எழுத்துக்காரர்களின் புலம்பல்கள்
இலக்கியப்பட்டறைகளில் கலந்துகொள்ளத் தெரிவுசெய்யப்படும் பட்டியலில் இடம்பிடிக்க எப்படி எழுதவேண்டும் நண்பர்களே?
இப்படியொரு கேள்விக்குறியோடு காலபைரவன் தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவொன்றைப் போட்டிருந்தார். அப்பதிவைப் பலருக்கும் தொடுப்பு செய்திருந்தார். தொடுப்பில் என்னுடைய பெயரும் இருந்ததால் உடனடியாக என் பார்வைக்கு வந்தது. நான் உடனடியாக.
இலக்கியப்பட்டறைகளா? பிற மாநிலங்களில்/ நாடுகளில் நடக்கும் இலக்கிய விழாக்களா? என்று கேட்டேன். என் கேள்விக்கு பட்டறைகள் பிறமாநில பிறநாடுகளில் நடப்பவைதான் ஐயா
என்றார்.
பதிப்பகப் பின்னணிதான் முதன்மைக்காரணம். இதனை விரிவாக எழுதவேண்டும். ஓரிரண்டு நாளில் எழுதுகிறேன்
என்று சொல்லியிருந்தேன். முகநூலில் எழுதினால் ஒருநாள் கழிந்ததாகக் காணாமல் போய்விடும். அதைத் தவிர்க்க இங்கே எழுதுகிறேன். காலபைரவனின் இந்தக் கேள்வி ஓரளவு நியாயமான கேள்விதான். இலக்கியத்தில் - அதற்குள் சிறுகதை என்னும் ஒரு வகைப்பாட்டில் கவனம் செலுத்தித் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கும் ஒரு எழுத்தாளருக்கு இப்படியொரு கேள்வி எழாமல் இருந்தால்தான் ஆச்சரியம்.
காக்கா என்னும் முதல் சிறுகதையைத் தீராநதி இதழில் 2004 இல் எழுதிய காலபைரவன் இதுவரை புலிப்பாணி ஜோதிடர் (2006, சந்தியா பதிப்பகம்), விலகிச் செல்லும் நதி (2008, மருதா பதிப்பகம்) கடக்கமுடியாத இரவு (2009,சந்தியா பதிப்பகம்), பைசாசத்தின் எஞ்சிய சொற்கள் (2011,சந்தியா பதிப்பகம் ) என நான்கு சிறுகதைத்தொகுதிகளை வெளியிடும் அளவுக்குக் கதைகள் எழுதியுள்ளார். ஆதிராவின் அம்மாவை ஏன் தான் நான் காதலித்தேனோ?(2008, கே.கே.புக்ஸ்) என்றொரு தலைப்பில் கவிதைத் தொகுப்பொன்றையும் வெளியிட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தில் பள்ளி ஆசிரியராகப் பணிசெய்யும் விஜயகுமார் என்ற காலபைரவனின் எழுத்துக்களைப் படிக்கும் வாசகர்களைத் தாண்டி, எழுத்தாளர்களுக்கும் அவரது கதைகள் பிடித்திருக்கிறது என்பதற்கான ஒரு அடையாளமாக அவரது கதைகளிலிருந்து தேர்வு செய்த தொகுப்புகள் இரண்டு தொகுப்புகள் ஒரே ஆண்டில் வந்துள்ளதைச் சொல்லலாம். (சூலப்பிடாரி, காலச்சுவடு பதிப்பகம் 2016) முத்துக்கள் பத்து (அம்ருதா பதிப்பகம்,2016 ) ஆனால் அவருக்குச் சாகித்திய அகாடெமியோ, ஒரு பல்கலைக்கழகமோ, மாநில அளவில் இலக்கியச்சேவையாற்றும் நிறுவனங்கள் நடத்தும் பட்டறைகளுக்கோ, இலக்கிய விழாக்களுக்கோ அழைப்பு இல்லை. இந்த நிலையிலேயா அப்படியொரு ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். அந்த ஆதங்கம் நியாயமானதுதான். இவரைப்போல ஆதங்கப்படும் தமிழ் எழுத்தாளர்கள் 50 பேராவது இருப்பார்கள் என்பது எனது கணக்கு. இப்போது இதற்குக் காரணம் என்னவாக இருக்கும் என்று யோசிக்கலாம்.
