கற்றது தமிழ் : ஒரு விவாதம்

அபிலாஷ்:
=========

அ.ராமசாமி “கற்றது தமிழ்” பற்றி ஒரு மீள்பதிவு போட்டிருக்கிறார். அதில் தமிழ் படித்ததினால் ஒருவன் கொலைகாரனாய் மாறுவதாய் வருவதாய் கூறி குழப்புகிறார். உதாரணமாய் //அப்படிச் சொல்வதன் மூலம் அவன் செய்த தான்தோன்றித் தனமான வாழ்க்கைப் பயணங்களுக்கும் பொறுப்புணர்வற்ற முடிவுகளுக்கும் தமிழ்க் கல்வி தான் காரணமோ என நினைக்கும்படி படத்தின் கதை அமைப்பும் கட்டமைப்பும் உருவாக்கப் பட்டுள்ளது. // ஆனால் இது தவறான புரிதல். நகரமும் அந்நியமாதலும் தான் அவனை கொலைகாரனாக்குகிறது. இதை அவர் கவனிக்கவில்லை. காம்யுவின் தாக்கம் இப்படத்தில் உண்டு. படத்தை இன்னும் சரியாக கவனித்து - குறிப்பாய் ஐரோப்பிய தத்துவ பின்னணியில் - அவர் எழுத வேண்டும். இது தமிழ் கற்பது பற்றின சினிமா அல்ல. அது படத்தின் புரொமோஷனுக்கான ஒரு தந்திரம். படத்தில் தமிழ் தேசியவாதமும் ஆழமாய் இல்லை. இது அந்நியமாதலுக்கும் நகர்மய வன்மத்துக்கான உறவை பேசுகிற படம்.

நான்:

சரியான அர்த்தத்தில் சொல்வதானால் இது மீள்பதிவு கிடையாது. அதோடு இப்போது ஏதோ எழுதிக் குழப்புகிறேன் என்று வேறு குற்றம் சாட்டுகிறீர்கள், கவனித்து எழுத வேண்டும் என்று வேறு ஆலோசனை சொல்கிறீர்கள். அதனால் தான் விளக்க வேண்டியுள்ளது. சரி அது போகட்டும். எனக்குத் தெரிந்ததை நான் சொல்லிப் பார்க்கிறேன். கற்றது தமிழ் படத்துக்கு முதலில் வைத்த பெயர் தமிழ் M.A. என்பது உங்களுக்கு நினைவில் இருக்கிறதல்லவா? மையப்பாத்திரத்திற்கு இயக்குநர் வைத்த பெயர் பிரபாகரன். இவையெல்லாம் தமிழ்த் தேசிய அரசியலோடு தொடர்பில்லாதது என்று எப்படிச் சொல்கிறீர்கள். அதையும் ப்ரோமொசனுக்காக என்று ஒதுக்கிவிட வேண்டும் என்கிறீர்களா? .அந்தப் படம் காட்சி மூலமாகவும் உணர்ச்சிகரமான உரையாடல் வழியாகவும், கோபம் கொப்பளிக்கும் கவித்துவமான தனிமொழிகள் மூலமாகவும் தமிழ் கற்பதின் சினிமாவாகவே இருக்கிறது எனச் சொல்லமுடியும். வேண்டுமென்றால் நகர்மயமாதல் நிகழ்ந்த பின்பு தமிழ் கற்றதன் விளைவுகள் என்று வேண்டுமானால் கூடுதலாக விளக்க முடியும். அது இல்லை; இதுதான் என்று சொல்ல நீங்கள் விரும்பினால் ஒரு கட்டுரையை இப்போது கூட எழுதலாம். நான் வாசிக்கத் தயாராக இருக்கிறேன். பலரும் தயாராக இருப்பார்கள் என்றும் நம்புகிறேன். மார்க்ஸின் அந்நியமாதலின் மூலச் சொல்லாடல் பொருளாதாரம் சார்ந்தது. ஒருவன் உற்பத்தி செய்யும் பொருள், நிர்ணயிக்கப்படும் லாபம் உள்ளிட்ட விலையால் அவனே பயன்படுத்த முடியாத ஒன்றாக - அந்நியமாக ஆகிவிடும் என்ற பொருளியல் நடவடிக்கை வழியாக விளக்கம் பெற்றது. அதன் தொடர்ச்சியாகவே பண்பாட்டின் அந்நியமாதலைப் பின்வந்தவர்கள் விளக்கம் செய்தார்கள். ஐரோப்பியச் சூழலில் விளக்கப்பட்ட அந்நியமாதலை அப்படியே இந்தியச் சூழலிலும் விளக்கிவிட முடியும் எனத் தோன்றவில்லை. இந்திய எழுத்தாளர்களுக்குள் இருக்கும் கழிந்தது தேடல் - நாஸ்டால்ஜிக் - முழுமையும் அந்நியமாதலும் அல்ல. அது பின்நவீனத்துவம் சொல்லும் அலைவுறு மனத்தின் வெளிப்பாடாகவும் விளக்கப்பட வேண்டியது. அதேபோல் காம்யுவின் எந்த அம்சத்தின் தாக்கம் இருக்கிறது என்பதையும் நீங்கள் சொல்ல வேண்டும். பொத்தாம் பொதுவாக காம்யுவின் தாக்கம் என்றால் போதுமா? கணியன் பூங்குன்றனின் தாக்கம் சார்த்தரிடம் இருக்கிறது என்று கூட நான் சொல்ல முடியும். ”நீர்வழிப்படூஉம் புனை” போல என்ற உவமையை வைத்து இருப்பியல்வாதத்தை விவரித்துக் கொண்டிருக்கலாம் . சார்த்தர் பூங்குன்றனைப் படித்தாரா? புரிந்துகொண்டாரா என்பதுதானே கேள்வி. உலகப்பொதுவான இயங்குநிலைகளைப் படைப்பாக மாற்றக் கோட்பாட்டாளர்களை வாசித்திருக்க வேண்டும் என்ற முன்நிபந்தனை கிடையாது என்பதைத் தெரிந்தே நான் சொல்கிறேன்.

