சிற்பியின் நரகம்
புதுமைப்பித்தனின் சிற்பியின் நரகம் சிறுகதை, நாடகத்திற்குத் தேவையான முரணைத் தன்னுள்ளே கொண்டிருக்கும் பிரதி. கதைமாந்தர்களுக்கிடையேயுள்ள முரணை, இக்காலகட்ட இந்திய நிலைமையோடு பொருத்திப்பார்த்து வாசித்து நாடகமாக எழுதப்பட்டுள்ளது. நாட்டில் வளர்ந்துவரும் மதவாதம்தான் சிறுகதையை நாடகமாக எழுதத்தூண்டியது. சரியான மேடையேற்றங்கள், அதன் பொருத்தத்தை உணரச்செய்யும். பாண்டிச்சேரி கூட்டுக்குரல் அமைப்பு மதுரையிலும் பாண்டிச்சேரியிலுமாக இரண்டுமுறை மேடையேற்றியுள்ளது.
பாத்திரங்கள்
சாத்தன்: சிற்பக்கலைஞன்
பைலார்க்கஸ்: தத்துவமாணவன், யவனத்திலிருந்து
வந்தவன்
பரதேசி: சந்நியாசி, இந்து சமயவாதம்
பேசுபவன்
செங்கமலவல்லி: சாத்தனின் மனைவி
மற்றும் குழுவினர் (ஏழு பெண்களும்,
ஏழு ஆண்களும் இருக்கலாம். கூடுதலாக இருந்தாலும் சமமாக இருப்பது நல்லது)
காட்சி:1
·
அதிகாலையின்
ஒளிப்பரப்பு.
·
மேடை
மங்கலான வெளிச்சத்தில் இருக்கும்போது கடற்பரப்பில் அலைகள் எழும்பி ஓயும் ஒலியும் மீன்பரதவர்கள்
கடலுக்குள் செல்லத் தயாராகும் பாடல்களின் இசைவடிவமும் கேட்கிறது.
·
அது
முடியும்போது மேடை வெளிச்சம் குறைகிறது.
·
திரும்பவும்
வெளிச்சம் அதிகமாகும்போது கல்லில் உளிகொண்டு செதுக்கும் ஓசை கேட்கிறது. ஓசையின் உச்சத்தில்
சிற்பியின் நடனமும் சேர்ந்து மேடை நிரம்புகிறது. குழுவினர் ஆடற்குழுவாக மாறிச் சிற்பமாக
மாறிக் கொள்கின்றனர். உளியின் ஓசை குறையும்போது சிற்பி , அந்தச் சிற்பத்தின் முன்னால்
வீழ்ந்து கிடக்கிறான். அமைதி. பேரமைதி
·
விளக்குகள்
கவிகின்றன. மேடையின் ஒருபுறம் விளக்கு வரும்பொழுது மரங்களின் ஊடாக வனவிலங்குகள் ஓடிவிளையாடிக்கொண்டிருக்கும்
பாவனைகளைக் குழுவினரால் நடித்துக்காட்டப்படுகிறது. பின்னணி இசையில் பேரிரைச்சலும் காற்றுமான
நிலை.
·
வெளிச்சம்
இடம் மாறுகிறது. சிற்பியாக இருந்தவன் வண்ணங்களைக் குழைத்து ஓவியம் தீட்டிக்கொண்டிருக்கிறான்.
·
ஒளி
இடம் மாறுகிறபோது மரங்களை வெட்டி உருட்டிக்கொண்டிருக்கின்றனர். ஒளிமாறும்போது அவன்
ஓவியம் தீட்டி முடித்திருக்கிறான்.
·
திரும்பவும்
ஒளிமாற்றம். ஆற்றில் துணிதுவைப்பவர்கள் அவர்களது வேலையில் ஈடுபட்டுள்ளனர். ஒளிமாற்றம்,
அவன் முப்பரிமாணப் பரிமாணப்பொருட்களை உருவாக்குவதில் ஈடுபட்டிருக்கிறான்.
·
ஒளிமாற்றம்.
ஒரு பெண் நடனமாடுகிறாள். அவள் பயிற்சிசெய்யும் நடனப்பெண்.
·
ஒளிமாற்றம்.
பாதி நிலையில் உள்ள சிற்பத்திற்கு ஆபரணங்களை வார்த்தெடுக்கிறான்.
·
ஒளிமாற்றம்.
கிராமப்புறக்கோயில் பூசாரியின் சாமியாட்டம்.
·
ஒளிமாற்றம்.
சிற்பத்தை முடித்த சந்தோசத்தில் ஆடிப்பரவுதல்.
·
ஒளிமாற்றம்.
திருவிழாக்கூச்சல். பூசாரி பலிகேட்கும் தோற்றம். பின்னணி இசை உச்சத்தில். குறைந்துவரும்போது
மேடைமுழுவதும் ஒளிபரவுகிறது.
·
சிலையின்
முன்னால் சிற்பி, ஒருபுறம் பரதேசி. இன்னொருபுறம் பைலார்க்கஸ். கண்விழித்த சிற்பி..
சாத்தன் : வரவேண்டும் சுவாமி.. ஓ.. ! பைலார்க்கஸ்..
வந்து நேரமாகிவிட்டதா..? [திடீரென்று பரபரப்பு.
நிழல்களும் வெளிச்சமும் மாறிமாறிவருகின்றன. ஒரு
ரதம் செல்லும் ஒலி கேட்கிறது. பரதேசி ஓடிப்போய் நின்று பார்க்கிறார்]
பரதேசி : அங்கே என்ன கூச்சல்..?
பைலார்க்கஸ் : அரசாங்கக் கருவூலக் கணக்காயனின் ரதம் போகிறது.
யானைகளைக் கண்டு குழந்தைகள் அலறுகின்றன. அய்யோ.. அதோ.. ஒரு குழந்தை விழுந்து எழுகிறதே..
