புதிய கல்விக்கொள்கை: சில குறிப்புகள்- சில சந்தேகங்கள்- சில எதிர்பார்ப்புகள்
வாழ்க்கைமுறை என்பது ஒவ்வொரு மனிதரையும் பலரையும் சார்ந்து வாழ வேண்டிய நெருக்கடியைத் தருவதாகவே உள்ளது. சார்ந்து வாழ்தலின் முதல்படி, தன்னை வெளிக்காட்டிக் கொள்ளவேண்டும். தன்னை வெளிக்காட்ட ஒரு கருவி வேண்டும். அதற்காக மனிதன் கண்டுபிடித்த கருவி தான் மொழி. அந்தக் கருவியின் திறனுக்கேற்ப ஒரு மனிதனின் தொடர்புப்பரப்பு அமையும். மொழியென்னும் கருவியின் மூலம் பேச்சு முறையின் மூலம் தன்னையும், தன் குழுவையும் வெளிப்படுத்திய மனிதன், மேலும் கூடுதலாக வெளிப்படுத்த வேண்டிக் கண்டுபிடித்த கருவியே எழுத்து. தனது கருத்தை நிதானமாகவும் செம்மையாகவும் எடுத்துச் சொல்லப் பேச்சை விடவும் எழுத்து முறை கூடுதலாக உதவும். அனைவருக்கும் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் என நினைப்பதில் பின்னணியில் இத்தகைய காரணங்களே இருக்கின்றன.