================

November 05, 2007 இல் எழுதப்பெற்ற விமரிசனக்கட்டுரை


தமிழ் எம்.ஏ.- தமிழின் பெயராலும் கொலைகள்


தமிழ்த் திரைப்பட உலகம் எப்போதும் ஏதாவது ஒரு முன் மாதிரியைப் பின்பற்றிச் செல்லும் மந்தைத் தனத்தைப் பின்பற்றும் இயல்புடையதாகவே இருக்கிறது. ஊரின் பெயரில் ஒரு படம் வெற்றி பெற்றால் அடுத்தடுத்து ஊர்களின் பெயரைத் தலைப்பாக வைத்துப் படம் எடுப்பதுண்டு. இப்போதைய போக்கு ஒரு பெயரில் படத்தைத் தொடங்கிப் பின்னர் வேறு பெயரில் வெளியிடுவது என்று நினைக்கிறேன்.

அரசாங்கம் அளிக்கும் வரிச்சலுகைக்காக தமிழ் எம்.ஏ. என்ற தலைப்பு கற்றது தமிழ் என மாற்றம் செய்யப்பட்டது என்ற கருதி அதை விட்டு விடலாம். பெயர் மாற்றத்திற்குக் காரணம் எதுவாகவும் இருந்து விட்டுப் போகட்டும். படத்தின் மையக் கதாபாத்திரமான பிரபாகரன் தமிழ் முதுகலை பயின்றவன் என்ற குறிப்பு தொடக்கத்தில் தகவலாகத் தரப்படுகிறது. படத்தின் முடிவில் இருபதுக்கும் மேற்பட்ட கொலைகளைச் செய்தவன் அவன் என்ற விவரங்கள் பார்வையாளர்களுக்குக் கிடைக்கிறது.