ஓ.. நல்லவேளை...
சாத்தன் : குழந்தைக்கு எதுவும் ஆகவில்லையே.. ஆமாம்.
ஏன் இப்படிப் பரபரப்பு உண்டாக்கவேண்டும்
பைலார்க்கஸ் : பரபரப்பு உண்டாக்காவிட்டால் அவன் போவதை நீ எப்படி
அறிந்துகொள்வாய்..சாலையில் போவோர் மட்டும் அவனை அறிந்தால் போதுமா? வீட்டிற்குள் இருப்பவர்களுக்கும்
அரசின் இருப்பை உணரச் செய்வதற்கு வேறுவழி என்ன..?
சாத்தன் : பைலார்க்கஸ்.. எதிலும் உனக்குக் காரணங்கள்
கிடைத்துவிடுகின்றன. ஆனால் நான் என்னவோ எல்லாம் தெய்வச்செயல் என்றுவிட்டுவிடுகிறேன்
பரதேசி : (சிற்பத்தைக்காட்டி) இதுவுமா..?
சாத்தன் : எல்லாமும்தான்.. இதுவும் அதுவும் எதுவும்..
பைலார்க்கஸ் : இல்லை.. அது உன் சிருஷ்டி.. உன் சக்தி..
சாத்தன் : பைலார்க்கஸ்.. நீ என்ன சொல்ல வருகிறாய்..
உன்னுடைய இந்தப் பேச்சு எனது பெருமையைச் சாந்தி செய்யலாம். நான் எத்தனை நாள் கஷ்டப்பட்டேன்
அது உனக்குத் தெரியுமா? ஆமாம். நான் கஷ்டப்பட்டேன்
பைலார்க்கஸ் : கலைஞனின் கஷ்டங்களை அறியாதவன் அல்ல. அறிந்ததனால்
தான் சொல்கிறேன். இது உன் சிருஷ்டிசக்தி என்று..
சாத்தன் : இல்லை பைலார்க்கஸ். இது என்னோட லட்சியம்..
ஆனால்.. அது என்னால் மட்டுமே நிகழ்ந்ததாக நான் நினைக்கவில்லையே..
பைலார்க்கஸ் : இப்போது நீ என்ன சொல்ல வருகிறாய் என்று அறிந்துகொள்ளலாமா?
சாத்தன் : பைலார்க்கஸ்..! நிதானமாக யோசித்துப்
பார்.. நீ நினைப்பது போல் வெறும் பாழ்வெளியன்று. அர்த்தமற்ற பேய்க்குழப்பம் அன்று.
நாம் நேற்றுப் பிறந்தவர்கள். மனிதனுக்குத் தெரியவேண்டியதெல்லாம் இந்தப் பிரபஞ்சமே..
அதன் தோற்றம்.. அந்தக்கூத்து.. அதில் தான் எத்தனை அர்த்தம்.. எவ்வளவு லயம்..
பைலார்க்கஸ் : நீ சொல்வதையெல்லாம் நம்பவேண்டும் என்கிறாய்..
அப்படித்தானே..?
சாத்தன் : நீ நம்பவேண்டும் என்பதற்காகச் சொல்லவில்லை.
நான் நம்புகிறதால் சொல்கிறேன். என் தேடலைத் தொடங்கும்படி சொன்னாயே.. அன்று அதைத் தொடர்ந்து
ஒருமுறை பாண்டிய நாட்டுக்குப் போயிருந்தேன். அப்போ எனக்கு வயது முப்பது இருக்கும்.
அங்கேதான்.. ஆம்.. அங்கேதான் இந்தக் கொல்லிப்பாவை எனக்குக் கிடைத்தாள். ஒருமறவன் ஒரு
கூத்தில் அபிநயம் பிடித்தான்.. அந்தக் கால்வளவு அதை அதிலே பிடித்தேன். உலகத்தின் அர்த்தத்தை
ஒவ்வொன்றாகப் படிப்படியாக வளர்த்தது அந்த மலையத்துவப் பாவைதான். அந்தப் பாவையின் பாவத்தோடு
முகத்தின் சாந்தியை.. அந்த அபூர்வமான புன்சிரிப்பை.. அர்த்தமற்ற அர்த்தத்தை...
[பின்னணியில் ஆட்டத்திற்கான
தாள இசை மெதுவாய் வருகிறது. சாத்தனின்
கால்கள் இசைக்கேற்ப அபிநயம் பிடிக்கின்றன. உச்சநிலையை
அடைந்துத் தள்ளாடி விழ இருக்கிறான். பைலார்க்கஸ் புன்சிரிப்புடன்
பிடித்து நிறுத்துகிறான்.]
பைலார்க்கஸ்!
உனக்கென்ன.. நீ கேலிக்க்காரன்..
நீ.. சிரிப்பாய்..
ஆனால் அதற்காக எங்கெல்லாம்
தேடியலைந்திருக்கிறேன் தெரியுமா..?
உபநிஷத்தில் தேடினேன்.
கடைசியில் அன்று.. ஆம்.
என் மனைவி செங்கமலவல்லி இறந்துபோன அன்று சாந்தி கிட்டியது. பிறகென்ன..? வெண்கலக்கலப்பு..
அதற்கும்தான் எத்தனை பரீட்சை..!
எத்தனை ஏமாற்றம்.!!
அந்த ரூப சௌந்தர்யம் பெறுவதற்கு
ஆட்களைத் தேடினேன்.! தேடினேன்!!.. அதன் ஒரு சாயலை.. அவனிடத்தில்..
பத்து வருடங்களுக்கு முன்பு
சிரச்சேதம் செய்யப்பட்டானே.. நீலமலைக் கொடுங்கோலன்..
அவனிடத்தில்.. அவனது இடைதுவளுதல் கண்டேன்..
பரதேசி : நீ சொல்வதெல்லாம் புரிகிறது.. ஆனால்
என்ன சொல்ல வருகிறாய் என்பதுதான் புரியவில்லை.
