தனித்திருக்க விரும்பும் மனம்: சுஜா செல்லப்பனின் ஒளிவிலகல்


குடும்ப அமைப்பின் பெருமைகளையும் சிறப்புகளையும் ஆராதிப்பவர்கள், அதற்குள் ஒவ்வொருவரும் இன்னொருவரைச் சார்ந்து வாழ வேண்டியவர்களாக இருக்கிறார்கள் என்பதாகப் பேசாமல் ஒவ்வொருவருக்கும் அது பாதுகாப்பைத் தருகிறது என்பதாகவே பேசுகின்றனர். அதிலும் பலவீனமானவர்களாக இருக்கும் பெண்களுக்கு ஆண்களின் பாதுகாப்பும் அரவணைப்பும் குடும்பத்திற்குள் தான் கிடைக்கும் என வலியுறுத்துகின்றனர். அதன் காரணமாகப் பெண்கள் தங்களின் தனித்த அடையாளங்களைப் பேணுவதையும் அதற்கான முயற்சிகளையும் செய்யக் கூடாது என்றும் வலியுறுத்துகின்றனர்.
தனித்திருத்தலின் சுதந்திரத்தைக் கொண்டாடும் மேற்கத்திய வாழ்க்கையில் – அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளிலும் கூட சேர்ந்து வாழும் கணவன் – மனைவிக்கிடையே ஆண்களுக்குத் தரப்படும் மரியாதைகளும் மதிப்பும் அதிகம் என்பதைப் பார்த்திருக்கிறேன். சமூகமாக – அமைப்பாக வாழ்வதை விரும்பும் நபர்கள் எப்போதும் பிரிவதைப் பற்றி நினைப்பதில்லை. ஆனால் ஒவ்வொரு கட்டத்திலும் தனது விருப்பங்களும் எண்ணங்களும் கணக்கில் கொள்ளப்படுவதில்லை என்று நினைக்கும் தனிமனிதர்கள் ஏன் சேர்ந்து வாழ வேண்டும் என்ற கேள்வியைக் கேட்டுக்கொண்ட இருக்கிறார்கள். அதிலும் குடும்ப அமைப்பிற்குள் குரலற்றவர்களாக ஆக்கப்படும் பெண்கள் அந்தக் குரலை எழுப்பியெழுப்பித் தணித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.குடும்ப நெருக்கடியிலிருந்து தப்பித்துவிடும் கேள்விக்கான ஒருவிடையாக ஆண்கள் துறவைத் தேர்வுசெய்கிறார்கள். ஆனால் பெண்களுக்கு அந்த வாய்ப்புகள் குறைவாகவே இருப்பதால் அடங்கிப் போய்விடுகிறார்கள்.

இந்திய சமூகத்தை உள்ளடக்கிய கீழ்த்திசை நாடுகள், கூட்டுக்குடும்ப அமைப்பையே இன்றும் சிறந்ததாகக்கருதும் மனப்போக்கு கொண்டவை. அங்கிருந்து ஒரு பெண் தனது தன்னிலை உந்தித்தள்ளியதால், கணவனை விட்டு விலகி வாழவிரும்பினாள் எனச் சொல்வதும், அதனை ஏற்றுக் கொள்ளக் கணவனும் குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களும் பெரிய அளவு எதிர்ப்புக் காட்டவில்லை எனக் கதை எழுதுவதும் பெண்ணியச் சிந்தனைகளின் பெருந்தாக்கத்தின் விளைவு என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால், பெண்ணியத்தின் அடிப்படை விவாதமே பெண்கள் தங்களின் தனித்துவத்தைப் பேணுவதை உறுதிசெய்ய வேண்டும் என்பதே.

தமிழில் இப்படியொரு கதையை வாசிக்கத் தந்துள்ளார் சுஜா செல்லப்பன். அவர் இப்போது வாழ்வது சிங்கப்பூரில். என்றாலும் அவரது மனமும் எழுத்துகளும் இந்திய வெளியையும் மனதையும் விட்டு விலகிப்போய் விடவில்லை என்பதை அந்தக் கதை காட்டுகிறது.. ஒளிவிலகல் என்னும் அந்தக் கதையைச் சுஜா செல்லப்பன் இப்படித்தொடங்குகிறார்:

அந்தப் புத்தர் சிலையின் தோளில் மட்டுமே சிறுகீறல். உற்றுப்பார்த்தால்தான் தெரிகிறது. அதற்குப் போயா அம்மா இப்படி முடிவு எடுத்திருக்கிறாள். சுபாவுக்கு நம்பவே முடியவில்லை. ஊரில் இருந்து வந்ததும் குளிக்கக் கூடை இல்லை. வீட்டுவாசற்படியில் உட்கார்ந்தாள். புத்தரைக் கையில் எடுத்தாள். கண்ணை மூடி உலகம் மறந்த நிலையில் சிந்தனையில் ஆழ்ந்திருப்பது போன்ற தோற்றம்.

