பத்துக்கதைகள்- புனைவின் பத்து முகங்கள்


கல்லூரிக் காலத்தில் மாதம் தவறாமல் வாசித்துக் கொண்டிருந்த இலக்கியப் பத்திரிகை கணையாழி. “இலக்கியச் சிந்தனையின் மாதச் சிறுகதையாக கணையாழியில் வந்த கதை தேர்வு பெற்றுள்ளது”என்ற குறிப்பை அதில் அடிக்கடி பார்ப்பேன். எனக்குள் பலவிதமான தூண்டுதல்களைச் செய்த குறிப்பு அது என்பதை எப்போதும் மறப்பதில்லை. இந்தக் கட்டுரைக்கும்கூட அந்தக் குறிப்புதான் தூண்டுதல் என்பதைச் சொல்லியே ஆகவேண்டும்.
இலக்கியச்சிந்தனைக்காக வானதி பதிப்பகம் சிறுகதைத் தொகுப்புகளை வெளியிடுகிறதா? என்பதைக் கூடக் கடந்த பத்தாண்டுகளாக நான் கவனிப்பதில்லை. சிறுகதைகளில் தன்னை முழுமையாக வெளிப்படுத்திக் கொண்ட வண்ணதாசன் 2012 ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதையாகத் தமிழருவி மணியனின் கதையொன்றைத் தேர்வு செய்து பரிசு கொடுத்ததற்குப் பல ஆண்டுகள் முன்பே இலக்கியச் சிந்தனை என் கவனங்களிலிருந்து விலகிப் போய்விட்டது. அதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றை விளக்கிக் கொண்டிருப்பது இப்போதைய வேலை அல்ல. ஆனால் இலக்கியச் சிந்தனைக்காக வானதி பதிப்பகம் வெளியிட்ட பல தொகுப்புகள் என்னிடம் இருக்கின்றன. அவற்றில் உள்ள கதைகளை வாசிப்பதோடு ஒவ்வோராண்டும் தேர்வாளர் எழுதிக் கொடுத்த முன்னுரையை வாசிப்பதை விரும்பிச் செய்பவன். அதன் வழியாகச் சிறுகதைகளை எப்படி வாசிக்கவேண்டும் என்ற முறையியலை உருவாக்கிக் கொண்டவன் என்று கூடச் சொல்லலாம்.


தமிழில் சிறுகதைகள் எழுதிப் புகழ்பெற வேண்டும் என நினைக்கும் புதியதலைமுறை எழுத்தாளர்களும், விதம்விதமான கதைகளை வாசித்துப் பார்க்க வேண்டும் என நினைக்கும் வாசகர்களும் அந்தத் தொகுப்புகளைத் தேடிப் படிக்கலாம். இலக்கியச் சிந்தனை கடைப்பிடித்து வந்த அந்த முறையியல் கவனிக்க வேண்டிய ஒன்று. தமிழில் சிறுகதைகளை வெளியிடும் இதழ்களின் எல்லாக் கதைகளையும் படித்து அந்த மாதத்தில் வந்த சிறுகதைகளில் இதுதான் சிறந்த கதை எனச் சொல்லும்படி ஒருவரிடம் பொறுப்பை ஒப்படைக்கும். அவரும் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு ஒரு கதையைச் சிறந்த கதையாகத் தேர்வு செய்து கொடுத்துவிடுவார். அப்படிச் செய்தவர், தேர்வு செய்ததன் காரணத்தைச் சொல்வாரா என்பது ரகசியம். (அந்த மாதம் தமிழின் இலக்கிய, வெகுஜன, தினசரிப் பத்திரிகைகள் எல்லாவற்றிலும் வந்த கதைகளையும் படித்திருப்பார் என்பதும்கூட ரகசியம்தான். இப்போதென்றால் இணைய இதழ்களிலும் வலைப்பூக்களிலும் வரும் கதைகளையும் வாசித்தாக வேண்டும். அவற்றில் எது புதுக் கதை, எது மறுபிரசுரம் என்பதை வேறு தீர்மானிக்க வேண்டும்)

மாதக் கதையைத் தேர்வு செய்வது எளிதாக இருக்கலாம். ஆனால் ஆண்டுக்கதையைத் தேர்வு செய்வது அவ்வளவு சுலபமான வேலை இல்லை. அந்த ஆண்டின் ஒவ்வொரு மாதமும் சிறந்த கதையாகத் தேர்வு பெற்ற 12 கதைகளையும் வாசிக்கவேண்டும். அதிலிருந்து ஒன்றை ஆகச் சிறந்த சிறுகதையென அறிவிக்கவேண்டும். ’இதுதான் இந்த ஆண்டின் சிறந்த தமிழ்ப் படைப்பு’ என எழுதிக் கையெழுத்துப் போட்டுவிட்டு ஒதுங்கிக் கொள்ளும் அகாடெமித் தேர்வுக்குழுவைப் போல இலக்கியச் சிந்தனையின் தேர்வாளர் தப்பித்துவிட முடியாது. 12 கதைகளில் ’இதுதான் சிறந்த கதை’ என ஒருகதையைத் தேர்வு செய்ததற்கான காரணங்களை விளக்கிச் சொல்லிக் கட்டுரையாக எழுதித் தர வேண்டும். அந்தக் கட்டுரைதான் அதன் முன்னுரையாக அமையும்.