சாத்தன் : தெய்வம் என்று ஒன்று உண்டு பைலார்க்கஸ்.
தெய்வம் ஒன்று உண்டு. அதன் அர்த்தத்தை என் சிலை.. என் கைகள் வடித்த சிலை.. உணர்த்த
முடிந்தது என்றால்.. எனது பூர்வஜென்ம பலன்.. இந்தக் கைகளைப் பின்னாலிருந்து ஓர் அர்த்தமுள்ள
வஸ்து தூண்டாவிட்டால்.. அதைச் சாடித்திருக்க முடியுமா?
பைலார்க்கஸ் : இல்லை சாத்தன்.. உன்னை ஏதோ பயம் ஆட்கொண்டிருக்கிறது.
உன் சாதனைமீதே உனக்கு நம்பிக்கை இல்லையா? நீதான் சிருஷ்டித்தாய்! உன் சாதனையை ஒப்புக்கொள்ளத்
தயக்கம் ஏன்? உன் கைகள் பட்டுமிளிரும் இந்தச் சிற்பத்தை நீயே ஒரு முறைபார். நல்லவெளிச்சத்தில்
பார்.
[ விளக்கை எடுத்து அருகில் கொண்டுவருகிறான். ‘பளிச்’
சென்ற வெளிச்சத்தில் விக்கிரகம் ஒளியைப்
பாய்ச்சுகிறது. ஒற்றைக்காலைத் தூக்கி நடனம்
புரியும் பாவனையில் , ஆள் உயரத்தில் மனித விக்கிரகம், விரிந்த சடையும்.. அதரத்தில் தோன்றிய அபூர்வ புன்னகையும், மனத்தில் அலைமேல் அலை எழுப்பும் சிலை. மூவரும்
சிலையாக நிற்கின்றனர்]
பரதேசி :
(தன்னிச்சையாக)
குனித்தபுருவமுங் கொவ்வைச்
செவ்வாயிற் குமிண் சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போல்
மேனியிற் பால்வெண்ணீறும்
இனித்தமுடன் எடுத்த பொற்
பாதமும் காணப்பெற்றால்
மனித்தப்பிறவியும் வேண்டுவதே
இம் மாநிலத்தே..
சாத்தன் : சுவாமி! நீங்கள் சொல்வதன் அர்த்தம்..
பைலார்க்கஸ் : சாத்தனே! அவர் சொல்வது சரிதான்.. இது கலையா..?
இல்லை சிருஷ்டி.. ஆம் உன் சிருஷ்டி.. சரி.. உன்னை ஒன்று கேட்கட்டுமா.,, ?
சாத்தன் : கேள்.. பைலார்க்கஸ்.. தயக்கம் எதற்கு..?
பைலார்க்கஸ் : இதை என்ன செய்யப்போகிறாய்..?
சாத்தன் : இந்தக் கேள்விக்காகத் தயங்கியது சரிதான்.
அர்த்தமற்றது இந்தக்கேள்வி. என்ன செய்ய முடியும்? அரசன் எழுப்பும் கோயிலுக்குத்தான்.
வேறெதற்கு..?
பைலார்க்கஸ் : கோயிலுக்கா..? என்ன அசட்டுத்தனம் இது. அரசனுடைய
அந்தப்புர நிர்வாண உருவங்களின் பக்கத்தில் வைத்தால்கூட அதற்கு அர்த்தம் உண்டு. உடைத்துக்
குன்றின்மேல் எறிந்தாலும் அந்தத் துண்டுகளுக்கும் அர்த்தம் உண்டு; ஜீவன் உண்டு. ஆனால்
கோயில் மூலவிக்கிரகமாகிவிட்டால்..
சாத்தன் :
போதும் பைலார்க்கஸ்.. உனது வெறிபிடித்த கொள்கைகளுக்கு யவனம்தான் சரி.. அகஸ்டஸ்..
அந்த உங்கள் சக்கரவர்த்தி.. அவனுக்குத்தான் சரி. உனது பேத்தல்..
பைலார்க்கஸ் : எது பேத்தல்.. என் பேச்சா.. ? இதற்குக் காலம்தான்
பதில் சொல்லவேண்டும். நான் வருகிறேன்.
பரதேசி : பைலார்க்கஸ்.. நீ கோபம்கொள்வதில் அர்த்தமே
இல்லை. சாத்தனாரே! உங்கள் முடிவு சரியான முடிவுதான். அது இருக்கவேண்டிய இடம் அரசன்
எழுப்பும் ஆலயம்தான். உமது லட்சியத்திற்கு அரசனின் கோரிக்கை சரியான முடிவுதான். (தனியாக வந்து)
இனி இந்த ஜைனர்களும் பௌத்தர்களும்
எப்படித்தலை தூக்குகிறார்கள் என்று பார்ப்போம்.
சாத்தன் : சுவாமி அப்படியென்றால்..?
பரதேசி : அவர்களைப் பூண்டோடு அழிக்க உன் சிருஷ்டி
ஓர் ஆயுதம்.
சாத்தன் : அவ்வளவு வலிமை இருக்கிறதா எனது படைப்புக்கு?
பரதேசி : வலிமை எங்கிருந்து வரும்? நாம்தான்
அளிக்கவேண்டும்.
சாத்தன் : நீங்கள் கூறுவதன் அர்த்தம்.
பரதேசி : அதுதான் அர்த்தம்.. சிலையின் வலிமையை..
ஸ்தலத்தின் கீர்த்தியை..அவதாரத்தின் மேன்மையை.. புரியவைப்பதுதானே என்போன்றோரின் பணி.
எங்களின் பணி.. பரந்தாமனின் பாதம் போற்றுவது மாத்திரமல்ல. பரந்தாமனைப் பிறக்கவைப்பதும்
தான்.
சாத்தன் : பிறக்கவைப்பது..! புரியவைப்பது!! யாருக்கு...