காவல் துறையின் விதிகளுக்குப் புறம்பான செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டதால் தேடப்படும் குற்றவாளி என அவனைக் காட்டியபின்பு அத்தகவல் திரும்பத் திரும்ப அழுத்தமாகச் சொல்லப்படுகிறது. அப்படிச் சொல்வதன் மூலம் அவன் செய்த தான் தோன்றித் தனமான வாழ்க்கைப் பயணங்களுக்கும் பொறுப்புணர்வற்ற முடிவுகளுக்கும் தமிழ்க் கல்வி தான் காரணமோ என நினைக்கும்படி படத்தின் கதை அமைப்பும் கட்டமைப்பும் உருவாக்கப் பட்டுள்ளது. இதைக் கூடப் பொழுதுபோக்குச் சினிமாத் துறையினர் பொறுப்பற்ற செயல்பாடு என ஒதுக்கி விடலாம். ஆனால் இருபதுக்கும் மேற்பட்ட கொலை களுக்கும் படத்தின் முடிவில் காதலியுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொள்வதற்கும் தமிழ் எம்.ஏ. படித்ததுதான் காரணம் என வாதங்களை முன் வைக்கும் ஒரு திரைப்படத்தை அவ்வாறு ஒதுக்குவது பொறுப்புள்ள மனிதர்களின் செயலாக இருக்க முடியாது .

தமிழில் வெளியாகும் சினிமாக்கள் பலவகை உண்டு . எடுக்கப்படும் எல்லாப் படங்களும் வியாபார ரீதியாக வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு தான் எடுக்கப்படுகின்றன. அந்த நோக்கம் இல்லாமல் ஒரு சினிமா எடுக்கப் படவேண்டும் என எதிர்பார்க்கவும் வேண்டியதுமில்லை. அதே போல் தமிழ்¢ சினிமாக்களை அதன் பார்வையாளர்கள் பார்க்கும் விதத்திலும்¢ பலவிதமான போக்குகள் இருக்கின்றன. இரண்டு வாரம் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடுவதற்கு உத்தரவாதம் அளிக்கும் நடிகன் இங்கு நட்சத்திர நடிகர்களின் வரிசையில் சேர்ந்து விடுகிறான். அதன் பிறகு அவன் நடிக்க வேண்டிய படத்தின் முக்கியமான அம்சங்கள் பலவற்றையும் அவனே தீர்மானிக்கிறான். இந்தப் போக்கு இன்று நேற்று தொடங்கிய போக்கல்ல. தமிழ் சினிமாவிற்குள் எம்.ஜி ஆர், சிவாஜி என்ற இரண்டு நட்சத்திர நடிகர்களின் ஆதிக்கம் தொடங்கிய நாளிலிருந்து நிலவும் ஒன்று.

நடிகன் நட்சத்திர நடிகனாக ஆவதற்குப் பாடுபடுவதைப் போலப் புதிதாக வரும் இயக்குநர்களும் புதுமைகள் சிலவற்றைச் செய்து வெற்றிப் பட இயக்குநராக வேண்டும் என்பதான முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். உலகப் படங்கள் பலவற்றைப் பார்த்துத் தொழில் நுட்ப அறிவை வளர்த்துக் கொள்ளும் இவர்கள் திரைப்படத்தின் மொழியைக் கற்றுக் கொண்டு இயக்குநர் ஆகிறார்கள் என்பது ஓரளவு உண்மைதான்.

கற்றது தமிழ் படத்தின் இயக்குநர் ராமிற்கு இதுதான் முதல் படம். அவரும் தொழில் நுட்ப அறிவை முறையாகக் கற்றுக் கொண்டே இயக்குநராக ஆகியிருக்கிறார் என்பது படத்தைப் பார்க்கும் போது புலனாகிறது. அத்துடன் வழக்கமான மசாலா சினிமா இயக்குநர்களிடமிருந்து மாறுபட்ட சினிமாவைத் தர வேண்டும் என்ற விருப்பம் கூட அவருக்கு இருந்துள்ளதும் புரிந்துள்ளது. இதற்கு- ஒரு மொழியில் திரைப்படக் கலைஞனாக, அதுவும் இயக்குநராகச் செயல் படுவதற்கு- திரைப்படக் கலையின் தொழில் நுட்ப அறிவு மட்டுமே போதுமா..? என்பது அடிப்படையாக எழுப்ப வேண்டிய கேள்வியாக இருக்கிறது.