அந்த முன்னுரைகளைப் படிக்கும்போது இசைநாற்காலிப் (Musical Chair) போட்டி எனக்கு நினைவில் வருவதுண்டு. ஒவ்வொன்றாகக் கழித்துக் கட்டும் வேலைதான் அது. நாற்காலிகளில் ஒன்றை உருவுவதன் மூலம் ஒவ்வொருவராக வெளியேற்றப்படுவதுபோல தேர்வாளர் தனது மனத்திற்குள் நடத்தும் இசைநாற்காலிப் போட்டியில் தேற முடியாத கதைகள் ஒவ்வொன்றாக வெளியேற்றப்படும். இசைநாற்காலிப் போட்டியில் போடப்பட்டு உருவப்படும் நாற்காலிகள் பல நேரங்களில் ஒன்று போல இருக்கும். ஆனால் இலக்கியச் சிந்தனைத் தேர்வாளர் வைத்திருக்கும் நாற்காலிகள் ஒவ்வொன்றும் வித்தியாசமானவை. சிறுகதையின் கூறுகள், நுட்பங்கள், சொல்முறை உத்திகள், கதையின் உள்ளடக்கத்தில் வெளிப்படும் உலகு தழுவிய பொது உண்மைகள், சமகாலத்தன்மை, பாத்திரங்களை உருவாக்கித் தரும் பாங்கு, கதையை எழுதிடப் பயன்படும் மொழியின் மீது எழுத்தாளனுக்குள்ள ஆளுமை, கதையை வாசிக்கும்போது உண்டாகும் நம்பகத்தன்மை, சோதனை முயற்சி, வாழ்க்கை மீதான விசாரணையின் ஆழ, அகலங்கள், எழுத்தாளன் வெளிப்படுத்த வேண்டிய சமூகப் பொறுப்பு எனப் பலவிதமான நாற்காலிகளைச் சுற்றிக் கதைகளை ஓடவிடும் தேர்வாளர் இந்தக் கதையில் ‘இது இல்லை’ அல்லது ‘இந்தக் கூறு தூக்கலாக இருக்கிறது’ எனச் சொல்லிக் கதைகளை உள்வட்டத்திலிருந்து -போட்டிக் களத்திலிருந்து ஒவ்வொன்றாக வெளியேற்றிக் கொண்டே இருப்பார். கடைசிவரை தெம்போடு நிற்கும் கதை சிறந்த கதை எனப் பரிசினைப் பெற்றுவிடும்.

சென்னையின் முக்கியமான இலக்கிய விழாவாக இலக்கியச் சிந்தனைப் பரிசளிப்பு விழா இருந்த காலம் ஒன்று இருந்தது. சில விழாக்களில் பார்வையாளனாகக் கலந்து கொண்டதுண்டு. அப்படிக் கலந்து கொண்டபோது நாமும் சிறுகதைகள் எழுத வேண்டும் என்ற ஆசை உண்டாகவில்லை. அதற்குப் பதிலாக ஆண்டின் 12 கதைகளை ஒட்டுமொத்தமாக வாசிக்க வேண்டும்; அவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அப்படித் தேர்ந்தெடுத்ததற்கான காரணங்களை விளக்கிக் கட்டுரை எழுத வேண்டும் என்ற ஆசை தான் உருவானது. அந்த ஆசையை நிறைவேற்றுவதற்கான முயற்சிகள் எதுவும் செய்யவில்லை. இலக்கியச் சிந்தனையின் வாசல்களும் சாவிகளும் யாரிடம் இருக்கின்றன என்பது தெரியாததால் முயற்சியைத் தொடங்கவே இல்லை. (இங்கே ஏதொன்றும் முயற்சி செய்யாமல் நடக்காது என்பதைத் தெரிந்து கொள்ளவே ஆண்டுகள் பல ஆகிவிடுகின்றன) இலக்கியச் சிந்தனை வழியாக நிறைவேறாத ஆசையை இங்கே இப்போது நிறைவேற்றக் கொள்ளப்போகிறேன் சில வேறுபாடுகளுடன்

என் முன்னால் இருப்பன 12 கதைகள் அல்ல 10 மட்டுமே. இந்தப் பத்துக் கதைகளையும் மே மாதத்தில் வாசித்தேன். நான் வாசித்த வரிசை:
1. வாய்க்கட்டு - கால பைரவன் (அம்ருதா, ஏப்ரல்)
2. ஆண்மழை - எஸ்.ராமகிருஷ்ணன் (உயிர்மை,ஏப்ரல்)
3. உன் பெயர் என்ன?- ஜெயந்திசங்கர் (தீராநதி, ஏப்ரல்)
4. ரெட் கார்ட் -மணி இராமலிங்கம் (காலச்சுவடு, ஏப்ரல்)
5. முதுகுக்குப் பின்னால் சில கண்கள் - விநாயக முருகன் (உயிர்மை,மே)
6. புளிப்புத் திராட்சை -யுவன் சந்திரசேகர் (காலச்சுவடு, மே)
7. சாவு சோறு -இமையம் (உயிர்மை,மே)
8. ஆகாசத்தின் உத்தரவு -இமையம் (ஆனந்தவிகடன்,28,5,2014)
9. சுதர்சினி -ரொமிலா ஜெயன் (அச்சில் வராத சிறுகதை)
10. வெளிச்சம்-அபிலாஷ் (அம்ருதா, மே)
ஒரு மாத காலத்துக்குள் இந்தப் பத்துக் கதைகள் தான் என் பார்வைக்குக் கிடைத்தன என்று நினைக்க வேண்டாம்.படித்த பல கதைகளைப் பேசுவதற்குரிய கதைகளாகக் கருதவில்லை என்பதால் பட்டியலில் சேர்க்கவில்லை. (நான் போடும் பட்டியலில் இடம்பெறவில்லையென்றால் என்ன? உங்கள் கதையை இடம்பெறச் செய்யும் பட்டியல் ஒன்றை இன்னொருவரைக் கொண்டு போட்டுக் கொள்ளுங்கள். ஆனால் ஏதாவதொரு பட்டியலில் இடம்பெறுவது முக்கியம். பட்டியலில் இடம் இல்லையென்றால் காணாமல் போய்விடும் ஆபத்து உண்டு)

