பணமதிப்பிழப்புக்காலக் குறிப்புகள்

9/11/2016

நெல்லை அதிவிரைவு ரயிலில் பயணம். தொலைக்காட்சி பார்க்கவில்லை.தேசத்தின் வேகமான மாற்றம் எனக்குத் தெரியாது.
நேற்றும் முந்தியநாளும் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் உரையாற்றினேன்.

ரூ. 8722/- கொடுத்தார்கள். கைவசம் வைத்திருந்த நான்கு ரூ.500/- தாள்களோடு மொத்தம் 10722/_ இருந்தது நேற்று மாலை. 21 ஐந்நூறு ரூபாய்த் தாள்களும் இரண்டு நூறு ரூபாயும் சில்லரையும்..
ரூ.90/- இரவு உணவுக்குக்காலி.
ஒரு 500 ரூபாளைத் தாளைக் கொடுத்து மாற்றியிருக்கலாம். மாற்றவில்லை.
நள்ளிரவில் நடக்க இருந்த மாற்றத்தை உள்ளுணர்வு சொல்லவில்லை. ரயிலைவிட்டு இறங்கி ரயிலடியிலிருந்து ஆட்டோவில் செல்லமுடியாது.
தரவேண்டிய பணம் 170/- 
இப்போது இருப்பது 132/-தான்.
நடைதான் ஒரே வழி. பிறகு பேருந்து.
பின்னொரு நடை. ஒரு மணிநேரம் கூடுதலாக ஆகும் வீடு போய்ச்சேர.
தேசநலனுக்காகச் சகித்துக் கொள்ளவேண்டும். முதல் சகிப்பு.
பாதிப்பில்லை. கையெழுத்துப்போட்டுச் சம்பளம் வாங்குவதால் வரியும் கட்டியிருக்கிறேன். அதனால் பாதிப்பில்லை.
சிக்கல்கள் உள்ளன. தொடர்ந்து சில நாட்களுக்குச் சிக்கல்கள் தான்.
அடுத்தடுத்தும் வரும். கடந்துதான் ஆகவேண்டும்.
சகிக்க வேண்டும். சகித்துத்தான் ஆகவேண்டும்.
தேசநலன் முக்கியம்தானே?
**************
10/11/2016
விளைவுகளைப் பற்றி விவாதிக்கத் தயாரில்லை. நடைமுறைகள் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறோம்
******************
13/11/2016
'தேர்தல் காலத்தில் அதைச் செய்வோம்; இதைச் செய்வோம்' என்று சொன்னீர்களே? அதையெல்லாம் செய்யாமல் இதைச் செய்தது ஏன்? என்ற விவாதங்களுக்கு எந்த விடையும் கிடைக்கப்போவதில்லை. அந்த விவாதங்களுக்குள் செல்லவிரும்பவில்லை; செல்வது வெட்டிவேலை.
செய்யப்பட்டிருப்பது பொருளாதாரம்சார்ந்த நிகழ்வு. இதை விமரிசனம் செய்வதற்கான கலைச்சொற்களின் ஆழமான அர்த்தங்கள் எனக்குத் தெரியாது. ஆனால் பணத்தைக் கையாளும் எல்லா மனிதர்களும் இதில் கருத்துகள் சொல்லலாம் என்றே நினைக்கிறேன். கருத்துகள் சொந்த அனுபவங்கள் சார்ந்து இருந்தால் புலம்பல்களாக மட்டுமே அமையும். அதையும் சொல்லலாம். அதற்கு மேலும் நீட்டிக்கவேண்டும். அத்தோடு இந்த மாற்றத்தை வெறும் பொருளியல் மாற்றமாக நினைக்கவில்லை. இந்தியப் பண்பாட்டில் நடக்கவேண்டிய மாற்றமாகவும் மன அமைப்பில் ஏற்படவேண்டிய மாற்றமாகவும் நினைக்கிறேன்.
நேற்று காலை தொடங்கி இரவுவரை நான் சிக்கல்களைச் சந்தித்தேன். கையில் ஆயிரங்களில் பணம் இருந்தும் ஆட்டோவில் ஏறுவதைக் கைவிட்டேன். ஆட்டோக்காரர்கள் சில்லறை நோட்டுகள் இருக்கிறதா என்று கேட்டபின்பே சவாரிக்கு வந்தார்கள். வழக்கமாகச் செவ்வாய் மாலை வந்திறங்கிப் புதன்கிழமைக் காலையில் விற்பனைக்கு வரும் உவரிக்கடல் மீனை வாங்குவேன். வாங்குவதற்கான பணம் கையில் இருந்தது ஆனால் நேற்று வாங்கவில்லை. பல்கலைக்கழகத்திற்குப் போகும்போது - 09.30 மணியளவில் விற்றுத்தீர்ந்துவிடும் அந்த மீன்கடையில் மாலை 4 மணிக்கு நான் திரும்பி வரும்போதும் விற்கப்படாமல் - மீன்கள் வெட்டுப்படாமல் இருந்தன.