எழுத்தாளன்: அந்நியமாதலும் இணைதலும்
ஒருமொழியில் தனது எழுத்துகள் வழியாகப் பத்துப்பன்னிரண்டு ஆண்டுகள் பங்களித்துள்ள காலபைரவன் போன்ற எழுத்தாளர்களுக்கு இத்தகைய கேள்விகள் எழுவதில் நியாயங்கள் உண்டு. எழுத்து அல்லது கலைச்செயலில் ஈடுபடுபவர்கள் இந்த நிலைக்கு வருவதற்கு முன்னால் சில கட்டங்களைத் தாண்டுகிறார்கள். தனது கலை இலக்கியச் செயல்பாடு கவனிக்கப்படுகின்றனவா? என்பதே முதல் கட்டம். பொதுவான போக்கிலிருந்து விலகித் தனித்துவமான கலை இலக்கியச் செயல்பாடுகளில் ஈடுபடும்போது சுற்றியிருப்பவர்களிடமிருந்து- குடும்பத்தினர், உடன் பணியாற்றுவோர், நண்பர்கள் - விலகுவதாக உணர்வார். அந்த விலகல் மனநிலையின் எதிர்நிலையில் “தன்னைக் கவனிக்கும் நபர்கள் அல்லது ஒரு கூட்டம் இங்கே இல்லை; வேறிடங்களில் இருக்கிறது; அவர்களின் எதிர்பார்ப்புகளுக்காகவே தான் இதைச் செய்கிறேன்” என்ற நம்புவார்கள். தனிநபர் வெளியான குடும்பம் அல்லது பணியிடத்திலிருந்து அந்நியமாகும் ‘தன்னைச் சேர்த்துக்கொள்ள அல்லது நமக்கான மனிதர்’ என நினைக்க பொதுவெளியில் ஒரு கூட்டம் இருக்கிறது என்ற நம்பிக்கையே கலை இலக்கியச் செயல்பாட்டில் இருக்கும் இயங்கியல். தனிவெளியிலிருந்து அந்நியமாகிப் பொதுவெளியில் இணைவதாக நம்பும் கலை இலக்கியவாதிக்குப் பின்னதிலும் ஒதுக்கப்படுகிறோம் என்ற உணர்வு ஏற்படும்போது இத்தகைய -
இலக்கியப்பட்டறைகளில் கலந்துகொள்ளத் தெரிவு செய்யப்படும் பட்டியலில் இடம்பிடிக்க எப்படி எழுதவேண்டும் நண்பர்களே?
என்ற கேள்விகள் எழுகின்றன. தமிழ் எழுத்தாளன் தனக்கான அங்கீகாரமாக அல்லது கவனித்தலாக நினைப்பதில் உச்சகட்டமாக இருப்பது இந்திய அரசின் விருதான சாகித்திய அகாடெமி விருதைத் தனது எழுத்துக்காகப் பெறுவதாக இருக்கிறது.. இதுபோன்று அரங்கியல், ஓவியம் போன்ற துறைகளிலும் அகாடெமி விருதுகள் உள்ளன. அதைப் பெறுவதை நோக்கி ஒரு நாடகக் காரனும் ஓவியனும் இயங்குகிறான். திரைப்படத்துறையில் இருப்பவர்கள் அதனையொத்த ‘தங்க’ விருதுகளை நோக்கிய நகர்வாக இருக்கிறது. அவைகளும் கிடைத்துவிட்டால் ஞானபீடப்பரிசு பற்றிய எண்ணம் உண்டாகிறது. உலக நாடுகள் -குறிப்பாகச் சோசலிச நாடுகளின் எழுத்தாளர்கள் இன்னொரு நாட்டின் தூதுவர்களாகக் கூடப் போயிருக்கிறார்கள்.
