நயாகரா நீர்வீழ்ச்சிக்கு இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும்

வேறுவழியில்லை; சாளரங்களைத்
திறந்தே ஆகவேண்டும். 
நான் கடல், நான் ஆறு, நான் நதி, நான் ஓடை, 
நான் அருவியெனத் தட்டும்போது
இழுத்துமூடி இருப்பது எப்படி?
மழை. இது மழையைத் தவிர வேறென்ன?

இந்த வரிகளை எழுதி முகநூலில் பதிவு செய்துவிட்டு வீட்டிற்குள் அடைந்துகிடந்த அதிகாலை நேரம். மூடிய சாளரங்களைத் தாண்டி மழையின் ஓசை கேட்டுக்கொண்டிருந்தது. சென்னையைத் தாக்கிய புயலும் மழையும் நினைவில் ஓடிக் கொண்டிருந்தன. மகன் ராகுலனிடமிருந்து தொலைபேசி அழைப்பு.  ஆறுமாதத்திற்கு முன்பே பதிவு செய்தால் பயணக்கட்டணம் குறைவாக இருக்கும். கிளம்பும் தேதியை முடிவு செய்து சொல்லுங்கள். சொன்னதில் கொஞ்சம் கண்டிப்பு தெரிந்தது. முந்திய அழைப்புகளைத் தள்ளிப்போட்டதுபோல இந்தமுறை தள்ளிப் போட விரும்பவில்லை. போவது என்று முடிவு செய்துவிட்டோம்
அமெரிக்காவின் நியூஜெர்சியில் தங்கியிருந்து வேலைதேடிக்கொண்டபின்  பாஸ்டன் நகரில் குடியேறி ஒன்றரை வருடம் ஆகிவிட்டது. இந்தியர்கள் அதிகம் இருந்த பகுதியிலிருந்து இப்போதிருக்கும் வெய்மூத்திற்குப் போனபின் அமெரிக்காவிற்கு வரச்சொல்லி அழைத்துக்கொண்டே இருக்கிறான். மகனிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்புக்குப் பின் கனடாவிலிருந்து நண்பர் கவி சேரனிடமிருந்து வரும் தகவலுக்காகக் காத்திருந்தேன். பத்தாண்டுகளாகக் கனடாவின் டொறொண்டோவில்  நடந்து கொண்டிருக்கும் தமிழியல் ஆய்வுகள் கருத்தரங்கின் நிகழ்ச்சி நிரல் முடிவுசெய்யப்பட்டதும் தெரிவிக்கிறேன் என்று சொல்லியிருந்தார். அந்தத் தேதி முடிவு தெரிந்துவிட்டால் அமெரிக்கா கிளம்பும் தேதியை முடிவு செய்துவிடலாம்.
அமெரிக்காவிற்கும் கனடாவுக்கும் இந்தக் கோடைவிடுமுறையில் போவது என்ற முடிவை எடுத்து ஆறுமாதம் ஆகிவிட்டது. மே முதல்வாரமா? இரண்டாவது வாரமா? என்பதை முடிவு செய்யவேண்டும். மே முதல்வாரத்தில் வரும் 6- வெள்ளி, 7-சனியில் -கருத்தரங்கம் நடக்கும் என்ற தகவல் ஒருவாரத்திற்குப் பின் சேரனிடமிருந்து வந்தது. அப்போதே விமானப் பயணத்திற்கான பயணச்சீட்டைப் பதிவு செய்து வாங்கிவிட்டான் மகன்.
சென்னை, அண்ணா பன்னாட்டு முனையத்திலிருந்து மே மாதம் 3 ஆம் தேதி அதிகாலை 03.15 க்கு ஆகாயத்திற்குள் நுழைந்த விமானம் வானத்தில் பறந்த நேரம் 16 மணிநேரம். இடையில் கத்தார் விமான நிலையத்தில் 3 மணிநேரக் காத்திருப்பு. அமெரிக்காவின் பாஸ்டனின் லோகன் விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானத்திலிருந்து வெளியேறி மகனைப் பார்த்தபோது நேரம் பிற்பகல் 04.00 மணி. பயணத்தில் 24 மணிநேரங் கடந்திருந்தாலும் தேதி மாறவில்லை. மே மாதம் 3 என்றுதான் அமெரிக்கக் காலங்காட்டிகள் கூறின.
