உண்மைக்குப் பக்கத்தில் ஒரு சினிமா: ஆந்த்ரே வெய்தாவின் வாக்களிக்கப் பெற்ற பூமி

பழைய படம் தான். 1975 இல் வந்த அந்த போலிஷ் படத்தின் தலைப்பு ஜெமியா ஒபிஜியானா. ஆங்கிலத்தில் ப்ரொமிஸ்டு லேண்ட் (Promised Land) என மொழி பெயர்க்கப் பெற்றதைத் தமிழில் வாக்களிக்கப் பெற்ற பூமி என பெயர்த்துச் சொல்லலாம். தொழிற்புரட்சி மற்றும் நகர்மயமாதலின் பின்னணியில் நிகழ்ந்த உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட அந்தப் படத்தை எனது மாணவிகளோடும் மாணவர்களோடும் சேர்ந்து பார்த்தேன். எனக்கு நம்பிக்கையுள்ள கலை இலக்கியக் கோணத்தில் இந்தப் படம் முக்கியமான படம் என்று நான் சொன்னேன். உடனே அவர்களில் ஒருத்தியும் ”ஆமாம்; இது எங்களுக்கும் முக்கியமான படம்” என்று பலரையும் உள்ளடக்கிச் சொன்னாள். மற்றவர்களும் அதை மறுத்துச் சொல்லவில்லை. அப்படிச் சொல்லி விட்டு இந்தப் படமும் அதன் இயக்குநரும் போலந்து சினிமாவுக்கும் முக்கியம் என்றும் சொல்லிப் பெருமைப்பட்டார்கள். சோசலிசக் காலத்தில் (1975) எடுக்கப்பட்ட ஒரு சினிமாவை எனது மாணவர்கள் பாராட்டியதும் நினைவில் வைத்திருப்பதும் ஆச்சரியமாக இருந்தது.
போலந்து தேசம், சோசலிசக் கட்டுமானத்தைப் பின்பற்றிக் கொண்டு சோவியத் யூனியனின் நட்பு நாடாக இருந்த காலத்தைப் பற்றிப் பேசத் தொடங்கும் போதெல்லாம் அவ்வளவு ஆர்வம் காட்டாத என் மாணவிகளும் மாணவர்களும் இந்தப் படத்தைப் பார்க்கச் சொன்னதும் பாராட்டியதும் ஏன் என்பதைப் படம் பார்த்தபோதும் உணர்ந்தேன். படத்தைப் பார்த்த பின் நடந்த உரையாடல்களும் பிந்திய நிகழ்வுகளும் எனக்கு உணர்த்தியது.. மாணவிகளுக்கும் மாணவர்களுக்கும் 1990 க்கு முந்திய அரசியல் பொருளாதாரக் கட்டமைப்பு மேல் வெறுப்பு இருப்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. இவர்களில் பலரும் சோசலிசத்திலிருந்து முதலாளித்துவக் கட்டமைப்புக்கு மாறிய போலந்தில் பிறந்தவர்கள். கொஞ்சப் பேர் அதற்கு முன்பே பிறந்திருந்தாலும் மாற்றத்தின் போது குழந்தமைப் பருவத்தில் இருந்தவர்கள். மாற்றம் நிகழ்ந்த பின் ஆட்சியாளர்களும், ஊடகங்களும் கடந்த காலத்தைப் பற்றிச் சொன்ன எதிர்மறைக் கருத்துகளை மட்டுமே கேட்டு வளர்ந்தவர்கள். முடிந்து போன கொடுங்கனவாகச் சோசலிசத்தைக் காண்பித்துச் சொல்லப்பட்ட கதைகள்தான் அவர்களுக்குத் தெரியும்.
 


