வெய்மூத்திலிந்து - அந்தக் குடியிருப்பிலிருந்து- விடைபெறலாம்

பெருஞ்சாலையிலிருந்து விலகி இடதுபுறம் திரும்பிச் செல்லும் சாலை 200 மீட்டர் தூரத்தைக் கடக்கும்போது அடர்வனப்பகுதி தொடங்குகிறது. உள்ளே நுழைந்த தடங்கள் இல்லாமல் தடுக்கும் மரங்கள் உயர்ந்து நிற்கின்றன. இரவு நேரத்தில் பறவைகளின் ஓசையோடு மிளாவின் ஓசையையும் கேட்கலாம். நுழையும்போது இடதுபுறம் ஒரு டென்னிஸ் மைதானம். அதனைத் தாண்டினால் உட்கார்ந்து பேசிக்கொள்ளச் சாய்வு மேசைகள். வலதுபுறம் வண்ணப்பூச்செடிகளோடு கூடிய சிமெண்ட் பாதைகளுக்குள் தோட்டமொன்று பிரிக்கப்பட்டிருக்கிறது. குழந்தைகள் சிறுவண்டி ஓட்டிட ஒரு தளம். அதனருகில் ஒரு நீச்சல் குளம். ஒவ்வொரு வீட்டிலிருப்பவர்களுக்கும் ஒரு கார் நிறுத்துமிடம். அவர்களைப் பார்க்கவருபவர்களுக்காக 20 கார்கள் நிறுத்துமிடங்கள். பின்புறம் சுற்று நடக்க ஒருசாலை. அச்சாலையில் வாகனங்கள் வரத்தடை உள்ளது. கார்களை அவரவர் விருப்பப்படி நிறுத்த முடியாது. அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட எண்களில் தான் நிறுத்தவேண்டும்.

குடியிருப்பின் வீடுகளில் எவ்வளவுபேர் இருப்பார்கள் என்று கண்டறிய முடியாது. வருவதும் போவதும் தெரியாமல் வருகிறார்கள்; போகிறார்கள். 200 - 250 பேர்களுக்கும் மேல் போகாது என்பது என் கணக்கு. சாளரத்தின் வழியாகப் பார்க்கும்போது தோட்டம், நீச்சல் குளம், குழந்தைகள் விளையாடுமிடம் என மொத்தமாக 20 பேருக்குமேல் பார்த்ததில்லை. ஒருவீட்டில் அதிக எண்ணிக்கை என்றால் நான்காக இருக்கலாம். தனி மனுசியாக வாழும் பெண்களும் அந்தக் குடியிருப்பில் இருக்கிறார்கள். வீட்டின் பின்புறம் அமர்ந்து புகைத்துக் கொண்டே இருக்கும் அந்தப் பெண்ணுக்கு இந்தியா என்றால் அன்னை தெரேசா தான். ஆண்களில் தனிக்கட்டைகளும் இருக்கின்றனர். குழந்தைகள் இல்லாத முதியவர் இணைகளும் இருக்கின்றன. அவர்களோடு பேசினால் மகிழ்ச்சியோடு பேசுகிறார்கள். மேற்கத்திய வாழ்வின் அந்தரங்கம் வெளிப்படையானதல்ல.அந்தரங்கத்தில் நுழையக் கூடாது என்ற கவனத்தில் அதிகம் பேசாமல் விடுவது நல்லது.

குடியிருப்புவாசிகளின் அன்றாட நடவடிக்கைகளைப் பார்த்தால் ஒருவிதத்தில் தனிமை விரும்பும் மேற்கத்திய வாழ்க்கையாக இருக்கிறது. இன்னொரு விதத்தில் இணைந்தே வாழவேண்டிய கூட்டு வாழ்க்கையாகவும் இருக்கிறது. அகவாழ்க்கையில் யாரும் நுழைந்து விடமுடியாத - நுளைந்துவிடக்கூடாத தனிமை. ஒருவர் வீட்டுச் சத்தம் இன்னொருவீட்டிற்குள் நுழைந்துவிடக்கூடாது. தொலைக்காட்சிகள் மென்னொலியில் அசைகின்றன. ஆறுமணிக்கு மேல் சட்னி அரைக்கும் மிக்ஸிச் சத்தமோ, கிரைண்டரின் அசைவியக்கக் கிறுகிறுப்போ வந்துவிடக்கூடாது.