இந்தியாவிலிருந்து மேற்கு நோக்கிச் செல்லும் விமானங்கள் ஆகாயத்தில் ஒருநாளைத் தின்றுவிடுகின்றன. அதுவே அங்கிருந்து திரும்பும்போது அந்த நாளைத் திரும்பத் தந்துவிடும். குழப்பமான காலக்கணக்கு தூக்கமாக இரண்டு மூன்று நாட்களுக்குத் தொடரும். தூக்கக் கலக்கத்தைப் போக்கிக்கொள்ள வாய்ப்பெல்லாம் இல்லை. கனடாவின் டொறொண்டோ நகரத்து யார்க் பல்கலைக்கழகத்தின் இருநாள் கருத்தரங்கிலும் முழுமையாகக் கலந்துகொள்வது என்று முடிவுசெய்துவிட்டதால்  ஒருநாள் ஓய்வுக்குப் பின் மே,5 அதிகாலை 05.30 -க்குக் கிளம்பிவிட்டோம்.
அமெரிக்கச் சாலைகளில் அதிகமாக  65 மைல் வேகத்தில் போகலாம்.  போக்குவரத்து நெரிசல் இல்லாமல் இருந்தால் ஏழுமணி நேரத்தில் நயாகரா போய்ச்சேரலாம். கொஞ்சம் கூடுதல் குறைவு என்றாலும் மதியம் இரண்டுமணிக்கு நீங்கள் உங்கள் இடத்தை அடைந்துவிடுவீர்கள் எனக் காரின் தகவல் சொல்லும் கருவி சொல்லியது. வீட்டிலிருந்து கிளம்பும்போதே அடையவேண்டிய இடம் நயாகரா நகரின் ராயல் விடுதி எனப் பதிவுசெய்துவிட்டதால், அந்தக் கருவி தூரம், நேரம், திரும்பவேண்டியதிசை என ஒவ்வொன்றையும் சொல்லிக் கொண்டே வந்தது.  இங்கு எல்லாம் தானே இயங்கும் கருவிகள்தான். சாலையில் கடந்து போகும்போது செலுத்தவேண்டிய சாலைவரிகளைக் கூட தானே இயங்கும் கருவி, காரிலிருக்கும் ஒரு கருவியிலிருந்து கழித்துக்கொள்கிறது. வேகம் கூடினால் எச்சரிக்கையை அந்தக் கருவி காட்டுகிறது. ஓட்டுநர் உரிமம் பெறுவது தொடங்கி, வாகன ஓட்டுவது வரை அவ்வளவு எளிமையாக நடக்கக்கூடியன அல்ல. சாலைவிதிகள் கடுமையாகப் பின்பற்றப்படுகின்றன. காரில் பொருத்தப்படும் வழிகாட்டும் கருவியை நம்பித்தான் எல்லாப் பயணங்களும் தொடங்குகின்றன.
காலை ஐந்தரை மணிக்குக் கிளம்பிய கார் அரைமணி நேரத்திற்குப் பின் பாஸ்டன் நகரை விட்டு வெளியேறியது. அமெரிக்காவின் பெருஞ்சாலை எண் 90 - ல்(I-90)  கார் இணைந்து வேகம்பிடித்த போது காலை மணி ஆறு. பெருஞ்சாலை எண் 90, அட்லாண்டிக் பெருங்கடலையும் பசுபிக் பெருங்கடலையும் இணைக்கும்  அமெரிக்காவின் மிக நீண்ட சாலை. மேஸுசெட்ஸ் மாநிலத் தலைநகரான பாஸ்டனிலிருந்து வாசிங்டன் மாநிலத்தின் தலைநகரான சியாட்டிலுக்கும் போகும் அந்தச் சாலை 13 அமெரிக்க மாநிலங்களை இணைக்கும் நீண்ட நெடுஞ்சாலை. முழுப்பயணம் செய்தால் முடிவை அடைய 47 மணிநேரம் 3045 மைல்கள் பயணிக்கவேண்டும். ஏறத்தாழ கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீருக்குச் செல்வதற்குச் சமம். அமெரிக்காவில் தொடரும் பிரிட்டானிய ஆட்சியிலிருந்து விடுபட்டுவிட்டோம் என்பதைக் காட்டுவதற்காக மைல், பவுண்டு என அளவைப் பெயர்களைப் பயன்படுத்துகிறார்கள்.