திருநெல்வேலி நகரின் தெருக்களும் கடைகளும் வழக்கமான நிலையில் இல்லை என்பதைக் கவனித்தேன். சின்னச்சின்னப் பெட்டிக் கடைகளில் கூட்டம் குறைவாகவே இருந்தது. 500 ரூபாய் அளவுக்குப் பழம் வாங்கியவர் கொடுத்த தாளைக்கூட அந்தப் பழவியாபாரி வாங்க மறுத்ததைப் பார்த்தேன். பெரிய உணவு விடுதிகளில் குடும்பமாக வருபவர்கள் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. பெட்ரோல் போடும் இடங்களில் வரிசைகள் நீண்டிருந்தன. அவைகளில் கார்கள் அதிகமாக இருந்தன.
சில இடங்களில் முணுமுணுப்புகளும் கோபங்களும் வெளிப்பட்டன. பேருந்துகளில் நடத்துநரோடு நடந்த சண்டைகளை மாணவர்கள் சொன்னார்கள். இவையெல்லாம் நடைமுறைச் சிக்கல்கள்.
இந்த நடைமுறைச் சிக்கல்கள். இன்னும் சில நாட்கள் தொடரும்; பெரிதாகும். இதைவிடப் பெரிதான சச்சரவுகளை நாளை முதல் வங்கிகள் சந்திக்கப் போகின்றன. தன் வசம் இருந்த 500/ 1000/ ரூபாய்த்தாள்களைக் கள்ளப்பணம் என்று சொல்வதைச் சாமானியன் ஏற்றுக்கொள்ளாமல் விடப்போகும் கண்ணீர் சாபமாக மாறலாம்; போடப்போகும் சண்டைகள் வெறும் வார்த்தைகளாக மட்டுமே இருக்குமெனச் சொல்லமுடியாது. அரிவாள்கள் தூக்கப்படலாம். கல்லாப்பெட்டிகள் மட்டுமே வைத்திருந்த வியாபாரிகள் பெருங்கவலைப்படுகிறார்கள். மஞ்சள்பையில் வந்து அன்றாட வசூலில் சுற்றும் தவணைச் சீட்டுக்காரர்களும் வட்டிக்கடைக்காரர்களும் தவிக்கப்போகிறார்கள்.
தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் பெரும்பாலும் நவீனத்துவ நடைமுறைக்குள் வராதவர்கள். நிரந்தர முதல்வர் காலங்களிலும் அவை நடந்தன. இப்போது பொறுப்பு முதல்வர் காலத்தில் நிறைய அரசாங்கப் பணிகள் வேகமாக நிரப்பப்படுகின்றன. அந்தந்தத் துறைகளின் அதிகாரிகளும் தொடர்புடைய அரசியல்வாதிகளும் கணக்கில் வராத பணங்களையே லஞ்சமாக வாங்கிக் கணக்கில் காட்டாமல் தான் வைத்திருக்கிறார்கள். அவர்கள் வாங்கும் லஞ்சப் பணமெல்லாம் கட்டுக்கட்டாகச் சில வீடுகளிலும் கண்டெய்னர்களும் நிற்கின்றன; நகர்ந்துகொண்டிருக்கின்றன. அவையெல்லாம் கறுப்புத்தெய்வங்கள். கறுப்புத்தெய்வங்கள் எப்படி வெள்ளைத் தேவதைகளாக மாறப்போகின்றனவோ தெரியவில்லை.
