுட்டிக் காட்டியுள்ளார். வாழிட எல்லையான தமிழ் நிலப்பரப்பிற்குள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து வகையான நிலப்பகுதிகள் இருந்தன எனச் சொல்லும் தொல்காப்பியம் ,அப்பிரதேசத்தின் தட்பவெப்ப நிலையை முன்பனிக்காலம், பின்பனிக்காலம், கார் காலம், கூதிர்காலம், இளவேனிற்காலம், முதுவேனில் காலம் எனப் பிரித்தும் காட்டியுள்ளது. இந்நிலப் பகுதிகளில் நிலவிய தட்பவெப்ப நிலைக்கேற்ப முக்கிய பயிர்களாக இருந்தவை நெல்லும் திணையும். குறிஞ்சியிலும் முல்லையிலும் திணை பயிரிட, மருதநில வேளாண் மக்கள் நெல்லைப் பயிரிட்டு வளமாக வாழ்ந்த காட்சிகளைச் செவ்வியல் இலக்கியங்களான அகப்பாடல்களிலும், புறப்பாடல்களிலும் காண்கிறோம். மருதநில அரிசிக்காக நெய்தல் நில உமணர்கள் உப்பையும் மீனையும் பண்ட மாற்றுச் செய்த காட்சிகளை அவ்விலக்கியங்கள் நமக்குக் காட்டுகின்றன.

திணை அரிசியையும் வரகரிசியையும் நெல்லரிசியையும் அடிப்படை உணவாகக் கொண்ட தமிழ்ச் சமூகம் அதனை உற்பத்தி செய்ய உதவிய வான்மழையை வணங்கிப்போற்றிய சமூகம். நீரின்றி அமையாது உலகு என உணர்ந்த தமிழர்களின் குரல் மாமழை போற்றுதும்! மாமழை போற்றுதும்!! எனக் கொண்டாட்ட காலத்தில் வெளிப்பட்டதைச் சிலப்பதிகார வரிகளால் உணர்கிறோம். மழைநீரின் உதவியால் உற்பத்தி செய்த அரிசி வகைகளை உற்பத்தி செய்த தமிழர்கள் அதற்குக் காரணமான நிலத்தையும் நீரையும், ஆட்டையும் மாட்டையும், கன்றுகாலிகளையும் வணங்குவதற்கான கொண்டாட்ட நாளாகக் கொண்டிருப்பது பொங்கல் பண்டிகை. ஒட்டு மொத்தத் தமிழ் பரப்பிலும் கொண்டாட்டப்படும் பொங்கலில் படைக்கப்படும் படையல் பொருட்கள் அவர்களின் வேளாண்மை உற்பத்திப் பொருட்களே.

புதுமணத் தம்பதிகளுக்கு வழங்கும் பொங்கல் படியில் ஒரு புதுக் குடும்பத்தைத் தொடங்குவதற்கான அடிப்படைப் பொருட்களைத் தருகிறார்கள் தமிழர்கள். அண்டா, பானை, சட்டி, சருவம், அகப்பை,கரண்டி, உப்புப் பாத்திரம் எனப் பாத்திரங்களோடு அரிவாள் மனை போன்ற துணைக் கருவிகளோடு அரிசி, பருப்பு, எனச் சமையல் பொருட்களையும் அளித்துப் புதுக்குடித்தனம் தொடங்கும் நாளாகவும் பொங்கல் தினம் இருந்திருக்கும் என நினைக்கும்படியான அடையாளங்கள் அச்சீர்களில் காணப் படுகின்றன.

மார்கழி மாதத்தின் கடைசி நாளான போகிப் பண்டிகையன்று பழைய பொருட்களைக் கழித்து விட்டுக் குடியிருக்கும் இல்லத்தைப் பூசி மெழுகிப் புதுக்கிப் பொங்கலுக்குத் தயாராகும் தமிழர்கள் அதைக் கொண்டாடும் போது எல்லாம் புதியனவாக இருக்க வேண்டும் எனக் கருதியதைக் காண்கிறோம். புதுநெல்லிருந்து எடுக்கப்பட்ட அரிசியைப் புதுப்பானையில் இட்டு, புதுமஞ்சள், புதுக்கரும்பு, புத்தாடை என எல்லாவற்றிலும் புதியனவற்றை விரும்பி யிருக்கிறார்கள்.

தற்போது நடைமுறையில் இருக்கும் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கமாகச் சித்திரை மாதம் தமிழ் வாழ்வோடு இத்தகைய நெருக்கம் கொண்டதல்ல என்பதை உறுதியாகச் சொல்லமுடியும். தைப் பிறந்தால் வழி பிறக்கும் என்ற பழமொழி சார்ந்து வாழும் தமிழர்கள், அந்த மாதத்தில் மணவிழாக்களை நடத்துவதை அதிகம் விரும்புகிறார்கள். அதிக பட்ச வெப்பத்தை உமிழும் கோடை காலமான சித்திரை மாதத்தில் திருமணம் போன்ற நிகழ்வுகளைத் தமிழர்கள் நடத்துவதில்லை.

