ஆறு கதைகள் ஆறு விதங்கள்
‘தமிழக சிறப்பிதழ்’ சிறுகதைகள் –
நடு இணைய சிற்றிதழ் கடந்த இதழைத் (21- ஆவணி, 2019) ‘தமிழக சிறப்பிதழாக’ வெளியிட்டது. புலம்பெயர் தேசம் ஒன்றிலிருந்து வரும் இணைய சிற்றிதழில் தங்கள் பனுவல்கள் இடம்பெற வேண்டுமெனத் தமிழ்நாட்டின் முதன்மையான படைப்பாளிகள் விரும்புவார்கள் என்ற நோக்கில் நடுவின் ஆசிரியர் பலருக்கும் வேண்டுகோள் விடுத்தார். இயலாதவர்களும் விரும்பாதவர்களும் பங்கேற்கவில்லை. இயன்றவர்கள் பங்கேற்றிருக்கிறார்கள். சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், நேர்காணல், மொழிபெயர்ப்பு என அந்த இதழில் வாசிக்கக் கிடைத்தனவற்றை முழுமையாக இங்கு பேசப்போவதில்லை.
இடம்பெற்ற பனுவல்கள் தமிழ்நாட்டு எழுத்துப்போக்கின் அடையாளங்கள் பலவற்றையும் காட்டவில்லை என்றாலும் குறிப்பிட்ட சிலவகையான போக்குகளை அடையாளப் படுத்தியுள்ளன. நடுவின் ஆசிரியருக்கு வாழ்த்துகள். அண்மைக் காலத்தில் தொடர்ச்சியாகச் சிறுகதைகளைக் கவனித்து வாசித்துக் கொண்டிருக்கிறேன். வாசித்து முடிக்கும்போது அவை குறித்து எழுதத் தோன்றினால் எழுதவும் செய்துள்ளேன். ஆகவே அதில் வந்துள்ள ஆறுகதைகள் குறித்துச் சில குறிப்புகளைத் தருகிறேன். அவை விமரிசனக் குறிப்புகளாகவும் இருக்கலாம்; விளக்கக் குறிப்புகளாகவும் இருக்கலாம்.
0000000000000
என்ன எழுதப்படுகிறது? என்பதைத் தேடுவது விமர்சனப்பார்வையின் முதல் கேள்வியாக இருக்கிறது? இந்தக் கேள்விக்குக் கவிதை வடிவம் உடனடியாகப் பதில் தரும் திறப்புகளைக் காட்டுவதில்லை. நாடக வடிவத்தில் முரண்நிலைகளை அடையாளப்படுத்திவிடும் நிலையில் அதற்கான விடையின் ஒரு கண்ணி புலப்பட்டுவிடும். இவ்விரண்டையும் விடக் கதைவடிவம் எளிமையானது. அதிலும் தலைப்பிட்டு எழுதும் நிலையில் கதைகளின் தலைப்புகளே, எழுதியவர்கள் எதை எழுத நினைக்கிறார்கள் என்பதைக் குறிப்பாக உணர்த்திவிடுகின்றன. தலைப்பின் வழியாகக் குறிப்பாக உணர்த்தப்படும் மையப்பொருளைக் (தமிழின் இலக்கியவியல் இதனை உரிப்பொருள் என்கிறது) காலம், வெளி, பாத்திரங்கள் என்னும் மூவோர்மைகளை உருவாக்குவதின் வழியாகக் கதையின் வடிவத்தை முழுமையாக்குகிறார்கள். இவ்வோர்மைகளில் குறைபாடுகள் இருக்கும் கதைகள் கவனிக்கப்படாத கதைகளாகவும், சொல்ல நினைத்த உரிப்பொருளைச் சரியாக வெளிப்படுத்தாத கதையாகவும் கருதப்படுகின்றன.