கால பைரவனின் நகர்வு அந்தக் கடைசிகட்டத்தை நெருங்கியதாக இல்லை. மாநிலம் தாண்டிய/ தேசத்தைத் தாண்டிய பட்டறைகளில்/ கருத்தரங்குகளில் கலந்துகொள்ள நினைக்கும் இந்த நகர்வை இடைநிலைக்கட்ட நகர்வு எனச் சொல்லலாம். தொடக்க நிலையில் ஒரு எழுத்தாளன் தனித்தனியாக எழுதப்பெற்றவற்றைத் தொகுப்பாகக் கொண்டு வரவேண்டுமென நினைக்கும்போது தனது மொழியில் இயங்கும் முக்கியமான பதிப்பகங்கள் முன்வரவேண்டுமென எதிர்பார்க்கிறார். அந்த எதிர்பார்ப்பு நடக்காதபோது தனது கைக்காசைப் போட்டு அச்சிட்டுக் கொண்டுவருகிறார். அதனைத் தொடர்ந்துசெய்ய முடியாதபோது பதிப்பகங்களின் மீது விமரிசனத்தைச் செய்கிறார். அதன் பிறகு அச்சான தொகுதியை விமரிசகர்கள் கவனிக்கவில்லை என்ற வருத்தத்தைக் காட்டுகிறார். அதன் வெளிப்பாடாக மதிப்புரை எழுதப்பெறவில்லை; விமரிசனக் கூட்டங்கள் நடக்கவில்லை என்ற மனவருத்தத்தை வெளிப்படுத்துகிறார்கள். தமிழின் முதன்மையான கவிகளும் புனைகதையாளர்களும் தங்களின் நேர்காணலில் இவ்விதமான புலம்பல்களை வாசித்திருக்கிறேன். இதன் அடுத்த கட்டமே காலபைரவனின் கேள்வியும் ஆதங்கமும்.
அங்கீகாரத்தின் இயங்கியல்
கலை, இலக்கியங்களில் செயல்படுபவர்களை வாசகர்கள் மட்டுமே கவனிப்பதில்லை. அரசு நிறுவனங்களும் தனியார்களின் பணத்தில் இயங்கும் அறக்கட்டளைகளும் கவனிக்கின்றன; அழைக்கின்றன; அங்கீகரிக்கின்றன; பாராட்டுகின்றன. அதனை ஒருவிதச் சமூகக் கடமையாக நினைக்கின்றன. நினைக்கவேண்டும் என எழுத்தாளர்களின் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது. புரவலன் -புலவன் மரபு ஒன்றும் தமிழர் மரபு மட்டுமல்ல. உலகம் முழுவதும் இருக்கும் மரபுத்தொடர்ச்சிகளே. அந்த மரபில் அரசின் அல்லது ஆட்சியாளர்களின் நலன் பேசப்படவேண்டுமென எதிர்பார்ப்பது மக்களாட்சிக்கு முந்திய காலகட்ட எதிர்பார்ப்பு. நமது காலம் மக்களாட்சிக்காலம். எனவே வேறுபாடுகள் காட்டாத அல்லது ஒதுக்கல்கள் நிலவாத தன்மையில் இருக்க வேண்டும் என நினைப்பது இயல்பு. அது நமது காலத்தின் மனநிலை. ஏனென்றால் ‘... முன் அனைவரும் சமம்’ என நினைக்கிறோம். ஆனால் நமது காலம் எல்லாவற்றையும் சமமாகப் பார்க்கும் காலமாக இல்லை என்பதுதான் உண்மை.
அரசு நிறுவனங்கள் கலை இலக்கியவாதிகளைப் போற்றிப்பாடும் நிலவுடமைக்காலப் புலவனாகவே நினைக்கின்றன. தனியார் நிறுவனங்கள் பண்டமாகவும் பண்டங்களைத் தயாரிக்கும் உற்பத்தியாளனாகவும் கருதுகின்றன. நமது காலம் எல்லாவற்றையும் பண்டமாக ஆக்கி விற்பனைசெய்யும் காலமாக இருக்கிறது என்பதைத் திரும்பத் திரும்பச் சொல்லவேண்டியதில்லை. இலக்கியமும் அப்படியான பண்டமாக ஆக்கப்படுகிறது. கச்சடா எழுத்துமுதல் கணமான எழுத்துவரை எல்லாமே விற்பனைக்கான பண்டம்தான். எழுத்தைப் பண்டமாக்குவதில் முதலிடம் அவற்றை வெளியிடும் இதழ்களுக்கும், தொடர்ச்சியாக அவற்றை நூலாக வெளியிடும் பதிப்பகத்திற்கும் இருக்கிறது. அதற்கு அவை பலவித விளம்பர உத்திகளையும் கைக்கொள்கின்றன. இந்தப் பின்னணியில்தான் தமிழின் பதிப்பகங்கள் ஒவ்வொன்றும் மாதப்பத்திரிகைகளைக் கொண்டுவருவதையும் புரிந்து கொள்ளவேண்டும். பெரும்பத்திரிகைகள் ஒவ்வொன்றும் இலக்கிய இதழொன்றையும் பதிப்பகம் ஒன்றையும் தொடங்குவதையும் கணிக்கவேண்டும்.