சோசலிசக் காலத்தில் அன்றாட உணவும் குளிருக்குக் குடிக்க வேண்டிய வோட்காவுக்குமே திண்டாட்டம் இருந்ததாகவும், அவற்றை வழங்கும் கடைகளின் முன் நீண்டு வளர்ந்த மனித வரிசைகளே சோசலிசத்தைத் தூக்கித் தூரஎறிந்ததாகவும் பலரும் சொல்லக் கேட்டிருக்கிறேன். வயிற்றுப்பாடுகள் அடிப்படையான உணர்ச்சிகளை எழுப்பும் என்பது உண்மை என்றாலும், அரசியல் மாற்றத்துக்கு அது ஒன்று மட்டுமே போதாது. சித்தாந்த முகம் ஒன்றும் அதற்கு எப்போதும் தேவை. அதை வழங்கிய அமைப்பாக 1980 -களில் தோன்றி வளர்ந்த ஒற்றுமைக்கும் வலிமைக்குமான இயக்கம் (Solidarity movement) இருந்துள்ளது. நான் பணியாற்றும் வார்சா பல்கலைக்கழகத்தின் முன் செல்லும் அந்தச் சாலையில்தான் வலேசா போன்றவர்கள் விடாப்பிடியாக ஊர்வலங் களையும் போராட்டங்களையும் நடத்தி மாற்றத்தை உருவாக்கி யிருக்கிறார்கள். அந்தக் கதைகளின் பாத்திரங்களாக வலேசா மட்டும் இருந்ததில்லை. சுதந்திரத்தை விரும்பிய எழுத்தாளர்கள், சினிமா, நாடகம், ஓவியம் முதலான கலைகள் சார்ந்த படைப்பாளிகளும் பொதுமக்களின் குரலோடு இணைந்திருக்கிறார்கள். கால் நூற்றாண்டுக்கு முன் மாற்றத்தை நோக்கிப் போலந்து மக்களைத் திசை திருப்பிய நிகழ்வுகளைப் பசுமையாக நினைவு கூறும் மனிதர்கள் இப்போது 50 வயதைத் தாண்டியவர்களாக இருக்கின்றனர். அவர்களுக்குள் யாராவது ஒருவர் சோசலிசக் காலத்தில் நடந்த நேர்மறை நிகழ்வுகளை நினைவுபடுத்தி சொல்ல முன் வந்தால், விநோதப்பிறவிகளாகவும் சுதந்திரமான எண்ணங்களுக்கும் வேகமான வளர்ச்சிக்கும் எதிரானவர்களாகக் கருதப்படும் வாய்ப்பே அதிகம் என்பதால் பெரிய அளவில் அதைப்பற்றிப் பேசும் குரல்களைக் கேட்க முடியவில்லை. 



இப்போதும் கூட எதிர்மறை யான கருத்துக்களே சொல்லப்படுகின்றன. சோசலிசத்தின் நல்ல அம்சம் எனப் பேசக்கூடிய ஒருவரையும் இந்த இரண்டு ஆண்டுகளில் சந்திக்க முடியவில்லை. கசப்பான அனுபவங் களைச் சுமந்தவர்களாகவும், சுமப்பவர்களின் கதைகளைக் கேட்டவர் களாகவும் இந்த போலந்து பூமி நிறைந்து கிடக்கிறார்கள். ஹிட்லரின் நாஜிப் படைகளை முன்னேற விடாமல் தடுத்து நிறுத்திய வீரம் செறிந்த போரில் பல்லாயிரம் மக்களின் உயிர்களைப் பலி கொடுத்த நாடு போலந்து. அதன் பண்பாட்டுத் தலைநகரமான க்ராக்கோவுக்குப் பக்கத்தில் பெருங்கூட்டத்தைச் சிறைப்படுத்தி அடைத்து வைத்து விஷ வாயுவைச் செலுத்திக் கொன்ற கொலைக்கூடம் இப்போதும் காட்சிப் படுத்தப்பட்டுக் காட்டப்படுகிறது. ஹிட்லரின் ஜெர்மனியின் மீது கொள்ள வேண்டிய கோபத்தின் அடையாளமாக அவை இருப்பதுபோல ஸ்டாலினின் ரஷ்ய அடக்குமுறையின் அடையாளமாக அவன் கட்டிக் கொடுத்த பண்பாட்டு மாளிகையும் கருதப்படுகிறது.

