டொறொண்டோவில் மூன்று நாட்கள்
மே. 6 முதல் 8 வரை மூன்று நாட்கள் டொறொண்டோவில்
தங்குவது என்பது திட்டம். மூன்று நாளில் இரண்டு நாட்கள் எனது இருப்பு கருத்தரங்கு நடக்கும்
யோர்க் பல்கலைக்கழகம். குடும்பத்தார் டொறொண்டோவைச் சுற்றிக் கொண்டிருப்பார்கள். இந்தத்
திட்டமிடலெல்லாம் மகன் பொறுப்பு. அவர்களுக்கு முழுமையான சுற்றுலா; எனக்கோ பாதிதான்
சுற்றுலா. மீதிப்பாதி இலக்கியச் சந்திப்புகள் சார்ந்த கல்விச்சுற்றுலா. இது என்னுடைய
திட்டம். ஒருதிட்டத்திற்குள் இன்னொரு திட்டம் அடக்கம். மகனது திட்டம் பெருந்திட்டம்.
அதற்குள் அடங்கியது எனது குறுந்திட்டம். இரண்டு
திட்டங்களின்படியும் மூன்றுநாளில் இரண்டுநாள் பகல் கருத்தரங்கில் கழிந்து விடும்.டொறோண்டோவில் கடந்த பத்தாண்டுகளாக நடக்கும் தமிழியல் ஆய்வுகள்
மாநாட்டில் கலந்துகொள்ளவேண்டும் என்பது முதன்மை நோக்கம். ஐந்தாண்டுகளுக்கு முன்பு உண்டான
ஆசை அது. ஆசையை நிறைவேற்றும் பொருட்டு ஆறுமாதத்திற்கு
முன்பே (2015, டிசம்பர்) கட்டுரைச் சுருக்கம் அனுப்பப்பட்டு ஏற்கப்பட்டது. தேதியும்
மே,6,7 எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில் முதலில் அமெரிக்காவிற்குள் நுழைய அனுமதி (விசா)
வாங்கும் முயற்சியை ஜனவரியில் தொடங்கினோம்.
தடையில்லாச் சான்று, சொத்துபத்திரம், கையிருப்பு காட்ட வங்கிக் கணக்குகள், அமெரிக்காவில்
இருக்கும் உறவினர் அழைப்புக்கடிதம், வீட்டு முகவரி, வேலை, சம்பளம் என அனைத்துத் தகவல்களோடும்
ஆதாரங்களோடும் அமெரிக்கத் தூதரகத்தில் காத்திருந்தபோது, விசா கிடைக்குமா? கிடைக்காதா?
என்ற தவிப்பு இருந்தது. தவிப்பைத் தவிடுபொடியாக்கியது தமிழ். அமெரிக்கத் தூதரகத்தில்
விசாரிக்கும் இடத்தில் இருந்த அமெரிக்கப் பெண்மணிக்குத் தமிழ்மேல் கொஞ்சம் காதல். “தமிழ்ப்பேராசிரியர்” என்ற தகவலைப் பார்த்துவிட்டு
வேறு எதையும் கேட்கவில்லை. வார்சாவில் தமிழ்ப் பேராசிரியரக இருந்தேன் என்பதைச் சொன்னவுடனே
தமிழில் பேசுவதில் மகிழ்ச்சி அடைந்தாள். “விசா
வரும்; அமெரிக்காவில் மகிழ்ச்சியாகச் சுற்றிவிட்டு வாருங்கள்” என அனுப்பிவைத்தார். 10 ஆண்டுகளுக்கு வந்து போகலாம் என்று சொல்லியிருந்தார்கள்.
அதே கையோடு கனடிய அனுமதிக்கும் மனுப்போட்டேன். அமெரிக்காவைப் போல் இல்லை கனடா. எல்லாவற்றையும்
இணையம் வழியாகவே முடித்து 8 ஆண்டுகளுக்கு வந்து போகலாம் என்று சொல்லி அனுமதி தந்தார்கள்.
எல்லோமே சுமுகமாக முடிந்ததால் தான் இந்தப் பயணத்திட்டம் உருவானது.