வியாபாரத்தின் தரகர்கள்
பல இடங்களிலும் நடக்கும் பட்டறைகளுக்கு / கருத்தரங்குகளுக்கு/ பயிலரங்குகளுக்கு/ இலக்கியச்சுற்றுலாக்களுக்கு/ தங்கி எழுதும் உதவித் தொகைகளுக்கு அழைக்கப்படும் எழுத்தாளர்கள் யாரோ ஒருசிலரின் பரிந்துரைகளின் பேரில்தான் அழைக்கப்படுகிறார்கள். சாகித்திய அகாடெமி, மொழி வளர்ச்சித்துறை, பல்கலைக்கழகங்கள் போன்றன குழுக்கள் அமைத்துப் பரிந்துரைகளைப் பெற்றுப் பரிசீலனை செய்து தேர்வுசெய்வதை நடைமுறையாகக் கொண்டிருக்கின்றன. குழுக்களில் தேர்வின் நோக்கத்திற்கேற்ப ஆலோசனைக்குழுக்கள் உருவாக்கப் படவேண்டும் என்பது நியதி. ஆனால் பெரும்பாலான நேரங்களில் சரியான ஆலோசனைக் குழுக்கள் அமைக்கப்படாததாலும், குழுவின் பெரும்பான்மைக் கருத்து ஏற்கப்படுவதாலும் தேர்வுகள் சரியாக இல்லாமல் போய்விடுவதுண்டு. அதனாலேயே அவை விமரிசனங்களையும் விவாதங்களையும் எதிர் கொள்கின்றன. ஆனால் தனியார் அறக்கட்டளைகளில் இந்தக் குறைந்த அளவு நடைமுறைகள்கூடக் கிடையாது. பரிந்துரைகள் செய்பவர்கள் யார்? எந்த அடிப்படையில் ஏற்கப்படுகின்றன என்ற விவரங்கள் எல்லாம் எதுவும் வெளியில் தெரிவதில்லை. இலக்கியக்கருத்தரங்களிலும் எழுத்துப் பட்டறைகளிலும் கலந்துகொள்ளும் வாய்ப்பைப் பெற்றவர்கள் வெளியில் சொன்னால் மட்டுமே அறியக் கிடக்கும்.
இந்தியாவைத் தாண்டி ஒரு தமிழ் எழுத்தாளர் இதுபோன்ற அழைப்புக் கிடைக்க வேண்டுமென்றால் முன்பெல்லாம் அவரே தனது எழுத்துகளைப் பற்றி ஆங்கிலத்தில் சொல்லக்கூடியவராக இருக்கவேண்டும் என எதிர்பார்க்கப்பட்டது. இப்போது ஆங்கிலம் பேசத்தெரிவது அடிப்படைத்தகுதியாக இல்லை என்றபோதிலும் அவரது ஒன்றிரண்டு எழுத்துகளாவது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டால் மட்டுமே ஒருவர் அழைக்கப்படுகிறார். அதையும் தாண்டி அவரது படைப்புகளில் அடிநாதமாக ஓடும் உள்ளடக்கம் நிகழ்காலத்து இலக்கியப்போக்கில் இருப்பதைச் சுட்டிக்காட்டி ஆங்கிலத்தில் எழுதப்படும் கட்டுரைகள் பேசியிருக்கவேண்டும். அண்மைக் காலங்களில் பிறமாநில/ அயல்நாட்டுக் கருத்தரங்குகள், பட்டறைகள், விழாக்கள் போன்றவற்றில் கலந்துகொண்ட தமிழ்ப் புனைகதையாளர்கள், கவிகள் ஆகியோரின் பெயர்களை நினைத்துக்கொண்டால் இது புரியவரலாம்.