 ஜெர்மனியர்களுக்கும் ரஷ்யர்களுக்கும் இடையில் மாட்டிக் கொண்டு தங்கள் தலைநகரான வார்சா தரைமட்டமாக்கப்பட்டது என்பதை ஒவ்வொ ருவரும் தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால் அந்த நகரம் திரும்பவும் அதே அடையாளங்களோடும் அதே அழகோடும் கட்டடங்களாக வளர்ந்து நிற்கிறது. அப்படி உருவாக்கப்பட்ட காலம் சோசலிசக் கட்டுமான காலம் தான். ஆனால் கட்டடங்களையும் கலைகளையும் அழகையும் திரும்பக் கொண்டு வந்த சோசலிசத்தின் காவலர்கள் வயிற்றுக்குச் சோறிட வேண்டும்; இங்கு வாழும் மனிதருக்கெல்லாம் என்ற அடிப்படையை மறந்திருக்கிறார்க்கிறார்கள் என்பதைப் பலரோடும் உரையாடும்போது கேட்க முடிகிறது. உறையும் பனிக்கட்டிகள் உடைக்கப்படாததாலும் உருக்கப்படாததாலும் வீட்டிற்குள்ளேயே முடக்கப் பட்ட மக்களின் தேவையை ஆட்சி யாளர்கள் உணரவில்லை. அதுதான் எதிர்ப்புணர்வின் வலிமையாக மாறியது. சுற்றியுள்ள நாடுகளின் அதிகாரப் போட்டியில் காணாமல் போன தங்கள் தேசம் திரும்ப உருவாக்கப் பெற்ற கதையை நினைவு கூரும் இளைய தலைமுறையிடம் சோசலிசம் ஒரு கொடுங் கனவாகவே படிந்துள்ளது. ஆனாலும் அது உருவாக்க நினைத்த மனிதாபிமானமும், பண்பாட்டுக் கவலைகளும் திரும்பக் கொண்டுவரப் பட வேண்டியவை என்ற நினைப்பு இன்னும் இருக்கிறது. அதன் அடையாளமாகவே வாக்களிக்கப் பெற்ற பூமியைப் பெருமையாகக் கருதும் மனநிலையைப் புரிந்து கொண்டேன்.
 


வாக்களிக்கப் பெற்ற அந்த பூமி என்ற சினிமாவில் காட்டப்பெற்ற பூமி இன்றும் போலந்தில் இருக்கிறது அந்த பூமியும் அந்தப் பூமியில் உருவானதாக இயக்குநர் காட்சிப்படுத்திக் காட்டிய அந்த நகரமும் கூட இப்போதும் இருக்கிறது. அந்த நகரத்தின் இப்போதைய பெயர் ஊஜ். இயக்குநர் அதே நகரத்தில் தான் தனது படத்தை எடுத்திருக்கிறார். தொழிற்சாலைகள் உருவாக்கப்படுவதன் மூலம் மனிதர்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்து விடும் எனக் குருட்டுத் தனமாக நம்பிய முதலாளித்துவத்தின் தொடக்கக் காலத்தில் இயற்கையும் எளிமையான வாழ்க்கை முறைகளும் அழிக்கப்பட்டதைப் பேசுபொருட்களாக்கியுள்ள படம் அது. பெரும் தொழிற்சாலையும் அதன் இருப்புக்காக உருவாக்கப் பெற்ற நகர வாழ்க்கையையும் விரிவாகச் சித்திரித்துள்ளது. அப்படத்தில் மூன்று பேர் முக்கியக் கதாபாத்திரங்களாக வருகின்றனர். அவர்கள் மூவரும் வெவ்வேறு பின்னணியில் – ஒருவர் போலந்து நாட்டவன்; இன்னொருவன் ஜெர்மானியன்; மூன்றாமவன் யூதன் – இருந்து வந்தவர்கள் நண்பர்களாக ஆனதே தொழிற்சாலையை உருவாக்கவும் பணம் சேர்க்கவுமான வேட்கையால் தான். மூவரும் தொழிற்சாலையை வளர்த்தெடுப்பதில் காட்டும் அக்கறையால் எப்படி ஒவ்வொரு வருக்குள்ளும் இருக்கும் மனிதாபிமானக் குணத்தை இழக்கிறார்கள் என்பதைப் படம் அடுக்கிக் கொண்டே போகிறது. பிரமாண்டமான தொழிற்சாலை உருவாகும்போதே வாழ்வதற்கான அடிப்படைத் தேவைகளான நல்ல வீடு, போக்குவரத்து, மருத்துவம் போன்றன கவனம் பெறாமல் ஒதுங்கிப் போகிறது என்பதைச் சொல்வதோடு, கலை, அழகியல், பண்பாட்டு நடவடிக்கைகள் எனப் பலவற்றின் மீதிருந்த அக்கறைகளும் விலகிக் கொண்டே போவதையும் படம் சத்தமில்லாமல் வரிசைப்படுத்திக் காட்டுகிறது.