நடுவில் இடம்பெற்றுள்ள ஆறுகதைகளை எழுதப்பெற்ற பொருண்மை, எழுதப்பெற்ற விதம் என்ற இரண்டு அடிப்படையில் மூன்று வகையாகப் பிரித்துப் பேசத் தோன்றுகிறது. ஆறு கதைகளில் அண்டனூர் சுராவின் பிணவாசனைக் கிராமும் விஜயராவணனின் காகிதக் கப்பலும் முன்வைக்க நினைத்த பொருண்மையை எப்படி முன்வைப்பது என்பதை முடிவுசெய்யாமல் எழுதப்பெற்ற கதைகளோ என்று தோன்றும்படியாக எழுதப் பெற்றுள்ளன. இவ்விரண்டும் முதல் நிலைப்பட்டவை. இவ்விரண்டைப் போல்லாமல் எழுதியெழுதிப் பழகிய லாவகம் கொண்ட ஐ.கிருத்திகாவின் கதை இரண்டாம் வகை. மூன்றாம் வகையில் லக்ஷ்மி சரவணக்குமாரின் ‘இப்படியாக சில அவளின் காதலர்கள்’ கதையும் சுரேஷ் பிரதீப்பின் ‘கசப்பும்’, எஸ்.ராமகிருஷ்ணனின் ‘இரவை வாசிப்பவர்கள்’ கதையும் இருக்கின்றன.
விஜயராவணனின் ‘காகிதக் கப்பலும்’ அண்டனூர் சுராவின் ‘பிணவாசனைக் கிராமும்’, இந்திய சமூகத்தின் சமகால வாழ்க்கையின் கோடுகளையும் நிகழ்வுகளின் போக்கையும் நினைவுபடுத்தும் தன்மையோடு எழுதப்பட்டுள்ளன. ஆனால் அக்கதைகள் குறிப்பான வெளியையும் காலத்தையும் உருவாக்கிக் கொள்ளாததால் முழுமையான கதைகளாக ஆகாமல் முடிந்துவிட்டன. வறுமைக்குள் வாழும் மனிதர்களின் இயலாமை, அந்த வறுமையிலும் சின்னச் சின்ன மகிழ்ச்சிகளை உருவாக்கிக் கொண்டு நகரும் தந்தை -மகள் பாசம் என்பதை முன்வைக்க நினைத்த விஜயராவணனின் கதை ஒரு குடம் தண்ணீரைப் பிடித்துவிட விரும்பிக் காத்திருக்கும் கிழவியை மையமாக்குவதா? மகளின் ஆசைக்காகக் காகித்தில் கப்பல் செய்து கொட்டும் மழை உண்டாக்கிய நெருக்கடியைத் தாண்டிவிட நினைக்கும் தந்தையின் இயலாமையை எழுதிக்காட்டுவதா? என்பதில் நிலைகொள்ளாமல் தவிக்கிறது. இரண்டு மையங்களில் நகரும் கதை உருவாக்க நினைத்த உணர்வு ஒன்றுதான். விளிம்புநிலை வாழ்க்கையின் துயரம். கதைக்குள் உருவாக்கப்பட்ட இரண்டு பாத்திரங்களையும் இணைக்கும் பிணைப்புச்சங்கிலியை உருவாக்காமல் விலகிவிட்டது. அதைவிடவும் கூடுதலான கவனத்துடன் இணைப்பு நிகழ்வுகளையும் சமகாலத் தன்மையையும் உருவாக்க வாய்ப்புக்கொண்ட கதை அண்டனூர் சுராவின் பிணவாசனைக்கிராமம்.
விவசாயிகளை வேளாண்மையிலிருந்து வெளியேற்றிவிட்டு நிலத்தடியிலிருக்கும் வளங்களைக் கைப்பற்றி விற்பனைச் சரக்காக்க நினைக்கும் முதலாளிகள் தமிழ்நாட்டுக் கிராமங்களை அழிவின் விளிம்புக்குக் கொண்டு போகிறார்கள் என்பதைக் குறியீட்டுத்தன்மையோடு சொல்ல நினைத்த கதை, பொத்தாம் பொதுவாகக் கதைப்பரப்பு முழுவதையும் குறியீட்டுத்தன்மையோடு மட்டுமே எழுதிச் செல்கிறது. குறிப்பான சில நிகழ்வுகளில் சில மனிதர்களுக்கு ஏற்பட்ட/ ஏற்படப்போகும் விளைவுகளையும் வலிகளையும் எழுதிக்காட்டியிருக்க வேண்டும். எழுதியிருந்தால் சமகால அரசியல் சிக்கல் ஒன்றை -வாழ்வாதாரப் பேரழிவு ஒன்றை எழுதிய கதையாக ஆகியிருக்கும். அதைச் செய்யத் தவறிவிட்டார் அண்டனூர் சுரா. அத்தோடு மொழிப்பிழைகளும் கூற்றுநிலைத் தவறுகளும் கொண்டதாக அவரது கதை அமைந்துள்ளது. இப்பிழைகள் எழுதியவரின் பிழைகளா? பதிப்பித்தவரின் பிழையா? என்பது தெரியவில்லை.
