தமிழினியின் கவிதைகள்:பொதுவிலிருந்து சிறப்புக்குள் நகர்த்துதல்


தமிழினி ஜெயக்குமரனின் போர்க்காலம் தொகுப்பில் இருக்கும் கவிதைகள் எண்ணிக்கை 14 மட்டுமே. இதற்குமேல் கவிதைகள் எழுத அவள் இல்லை. மொத்தமுள்ள 48 பக்கங்களில் இந்த 14 கவிதைகளும் அச்சாகியுள்ள பக்கங்கள் 26. மீதமுள்ள பக்கங்களில் சில உரைகள் உள்ளன.4 வது கவிதை இது :
கைவீசி நடக்கிறது
காலம்.
அதன் கால்களில் ஒட்டிய துகள்களாய்
மனித வாழ்க்கை-
ஒட்டுவதும் உதிர்வதுமாய்.
காலத்தை முந்திப் பாய்கின்றன
கனவுக்குதிரைகள்.
காலடி பிசகாமல்
நீள்கிறது
காலப்பயணம்.
வேறெதையும் கண்ணுற்று
நிற்பதுமில்லை
கணக்கெடுத்துச் சுமப்பதுமில்லை.
காலம் நடக்கிறது.

கவிதை வாசிக்கும் ஆர்வமும், அது உருவாக்கும் கருத்தியல் தளம் அல்லது உணர்வுத்தளத்திற்குள் நுழையும் விருப்பமும் இருக்கும் ஒருவரால் இந்தக் கவிதைக்குள் நுழைந்து நின்று திரும்பலாம்.
வாசிப்பவர்களுக்குச் சொன்ன அந்த வார்த்தைகளில் சிறிய மாற்றம்செய்து எழுதுபவர்களுக்கும் பொருத்திக்கொள்ளலாம். பொதுவான உண்மைகளா? சிறப்பான அனுபவங்களா? எவை கவிதையாகின்றனா? அவற்றில் எவை கவனிக்கப்படுகின்றன? மனிதர்களின் நடப்புவாழ்க்கையைத் தீர்மானிக்கும் காலம், இடம் போன்றன பலநேரங்களில் பொதுவானவைகளாகவே இருக்கின்றன. பொதுவான காலம் மற்றும் இடம் பற்றிய பொதுவான அபிப்பிராய உருவாக்கக் கவிதையாக்கம் பலருக்கும் சாத்தியம். ஆனால் சிறப்புநிலைக்கவிதைகளை உருவாக்குவது அப்படிப்பட்டதல்ல. சிறப்புநிலைக்கவிதைகள் ஒருவரின் அனுபவம் சார்ந்தவை. கவிதை எழுதுபவரின் வாழ்நிலை சார்ந்து கிடைக்கும் அனுபவம் வாசிப்பவர்களுக்கு இல்லாமல் போகும் நிலையில் அந்தக் கவிதை வெற்றுப்புனைவாகவும், புனைவியல் கூடிய சொற்கூட்டமாகவும் ஆகிவிடும் ஆபத்துகளும் உண்டு. ஆபத்தைத் தவிர்க்கும் வல்லமை தனிநபர் அனுபவங்களுக்குக் குறைவு. ஆனால் ஒரு கூட்டத்தின் அல்லது பெருவெளிப்பரப்பின் நீண்டகால நிகழ்வுகள் தரும் அனுபவங்கள் நிச்சயம் வெற்றுப் புனைவு என்ற கேலியை இல்லாமல் ஆக்கிவிடும். ஒருவேளை, கவிதை எழுதியவரின் கவியாக்கக் குறைபாட்டால் அந்தக் கவிதை மதிப்பிழந்துபோக வாய்ப்புண்டே தவிர, கவிதை உருவாக்கும் பொது அனுபவப் பகிர்தலில் குறைகள் இருக்க வாய்ப்பில்லை.
இந்தத் தொகுப்பில் உள்ள எட்டாவது கவிதையையும் பன்னிரண்டாவது கவிதையையும் வாசித்துப்பாருங்கள்:
எஞ்சிக்கிடக்கிறது
இத்துப்போனதொரு வாழ்க்கை.
இடைவிடாது கொட்டிக்கொண்டிருக்கும்
விசத்தேள்களாக நினைவுகள்
குடைவதால் நெஞ்சினில்
நீங்காத மரணவலி.
” சாகத்தானே போனதுகள்,
சாகாமல் ஏன் வந்ததுகள்”
குறுக்குக்கேள்விகளால்
கூண்டுக்குள்ளேயே
பிணமாகிக் கனக்கிறது
போராடப்போன மனம்.
இந்தக் கவிதையும்கூட ஒரு பொதுக்கவிதைதான். ஆனால் 
“ சாகத்தானே போனதுகள்,
சாகாமல் ஏன் வந்ததுகள்” 