நயாகராவில் பதிவு செய்யப்பட்டுள்ள அறைக்குப் போகுமுன் இரண்டு தடவை வண்டியை நிறுத்துவது என்று முடிவுசெய்து கிளம்பியிருந்தோம்.  முதல் நிறுத்தம் காலை உணவுக்காகப் பாதிவழியில்.   இரண்டாவது நிறுத்தம் கனடாவிற்குள் நுழையும்போது எல்லையில்  கடவுச்சீட்டு மட்டும் நுழைவு அனுமதிக்காக. சாலையோர விடுதிகளில் கிடைக்கும் வசதிகளைப் பற்றிய தகவல்கள் முழுமையாகக் கிடைப்பதால் நமது வசதிப்படி நிறுத்திச் சாப்பிடலாம். காலை உணவை முடிப்பதற்காக நியூயார்க் மாநிலத்திற்குள் நுழைந்து அரைமணிநேரங்கழித்து ஓரிடத்தில் நிறுத்திவிட்டுச் சாப்பிட்டோம்.
நீர்வீழ்ச்சியாக மாறுவதற்கு முன்பு, பேராறாக அமெரிக்காவில் பெருக்கெடுத்து ஓடுகிறது நயாகரா. அலையோடும் தெளிந்த நீராகவும் நகரும் ஆற்றின் மேல் கட்டப்பட்ட பாலங்கள் வழியாகப் பயணம் செய்து கனடா எல்லையை அடைந்தபோது வரவேற்றுச் சிரித்தார் சோதனைச் சாலைப் பணியாளர். முத்திரை குத்தும் பொறுப்பில் இருந்தவர் காரைவிட்டு இறங்கும்படி சொல்லவில்லை. எனது கடவுச்சீட்டோடு மனைவி, மகன், மருமகள், பேரன் என ஐந்துபேரின் கடவுச் சீட்டுகளையும் முத்திரை குத்துவதற்கு முன்பு 10 கேள்விகள் கேட்டிருப்பார். கேள்விகள் கேட்டுக்கொண்டே முத்திரைகுத்தித் தந்து வரவேற்புச் சொல்ல அவர் எடுத்துக் கொண்ட நேரம் 3 நிமிடம்.
அமெரிக்காவிலிருந்து கனடாவிற்குள் வானவில் (ரெயின்போ)பாலத்தின் வழியாக நுழைபவர்களின் கண்ணில் படுவது அமெரிக்கப் பகுதியிலிருக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி. அகலமாகவும் வெள்ளிப்பட்டை போலத்  தாரைதாரையாக விழும் அந்த நீர்வீழ்ச்சியை அமெரிக்கப் பகுதியிலிருந்து பார்க்கவிரும்பிப் படகில் செல்ல விரும்பினால் அணிந்துகொள்ள வேண்டிய நீர்த்தடுப்பு ஆடையின் வண்ணம் நீலம். கனடாவின் பகுதியிலிருந்து பார்க்கவிரும்பிப் படகேறினால் அணிந்துகொள்ளவேண்டிய ஆடையின் வண்ணம் சிவப்பு. நாங்கள் கனடாவின் பகுதிக்குள்ளிருந்தே நீர்வீழ்ச்சிக்குப் போனோம்.