 இந்தப் படத்திற்கான அடிப்படைக் கதையை விவாடிஸ்வாரெய்மண்ட் என்பவரின் நாவலிலிருந்து இயக்குநர் உருவாக்கியிருக்கிறார் என்றாலும், இரண்டு நகரங்களின் கதைகளை எழுதிய சார்லஸ் டிக்கென்ஸ், ஐரோப்பிய நடுத்தர வர்க்க மன உருவாக்கத்தை எழுதிக் காட்டிய எமிலி ஜோலா, தொழிற்சாலை உருவாக்கத்தோடு உருவாகும் தொழிலாளி வர்க்கத்தை எழுதிக் காட்டிய மார்க்சிம் கார்க்கி போன்றவர்களோடு ஜெர்மானிய வெளிப்பாட்டியல் இயக்கத்தின் தாக்கமும் கொண்ட படைப்பாக அந்தப் படத்தை உருவாக்கித் தந்துள்ளார். உண்மையான நகரத்தை மட்டுமே பின்னணியாகக் கொள்ளாமல், அந்த நகரம் அதன் உருவாக்கக் காலத்தில் எப்படி இருந்திருக்கக் கூடும் என்பதைக் காட்டுவதற்காக ஓவியங்களையும் கலை இயக்கத்தையும் முழுமையாகப் பயன்படுத்தி எடுக்கப்பெற்ற அந்தப் படம் தெரியாத மொழியில் இருக்கும் படம் என்ற உணர்வே இல்லாமல் எனக்குள் எளிமையாக நுழைந்து கொண்டது. அதற்கேற்றவாறு காட்சிகளை அடுக்கியிருப்பதோடு நடிகர்களின் பொருத்தமான உணர்வு வெளிப்பாடும் நடிப்பாற்றலும் பார்வையாளர்களைச் சென்றடையச் செய்வதில் முக்கியப் பங்கு வகித்த படமாக இந்தப் படத்தை நினைக்கிறேன்

இந்தப் படத்தைப் பார்த்தபின் மாணவிகளோடு நடத்திய உரையாடலும் ஒருநாள் பயணமும் மிகவும் முக்கியமானது. தொழிற்சாலைகளை உருவாக்கும் நோக்கமும் பணத்தை ஈட்டுவதில் ஏற்படும் அளவுக்கடங்காத ஆசையும் மனிதாபிமான உறவுகளைச் சிதைக்கிறது என்பதைப் பேசும் இந்தப் படம் இப்போதைய போலந்துப் பொது மனநிலைக்கு எதிரானதாக இல்லையா? எனப் படம் பார்த்தபின் கேட்டேன். தொழிற்சாலைகளை விட மனிதர்களுக்கிடையே இருக்க வேண்டிய உறவும், பண்பாட்டின் மீது வைக்க வேண்டிய பற்றும் ஒரு விதத்தில் சோசலிசக் கலை இலக்கியவாதிகளின் மையமான கருத்தோட்டங்கள் என்பதை அவர்களுக்குச் சொல்லி விட்டுத் தான் இந்தக் கேள்வியைக் கேட்டேன். அதற்குக் கிடைத்த உதிரி உதிரியான பதில்களிலிருந்து தொகுத்துப் புரிந்து கொள்ள வேண்டியன பல இருக்கின்றன..