இந்திய அளவிலும் உலக அளவிலும் நடக்கும் பட்டறைகள், கருத்தரங்குகள் போன்றனவும் இலக்கியம் என்ற பொதுத்தளத்தை மையப்படுத்தி நடத்துவன போலத் தோற்றமளித்தாலும், காலத்தின் உள்ளோட்டமான - குறிப்பான போக்குகளை மையப்படுத்தியே வாய்ப்புகளும் தரப்படுகின்றன. கடந்த 20 ஆண்டுகள் இந்தியாவில் நடக்கும் எல்லாப் பட்டறைகளிலும் தலித் இலக்கியத்தை அங்கீகரித்தல் என்ற போக்கு இருக்கிறது. அதேபோலப் பெண்களுக்கு வாய்ப்பளிக்கும் போக்கும் இருக்கிறது. விளிம்புநிலையில் இருக்கும் மனிதர்களைக் கவனிப்பதாகப் பாவனைசெய்யும் அரசுகளைப் போலவே பெரும்முதலாளிகளின் பணத்தில் நடக்கும் விழாக்களில் அவர்களை அங்கீகரித்து மேடையேற்றுகிறார்கள். இது ஒருவிதத்தில் குற்ற மனம் செய்யும் பரிகாரம் மட்டுமே. இந்த அடிப்படையில் ஒருவருக்குக் கிடைக்கும் வாய்ப்பைக் கொண்டு அப்பிரிவுக்குள் வராதவர்கள் கேள்வி எழுப்புவதோ, புலம்புவதோ அர்த்தமற்றது.
உலக அளவில் நடக்கும் பட்டறைகளில் முன்பெல்லாம் இந்தியவியல் என்னும் கருத்துருவைப் பேசும் -விவாதிக்கும் எழுத்துகளுக்கு முக்கியத்துவம் அளித்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. அதற்கிணையாகத் தமிழியலை - தமிழ்க்கவிதை மரபை - தமிழ்ச் சமயமரபைக் கட்டமைக்கும் முயற்சிகளுக்கும் வாய்ப்புகள் கிட்டின. இப்போதும் இதனை உள்வாங்கிய நவீன எழுத்தாளர்கள் கவனிக்கப்படுகிறார்கள்; அழைப்புகளைப் பெறுகிறார்கள். இந்த உள்ளோட்டங்களுக்கேற்பத் தனது பதிப்பக எழுத்துகளைத் தயாரிக்கும் - எழுத்தாளர்களை முன்வைத்துக் காட்டும் பதிப்பகங்கள் வெற்றிபெறுகின்றன. இது ஒருவிதத்தில் தங்களின் எழுத்தாளரை - அவரின் படைப்புகளைத் “தரமான பண்டம், இந்தக் காலத்துக்கேற்ற பண்டம்” எனச் சொல்லி விற்பனை செய்யும் விற்பனை உத்திதான். இத்தகைய எழுத்தோட்டம் கவனம்பெறும்போது இங்கே தமிழ்ப் பரப்புக்குத் தேவையான நவீனத்துவ, பின் நவீனத்துவ எழுத்தாளர்கள் பதற்றம் கொள்கிறார்கள். “தட்டையான எழுத்துகளுக்கு அங்கீகாரம் கிடைக்கிறது; எழுத்தைத்தாண்டி வேறுகாரணங்களுக்காகப் பரிந்துரை நடக்கிறது” என்ற குரல்கள் கேட்கின்றன. நவீனத்துவ, பின் நவீனத்துவ எழுத்துகளை ஐரோப்பிய மாதிரிகள் என்று சொல்லிக் கவனிக்காமல் விட்டுவிடும் வாய்ப்புகள் அதிகம். அந்தப் பண்டங்கள் அங்கேயே கிடைப்பவைகள் தானே. இரண்டாண்டுகள் ஐரோப்பாவிலிருந்த போது நடந்த கருத்தரங்குகள், பட்டறைகளின் அனுபவத்திலிருந்து இதைக்கூறுகிறேன்.