தற்கொலை செய்து கொள்ள முயன்று கைது செய்யப்படும் நாயகனின் வாக்குமூலத்தையே கதைசொல்லும் உத்தியாகக் கொண்டு திரைக்கதையை அமைத்துள்ளார் இயக்குநர். வாக்குமூலம் தான் கதை சொல்லும் வடிவம் என்பதற்காகக் கதையின் போக்கை ஒற்றை நேர்கோட்டிலும் சொல்ல வில்லை. காலத்தை வெட்டி வெட்டி முன்னும் பின்னுமாகக் காட்சிகளை அமைத்துள்ளார். அதிகமான கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொள்ளாமல் மையக் கதாபாத்திரத்தோடு நெருங்கிய தொடர்புடையதாகக் கருதும் பாத்திரங்களை மட்டும் அழுத்தமாக உருவாக்க வேண்டும் என நினைத்துள்ளதும் புரிகிறது. வழக்கமாகத் தமிழ் திரைப்படங்களில் இடம் பெறும் சண்டைக் காட்சிகளோ நகைச்சுவைத் தோரணங்களோ நடனங் களோடு கூடிய பாடல் காட்சிகளோ படத்தில் இல்லை.

கதை நிகழ்வின் களன்கள் மாறும் போது தேவைப்படும் வண்ண மாற்றமும், அக்களன்களின் வெப்ப நிலை மாற்றத்தை உணர்த்தும் வகையிலான ஒளியமைப்பும் கூடக் கவனமாகச் செய்யப்பட்டுள்ளது. பாத்திரங்களை ஏற்று நடிக்கத் தேர்வு செய்யப்பட்டுள்ள நடிகர்களிடமும் தேவையான நடிப்பைக் கொண்டுவர முயன்று வெற்றியும் பெற்றுள்ளார். இவை எல்லாம் இருந்தும் கற்றது தமிழ் என்ற படம் ஒரு நல்ல சினிமா என்ற தகுதியைப் பெறாமல் எதிர்மறைச் சினிமா என்ற அடையாளத்தோடு, தோல்விப் படம் என்ற வரிசையில் சேரப் போகிறது என்பது வருத்தமளிக்கக் கூடிய ஒன்றுதான்.

கற்றது தமிழ் எனப் பெயரை மாற்றி வெளியிட்டாலும் முதலில் வைத்த ‘தமிழ் எம்.ஏ.’ என்கிற தலைப்பு தரும் உணர்வும் எழுப்பும் கருத்தோட்டமும் முக்கியம் என இயக்குநர் கருதியுள்ளார். தமிழ் கற்றவன் மென்மையான உணர்வுகளோடு அடிப்படையான அறங்களைப் பின்பற்றுகிறவனாகவும், மனித நேயம் கொண்டவனாகவும் இருப்பான். அதற்காகப் பல நேரங்களில் உணர்ச்சி வசப்பட்டு முடிவுகளை எடுப்பதும் உண்டு என்பதான காட்சிகளை அதிகம் வைத்துள்ள இயக்குநர் திடீரென்று அவனை நிகழ்கால அரசியல் பொருளாதார வெளியில் தள்ளிவிட்டு கொலைகாரனாகவும் - பொறுக்கித் தனமான (லும்பனாக) வும் காட்டத் தொடங்கும் போது தடுமாற்றம் அடைகிறார்.

ஒரு பத்து நிமிட வாக்குமூலமும் அதனைத் தொடர்ந்து அவன் செய்யும் கொலைகளும் நிகழ்காலத் தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தாராளமயப் பொருளாதார வாழ்வின் நெருக்கடியில் மரபான கல்வியைக் கற்றவன் ஒதுக்கப்படுவதையும் , மரபான தமிழ் வாழ்வின் பண்பாட்டுக் கூறுகள் மீறப்படுவதையும் ஆவேசத்தோடு கேள்வி கேட்டு தண்டனைகளை வழங்குகிறது. அமெரிக்கக் கம்பெனிகளில் வேலை பார்க்கும் தொழில் நுட்பக் கல்வியாளர்களை எதிரிகளாகவும் துரோகிகளாகவும் சித்திரித்து அவர்களை மிரட்டும் நாயகன், தனக்கு இருபத்தாறு வயது வரை பாலியல் சார்ந்த விருப்பம் ஈடேறவில்லை என்பதற்காகக் கடற்கரையில் காற்று வாங்கியபடி உட்கார்ந்திருக்கும் ஜோடிகளை யெல்லாம் கூடக் கொலை செய்யத் தொடங்குகிறான்.