தொடங்கும் கதையில் “அம்மா இப்படி முடிவு எடுத்திருக்கிறாள்” என்பது கதையை வாசிக்க நினைத்து நுழைபவர்களுக்கு ஆர்வத்தை உண்டாக்கும் சொற்றொடர். அம்மா எப்படி முடிவு எடுத்தாள்? எனக் கதைக்குள் இருக்கும் ரகசியம் ஒன்றை அறிந்துகொள்ள விரும்பிக் கதையைத் தொடர்ந்து வாசிக்கக் கூடும். வாசித்தவர்கள் கேள்விக்கான விடையைக் கதையை முடிப்பதற்குள் அறிந்துகொள்ளக் கூடும். ரகசியத்தைச் சொல்லிமுடித்துவிடுவது கதையை எழுதிய எழுத்தாளரின் பொறுப்பு. அப்படி முடித்தால் தான் அது கதை. அப்படி விடைசொல்லும் எழுத்தாளரைத் தீர்க்கமான முடிவுகள் கொண்ட கதாசிரியர் என்று வாசிப்புமனம் நம்பும். அப்படி விடை சொல்லாமல் சமகாலச் சிக்கல் ஒன்றைக் குறித்த விவாதம் என்பது தோன்றும் படியாகக் கோடுகாட்டிவிட்டுக் கூட ஒரு எழுத்தாளர் ஒதுங்கிக் கொள்ளலாம். எழுத்தில் இரண்டுக்கும் – விடை சொல்வதற்கும் விடைசொல்லாமல் சிந்திப்பதற்கான திறப்பைக் காட்டிவிட்டு ஒதுங்கிக் கொள்வதற்கும் சாத்தியங்கள் உண்டு. இரண்டு நிலைகளில் இரண்டாவது நிலையை நவீனத்துவ விமரிசகர்கள் பாராட்டுகிறார்கள்.

கதையில் வரும் அம்மாவிற்கும் அப்பாவிற்கும் பெயர்கள் இல்லை. அம்மா, அப்பா தான். கதையைச் சொல்லும் பாத்திரமான மகளுக்கு மட்டுமே பெயர் இருக்கிறது. அவள் பெயர் சுபா. சுபாவின்அம்மா எடுத்த முடிவு இந்தியப் பெண்கள்/ தமிழ்ப்பெண்கள் எடுக்க நினைக்காத ஒரு முடிவு. கணவரைப் பிரிந்து தனியாக வாழவேண்டும் என்று முடிவு எடுத்தாள் என்பதாக மட்டுமல்லாமல், அவளது கணவரும் கூட ஏற்றுக்கொள்வார் என்பதைக் குறிப்பாகக் காட்டுகிறது.
அம்மா, ‘இப்போது சொல்..’ என்பதுபோல ஊஞ்சலில் உட்கார்ந்து கொண்டு சுபாவைப் பார்த்தாள். பக்கத்தில் சிறுகூடை நிறைய பூக்கள்.

அம்மா. அப்பா இதுக்கு..?

நிச்சயம் ஒத்துக்குவார்..

மாலை வெயிலின் மங்கிய வெளிச்சத்தில் புத்தரின் முகம் தெரிந்தது. சுற்றிலும் இருந்த முல்லைப்பூக்கள் மொட்டவிழ்ந்து மலரத் தொடங்கியிருக்க, தன் இட மாற்றத்தையோ, அதற்கான காரண காரியங்களையோ எதையும் உணராதவர் போல கண்களை மூடியபடி இருந்த புத்தரின் முகத்தில் அதே சிறுகீற்றுப்புன்னகை.
கதையின் தொடக்கத்தில் காந்திபுரம் வீட்டில் இருந்த புத்தர் சிலை, கதை முடிவில் தோட்டத்து வீட்டிற்கு இடம் மாறியிருந்தது. புத்தர் சிலையில் அதே சிறுகீற்றுப்புன்னகை. ஆனால் இந்த இடமாற்றத்திற்கான காரணங்களும் மனிதர்களும் புன்னகையோடு இருப்பார்கள் என்று சொல்லமுடியாது.