பத்துமணிக்கு டொறொண்டொ நகரின் யோர்க்
பல்கலைக் கழகத்தில் இருக்க வேண்டும். ஆனால் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய வாகனம்
20 நிமிடம் தாமதமாகப் போவீர்கள் என்று சொன்னது. மூன்றாண்டுகளுக்கு முன்பு கடைசி நேரத்தில்
தடைபட்ட ஆசை நிறைவேறும் மகிழ்ச்சிக்குப் பின்னால் தாமதமாகிறதே என்ற குறுகுறுப்பும்
சேர்ந்துகொண்டது. 2012 இல் போலந்தில் இருந்தபோது கையிலிருந்த வெள்ளைக் கடவுச்சீட்டை
வைத்துக்கொண்டு நுழைவு அனுமதி -விசா- வாங்குவதில் சிக்கல் இருக்கும் இருந்தது. அதனால்
அந்த முறை ஆய்வுக்கட்டுரையின் சுருக்கம் ஏற்கப்பட்டும் தடையாகிவிட்டது. இந்தமுறையும்
முதலிலொரு தயக்கம் இருந்தது. நடக்கப்போகும் சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்காமல் வெளிநாடு
செல்லலாமா? என்ற கேள்விதான் தயக்கத்திற்குக் காரணம். வாக்களிப்பது மட்டுமே மக்களாட்சியின்
கடமை என நினைப்பவர்களுக்கு வாக்களிக்காதது குற்றவுணர்வாக இருக்கலாம். எல்லா நேரமும்
மக்களாட்சியின் வீழ்ச்சியைக் கண்டு அங்கலாய்க்கும் மனம்கொண்ட எனக்கு வாக்களிக்காமல்
போகிறோமே என்பது குற்றவுணர்வாக இருக்கவில்லை.
காலை ஏழுமணிக்கெல்லாம் நயாகராவிலிருந்து
கிளம்பிவிட்டோம். அமெரிக்காவையும் கனடாவையும் ஒரு பாலத்தின் வழியாகப் பிரிக்கும் நயாகரா
நீர்வீழ்ச்சியிலிருந்து டொறோண்டா நகரத்திற்குப் போக ஒன்றரைமணி நேரம் ஆகும் என்பது கணக்கு.
தூரம் 130 கிலோமீட்டர். மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் போகலாம் என்றாலும், எல்லா
இடத்திலும் அந்த வேகத்தில் செல்லமுடியாது. சாலையில் ஒருகண்ணும் சாலையோர அறிவிப்புத்
தட்டிகளில் ஒரு கண்ணும் இருக்கவேண்டும். அறிவிப்பு என்பதைவிட எச்சரிக்கைகள் என்று சொல்வதே
சரி. செல்லவேண்டிய வேகத்தின் அளவைக்குறிக்கும் எச்சரிக்கைகள் மட்டுமல்ல; பலவிதமான தகவல்களைத்
தரும் தகவல் பலகைகள் இருக்கும். எவ்வளவுதூரத்தில் உணவுவிடுதி இருக்கிறது, பெட்ரோல்
போடலாம்; ஓய்வுக்கான விலகல் சாலை இருக்கிறது; பார்த்துரசிக்கக்கூடிய வனங்கள், ஆற்றிடைக்காட்சிகள்,
விலங்குகள் இருப்பிடம் எனப் பலதகவல்களும் நம்மைக் கடந்து போய்க்கொண்டே இருக்கும்.
நகர எல்லைக்குள் 60, 50 என வேகங்குறைத்து
25 கி.மீ. என்றுகூடச் சில இடங்களில் குறிப்பிட்டிருக்கிறார்கள். எச்சரிகைத் தட்டிகளில்
சொன்ன வேகத்தைத் தாண்டினால் ‘சொத்தை எழுதித் தர வேண்டியதிருக்கும்’ என்கிற எச்சரிக்கை காரோட்டிகளுக்குத்
தெரிந்திருக்கிறது. அமெரிக்காவிலும்சரி, கனடாவிலும்சரி சாலைவிதிகளைப் பராமரிக்கும்
காவல்துறையினர் கண்கொத்திப் பாம்பாய்க் காத்திருக்கிறார்கள். இடையிடையே வேகத்தைப் படம்பிடித்து
அனுப்பும் காமிராக்கருவிகளும் இருக்கின்றன. நமது வண்டிக்கு முன்னால் வந்து விளக்குப்
போட்டு நிறுத்திவிட்டால் வண்டியை நிறுத்திவிட்டு அமர்ந்து இருக்கவேண்டும். உடனே அவர்கள்
வந்துவிட மாட்டார்கள். நாமும் உடனே இறங்கிப் போகவேண்டியதில்லை. கையைப்பிடித்து இழுத்து
விசாரிப்பதெல்லாம் அங்கே நடக்காது. எல்லோரும் கையில் துப்பாக்கி வைத்திருப்பார்கள்
என்பதால் காவல் துறையினரும் பயத்தோடுதான் அணுகுகிறார்கள். வண்டியை ஓரங்கட்டிவிட்டு
நிதானமாகப் பேசிக் கையில் ஒரு காகிதத்தில் குறித்து அனுப்பிவிடுகிறார்கள். இவ்வளவு
கட்டுப்பாடு இருந்தாலும் விபத்துகள் நடக்கவே செய்கின்றன. விபத்து நடந்துவிட்டதென்றால்
தகவல் தெரிவிக்கப்படுகிறது. நாம் விரும்பினால் மாற்றுப்பாதையைத் தெரிவுசெய்து கொள்ளலாம். கட்டுப்பாட்டை அனைவரும் ஏற்றுக்கொள்வதில் தான் சுதந்திரம்
தங்கியிருக்கிறது.