ஒரு வருடத்தில் இலக்கியச் சிந்தனை தேர்வு செய்த 12 கதைகளை விடவும் சிறப்பான 10 கதைகள் இரண்டு மாத காலத்தில் வந்துள்ளன என்பதில் ஒரு கதைவாசகனாக எனக்கு மகிழ்ச்சி. தமிழில் குறிப்பிடத்தக்க கதைகளாக - பட்டியலிட்டுக் காட்டத்தக்க கதைகளாக ஒவ்வொரு மாதமும் 5 கதைகள் கிடைக்கும் என்றால் அந்த மொழியின் இலக்கியவளம் மெச்சத் தக்க ஒன்று என்றே சொல்லலாம். சிறந்த 5 சிறுகதைகள், 10 கவிதைகள், 2 நாவல், ஒன்றிரண்டு நாடகங்கள் எனத் தேர்வு செய்து சுடச்சுட ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட முடிந்தால் போதும் தமிழ் இலக்கியம் உலக இலக்கிய வரைபடத்தில் தள்ளமுடியாத இடத்தைத் தக்க வைத்து விடும். ஆகப் பெரும் விருதுகள் எல்லாம் அதனை நோக்கி வந்து சேரும் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை. இரண்டு மாத காலத்திற்குள் பட்டியலிடப்பெற்ற 10 கதைகளுக்குள் ஒரே எழுத்தாளர் எழுதிய 2 கதைகள் இடம்பெறுகின்றன என்பது அதைவிடவும் கூடுதலாக மகிழ்ச்சியளிக்கக் கூடிய ஒன்று. எப்போதும் கவனிக்கத் தக்க சிறுகதைகளையே எழுதுவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு பேனா பிடித்துள்ள இமையம் அப்படிப்பட்டவராக இருக்கிறார் என்பது ஆச்சரியப்படுத்தும் ஒன்றல்ல.

சரி இனி போட்டிக்குள் நுழையலாம்:

நான் நடத்தும் இசைநாற்காலிப் போட்டி சுவாரசியமாக இருந்தால் நீங்களும் சேர்ந்து விளையாடலாம். இல்லையென்று கருதினால் தூரப் போய்விடலாம். பறையும் மத்தளமும் முழங்கட்டும். ஓட்டம் தொடங்கட்டும். இருப்பது ஒன்பது நாற்காலி தான். நாற்காலி கிடைக்காமல் ஒதுங்கப் போகும் முதல் கதை எது ? என்று பார்க்கலாம்.

முதல் சுற்றின் முடிவில் வெளியேறும் கதை மணி இராமலிங்கம் எழுதிய ரெட் கார்ட் . பந்தய விதிகளையே புரிந்து கொள்ளாததுபோல் நின்று நின்று ஓடியதால் வெளியேறுகிறது. பள்ளிக் கல்வியின் மீது - கல்வி நிலையங்களின் தலைமைப் பீடத்தில் இருக்கும் பொறுப்பாளர்கள் மீது அந்தக் கதை எழுப்பும் விமரிசனமும், செய்யவேண்டிய மாற்றங்களும் முக்கியமானவை என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. “தடைகளுக்குப் பதிலாக அனுமதித்துப் பாருங்கள்; சிறுவர்களிடமும் இளையோர் களிடமும் நீங்கள் நினைக்கும் பலனைவிடக் கூடுதல் பலன் கிடைக்கும்” என்பதைக் கதைப் பொருளாக்கிய கதாசிரியரின் மொழிநடை அந்தப் பள்ளியின் முதல்வரிடம் வெளிப்பட்ட ராணுவக் கட்டுப்பாட்டை ஒத்ததாக இருக்கிறது.

கதைவெளியைப் பற்றிய சித்திரிப்புகளும் ராணுவ வீரனுக்குத் தரப்படும் ஆணையின் மொழியாகவே அமைந்திருக்கிறது. மொழிநடையில் இருக்கும் கட்டுப்பாடும் இறுக்கமும் கதையின் வாசகனை உள்ளே லகுவாக நுழைய விடாமல் தடுத்து, இடது, வலது என எங்கிருந்தோ வரும் ஆணைக்கேற்ப நகரும் ராணுவவீரனின் பார்வையைப் போல அசையச் செய்கிறது. ஆணைக்குக் கட்டுப்பட்டு வாசித்துப் பழக்கமில்லாத வாசகமனம் கதையின் முடிவை அடைவதற்குள் அந்நிய பாஷையொன்றின் கதையைத் தமிழில் பெயர்த்து வாசிக்கும் உணர்வை அடைந்து மூச்சு வாங்கி நிற்கிறது.

ரெட்கார்டைத் தொடர்ந்து வெளியேற வேண்டிய கதை விநாயகமுருகனின் முதுகுக்குப் பின்னால் சில கண்கள். பெருநகரத்து நவீன வாழ்வின் பிரிக்க முடியாத பகுதியாக மாறிவிட்ட தடுக்கு வாழ்க்கை(Cabin Life)யை வாழ நேரும் ஒருவனின் கதை அது. தகவல் தொழில்நுட்பம் சார்ந்த வேலைகளில் மட்டுமல்லாமல், நேரடி முதலாளிகளைச் சந்தித்து உரையாடித் தங்களின் நிலையைச் சொல்ல முடியாத வியாபார- தகவல்- குழுமங்களில் இந்தக் கதையில் வரும் பாத்திரங்களைக் காணமுடியும்.