உள்ளேயிருந்து வெளியே போகத்தடைகள் இல்லை. ஆனால் வெளியேயிருந்து அந்நியர்கள் உள்ளே வந்துவிட முடியாது. குடியிருப்புவாசி ஒருவரிடமிருந்து திறவுகோல் கிடைக்கவேண்டும். ஒவ்வொருத்தருக்கும் கட்டடத்தைத் திறக்கத் தனிச்சாவிகள். பிறகு வீட்டின் பூட்டிய கதவைத் திறக்கவும் அதே அனுமதி. அந்தக் குடியிருப்பில் குறைவானவர்களே சொந்தவீட்டுக்காரர்கள். பெரும்பாலானவர்கள் வாடகைக்குத் தான் இருக்கிறார்கள். வாடகையை வாங்கிக் கொண்டு, பொதுச்செலவுக்குப் பணம் தருகிறார்கள்

உரிமையாளர்கள். தோட்டம், நீச்சல் குளம், மின்சாரம், இணையம், தொலைக்காட்சி எனப் பலவற்றில் ஒரே தன்மை இருக்கிறது. துணிதுவைக்கவும் காயவைக்கவும் பொது எந்திரங்கள் தான். சமையலும் மின்சாரத்தில் தான். மொத்தப்பராமரிப்புக்குப் பொறுப்பாக ஒருவர் இருக்கிறார். கோடைகாலத்தில் மொத்தப் பராமரிப்பையும் அவரே பார்த்துப் பார்த்துச் செய்கிறார். அவரிடம் தகவல் தெரிவித்தால் போதும் சின்னச்சின்ன வேலைகளைச் செய்துவிடுவார். தேவைப்பட்டால், பணியாளர்களை அழைத்து வருவார்.

நாற்சந்தியிலிருந்து கிழக்குநோக்கிப் போகும் சாலை மட்டும் கடைவீதியைப்போலத் தோற்றம் தரக்கூடியது. தீயணைப்பு நிலையம் அழகிய அறிவிப்புப் பலகையோடு இருக்கிறது இரண்டு தேவாலயங்கள் எதிரெதிரே இருக்கின்றன. மருத்துவர், வழக்குரைஞர், தணிக்கையாளர், காப்பீட்டு முகவர் எனச் சேவைப்பிரிவினர்கள் ஒரே இடத்தில் இருக்கும் கட்டடம் அங்கே இருக்கிறது. முடி, நகம், தசை, உடல் கோலம் என ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக நிலையங்கள் இருக்கின்றன. எல்லாவற்றிலும் பெண்களே பணியாளர்கள். மது விற்பனை நிலையங்கள், குடிக்கும் விடுதிகள், வங்கிகள், சிறுகடை, பெருங்கடையெனப் பெண்கள் மட்டுமே வேலை செய்கிறார்களோ என நினைக்குமளவுக்குப் பங்களிக்கிறார்கள்.

பள்ளிகள் பெருஞ்சாலையிலிருந்து விலகி நிற்கின்றன. விளையாட்டு மைதானமாயினும், பூங்காவாயினும், நூலகமாயினும் சாலையிலிருந்து குறிப்பிட்ட தூரத்தில் உள்ளே போனபின்பு தான் தெரிகின்றன. சாலையில் இருக்கும் அறிவிப்புப் பலகைகள் வழியாகவே அவற்றை அறிந்துகொள்ளமுடிகிறது. வீடுகளைச் சுற்றிக் கெட்டிக் கட்டட வளாகங்களைப் பார்க்கமுடியவில்லை. சுற்றுச்சுவர்களாக மரங்களும் செடிகளுமே நிற்கின்றன. அழைத்தால் வந்துவிடும் காவல்துறை பாதுகாப்பை உறுதிசெய்து வைத்திருக்கிறது.