போலந்து அடிப்படையில் கத்தோலிக்கக் கிறித்தவ நாடு. கொஞ்சம் பழைமையின் மீது – குறிப்பாகச் சடங்குகள் மீதும், மூதாதையர்களின் மீதும் கொண்டுள்ள பாசம் ஆசியச் சமூகங்களை ஒத்தது எனச் சொன்னாள் ஒரு மாணவி. இந்தக் கூற்று முழுமையாக உண்மையானது என்பதை ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் கல்லறைத் தோட்டங்களும், அக்கல்லறைகளின் அருகில் புதிது புதிதாக வைக்கப்படும் படையல் பொருட்களும் இப்போதும் உணர்த்திக் கொண்டே இருக்கின்றன. வருடத்தில் ஒரு நாள் உயிரோடு இருக்கும் தங்கள் குடும்பத்து மூத்தவர்களைத் தேடிச் சென்று வாழ்த்தைப் பெறும் சடங்கை இளைய சமுதாயம் மறந்து விடவில்லை. ஆண்களும் பெண்களும் திருமணம் முடித்துக் கொள்வதும் பிரிந்து வாழ்வதும் மற்ற ஐரோப்பிய நாடுகளைப் போலவே இங்கும் இயல்பாக இருக்கிறது என்றாலும் மூதாதையர்களுக்கான இடம் என்பது பண்பாட்டோடு தொடர்புடைய தனித்தன்மை என நினைக்கிறார்கள் போலந்துக்காரர்கள்.இந்த அடையாளத்தை அந்தப் படம் ஆழமாக உணர்த்திய படமாக நினைக்கப் படுகிறது. தொழில் வளர்ச்சிக்காக அந்த அடையாளத்தைப் போலந்துக்காரர்கள் விட்டுத் தரத் தயாரில்லை.


எப்போதும் போலந்து நாட்டுப் பொதுமனநிலை மற்றைய ஐரோப்பியப் பொது மனநிலையோடு முற்றிலும் ஒத்துப் போகும் தன்மை கொண்டதல்ல என்பதில் அவர்களுக்கு கொஞ்சம் பெருமிதமும் இருக்கிறது. பொது வாழ்க்கையிலும் தனிமனித வாழ்க்கையிலும் பெண்களின் இடம் கேள்விக்குரிய ஒன்றாக ஆவதற்குத் தொழிற் சாலைப் பெருக்கம் காரணமாக அமையும் என்பதைச் சுட்டிக்காட்டிய வாக்களிக்கப் பெற்ற பூமி, அதற்காகவும் முக்கியமான படமாக இருக்கிறது என என் மாணவிகள் சொன்னார்கள். தொடர்ந்து அவர்கள் தந்த தகவல்களின் வழியாக அந்தப் படத்தில் நடித்த நடிகர்கள் சிறந்த நடிகர்களுக்கான விருதுகளைப் பெற்றவர்கள் என்பதையும் அறிந்து கொண்டேன். படத்தின் இயக்குநர் ஆந்த்ரே வய்த [Andrzej Wajda (Polish pronunciation: ˈandʐɛj ˈvajda] போலந்தில் கடந்த அரை நூற்றாண்டுக் காலச் சினிமா வரலாற்றில் மட்டும் அல்லாமல் அரசியல் பொருளாதார மாற்றங்களோடும் தன்னை இணைத்துக் கொண்டவர். லெக் வலேசாவோடு சேர்ந்து சாலிட்டாரிட்டு இயக்கத்தில் பணியாற்றியவர். வாழ்நாள் சாதனைகளுக்காக ஆஸ்கர் குழுவின் பாராட்டையும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பாராட்டையும் பெற்றுள்ள ஆந்த்ரே வய்த போலந்து சினிமாவின் இன்னொரு முக்கியப் பெயரான ரோமன் போலன்ஸ்கியின் நகர்வுகளோடு சேர்ந்தே நினைக்கப்படுகிறார். அந்தக் குறிப்புகளைச் சொன்ன எனது மாணவி ஒருத்தி நீங்கள் விரும்பினால் நாம் அந்த நகரத்துக்குப் போகலாம் எனச் சொன்னாள். மகிழ்ச்சியோடு ஒத்துக் கொண்டு ஒருநாள் அந்நகரத்துக்கு என் மாணவிகளோடு போனேன்.
 