? பைலார்க்கஸுக்கா?
பைலார்க்கஸ் : நான் ஏற்கெனவே அறிந்திருக்கிறேன். சிலைக்கு வலிமையை
எப்படி அளிப்பீர்கள் என்றும் எனக்குத்தெரியும்.
சாத்தன் : உனக்குத் தெரியுமா..? என்ன தெரியும்...?
பைலார்க்கஸ் : ஆம் தெரியும்..? குதவாயில்
குத்தி பிருஷ்டத்தைப் பிளந்து
கழுமரத்தைக் கடவுளாக்குவீர்கள். முலையறுத்தும்
மூக்கறுத்தும் முப்பிடாதியம்மனை முளைக்கச் செய்வீர்கள்.
பட்டி தொட்டிதோறும் பரம்பொருள்
பிறந்ததென்றும்
பாவையை மணந்ததென்றும் புராணங்கள்
புனைந்துவைப்பீர் மாற்றானின்
மனைபிடுங்க மகிபாலன் பிறந்த இடம் மச்சுவீட்ட்டுக் கூரையென்பீர். உனக்குத்தெரியாமல்
இருக்கலாம் சாத்தா..
எனக்குத்தெரியும் இந்தப் பண்டாரங்களின் வேலை எனக்குப் புரியும்
இந்தச் சித்தர்களின் வேலை..
சாத்தன் : நண்பனே ! போதும்..
நீபுனைவுகளில் இறங்காதே...
சுவாமி..! நாம் வலிமையை அளிப்பது என்றீர்களே! நீங்கள் சொல்வது
உண்மையென்றால்.. எல்லாம் அவன் செயல்
பரதேசி :( சமாளித்து) ஆம்.. எல்லாம் அவன் செயல்..
அவன் செயல்தான். வல்லமை தருபவனும் அவனே! வல்லமையாய் இருப்பவனும் அவனே. அவனே வல்லவன்.
சாத்தன் : ஆம்.. எல்லாம் அவனே! வல்லமை தருபவனே, வல்லமையாய் இருக்கிறான். அவனே.
பைலார்க்கஸ் : சாத்தனே! நான் வருகிறேன். வெறிபிடித்த பரதேசியின்
கொள்கைகளுக்கு நீயும் அடிமையாகிவிட்டாய். மனித ரத்தம் வேண்டும் இறைவன் இந்தச் சிலையில்
ஏறட்டும்; நான் வருகிறேன்.
சாத்தன் : நண்பனே! பைலார்க்கஸ்.. இவ்வளவு கோபமா
உனக்கு? எங்கே போகிறாய்?
பைலார்க்கஸ் : வெறிபிடித்த உங்களோடு வாதம் செய்வதற்குக் கடல்
அலைகளோடு பேசிக்கொண்டிருக்கலாம். இந்த மனிதர்களைவிட அந்தக் கடலுக்கு எவ்வளவோ புத்தியிருக்கிறது.
உயிர்களைப் பலிவாங்கும் தாகம் அதற்கில்லை.
( பைலார்க்கஸ் கோபமாக வெளியேறுகிறான்)
பரதேசி : பைலார்க்கஸ்..! ( அழைத்தபடியே பின் தொடர்கிறான். ஒளிமங்குகிறது.
சாத்தன் சிலையாக அமர்கிறான்)
காட்சி: 2
[கடல் அலைகளின் ஓங்காரம் ஓசை...
முதுகைக்காட்டியபடி பைலார்க்கஸ் அமர்ந்திருக்கிறான். அங்கே வந்து]
பரதேசி : சிவாய நமஹ ( ஓம் சிவாய நமஹ என்பதின்
குரல் வெளியே வராமல்) என்ன யவனரே! தனிமையில் அமர்ந்துவிட்டீர். உமது சித்தம் ஒன்றுமற்ற
பாழ்வெளியில் லயித்திருக்கிறதோ..? நான் நேற்றுச் சொன்னது உங்களுக்குப் பதியவில்லையா..?
எல்லாம் மூலசக்தியின் திருவிளையாடல்.. எல்லாம் அதன் உருவம்.. கொல்லிப்பாவையும் அதுதான்.
குமரக்கடவுளும் அதுதான்.. எல்லாம் ஒன்றில் லயித்தால்.
பைலார்க்கஸ் : உமது தத்துவத்திற்குப் பதிலாக ஒரு கிண்ணம் திராட்சை
மது எவ்வளவோ மேலானது. அதுவும் ஸைப்பிரஸ் தீவின் திராட்சை..
பரதேசி : பைலார்க்கஸ்.. ! நீ என்னதான் நினைத்துக்கொண்டிருக்கிறாய்..
பைலார்க்கஸ் : அதோ போகிறானே.. அந்தக் காப்பிரி... அவனும் எதோ
கனவைத்தான் .. நம்புகிறான்..
பரதேசி : நான் சொன்னது வெறும் கனவு ...? கற்பனை...
? என்றா சொல்கிறாய்.
பைலார்க்கஸ் : உமது முதல் சூத்திரத்தை ஒத்துக்கொண்டால் உமது
கட்டுக்கோப்பில் தவறு கிடையாதுதான்.
பரதேசி : அப்புறம் என்ன?
பைலார்க்கஸ் : அதை எப்படி ஒப்புக்கொள்ள முடியும்? ஒவ்வொருத்தனுடைய
மனப்பிராந்திக்கும் தகுந்தபடி தத்துவம் ! எனக்கு அது வேண்டாம். நாளங்காடியில் திரியும்
உங்கள் கருநாடிய நங்கையும் மதுக்கிண்ணமும் போதும்.
பரதேசி : அப்பப்பா.. இங்கே இருக்கிற ஜைனப்பிசாசுகள்,
கபாலி வெறியர்கள்கூடத் தேவலை. உம்மை யார் இந்த அசட்டு மூட்டையைக் கட்டிக்கொண்டு யவனத்திலிருந்து
வரச்சொன்னது.