அம்மா, கணவரை விட்டுப் பிரியும் அந்த முடிவை எடுக்கத் தூண்டிய காரணங்களும் காரணிகளும் என்னவாக இருக்கும்? எடுத்த அந்த முடிவால் உடனடியாக ஏற்படப்போகும் விளைவு என்ன? முதல் விளைவைத்தாண்டி ஏற்படக்கூடிய தொடர் விளைவுகள் எவை? அந்த விளைவுகளால் அம்மா என்ற தனி மனுசிக்கு மட்டுமே சிக்கல்களா? அவளோடு தொடர்புடைய குடும்ப உறுப்பினர்களுக்கும், உறவினர்களுக்கும் கூடச் சிக்கல்கள் தானா? அவர்கள் எல்லாம் என்னென்ன எதிர்வினைகளைச் செய்வார்கள்.. இப்படித் தொடர்ச்சியான வினாக்கள் அதன் விளைவாக என்னவெல்லாம் நடக்கும்; அந்த முடிவு ஏற்கத்தக்க முடிவு தானா? என்பதற்கான விடைகள் கதையில் கிடைக்கும்போது எழுதப்பெற்ற கதை முழுமையான கதையாக ஆகிவிடுகிறது. அம்மா எடுத்த முடிவு – கணவரைப் பிரியும் அந்த முடிவு அவளுக்கு- அம்மாவுக்கு மகிழ்ச்சியைத் தந்தது என்பதைக் கதாசிரியர், ஒரு பெரும் பத்தியில் எழுதுகிறார். எழுதப்பெற்றுள்ள அந்தச் சொற்றொடர்கள் ஒரு பெண்ணின் – தனித்திருப்பதை விரும்பிய பெண்ணின் லயிப்பு என்பதை உணர்வு பூர்வமாகச் சொல்கின்றன.

அம்மா காந்திபுரம் வீட்டில் இருந்துகொண்டுவந்த பைகளைக் கீழே வைத்துச் சில பொருட்களை மட்டும் எடுத்துக்கொண்டிருந்தாள். வீட்டிற்குள் நுழைந்ததும் அம்மா வேறு உருக்கொண்டவளாய் ஆனாள். யாரோ புது மனுஷியைப் பார்ப்பதுபோல இருந்தது. புத்தர் சிலையை வாசலுக்கு நேராக உள்ள ஒரு ஸ்டூலில் வைப்பது தெரிந்தது. அந்த வீடு முழுதும் அம்மா நிரம்பியிருப்பதாகத் தோன்றியது. வீட்டிற்குள் அனுமதியின்றி நுழைவதோ அம்மாவின் அந்தரங்கத்தில் தலையிடுவது போன்ற உணர்வைக் கொடுத்த து. சிறிது நேரத்தில் பாட்டுச் சத்தம் கேட்டது. பக்கத்து வீட்டின் கோழிக் குஞ்சுகள். முற்றத்தில் கீச்கீச் என்று கத்திக் கொண்டிருந்தன. அம்மா அவைகளுக்குத் தானியங்களைத் தூவினாள். மோட்டார் போட்டுத் தென்னை மரங்களுக்குத் தண்ணீர் பாய்ச்சினாள். ஒரு கிண்ணத்தை எடுத்துக்கொண்டு வந்து மதிலைச் சுற்றிக் கொடியாய்ப் படர்ந்திருக்கும் முல்லைப்பூக்களைப் பறிக்க ஆரம்பித்தாள். சேலையை இழுத்து ஏற்றிக் கட்டிக்கொண்டு ஒவ்வொரு கிளையாகப் பிடித்து வளைத்துப் பூக்களைப் பறித்தாள். இன்னும் மலராத மொட்டுகளைச் சரியாகக் கணித்து இன்று மலரப்போவதை மட்டுமே சிறு அழுத்தம் கொடுத்து பறித்தாள். ஒவ்வொரு பூ பறிக்கும்போதும் கொடியிடம் மன்னிப்போ நன்றியோ தெரிவிப்பதுபோல ஒரு வருடல். ஒரு புகைப்படமாய் பக்கவாட்டில் அம்மாவின் தோற்றம் கண்களில் பட்டது. அம்மா என்ற பிம்பம் அழிந்து ஒரு பெண்ணாக மட்டுமே பார்க்கத் தூண்டியது அந்தத் தோற்றம்.

