அடையாள அரசியலும் பெரும்பான்மை வாதமும்

தேர்தல் அரசியல் என்பது எண்களின் அரசியல். ஆனால் அதற்குள் செயல்படுவது கருத்தியல். கருத்தியல்கள் சார்புநிலைகொண்டவை. உலகம் முழுவதும் அதுதான். எந்தவொரு நாடும் விலக்கானவை அல்ல. இந்தியா உள்பட. பால், பாலினம், அதுசார்ந்து உருவாகும் உரிமை, சமத்துவம், விடுதலை என்ற சொல்லாடல்களும் பாலியல் அரசியலின் கருத்தியல்கள். அதைப்போலவே சமய நம்பிக்கைகள், சடங்குகள், சமயஞானம் என்பது தனிமனிதத்தன்னிலைகளை உருவாக்கும் அடையாளங்கள். சமயவியல் அரசியலின் கருத்தியல்கள். அடையாள அரசியல் உலக அளவில் - பின் நவத்துவம் சிந்தனையாகவும் வாழ்முறையாகவும் மாறியபின் கிளர்ந்தெழுந்த அரசியல் சொல்லாடல்கள். இவ்விரண்டையும் இந்தியச் சூழலில் பெரும்பான்மை அரசியல் முற்றாக நிராகரிக்கப் பார்க்கிறது. குறிப்பான இரண்டு எடுத்துக்காட்டுகளின் வழி விவாதிக்கலாம்.


பாலடையாளப் பின்னணியில் பெரியார்xரஜினி  
ரஜினிகாந்தின் அரசியல் மற்றும் சமூக ஈடுபாடு குறித்தெல்லாம் எனக்கு மாற்றுக்கருத்து இருக்கிறது என்றொரு பொறுப்புத் துறப்பை முன்வைத்துவிட்டு குறுக்குச் சால் ஓட்டுகிறவர்கள் நேரடியாக ரஜினியின் பெரியார் விமர்சனத்தை ஆதரிக்கத் தொடங்கி விடுகிறார்கள். அவர்கள் இப்போதில்லை; எப்போதுமே பெரியார் என்ற பெயரையும் அவரது அரசியல், சமூகப் பங்களிப்பையும் அச்சத்தோடு கவனித்து மறுத்தவர்களாகவே இருந்திருக்கிறார்கள்.

அவரை நாத்திகம் மட்டுமே பேசியவராகக் குறுக்குவதை முதன்மையாகச் செய்கிறார்கள். சனாதனச் சடங்குகளை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த இடைநிலைச் சாதிக்கூட்டங்களை நோக்கி இடையறாது பேசியவர் பெரியார். அவர்களின் அறியாமையையும், சாதிப் பெருமைகளையும் தாங்கள் சாதி அடுக்கில் மேலே இருப்பவர்கள் என்ற எண்ணங்களை அர்த்தமற்ற வெட்டிப் பேச்சுகள் எனச் சுட்டிக்காட்டியவர். 

சமூக நீதிக்கான அவரது போராட்டங்களையும் பரப்புரைகளையும் வாசித்து விட்டு அதற்கான மறுப்புரைகளை முன்வைப்பதற்குப் பதிலாகத் தலித் (தீண்டப்படாதவர்)களுக்கெதிராக முன்னிறுத்த விருப்பம் கொண்டவர்களாகச் சில முன்னெடுப்புகளைச் செய்கிறார்கள். இந்து சமயத்திற்கெதிராகப் புத்தமதத்தை முன்மொழிந்த அயோத்திதாசரைப் பெரியார் மறைத்துவிட்டார் என்பது முதன்மையானது முன்னெடுப்பு. பிராமணப்பெண்களின் அபத்தச் சீற்றங்கள் இன்னொன்று.இவ்விரண்டையும் வைத்துக்கொண்டு இப்படிச் சில கேள்விகளைக் கேட்கலாமா?

இந்த முன்னெடுப்பை வைத்துக்கொண்டு இப்படிச் சில கேள்விகளைக் கேட்கலாமா? நாத்திகர் பெரியாரால் மறைக்கப்பட்ட அயோத்திதாசரைச் சமூகவெளியில் முன்னே கொண்டுவந்து நிறுத்தி இந்துமத அபிமானிகள் கொண்டாடியிருக்கலாமே? அவர்களைத் தடுத்தது எது? அவர்களும் சேர்ந்து அயோத்திதாசரை ஏன் மறைத்தார்கள்?