பைலார்க்கஸ் : உம்மைப்போன்றவர்கள் இருக்குமிடத்தில் என்னைப்
போன்றவர்கள் இருந்தால்தான் அர்த்தமுண்டு. (சிரித்துக்கொண்டே) எங்கள் ஜூபிடரின் அசட்டுத்தனத்திற்கும்
உங்கள் நாட்டுக்கந்தனின் அசட்டுத்தனத்திற்கும் பெரிதாக வித்தியாசம் ஒன்றுமில்லை.
பரதேசி : சிவசிவா...
பைலார்க்கஸ் : பரதேசியாரே..! உங்களை ஒன்று கேட்கிறேன். பதில்
சொல்லுங்கள்..
பரதேசி : என்ன?
பைலார்க்கஸ் : கடவுளும் அரசனும் இல்லாமல் உங்கள் ஊரில் ஏதாவது
விழா இருக்கிறதா?
பரதேசி : ஏன் இருக்கவேண்டும்?
பைலார்க்கஸ் : ஏன் இல்லை என்று பதில் சொல்லுங்கள்.
பரதேசி : இல்லை என்பது உண்மைதான். கடவுளும்
அரசனும் இல்லை என்றால் விழாக்களுக்கு யார் வருவார்கள்?
பைலார்க்கஸ் : உண்மையைச் சொல்லுங்கள். அதுவா உங்கள் நோக்கம்? வேறு எதுவும் மக்கள் மனதில்
இடம்பிடித்துவிடக் கூடாது என்பதுதானே உங்கள் நோக்கம்.
பாதையோரத்தின் கடவுள்கள்.. அரசனுக்குப் பாத பூசைகள்.. திருவுடை மன்னனைக்கண்டால்..
திருமாலைக்கண்டேன்.. இரண்டுமில்லாமல்
எதுவுமில்லை.. என்னே உங்கள் திட்டம்.. ஆட்டுமந்தைகளாக்கும் அருமையான அறிவு..
பரதேசி : வழிகாட்டுதல் வேண்டாமா?
பைலார்க்கஸ் : யாருக்கு யார் வழிகாட்டி?
பேசும் திராணியற்றவர்கள்
எப்படித் திசை சொல்லமுடியும்..? வெளிச்சக்கதிரை
விழுங்காதவர்கள் இருட்டுப்போர்வையை எப்படி விலக்கமுடியும்?
பரதேசி : எங்கள் கடவுளர்களையும் அரசர்களையும்
ஊமைகளென்றும் குருடர்களென்றும் சொல்கிறாய்...
பைலார்க்கஸ் : ஊமைகளுக்கும் குருடர்களுக்கும்கூட வேறுவிதமான
அறிவும் உணர்வும் உண்டு.
பரதேசி : இறைவா இவனிடமும் பாசத்தை வைத்துள்ளாயே..
அதுவும் உன் விளையாட்டுத்தான். ( விபூதியைப் பூசியபடி) சரி.. சரி.. நாளங்காடிப்பக்கம்
போகிறேன்.. வருகிறாயா? அப்படியே சாத்தனையும் பார்த்துவிட்டு வரலாம்..
பைலார்க்கஸ் : நாளங்காடிப் பக்கம் வருகிறேன். ஆனால் மனம் மாறாத
சாத்தனை இனிநான் பார்க்கப்போவதில்லை.
பரதேசி : அப்படியொரு பிடிவாதமா? உங்களின் நீண்டநாள்
நட்பு அவ்வளவு சுலபத்தில் நின்று போகுமா... ?
பைலார்க்கஸ் : ஆம் .. நீண்ட நாள் நட்பு... நானும் சாத்தனும்
ஒருசாலை மாணாக்கர்கள்.. சாத்தனுக்கு என்னைவிட பத்துவயதுக்குமேல் கூடுதல். .. என்றாலும்
நண்பர்கள்.. யவனத்திலிருந்து படிக்க வந்த அந்த நாட்களில்..
[ ஒளி குறைந்து.. குறிப்பிட்ட
இடத்தில் வெளிச்சம் .. சாத்தன் அமர்ந்திருக்க ஒரு பெண் நடன முத்திரைகள் தீட்டப்பட்ட
திரைச்சீலைகள் ஒழுங்கின்றி இருக்கின்றன. அவளது முத்திரைகள் தீட்டப்பட்ட திரைச்சீலைகள்
ஒழுங்கின்றி இருக்கின்றன. அவளது முத்திரைகளைப் பார்வையிடும் சாத்தன் தனிமையில் நின்று
கண்ணை மூடி யோசிக்கிறான். அப்பொழுது செருமல் சத்தம் கேட்கிறது. கண்விழித்துப் பார்க்கும்..
சாத்தன் : யாரது..? பைலார்க்கஸா.. வா... உன்னைத்தான்
எதிர்பார்த்தேன்.
பைலார்க்கஸ் : (அபிநயத்திலிருந்து விடுபட்டவளைப் பார்த்து)
யாரது? அவள் நம் நடனப்பள்ளி மாணவி செங்கமலவல்லி அல்லவா?
சாத்தன் : ஆம்.. செங்கமலவல்லி நாச்சியார்தான்..என்
கலைத்தேடலின் போக்கில் சேர்ந்துகொள்ளப்போகும் இன்னொரு பறவை. எனது ஜோடிப்பறவை..
பைலார்க்கஸ் : சேர்ந்து பறக்குமோ? அல்லது பறப்பதை மறக்கடிக்குமோ..
? காலம்தான் பதில் சொல்ல வேண்டும் (சிரிக்கிறான்)
சாத்தன் : என் மீது சந்தேகமா?
பைலார்க்கஸ் : சாத்தா...! நீயொரு நல்ல கலைஞன். உன் லட்சியத்தை நிச்சயம் அடைவாய். ஆனாலும் உன் எல்லைகள்
குறுகிக்கொண்டே வருகிறதோ என்று அச்சமாக இருக்கிறது.