இந்தப் பெரும்பத்தியின் கடைசியில் “அம்மா என்ற பிம்பம் அழிந்து ஒரு பெண்ணாக மட்டுமே பார்க்கத் தூண்டியது அந்தத் தோற்றம்” என்பதில் அம்மாவைப் பற்றிய மகளின் புரிதலும் இருக்கிறது.

பிள்ளைகளின் குடும்பத்தில் சிக்கலோ, சண்டையோ வந்தால் கணவனிடம் சொல்லிக் கொள்ளாமல் கிளம்பி அம்மா வீட்டிற்கு வந்துவிடுவது இந்தியக் குடும்பங்களில் நடக்கும் நடைமுறைகள். ஆனால் கதையில் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இடையே விரிசல். அதனைப் பேசிச் சரிசெய்ய வந்திருப்பவள் மகள் சுபா. அந்த மகளின் கூற்றாகவே கதை நிகழ்த்தப் பெற்றுள்ளது. கதையை எழுதியுள்ள சுஜா செல்லப்பனின் இப்போதையை இருப்பு சிங்கப்பூர் என்றாலும் கதை நடக்கும் வெளி இந்திய நகரம். இந்தியாவில் வாழும் ஒரு பெண்ணாக இருந்தால் இப்படியான ஒரு கதையை எழுதத் தோன்றியிருக்குமா? என்பது ஐயமே. அவரது புலம்பெயர் வாழ்வுப் பின்னணியோ தனித்து வாழ விரும்பும் அம்மாவின் விருப்பத்தை நேர்மறைப் பார்வையுடன் ஏற்று முன்வைக்கும் கதையொன்றை எழுதத் தூண்டியிருக்கிறது.

கதையில் வரும் அம்மாவிற்கும் அப்பாவிற்குமிடையே பெரிய மனச் சங்கடங்களோ, சண்டைகளோ இருந்ததாக எழுதப்பெறவில்லை. காசியில் போய் மற்றவர்கள் எல்லாம் எதையெதையோ வாங்க அம்மா வாங்கியது அந்தக் கறுப்புநிற புத்தர் சிலை. அதை வாங்கியதே அவருக்குப் பிடிக்கவில்லை. அதற்கும் மேலாக அந்தச் சிலைக்கு வீட்டில் கொடுத்த இடமும் அவருக்கு உடன்பாடானதாக இல்லை. ஆனால் அம்மா, அந்தச் சிலையைத் தெய்வம் என்றுகூட நினைக்கவில்லை. என்றாலும் அதன் மீதான ஈடுபாடும் ஒரு பூவைப் பக்கத்தில் வைத்துவிட்டுப் போவதும் அவளது மனதிற்குள் அது இடம்பிடித்துக்கொண்டிருக்கிறது என்பதைக் காட்டுகிறது. அந்தச் சிலையில் ஏற்பட்ட சிறுகீறலும், அதனைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாத கணவனின் போக்கும் அவளுக்குத் தந்தது எரிச்சல்; தவிப்பு. அதன் தொடர்ச்சியாக பிரிந்துவிடலாம் என்ற முடிவுக்குத் தள்ளுகிறது.