இந்தியாவில் இருக்கும் பொருளியல் நடைமுறைகள் -பணப்பரிவர்த்தனைக்குப் பின்னாலிருக்கும் நடைமுறைகள் நவீனமாக்கப்படவேண்டுமா? என்றுகேட்டால், கட்டாயம் செய்யவேண்டுமென்றே நான் சொல்வேன். நவீனமாக்குவது என்பது என்பது வேறொன்றுமில்லை. நாட்டிலிருக்கும் மொத்தப்பணமும் கணக்கில் இருக்கவேண்டும். அது உருளும் பாதைகள்/ போகுமிடங்கள் தெரியவேண்டும். இதற்குச் செய்யவேண்டியது எல்லாம் வங்கிக் கணக்கிற்குள் வரவேண்டும். அந்த வங்கிக்கணக்கு - நடப்புக்கணக்காக இருக்கவேண்டும். அதில் செலுத்தப்படும் பணம் முறையான ரசீதுகள் வழியாக நடத்தப்படும் வணிகமாக இருக்கவேண்டும். இரண்டாண்டுகள் வார்சாவில் இருந்தபோது கண்கூடாகப் பார்த்தேன். ஒரு ஜுலாட்டிகூட ரசீதுபோடப்படாத ஒன்றுக்குச் செலுத்தியதில்லை. அந்த ரசீதில் பொருளின் விலையோடு விற்பனை வரி, வாட்வரி எவ்வளவு என்பதும் இடம்பெற்றிருக்கும். பணம்கொடுத்துப் பொருள் வாங்கும் பயனாளிக்கு அந்தப் பணம் செல்லும் இடங்கள் தெளிவாகச் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும். அங்குமட்டுமல்ல; ஐரோப்பா, அமெரிக்கா, கனடா போன்ற முதலாளித்துவ நாடுகளில் இதுதான் நிலைமை. ஆனால் இந்தியாவில், மலேசியாவில், இலங்கையில் அப்படி இல்லை. நாம் தரும் பணத்தைக் கையில் இருக்கும் சிற்றேட்டில் குறித்துக்கொண்டு மீதிச்சில்லறை தரும் வியாபாரிகளிடமே நான் பொருட்கள் வாங்கினேன். இந்த அடிப்படையான வேறுபாடுதான் கீழ்த்திசைப் பொருளாதாரத்திற்கும் மேற்குலகப்பொருளாதாரத்திற்கும் உள்ள வேறுபாடு.
மேற்குலகப்பொருளாதாரம் கண்ணுக்குத் தெரியாத முதலாளிகள் நடத்துதும் வியாபாரம். அவர்களை முதலாளிகள் என்று சொல்வதைவிட வணிகக்கூட்டின் பங்குதாரர்கள். ஆனால் கீழ்த்திசை நாடுகளின் முதலாளிகள் முதலாளிகளாக மட்டுமே இருப்பதில்லை. அவர்களே பணியாளர்கள்; அவர்களை நாம் சந்திக்க முடியும்; நலம் விசாரிக்கலாம்; கோபப்படலாம். இந்த நடைமுறை வேண்டுமா? என்றால் நான் வேண்டாம் என்பேன். காரணம் இந்த முதலாளியம் - இந்தியாவில் நிலவும் சுதேசிய முதலாளியம் அதன் வன்முறை அமைப்பான சாதியத்தைத் தனக்கான பாதுகாப்புக்கருவியாக வைத்திருக்கிறது. சாதியத்தை நிலைநாட்டப்பார்க்கிறது. தங்கள் சாதி முதலாளிகளுக்காக ஏழைகள் சுரண்டப்படுவதை நியாயப்படுத்துகிறது.ஆகவே இந்திய முதலாளியம், நவீன முதலாளியமாக - பின் நவீன நடைமுறைகளைப் பின்பற்றும் - பணியாளர்களுக்கும் பயனாளிகளுக்கும் உரிய உரிமைகளை வழங்கவேண்டிய முதலாளியமாக மாறவேண்டும் என்றே சொல்வேன்.
இதே காரணங்களுக்காகவே இந்திய விவசாயமும் மறுசீரமைப்புக்குள்ளாக்கப் படவேண்டும். சிறு, குறு, பெரு விவசாயிகள் தங்களின் வருமானங்களால் மதிப்பிடப்படவேண்டும். இழப்புகளாலும் கணக்கிடப்படலாம். அவர்களும் வங்கிகளுக்குப்போகவேண்டும். அல்லது அவர்களை நோக்கி வங்கிகள் போகவேண்டும். அவர்களுக்காக இரவுகளில் வங்கிகள் நடத்தப்படலாம். கைவசம் இவ்வளவு நிலம் இருக்கிறது; பணம் இருக்கிறது; நகை, நட்டுகள் இருக்கின்றன; சொத்துபத்துகள் இருக்கின்றன என்ற கணக்கு இருக்கவேண்டும். அவற்றை நாட்டின் சட்டப்படி பிள்ளைகளுக்கு - ஆணுக்கும் பெண்ணுக்கும் பகிர்ந்தளிக்க ஒத்துக்கொள்ளவேண்டும். இதற்கான திசையை இந்தப் பொருளியல் மாற்றம் செய்யும் என்றே நம்புகிறேன்.