ஆறு கதைகளில் ‘கடைசி ஆசை’ என்ற கதையை எழுதியவர் ஐ. கார்த்திகா என்னும் பெண். இவருடைய கதைகள் எதையும் இதுவரை வாசித்ததில்லை. இதுதான் நான் வாசிக்கும் முதல் கதை.(விஜயராவணன் எழுதியுள்ள காகிதக் கப்பல் கதையும் முதல் கதைதான்). ஆனால் கதை சொல்லும் முறை, உண்டாக்கும் திருப்பங்கள், உரையாடல்கள் வழி உருவாக்கும் உணர்வுக் கொந்தளிப்புகள், வாசிப்பவர்களைக் கதையோட்டத்தோடு இணைத்து அழைத்துப் போகும் பாங்கு ஆகியவற்றின் மூலம் ஏராளமான கதைகளை எழுதிய கை அவருடையது என்பதை உணர்த்துகிறார். (கதையை வாசித்தபின் தேடியபோது அது உண்மை என்பதும் தெரியவந்தது) உயிர் பிரியாமல் இழுத்துக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணின் சாவுத்தருணத்தை வாசிப்பவர்கள் முன் நிறுத்திப் பழைய நிகழ்வுகளுக்குள் போய்த் திரும்புகிறது கடைசி ஆசை. மூத்தாளின் மகனுக்கு எல்லா வகையிலும் அம்மாவாக இருந்த தன்னை அவன் ஒரு தடவைகூட அம்மா என்று அழைக்கவில்லையே என்று தவித்துக் கொண்டிருக்கிறது; அதுதான் அவளின் கடைசி என்ற முடிவை நோக்கி நகர்த்திப் போகும் கதை சொல் முறையும், கதைப் பொருண்மையும் பலரும் எழுதிக் காட்டியவைகளே. சித்தி, அம்மாவாகிவிட முடியாதா? என்ற ஏக்கமும், சாகும் தருணத்தில் அந்த ஏக்கம் நிறைவேற்றப்பட்டது என்ற முடிவும் நவீனத்துவத்தோடு உரசிப் பார்க்கும் கதையின் பொருண்மை அல்ல. மரபான பெண்ணின் ஏக்கம்; குடும்ப அமைப்பு உண்டாக்கும் தவிப்பு. இவ்வகைக் கதைகளை எழுதுபவர்கள் ஒவ்வொரு பாத்திரத்தையும் முழுமையான பாத்திரங்களாக உருவாக்கிக் காட்டுவார்கள். ஐ. கிருத்திகாவும் அதைச் சரியாகவே செய்திருக்கிறார். ஏற்கெனவே வாசித்த பல கதைகளை நினைவுபடுத்தினாலும் அவரின் கதை சொல்லும் முறையியும் நகர்த்தும் பாணியும் விறுவிறுப்புக்கொண்ட எழுத்துமுறையைக் கொண்டிருக்கிறது என்ற அளவில் குறிப்பிடப் படவேண்டிய கதை.