கடல்பறவைகள் கூட்டங்கூட்டமாகப் பறந்து கொண்டிருக்கின்றன. கரைக்குத் திரும்புவதும் நீரில் தட்டுவதுமாக அவை விளையாண்டு கொண்டிருந்தபோது கோலரிட்ஜின் புகழ்பெற்ற ‘தி ரைம்ஸ் ஆப் ஏன்சியண்ட் மெரினர்’  கவிதையின் வரிகள் காதுக்குள் ஒலித்தன.
நான் ஒரு கடல் பயணி.
இளம்பிராயத்திலிருந்தே நானொரு கடல் பயணி
ஒரு வீரயுகப் பாடலின் கம்பீரம் போன்ற கடல் அலைகளின் ஒலியும்,
இரைச்சலும் எனக்கு ரொம்பவும் பிடித்தமானவை.
ஆனால் இப்பொழுது ஒரு பெரிய சாபத்தைச் சுமந்தவளாய் அந்திமக் காலத்தில் நிற்கிறேன்…
நீண்ட நாட்களுக்கு முன்பு நான் ஒரு கதைசொல்லியாகவும் –கடல்பயணியாகவும் இருந்தேன்.
எனது பயணம் ஒரு ராத்திரியைப் போல நகர்ந்து கொண்டிருக்கிறது.
ஊர் விட்டு ஊருக்கு… நாடு விட்டு நாட்டுக்கு…
கண்டம் விட்டு கண்டத்திற்கு என..
எதற்காக இந்தப் பயணம்.
எல்லாம் என் கதையைக்  கேட்கக் கூடிய ஒரு மனிதனைத் தேடித்தான்
என் கதையை ஒருவனிடம் சொல்வதன் மூலம் என்னுடைய இறக்க முடியாத அந்தப் பாரத்தை இறக்கி விடத்தான்.
சிறைக் கைதியைப் போன்ற என் வாழ்க்கைச் சுமையிலிருந்து விடுபடத்தான்
அந்த நாள் எனக்குப் பசுமையாக நினைவில் இருக்கிறது.
நாங்கள் பயணம் புறப்பட்ட அந்த நாள் வாழ்வில் மறக்க முடியாத ஒரு நாள்…
ஓ.. நானும் எனது வயது வந்த அந்த நண்பர்களும் கடலின் பரப்பில் என்ன செய்தோம் தெரியுமா?         
படகிலேறி அருகில் சென்று நிற்கும்போது எழும் இரைச்சலைக் கேட்டபோது கணியன் பூங்குன்றன், மல்லல்பேரியாற்று நீரருவியைப் பாடிய வரிகள் நினைவுக்கு வந்தன. பயணங்களின் போது நினைவுக்கு வரும் இலக்கியங்கள் ஒவ்வொருவரின் மனத்திலும் அந்த எழுத்தாளனால் திரும்பவும் எழுதப்படுகின்றன. குற்றால சீசனில் குளிக்கப்போகும்போதெல்லாம் சுரேஷ்குமார் இந்திரஜித்தின் விரியும் கூந்தல் குற்றாலத்து வீதிகளில் கதையாய் அலைந்துகொண்டிருக்கும்.
பேரருவிக்காட்சி மட்டுமே சுற்றுலாப் பயணிகளின் கவன ஈர்ப்பு என்றால் ஒருநாள் இருப்போடு கிளம்பிவிடலாம். ஆனால் அந்த நகர நிர்வாகம் ஒருவாரக் கொண்டாட்ட நகரமாக மாற்றும் திட்டத்தோடு வேலை செய்துள்ளது. அங்கிருக்கும் பெரிய விடுதியொன்றில் அறையெடுத்துவிட்டால் பொதுப்போக்குவரத்து அதனோடு இணைக்கப்பட்டு எங்கும் சென்றுவரலாம் என்றாக்கப்பட்டிருக்கிறது. விளையாட்டுப் பூங்காக்கள், சூதாட்ட விடுதிகள், நடன நிகழ்ச்சிகள், ஓவியக் காட்சிக் கூடங்கள், தொல்பொருள் காட்சியகங்கள், விரிந்துகிடக்கும் தோட்டங்கள் எனப் பரப்பப்பட்டுள்ளன.
