வரலாற்றைக் கவிதையாக்கி வாசித்தல்

பசித்த பூனைகளின் மென்மையையும், வன்மத்தின் பசித்த ஓநாய்களையும் பற்றிப் பேச நினைத்த அந்தக் கவிதை ஓரிடத்தில்,
வரலாறு எப்போதும்
மாமிசங்களால் மட்டுமே
எழுதப்படுகிறது
என்ற வரிகளை எழுதிவைத்திருக்கிறது.
இந்தமாத உயிர்மையில் அச்சாகியுள்ள மனுஷ்யபுத்திரனின் நீண்ட கவிதையை நாலைந்து தடவை வாசித்து முடித்தவுடன் மெல்லமெல்ல நினைவு பின்னோக்கிப் போனது. கவிதைக்குள் தெறிக்கும் ஆவேசத் தொனியைத் தனித்து நிதானமாக விரியும் காட்சிகள் ஒரே வாசிப்பாக முடித்துவிடாமல் நிறுத்திநிறுத்திக் காட்சிப்படிமங்களாக நகர்ந்தன. பின்னோக்கியும் முன்னோக்கியும் நகரும் அந்தக் காட்சிகள் இந்தியப் பரப்புக்குள் நாறத் தொடங்கியிருக்கும் மாமிச வாடையையும் ரணக் கிளர்ச்சியையும் திட்டுதிட்டாய்ப் பரப்பிக்காட்டியபடி உலகவரலாற்றையும் உள்ளூர் வரலாற்றையும் கலைத்துப் போட்டுக் கேள்விகளையும் இயலாமையும் கலந்து முன் வைத்து முடிந்துபோகாமல் இறுதியுத்தம் இனிமேல்தான் என்று முடிகிறது.
இந்தக் கவிதைக்குள் இருக்கும் தொனிமாற்றங்களும் படிமக்காட்சிகளும் சாமுவேல் பெக்கெட் (Samuel beckett) டின் கிராப்பின் கடைசி ஒலிநாடா நாடகத்தையும் திரும்ப வாசிக்கத் தூண்டியது. ஒற்றைக் கதாபாத்திரத்தின் குரலாக விரியும் கிராப்ஸ் லாஸ்ட் டேப் ( Krapp's last tape)நாடகம், ஒருவன் தனது வாழ்க்கையையும் இந்த உலகத்தின் இருப்பையும் கறுப்பு வெள்ளையாகப் பார்த்துப் பயங்கொள்ளும் சொற்களால் நகரும் நாடகம். கறுப்பு - வெள்ளை என்பது அவனது தன்னிலைக்குள்ளும் இருக்கிறது; அவனது புறநிலை வாழ்க்கையைக் கட்டமைக்கும் சமூகமாகவும் இருக்கிறது.
கவி மனுஷ்யபுத்திரனுக்குள் எழும் தன்னிலையை யொத்த தன்னிலையோடு பொருந்திப் போகின்றவன் அந்தக் கிராப். இரண்டு உலகப்போர்களுக்கிடையில் சிக்கிய ஐரோப்பிய வாழ்க்கை தந்த நெருக்கடியைப் பதிவு செய்து வைத்துத் தானே கேட்கிறான். தனது குரலைத் தானே கேட்பதாக அமைந்த அந்த தனிமொழி நாடகம் ஒருவிதத்தில் கவிதைதான். அச்சமும் இயலாமையும் புறச்சூழல் மீதான வெறுப்பும் கலந்த அந்த நினைவோட்டத்தின் குரலை மனுஷ்யபுத்திரனின் இந்தக் கவிதையில் கச்சிதமாக வாசிக்க முடிந்தது.
பெக்கெட்டின் அந்த நாடகத்தை எனக்குக் கொடுத்து வாசித்துவிட்டு இந்தியச் சூழலோடு பொருத்தி ஒரு நாடகத்தை எழுதித்தரவேண்டுமென அந்த மாணவன் கொடுத்துவிட்டுப் போனான். 1959 இல் மேடையேற்றப்பட்ட சாமுவேல் பெக்கெட்டின் நாடகத்தின் எந்த வரியையும் நான் எடுத்துக்கொள்ளவில்லை. இந்தியச் சுதந்திரப்போரின் காட்சிகள் நினைவில் வரும்படியான வரிகளால் 10 பக்கத்தில் அச்சிடத்தக்க நாடகத்தை ஒரே இரவில் எழுதிமுடித்தேன். ஒரு நூற்றாண்டுக்கிழவனின் நினைவுக்குறிப்புகள் என்ற பெயரில் நான் எழுதிய அந்த நாடகம் எனது முதல் புத்தகமான நாடகங்கள் விவாதங்களில் இருக்கிறது. அந்நாடகம்,
இன்னும் இருக்கிறேன்
நேற்று இருக்கிறேன்
இன்று இருக்கிறேன்
இன்னும் இருக்கிறேன்
என்று தொடங்கி அதே நான்கு வரியோடு முடியும். அந்த நாடகத்தை இயக்கிய சிபு எஸ். கொட்டாரம் 45 நிமிடங்கள் நிகழும் மேடைநிகழ்வாக்கினார். 1992 இல் பாண்டிச்சேரியில் மேடையேறிய அந்த நாடகத்தைத் தமிழில் வேறு யாரும் மேடையேற்றவில்லை. ஆனால் மலையாளத்தில் சில தடவை மேடையேற்றம் கண்டது. சிபு எஸ்.கொட்டாரம் ஒற்றை மனிதனின் குரலைக் காட்சிப்படுத்துவதற்காகப் பெயரிலியாக 6 நடிகர்களைப் பயன்படுத்தினார். அபத்த நாடகத்தின் கலவையாக்கி வரலாற்றை வாசிக்க முடியும் என்பதைக் கவனமாக நிகழ்த்திய மேடைநிகழ்வு இப்போது என் மனத் திரையில் ஓடிக்கொண்டிருக்கிறது.
சிபு எஸ். கொட்டாரம் போன்ற ஓர் அரங்கக் கலைஞனால் மனுஷ்யபுத்திரனின் இந்தக் கவிதையை - மாமிசத்தின் கதை - நம் காலத்தின் அபத்தக் காட்சிகளாக விரிக்க முடியும். சென்னையில் அத்தகைய நாடகக் கலைஞர்கள் - நடிகர்களும் இயக்குநர்களும் -இருக்கவே செய்கிறார்கள். யாராவது ஒருவர் முயன்று பார்க்கலாம்.
நாடகத்தின் முதல் காட்சிக்குப் பின் இரண்டாவது காட்சி தடை செய்யப்படலாம் அல்லது நாடகக்கலைஞர்கள் மேடையிலேயே தாக்கவும் படலாம். அந்த எச்சரிக்கையோடுதான் அந்த முயற்சியைத் தொடங்க வேண்டும். என்றாலும் நாம் இருக்கிறோம் என்பதைச் சொல்லித்தானே ஆகவேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்