பிரபஞ்சனின் ஆகாசப்பூ: வடிவம் தொலைத்த கதை
ஆனந்தவிகடனில் (7/12/2016) அச்சாகியிருக்கும் ஆகாசப்பூ வழக்கமான பிரபஞ்சனின் கதைபோல இல்லை. பிரபஞ்சனின் கதைகளில் வரும் மாந்தர்களின் குணங்களைச் சொல்வதற்கு தேவைக்கதிகமான சொற்களைப் பயன்படுத்துவார்; அதிலும் பெண்களின் அறிவு, திறமை போன்றவற்றைச் சொல்லவிரும்பும்போதை வார்த்தைகள் செலவழிவதைப்பற்றிக் கவலைப் படுவதில்லை.
ஆகாசப்பூ கதையில் வரும் டி.சி.பி. என்னும் தியாகராசன் சந்திரபிரபாவைப் பற்றிப் பேசும்போதும் அதே வெளிப்பாட்டையே கொண்டிருக்கிறார். அவளது முடிவெடிக்கும் திறன், ஆணதிகாரியைக் கையாளும் நேர்த்தி, பாசத்திற்காகத் தனது தனித்தன்மையை விட்டுக்கொடுக்காத மனநிலை என அவளை ஆகாசப்பூவாகக் காட்டும் வர்ணனைகளும் உரையாடல்களும் கச்சிதமாகவே எழுதப்பெற்றுள்ளன. அதிலும் அவள் தனது தோழி சூர்யாவோடு பேசும்போது அவளைத் தேர்ந்த - தனித்தன்மைகொண்ட அறிவுஜீவிப்பெண் என நகர்த்திக்கொண்டே போகிறார்.நீலமும் வெண்மையும் கலந்த மேகத்திரட்சியாய்த் தோன்றிமறையும் ஆகாசப்பூவைப்போன்றவள் சந்திரப்பிரபா என வாசிக்கும்போது ஒரு கவிதையை வாசிக்கும் அனுபவம் கிடைக்கிறது. ஆனால் ஒரு கதாபாத்திரத்தைப் பற்றிய சித்திரிப்பு மட்டுமே கதையாகிவிடாதே?
தனக்கு வேலை கொடுத்த சி.ஆர்., தன்னைவிடக் கூடுதல் அனுபவம் கொண்டவர்களை விட்டுவிட்டுத் தனக்குக் கருத்தரங்கம் நடத்தும் வாய்ப்பை வழங்கிய சி.ஆர்., தனக்குச் சலுகைகள் காட்டுவதோடு மட்டுமல்லாமல் , தன்னையே கேட்காமல் தனது எதிர்ப்பையும் தாண்டித் தன் தம்பிக்குக் கட்டட ஒப்பந்தத்தைத் தரும் சி.ஆர்.. காட்டும் பரிவும் நெருக்கமும், தனது பெண்ணுடலைத் தீண்டிவிடும் ஆசையில் தான் என உணர்ந்தபின் அவரை விட்டுப் பிரிகிறாள் சந்திரபிரபா. என்றாலும் சி.ஆரை, டி.சி.பி.க்குப் பிடிக்கும். அவர்களிருவருக்கும் பிடித்தமானவை நிறைய உண்டு. காபியைக் கலந்து குடிப்பது தொடங்கி.
தனது உதவியாளருக்கும் தெரிந்த நெருக்கமான உறவுடைய சி.ஆரின். மரணத்திற்குப் பின் அந்த உடலைக் காணவிரும்பாதது ஏன்? கதையில் விடை இல்லை. அத்தோடு கதை நிகழ்வுக்காக உருவாக்கியிருக்கும் ஆராய்ச்சி நிறுவனம் பற்றிய தகவல்கள் தமிழகப்பரப்பில் சரியாகப் பொருந்தாததாக இருக்கிறது. பொதுவான ஆராய்ச்சி நிறுவனம் என்பதாக எழுதியிருந்தால்கூட ஓரளவு நம்பகத்தன்மையோடு ஏற்கத்தக்கதாக அமைந்திருக்கும். ”சிற்றிலக்கியங்கள்” பற்றிய கருத்தரங்கம், “ பழங்குடிகளின் மொழிக்கட்டமைப்பு” பற்றிய ஆய்வுத்திட்டம் என வரும் நிலையில், தமிழ்நாட்டில் இருக்கும் - தமிழுக்காக இருக்கும் உயராய்வு நிறுவனங்களில் ஒன்று எனவும், அதன் தலைமைப்பொறுப்பில் இருக்கும் ஒருவரின் வகைமாதிரியாக மாறுகிறார் சி.ஆர். நானறிந்த வரையில் தமிழின் உயராய்வு நிறுவனங்களில் ஆய்வு உதவியாளராக வரும் ஒருவருக்குக் கருத்தரங்குகளைத் தன்னிச்சையாக நடத்தும் வாய்ப்புகளை வழங்கும் முடிவுகள அதன் தலைவர் எடுக்கமுடியாது. சரி கதைக்காக அது நடக்கக்கூடியது எனக்கொள்ளலாம்.
நிறுவனத்தலைவராகவும் துறையின் தலைவராகவும் இருக்கும் சி.ஆர். பற்றிய தகவல்களும், பெண்களை வளைத்துப்போட அவர் கையாளும் உத்திகளும் விவரிக்கப்படும் நிலையில் உயராய்வு நிறுவனங்களில் பெண்கள் சந்திக்கும் பாலியல் துன்புறுத்தல்களைச் சொல்லப்போகும் கதையெனத் திசைமாறுகிறது. ஆனால் அதையும் நிறைவாகச் செய்யாமல், திசைமாறி நிற்கிறது.
பிரபஞ்சனின் கதைகள் எப்போதும் தனது வடிவ நேர்த்தியாலும் முக்கியப்பாத்திரங்களின் சந்திப்பு மற்றும் கதை முடிவில் எடுக்கும் முடிவுகளை வைத்துத் தீர்மானமாக வாசகர்களுக்கு அவரது சார்பை உறுதிப்படுத்துவன. ஆனால் ஆகாசப்பூ அதனைச் செய்யாமல், கலைந்துபோன மேகத்திரட்சியாய் நிற்கிறது.
கருத்துகள்