1000 ரூபாய், 500 ரூபாய் செல்லாது எனச் சொன்னதாக நான் நினைக்கவில்லை. இன்று ஒருநாள் மட்டும் சின்னத் தடைபோட்டதாகவே நினைக்கிறேன். நாளை முதல் இந்தத்தடைகள் மெல்லமெல்ல விலகலாம்.நவீன வியாபாரத்தின் நடைமுறையைப் பின்பற்றி வியாபாரம் செய்திருந்தால் சாலையோர மீன்காரர்கள்கூட இந்தப் பணத்தாள்களை வாங்கிக்கொள்வதில் சிக்கல் இல்லை. நவீன வியாபார நடைமுறை என்பது அதற்கான வங்கிக்கணக்கோடு, ரசீதுகள் கொடுத்து, அன்றாடக் கணக்கை முடித்து உரிய ரசீதுகளோடு வியாபாரம் செய்வதுதான். அதை நோக்கி நமது பெட்டிக்கடைக்காரர்களும் நகர்ந்தாகவேண்டும். அதன் மூலம் கிடைக்கும் வருமானம் வரிகட்டவேண்டிய அளவைத்தொடும்போது வரிகட்டவேண்டும். பெட்டிக்கடைக்காரர் பணம் வாங்கிக் கல்லாப்பெட்டியில் போடுவதுபோலப் பணம் வாங்கும் மருத்துவர்கள் ரசீதோடு மருத்துவம் பார்க்கவேண்டும். ரசீதோடு வாங்கிய பொருட்கள் நுகர்வியச் சட்டங்களுக்குள் வரவேண்டும். அதன் நடைமுறைப்படி தண்டிக்கப்படவேண்டும்.
மொய்க்கணக்குகள் வழியாகத் தொடரும் திருமணப்பந்தங்களில் மாற்றம் வரவேண்டும். அதன்வழியாகக் கட்டுப்படுத்தப்படும் பெண்களின் சுதந்திரம் திருப்பி அளிக்கப்படவேண்டும். சமையல்காரர்களின் பேரில் வாங்கும் பணத்தைக் கணக்கில் காட்டாமல் மறைக்கும் கல்யாண மண்டபங்கள் தப்பிக்கமுடியாதபடி கிடுக்கிப்பிடி வேண்டும். அறக்கட்டளைகளின் பெயரில் பெறப்படும், கோயில் திருவிழாக்களின் பெயரில், சமூகப்பணிகளின் பெயரில் வாங்கப்படும் நன்கொடைகள் வங்கிக்குச் சென்று வரிக்குரியனவாக மாற்றப்படவேண்டும். வரிசெலுத்தும் சமூகம் முன்வைக்கும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவேண்டும். நல்ல சாலைகள் அமைக்கவும், கல்விச்சாலைகள் கட்டவும் இந்தப் பணம் பயன்படவேண்டும்.
நடைமுறைகளைப் பற்றிய விமர்சனத்திற்கு அப்பால் விளைவுகளைப் பற்றிய பேச்சுகளைத் தொடங்கலாம்.
****************
15/11/2016
எளிமையானவன் ஆனால்...
============================
”நோக்கம் நன்று; நடைமுறைப்படுத்தல்கள் தவறு” என்ற விமரிசனங்கள் நவீன இந்தியத் தலைவர்கள்மேல் வைக்கப்படும் குற்றச்சாட்டுகள். அந்தக் குற்றச்சாட்டுகள் வரலாற்றுப்பாத்திரங்கள் மேலும் வைக்ப்பட்டுள்ளன. கட்டுரைகள் எழுதும் பத்திரிகையாளர்களும் பத்தி எழுத்தாளர்களும் வெளிப்படையாக அதைச் சொல்லிவிடுவார்கள். ஆனால் புனைவெழுத்தாளர்கள் அப்படிச் செய்வதில்லை. தயங்குவார்கள்; குழம்புவார்கள்; குழப்புவார்கள்.