‘கசப்பு’ கதையை எழுதிய சுரேஷ் பிரதீப்பின் கதைகளைக் கூட இதற்கு முன் வாசித்ததில்லை. ஆனால் கிருத்திகாவின் கதையைப் போல ஏற்கெனவே வாசித்த எந்தக் கதையையும் இது நினைவூட்டவில்லை. வாய்க்கசப்பை உணரும் தருணங்கள் ஒவ்வொன்றும் பிறரை வெறுக்கும் தருணங்களன்றி வேறில்லை. பிறரை வெறுக்கும் எண்ணம் உருவாகும்போது, அதன் மறுதலையாக நம்மையே வெறுத்துக்கொள்ளும் நகர்வை நமது உடல் செய்யக்கூடும். அந்த வேதிவினையைக் கதையாக்கியிருக்கிறார் சுரேஷ் பிரதீப். பாரதியின் தன்னலம், வாழ்க்கையைக் கசப்புடையதாக ஆக்கிக் கொள்கிறது. அவளுக்கு அனைவரும்= சுற்றியிருக்கும் நபர்கள் ஒவ்வொருவரும் – அப்பா, அம்மா, கணவன், அலுவலக உடன் பணியாளர்கள் என ஒவ்வொருவரும் விட்டுக்கொடுக்க வேண்டும். நல்லபடியாக நடத்த வேண்டும் என்ற நினைப்பு இருந்துகொண்டே இருக்கிறது. அதற்காக அவள் எதுவும் செய்வதும் இல்லை. அது நடக்காதபோது வாய்க் கசப்பு – வாழ்க்கையே கசப்பாக தோன்றுகிறது. அலுவலகத்தில் தனக்குக் கிடைக்காததை அடையும் பெண்ணை விபசாரியாக நினைத்துக் கொள்வதும், அவளை மிரட்டுவதும் தன்னலத்தின் குரூர வெளிப்பாடுகள் என்று தெரிந்தபோதிலும் தயங்காமல் செய்கிறாள். அதன் உச்சநிலையாக இருப்பது ‘அப்பா இப்போது இறக்க மாட்டார்’ எனச்சலித்துக் கொள்வதைச் சொல்லலாம். பாரதியின் குரூர மனநிலையையும் செயல்பாடுகளையும் வாசிப்பவர்களுக்குக் கொடுப்பதற்காகச் சில நிகழ்வுகளைப் பரத்திப் போட்டுக்காட்டும் கதை அமைப்பைக் கையாண்டிருக்கிறார் சுரேஷ் பிரதீப். எழுதப்படாத ஒரு பாத்திரத்தை -குரூரத்தின் வெளிப்பாடுகளோடு எழுதுவதற்கான கதை அமைப்பைச் சரியாகக் கண்டுபிடித்த வகையில் கவனிக்கப்பட வேண்டிய கதைசொல்லியாகத் தோன்றுகிறார்.
லக்ஷ்மி சரவணகுமார், தனது கதைக்கு ‘இப்படியாகச் சில அவளின் காதலர்கள்’ என்று தலைப்பிட்டிருந்தாலும், “இப்படியாகச் சில அவனின் காதலிகள்” என்ற தலைப்பையும் தனதாக்கிக் கொள்ளக் கூடிய கதை. பாலியல் விருப்பங்களும் இச்சைகளும் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதில்லை என்னும் உளவியல் நிலைபாட்டை எழுதிக்காட்டும் லக்ஷ்மி, ஒருவன் – ஒருத்தியோடு வாழ்வதாக நினைப்பதும் காட்டிக்கொள்வதும் கற்பிதமானவை என்பதை வெளிப்படையாக்கியுள்ளார். பாலியல் விளைவுகள், இச்சைகள், கட்டுப்பாடுகள் குறித்து மரபான சமூகங்கள் கொண்டிருக்கும் கற்பிதங்களை நகரவாழ்க்கையில் -கீழ்நடுத்தர வர்க்க வாழ்க்கைப் பின்னணிகொண்ட குடும்பத்தை முன்வைத்து விவாதிக்கிறார். எதிர்பால் மீதான – எதிர்பால் உடல் மீதான – இச்சையைக் கட்டுப்படுத்தாமல் திறந்துவிடுவதில் பெண் – ஆண் என்ற பாகுபாடுகள் எல்லாம் கிடையாது. குடும்ப அமைப்புக்குள் கணவன் -மனைவியாக ஆக்கப்படுபவர்கள் மீது ஒருவன் – ஒருத்தி என்ற கட்டுப்பாடு திணிக்கப்படும் ஒன்று தானேயொழிய, பின்பற்றப்படுவன அல்ல. அதை ஏற்றுக்கொண்டவர்கள் போல நடப்பதும்; மீறுவதும் அவர்களின் விருப்பம் சார்ந்தவைகளாக மட்டுமே இருக்கின்றன. அமைப்பின் மீதான அச்சமோ, இணைகள் தரும் தண்டனைகளோ இல்லை. நம்பிக்கையோடு