டொறொண்டோவுக்குள் நுழைந்த பின்பு தமிழியல்
கருத்தரங்கு நடக்கும் யோர்க் பல்கலைக்கழக கீலெ
வளாகத்திற்குச் செல்ல வேண்டும். நகர்மையத்திலிருந்து அரைமணிநேரப் பயணம். யோர்க் பல்கலைக்கழகத்தின் பழைய
வளாகமான கிளெண்டன் வளாகம் நகர் மையத்தில்
இருக்கிறது, அது சிறிய வளாகம். புதியதும் பெரியதுமான கீலெ வளாகம் மிகப்பெரியது. இரண்டு
வளாகத்திலும் சேர்த்து 53000 மாணாக்கர்கள் படிக்கிறார்கள். 11 புலங்களில் 200 -க்கும்
அதிகமான பட்டப்படிப்புகளும் 5000 -க்கும் அதிகமான படிப்புகளும் இருக்கின்றன. 7000 ஆசிரியர்கள்
பணியாற்றும் அப்பல்கலைக்கழகம் டொறொண்டோ நகரமிருக்கும் அண்டோரியா மாநிலத்தில் இரண்டாவது
பெரிய பல்கலைக்கழகம். ஆங்கிலம், பிரெஞ்சு என இருமொழிகளில் கல்வி கற்கும் வாய்ப்பு அங்கு
உண்டு அதன் ஆசியவியல் புலத்தில் தான் இந்தக்
கருத்தரங்கம் நடக்கிறது.
தமிழியல் கருத்தரங்கம் யோர்க் பல்கலைக்கழகத்தில்
நடப்பது இது இரண்டாவது ஆண்டு. அப்பல்கலைக் கழகத்தில் பணியாற்றும் நாட்றா ரோட்றிகோ இந்த ஆண்டு முக்கியப் பங்காற்றியிருக்கிறார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்புவரை டொறொண்டோ பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய செல்வா கனகநாயகம் முக்கியமான ஒருங்கிணைப்பாளராக
இருந்தார். அதனால் அங்குதான் நடந்தது. அவரது மறைவு காரணமாகவே டொறொண்டோ பல்கலைக்கழகத்திலிருந்து
யோர்க் பல்கலைக் கழகத்திற்கு மாறியது. ஒருங்கிணைப்பாளராக
இருக்கும் ஒவ்வொருவரின் பின்னணியிலும் கவி.சேரன்
இருந்தார் என்பதும், தொடர்ந்து அவரது ஆளுமையே இந்தக் கருத்தரங்கைப் பன்னாட்டுக் கருத்தரங்க
நிகழ்வாக மாற்றிக் கொண்டிருக்கிறது என்பதும் உண்மை. அவர் பணியாற்றும் வின்சர் பல்கலைக்கழகமும்
முக்கியப்பங்களிப்பைச் செய்கிறது. ஒரு பொருண்மையில் பன்மைநிலைக் கருத்தரங்கொன்றை
எப்படித் திட்டமிட வேண்டும் என்பதற்கு உதாரணமாக இந்தக் கருத்தரங்கை மதிப்பிடுவேன்.