வெளிப்படையான விமரிசனங்களைச் செய்யும் எழுத்துகளில் நாடகத்திற்கே முதலிடம். நேருவின் கலப்புப்பொருளாதாரமும் சோசலிசக்கனவும் நல்ல நோக்கங்கள் கொண்டவையே; நடைமுறைப்படுத்தலில் பின்னடைவுகளைச் சந்தித்துத் தோல்வியடைந்துவிட்டன எனச் சொல்லவிரும்பிய கிரிஷ் கர்னாட் வரலாற்றுப்பாத்திரமான “துக்ளக்” நாடகத்தை எழுதினார். இந்திரா பார்த்தசாரதியின் ’ஒளரங்கசீப்’ ஒருவிதத்தில் பாரதீய ஜனதாவின் முன்னால் தலைவர் எல்.கே. அத்வானியை மனதில் வைத்து எழுதப்பட்ட நாடகம். ஐயனெஸ்கோவின் ’காண்டாமிருகம் /ரினோசரஸ்’ ’, சாமுவேல் பெக்கட்டின் ’ கோடாவுக்குக் காத்திருத்தல்/ வெயிட்டிங்க் ஃபார் கோடார்ட்’, பெர்ட்டோல்ட் ப்ரக்டின் ’விதிவிலக்கும் விதியும்/ எக்செப்சன் அண்டு தி ரூல்’ போன்ற நாடகங்கள் அவர்கள் காலத்தின் அரசியல் விமரிசனங்கள். அங்கதமும் கேலியும் அபத்தமும் இணைந்த இந்த நாடகங்கள் உலக நாடகவரலாற்றில் மைல்கற்கள்.
இன்னொரு மைல்கல்லான நாடகத்தை எழுதும் வாய்ப்பை இந்தியப் பிரதமர் நரேந்திர தாமோதர் மோடி உருவாக்கித் தந்துள்ளார். ஐந்து நாட்களாக அல்லோலோகல்லோலோவென அலையும் இந்திய மக்கள் கூட்டத்தின் கோபத்தின் வடிகாலாக -வெளிப்பாடாக அமையப்போகும் அந்த நாடகத்தை எழுதப்போகும் இந்திய நாடக ஆசிரியர் யாராக இருப்பார்?
வரலாற்றில் நுழைந்தோ! தொன்மத்திற்குள் புகுந்தோ! நேரடியாகவோ மோடியை நாயகனாக்கும் அந்த நாடகாசிரியருக்காகக் காத்திருக்கிறது உலகமென்னும் நாடகமேடை
************************
16/11/2016
கறுப்புப் பண ஆதரவு, கள்ளப்பண ஆதரவாளர்கள் என மடைமாற்றுவதில் மட்டுமல்ல; திருவாளர் ராகுல்காந்திக்காக வாதாடுபவர்கள் எனத் திசைதிருப்புவதிலும் இருக்கிறது ஸ்ரீமான் மோடியின் வெற்றி ரகசியம்
******************
17/11/2016
கானல் நீரைக் கையில் அள்ளமுடியுமா?
==========================================
சுதந்திர இந்தியாவில் பெரும் தாக்கத்தை நிகழ்த்திய பொருளியல்சார் பெருநிகழ்வுகள் நான்கு.
1. நில உச்சவரம்புச்சட்டம்(1958)
2. வங்கிகள் தேசியமயம்(1969)
3 தாராளமயப் பணப்பரிமாற்றம்(1990)
4. பணமதிப்பிழப்பு (2016)
முன்னிரண்டும் பொருளியல் நடவடிக்கைகள் மீது அரசின் பிடியை இறுக்கும் நோக்கம் கொண்டவை. மாற்று ஏற்பாடுகள் எதையும் உருவாக்கிக்கொள்ளாமல் இருந்த நடைமுறையைக் கட்டுப்படுத்த நினைத்தவை. அதனால் எதிர்பார்த்த பலனைக் கொடுக்காமல் நாளடைவில் தோல்வியைத் தழுவின.
பின்னிரண்டும் பொருளியல் நடவடிக்கைகள் மீது பிடியைத் தளர்த்திக் கொண்டு அரசின் பொறுப்பைத் தனியாரிடம் விட்டுவிட்டு ஒதுங்கிக்கொள்ளும் நோக்கம் கொண்டவை.
இதிலும் மாற்று அமைப்புகளும் நடைமுறைகளும் உருவாக்கும் பொறுப்பு அரசுகளுக்குத் தான் உண்டு. அதைக்கூடப் புரிந்துகொண்ட அரசியல்வாதிகள் இந்தியாவில் / தமிழகத்தில் இல்லை. இந்திய அரசியல்வாதிகள் எப்போதும் தங்களை மேற்பார்வையாளர்களாக மட்டுமே நினைக்கிறார்கள்.நிர்வாகிகளாக நினைப்பதில்லை. மேற்பார்வை செய்யும் நபர்களுக்குப் பலநேரங்களில் பலபெயர்கள் உண்டு.ஆங்கிலேயர்கள் வருகைக்கு முன்பிருந்த பண்ணையமைப்பில் அவர்களின் பெயர் பண்ணைவிசாரிப்பான்கள், பெருந்தோட்ட வேளாண்மையில் கங்காணிகள் வியாபார நிறுவனங்களில் மேலாளர்கள்.