உணர்ந்துகொள்ளாதவரை எதுவும் பிரச்சினைகள் எழுவதில்லை. கண்காணிக்கப்படுகிறோம் என்ற உணர்வுதான் ஒருவனை வன்முறையாளனாகவும், கோழையாகவும் ஆக்குகிறது. கொலை செய்கிறவன் வன்முறையாளன் ஆகிறான். தற்கொலை செய்துகொள்கிறவன் கோழையாகிறான். இரண்டின் தொடக்கப்புள்ளி ஒன்றுதான். அதிலும் கண்காணிக்கும் இடத்தில் சிந்திக்கக் கூடிய மனிதர்கள் இல்லை; எந்திரங்களே இருக்கின்றன; மறைவாக அவை எல்லாவற்றையும் பதிவு செய்து அனுப்பிக் கொண்டிருக்கின்றன என்பதை உணரும்போது மனித மனம் நிலைகுலைந்து போவது நிச்சயம். எதையும் சமாளிக்க முடியும் என்று நம்பும் நடுத்தரவர்க்க வாய்ச்சவடால் ஆசாமிகளுக்கு எந்தக் கண்காணிப்பும் ஒரு பொருட்டல்ல. ஆனால் இந்தக் கதையில் வரும் தேவசகாயம் பல தலைமுறைகளாகக் கண்காணிக்கப்பட்ட தன்னிலையால் ஆனவன். அது இந்திய சமூக அமைப்பான சாதிக்கட்டுமானத்தால் உண்டாக்கப்பட்ட கண்காணிப்பு வளையத்தில் இருந்து உருவான தன்னிலை. அதிலிருந்து மீளமுடியாது என அறியும்போது தன்னையே மாய்த்துக் கொள்ளும் இயல்பு கொண்டது. இந்தியக் கிராமிய வாழ்க்கையின் தொடர்ச்சியாக நீளும் நகரத்துக் கண்காணிப்பு வலிமையானது; தர்க்கநியாயங்களுக்குப் புத்தியைக் கொடுக்கத் தயாரில்லாதது எனச் சொல்லும் இந்த கதையில், கதைசொல்லியின் இடையீடுகளும், தேவையற்ற திசைதிருப்பல்களும் சேர்ந்து மையத்தைச் சிதறடித்துச் சவலைக் குழந்தையாக ஆக்கிவிட்டது.

இமையத்தின் சாவுசோறு மூன்றாவது சுற்றில் வெளியேற வேண்டிய கதை அல்ல. ஆனாலும் வெளியேற்றுவதைத் தவிர வேறு வழியில்லை. நிகழ்காலத் தமிழக வாழ்வில் -குறிப்பாகக் கிராமிய வாழ்வில்- தங்களின் சாதி மானங்காக்கப் பெண்களின் உடல்மீது பலவந்தமாக ஆதிக்கம் செலுத்தும் மனிதர்களின் மீது காறித்துப்பும் ஒரு பெண்ணின் - பூங்கோதையின் தலைவிரிக்கோலக் கதை சாவுசோறு. ஒருமுலை இழந்த பின் அடங்கிப் போன கண்ணகியின் கோபம் போலக் கோபம் கொண்டவள் அல்ல பூங்கோதை. தன் மகள் ஓடிப்போனதால் தன்னுடைய முலைகளும் தன் மகளின் முலைகளும் அறுக்கப்படும் என்பதைத் தெரிந்து கொண்டு எப்படியாவது மகளை - மகளின் முலைகளைக் காப்பாற்றிவிடவேண்டும் என்று தேடி அலையும் ஒரு தமிழ்நாட்டுக் கிராமத்துப் பெண். அந்தத் தாய் தன் கதையைக் கண்டவர்களிடமும் சொல்லப்பார்க்கிறாள்.

கண்ணீர் வழிய அவள் சொல்லும் கதையைக் கேட்கும் பொறுமை ஆண்களுக்கு இல்லை. பெண்களுக்குத்தான் பொறுமையும் இரக்கமும் இருக்கிறது என்ற வேறுபாட்டையும் இமையம் உருவாக்கிக் காட்டுகிறார். கால்வாசிக் கதையைக் கூடக் கேட்காமல் ஒரு பள்ளிக்கூடத்துக் காவல்காரன் விரட்டியடிக்கிறான். ஆனால் இன்னொரு பள்ளிக்கூடத்து மணி அடிக்கும் கமலா கேட்டு ஆறுதல் சொல்கிறாள்; அனுதாபம் கொள்கிறாள். அவள் தான் இந்தக் கேடுகெட்ட சாதியாதிக்க - ஆண் திமிர் மீது ஆத்திரம் உண்டு பண்ணுகிறாள். இவ்வளவு சிறப்பான கதையை மூன்றாவது சுற்றில் வெளியேற்ற மனம் விரும்பவில்லை என்றாலும், இந்தக் கதை இமையம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே உயிர்மையில் எழுதிப் பெயர் வாங்கிய பெத்தவன் கதையை அப்படியே நினைவுபடுத்துகிறது. பெத்தவனில் இடம்பெற்ற பழனியின் துடிப்பு தகப்பனின் மௌனமான மரணம் என்றால் சாவுசோறில் வரும் பூங்கோதையின் அங்கலாய்ப்பு ஆங்காரமான பெத்தவளின் ஓலம். பெத்தவனை நினைவூட்டியதால் சாவுசோறு போட்டியிலிருந்து ஒதுங்கிக் கொள்கிறது. 


ரொமீலா ஜெயன் எழுதிய சுதர்சினி, கதைக்குள் இருக்கும் காலத்தினாலும் களனாலும் முக்கியமான கதையாக இருக்கிறது. ஈழத்தமிழர்கள் நடத்திய போரில் தீவிரமான பங்கெடுப்பு எதனையும் செய்யாத நிலையிலும் பயங்கரவாதி எனக் கைது செய்யப்பட்டுச் சிறைக்குள் இருக்கும் அரசியல் கைதி சொல்லும் கதை. அவள் தன் கதையை சுதர்சினியின் கதையாக மாற்றிச் சொல்லவில்லை. சிறைக்கு வெளியே இருப்பதைவிட சிறைக்குள் இருக்கும் வாழ்வே மேலானதாக இருக்கிறது என நம்பும்- எடுபிடி வேலை செய்யும்- ஒரு பெண்ணின் பெயர்தான் சுதர்சினி. குடி, கஞ்சா, போதை மாத்திரைகள், குளிக்கும் சோப்பு, மிஞ்சிய சாப்பாடு, ஒருபால் புணர்ச்சி எனச் சிறைக்குள் இருக்கும் தாதாக்கள் தரும் பொருட்களுக்காகவும் ஆசை நிறைவேற்றல்களுக்காகவும் வெளியில் இருக்கும் சுதந்திர வாழ்வை விரும்பாமல் சிறைக்குள் வருவதையே வாடிக்கையாக்கிக் கொண்டவள் சுதர்சினி. அவள் மீது பரிவு கொண்ட அரசியல் கைதியின் கரிசனமான பார்வையில் கதையை விரித்துள்ளார் ரொமீலா ஜெயன். எழுதப்பெற்றுள்ள முறையிலேயே ஓர் உண்மைக் கதை என்ற வலுவான நிலையை உண்டாக்கும் மொழிநடையும் காட்சிச் சித்திரிப்புகளும் சேர்ந்து கவனித்துப் பேச வேண்டிய கதையாக ஆக்கியிருக்கிறது. கதையை அச்சிட விரும்பும் இதழாசிரியர்கள் யாராவது தொடர்பு கொண்டால் இந்தக் கதையை மட்டுமல்ல; அவரிடம் உள்ள வேறு கதைகளையும் கூட வாங்கித் தரலாம்.