எதிரியின் எதிரிக்கு உதவும் தந்திரோபாயம் என்ற அளவில் கூட அப்போது செய்யவில்லையே? உலக நிகழ்வுகளையெல்லாம் அடையாளப்படுத்திய சுதேசமித்திரன் இதழில், அயோத்திதாசர் என்ற பெயரையும் அவரது அறிவுக்கூர்மையையும் பாராட்டாமல் - சுட்டிக்காட்டாமல் தடுத்தது எது? 

தன்காலச் சமூகச் சீர்திருத்தவாதிகளை - இந்திய/ உலக அளவுப் பெயர்களைக் கவிதைப்பரப்பில் சுட்டிக் காட்டிய பாரதியார் ஏன் அயோத்திதாசர் என்ற பெயரைச் சுட்டிக்காட்டவில்லை என்றெல்லாம் கூடக் கேள்வி கேட்கலாம். அப்படிக் கேட்பது ஒருவித அபத்தம், அவரவரின் நிகழ்காலத்தில் எதைப் பேசுவது? எதனை ஆதரிப்பது? எதனை மறுப்பது? எதனைக் கண்டுகொள்ளாமல் இருப்பது என்பதெல்லாம் ஒவ்வொருவரின் தேர்வும் நோக்கமும் சார்ந்தன. அவர்களின் அரசியல் நிலைபாடுகள் சார்ந்தன. அவர்களின் இயங்குநிலை சார்ந்தது. 

முகநூலிலும் சமூக ஊடகங்களிலும் செயல்படும் பிராமணப் பெண்களின் சாதீய ஈடுபாடு ஆச்சரியமாக இருக்கிறது. அவர்கள் தங்களைப் பெண்களாகக் கருதுவதைவிடப் பிராமணப் பெண்களாகவே கருதிக் கொள்கிறார்கள். இந்தப் போக்கு தலித் பெண்ணியத்தின் நிலைபாடுகளுக்கு நேரெதிரானது. பாலடையாளத்தை முதன்மையாக நினைக்காமல் சாதி அடையாளத்தை முதன்மையாக நினைக்கிறார்கள். நாங்கள் முதலில் பெண்கள்; பிறகு தலித்துகள். அதனால் நாங்கள் இரண்டு விதமான ஒடுக்குமுறைக்கும் ஒதுக்குதலுக்கும் உள்ளாகிறோம் என்று வாதிடுகிறார்கள் தலித் பெண்கள். தலித் ஆண்களின் ஒடுக்குதலையும் ஒதுக்குதலையும் சேர்த்தே எதிர்க்கும் நிலைக்குமாறாகப் பிராமணப்பெண்கள் என்ற ஒற்றை அடையாளத்துக்குள்ளேயே நிற்கிறார்கள். அதனால் கிடைக்கும் புனிதங்களாலும் பெருமைகளாலும் தங்களின் இடம் உயர்வானது என நினைக்கிறார்கள். அதனாலேயே பிராமணியத்தைக் கேள்விகேட்ட பெரியார் மீது கோபங்கொண்டு சீறுகிறார்கள்.

இந்திய/ தமிழ்ப் பரப்பில் பெண்களின் பொதுவெளிப்பங்கேற்புக்கும், பெண்கல்விக்கும், பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கலுக்கும் காரணமான சொல்லாடல்களைத் தீவிரமாக முன்வைத்தவர் பெரியார். பெரியாரின். கருத்துகளை உள்வாங்கிச் செயல்பட்ட திராவிடக் கட்சிகளின் ஆட்சிகளே இங்கு பெண்களுக்கான வெளிகளைத் திறந்துவிட்டுள்ளன. அவரளவுக்கு இந்தியப் பரப்பில் பெண்ணியம் சார்ந்த பாய்ச்சலான கருத்தியலை முன்வைத்தவர் ஒருவரைச் சுட்டிக்காட்ட முடியாது. இதனை அறிந்திருந்த போதிலும் அதனைப் பேச மறுக்கும் பெண்கள், சீதாப்பிராட்டியைத் தங்களின் அடையாளமாகக் கருதிக் கொண்டு, அவரை அசிங்கப்படுத்திவிட்டது பெரியாரியம் எனக் கொந்தளிக்கிறார்கள். நவீனப் பிராமணப் பெண்களின் அடையாளம் சீதாப்பிராட்டி தானா? இறங்கு என்றால் நெருப்பில் இறங்கிக் கற்பை நிரூபிக்கத்தயாரான சீதாதேவியாகத் தங்களை நினைத்துக் கொண்டால் விமோசனங்கள் பக்கத்தில் இல்லை.

