எனக்குள் நுழைந்த எம்.எ. நுஃமான்.



கழிந்ததின் ஏக்கம் என்பதைக் குறிக்கும் ஆங்கிலச் சொல் நாஸ்டால்ஜியா (Nostalgia). இச்சொல்லின் பயன்பாட்டு அர்த்தம் பெரும்பாலும் இடம் சார்ந்த பழைய நினைவுகளோடு பொருத்தம் கொண்டதாக இருக்கிறது. இடம் பற்றிய நினைவு என்பது வெற்றுப் பரப்பு பற்றிய நினைவாகக் கரையாமல் அப்பரப்பில் நின்று தளைக்கும் தாவரங்களையும், அலைந்து திரியும் விலங்குகளையும் பறவைகளையும் பற்றிய நினைவுகளாகவும் நீள்கின்றன. இவ்வாறான இயற்கையின் வளங்களைப் பற்றிய நினைவுகளுக்குள் மனிதர்களும் அலைந்தார்கள்; அலைகிறார்கள்; அலைவார்கள் என எழுதுவதே இலக்கியப் பதிவுகளாக மாறுகின்றன. அப்பதிவுகள் அலைந்து திரிந்தார்கள் என்று சொல்வதோடு, நிலைத்து நின்று வாழ்ந்தார்கள்; தங்களுக்குள் முரண்பட்டார்கள்; மோதினார்கள் எனச் சொல்லத் தொடங்கி நீண்டது. மோதலும் முரணும் மட்டுமல்ல இணக்கமும் குதர்க்கமும் எழுந்தன என விரிந்தன. இவையெல்லாம் மனிதர்களுக்குள்ளாகவே நடந்து முடிந்து போனது என்று நினைக்க வேண்டியதில்லை; அளிக்கப்பட்ட நிலப்பரப்போடும், நிலப்பரப்பில் இயங்கிய தாவரங்களோடும் விலங்குகளோடும் கூடப் பிணக்கும் இணக்கமும் ஏற்பட்டன எனப் பதிவு செய்யும்போது, அப்பதிவுகள் வாழ்க்கையின் பதிவுகளாக-நிலப்பரப்பு உருவாக்கித் தந்த பண்பாட்டு நடவடிக்கைகளான சடங்குகள், விழாக்கள், உறவுகள், விதிகள், தடைகள், தடைகளை மீறிடத்துடித்த மனிதர்களின் - வாழ்தலின் பதிவுகளாக ஆகிவிடுகின்றன.

கழிந்ததின் ஏக்கம் புறப்பரப்பான வெளி சார்ந்த ஏக்கங்களாக மட்டும் இருந்திட வேண்டும் என்பதில்லை. நமது அகத்தை உருவாக்கியதாகவும் இருக்கலாம். மனிதன் ஒருவனின் அகத்தையும், அவனது அறிவு ஆளுமையையும் உருவாக்கிய கடந்த கால ஆளுமையைக் கண்டடைந்து நினைத்துக் கொள்வது கழிந்ததின் ஏக்கமாக ஆகாது; முன்னோடியை அல்லது முன்மாதிரியை (Role model)க் கொண்டாடுவதாக அமையும் என்பதைப் புரிந்து கொள்கிறேன். எனக்குள் பல பேர் நேர்ப்பழக்கமாகவும், தங்களின் எழுத்து வழியாகவும் புகுந்து என்னை உருவாக்கியிருக்கிறார்கள். அவர்களையெல்லாம் நினைத்துக்கொள்ள வேண்டும்; நினைத்துக் கொள்வதின் வழியாகக் கொண்டாட வேண்டும் என்று மனம் தவிக்கிறது. தவிக்கும் மனம் அவர்கள் எப்படி எனக்குள் புகுந்தார்கள் எனச் சொல்லிப் பார்க்கிறது. இப்போது எனக்குள் எம். எ. நுஃமான் எப்படி உள் நுழைந்து அமர்ந்து கொண்டார் என நினைத்துப் பார்க்கிறேன்.