உற்பத்தியிலும் பங்கீட்டிலும் தங்களின் பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் அரசுகளும் அரசின் பிரதிகளிலும் மக்களின் நலனுக்குத் தேவையான சட்டங்களையும் நடைமுறைகளையும் உருவாக்குவார்கள் என எதிர்பார்ப்பது கானல் நீரைக் கையில் அள்ள நினைப்பதில்தான் முடியும்.
**********************
18/11/2016
ஆட்டம் ஆரம்பமாகிவிட்டது.
===============================
நாட்டை ஆளும் உரிமைபெற்றுள்ள பா.ஜ..கட்சியின் முதன்மை நோக்கம் பெருமுதலாளிகளை உருவாக்குவது. மத அரசியலிலிருந்து, சாதி அரசியல்வழியாகப் பொருளாதார மையத்திற்கு நகர்ந்துள்ளது அதன் பயணம் .
உலகமயத்திற்குத் தேவை,பெருமுதலாளிகள். அந்தத்தேவையை நிறைவேற்ற அந்நிய முதலீட்டை அனுமதிப்பது என்பது காங்கிரஸின் நிலைபாடு. அந்த நிலைபாடு பா.ஜ.க.விற்கும் உடன்பாடுதான். ஆனால் அதன் முகம் தேசியம் . ஆகவே இந்த நாட்டிற்குத் தேவையான சில ஆயிரம் பெருமுதலாளிகளை - தேசியப் பெருமுதலாளிகளை உருவாக்கும் திட்டத்தைக் கைவசம் வைத்திருப்பது அதன் மறைமுகத்திட்டம். தேசியப் பெருமுதலாளிகள் பன்னாட்டு முதலாளிகளாகப் பரிணமிக்கும் வாய்ப்பை அரசதிகாரம் உருவாக்கித் தரத்தொடங்கியிருக்கிறது. அதன் முக்கியவெளிப்பாடே எல்லாப்பணத்தையும் - இந்தியாவிலிருக்கும் கரன்சிகள் மொத்தத்தையும் கணக்கில் கொண்டுவரவேண்டுமென்பது. கணக்கில் வந்த கரன்சிகள் திரும்பவும் முதலீடாக மாறும். அந்த முதலீடு அரசின் முதலீடல்ல; பன்னாட்டு முதலாளிகளின் வழியாகச் செய்யப்படும் முதலீடாக மாறும். இதன் மறுதலையாக மற்றவர்கள்-பலநூறுகோடி மனிதர்களும் ஊழியர்களாகவும் நுகர்வோர்களாகவும் மாற்றப்படுவார்கள். ஆட்டம் ஆரம்பமாகிவிட்டது.
இந்தப்பெரு நிகழ்வில் தமிழக அரசியல் கட்சிகளின் பொருளாதார அரசியலின்மை வெளிப்பட்டிருக்கிறது. தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சிகளான திமுகவும், அ இ அதிமுகவும், நடத்தியன பண்பாட்டு அரசியல் மட்டுமே. தமிழ்மொழியை மையப்படுத்திய பண்பாட்டு அரசியல் மட்டுமே போதாது என்பதை இப்போதாவது புரிந்துகொள்ளவேண்டும் அந்தக் கட்சிகள்
*********************
19/11/2016
மீன்காரரிடம் பற்று
======================
மாலை மீன்கடைகளில் வாங்குவதே விருப்பமானது.
செவ்வாய் மாலையும், வெள்ளிமாலையும் கிடைக்கும் மீன்கள் கிழக்குக்கடலில் - மணப்பாட்டிலிருந்தும் உவரியிலிருந்தும் -வருபவை. காலையில் கடலுக்குப்போய் வலைபோட்டுப்பிடித்து பிற்பகலில் திருச்செந்தூர் - நெல்லை பாசஞ்சர் ரயிலில் வந்திறங்கும் மீன்கள். வந்திறங்கும்போது உயிரோடுகூட இருக்கும். ஆழ்கடலுக்குப் போகாமல் பக்கத்தில் பிடிப்பதால் பெரியபெரிய மீன்களைவிட நடுத்தரமான மீன்களே வரும். மாலையில் வந்தவை விற்றுத்தீரவில்லையென்றால் அடுத்த நாள் காலையிலும் விற்பார்கள். கடைகளும் எண்ணிக்கையில் குறைவு. மீன்வகைகளும் அதிகம் இருக்காது. ஆனால் விலை குறைவாக இருக்கும்.