இதுவரை சொல்லப்பட்ட நான்கு கதைகளும் ஒருவகையில் நடப்பியல் பாணியில் சொல்லப்பட்ட கதைகள் தான். அவை சித்திரிக்கும் களன்களும் நிகழ்வுகளும் நம்ப முடியாதவையாகத் தோன்றாது. இயல்பாகக் கதையை நகர்த்துவதுபோல இந்த நான்கு கதாசிரியர்களும் கதைக்கான வெளியை உருவாக்கிக் காலத்தை நேர்கோட்டில் நகர்த்திச் சென்றிருக்கிறார்கள். ஆனால் இனிச் சொல்லப்போகும் ஐந்து கதைகளும் அப்படிப்பட்ட கதைகள் அல்ல. கதைக்குள் இருக்கும் நேரடிக் காலத்திலும் நினைவுக்காலத்திலும் இடையீடு செய்வதன் மூலமாகவும் நிகழ்வுகள் மனிதர்களின் புறவெளியில் நடப்பன போல அமைக்கப்படாமல் மனவெளியில் நிகழ்வன போல எழுதப்பெற்ற கதைகள்.


அபிலாஷின் வெளிச்சம் கதை 1990 இல் கிரிக்கெட் மைதானத்தின் ஆடுகளத்தைச் சீர்செய்ய கல்கத்தா போன ஒருவர் சந்தித்த கலவரமும் அதனால் உண்டான கலவர மனமும் பற்றிய கதையாக அமைக்கப்பட்டுள்ளது. ஒரேமாதிரியான அதிர்ச்சி நிகழ்வைச் சந்தித்த பலரும் பலவிதமான எதிர்காலத்திற்குள் நுழைகிறார்கள்; நுழைபவர்கள் உருவாக்கிக் கொள்ளும் வெளிச்சம் அவர்களின் ஈடுபாட்டுத் துறைக்குள் உச்சத்திற்கான பாதையைக் காட்டவும் செய்யலாம்; இன்னதென்று அறிய முடியாத இருளையும் கொண்டுவந்து சேர்க்கலாம் என்ற விசாரணைக்குள் நுழையும் போது கதையின் தளம் நுட்பமான கதைத் தளமாக மாற்றம் பெறுகிறது. இந்தக் கதையின் முன்பகுதி உண்டாக்கும் மொழித்தடைகளையும் வெட்டிவெட்டி ஒட்டப்பட்ட தினசரிப் பத்திரிகைக் காகிதத்தால் ஆன ஓவியம் போன்ற சித்திரிப்பு முறையையும் வாசகன் தாண்டி வர வேண்டும். வாசகன் தாண்டி வர வேண்டும் எனச் சொல்வதைவிட அபிலாஷ் வாசகனைக் கடத்திக் கொண்டு வரும்படியான மொழிநடையைக் கைக்கொள்ள வேண்டும் என்றும் சொல்லலாம். அதைச் சாத்தியமாக்கும் நிலையில் அபிலாஷிடம் நவீனக் கதைகள் தொடர்ந்து கிடைத்துக் கொண்டே இருக்கும்.
 
காலபைரவனின் வாய்க்கட்டு கதை நவீன அறிவியலோடு மோதிப் பார்க்கும் ஒரு புனைகதை. மாந்திரீகமான கிராமப்புற வாழ்க்கை சார்ந்த நம்பிக்கைதான் கதையின் பரப்பு. தனக்குள் ஏற்றிக் கொள்ளும் ஒரு சக்தியின் மூலம் விலங்குகளின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்த முடியும் என நம்பியவன், அவைகளோடு பேச முடியும் என நம்புகிறவனாக மாறுகிறான்.
யானை அவனோடு பேசுகிறது என்பதை நம்ப முடியாமல் தவிக்கும் அவனது மனைவி, மருத்துவர்கள், மருத்துவக் கூடக் காட்சிகள் என யதார்த்தமான மனிதர்களோடும் இடங்களோடும் அவனது அதீதமான உணர்வுகளைக் கலந்து கதாசிரியர் கதைவெளியை நிரப்பியுள்ளார். அவனது கடந்த காலத்திற்குள் பச்சைஇலை மருத்துவம், வாய்க்கட்டு ரகசியம், இவை இரண்டையும் சொல்லிக் கொடுத்த தாண்டவராய மாமா. அவனது அம்மா, அக்கா போன்றவர்களின் கதைகள் எல்லாம் இடம்பெறுகின்றன. ஆங்கிலக் கல்வி கற்று ஆசிரியராக இருக்கும் ஒருவருக்குள் இருக்கும் நவீன அறிவின் போதாமையால் பாரம்பரிய அறிவுக்குள் சிக்கிக் கொள்ளும் இந்திய மனிதர்களின் வகைமாதிரி ஒருவரைப் பற்றிய ஒரு கீறல் தான் இந்தக் கதை. வாசிப்பில் ஈர்ப்பைத் தக்கவைக்கும் சொல்முறை கைவரப்பெற்றவர் காலபைரவன் . அந்த லாவகமே கதையை முக்கியமான கதையாக ஆக்கிவிடுகிறது.