“சாட்சியமாய்த்
தங்குதல்: புலப்படா வன்கொடுமையும் பேசமுடியாக் குற்றங்களும்” என்னும் பொதுத் தலைப்பில்
நடைபெற்ற தமிழியல் கருத்தரங்கம் இலங்கைத் தமிழர்களின் அரசியல், வரலாறு, பொருளாதாரம்,
மருத்துவம், பெண்கள், பன்னாட்டு உறவு ஆகியவற்றோடு இலக்கியம், மொழிபெயர்ப்பியல், ஆவணவியல், கலை, இலக்கியம்
எனப் பலவற்றையும் உள்ளடக்கியதாக இருந்தது. குறிப்பாகக் கனடாவிற்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும்
புலம்பெயர்ந்துள்ளவர்களின் சமகாலச் சிக்கல்களை முன்வைத்து விவாதங்களை எழுப்பினார்கள்
பங்கேற்பாளர்கள்.
இரண்டாவது நாள் இரவிலும் மூன்றாவது நாள்
பகலிலும் தான் டொறொண்டோவைச் சுற்றிப் பார்க்கும் வாய்ப்பு எனக்கு. இரண்டாவது நாளில்
திருச்சியிலிருந்து டொறொண்டோவில் வசிக்கும் நண்பர் ரெங்கராஜன் இரவு உணவுக்கு அழைப்பு
அனுப்பினார். அவரது உறவினரான சங்கர்- சுஜாதா, வார்சாவில் இருந்தபோது
எங்கள் வீட்டிற்குக் குடும்பத்தோடு வருவார். வார்சாவிலிருந்த இந்தியர்களின் கூட்டாஞ்சோறுப் பழக்கம்.
அந்த நினைவில் எங்கள் வருகையைத் தங்கள் உறவினர்களுக்குத் தெரிவித்து அழைக்கச் செய்தார்.
5 ஆண்டுகளுக்கு முன்பு வந்த அவர் சொந்தமாக
வீடு, கார் என கனடாவாசியாக ஆகிவிட்டார். அவரது குழந்தைகள் பள்ளியிலும் பல்கலைக்கழகத்திலும்
விதம்விதமான பாடங்களை எடுத்துப் படிக்கிறார்கள். இவர்களும் இந்தியா திரும்புவார்கள்
என்று தோன்றவில்லை. அவர் மூலமாக அவரது உறவினர்கள் குடும்பங்கள் சில கனடா வந்து தங்கிவிட்டன.
இந்தியத் தமிழர்களும் தனியாகத் தமிழ்ச்சங்கங்கள் வைத்து, தமிழ் உணவு விடுதிகள் நடத்தி,
தமிழ்க் கடவுள்களுக்காகக் கோயில்கள் கட்டிவாழ்கிறார்கள். இலங்கைத் தமிழர்களோடு அவர்களுக்குப்
பெரிய தொடர்புகள் இல்லை. இன்னொரு நாட்டின் மக்களாகவே இருவேறு கூட்டமும் நினைக்கிறது.
யாதும் ஊரே; யாவரும் கேளிர் என்ற வரியில் முதல்வாக்கியம் மட்டும் தமிழர்களால் உண்மையாக்கப்பட்டிருக்கிறது.
எல்லா நாடுகளும் எங்கள் நாடு என்று சொல்லத் தயார்தான்; எல்லாரும் எங்கள் உறவினர் என்று
உறவாடுவது அவ்வளவு சுலபமில்லை. நான்கு நாட்களாகத் தமிழர் உணவுக்கு அலைந்த நாக்குக்கு
அவர்கள் வீட்டில் இட்லி,சாம்பார், சோறு, பருப்பெல்லாம் போட்டவுடன் ருசித்துத் தீர்த்துக்கொண்டது.
வெளியில் போய்விட்டால் தாய்மொழியைப் பேச ஆட்களைத் தேடுவது தவிர்க்கமுடியாத ஒரு தவிப்பு
எல்லோருக்கும் இருக்கிறது. ரெங்கராஜன் வீட்டில் சாப்பிட்ட மயக்கத்தோடு டொறொண்டோவில்
எங்கும் இறங்காமல் பெருஞ்சுற்றொன்றைப் போட்டுவிட்டு அறைக்குத் திரும்பியபோது மணி
12.
டொறோண்டோவைச் சுற்றிப் பார்க்கக் குறைந்தது
ஒருவாரம் வேண்டும். அந்நாட்டின் தலைநகரம் அதல்லவென்றாலும்,
கனடாவின் பெரிய நகரம். இந்தியாவின் மும்பையைப்போல வணிகத் தலைநகரம். வணிகம் மட்டுமல்லாமல்,
தொழிற்சாலைகள், கல்விக்கூடங்களென விரிந்து பரவிக்கிடக்கும் நகரம் கனடாவின் பெருநகரம் மட்டுமல்ல;உலகப் பெருநகரங்களில் ஒன்று.