573,575 என்ற இரண்டு எண்களுக்குள் இருகட்டிடங்கள். ஒவ்வொரு கட்டடமும் மூன்று மாடிக்கட்டம். டகர வடிவில். மூன்று மாடிகளிலும் எதிரெதிராக இரண்டு வரிசையிலும் வீடுகள். மொத்தத்தில் அறுபதிலிருந்து எண்பது வீடுகள் இருக்கலாம். பின்புறத்தில் காற்று வாங்கும்விதமான பால்கனிகள். நடுத்தரவர்க்க வீடுகள். ஒரே அளவிலானவை. கணவன், மனைவி ஒன்றிரண்டு குழந்தைகளென வாழ்பவர்களுக்கான அளவில்.
பாஸ்டன் நகரின் தெற்கு வெய்மூத், அகன்ற வீதி, 573 இல் கழித்த பயண நாட்கள் நிறைவுபெற இருக்கின்றன. மகன் குடும்பம் அங்குதான் இருக்கிறது. மே, 3 இல் தொடங்கிய பயணம் ஜூலை 21 இல் முடிவடைகிறது. 80 நாட்களில் 25 நாட்கள் பாஸ்டன் நகரில் இல்லை. ஒருநாள் பயணமாகவும் சிலநாட்கள் பயணமாகவும் அமெரிக்காவின் பிறநகரங்களுக்குச் சென்று வரநேர்ந்தது வெளியில் சென்ற நாட்களில் கனடாப் பயணமாகச் சென்ற 13 நாட்களும் அடக்கம். பாஸ்டனில் இருந்த நாட்களில் பல தடவை அந்தப் பெரும் சாலையின் நாற்சந்திக்குச் சென்று ஒவ்வொரு நாளும் ஒரு திசையில் சென்று கிளைச்சாலையில் நுழைந்து வந்தேன். எந்த வீதியிலும் கூட்டமாக மனிதர்களைச் சந்திக்க முடியவில்லை. வாகனங்கள் ஒலியெழுப்பாமல் நழுவிக்கொண்டே போகின்றன. கட்டுப்பாடான வேகம். கவனிக்கப்படுவோம்; மீறினால் தண்டிக்கப்படுவோம் என்ற அச்சம் இருக்கிறது. எல்லா நேரமும் ஒரு இளம்பெண்ணோ, நடுத்தர வயது ஆணோ ஓடிக்கொண்டிருப்பதைப் பார்க்க முடிந்தது. கண்கள் சந்தித்துக்கொண்டால் புன்சிரிப்போடு வாயசைத்து முகமன் சொல்லிவிட்டே கடக்கிறார்கள். இந்தப் பழக்கமெல்லாம் உருவாக்கப்பட்டிருக்கிறது. 

மழலையர் பள்ளிகள்.

கூட்டுக்குடும்ப அமைப்பைத் துறந்து தனிக்குடும்ப அமைப்புக்குள் நுழையவேண்டிய நெருக்கடியை உருவாக்கியது முதலாளித்துவப் பொருளாதாரம். முதலாளித்துவப் பொருளாதாரத்தின் கருத்தியல் உருவாக்கத்தின் நல்விளைவுகளில் ஒன்று

பெண்களின் உரிமைகள் பற்றிய உணர்தல் நிலை. வீட்டு வேலைகளோடு முடங்குப் போகும்படி வலியுறுத்திய நிலமானிய அமைப்புக்கு மாற்றாக உருவான முதலாளித்துவம் பெண்களையும் சம்பளம்பெறும் பணிகளுக்குத் தயார்படுத்தியது. பெண்ணும் ஆணும் சம்பளம் பெறும் வேலைக்குச் செல்லும் சமூகக் கட்டமைப்பு உருவாக்கத்தோடு உருவானது மழலையர் பள்ளிகள்.
இந்தியாவிலும் அவை நிரம்பிக் டக்கின்றன.அன்னையின் அன்பையும் சகமனிதனோடு பழகவேண்டிய கட்டாயத்தையும், ஒவ்வொருவரின் தனித்தன்மையை அங்கீகரிக்கவேண்டும் என்ற உணர்வையும் உருவாக்கவேண்டும் என்பதைக் கற்றுத் தருவதுதான் மழலையர் பள்ளிகளின் முதல் நோக்கம். இந்நோக்கத்தோடு இணைந்தது கூட்டாக விளையாடுதலும் கூட்டாகப் பணிசெய்தலும். மழலையர் பள்ளிகளின் மூன்றாவது கடமைதான் எழுத்தும் எண்ணும் கற்றுத்தருதல். சிறுவயது முதலே கற்பித்தலில் அக்கறையோடு இருக்க்வேண்டும். இந்தியாவில் குழந்தைகளைப்பராமரிக்கும் பணியைச் செய்கின்றன மழலையர் பள்ளிகள். மாணவர் சேர்க்கைக்குக் கட்டுப்பாடு கிடையாது. குழந்தைகளுக்குப் போதிய இடவசதி கிடையாது. ஆசிரியர்களுக்குப் போதிய பயிற்சி கிடையாது. பெற்றோர்களின் வேலைநேரத்தில் பார்த்துக்கொள்ளும்