நினைவுகளின் தடம்பிடித்துக் கடந்த காலத்திற்குள் பயணம் செய்தால் எம்.எ. நுஃமான், எனக்குள் புகுந்தது இரண்டு புத்தகங்களின் வழியாக என்பது புரிகிறது. அந்த இரண்டு புத்தகங்களைப் போன்ற மாதிரிகள் தமிழில் தொடர்ந்து உருவாக வேண்டும் என மனம் விரும்புகிறது. அப்படி உருவாக்கும் எத்தணிப்பில் ஈடுபடுபவர்களையெல்லாம் எனது நினைவுப் பரப்பு ஏற்றுக் கொள்கிறது. ஏற்றுக் கொண்டதன் தொடர்ச்சியாக நானும் அவர்களில் ஒருவனாக ஆகிவிட வேண்டும் என வலியுறுத்துகிறது. அப்படி ஆவேனா? மாட்டேனா? என்பதற்குக் காலம் பதில் சொல்லும்.

பதினோரு ஈழத்துக் கவிஞர்கள் என்னும் தொகை நூலே நுஃமான் என்னும் பெயரை எனக்குள் கொண்டு வந்து சேர்த்தது. இலக்கியப் பரப்பிற்குள் நுழையும் ஒவ்வொருவருக்கும் தொடக்கத்தில் இருக்கும் ஆசை கவிஞனாக ஆகிவிடுவதுதான். முதல் எழுத்தை எழுதிவிட்டுக் கவிதையாக இருக்கிறது என நம்பத்தொடங்கும்போது நம்மைக் கவிஞன் என அங்கீகரித்துக்கொள்ளும் அனுமதியை வழங்கும் வடிவம் அது. பட்டப்படிப்பு காலத்திலேயே ஆனந்தவிகடன், கணையாழி போன்ற இதழ்களில் கவிதையெழுதியதோடு, ஆய்வுக்காலத்தில் ‘கனா’ என்றொரு கையெழுத்துப் பிரதியை நடத்தி, அதில் கவிதை எழுதிய 5 பேர்களின் கவிதைகளைத் தொகுத்து கனவைத் தொலைத்தவர்கள் என்றொரு தொகைநூலைக் கொண்டு வந்தவன் நான். 1985 இல் நாங்கள் கொண்டு வந்த கனவைத்தொலைத்தவர்கள் எனும் தொகுப்பு பதினோரு ஈழத்துக் கவிஞர்கள் தொகுப்பைப் போன்றது என நினைத்துவிட வேண்டாம். கனவைத் தொலைத்தவர்கள் முன்னிறுத்தும் சாத்தியங்கள் தெரியாததால், கண்டு கொள்ளப்படாமல் மறக்கப்பட்ட பிரதி. அப்படியான பிரதிகள் தமிழில் பல உள்ளன .

எம் எ. நுஃமானும் அ.யேசுராசாவும் தொகுத்த பதினோரு ஈழத்துக் கவிஞர்கள் தொகுதி வரலாறான தொகுதி. வரலாற்றை உருவாக்கிய தொகுதி. எனது கணிப்பில் ஈழத்து இலக்கிய வரலாற்றில் 3 கவிதைகளை முக்கியமானவை எனச் சொல்வேன். அவை 1. பதினொரு ஈழத்துக் கவிதைகள் (தொ-ள் : எம்.எ. நுஃமான், அ.யேசுராஜா, 1984 இல் முதல் பதிப்பு கண்ட இத்தொகுப்பு 2003 -லிருந்து காலச்சுவடுவின் மூலம் திரும்பத் திரும்ப அச்சாகிக் கொண்டிருக்கிறது) 2. மரணத்துள் வாழ்வோம்-31 அரசியல் கவிஞர்களின் 82 அரசியல் கவிதைகள் (தொ-ள் : உ.சேரன், அ.யேசுராஜா,இ.பத்மநாப ஐயர்,மயிலங்கடலூர் பி.நடராசன் 1985 இல் முதல் பதிப்பு கண்ட இத்தொகுப்பு 1996-இல் கோவை விடியல் பதிப்பகத்தால் இரண்டாம் பதிப்பு கண்டது) 3.வேற்றாகி நின்ற வெளி ; தேர்ந்தெடுக்கப்பட்ட ஈழத்துக் கவிதைகள்,( இதுவும் விடியல் பதிப்பக வெளியீடு தான். 2001. தொகுப்பாசிரியர்கள் என ஒருவர் பெயரும் இல்லை. அதனால் அவசியமான முன்னுரை இல்லை. விடியல் சிவஞானத்தின் பதிப்புரை மட்டுமே இருக்கிறது. தமிழ்நாட்டிலிருந்தவர்கள் மூலம் தொகுக்கப்பட்டது எனச் சொல்ல முடியும்)தமிழின் இலக்கிய வரலாறு நமக்குள் இருக்கும் முறையைக் கொஞ்சம் நினைத்துப் பார்த்தால் தொகைநூல்களாகவே தமிழ் இலக்கியப் பரப்பு தமிழின் கவிதைகள் எனக்குள் நுழைத்த முதல் புத்தகம்