பெரியாரின் இயங்குநிலைகள் தேர்தல் அரசியல் அல்ல. அதை முதலில் புரிந்துகொள்ளவேண்டும். அவரை - அவரது கருத்துகளை- முழுமையாக ஏற்றுக்கொண்டு செயல்பட நினைத்தால் தேர்தல் அரசியலில் வெற்றிகள் சாத்தியமில்லை என்பதை அறிந்ததால் தான் திராவிட முன்னேற்றக்கழகமே உருவானது; மாற்றங்களை மேற்கொண்டது. அதற்காக அவரை எதிர்த்து நிற்கவில்லை. ஆனால் இன்று அவர் பெயரை உச்சரித்துச் சாடுபவர்களின் நோக்கம் தேர்தல் அரசியல். தேர்தல் அரசியலின் அணிதிரட்டலுக்காக அவரது செயல்பாடுகளைப் பெரும்பான்மைக்கெதிரானதாகக் கட்டமைக்கிறார்கள். தலித்துகள், பெண்கள், ஒடுக்கப்பட்டோர் போன்ற தனி அடையாளங்களை மறுக்கும் கருத்தியலாளர்கள் அனைவரையும் மத அடையாளத்தின் வழி ஒன்றாக்கப் பார்க்கிறார்கள். ஒன்றாக்கிச் சமநிலை பேணுவதல்ல அதன் பின்னிருக்கும் நோக்கம். ஒன்றாக்கி அரசியல் அதிகாரம் பெறுவது மட்டுமே அவர்கள் தேவை. அதன் பிறகு சனாதன தர்மம் தலித்துகளுக்கு எந்த இடத்தைத் தருமோ அதையே தருவார்கள். பெண்களை எங்கே நிறுத்துமோ அதையே உறுதி செய்வார்கள். 

பெரியாரை வெறுத்து ரஜினிகாந்த் முன்வைக்கும் ஆன்மீக அரசியலை ஆதரிக்கத் தொடங்கினால், அவரது படங்களில் பெண்களுக்குத் தரும் உன்னத இடங்களை நீங்கள் அடையலாம். பெண்களைப் பற்றிப் படங்களில் அவர் பேசிய பொன்(பஞ்ச்) மொழிகளில் சில:

பொம்பளைக்கு பொறுமை வேண்டும், அவசரப்படக்கூடாது. அடக்கம் வேணும், ஆத்திரப்படக்கூடாது. அமைதி வேணும், அதிகாரம் பண்ணக்கூடாது. கட்டுப்பாடு வேணும், கத்தக்கூடாது. பயபக்தி வேணும், பஜாரித்தனம் கூடாது. மொத்தத்துல பொம்பள பொம்பளயா இருக்கணும்.

- அதிகமா ஆசைப்படற ஆம்பளையும் அதிகமா கோபப்படுற பொம்பளயும் நல்லா வாழ்ந்ததாக சரித்திரமே கிடையாது.

- ஒரு பொண்ணு வீட்டைவிட்டு வெளிய போனா புருஷன் கூட போகணும். இல்லேன்னா நாலுபேரு தூக்கிட்டுப் போகணும்.

- பெண் என்றால் புடைவை கட்டி, கையெடுத்துக் கும்பிடத் தோன்ற வேண்டும்

- பொம்பளைய அடிக்கறவனுக்கும் ஊனமுற்றவங்களை அடிக்கிறவனுக்கும் என் அகராதியில் பொட்டைன்னு அர்த்தம்

- பொண்டாட்டிய புருஷன் மதிக்கலேன்னா நரகம். புருஷனை பொண்டாட்டி மதிக்கலேன்னா ஏழேழு ஜென்மத்துக்கும் நரகம்.

- பொம்பள புள்ளைங்க ஊர் சுத்தினா கெட்டுப் போயிடுவாங்க. ஆம்பள புள்ளைங்க வீட்டைச் சுத்தினா கெட்டுப் போயிடுவாங்க.’ (நன்றி: கவிதா லக்ஷ்மி- நார்வே)

பெண்ணுரிமை -பெண்ணியம்- பெண் விடுதலை போன்ற வரங்களுக்கான பாதைகள் வேண்டாம். சாபங்களே போதும் என்றால் பெரியாரைச் சபித்துக் கொண்டிருக்கலாம்.