பொறுப்பை எடுத்துக்கொண்டு அதற்குக் கூலிபெறும் நிறுவனங்களாக இருக்கின்றன.மழலையர் பள்ளிகளுக்கான அடிப்படை நோக்கத்தை உணர்ந்தவர்களாக இருப்பதில்லை. யோகா, கராத்தே, இசை வகுப்புகள் என அனைத்தையும் பாடத்திட்டத்தின் பகுதியாக மாற்றி ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாகப் பணம் வசூல் செய்கிறார்கள்.இந்தியாவின் மழலையர் பள்ளிகளை நடத்தும் பலரும் அதனைப் பணம் காய்க்கும் மரமாக நினைக்கின்றனர்.
நேற்று என் 3 வயதுப் பேரன் முகிலன் பயிலும் பாஸ்டன் நகரத்துத் தெற்குக்கரைக் கானகப் பாதுகாப்பு - கற்பனைக் கலையகம் (SOUTH SHORE CONSERVATORY -Imagine Arts) என்னும் பள்ளிக்கு மனைவியோடு போனேன். பள்ளிக்கு முன், மழலைக்கல்விக்கு முன், மழலைக் கல்வி என மூன்று வகுப்புகள் மட்டுமே நடத்தும் ஒரு கலையகம். முகிலன் பள்ளிக்கு முன் என்ற நிலையில் வாரத்தில் செவ்வாய், வியாழன் என இரண்டு நாள் மட்டுமே போய்வருகிறான். ஆனால் பள்ளி தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஒரே இடத்தைப் பலருக்கும் பயன்படும் விதமாக மாற்றிக் கொள்கிறார்கள். மழலையரோடு மழலையராகைக் கலந்துவிடும் ஆசிரியைகள். விளையாட்டுக்கருவிகள், வண்ணந்தீட்டிகள், படங்கள் நிரம்பிய புத்தகங்கள், விளையாட்டு மைதானம் என அந்தச் சூழலில் பொருந்திப்போய்விட்டுத் திரும்புகிறது குழந்தை.

பள்ளியின் அலுவலகப் பெண்ணோடு பேசிக்கொண்டிருந்தபோது சொன்னாள். லாபநோக்கமற்று நடக்கும் இந்தப் பள்ளிக்கட்டிடமே லாபநோக்கத்தோடு இசைவகுப்புகள், யோகா வகுப்புகள், ஓவிய வகுப்புகள் என வேறு நேரங்களில் நடக்கும் இடமாக இருக்கிறது என்றால். ஒன்றைப் பலவாகப் பயன்படுத்தும் நோக்கத்தால், மாணவர்களின் கல்விக்காகப் பணம் வசூலிப்பது குறைவுதான் என்றார்.

வட்டாரப்பொதுநூலகம்
வெய்மூத் பொதுநூலகம். நூல்களுக்கு இணையாக டிவிடி-களும் அடுக்கப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கு தரைக்கடியில் ஒரு தளம். பக்கத்தில் ஒரு விளையாட்டுக்கூடம். குடியிருக்கும் எல்லோரும் புத்தகங்கள் எடுக்கலாம். எடுக்கும்போது காத்திருந்து பதிவுசெய்து எடுத்துவரலாம். திருப்பித்தர காத்திருக்க வேண்டியதில்லை. வைத்துவிட்டு வந்தால் வரவு வைக்கப்படும் விவரம் வந்துவிடும். இன்றைய தேதியில் கிடைக்கும் புத்தகம் பற்றி இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். பத்திரிகைகள் படிப்பதற்காகப் போய்வரவேண்டும.
இங்கு இல்லாத நூலொன்று பாஸ்டனில் வேறு நூலகத்தில் இருந்தாலும் வரவழைத்து தருகிறார்கள். இணைய வசதி உண்டு / 25/5/2016