சாத்தன் : எதனால் இப்படிச் சொல்கிறாய்? செங்கமலவல்லியின்
நட்பு, எனது கலைத்தாகத்தைக் கட்டுப்படுத்திவிடும் என்றா சொல்கிறாய்..
பைலார்க்கஸ் : நான் சொல்வதற்கு அப்படிப் பொருள் இல்லை.. நீயொரு
உன்னதக்கலைஞனாக - மக்களோடு ஐக்கியம் கொண்டவனாக - மக்களிடமிருந்து கலை ரூபங்களைக் கொண்டுவருபவனாக
மலரவேண்டும். உன் ஊற்றுக்கண்களைத் தேடும் பயணத்திற்கு எதுவும் தடையாகிவிடக்கூடாது என்பதுதான்
என் பயம்.
சாத்தன் : புரிகிறது நண்பனே! சைத்ரிகனாயிருந்த
நான் இன்னொரு பரிமாணத்தை விரும்பினேன். சிற்பக்காரனானேன். முப்பரிமாண நிலையை வடித்தெடுத்தேன்.
என் எல்லை விரிந்தபோது நகல் எடுக்க விரும்பினேன். அசலாக இருப்பவள்தான் இந்தச் செங்கமலவல்லி.
பைலார்க்கஸ் : அசலை நகலெடுப்பதோடு நின்றுவிடக்கூடாது உன்கைகள்.
இதுதான் என் விருப்பம். அசல்களை நீயே உருவாக்கவேண்டும். அலையெழுப்பும் கடல்பரப்பில்
பாய்ந்தோடும் மரக்கலங்களைப் பார். அங்கே மனிதனின் விரியும் தோள்கள். பச்சைப்பசிய வயல்கள்.
நீண்டுநெளிந்தோடும் பாதைகள். விண்ணைத்தொடும் கோபுரங்கள்.. மண்ணைப் பிசையும் கைகளின்
முத்திரைகள். எங்கும் பளிச்சிடும் வியர்வைத்துளிகள், இங்கெல்லாம் சரிநிகர் சமானமாய்த்
தோள்கொடுக்கும் பெண்ணுருவம். இவையெல்லாம் உன் கைகளில் புதுப்பிறவு எடுக்கவேண்டும்.
சாத்தன் : முயற்சி செய்கிறேன். என் பயணம் திசைமாறுமா
என்பது தெரியவில்லை.
பைலார்க்கஸ் : சாத்தன்..! நான் வருகிறேன். நீ உன் வேலையைத்
தொடரலாம். [திரும்பவும் சலங்கை ஒலி.செங்கமலவல்லியின்
நடனமுத்திரைகள். சாத்தனின் ஓவிய முயற்சி. ஒளி குறைந்து பரவும்பொழுது பைலார்க்கஸும்
பரதேசியும் நடந்துகொண்டிருக்கின்றனர்]
பரதேசி : அப்படியென்றால் உன் விதண்டாவாதம் இன்றுநேற்று
தொடங்கியதில்லை. தமிழக மண்ணை மிதித்த காலந்தொட்டே நடக்கிறது. ஆனால் நேற்றுவரையிலும்
உன் ஜம்பம் பலிக்கவில்லை. அப்படித்தானே..?
பைலார்க்கஸ் : அப்படிச்சொல்லிவிட முடியாது. எனக்கு இன்னும்
நம்பிக்கை இருக்கிறது. சிலைப்பிரதிஷ்டைக்கு இன்னும் ஒருவாரம் இருக்கிறதே. அதற்குள்
சாத்தன் மனம்மாறி என்னைத் தேடிவருவான். பிரதிஷ்டை முடிந்துவிட்டால் என்னை அவன் காணவேண்டியதில்லை.
ஆம்! அப்புறம் பார்ப்பதில் என்ன அர்த்தம்.
பரதேசி : சரியான பைத்தியக்காரனாய் இருக்கிறாயே..
என்னதான் சொல்கிறாய்..
பைலார்க்கஸ் : இப்பொழுது உங்களுக்குப் புரியாது பரதேசியாரே!
சரி.. நீங்கள் சாத்தனிடம் போங்கள். நான் நாளங்காடியில் வேலைமுடித்து என் இருப்பிடம்
போகிறேன். ( ஒளிகுறைகிறது)
காட்சி:3 [ மெலிதான ஒளியில் பலவிதமான சத்தங்கள்,விழாவை எதிர்கொள்ளும்
குரல்கள், ஒளிசூரியனின் வரவுபோல் வர.]
அறிவிப்பு :
( பறையொலியின் ஓங்காரத்திற்குப் பின்)
இதனால் பொதுமக்களுக்கு அறிவிப்பது என்னவென்றால்... அரசன் எழுப்பும் அற்புதக்கோயிலின்.. சிலைப்பிரதிஷ்டை
விழா.. நாளை தொடங்குகிறது
( ஆரவார உற்சாக ஒலிகள்.
முடிவில் கேள்வி -பதில் பாணியில்) இதாரு கொம்பு....? ஐயன் கொம்பு..
ஐயன் எங்கே...? பூப்பறிக்கப்போயிட்டான்... பூ எங்கே... ? தண்ணியிலெ
கெடக்கு.. தண்ணி எங்கே....? ஆடுமாடு குடிச்சிடுச்சு... ஆடுமாடு எங்கே...? கள்ளன் கொண்டுபோயிட்டான்..... கள்ளன் எங்கே.... ? மரத்துமேலே இருக்கான்.....
மரமெங்கெ இருக்கு...? ஆத்தங்கரையிலெ இருக்கு.....
ஆறெங்கெ இருக்கு.... ? மலையிலெ இருந்து இறங்குது..
இறங்கி எங்கெ போகும்...?
கடலிலெ போயிக் கலக்கும்..
வெட்டவா...? குத்தவா...?