மொத்தப் படத்தின் ஓர்மையில் இவை இடம் பெறுவதற்கான பொருத்தம் எதுவும் இல்லை.அத்துடன் இவையெல்லாம் தமிழ் எம்.ஏ. படித்தவர்களின் பிரச்சினைகள் மட்டும் அல்ல. கல்வியை ஞானத்தின் தேடல் என்று கருதிக் கற்றுக் கொண்டவர்களின்- கற்பிப்பவர்களின் பிரச்சினைகள். இந்தியாவில்/ தமிழகத்தில் நிலவும் வறுமைக்கும் வேலை வாய்ப்பின்மைக்கும், ஏழை- பணக்காரர்கள் இடையே நிலவும் பாரதூரமான வேறுபாடுகளுக்கும், கிராமங்கள் சிதைக்கப்பட்டுக் காணாமல் போவதற்கும் காரணங்கள் இந்தப் பத்துப் பதினைந்தாண்டுப் பொருளாதார மாற்றங்கள் தான் எனச் சொல்வது அறியாமையின் விளைவு.


சுதந்திர இந்தியாவின் தலைவர்கள் அடுத்தடுத்து எடுத்துக் கொண்டிருக்கும் முடிவுகளின் தொடர்ச்சிகள் எல்லாவற்றிற்கும் அதில் பங்கு உண்டு. அதை மாற்றுவதற்கு அரசியல் ரீதியான போராட்டங்களையும் மாற்றுச் சிந்தனை களையும் முன் வைக்கத் தக்க படங்களை எடுக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் எம்.சி.ஏ. படித்ததால் நாற்பதாயிரம் சம்பளம் வாங்கிக் கொண்டு காரில் செல்லும் ஒருவனை நிறுத்திக் காயப்படுத்தி அனுப்புவதாகப் படம் எடுப்பதும், காதலியைத் தேடி அடைந்த பின்பு திருந்தி வாழலாம் என நினைப்பதும், அதுவும் தடுக்கப்படும் நிலையில் தற்கொலை செய்து கொள் வதாகக் காட்டுவதும் அரசியல் படமாகாது.

இவற்றையெல்லாம் பற்றிப் படம் எடுக்க வேண்டும் என்றால் வெறும் திரைப்படத்தொழில் நுட்ப அறிவு மட்டும் போதாது. தொழில் நுட்ப அறிவுக்குச் சமமாகத் தமிழ் வாழ்வின் வரலாற்றையும் நிகழ்காலத் தமிழ்ச் சமூகத்தின் நெருக்கடி களையும், அதனால் சிக்கித் தவிக்கும் தமிழர்களின் மனப் போக்கையும் புரிந்து கொள்வதற்கான கல்வியையும் கற்றாக வேண்டும். அத்தகைய அறிவைப் பெறுவதற்கும் புரிந்து கொள்வதற்கும் நமது இளம் இயக்குநர்கள் முயற்சிகள் செய்வதாகவே தெரியவில்லை. இந்தப் படத்தின் மையக் கதாபாத்திரமான பிரபாகரன் ‘ஆர்வத்தால் தமிழ் படிக்க வந்தேன்’ எனச் சொல்வது போல இந்த இயக்குநர்களில் பெரும்பாலோர் வெறும் ஆர்வத்தால் திரைப்படத்துறைக்குள் நுழைந்தவர்கள். அவர்களின் வாழ்க்கை வெளிக்குள் இவையெல்லாம் தூரமானவை.
===============================================

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தி.சு.நடராசனின் திறனாய்வுப் பார்வைகள் :தமிழ் அழகியல், தமிழகத்தில் வைதீக சமயம்

உடல் மறுப்பு என்னும் பெரும்போக்கு

கற்றல் - கற்பித்தல்: மாணவ ஆசிரிய உறவுகள்