காலை மீன்கடைகள் எல்லா நாட்களும் உண்டு. பல இடங்களிலும் உண்டு. அந்தக் கடைகளில் நான் மீன் வாங்குவதில்லை. அவையெல்லாம் மேற்குக்கடலில் மலையாளக்கரையில் பிடிக்கப்பட்டு, குளிரூட்டப்பட்ட பெட்டிகளில் ஒன்றிரண்டு நாட்கள் கழித்தே திருநெல்வேலிக்கு வந்துசேர்பவை. பலவகையான மீன்கள் கிடைக்கும். அளவும் பெரிதாக இருக்கும். ஆனால் விலையும் கூடுதலாக இருக்கும்.
இன்று பல்கலைக்கழகத்திலிருந்து திரும்பும்போது வழக்கமாக மீன் வாங்கும் கடையில் மீன்வாங்கப்போனேன். “சில்லறை இருக்காங்கய்யா” என்று கேட்டபின்பே விலை சொல்லத்தொடங்கினார். ’2000 ரூபாய்த் தாள்கள் மட்டுமே இருக்கிறது’ என்றேன். மீன் இல்லையென்று சொல்லும் நோக்கம் அவருக்கு இல்லை. ”கடனாக வாங்கிக்கொள்ளலாம்” என்று சொன்னார். சொல்லிவிட்டு இன்னொரு தகவலும் சொன்னார். “ஐயா, உங்களைப்போல வழக்கமா மீன் வாங்கும் ஒருத்தர் பழைய ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் பத்தை முன்பணமாகக் கொடுத்துட்டார். மொத்த[ப்பணத்திற்கும் மீன்வாங்கியே கழித்துக்கொள்வதாகச் சொல்லிட்டார். அவருக்காகக் கணக்கு நோட்டில் ஒருபக்கம் போட்டு எழுதிக்கிட்டிருக்கேன்;. அதேமாதிரி நீங்களும் பழைய ஆயிரம் ரூபாய் நோட்டுகளெ குடுத்தா, அட்வான்ஸா வச்சிக்கிறேன்” என்றார். “ ஏங்கிட்டெ பழைய நோட்டெல்லாம் இல்லையே; புதுநொட்டுகள் தான் இரண்டாயிரமாத்தான் இருக்கு” என்றேன். சரிங்கய்யா, ”அவருக்குப் பக்கத்தில் உங்கள் பெயரை எழுதிக் கடன்கணக்கு என எழுதிக்கொள்கிறேன்” என்றார்.
முக்காக்கிலோ வஞ்சிரமும் அரைக்கிலோ சாலமீனும் தந்து கடன் கணக்கில் 500/ ரூபாய் எழுதிவைத்திருக்கிறார். 500/ ரூபாய்த்தாளுக்காகக் காத்திருக்கிறேன்
.
WAITING FOR GODAT(Rs. 500/- )
*******************
20/11/2016
ஏன் இப்படி நடக்கிறது? என்பதற்கான பதில் தேவை என்று கேட்கும் மனிதர்களையும் காணோம் பதிலைச் சொல்லும் நபர்களும் கண்ணுக்கெட்டிய தூரம் தென்படவில்லை. இக்கட்டான இந்த நேரத்தில், மனிதர்களை வழி நடத்தவோ, அணி திரட்டவோ , குரல் கொடுக்கவோ யாரும் இல்லை என்பதுதான் நிகழ்காலச் சமூகத்தின் பெருந்துயரம்.