வெண்ணித்தண்ணி ஊத்தவா...?
(கூட்டம் நிகழ்ச்சிகளை வேடிக்கை பார்த்தபடி நடக்கிறது. அதில் பரதேசியும் ஒருவர்)
குழு.1 : ஐலேசா.. ஐலசா..
குழு.2 : ஐலேசா.. ஐலசா..
குழு.1 : ஐலசா.. ஐலசா.. ஐலேசா..
குழு.2 : ஐலசா.. ஐலசா.. ஐலேசா...
குழு.1 : கடல்புக்கு உயிர்கொன்று வாழ்வர்
நின்னய்யர்
குழு.2 : ஐலசா.. ஐலசா.. ஐலேசா.....
குழு.1 : உடல்புக்கு உயிர்கொன்று வாழ்வை மன்நீயும்
குழு.2 : ஐலசா.. ஐலசா.. ஐலேசா.....
குழு.1 : மிடல்புக் கடங்காத வெம்முலையோ பாரம்
குழு.2 : ஐலசா.. ஐலசா.. ஐலேசா...
குழு.1 : இடர்புக்கு இடுகும் இடைஇழவல் கண்டாய்..
குழு.2 : ஐலசா.. ஐலசா.. ஐலேசா...
குழு
1,2 : ஐலசா.. ஐலசா.. ஐலேசா... (
பாடல், அதற்கேற்ப ஆடல்)
வாழியவன் தன்வளநாடு மகவாய் வளர்க்குந்தாயாகி
ஊழியுய்க்கும் பேருதவி ஒழியாய்வாழி காவேரி
ஊழியுய்க்கும் பேருதவி ஒழியாதொழுகல் உயிரோம்பும்
ஆழியாள்வான் பகல்வெய்யோன் அருளேவாழி காவேரி.
[ பரதேசி தனியனாக மேடையில்
இருக்கப்பாடல் மாத்திரம் கேட்கிறது]
அஞ்சுகிளி ரெண்டெழுதி அம்மா எனும் பேரெழுதி
கொஞ்சுகிளி ரெண்டெழுதிக் கொண்டுவந்தார் ஆசாரி
கொண்டுவந்த ஆசாரிக்கு என்ன தந்தார்.. ஏது தந்தார்
(2)
இந்தவரி மட்டும் திரும்பத்திரும்ப
ஒலித்துக்குறைகிறது.
பரதேசி : இந்த விழாவின் நாயகனே சாத்தன்தான்.
அவன் வாழ்க என்று ஒருவர்கூடச் சொல்லவில்லை. விழா எடுத்தால் போதும். “வாழியவன்றன் வளநாடு”
‘மன்னவன் வாழி’ கோஷம் கிளம்பிவிடும். மக்கள் கூட்டம் மந்தைகளின் கூட்டமா? சாத்தனை அறியுமா?
சாத்தனின் சிற்பத்தை அறியுமா? ( கொண்டுவந்த
ஆசாரிக்கு என்ன தந்தார்? ஏது தந்தார்? தூரத்தில் கேட்கிறது. அவனுக்குள்ளேயே பேசிக்கொண்டு
போகிறான். சாத்தனின் இருப்பிடத்தை அடையும்பொழுது சாத்தன் இல்லை. ‘பளிச்’சென்று வெளிச்சத்தில்
சிற்பம் சிரிக்கிறது. பரதேசி தேடிப்பார்த்துவிட்டு அங்கேயே உட்கார்ந்துவிடுகிறான்.
ஒளிகுறைந்து மங்குகிறது. ஒளி குறைந்து திரும்ப வரும்பொழுது பரதேசி கிளம்பத்தயாராகிறான்.
ஆனால் சாத்தன் வந்து விடுகிறான்.)
சாத்தன் : வரவேண்டும் சுவாமி! வந்து நீண்டநேரம்
ஆகிவிட்டதோ...?
பரதேசி : அப்படியொன்றும் அதிகநேரம் ஆகவில்லை.
சாத்தனாரே.. விழா ஏற்பாடுகளில் திக்குமுக்காடிப் போன நகரத்தில் நடந்துவருவதே சிரமமாகிவிட்டது.
வந்தவுடன் களைப்பு. அப்படியே அமர்ந்து விட்டேன்.
சாத்தன் : ஆம். கவனித்தேன். நகரம் திக்குமுக்காடித்தான்
இருக்கிறது. எங்கும் விழாக்கோலம். எங்கும் மகிழ்ச்சிவெள்ளம்.
( குரல்கள் மட்டும்)
வெட்டவா? குத்தவா..? வெண்ணித் தண்ணி ஊத்தவா..? பரதேசியாரே! நாளை என் சிற்பம்?
பரதேசி :
நிச்சயமாக நாளை உங்கள் சிற்பம் உயிர்பெறப் போகிறது. மக்களின் ஏகோபித்த பாராட்டு
மழையில் நனையப்போகிறது. அதில் என்ன சந்தேகம்?
(பாடத்தொடங்குகிறார்)
வானாகி மண்ணாகி வளியாகி
ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்
கோனாகி யானெதென்ற வரவரைக்கூத்தாட்டு வானாகி நின்றாயே
என்சொல்லி வாழ்த்துவனே!
சாத்தன் : ( பாடலில் லயித்துச் சாந்தமானவனாய்)
ஐயோ! இது என்ன! வீணான சந்தேகங்கள்.. எல்லாம் அந்தப் பரம்பொருளின் ஆடுவிப்பு.
பரதேசி : எல்லாம் நன்மைக்கே.. ! சாத்தனாரே!!..
வாருங்கள்.. அமைதிகொள்ளுங்கள்.. நான் வருகிறேன்.