ஒரு கணத்தில் அல்லது நிகழ்வில் அல்லது குறிப்பான தட்பவெப்பத்தில் அல்லது ஒரு பாத்திரத்தின் ஒற்றை உடல் பாகமொன்றில் நிலைகொள்ள வைத்துக் கதையைச் சுற்றிச்சுற்றிப் பின்னும் உத்தியை எஸ். ராமகிருஷ்ணனின் கதைகள் பலவற்றில் வாசித்திருக்கிறேன். ஆண்மழை என்ற இந்தக் கதை மழைபெய்யும் புறநிலையை அசைபோடும் அகத்திறப்புக் கணத்தால் உருவாக்கி விரிக்கிறது. 6 ஆண்டுகளாகப் பிள்ளை இல்லை என்பதை மனதிற்குள் வைத்துக் கொண்டு அதனை நினைவுபடுத்திக் கொள்ளாமல் காதல் செய்வதாகப் பாவனை செய்து கொண்டிருக்கும் கணவன்- மனைவி இருவரும் ஒரு மழை நாளின் குளிர்ச்சியில் தூண்டப்படுகிறார்கள். மழையை அளக்கும் பழக்கம் ஒன்று மட்டுமே தனது அப்பாவிடமிருந்து வந்துவிட்டதாக நினைக்கும் அவன் அறியாத குடும்ப ரகசியம் ஒன்றை அவனது மனைவி அறிந்திருக்கிறாள். எளிதில் கடந்து போகக் கூடிய ரகசியம் அல்ல அது. அவனது அப்பாவுக்கு இன்னொரு குடும்பம் இருந்தது என்னும் பெரும் ரகசியம். அந்த ரகசியம் தனக்கு மட்டுமே தெரியாத ரகசியம். தன் மனைவி அறிந்திருக்கிறாள் என்பதும், தனக்குத் தெரிந்த உண்மையை அம்மா மருமகளிடம் சொல்லிவிட்டுச் செத்திருக்கிறார்; ஆனால் தன்னிடம் சொல்லவில்லை என்பதுமான பெரும் ரகசியம் அது. ரகசியங்களின் விடுவிப்பாக வந்த மழை பயிர்களுக்கு உயிர் தரும் வெறும் மழையாக அல்லாமல் ஆண்மழையாக இருக்கிறது எனக் கதாசிரியர் சொல்கிறார். அப்படிக் கருதுவதற்கான காரணத்தைத் தேடும் பொறுப்பு வாசகனிடம் விடப்பட்டுள்ளது.

ரகசியம் காத்தலும் வாழ்க்கையின் அவிழ்க்க முடியாத முடிச்சுகளை நெகிழச் செய்துவிடும் மனமும் இந்தியப் பெண்களுக்கு இருக்கிறது. அது வெளிப்பார்வைக்கு இறுகிய கட்டாந்தரை போலத்தோன்றலாம்; உண்மையில் அது கட்டாந்தரையல்ல; ஈரத்துக்காக ஏங்கும் விளைநிலம். அதனை நனைத்து ஈரமாக்க ஒரு மழை ; பூரணமாக நம்பிக்கையோடு பெய்யும் ஒரு மழை - ஆண்மழை மட்டும் போதும் எனச் சொல்ல நினைத்ததாக நான் தேடிக் கண்டுபிடித்துக் கொண்டேன். மதுரையில் பிறந்து அமெரிக்க நகர் ஒன்றில் வாழ நேர்ந்தாலும் இந்தியப்பெண்ணின் தேவை தன்னை நம்பும் ஆணின் ஈரமான பேச்சுகளும் நம்புதலும் என எஸ். ராமகிருஷ்ணன் அழுத்தமாகச் சொல்லியிருப்பதாக நான் வாசித்தேன். இடியும் காற்றும் இல்லாத அமைதியாகப் பெய்யும் மழை போலக் கதையின் போக்கும் மொழியின் அர்த்தத்தளங்களும் விலகிக் கொண்டே போகிறது இந்தக் கதையில்.

ஜெயந்திசங்கர் எழுதிய உன் பெயர் என்ன?- என்ற கதை மூன்றாவது சுற்றிலேயே வெளியேறி இருக்க வேண்டிய கதை. ஆனால் அந்தக் கதை கவனப்படுத்தியுள்ள பிரச்சினைக்காகவே மூன்றாவது பரிசு வழங்கக் கூடிய கதை எனச் சொல்கிறேன். உலகம் முழுக்கப் பெரும்பான்மைக் கூட்டம் தங்களின் புத்தியை இழந்து கொண்டு வருகிறது. ஒருபுறம் உலகமயம் எனச் சொல்லி பொருளாதாரச் சுரண்டலை நடத்தும் அதே நேரத்தில் தேசம் என்ற அடையாளத்தை உருவாக்கி வெறிகொள்ளும்படியும் தூண்டுகிறது நவீன உலகம். ஜனநாயகச் சிந்தனைகளும், சமத்துவ எண்ணங்களும் உருவாக்கித் தந்த மனிதநேயத்தை இழந்து நாங்கள் பெரும்பான்மையர்கள், எங்களுடையதை தட்டிப் பறிக்க வந்தவர்கள் ஒவ்வொரு நாட்டிலும் இருக்கும் அந்நியர்களான சிறுபான்மையினர் என்ற கருத்தோட்டம் எல்லா நாடுகளிலும் பரவிக் கொண்டே வருகிறது. இந்த வெறி மேற்குலகத்திலிருந்து கிழக்கு உலகம் வரை தீயாகப் பரவிப் புலம்பெயர்ந்து வாழும் மனிதர்களை அச்சத்திற்குள்ளேயே வாழும்படி நிர்ப்பந்திக்கிறது. இந்த நிர்ப்பந்தத்தின் வெளிப்பாட்டை ஜெயந்தி சங்கரின் எளிய - சிறியகதை புரிய வைத்துள்ளது. புத்திசுகவீனமான பெண்ணிற்குள்ளும் பெரும்பான்மை மனோபாவம் நிலைகொண்டிருக்கிறது என்பதை ஒரு பேருந்து பயணக்காட்சியின் விவரிப்பாகக் கதையை அமைத்துக் காட்டியுள்ளார். தனது மீன் தொட்டிக்குள் இருக்கும் மீன்களுக்கான குட்டி மீன்களையும், மீன் உணவுப் பண்டங்களையும் விற்பவர்கள் இந்தியர்கள். அவர்கள் கடையை மூடிவிட்டார்கள். ஏதோ ஒரு மீன்விற்கும் இந்தியன் கடையை மூடிவிட்டான் என்பதற்காக ஒட்டுமொத்த இந்தியர்கள் மீதும் அவளுக்கு வெறுப்பு ஏற்படுகிறது. ஏனென்றால் மலேசியாவில் இந்தியர்கள் வந்தேறிகள்; சிறுபான்மையினர். தேசங்களின் எல்லைக்கோடுகள் கற்பனைக்கோடுகளாக ஆகிக் கொண்டிருக்கும் நேரத்தில் வந்தேறிகள்; சிறுபான்மையினர்; சொந்த நாட்டு மக்களின் உணவைப் பறித்துக் கொள்ள வந்த கொள்ளையர்கள் என்ற குரூரமான எண்ணங்களையும் நிகழ்கால உலகம் உற்பத்தி செய்து கொண்டே வருகிறது. கதை சொல்லலில் புதிய உத்திகளோ, வாசகனைத் திக்குமுக்காட வைத்து நிதானத்துக் கொண்டுவரும் மொழிச் சிடுக்குகளோ இல்லாமல் எழுதப்பெற்ற இந்தக் கதை, உலகப் பிரச்சினை ஒன்றைக் கவனப்படுத்தியுள்ளது என்பதற்காகவே முக்கியமான கதையாக ஆகிறது.
 