புத்தர் சிலையில் ஏற்பட்ட சிறுகீறலும், அதனைக் கண்டுகொள்ளாமல் இருக்கும் கணவனின் அசட்டையும் தான் பிரிவிற்கான காரணம் என்பது போலத் தோன்றினாலும், அதையும் தாண்டிப் பல காரணங்கள் அவள் மனதிற்குள் இருந்தன எனக் கதாசிரியர் காட்டுகிறார். மகளைத் திருமணம் செய்து அனுப்பிவிட்டுக் கணவன் -மனைவி என இருவரும் தம்பதிகளாகத் தனித்து வாழும் – காந்திபுரம் வீட்டில் வாழும் இருவரும் ஒரே வீட்டில் வாழ்ந்தாலும் இருவரின் விரும்பங்களும் வேறுவேறாய் இருக்கின்றன. உடல் நோய் மற்றும் வயது காரணமாக மனைவியைச் சார்ந்து வாழ்பவராக இருந்த போதிலும் அப்பாவின் விருப்பங்களுக்கும் முடிவுகளுக்கும் கட்டுப்பட்டு வாழ வேண்டியவளாக அம்மா இருக்கிறாள். அவளின் விருப்பத்தையும் ஆசைகளையும் காதுகொடுத்துக் கேட்பவராகவும் ஏற்றுச் செயல் படுத்துபவராகவும் அவர் எப்போதும் இல்லை என்பதையும் கதை கோடிட்டுக் காட்டுகிறது. இருவரையும் சமாதானம் செய்துவிட முடியும் என்ற நம்பிக்கையில் வந்த மகள் அப்பாவோடும் நடத்தும் உரையாடல் இப்படி அமைந்துள்ளது.

‘அம்மாகிட்ட எப்படி ஆரம்பிகிறதுனே தெரியல. நீங்க சொன்னது உண்மைதானா..?

நேத்து வக்கீல் வந்துட்டுப் போனார். ம்யூச்சுவல்னா பிரச்சினை இல்லை; யோசிச்சிட்டு சொல்லுங்கனு சொல்லிட்டுப்போனார். என்றபடி எதிர்ப் பக்கத்தில் இருக்கும் அலமாரியைப் பார்த்தார். சில காகிதங்கல் மின்விசிறிக்காற்றில் பக்கங்களைப் புரட்டியபடி படபடத்தன.

‘ என்னப்பா பிரச்சினை? எதுவும் சண்டையா?

இரண்டு வாரங்களுக்கு முன்புதான் அம்மா பேசியிருக்கிறாள். அதற்குள் வக்கீல் வரை வந்திருக்கிறாள் என்றால் நிச்சயமாக இப்போது எடுத்த முடிவாக இருக்க வாய்ப்பில்லை.

‘என்ன நடந்துச்சுப்பா? என்ன பிரச்சினை உங்களுக்குள்?..

‘சண்டையெல்லாம் ஒன்னும் இல்லை’.

‘புத்தர் சிலையில் எப்படி கீறல் வந்துச்சு?’

‘யாரும் எதுவும் பண்ணல, திடீர்னு ஒருநாள் கீறல். அவதான் கவனிச்சிருக்கா..’

வாழும் வெளி – வீடு சார்ந்து இருவருக்கும் வேறுபட்ட எண்ணங்களும் விருப்பங்களும் இருந்தன. குடியிருக்கும் வீட்டைத்தேர்வு செய்தலில் அவள் கணவர் தொடர்ந்து பிடிவாதம் காட்டுகிறார். அம்மாவின் விருப்பம் தோட்டத்துவீடு. ஆனால் அப்பாவிற்கோ இப்போதிருக்கும் காந்திபுரம் வீட்டை விட்டு நகரும் எண்ணம் இல்லை என்பதான முரண்பாடுகளைக் கதையில் இடம்பெற்றுள்ள உரையாடல்களும் நிகழ்வுகளும் முன்வைக்கின்றன.

அம்மாவுக்கு அந்த வீட்டில் குடியிருக்க வேண்டும் என்று ஆசை. அப்பா தான் முதன்முதலில் கட்டியவீடு என்பதால் காந்திபுரம் வீட்டை விட்டு மாறச் சம்மதிக்கவில்லை. தோட்ட வீட்டின் முன்புறம் முழுதும் பூக்களும் ஒரு பெரிய வேப்பமரமும் இருக்கும். பின்புறம் தென்னை மரங்களும் சில காய்கறிச் செடிகளுமாகக் கச்சிதமான அமைப்பைக் கொண்டிருக்கும். நடுவில் வீடு இருபுறமும் திண்ணை. ஒரு ஹால் இரண்டு அறைகள், சமையலறை, கழிப்பறை. அந்த வீட்டை ஒட்டினாற்போல அதே அமைப்பில் இன்னொரு வீடு. அந்த வீடுகளை வாடகைக்கு விடுவது; பராமரிப்பது எல்லாம் அம்மாவின் பொறுப்பில் இருந்தது.

