சென்னைக்கு வரலாம் நாடகம் பார்க்கலாம்

கலை, இலக்கியத் தளங்களின் நிகழ்காலப் போக்கு எவ்வாறிருக்கிறது என்பதையறியக் கூட்டங்களில் கலந்துகொண்டே ஆகவேண்டும் என்ற நிலை 1990 களுக்குப் பின் இல்லை. அதுவும் முகநூலின் வருகை ஒவ்வொருவரையும் ஆகக் கூடிய தனியர்களாக வாழும்படி ஆக்கிவிட்டது. உலகத்தின் எந்தமூலையிலும் வாழ்ந்துகொண்டு, தமிழ்நாட்டில் இருப்பதுபோல உணரமுடியும் என்ற நிலையைக் கொண்டுவந்துவிட்டது.

என்றாலும் நண்பர்களைப் பார்த்துப் பேசுவது என்பது கூட்டங்களில் வாய்க்கும் பலன். இந்தப் பலனுக்காகவே சென்னைக்கு வரும் ஒவ்வொருமுறையும் எதாவதொரு நிகழ்வில் கலந்துகொள்வது வாடிக்கை. கடந்த நான்குமாதமாகச் சென்னைக்கு வந்து திரும்பினென் என்றாலும், எங்குமே போகவில்லை. அதற்கான சொந்தக்காரணங்கள் இருந்தன.

இன்று இரண்டு நிகழ்வுகளில் கலந்து கொள்ளவேண்டும். இரண்டும் விரும்பிக் கலந்துகொள்ளும் நிகழ்வுகளாக இருக்கின்றன. இரண்டும் கவிதையும் நாடகமும் இணையும் நிகழ்வுகள். மதுரை நிஜநாடக இயக்கம் மூன்று நாள் நாடகவிழாக்களை நடத்திவிட்டு ஒருநாள் நாடகவிழாவை நடத்தும் திட்டத்தில் இறங்கியது. அதற்கெனத் தேர்வுசெய்த நாள் டிசம்பர் 31. பகலிலும் முன்னிரவிலும் கலை, இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்திவிட்டு, அடுத்துவரும் புத்தாண்டை வரவேற்கப்போய்விடலாம் என்ற எண்ணத்தில் திட்டமிடப்பட்டது. முதல் நிகழ்வு நடத்திய ஆண்டு 1988 என்று நினைக்கிறேன். ஓவியம், கவிதை, நாடகம், நேர் சந்திப்பு என ஒருநாள் முழுவதும் மதுரை குப்தா அரங்கில் நடந்த அந்த ஒருநாள் விழாவின் தூண்டுதலே பின்னர் தமிழகமெங்கும் நடந்த கலை இலக்கிய இரவுகளுக்குத் தூண்டுதல்.


சுந்தரராமசாமியின் பல்லக்குத் தூக்கிகள் சிறுகதையை நாடகமாக்கித் தயாரித்த “சுதேசிகள்” நாடகக் குழு அதை முதலில் மேடையேற்றிக் கவனம் பெற்ற நாளும் அதுதான். அன்றைய முழுநிகழ்ச்சிகளையும் ஒருங்கிணைக்கும் வேலை இருந்தாலும் நாடகத்தின் மையப் பாத்திரத்திலும் நடித்தேன். அதுமட்டுமல்லாமல் கவிதா நிகழ்வொன்றையும் சுதேசிகளின் சார்பில் அரங்கேற்றினோம். ஈழப் போராட்டத்தில் கவிதா நிகழ்வுகள் அரங்கேற்றப்படுகின்றன என்ற செய்தியைக் கேள்விப்பட்டிருந்தோம். அதன் ஒருவடிவத்தைப் பொதியவெற்பன் தமிழ்நாட்டில் அறிமுகம் செய்தார் என்பதும் கேள்விப்பட்டதுதான். எதையும் நேரில் பார்த்ததில்லை. அப்போதெல்லாம் இப்போதுபோலக் காட்சிப்படுத்தி உலகத்திற்குத் தரும் வாய்ப்புகளும் இல்லை. கறுப்பு வெள்ளையில் படம் எடுத்துக்கொள்வதே குதிரைக்கொம்பு.