பல்நோக்கு மைதானம்.
வீட்டிலிருந்து கிளம்பிப் போனால் 15 நிமிடத்தில் அந்த மைதானத்தை அடைந்துவிடலாம். போனபின்பு இரண்டு சுற்றுப் போட்டால் இன்னும் ஒரு 20 நிமிடம் நடந்ததாகக் கணக்கு. பின்னர் சற்று ஓய்வு. பிறகு நடக்கலாம். கடந்த மூன்று நாட்களாக இப்படிப் போகிறது நேரம்.
நேற்று வழக்கம்போல நடந்துவிட்டு உட்கார்ந்த இடம் வடக்கு மூலை. அந்த மைதானத்தின் வடக்கு மூலையில் நடுத்தரவயதைத் தாண்டியவர்கள் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தனர். பயிற்சிகள், நடிகர்களுக்குரிய அடிப்படை உடற்பயிற்சிகள் போல இருந்ததால் அந்த இருக்கையைத் தேர்வுசெய்தேன். இருக்கையின் மூலையில் ஒட்டப்பட்டிருந்த துண்டுச்சீட்டைக் கவனிக்கவில்லை.உட்கார்ந்தவுடன் என்னிடம் வந்து “வாருங்கள்; வந்து கலந்துகொள்ளுங்கள்” என்று கைநீட்டினாள் அந்தப் பெண். பயிற்சியாளர் ஒருநாளைக்கு ஒரு டாலர் தான் என்று சொல்லி ஒட்டப்பட்ட துண்டுச்சீட்டைக் காட்டினார். அப்போதுதான் புரிந்தது அங்கே நடப்பது ஒரு கோடைகாலப் பயிற்சிமுகாம் என்று.’மன்னிக்க. நான் நடக்க மட்டுமே வந்தேன்’ என்று சொல்லி இடத்தைக் காலிசெய்தேன்.
அந்த மைதானத்தில் ஒருபக்கம் கால்பந்துப் பயிற்சி, இன்னொரு பக்கம் எறிபந்துப் பயிற்சி, மற்றொருபக்கம் பேஸ்பால் பயிற்சியென நடக்கின்றன. மொத்தமாகப் பணம் கட்டி டென்னிஸ் விளையாடுபவர்களுக்குத் தனி மைதானம்.
இன்னொரு ஓரத்தில் சின்னஞ்சிறார்களுக்கான மைதானம். ஏறி இறங்குவது, ஊஞ்சல் ஆடுவது, உள்ளுக்குள் நுழைந்து வெளியேறுவது என அவர்களுக்கான கருவிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. எப்படி விழுந்தாலும் காயமேற்படாத ரப்பர் தரைகள். மொத்தமைதானத்தையும் சுற்றிக்கொண்டு ஒரு நடைபாதை. இப்படியான மைதானங்கள் அங்கங்கே இருக்கின்றன.


இது வெய்மூத் பகுதியின் மைதானம். திருநெல்வேலியின் மொத்த நகரத்திலும் ஒன்றே ஒன்று இருக்கிறது. அதுவும் அண்ணா விளையாட்டுப் பயிற்சிக்கூடத்தின் பொறுப்பில் இருக்கிறது. அங்கேயே தங்கிப் பயிற்சிபெறும் மாணாக்கர்களுக்கானது. எங்கள் பல்கலைக்கழகத்தில் கூட இப்படியொன்று இல்லை.// 26/05/22017

சுத்தம், ஒழுங்கு, அமைதி, சுயகட்டுப்பாடு, தனிமை, வாரக்கடைசியானால் பயணம், கொண்டாட்டம் இப்படியான வாழ்க்கைக்குள் இந்த நாட்களில் நான் அடங்கிவிடவில்லை. நான் இருந்தது தற்காலிகமாக இருப்பவர்கள் வேடிக்கை பார்க்கலாம்; இணைந்துவிடமுடியாது. என்றாலும்,
ஒவ்வொரு நாளும் காலாற நடந்த அந்தப் பாதையில் இரண்டுசுற்று நடந்து முடித்த கையோடு வெய்மூத்திலிருந்து விடைபெறுகிறேன்.

கருத்துகள்

வன்பாக்கம் விஜயராகவன் இவ்வாறு கூறியுள்ளார்…
ஆங்கிலத்தில் இதன் உச்சரிப்பு 'வேமத்' .
அ.ராமசாமி இவ்வாறு கூறியுள்ளார்…
மாற்றிக் கொள்ளலாம்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெரியார்- எப்போதும் பேசுபொருள்

பெரியார்மண்ணும் பிராமணியத்தின் இயக்கமும்.

நாத்திகம் என்னும் ஆன்மீகம்