ஒவ்வொன்றிலும் அவளுக்கும் அவருக்கும் வேறுவேறு நிலைபாடுகள் இருந்தன. அவளது விருப்பங்கள் என்ன என்பதைக்கூட கேட்பவராக இருந்ததில்லை அப்பா என்பதை அறிவாள் கதைசொல்லியான மகள். பிள்ளைகளைப் பார்த்துக்கொள்ள அவள் பார்த்த ஸ்டெனோ வேலையை விடும்படி கணவன் சொன்னதைக் கேட்டுத்தான் வேலையை விட்டிருந்தாள். அப்படி விடுவதில் அவளுக்கு அப்போது விருப்பம் இல்லை. என்றாலும் குடும்பம் தந்த நெருக்கடியால் வேலையை விட்டவள்.

மாறிவரும் சமூகப் போக்கையும் தனிமனித விருப்பங்களையும் புரிந்து கொள்ளாமல் இருக்கும் மரபான குடும்ப அமைப்பும் அதன் உறுப்பினர்களும் இறுக்கமான அதே தன்மையோடு தொடரமுடியாது என்பதை நேரடியாகச் சொல்லாமல் கோடிட்டுக் காட்டிச் சிந்திக்கத் தூண்டும் கதையாக சுஜா செல்லப்பன் ஒளிவிலகலை எழுதியுள்ளார். குடும்பபாரமென்பது அதன் உறுப்பினர்களுக்காகத் தனது சுதந்திரத்தை விட்டுக்கொடுப்பதாக எப்போதும் இருக்கின்றது என்ற விமரிசனத்தை வைக்கும் கதாசிரியர், வாய்ப்புக் கிடைத்தால் பிரிந்துவிடுவதில் ஒவ்வொருக்கும் விருப்பம் இருக்கவே செய்கிறது என்பதையும் காட்டுகிறார். பிரிந்துபோகும் முன்னெடுப்பைக் கதைக்குள் எடுப்பவராக இருப்பது அம்மா. அவளை 54 வயதைத் தாண்டியவர் என்று குறிப்பாகச் சுட்டுகிறார். அவரது கணவர் – கதைசொல்லியின் அப்பா ஓய்வு பெற்றவர். அதை மௌனமாக ஏற்பதன் மூலம் அப்பாவும் அப்படியொரு முடிவோடு இருந்திருக்க வாய்ப்புண்டு என்பதாகவும் குறிப்பு காட்டுகிறார். பிரிந்து விடுவது என்பது முகஞ்சுழித்து சண்டையிட்டு “இனி உன்முகத்தில் முழிக்க மாட்டேன்” எனக் கூறிவிட்டுப் போய்விடுவதல்ல. அவரவர் வெளியில் அவரவர் விருப்பப்படி வாழ்வது என்பதையும் கதாசிரியர் காட்டுகிறார். அப்படி வாழ்பவர்கள் திரும்பவும் சேர்ந்துவிட விரும்பினால் சேர்ந்துகொள்ளவும் முடியும். இதனை ஐரோப்பிய சமூகத்தின் குடும்ப வாழ்க்கை நடைமுறையில் செய்து காட்டிக் கொண்டே இருக்கிறது.

==================================================================

பின்குறிப்பு:

ஒளிவிலகல் என்று தலைப்பிட்டுக் கதையை எழுதியுள்ள சுஜா செல்லப்பன் இப்போது இருப்பது சிங்கப்பூரில். கவிதைகள், சிறுகதைகள், குறுநாவல்கள் எழுதிவரும் இவரது படைப்புகள் காலப்பெருவெளி, நதிமிசை நகரும் கூழாங்கற்கள், சிங்கப்பூர்ப் பொன்விழா சிறுகதைகள், சிங்கப்பூர்க் குறுநாவல்கள், அக்கரைப் பச்சை, சிராங்கூன் 25, புவியெங்கும் தமிழ்க் கவிதை, ‘Unwinding’ (ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட தமிழ்ச் சிறுகதைகள்) ஆகிய தொகுப்புகளில் வெளிவந்துள்ளன. ’அரூ’ இணைய இதழின் இணை ஆசிரியர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தி.சு.நடராசனின் திறனாய்வுப் பார்வைகள் :தமிழ் அழகியல், தமிழகத்தில் வைதீக சமயம்

உடல் மறுப்பு என்னும் பெரும்போக்கு

கற்றல் - கற்பித்தல்: மாணவ ஆசிரிய உறவுகள்