என்ற வரியின் மூலம் பொதுத்தளத்திலிருந்து சிறப்புத் தளத்திற்கு நகர்கிறது கவிதை. சாகப்போனது யார்? ஏன் சாவதற்குப் போகவேண்டும்? எப்படிப் போனார்கள்? எங்கே போனார்கள்? என்ற கேள்விகளின் வழியாகக் கவிதைக்குள் இருக்கும் சொல்லியின் அடையாளங்களைத் தேடவேண்டிய கட்டாயம் கவிதையை வாசிப்பவர்களுக்கு நேர்கிறது.
பொதுக்கவிதையின் பொதுத்தளத்திலிருந்து சிறப்புக்கவிதை, தனது செயல்தளத்திற்கான வெளியையும் காலத்தையும் தேடிவரும்படி வாசகர்களை நிர்ப்பந்திக்கிறது. அந்த நிர்ப்பந்தத்தை ஏற்றுவரும் வாசகர்கள் கவிதைசொல்லியின் குரல் கவியின் குரலாக இருக்குமோ என்ற ஐயத்துடன் நெருங்க நேரிடும். அந்தத்தேடலுக்கு, ஒரு கவிதைப்புத்தகத்தில் இருக்கும் கவிதையல்லாத குறிப்புகள் அவர்களுக்கு உதவுகின்றன. போர்க்காலம் என்ற இந்த நூலின் தலைப்பு தரும் உதவியோடு, கவி தமிழினியைப் பற்றிய தகவல்களைத் தரும் உரைகள் விரிவான தகவல்களைத் தருகின்றன. அதன் வழியாகக் கவியும், கவிதைக்குள்ளிருக்கும் ‘சொல்லியும்’ ஒருவரே என்ற புரிதலை அடைய முடியும். கவியும் கவிதைக்குள்ளிருக்கும் சொல்லியுமான ஒரு போராளிப்பெண், ஈழவிடுதலைப்போரில் நீண்டகாலம் ஈடுபட்டுத் தோல்விக்குப் பின்னும் சயனைட் குப்பியைக் கடித்துச் சாகாமல் இருந்த ஒருபெண்ணின் வேதனைக்குரல், இந்தக் கவிதை என்பதைப் புரிந்துகொள்கிறது வாசகமனம். அந்தப் புரிதலுக்குப் பின் கிடைக்கும் ஈழ யுத்தம், சிங்களப்பெரும்பான்மைக்கும் தமிழ்ச் சிறுபான்மைக்குமான போரில், நிலைபாடெடுக்கும்படி வலியுறுத்தப்பட்ட தமிழ் முஸ்லீம் குழுவினர்களுக்கு நேர்ந்த துயரமான பிய்த்தெடுப்பு போன்ற வரலாற்றுத் தகவலோடு அந்தக் கவிதை நம்முன் விரிக்கப்படுகிறது. 12 வது கவிதையான, “நஸ்ரியா”வை வாசிக்கும்போது அந்தப் போராளிப்பெண்ணின் குற்றவுணர்வுகொண்ட மனமும் வரலாற்றுத்தவறுக்கு மன்னிப்புக் கேட்க ஏங்கும் மனமும்கூடப் புரியவரலாம். கவிதை, ஒரு சிறிய கதையை நம்முன் நிகழ்த்துகிறது:
நஸ்ரியா
“கண்ணெல்லாம் செவந்து கெடக்கு
கவலைப்படாதீங்கக்கா
சூடா ஒரு கோப்பை
பால்கோப்பி தாறன்
பாத்திட்டே இரிங்களேன்
பறந்து போயிரும் தலைவலை”
கருமிருட்டு வானத்தில்
கனிந்திருக்கும் வெண்நிலவாய்
முக்காட்டுக்குள்ளே
சிரிக்கும் முகவதனம்.


தனிமையும் நோயுமாய்
தவித்திருந்த நாளொன்றில்,
பார்த்தவுடன் பழக்கமாகிப்
பக்கத்தில் விழித்திருந்தாள்.
” நாங்களெல்லாம் இருக்கமே
பாத்துக்க மாட்டமா?


கண்ணுக்குள் திரண்டெழுந்த
கடலின் அலைகள்
மோதிமோதிப் புரள்கின்றன.
மூழ்கடிக்கப்பட்டிருந்தவொரு
பொக்கிஷக் கப்பலின்
முனைகள் தீண்டிய
பரவசத்தில் மனது
மணல்மேடாய்க் கரைந்து
காணாமலாகிறது.


“ உம்மா புட்டவிச்சி அனுப்பியிரிக்காங்க
ஒரு பிடி சாப்பிடுங்களேக்கா”
அன்பைக் குழையலாக்கி
வார்த்தைகளில் நீட்டுகிறாள்.
வயிற்றில் பசியிருக்கவில்லை.
மூளையின் மடிப்புகளில்
கேள்விப் பாம்புகள்
நெளிந்து நெளிந்து
பதில்கள் தேடிப்
பசியோடு துடிக்கின்றன.