[ பரதேசி வெளியேறுகிறார். சாத்தன் தூக்கத்தில் இருக்கிறான். கிராமப்புற விழாவில்
பூசாரியின் ஆட்டம். பலியிடலுக்கான துள்ளல் இசை ஒலிக்கிறது. சாத்தனின் உடல் தூக்கிப்போடுகிறது]
காட்சி:
3
[ இருட்டும் வெளிச்சமும்
மாறிமாறி வருகிறது. கனவுகாணும் நிலை. பின்னணியில் மணியோசைகள் பலவற்றின் ஓலம். கோயில்
கதவு படீரென்று திறந்து மூடுகிறது. முதல் எதுவும் இல்லை. கதவின் அசைவு நிற்கும்போது
உள்ளே சிலை. சிலை இருளில் இருக்கிறது. சாத்தன் உள்ளே போகிறான்]
சாத்தன் :
என்ன? இதுவா பழைய சிலை. உயிரில்லை.. கவர்ச்சியில்லை..புன்னகையில்லை.... எல்லாம்
மருள்.. எல்லாம் இருள்.. எல்லாம் மருள்
( வாசலில் பல உருவங்கள், குனிந்து வணங்கியபடியே..
வருகிற ஒவ்வொருவரும்..)
எனக்கு மோட்சம்.. எனக்கு
லட்சம்.. எனக்கு மோட்சம்.. எனக்கு லட்சம்..
எனக்கு மோட்சம்.. எனக்கு லட்சம்.. எனக்கு மோட்சம்.. எனக்கு லட்சம்..
சாத்தன் : ஒருத்தர்கூட அந்தச் சிலையைப் பார்க்கவிலையே!
ஒருத்தர்கூட.. இதற்காகவா.. நான் உருவாக்கினேன். சிருஷ்டி இல்லையா. இவர்களுக்கெல்லாம்
தேவையானது
(திரும்பவும் குரல்கள்)
எனக்கு மோட்சம்.. எனக்கு
லட்சம்.. எனக்கு மோட்சம்.. எனக்கு லட்சம்..
எனக்கு மோட்சம்.. எனக்கு லட்சம்.. எனக்கு மோட்சம்.. எனக்கு லட்சம்..
சாத்தன் : நான் உண்டாக்கின சிலை இவர்களுக்கு மோட்சம்
தருமா..? உயிரற்ற மோட்சச்சிலையே.. உடைக்கிறேன் உன்னை.. போடு.. உடை.. போடு.. உடை.. ஐயோ..
தெய்வமே உடையமாட்டாயா..?
உடைந்துவிடு.. நீ. உடைந்துபோ..
அல்லது உன் மழு என்னைக்கொல்லட்டும் அர்த்தமற்ற கூத்து..
(இடி இடிப்பதுபோல் சிலை அசைய ஆரம்பிக்கிறது. சாத்தனின் ஆலிங்கனத்தில்.. அவன்
ரத்தத்தில் தோய்கிறது. தூங்கும் சாத்தன் திடுக்கிட்டு விழிக்கும்பொழுது கோழிகூவும்
சத்தம். சூரியனின் செங்கதிர்கள் வரத்தொடங்கும் நேரம்)
சாத்தன் :
என்ன கனவு? பேய்க்கனவு..? நிஜமா..? பலிக்குமா... ? பைலார்க்கஸ் எங்கே போயிருப்பான். இறந்தபின்
எங்கே போவான்.. மோட்சத்துக்கா நரகத்துக்கா? நான்
இறந்தால் எங்கே போவேன். நான் எங்கே இருக்கிறேன்.. ( அவன் சிலையாக அமர அவன்மீது மெல்ல இருள் கவிகிறது. பின்னணியில்) நல்லதோர்
வீணைசெய்தே - அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
என்ற பாடலின் வரிகள் புல்லாங்குழல்
இசையாகக் கேட்கிறது.
குழுவினார் : நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன்
நாலாறு மாதமாய் குயவனை வேண்டி
கொண்டுவந்தானொரு தோண்டி -
அதைக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி
(3)
( (மிதவேகத்தில்
பாடியபடி நடனமிட்டுச்செல்கின்றனர்)
சாத்தன் : விடமாட்டேன்.. இல்லை விடமாட்டேன்..
என் சிற்பம் எங்கே? நான் செய்த
சிலை எங்கே? நரகத்தில் தள்ள அனுமதிக்கமுடியாது.
(வலதுபுறமிருந்து)
வாழியவன்றன் வளநாடு மகவாய்
வளர்க்கும் தாயாகி வாழ்க! வாழ்க!மன்னவன்
வாழ்க!
(இடதுபுறமிருந்து)
அவனி முழுவதும் புகழ்பரப்பி ஆலயம் கொண்ட மன்னவன் வாழி! வாழ்க! வாழ்க!சக்கரவர்த்தி வாழ்க! திரிபுவனச் சக்கரவர்த்தி வாழிய
(கோஷமிடும் குரல்கள் கேட்கின்றன)
சாத்தன் : எதைவிடமாட்டேன்? அனுமதிக்க நான் யார்?
என் சிலை என்னிடமா இருக்கிறது? ஐயோ பைலார்க்கஸ்! நீயெங்கே? எங்கு போனாய்?.... உன்னை எங்கே தேடுவேன்.. பைலார்க்கஸ் நீ சொன்னபடி
உடைத்துக் குன்றின்மேல் எறிந்திருக்கலாம்.. ஒவ்வொரு துண்டும் அர்த்தம் தந்திருக்கும். ஆம்.. சிலைப்பிரதிஷ்டையைப் பார்க்க இருக்க மாட்டேன்
என்றாயே? ஐயோ எங்கே போயிருப்பான்..
[ தேடுவதுபோல் ஓடுகிறான்.
ஒளிகுறைகிறது. அவனது பிம்பங்கள் இங்குமங்கும் அலைகிறது. இரண்டு பிம்பங்கள் உரசுகின்றன.
ஒன்றையொன்று தொட்டுக்கொள்கின்றன.
ஒளிகுறைந்து இருளாகின்றது.]
கருத்துகள்