பேரா. நொபுரு கரஷிமா என்னும் தமிழியல் ஆய்வாளர்

நொபுரு கரஷிமா என்ற ஜப்பானியப் பெயரை எனக்கு அறிமுகம் செய்தவர் அவரது இணை ஆய்வாளர் ஒய்.சுப்பராயலு. சுப்பராயலு, அப்போது மதுரை காமராசர் பல்கலைக்கழக வரலாற்றுத் துறையின் விரிவுரையாளராக இருந்தார். (பின்னர் நேரடியாகத்தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் தொல்லியல் துறைப் பேராசிரியராகித் தமிழகத் தொல்லியல் ஆய்வுகள் பலவற்றைப் பொறுப்பேற்று நடத்தியவர். இப்போது புதுவையில் பிரெஞ்சு இந்தியவியல் ஆய்வு நிறுவனத்தில் தகைமைசால் ஆய்வாளர்) இலக்கிய மாணவனான நான், வரலாற்றையும் இலக்கியத்தையும் இணைத்து முனைவர் பட்டம் செய்யும் முனைப்பில் ஆய்வுத் தலைப்பைத் தேர்வுசெய்தபோது (1983) அவரது ஆலோசனைகளைப் பெற்றுள்ளேன். தொடக்கநிலை விவாதங்களையும் செய்துள்ளேன். அப்போது அவர் உச்சரித்த பெயர்களில் ஒன்றாக நொபுரு கரஷிமா இருந்தது.
கரஷிமாவை முதன்மை ஆசிரியராகக் கொண்டு ஒய். சுப்பராயலும், டோரு மட்சு என்ற இன்னொரு ஜப்பானிய ஆய்வாளரும் இணைந்து செய்த ஆய்வுத் திட்டத்தின் நூலொன்றின் அச்சுப் பிரதியின் தொகுதிகள் அவரிடம் இருந்தன. பிற்காலச் சோழர்கள் காலக் கல்வெட்டுகளில் இடம்பெற்ற எல்லாவகைப் பெயர்களையும் தொகுத்துப் பொருளும் விளக்கமும் தரும் பெரும் ஆய்வுப்பணியின் கொடை [Karashima, Noboru (1978). A concordance of the names in Cōl̲a inscriptions - Noboru Karashima, Y. Subbarayalu, Tōru Matsui - . Sarvodaya Ilakkiya Pannai,Madurai ] பன்னாட்டு ஆய்வுக்கழக உதவியோடு நடந்த அந்த ஆய்வுப் பணி தமிழக வரலாற்றில் பல திறப்புகளை உண்டாக்கியது. தமிழகத்தின் வரலாற்றைப் பேரமைப்புகளின் வரலாறாகவும், பேரரசர்களின் வரலாறாகவும் எழுதிக் கொண்டிருந்த போக்கில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் விதமான வரலாற்றுத் தரவுகளைக் கண்டுபிடித்துச் சொன்னதில் இத்தொகை நூலுக்கு முக்கியமான பங்குண்டு. பெயர்களை நிலவியல் அலகுகள், சமூக அலகுகள்,நிர்வாக அலகுகள், அரசியல் அலகுகள் எனப் பிரித்துப் பேச நினைக்கும் வரலாற்றாய் வாளர்களுக்கும் சமூகவியல் ஆய்வாளர்களுக்கும் அடிப்படையான தரவுகள் இவை. இத்தகைய பணிகள் தமிழில் - மொழிக்காகவும், இலக்கியத் திற்காகவும், வரலாற்றிற் காகவும் நிலவியலுக்காகவும் - தொடர்ந்து செய்யப்பட்டிருக்க வேண்டிய பணிகள். அவற்றிற்கான முன்மாதிரி வேலை அது. 1984 இல் வெளிவந்த தென்னிந்திய வரலாறும் சமூகமும் என்ற நூல் என்னுடைய ஆய்வேட்டிற்கான அடிப்படைத் தரவுகளையும் ஆய்வுப்பார்வையையும் தந்த நூல். [Karashima, Noboru, ‘South Indian History and Society (Studies From Inscriptions A.D. 850-1800)’, Oxford University Press, Delhi, 1984.] இந்த வகையில் கரஷிமா எனது முனைவர் பட்டத்திற்குத் தோன்றா வழிகாட்டி என்றே சொல்வேன். இவ்விரண்டு நூல்களோடு தென்னிந்திய / தமிழக வரலாற்றிற்காக மூன்று நூல்களை எழுதித் தந்துள்ளார். இந்த நூல்களின் வழியாகவும் ஆய்வுமுறையியல் வழியாகவும் அறியப்பட்டுக் கொண்டாடப்பட்டிருக்க வேண்டிய நொபுரு கரஷிமாவைத் தமிழக வரலாற்று ஆய்வாளர்களில் பெரும்பான்மையோர்கூட அறிந்திருக்கவில்லை என்பதுதான் உண்மை. அவரது நூல்களை வாசித்துக் கிடைக்கும் தரவுகள், விவாதங்களை வாசிக்கும் ஆய்வாளர்கள், கிராம நிர்வாகம், நிர்வாகத்துறையில் பங்கேற்ற சமூகக்குழுக்கள், தன்னிறைவுக்கிராமங்கள், சாதி அமைப்பு உள்வாங்கப்பட்ட முறை, இடங்கை -வலங்கை முறையாக மாற்றுவதற்கு நடந்த முயற்சிகள், நில அளவைகள், மானிய முறைகள், கோயில் நிர்வாகமுறைகள் எனப் பலவற்றைப் பரிசீலனை செய்து புதிதாகப் புரிந்துகொள்ள முடியும்.
ஜப்பான் நாட்டின் டோக்கியோ பல்கலைக் கழகத்தின் வரலாற்றுத் துறைப் பேராசிரியராக இருந்த அவர் இந்தியாவின் கல்வெட்டியல் கழகத்தின் தலைவராக(1985)வும், ஜப்பானில் இயங்கிய தென்னாசியவில் கழகத்தின் தலைவராகவும் (1996-2000) இருந்த காலத்தில் இந்திய / தென்னிந்திய வரலாற்றாய்வுகளை உலக அளவில் கொண்டு சென்றவர். அவரது பங்களிப்பைப் பாராட்டும் விதமாக இந்திய அரசின் மிக உயர்ந்த விருதான பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது( 2013). அந்த விருதை ஜப்பானுக்கே சென்று இந்தியப்பிரதமர் முனைவர் மன்மோகன் சிங் அவர்கள் நேரில் வழங்கிச் சிறப்பித்தார்.
கருத்துகள்