ஓய்வில்லாத
காற்றின் சிறகுகளாக
அவளின் உதடுகள்
அசைந்துகொண்டேயிருக்கின்றன


வார்த்தைகளைக் கைப்பற்றும்
திராணியைத் தொலைத்தவளாய்,
மௌனத்தின் கூட்டுக்குள்
நத்தையாய் சுருண்டிருந்தேன்.


“ நீங்க யாழ்ப்பாணமாக்கா
நானும் யாழ்ப்பாணந்தான்.
“90 ல எனக்கு அஞ்சு வயசு
அப்பவே அகதியா வந்திட்டமெண்டு
வாப்பா அடிக்கடி சொல்லிட்டிரிப்பார்”.


எனது எட்டாம் வகுப்புத்
தோழர்கள்
இமாம், மனாப்தீன்
இருந்தாற் போல ஓரிரவில்
குடும்பத்தோடு

ஊரைவிட்டே போய்விட்ட போய்விட்ட
நினைவின் ஆணிகள்
இன்னமும் இதயத்தில்
தைத்துக் கிடக்கின்றன.


ததும்பத் ததும்ப
புன்னகையை நிறைத்தபடி
பால் கோப்பி தருகிறாள்.


கண்களால் கூட
நன்றி சொல்லத் தடுமாறி
கைகளை நீட்டுகிறேன்


நீரடித்து
நீர் விலகாதெனில்
உன்னையும்
என்னையும்
எப்படி விலக்கலாம்?
(05-06-2015, கொழும்பு தெற்கு அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது எழுதியது)


போராளிக்குள்ளிருந்த கவிமனத்தைச் சொன்ன இந்தக்கவிதை வாசித்தபின், தமிழினி எழுதிய பொதுக்கவிதைகளும்கூட அவளது அனுபவங்களைத் தாங்கிய சிறப்புக் கவிதைகளாக மாறிவிடுகின்ற ரசவாதத்தை உணர இன்னொரு கவிதையை வாசிப்பதன்மூலம் வாசகர்கள் உணரமுடியும். அந்தக் கவிதைக்கு அவர் வைத்த தலைப்பு: போரடிக்கும் கருவி.
எல்லாமே முடிந்து
போனதாக
இறுகிப்போனது
மனசு.


இருப்பினும்
ஏதோவொரு
தொடக்கத்தை நோக்கியே
சஞ்சரிக்கிறது
சிந்தனை.


ஒவ்வொன்றிற்கும்
ஒரு காலமுண்டு
மௌனமாயிருக்கவும்
பேசவும்
பகைக்கவும்
சிநேகிக்கவும்


அதனதன் காலத்தில்
அத்தனையையும்
நேர்த்தியாக
நகர்த்திச் செல்கிறது
காலம்.


முந்தினதும்
பிந்தினதுமாக
சுழலும்
காலத்தின் கைகளில்
நானும் ஒரு
போரடிக்கும் கருவிதான்.
நல்ல கவிதைகளை விரும்பி வாசிப்பவர்கள், பொதுவிலிருந்து சிறப்புநோக்கிப் பயணிக்க விரும்பும் ஆர்வத்தோடு இருக்கவேண்டும். அந்த ஆர்வம் இல்லையென்றால், இன்னொரு மனித உயிரியின் மனதை, வலியை, மகிழ்ச்சியை, ஆசையைப்புரிந்துகொள்ள முடியாது. இன்னொரு என்பதில் எதிர்ப்பால் பிரிவினரும், மொழிகடந்த, தேசங்கடந்த, மனிதக்கூட்டமும் அடங்கும். கலை, இலக்கிய அனுபவம் என்பதே சிறப்பு அனுபவங்களைப் பொதுஅனுபவமாகவும், பொது அனுபவங்களைச் சிறப்பு அனுபவமாகவும் மாற்றும் வேதிவினையில் தான் தங்கியுள்ளது. தமிழினி இன்னும் இருந்திருந்தால் இத்தகைய வேதிவினையைத் தொடர்ந்து நிகழ்த்தியிருப்பாள்.
--------------------------------------------------------------------------------------------
போர்க்காலம்
தோழிகளின் உரையாடல்
தமிழினி ஜெயக்குமரன், சிவகாமி ஞாபகார்த்த நிறுவகம்
கிளிநொச்சி, இலங்கை


==============================================


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெரியார்- எப்போதும் பேசுபொருள்

பெரியார்மண்ணும் பிராமணியத்தின் இயக்கமும்.

நாத்திகம் என்னும் ஆன்மீகம்