ஆங்கிலத்தில் அறிமுகம் அல்லது ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு என்ற நிலையில்தான் பதிப்பகத்தின் பங்களிப்பு ஒரு எழுத்தாளருக்குத் தேவைப்படுகிறது. தமிழ்நாட்டுச் சந்தையை - இன்னும் சொல்வதானால் சென்னையில் நடக்கும் புத்தகச்சந்தையை மட்டும் மனதில்கொண்டு நூல்களை வெளியிடும் ஒரு பதிப்பகத்தில் தனது நூல்களை வெளியிடும் கவிக்கோ, சிறுகதை எழுத்தாளருக்கோ, நாவலாசிரியருக்கோ இதுபோன்ற வாய்ப்புகள் கிடைக்காது. தனது பதிப்பகத்திற்கான பதிப்புக்குழுவில் ஆங்கிலத்தில் அறிமுகம்செய்யும் வல்லமைகொண்ட ஒரு பதிப்பகம் இதுபோன்ற வாய்ப்புகளை உருவாக்கித்தரமுடியும். அது சாத்தியமில்லாதபோது ஆங்கில இதழ்களில் கட்டுரைகள், மதிப்புரைகள் எழுதும் நபர்களோடு தொடர்புடையதாக ஒரு பதிப்பகம் இருக்கவேண்டும். அதன் வழியாக இந்திய அளவிலான அறிமுகத்தையும் உலக அளவிலான அறிமுகத்தையும் ஒரு எழுத்தாளருக்குப் பெற்றுத்தரமுடியும். தமிழ்நாட்டில் இயங்கும் க்ரியா, காலச்சுவடு போன்ற ஒன்றிரண்டு பதிப்பகங்கள் மட்டுமே இதில் கவனம் செலுத்துகின்றன. அவைகளோடு தொடர்புடைய விமரிசகர்கள், முன்னோடி எழுத்தாளர்கள், மதிப்புரையாளர்களின் பரிந்துரைகளின் பேரிலேயே அப்பதிப்பகங்களின் எழுத்தாளர்கள் இத்தகைய வாய்ப்பைப் பெறுகிறார்கள். இதனைப் பெரிய குறையாகச் சொல்லமுடியாது. இதுபோன்ற வாய்ப்புகளை உருவாக்கும் திறமையை எல்லாப் பதிப்பகங்களும் -குறைந்தபட்சம் நவீன இலக்கியத்தளத்தில் இயங்கும் பதிப்பகங்களாவது செய்யவேண்டும். கால் நூற்றாண்டுக்கு முன்பு அல்லயன்ஸ், வாசகர் வட்டம் போன்றன இத்தகைய முயற்சிகளைச் செய்தன. ரஷ்யாவிற்கும் சோசலிச நாடுகளுக்குமான அழைப்பை மாஸ்கோவிலிருந்து இயங்கிய முன்னேற்றப்பதிப்பகம் கவனித்துக்கொண்டது.
பதிப்பகங்களைச் சார்ந்து வாய்ப்புப்பெறும் எழுத்தாளர்களின் தகுதி, குறைவான பங்களிப்பு, தமிழ் எழுத்துப் பரப்பிற்குள் அவர்களின் இடம், நவீன இலக்கியப்போக்குக்குள் வராத நிலை போன்றவற்றை முன்வைத்துக் கேள்விகள் எழுப்பமுடியும். அவையெல்லாம் இலக்கியமென்னும் பொது அறம் சார்ந்த கேள்விகளே. அறங்களைத் தொலைத்த - கைவிட்ட பின் நவீனத்துவக் காலத்தில் அந்தக் கேள்விகளுக்கு யாரிடமிருந்தும் பதில்கள் கிடைக்கப் போவதில்லை. பதில் சொல்லவேண்டுமென ஒருவரையும் வலியுறுத்தவும் முடியாது. இங்கேதான் தனியார் அறக்கட்டளைகளின் செயல்பாடுகளுக்கும் அரசு நிறுவனங்களின் செயல்பாடுகளுக்கும் உள்ள வேறுபாட்டைக் காணமுடியும். அரசு நிறுவனங்கள் நிகழ்காலப் போக்குக்குள் இடம்பெற முடியாத எழுத்தை, எழுத்தாளரைக் கொண்டாடும்போது கேள்விக்குட்படுத்தமுடியும். தனியார் அறக்கட்டளைகளை எந்தக் கேள்வியும் கேட்கமுடியாது.
கருத்துகள்