தலைநகர் வார்சாவிலிருந்து ரயிலில் பயணம் செய்தால் 4 மணி நேரத்தில் வாக்களிக்கப் பெற்ற அந்த பூமியில் உருவாகியிருக்கும் ஊஜ் என்னும் அந்த நகரத்தை அடைந்து விடலாம். ஒரு பழைய நகர் மையம்; அதிலிருந்து சுற்றிச் சுற்றி விரியும் விரிநிலைத் தன்மையில் அமைப்பாகும் புதிய நகரப்பகுதி என்பதுவே போலிஷ் நகரங்களின் பொதுக்கட்டமைப்பு.. ஆனால் ஊஜ் ஒரு நதியைப் போல நீட்டு வாக்கில் நீண்டு கொண்டே போகிறது. நடுவில் செல்லும் ரயில் பாதையின் ஓரங்களில் பல தொழிற்சாலைகள் நிரம்பிய நகரமாக இப்போது இருக்கிறது. படத்தில் காட்டப்பட்ட அந்த நகரம் கொஞ்சம் அழுக்கடைந்த நகரமாகவே இருக்கிறது. படத்தில் இடம்பெற்ற தொழிற்சாலை அமைந்திருந்த கட்டடத்தை மட்டுமல்லாமல் அந்த முதலாளிகளின் மாளிகைகளையும் கூடப் பார்த்தோம் தொழிற்சாலை இப்போது கண்காட்சிக் கூடமாக ஆக்கப் பட்டிருக்கிறது. படத்தில் காட்சிக்கு மெருகூட்டிய பொருட்கள் அந்த மாளிகையில் நிரந்தரக் காட்சிப்பொருட்களாக வைக்கப் பெற்றுள்ளன. அவற்றைப் பார்க்கக் கூட்டம் கூட்டமாக வந்து கொண்டிருக்கிறார்கள். போலந்தின் சுற்றுலா வரைபடத்தில் ஊஜ் நகரத்தை ஆக்கியதில் இந்தப் படம் முக்கியப் பங்காக இருக்கிறது. அந்த மாளிகைக்குள் ஒரு அறையில் இயக்குநர் வய்தா பெற்ற பரிசுகளும் பட்டங்களும் பாராட்டுகளும் அடுக்கப்பெற்றுள்ளன.
 


ஊஜ் நகரம் ஆந்த்ரே வய்தவின் வாக்களிக்கப்பெற்ற பூமி என்ற சினிமாவோடு மட்டும் தொடர் புடைய நகரமாக இல்லாமல், போலிஷ் சினிமாவின் முக்கிய மையமாகவும் இருக்கிறது. போலிஷ் திரைப்பட அகாடெமி அங்கே தான் இருக்கிறது. சினிமாவின் அனைத்துப் பிரிவு களையும் கற்பிக்கும் அந்த நிறுவனம் ஒரு பல்கலைக்கழகம் போல விரிந்து கிடக்கிறது. அத்துடன் ஊஜ் நகரத்தின் முக்கியமான தெரு ஒன்றில் பித்தளையால் ஆன பெரும் நட்சத்திரங்கள் பதிக்கப் பெற்றுள்ளன. அந்நட்சத்திரங்களில் போலந்து சினிமாவுக்குப் பெயர் வாங்கித் தந்தவர்களின் விவரங்கள் பதிவு செய்யப் பெற்றுள்ளன. நூற்றுக்கும் அதிகமான நட்சத்திரங்களில் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் சினிமாவில் பங்கு பெற்றுச் சிறப்பிடம் போலந்துக் கலைஞர்கள் பற்றிய குறிப்புகள் எழுதி வைக்கப் பெற்றுள்ளன. இசைக்கலைஞர்கள், ஒளியமைப்பாளர்கள், இயக்குநர்கள், நடிப்புக் கலைஞர்கள் என ஒவ்வொரு துறையிலும் சிறப்புப் பெற்ற ஒவ்வொருவருக்காகவும் தனித்தனி நட்சத்திரம். அந்த நட்சத்திங்களில் இடம் பெற்றுள்ள தகவல்களை வாசித்துக் கொண்டே நடக்கும் ஒரு போலிஷ் யுவதியும் இளைஞனும் தங்கள் தேசத் திரைப்படக் கலையின் வரலாற்றையும் தெரிந்து கொள்வதோடு அந்தப் பூமியை – வாக்களிக்கப் பெற்ற அந்தப் பூமியை மனதில் பதித்துக் கொண்டே வளர்கிறார்கள்..



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்