கொள்ளும் உறவில்கூட ஆணுடலோ, பெண்ணுடலோ எந்த உடலோடு உறவுகொள்கிறது என்பது எப்போதும் கேள்விக்குரிய ஒன்று. ஒரே நேரத்தில் பல உடல்களோடு உறவுகொள்வதாகக் கூட நினைத்துக் கொள்ளும் சாத்தியங்கள் உடலுறவுக் கணங்களில் உண்டு. அதே நேரத்தில் ஒவ்வொரு உடலுக்கும் ஒரு விருப்பமும் கட்டுப்பாடும் இருக்கிறது. அதைக் கடைப்பிடிப்பதும் மீறுவதும் அவ்வுடலுக்குள் அலையும் மனம் சார்ந்தது என்பதான விவாதங்களை எழுப்புகிறது. பாலியல் இச்சைகளும் சந்தேகங்களும் பெண்களுக்கும் ஆண்களுக்கும் பொதுவானவை என்றபோதிலும் ஆண்களின் எண்ணமும் செயல்களும் பல நேரங்களில் அற்பமானவை என நேர்மையாகப் பதிவுசெய்துள்ளது. தொடர்ச்சியாக ஆண் – பெண் உறவுச் சிக்கலை எழுதிக்காட்டும் லக்ஷ்மி சரவணக்குமார் ஒரு கதைக்குள் எதையும் அதிகமாக எழுதிக் காட்டவேண்டும் என்று நினைக்கிறாரோ என்ற எண்ணம் எனக்கு உண்டு. அவரின் பல கதைகளை வாசித்த நிலையில் இப்படித்தோன்றுகிறது. மற்றவர்களுக்கு அப்படித்தோன்றாமல் கூட இருக்கலாம்.
கதைவெளி, கதைசொல்லும் முறை அல்லது கதையில் வரும் மனிதர்கள் என ஏதாவதொன்றில் புதுமையை முன்வைக்கவேண்டும் என்பதில் தொடர்ச்சியாகக் கவனம் செலுத்தும் எஸ்.ராமகிருஷ்ணன் ‘இரவை வாசிப்பவர்கள்’ கதையில் கதை நிகழ்வும் வெளியை அற்புதவெளியாக வாசிப்பவர்களிடம் முன்வைத்துள்ளார். வெளியின் ரகசியம் வெளிப்படுவதால் அங்கு வரும் மனிதர்களும் புதுவகை உலகத்தில் உலவுபவர்களாகக் கதை வாசிப்பவர்களுக்குத் தோன்றுவது தவிர்க்கமுடியாதது.
இரவுகள் முதன்மையாகத் தூங்குவதற்கானவை. எல்லா இரவுகளும் தூங்குவதற்காக இருப்பதாகவே மனிதர்கள் நினைக்கிறார்கள். தூங்கும் இரவுகளில் மனிதர்களின் உடல் விழித்துக் கொள்ளும்போது எதிர்பால் உடலை அவாவித் திளைத்துக் களிக்கிறது. இந்தக் களிப்பைத் தாண்டிப் பொதுநிலைப்பட்ட கொண்டாட்டங்களுக்குரியதாகவும் இரவுகள் மாற்றம் செய்யப்படுகின்றன. அதன் மறுதலையாக இருளோடும் குற்றங்களோடும் இணைந்து அச்சத்தையும் பயத்தையும் உற்பத்திசெய்யும் காலநிலையாகவும் இரவுகள் ஒவ்வொருவர் மனத்திற்குள்ளும் படிந்துகிடக்கின்றன. இப்பார்வை இரவைப் பற்றிய பொதுப்பார்வை. இப்படிப் படிந்து கிடக்கும் இரவைப்பற்றிய படிமங்களை -பொதுப்பார்வையை மாற்றி இரவு, வேறொரு உலகமாகவும் இருக்கிறது என்பதைக் கைப்பிடித்து அழைத்துப் போய்க்காட்டும் விதத்தில் இந்தக் கதையை எழுதியுள்ளார் எஸ்.ரா.
இரவுப்புத்தகக் கடைக்கு வந்தவர்களின் உடலும் மனமும் இரவுக்குப் பழகிப்போனது நோயின் வெளிப்பாடா? அல்லது நோயிலிருந்து தப்பிக்கும் ஏற்பாடா? என்பதுபோன்ற கேள்விகளை எழுப்பிக்கொண்டே நகரும் கதைசொல்லும் முறையும், கதைநிகழும் வெளியும் ஓர் அற்புத உலகத்தின் காட்சியாகக் கதைக்குள் விரிக்கப்பட்டிருக்கின்றன. அந்த அற்புத உலகம் சென்னையின் அண்ணாசாலையின் ஓரத்தில் இருக்கிறது என்பது இன்னொரு ஆச்சரியமூட்டும் தகவல். இரவில் வாசிக்கும் வாழ்க்கையைக் கொண்டவர்கள் நோயாளிகளா? நிதானமானவர்களா? இந்தச் சந்தேகதமும் கதைக்குள்ளேயே எழுப்பப்பட்டு விடையும் சொல்லப்படுகிறது.