அங்கே சாலைப்பயணம், நீர்வழிப்பாதைகள், தரைக்கடியில் செல்லும் மெட்ரோ ரயில்கள், மேலே
செல்லும் ட்ராம் வண்டிகள், என எல்லாவகையான வாகனங்களும் இருக்கும் பெருநகரம். மூன்று
நாட்களும் பயணம் செய்யத் தனிநபர் பயணச்சீட்டும், குழுப்பயணச்சீட்டும் வாங்கிவிட்டால்
ஊர்சுற்றலில் சிக்கல் இருக்காது. ஐரோப்பிய, அமெரிக்கப் பெருநகரங்கள் எல்லாவற்றிலும்
இந்த வசதிகள் உண்டு.
கனடாவே
வந்தேறிகளின் நாடுதான். ஐரோப்பியநாடுகள் ஒவ்வொன்றிலிருந்தும் வந்து குடியேறியவர்கள்
ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கிறார்கள். இன, நிற, மத வேற்றுமைகள் இல்லாத நாடு. சட்டத்தின்
ஆட்சி தரும் அனைத்து உரிமைகளையும் எந்த வேறுபாடுகளும்
இல்லாமல் ஒவ்வொருவரும் பெறமுடியும் என்பதால் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த தமிழர்கள்
அதிகமாகக் குடியேறிய நகரம் டொறொண்டா. தனித்தனியாக
இலக்கிய அமைப்புகள் வைத்துத் தங்களின் மொழிப் பற்றையும் ஈழநினைவுகளையும் காட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
அதே நேரத்தில் அந்நாட்டின் குடிகளாக மாறி வளமான வாழ்க்கைக்குள் நுழைந்துவிட்ட மனநிலையில்
ஒருவரும் நாடு திரும்பும் எண்ணமும் இல்லை. கருத்தரங்கிற்கு வந்த காலம் செல்வம், கவி
வ.ஐ.ச. ஜெயபாலன், கவி.அவ்வை, அகிலன், மீராபாரதி, முரளிதரன், கீதாசுகுமாரன், ஈழவேந்தன்
போன்ற ஆளுமைகளைப் பார்த்து நீண்ட நேரம் பேசமுடியவில்லை. அவ்வையின் கணவர் விக்கினேஸ்வரனும்
நாடகக்காரர் அருளானந்தனும் கூட இருந்தார்கள். அவர்களோடெல்லாம் நீண்ட நேரம் செலவழிக்க
முடியவில்லை. ஒருநாள் கூடுதலாகத் தங்கியிருந்தால் மூத்த எழுத்தாளர் அ. முத்துலிங்கத்தைப்
பார்த்திருக்கலாம். அதுவும் நடக்கவில்லை.
கருத்தரங்கம்
நடந்த இரண்டு நாட்களிலும் இரவுநேரத்தில் மட்டும் நகர்வலம் போனோம். நகர்மையத்தில் இருக்கும்
உயிரியல் பூங்கா, கடல்வாழ் உயிரினக் காப்பகம்,
பன்னாட்டுக் கலைப் பொருட்கள் சேகரிப்பு மையங்கள், தாவரவியல் பூங்காக்கள் எனப்
பெருவெளிக் காட்சிக்கூடங்கள் அல்லாமல் சின்னச்சின்ன அருங்காட்சியகங்களும் இருக்கின்றன.
தீவுகளுக்குப் போய்வரப் பெரும்படகுச் சவாரிகள் இருக்கின்றன. போய் இறங்கிக் கொண்டால்,
எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அங்கே இருக்கலாம்.
டொறொண்டோ
நகரில் பார்க்கவேண்டிய முக்கியமான ஒன்று சி.என். டவர் என அழைக்கப்படும் கனடியத்தேசியக்
கோபுரம். அதன் உச்சியில் ஏறி நின்றால் மேகமற்ற நாளில் 130 கி.மீ. தூரத்தில் இருக்கும்
நயாகரா நீர்வீழ்ச்சியே தெரியும் என்றார்கள். நாங்கள் போன அன்று மேகமும் சாரலுமாக இருந்தது.