***************************
21/11/2016
முகநூல், வாட்ஸ்-அப்,ட்விட்டர் எனச் சமூக ஊடகங்களில் எல்லாம் கேலியும் கிண்டலும் நிரம்பி வழிகின்றன. சிரிப்பது உடம்புக்கும் மனதுக்கும் நல்லதுதான்.ஆனால் நாட்டையே உலுக்கும் பெருநிகழ்வுகளின் மீதான விமர்சனங்களையும் எள்ளல், அங்கதம், நகைச்சுவை எனக்கடந்து போவதால் விளைவுகள் எதுவும் ஏற்படாது
திட்டுவதில் இருக்கும் ஆர்வம் திரட்டுவதில் இல்லை
*********************
22/11/2016
==========
பாடத்திட்டம் ஒரு பெரிய போராட்டக்களம். அங்கே மதவாதத்திற்கெதிராக எதுவும் செய்துவிட முடியாது. ஜனநாயகத்தின் வழியாக லஞ்சம், கள்ளப்பணம், கறுப்புப் பணம் போன்றவற்றை ஒழிக்க முடியாது. இப்போதிருக்கும் நீதிமன்றமும் மக்கள் பிரதிகள் விவாதிக்கும் அவைகளும் சபைகளும் தேவையற்றவை. பலமான தலைவர், வலிமையான காவல்துறை மற்றும் ராணுவம் இருந்தால் போதும் என்ற குரல்களை மென்மையாகச் சொல்லிக்கொண்டிருந்தார்கள் வலதுசாரிப் பொருளியல் ஆதரவாளர்கள் . இப்போது - பணமதிப்பிழப்பு அறிவிப்புக்குப்பிறகு தைரியமாகவும் அழுத்தமாகவும் சொல்லத்தொடங்கிவிட்டார்கள்.இதில் எழுத்தாளர்களும் கலை இலக்கிய வாதிகளும் கல்வியாளர்களும்கூட அடக்கம். இவை பாசிசத்தின் ஆதரவுக்குரல்கள். கண்டிக்கத்தக்கவை
2017-11-09
நினைவிலிருக்கும் இரண்டு நடவடிக்கைகள்
============================
விடுதலை பெற்ற இந்தியாவில் ஏற்பட்ட பொருளியல் நடவடிக்கைகள் இரண்டு.1969,ஜூலை 19 -இல் இந்திராகாந்தி எடுத்த முதல் நடவடிக்கை வங்கிகள் நாட்டுடைமையாக்கப்பட்ட நடவடிக்கை. அரசாங்கத்தின் மக்கள் நலத்திட்ட நடவடிக்கைகளுக்குத் தனியார் வங்கிகள் ஒத்துழைக்க மறுத்த நிலையில் அவற்றை நாட்டுடைமையாக்கினார். அப்போது நான் பள்ளி மாணவன். அதன் விளைவுகள் பெரும்பான்மை மக்களுக்குக் கடன் வழங்கவும் சிறிய முதலீட்டில் சிறு, குறு தொழில்கள் தொடங்கவுமான நகர்வு. என்பது ஒன்றிரண்டு ஆண்டுகளில் வெளிப்பட்டது. பணத்தைப் பெரும்பாலோரிடம் கொண்டு போகவேண்டுமென நினைத்தது. அந்நகர்வுதான் என்னையெல்லாம் அரசியல் விலங்காக மாற்றிய நாள். அதற்குமுன்பு பேசிய அரசியல் வெற்று அரசியல். அதற்குப் பின்பு பேசிய அரசியல் பொருளியல் அரசியல்.
இரண்டாவது நடவடிக்கை திரு நரேந்திர மோடியால் அறிவிக்கப்பெற்ற பணமதிப்பிழப்பு; செல்லாத பணங்களை உருவாக்கிய நிகழ்வு. அந்த அறிவிப்பு பல ஆயிரங்களையும் லட்சங்களையும் வைத்திருந்தவர்களும் சில கோடிகளைக் கொண்டிருந்தவர்களும் கதிகலங்கிப் போய் வங்கிகளிடம் பணத்தைக் கொடுத்துவிட்டுத் தவிக்கச் செய்தது. வங்கிகளில் குவிக்கப்பட்ட பணத்தைப் பெரும்பணக்காரர்களுக்குக் கடனாக வழங்கிப் பெருமுதலாளிகளையும் பன்னாட்டு முதலாளிகளையும் உருவாக்கிய நாள். இது பணத்தைச் சிலரிடம் குவிக்கும் நோக்கம் கொண்டது. இந்த நகர்வும் இந்திய மக்களைப் பொருளியல் அரசியல் பேசுபவர்களாக மாற்றியிருக்கிறது.
பின் குறிப்பு
=============
இப்பெருநிகழ்வுகளை விவாதித்த -பின்னணியாகக் கொண்ட இலக்கியப்பிரதிகள் எவையெல்லாம் என்ற கேள்விகளும் ஒருபக்கம் ஓடிக்கொண்டே இருக்கிறது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெரியார்- எப்போதும் பேசுபொருள்

பெரியார்மண்ணும் பிராமணியத்தின் இயக்கமும்.

நாத்திகம் என்னும் ஆன்மீகம்