“இந்தப் புத்தகக் கடை உறக்கம் வராதவர்களுக்காக நடத்தப்படுவது. இந்நகரில் பலநூறு மனிதர்கள் உறக்கமில்லாமல் தவிக்கிறார்கள். வீட்டின் படுக்கையில் எவ்வளவு நேரம் தான் புரண்டு கொண்டு கிடப்பது. கடைகள். உணவகங்கள் என எங்கேயும் இரவில் போக முடியாது. இதற்காகத் தான் இந்தப் புத்த கடை நடத்தப்படுகிறது. இங்கே வருகிறவர்கள் எல்லோரும் உறக்கமின்மையால் பாதிக்கபட்டவர்கள். அவர்களுக்கு இக்கடை ஒரு புகலிடம். கடையை நடத்தும் பெண்ணிற்கு இப்பிரச்சனை பல ஆண்டுகளாக உள்ளது. அவள் உறக்கத்தைக் கடந்து போகவே படிக்கிறாள். அவள் முகத்தை நீ பார்த்தாயா“ என்று கேட்டார் கிழவர்
தொடர்ச்சியாக அவன் கேட்ட கேள்விகளின் ஒன்றுக்குப் பின்வரும் பதில் கிடைக்கிறது:
இல்லை.. உண்மையில் இந்தப் புத்தக்கடை ஒரு மருத்துவமனை. புத்தக வாசிப்பின் மூலம் உடலை புத்துணர்வு கொள்ள முயற்சிக்கிறார்கள். இங்கே வந்து போகத்துவங்கினால் தூக்கத்தின் தேவையில்லாமல் வாழ முடியும். ஆம். மௌனமாக வாசிப்பதன் வழியே கனவுகளை அடைய முடியும். நான் விழித்தபடியே நிறையக் கனவு கண்டிருக்கிறேன்.
இந்தக் கடைக்கு வந்து நூல்களை எடுத்து வைத்து நூல்களை வாசிக்கிறார்களா? நூல்களில் ஒவ்வொரு இரவுகளையும் வாசிக்கிறார்களா? அல்லது இரவில் வசிக்கிறார்களா? இரவில் தூக்கம் தொலைப்பது பெரும்பாலும் வயதுகூடியவர்களின் சிக்கல். வயதானவர்களின் – முதியவர்களின் இந்நிலையைத் துயரம் என்றும் சொல்லி விடமுடியாது. துயரத்தைத் தொலைத்துவிட இன்னொன்றில் நிலைநிறுத்திக் கொள்ளுதல் என்பதாகச் சொல்லலாம். தமிழ்ச் சிறுகதைப் பரப்பில் இதுவரை எழுதப்படாத ஒரு வெளியை – அதில் உலவும் மனிதர்களைக் கதாபாத்திரங்களாக்கியதின் வழி எஸ்.ரா. லாவகமும் படைப்பு நுட்பமும் கொண்ட எழுத்தாளர் என்பதை எப்போதும் போல உறுதி செய்துள்ளார்.
பேச நினைத்த உரிப்பொருள் காரணமாக லக்ஷ்மி சரவணக் குமாரின் இப்படியாக சில அவளின் காதலர்கள் கதையும் சுரேஷ் பிரதீப்பின் கசப்பும், எஸ்.ராமகிருஷ்ணனின் இரவை வாசிப்பவர்கள் கதையும் முக்கியமானவையாக இருக்கின்றன. பேச நினைத்த பொருண்மையை முன்வைக்க முடியாமல் திணறும் கதைகளாக அண்டனூர் சுராவின் கதையும் விஜயராவணனின் காகிதக்கப்பல் கதையும் இருக்கின்றன ஐ.கிருத்திகாவின் கடைசி ஆசை. எங்கும் கிடைக்கும் இனிப்பும் காரமும்.
கருத்துகள்