முன்னர் நடந்த கவிதா நிகழ்வுகளையெல்லாம் சிறுபத்திரிகைகளில் வாசித்த ஞானம் மட்டுமே. நடத்தப்பட்டவைகள் எப்படியுமிருக்கட்டும்; நாமும் ஒரு அறிமுகத்தைச் செய்துவிடலாம் என்ற திட்டமிடலில் சுதேசிகள் கவிதா நிகழ்வை நடத்தத் திட்டமிட்டது. அதற்காகத் தேர்வுசெய்த கவிதைத் தொகுதிகள் இன்று முக்கியக் கவிஞர்களாக ஆகிவிட்ட கவிகளின் முதல் தொகுப்புகள். நண்பர்கள் தங்களிடமிருந்த கவிதைத் தொகுதிகளைக் கொண்டுவந்து நான் தங்கியிருந்த வீட்டின் மொட்டைமாடியில் அமர்ந்துதான் கவிதைகளைத் தேர்வுசெய்தார்கள். நண்பர்கள் ஒவ்வொருவரும் சுகுமாரனின் கோடைகாலக் குறிப்புகளைக் கொண்டுவந்தார்கள். அவரது கவிதைகளே அதிகம் தேர்வுசெய்யப்பட்டன. அடுத்து விக்கிரமாதித்தியன், ஈழக்கவிகளில் சேரனும் ஜெயபாலனும். இந்நால்வரோடு ஆத்மநாமின் கவிதைகளும் இணைந்துகொண்டன. இன்று நண்பர் ஞாநியின் பரிக்‌ஷா குழுவினர் சுகுமாரனின் 12 கவிதைகளை நிகழ்வாக்குவதாகக் குறிப்பிட்டுள்ளார் தனது முகநூல் குறிப்பொன்றில். சுகுமாரனின் கவிதைகளைக் கவிதா நிகழ்வாகப் பார்க்கவேண்டி இக்சா மையம் போகவேண்டும். சுகுமாரன்- 60 நிகழ்விலும் கலந்துகொள்ளவேண்டும்.


எழுதப்பட்ட நாடகப்பிரதியை ஆசிரியரின் கோணத்திலேயே அரங்காற்றுகை செய்வதைப் பெரும்பாலான நாடக நெறியாளர்கள் விரும்புவதில்லை. ஒவ்வொருவரும் அவரது பார்வையிலேயே பிரதியை மறுவிளக்கம் செய்தே அரங்கில் நிகழ்த்துகிறார்கள். சோபாக்ளிஸ், சேக்ஸ்பியர், காளிதாசன், மகேந்திரவர்ம பல்லவன் போன்றவர்கள் எழுதிய செவ்வியல் நாடகப்பிரதிகள் இன்றுவரை மறுவிளக்கத்தில் நிகழ்கால நாடகமாக வலம்வந்துகொண்டே இருக்கின்றன. இப்சன், செகாவ், அயனெஸ்கோ என நவீனத்துவ நாடகக்காரர்களும் அப்படியே. தமிழின் நாடக எழுத்துக்களை மறுவிளக்கத்தோடு மேடையேற்றும் நெறியாளர்கள் குறைவு. சிலப்பதிகாரம் அப்படியான பிரதியாக இருப்பதால் பலவிதமான மறுவிளக்கங்களைச் சந்தித்திருக்கிறது.செய்யவேண்டிய நாடகப்பிரதிகளும் தமிழில் இல்லை. மனோன்மணியம் போன்றவற்றை மறுவிளக்கம் செய்வதில் சிக்கல்கள் நிறைய இருக்கின்றன.

30 ஆண்டுகளாகப் ப்ரசன்னா ராமஸ்வாமி எனது நண்பர். நாடகம் தான்

இருவரும் சந்தித்த புள்ளி. கூத்துப்பட்டறையின் பகுதியாகவே அவரது அறிமுகம் எனக்கு. கூத்துப்பட்டறைக்காக மட்டுமல்லாமல் தனது மனம் விரும்பித் தனியாகவும் நாடகங்களைச் செய்யும் அவரது மேடையேற்றங்கள் அழகியலையும் அரசியலைச் சரிவிகிதமாகக் கலக்கும் நோக்கம் கொண்டவை. சமகால அரசியல் சொல்லாடல்களை நாடகம் தூண்ட வேண்டுமென நம்பும் ப்ரசன்னா நவீனத்துவத்தின் சாராம்சங்களைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார். அவ்வெளிப்பாடுகளில் இந்தியத் தனத்தைவிட, உலகுதழுவிய பார்வை இருக்கிறது என்பது எனது கணிப்பு. மேடையேற்றத் தெரிவு செய்யும் பிரதிகளை மறுவிளக்கம் செய்வதில் கவனம் செலுத்துபவராகவே இருந்துவருகிறார். அதற்காக எழுதப்பெற்ற பல பிரதிகளுக்கு இடைப்பிரதிகளையும் உருவாக்கியிருக்கிறார். இசை, கவிதை, ஓவியம், நடிகனின் உடல் என முழுமை அரங்கைத் தருவதில் சளைக்காமல் வேலைசெய்யும் ப்ரசன்னாவின் நெறியாள்கையில் ந.முத்துசாமியின் காண்டவ வனம் மறுவிளக்கத்தோடு அரங்கேற உள்ளது. அதனையும் இன்று பார்க்கவேண்டும். இந்தவாரம் சென்னை வந்ததின் பேறுகள். .

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்