1815 அடி உயரமுள்ள அந்தக் கோபுரம் தான் உலகத்திலேயே உயரமான கோபுரமாகச் சில ஆண்டுகளுக்கு
முன்புவரை இருந்தது. இதைவிட உயரமான ஒரு கோபுரத்தைத் துபாயில் அண்மையில் கட்டிமுடித்துத்
திறந்துவிட்டதால் இப்போது இரண்டாவது உயரமான கோபுரமாக மாறிவிட்டது. கனடிய ரயில்வே துறையினர்
தங்களின் தகவல் தொழில்நுட்பப் பயன்பாட்டிற்காகக் கட்டிய இந்தக் கோபுரம் டொறொண்டோ நகரின்
முக்கியச் சுற்றுலா ஈர்ப்பு. இரவு 10 மணிவரை ஆட்கள் மேலே போய்வரலாம். கடைசிவரை பாரந்தூக்கிகள்
இயங்குகின்றன. அங்கங்கே இருக்கும் அடுக்குகளில் உணவுவிடுதிகள், கேளிக்கைகள், அங்காடிகள்
என வியாபாரமும் நடக்கின்றன. இரவில் மேலே ஏறிச் சுற்றிலும் பார்த்தால், விளக்குகள் நடனம்
கண்ணுக்கெட்டிய தூரம்வரை தெரிகிறது. கீழே தரையைப் பார்த்தால் பிடிப்பு எதுவுமில்லாமல்
அந்தரத்தில் பறக்கும் உணர்வு. மயக்கம் வரக்கூடியவர்கள் மேலே போகாமல் இருக்கவேண்டும்.
தலைசுற்றல் ஏற்பட்டுவிடும். அதனருகில் தான் கடல்வாழ் உயிரினங்களின் மிகப்பெரிய காட்சிக்கூடம்
இருக்கிறது. பெரும் சுறாமீன்களும் சில்லறை
மீன்களும் கண்ணாடிக்கடலுக்குள் வண்ணமயம் காட்டித் திரிகின்றன.
அந்தந்த நாட்டு உணவுப்பண்டங்களைச் சாப்பிடும்
மனமிருந்தால் போதும். பெரும் செலவு குறைந்துவிடும். ஆனாலும் தங்குவதற்கான அறைவாடகைகளைக் குறைப்பது அவ்வளவு எளிதல்ல. அதுதான்
அந்நிய நாட்டில் தங்குவதைக் கடினமாக்கிவிடுகின்றன. குறைந்த வாடகையில் கிடைக்கும் விடுதிகள் பற்றிய
விவரங்கள் அதிகமும் இணையங்களில் கிடைப்பதில்லை. அதனால் ஓரளவு கூடுதல் வாடகைக்கே அறைகள்
பதிவு செய்யவேண்டும். நாள் ஒன்றுக்கான அறைவாடகை இந்திய ரூபாயில் பத்தாயிரம். தங்குமிடம் மட்டும் கிடைத்துவிட்டால் எந்த நகரத்திலும்
இன்னும் சில நாட்கள் தங்கிவிடலாம்.
இரண்டாம் நாள் நண்பர் ரெங்கராஜன் வீட்டில்
இட்லி, சாம்பார் சாப்பிட்டாலும் இந்தியக் கடைகள் இருக்கும் தெருவொன்றில் நுழைந்த மூன்றாம்
நாள் நுழைந்தபோது தமிழ்ப் பெயரோடு உணவுவிடுதி எதுவும் எதுவும் தென்படவில்லை. ஆனால்
உடுப்பி விடுதி கண்ணில் பட்டதும் நாக்கில் எச்சில் ஊறியது. நான்கு பேர் அமர்ந்து சாப்பிடும்
மேசைகள் இருபதுக்கும் அதிகமாக இருந்தன. ஒரு ஓரத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது
பணியாளர் தமிழிலேயே என்ன சாப்பிடுறீங்க என்று கேட்டார். பகுதிநேரப் பணியாளராக இருக்கும் தமிழர். நான்குபேரும்
தோசை, வெங்காயப் பஜ்ஜி, பரோட்டா, சக்கரைப் பொங்கல் என நான்கு பண்டங்களைச் சொல்லவும்
சிரித்தார். நான்கை ருசித்துவிடவேண்டுமென்ற விருப்பம்தான். மனிதத் தேடல் பசிக்காகவாவா? ருசிக்காகவாவா?
கருத்துகள்