சமய அடையாளப்பின்னணியில் குடியுரிமை மறுசீரமைப்பு


ஒவ்வொரு நாடும் தனது குடிமக்கள் யார்? என்பதை வரையறை செய்துகொள்ள வேண்டும். அதன் அடிப்படையில் சொந்த நாட்டுக் குடிமக்களின் எண்ணிக்கை எவ்வளவு? பிறநாடுகளிலிருந்து வந்து இங்கே தற்காலிகமாக இருப்பவர்கள் யார்? அவர்களின் எண்ணிக்கை எவ்வளவு ? இருசாராருக்கும் உரிமைகளிலும் சலுகைகளிலும் என்னென்ன வேறுபாடுகள் உள்ளன எனத் திட்டமிட்டுச் செயல்படுவது பொறுப்புள்ள அரசின் செயல்பாடுகளே. இதற்காக மட்டுமே இந்திய நாடாளுமன்றத்தில் இந்தியக் குடியுரிமை மறுசீரமைப்பு வரைவுத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது என்றால் அதனை ஏற்பதில் யாருக்கும் சிக்கல் இருக்கப்போவதில்லை. ஒருநாட்டின் குடியுரிமை பிறப்பு அடிப்படையிலேயே ஒருவருக்குக் கிடைக்கவேண்டும் என்பது பொதுவான நடைமுறை. அத்தோடு அந்நாட்டின் அரசின் அனுமதியோடு குறிப்பிட்ட காலம் வாழ்ந்தவர்களுக்கும் குடியுரிமை பெறும் உரிமை உண்டு என்பது உலகநாடுகள் செயல்படுத்தும் நடைமுறை. ஒருவரின் பணி காரணமாக ஒருநாடு இரட்டைக் குடியுரிமைகளையும் வழங்கலாம். பல நாட்டுக் குடியுரிமைகொண்ட மனிதர்கள் கூட இந்த உலகத்தில் இருக்கிறார்கள். அவர்களின் வேலைத்திறம், சிறப்பு நிலை, மதிப்பு காரணமாக அப்படி வாய்ப்புகள் கிடைக்கும். அவை நிரந்தர உரிமைகளாகவும் தற்காலிக உரிமைகளாகவும் அமையும். இப்போது நமது நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள குடியுரிமை மறுசீரமைப்புச் சட்ட முன்வரைவு இதுபோன்ற நடைமுறைகளை உருவாக்கி நாட்டை மேலாண்மை செய்வதற்கான ஒரு வரைவுத்திட்டம் என்பதைத் தாண்டி, வேறுவேறு நோக்கங்கள் கொண்டதாக இருக்கிறது. அந்நோக்கம் நாட்டின் அமைதிக்கும் சமாதான வாழ்வுக்கும் சிக்கல்களை உண்டாக்கிவிடும் ஆபத்தைக் கொண்டிருக்கின்றது.

நிகழ்காலத்து இந்திய அரசாங்கம் முன்னெடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் பெரும்பான்மை மக்களுக்கும் சிறுபான்மை மக்களுக்கும் இடையிலான இடைவெளிகளை அதிகரித்துக் கொண்டே இருக்கும்படி முன்வைக்கப் படுகின்றன. அதன் உச்சகட்டம் தேசத்தை வன்முறைக் களமாக மாற்றிவிடும் என்பதை ஆளுங்கட்சி அறிந்திருக்கவில்லை என்று சொல்ல முடியாது. வன்முறையைத் தனது இருப்புக்கான கருவியாகப் பார்ப்பவர்கள் அதைக் கூர்தீட்டிக் கொண்டே இருப்பார்கள். அவர்களோடு தேர்தல் கூட்டணி என்ற அளவில் உறவு வைக்க நினைக்கும் சிறுகட்சிகளும்கூட அவர்களை அறியாமலேயே வன்முறைக் களமாக அவரவர் இயங்கும் மாநிலங்களை மாற்றிவிடப் போகிறார்கள்.