சித்திரை மாதத்தைத் தொடக்கமாகக் கொண்ட அறுபதாண்டுச் சுழற்சிக் கணக்கில் தமிழின் எந்த அடையாளமும் வெளிப்படவில்லை என்பதை அந்தப் பெயர்களை வாசிக்கும் போதே நாம் உணர முடியும். பிரபவ,விபவ எனத் தொடங்கி குரோதன, அக்ஷய என முடியும் அறுபது பெயர்களில் ஏதொன்றும் தமிழ்ப் பெயர்களாக இல்லை. ஒரு குறிப்பிட்ட வாழிடம் உருவாக்கும் அடையாளங்களே ஒரு சமூகத்தின் தனி அடையாளங்களாக இருக்கின்றன.வாழிடத்தின் அடையாளம் என்பது அப்பகுதிக்கான தட்பவெப்ப நிலை, அதனால் விளையும் பயிர்கள், அதனால் ஏற்படும் உணவுப் பழக்க வழக்கங்கள், ஆடைகள், ஓய்வுப் பொழுதுகள் எனத் தொடர்ச்சியின் கண்ணிகள். இவையே ஒரு சமூகத்தின் பண்பாடு என அடையாளப் படுத்தப் படுகிறது. தமிழ் வாழ்வின் அடையாளங்களை முழுமையாகத் தன்னகத்தே கொண்டுள்ள பொங்கலை விடவும் வேறெந்தப் பண்டிகையும் தமிழ்ப் பண்பாட்டின் அடையாளமாக இருக்க முடியாது.

ஆட்சிக்கு வந்தவுடன் நிறைவேற்ற வேண்டியனவற்றுள் வாக்குறுதியில் ஒன்றும் இலட்சியங்களில் ஒன்றும் இருக்க வேண்டும் என நினைத்தவர் அண்ணா. அவரே நிறைவேற்றியிருக்க வேண்டிய இலட்சியங்களில் ஒன்று தைமாதத்தை முதலாகக் கொண்ட தமிழ்ப்புத்தாண்டு அறிவிப்பு. அவரது இலட்சியங்களில் ஒன்று நாற்பதாண்டுகளுக்குப் பிறகு நிறைவேற்றப்பட்ட்து. ஆனால் ஆட்சிமாற்றம் அதனைத் தொடராமல் செய்துவிட்டது.

தி.மு.க.வையும் அ.இ.அ.தி.மு.க.வையும் மாற்றிமாற்றிச் சுழற்சி அடிப்படையில் ஆட்சிக்கட்டிலில் அமர்த்திப்பார்த்த தமிழக மக்கள் 2016 இல் அந்தச் சுழற்சியையும் மாற்றிவிட்டனர். தொடர்ந்து அ.இ.அ.தி.மு.க.வையே அதிகாரத்தில் தொடரும்படி செய்துவிட்டனர்.  பொதுவாக அக்கட்சி லட்சியம் சார்ந்த திட்டங்களை முன்மொழிவதில்லை.  அதன் வாக்குவங்கிக்கு அப்படியொன்று தேவையில்லை என்ற எண்ணம் அக்கட்சியின் தலைமைக்கு முன்பு இருந்தது.  ஆனால் அந்த எண்ணத்தை மறுபரிசீலனை செய்யும்படி ஆக்கிய ஒன்றாகப் பொங்கல் விழாவும் அவ்விழாவில் நடக்கும் சல்லிக்கட்டும் ஆகியிருக்கிறது. மிருகவதைத் தடை என்னும் உலக நடைமுறைக் கருத்தியல் ஒன்று சல்லிக்கட்டைப் பண்பாட்டு அடையாளம் அல்ல என்று வாதிடுகிறது. அதன்மூலம் நீதிமன்றத்தடையை வாங்கி 3 ஆண்டுகளாக நிறுத்திவிட்டது.

இந்த நிறுத்தம் அல்லது தடை அ இ அ திமுகவின் வாக்குவங்கியையும் பாதிக்கும் ஒரு நிகழ்வு. இந்தப் பண்பாட்டு நிகழ்வு  ஆட்சியில் இருக்கும் அ.இ. அ.தி.மு.க.வையும்  நெருக்கடிக்குள் தள்ளியிருக்கிறது.ஆனால் என்ன முடிவு கிடைக்கும்? கைவிடப்பெற்ற தமிழ்ப் புத்தாண்டு முன்மொழிவும், சல்லிக்கட்டு நிகழ்வும் மறுபிறப்பு எடுக்கவும் கூடும். அது நடந்தால், கட்சிகளின் வெற்றியாக நினைக்கவேண்டியதில்லை. தமிழ்ப் பண்பாட்டின் ஆதாரமான அடையாளம் நிலைநிறுத்தப்பெற்றிருக்கிறது என்பதாகவே கருதப் படவேண்டும்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெரியார்- எப்போதும் பேசுபொருள்

பெரியார்மண்ணும் பிராமணியத்தின் இயக்கமும்.

நாத்திகம் என்னும் ஆன்மீகம்