விராட பர்வத்தை உனக்கு யார் சொன்னது என்று கேட்டால் என் தாய்மாமா சொன்னார் என்று தான் சொல்வேன். அவரோ வேதவியாசனுக்கு ஜெனமே ஜெய மகாராசன் சொன்னது எனவும், ஜெனமேஜெய மகாராஜனுக்கு அவனது மூதாதையர்களின் ஒருவனான ... சொன்னது எனவும் சொல்லியிருக்கிறார். யுவன் சந்திரசேகரின் புளிப்புத்திராட்சை என்ற கதை மட்டுமல்ல; பல கதைகள் இதிகாசக் கதை சொல்லும் மரபைப் பின்பற்றி நிகழ்கால மனிதர்களின் கதையைச் சொல்லும் தன்மை கொண்டவை.


கிராமப்புறத்தில் வாழ்ந்து கெட்ட ஒரு குடும்பத்தின் கதைதான் புளிப்புத் திராட்சை ஆனால் சொல்லப்பட்ட முறையால் தொடர்ச்சியற்ற எழுத்தின் சாத்தியங்களைப் முழுமையாக வாசகனுக்குத் தரும் கதையாக இருக்கிறது. மார்க்கேஸின் மரணத்தை அறியாத அவரது ரசிகன் வெயிலுமுத்துவைக் கதைக்குள் கொண்டுவந்ததன் வழியாக நவீனத்துவக் கதைகளின் வாசிப்பு முறையைக் கோரும் யுவன் சந்திரசேகர், “ ஒருவேளை காந்தாரியின் ஜாதகமும், தனது ஜாதகமும் ஒன்றாய் இருக்கும் பட்சத்தில் ரத்த முத்துக்கள் நூற்றுக் கணக்கில் குழந்தைகளாக மாறினால், அவர்களையும் சாபம் பிடித்துவிடுமே என்ற அக்கறையால்..” போன்ற குறிப்புகளைத் தருவதன் மூலம் பாரதக் கதையின் பாணியே அதுவும் என எனச் சொல்லவும் விரும்பியுள்ளார்.

கதை சொல்லும் முறைகளின் அடுக்குகளைத் தாண்டி மூவார்நத்தம் ராமசுப்பு வைத்தியரின் வார்த்தைகளாகக் கதைப்பரப்பு மாறும்போது ஒரு பழைய பிரபுத்துவக் குடும்பத்தின் ரகசிய அடுக்குகளாக விரிகிறது. ராமசுப்பு வைத்தியர் மட்டுமல்ல்; தாந்திரீக வேலைகளும் தெரிந்தவர் என்று அறிமுகப்படுத்திவிட்டு. அவரைக் கிண்டலும் கேலியுமாகக் கூப்பிடும் உரிமை கொண்ட லச்சம் என்னும் லக்ஷ்மம்மா,சப் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, ரேஞ்சர் பொன்னுச்சாமி ஆகியவர்களைப் பதவி அடையாளங்கள் நீக்கப்பட்ட மனிதர்களாகக் கதைக்குள் கொண்டுவந்துள்ள விதம் குறிப்பிடப்பட வேண்டியதாக இருக்கிறது.

நவீன வாழ்க்கைக்குள் இருக்கும் நகரமனிதனான கதையின் வாசகன் தனது கடந்தகால நினைவுப்படுகைகளின் வழியாகப் பயணம் செய்யும் வாய்ப்பை உருவாக்கும் எழுத்துமுறையால் யுவன் எப்போதும் தேர்ந்த கதைக்காரனாகவே வெளிப்படுகிறான். அதுமட்டுமல்லாமல், “ ...... என்றாலும், ஊரார் துணிகளில் அழுக்கு நீக்கும் உரிமை ஏகாலியிடமும், ஊரார் ரோமங்களை மழிக்கும் பொறுப்பு நாவிதனிடமும், ஊரார் கனவுகளைச் செப்பனிடும் வித்தை ஜோசியனிடமும், ஊரார் வருவாயைப் பிடுங்கும் சாமர்த்தியம் சர்க்காரிடமும் இருக்கிற மாதிரி, ஊரார் நோவுகளைச் சுமக்கும் பாக்கியம் வைத்தியனைச் சேரும் என்பதால் எங்களுக்கு மட்டும் விலக்கு உண்டு என்று வாசல்தேடி வந்து கிளிஜோசியன் அவளிடம் அடித்துச் சொன்னதன் அடிப்படையில், என்னிடம் வந்து சேர்ந்த கதைகளைத் தான் உங்களிடம் சொல்கிறேன்.” எனக் கதைக்குள் உருவாக்கும் சுவாரசியமான சொல்முறையாலும் யுவனின் கதைகள் ரசிக்கத் தக்க - நினைக்கத் தக்க கதைகளாக இருக்கின்றன. இந்தக் கதையும் அப்படி நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய கதையே.