*******************
இந்தப் பயணத்தைத் திட்டமிடத் தொடங்கிய முதல் கட்டத்திலேயே நயாகரா நீர்வீழ்ச்சி தான்  முதல் விருப்பமாக இருந்தது. அமெரிக்காவையும் கனடாவையும் இணைத்துப் பிரிக்கும் அந்தப் பேரருவிக்கரையிலிருந்து பயணத்தைத் தொடங்க நினைத்ததற்கு இரண்டு காரணங்கள் உண்டு. அமெரிக்காவைப் பற்றிய நினைவில் எனக்கு ஆழமாகப் பதிந்திருப்பது நயாகரா நீர்வீழ்ச்சி. எனக்கு எப்போதும் பிடித்தமான நீர்ப்பரப்பு அருவிகள் தான். சின்னதும் பெரியதுமான அருவிகள் பலவற்றைக் கண்டு அவற்றில் குளித்துக்களித்திருக்கிறேன். எனது கிராமத்து வாசிமலையான் மலையிலிருக்கும் தாழையூத்து அருவியில் ஏராளமான முறை குளித்தவன். குற்றால அருவிகளும் பாபநாசத்து அருவிகளும் இப்போதும் குளித்து மகிழும் அருவிகள். ஆனால் நயாகரா அருவியில் குளிக்கமுடியாது. அது விழும் வேகமும் குளிரும் இந்திய உடம்புக்கு ஒத்துவராத ஒன்று. பார்த்துப்பார்த்து ரசிக்க வேண்டிய நீர்க்காட்சி அது.
கையில் காமிரா வழியாக அருவியைப் பார்த்துப் படம் எடுத்துவிட்டுப் பார்வையைத் திருப்பியபோது அந்தப் பெண் வந்தாள். நடந்து வந்தபோது அளவாக வெட்டப்பட்ட அவளது கூந்தல் முன்னும்பின்னுமாகக் கிடந்தது பேரழகாகத் தெரிந்தது. தூர தேசத்தில் சொந்த மொழி பேச யாராவது கிடைப்பார்களா என்று மனம் தேடும்போல..
நீங்கள் உருது பேசுவீர்கள் தானே என்று அந்த இளம்பெண் என்னருகில் வந்து விசாரித்தாள். செதுக்கப்பட்ட தாடி, மீசை என்னை ஒரு முஸல்மானாக அடையாளம் காட்டியிருக்கக் கூடும். இல்லை நான் இந்தியாவின் தமிழ்நாட்டிலிருந்து வந்திருக்கிறேன் என்றேன். அப்போதும் அவள் சிரித்தாள். அந்தச் சிரிப்பு சிநேகத்தின் வெளிப்பாடாகவே இருந்தது. தன்னை பாகிஸ்தானி என்று அறிமுகப்படுத்திக் கொண்டாள். அவள் என்னை எதிரியாகப் பார்க்கவில்லை. அண்டை நாட்டுக்காரனாகவே சிநேகத்துடன் பேசினாள்.

வார்சாவிலும் பாகிஸ்தானியர்கள் இந்தியர்களுக்கு நட்புகள். மெட்ரோவிலும் டிராமிலும் கண்டுபிடித்து அருகில் வந்து அமர்ந்துகொள்வார்கள். பேசிக்கொண்டே வருவார்கள். அது தூரம் செய்யும் மாயம். உருதுதெரிந்திருந்தால் அவளதுட்பு கிடைத்திருக்கும். 
================================= மலைகள். காம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தி.சு.நடராசனின் திறனாய்வுப் பார்வைகள் :தமிழ் அழகியல், தமிழகத்தில் வைதீக சமயம்

உடல் மறுப்பு என்னும் பெரும்போக்கு

கற்றல் - கற்பித்தல்: மாணவ ஆசிரிய உறவுகள்