மந்தையிலிருந்து விலகத் துடிக்கும் இரண்டு ஆடுகள்

வசந்த பாலனின் காவியத்தலைவனையும் மிஸ்கினின் பிசாசுவையும் முன் வைத்து திரையரங்கிற்குச் சென்று சினிமாவைப் பார்ப்பது என்பது சிக்கலாகிக் கொண்டே வருகிறது. அதுவும் திருநெல்வேலி போன்ற கிராமீய மணம் மாறாத நகரத்தின் திரையரங்குகளை நம்பி ஒரு புதுப்படத்திற்குச் செல்வது பெரும் சிக்கலானது. படம் வெளியாகும் வெள்ளிக்கிழமை வேண்டாம் சனி, ஞாயிறுகளில் பார்க்கலாம் என்று நினைத்தால் கூடச் சங்கடமாகிவிடுகின்றது. மூன்று மாதங்களாகப் பேச்சிலிருக்கும் ஒரு படம் மூன்று நாட்களைத் தாண்டுவது முயல்கொம்பாகி வருகிறது. திரைப்படங்களைப் புறக்கணிக்கத் தொடங்கியிருக்கும் தமிழ்மனோபாவம் வரவேற்க வேண்டியதா? வருத்தம் கொள்ளவேண்டியதா? என்னும் பெரிய கேள்வி உருவாகியிருக்கிறது.