இந்தியாவில் ஒற்றைப் பெருஞ்சமயத்திற்கெதிராக இன்னொரு சிறுபான்மையினரின் சமயம் என்பதாகக் கணக்குப் போட்டு இந்து X இசுலாமிய முரண்பாடு கட்டமைக்கப்படுகிறது. இக்கட்டமைப்பு அடிப்படையில் தவறானது. இந்தியாவில் பெரும்பான்மை X சிறுபான்மை எதிர்வு சமய வாழ்க்கை என்னும் ஒற்றைத்தளத்தில் மட்டும் இயங்கும் தன்மை கொண்டதல்ல. ஒவ்வொரு நிலவியல் பின்னணியிலும் வெவ்வேறு பெரும்பான்மைகளும் சிறுபான்மைகளும் இருக்கின்றன. சமய வாழ்க்கை போலவே இனம், மொழி, பண்பாட்டுக்கூறு என விதம்விதமாக வேறுபாடுகள் நிலவுகின்றன. அவற்றையும் தாண்டிச் சாதிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிலவியலிலும் – கிராமங்கள், நகரங்கள், தேர்தல் தொகுதிகள் என ஒவ்வொன்றிலும் இந்தப் பெரும்பான்மை சிறுபான்மை என்ற பாகுபாடுகளை உருவாக்கிப் பாரதூரமானவை ஆக்குகின்றன. ஆங்கிலேயர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட நிர்வாக அமைப்புகளான பஞ்சாயத்துகள், வட்டங்கள், மாவட்டங்கள், மாநிலங்கள் என ஒவ்வொன்றிலும் அதன் இருப்பை உணர்ந்து கொண்டேதான் வாழ்கிறார்கள் இந்தியர்கள்.

சமய அடிப்படையிலேயேகூட ஒவ்வொரு சமயப்பிரிவும் உள் முரண்பாடுகளால் தங்களுக்குள் மோதிக்கொள்ளும் வாய்ப்புகள் கொண்டவை. இந்துசமயமாக உருவகப்படுத்தப்படும் இந்தியப் பெருஞ்சமயம் எப்போது அகச்சமயங்கள் X புறச்சமயங்கள் என்ற முரணைக் கொண்டிருந்தன என்பதைச் சமயங்களின் வரலாற்றைப் படித்தவர்கள் அறிந்திருப்பார்கள். 16 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு இசுலாமியமும் 18 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு கிறித்தவமும் அயல் சமயங்களாகக் கருதப்படுகின்றன.

வேதங்களையும் ஸ்மிருதிகளையும் அடிப்படைக் கோட்பாட்டு நூல்களாகக் கொண்டுள்ள வைதீகச் சமயத்திற்கு வெளியே இருப்பனவாகவே சைவம், சாக்தம், கௌமாரம்,காணாபத்தியம், சௌரம், ஸ்மார்த்தம் ஆகியன நிற்கின்றன. அவற்றிற்கும் வெளியே இருப்பனவாகப் புத்தமும் சமணமும் இருந்தன. ஒருவர் இதில் ஒன்றில் இருப்பவராக இங்கே நினைக்கிறாரேயொழிய இவை எல்லாம் எனது சமயவாழ்வின் பகுதிகள் என நினைப்பதில்லை. பக்தி, கர்மம், ஞானம் என மூன்று வழிமுறைகளையும் புறச் சமயங்களையும் நம்புகிறவர்கள் ஒன்றுபோல ஏற்பதில்லை. ஏதாவதொன்றையே முதன்மையாகக் கைக் கொள்வார்கள். அதேபோல் வேதாந்தம், சித்தாந்தம், அத்வைதம், துவைதம், சைவ சிந்தாந்தம், மீமாம்சம், சாங்கியம், வைசேடிகம், நியாயம், சார்வாகம் போன்றனவெல்லாம் இங்கே சமயச் சொல்லாடல்களாக நின்று வேற்றுமைப்படுத்தும் பணியையே செய்துள்ளன. எப்போதும் ஒற்றை மதமாக ஆக்கும் வேலையைச் செய்ததல்ல. அவை ஒவ்வொன்றும் இன்னொன்றைப் புறச்சமயம் எனப் பார்த்தே விவாதித்துள்ளன. அதே நேரத்தில் எதிர்ச்சமயம் என நினைக்கவில்லை. அப்படி நினைக்கத்தூண்டியன அரசதிகாரங்கள் மட்டுமே.