ஒன்பது சுற்றின் முடிவிலும் ஓடிக் களைத்துவிடாமல் நிதானமாக நிற்கிறது இமையத்தின் ஆகாசத்தின் குரல். அத்துவானக் காட்டில் நிற்கும் குலதெய்வமான முனியசாமியோடு ஆகாசம் நடத்தும் உரையாடல் தான் கதை நிகழ்வு. பெரியதும் சிறியதுமான திருட்டுகள் வழியே தனது வாழ்க்கையை நடத்தும் ஆகாசம், திருவிழா நாளொன்றில் திருடப்போவதற்குக் குலசாமியிடம் உத்தரவு கேட்கும் உரையாடல் வழியே கடவுளோடு பேசுகிறான். அந்தப் பேச்சு இந்திய தத்துவமரபில் சிலாகித்துப் பேசப்படும் ஞான மரபின் பேச்சுப்போல விரிகிறது.

“ஒருவனுக்கான கடவுள் அவனிடம் தான் இருக்கிறது; அது அவனாகவே இருக்கிறது. அவன் நடத்தும் தொழிலுக்கான நியாயங்களை அவனே உருவாக்கிக் கொள்ள வேண்டியதுதான்; அவனுக்கு அவனே உத்தரவு பெற்றுக் கொள்ள வேண்டியதுதான்” என்னும் ஞான மரபே இந்தியத் தத்துவங்களில் விதந்து பேசப்படும் அத்வைத வேதாந்தம். இந்தக் கதையில் முனியசாமியோடு உரையாடல் செய்வதற்காக உருவாக்கிய ஆகாசம் நிகழ்கால அரசியல், பொருளாதார,பண்பாட்டுச் சமூகச் சிடுக்குகள் சார்ந்து தர்க்கரீதியாக உரையாடல் செய்கிறான்.

“ஒலகத்துல எவன் ஓக்கியம்? பொய் சொன்னது இல்லை; பித்தலாட்டம் செஞ்சது இல்லை; அடுத்தவன் பொருளுக்கு ஆசைப்பட்டது இல்லை; தொட்டதும் இல்லை’னு சொல்ற ஓக்கியன் எவனும் இன்னும் பூமியில் பொறக்கலை. நேரம் சரியில்லை. ஒன்னோட துணை எனக்கு இல்லை; ஒன்னோட அருளு இல்லை. அதான் அன்னிக்கி மாட்டிக்கிட்டேன்” இதுபோலப் பலகேள்விகளால் முனியசாமியைத் திக்குமுக்காட வைக்கும் ஆகாசத்தின் விளக்கங்கள் பல நேரங்களில் சமுக அரசியல் நடவடிக்கைகளின் மீதான விமரிசனமாகவும் இருக்கிறது. எல்லாவற்றையும் எடுத்துக் காட்டிப் பேச வேண்டுமென்றால் கதையின் மொத்த உரையாடலையும் திரும்பவும் நான் சொல்ல வேண்டும்.

பாரம்பரியம் சார்ந்த நம்பிக்கைகளையும் ஜனநாயக அரசுகள் உருவாக்கிய சட்டங்கள் சார்ந்த தர்க்கங்களையும் தனது நியாயங்கள் சார்ந்து -விளிம்புநிலைச் சமூகத்தின் அடிப்படைகள் சார்ந்து -கேள்விக்குள்ளாக்கும் ஆகாசத்தின் உரையாடல்கள் பின் நவீனத்துவ மனத்தின் தயக்கமற்ற உரையாடல்களாக இருக்கிறது. எதார்த்தக் கதையின் சாயலைத் தவறவிடாமல் நிகழ்கால வாழ்வின் மீதான கேள்விக் கணைகளைத் தொடுக்கும் ஆகாசத்தின் உத்தரவு பத்துக் கதைகளில் முதன்மையான கதையாக நிற்கிறது. இனி அடுக்கப்பட்ட காரணங்களோடு பத்துக் கதைகளின் பட்டியல்:


1. ரெட் கார்ட் -மணி இராமலிங்கம்
2. முதுகுக்குப் பின்னால் சில கண்கள் - விநாயக முருகன்
3. சாவு சோறு -இமையம்
4. சுதர்சினி -ரொமிலா ஜெயன்
5. வெளிச்சம்-அபிலாஷ்
6. வாய்க்கட்டு - கால பைரவன்
7. ஆண்மழை - எஸ்.ராமகிருஷ்ணன்
8. உன் பெயர் என்ன?- ஜெயந்திசங்கர்
9. புளிப்புத் திராட்சை -யுவன் சந்திரசேகர்

10. ஆகாசத்தின் உத்தரவு -இமையம்
========================================== நன்றி: உயிர்மை, ஜூலை, 2014

கருத்துகள்

Thenammai Lakshmanan இவ்வாறு கூறியுள்ளார்…
அருமையான விமர்சனம். !

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தி.சு.நடராசனின் திறனாய்வுப் பார்வைகள் :தமிழ் அழகியல், தமிழகத்தில் வைதீக சமயம்

உடல் மறுப்பு என்னும் பெரும்போக்கு

கற்றல் - கற்பித்தல்: மாணவ ஆசிரிய உறவுகள்