சமய வாழ்வில் நிலவும் இந்த முரண்பாடுகள் போலவே இனம் சார்ந்த முரண்பாடுகளும் இங்கே நிலவுகின்றன. திராவிட இனம், ஆரிய இனம், மங்கோலிய இனம் என இந்தியப் பரப்புக்குள் முதன்மையான இனங்கள் எப்போதும் இருந்துள்ளன; ஏற்புடன் வாழ்ந்துள்ளன. அதே போல் மொழிக்குடும்பங்களும் இரண்டு மூன்று இங்கே இருக்கின்றன. எல்லாக்காலங்களிலும் இன்றுள்ள இந்தியப் பரப்பு முழுவதும் வணிக ரீதியாகவும் சமயவாழ்வு சார்ந்தும் பயணங்கள் நிகழ்ந்துள்ளன. தமிழ்ப் புலவர்களே கூடப் பல நேரங்களில் வட இந்தியப் பயணங்கள் செய்திருக்கிறார்கள். பக்தி இயக்க காலத்திலும் பின்னிடைக் காலத்திலும் வட இந்தியக் கோவில்களுக்குச் சென்று வந்தவர்கள் அங்கு உறைந்திருந்த கடவுள்களைப் பாடியுள்ளனர். அதேபோல வட இந்தியாவிலிருந்து வந்த பயணிகளின் குறிப்புகளும் பக்திக் கவிதைகளும் அந்தந்த மொழிகளில் கிடைக்கின்றன. இலக்கிய வடிவங்களும்கூட கொண்டு கொடுத்து வளர்ந்துள்ளன. இசுலாமியக் கவிதைக்குள்ளும் இந்தக் கொண்டு கொடுத்தல் நிகழ்ந்துள்ளன. மொழிகளும்கூடப் பெயர்ச்சொற்களைக் கொடுத்துள்ளன; பெற்றுள்ளன.

இந்த வரலாறும் பெரும்போக்குகளும் புரிந்துகொள்ளப்பட்ட நிலையில் தான் விடுதலை பெற்ற இந்தியாவை ஒற்றைப் பெருஞ்சமய நாடாக உருவகித்து அரசியல் சட்டத்தை உருவாக்காமல் பல்சமயங்களும் பல்லினங்களும் பல்மொழிகளும் பல் பண்பாட்டுக்கூறுகளும் இணைந்த – ஏற்றும் விட்டுக்கொடுத்தும் வாழக்கூடிய சார்பற்ற நாடாக இருக்க வேண்டும் என்ற கருத்தியல் உருவாக்கப்பட்டது. அரசியல் சட்டம் உருவாக்கப்பட்டது. அக்கருத்தியல் நீண்ட கால நன்மைகளைக் கொண்டது. அந்நன்மைகள் சிறுபான்மைச் சமூகங்களின் நல வாழ்வுக்கு மட்டும் உறுதிசெய்யும் தன்மை கொண்டதல்ல. பெரும்பான்மை சமூகங்களும் அதன் மூலம் சமாதான வாழ்க்கையை உறுதி செய்துகொள்ளும்.

குடியுரிமை வழங்குவதற்குக் கால அளவை அடிப்படைக் கூறாகக் கொள்ளாமல் ஒரிடத்திற்குச் சமயத்தை அடிப்படை அலகாகவும் இன்னோரிடத்தில் மொழியை அடிப்படை அலகாகவும் வைப்பது இப்போதிலிருந்தே முரண்பாடுகளைக் கட்டியெழுப்பவே பயன்படும். இப்போது தோன்றும் அச்சவுணர்வு எதிர்காலத்தில் வாக்கு அரசியலிலிருந்து விலக்கி வைக்கும். பிரிவினை அரசியலுக்கு வழிவகுக்கும். இதனைப் புரிந்து கொண்டு முன்மொழிவில் மாற்றங்கள் செய்து இந்தச் சட்டத்தை நிறைவேற்றுவதே உலக சமுதாயத்திடம், மனிதாபிமான அரசு என்ற பெயரை இந்திய அரசுக்குப் பெற்றுத்தரும். நாம் சகிப்பை -அகிம்சையை ஏற்றுப் பேசிய காந்தியின் தேசத்து மனிதர்கள் என்பதைத் திரும்பவும் உலகத்திற்குச் சொல்லவேண்டும். அந்த வாய்ப்பைத் தவறவிடக்கூடாது. 



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

தணிக்கைத்துறை அரசியல்

நவீனத்துவமும் பாரதியும்