1970- களில் ஒரு கவியாகவே இலக்கியப் புலத்திற்குள் நுழைந்தவர். அதே நேரத்தில் பல்கலைக்கழக விரிவுரையாளராகவும் பணியேற்புச் செய்தவர். கல்விப்புலம் சார்ந்து ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டு படைப்பாளியாகச் செயல்படும் ஆளுமைகளுக்குச் சில நெருக்கடிகள் ஏற்படும். தாங்கள் விரும்பும் படைப்புத் துறையில் மட்டுமே தொடர்ந்து கவனம் செலுத்தாமல், அதனோடு தொடர்புடைய பல தளங்களிலும் பங்களிப்பு செய்ய வேண்டிய கட்டாயம் இருந்து கொண்டே இருக்கும். நுஃமானின் எழுத்தாக்கங்களைக் கவனிக்கும் ஒருவர் இந்த நெருக்கடிகளையும், கட்டாயத்தையும் நுஃமான் தாண்டி வந்துள்ளவர் என்பதை உணர முடியும்.

படைப்பு முயற்சிகளோடு, இலக்கியத் திறனாய்வு சார்ந்த கற்றல், கற்பித்தல் தவிர்க்க முடியாத ஒன்றாக முன் நிற்கும். அதனால் தமது காலத்தில் உலக அளவில் விவாதத்துக்குள்ளாகும் கருத்தியல் மற்றும் சிந்தனைப் போக்குகளை முகம் கொள்ள வேண்டி வரும். படைப்பாளியாகவும் கல்வியாளராகவும் ஒரே நேரத்தில் செயல்படுத்தத் தொடங்கிய நுஃமான் தன் காலத்தில் அதிகம் விவாதிக்கப்பெற்ற மார்க்சிய இலக்கியத் திறனாய்வின் புதிய போக்குகளோடு விவாதங்களை நடத்தியவர். அவருக்கு முன்பு தமிழில் மார்க்சியத் திறனாய்வில் பங்களிப்புச் செய்த ஆளுமைகளான தொ.மு,சி.ரகுநாதன், க.கைலாசபதி கோ.கேசவன் ஆகியோரது திறனாய்வு முறையில் இருந்த பயன்பாட்டுவாதம் மற்றும் வரலாற்றுவாதத்தை முழுமையாகக் கைக்கொள்வதிலிருந்து விலகிப் படைப்பின் சூழலையும், படைப்பாளியின் அகநிலையையும் இணைத்துப் பார்க்கும் மார்க்சியத் திறனாய்வு முறையை முன் வைத்தவர். இதன் தொடர்ச்சியாக அமைப்பியல், தொடர்பாடல், பெண்ணியம் போன்றவற்றின் வரவை மனமுவந்து வரவேற்றவர். இதனால் கீழைத் தேயவியல்x மேலைத்தேயவியல், சிறுபான்மைxபெரும்பான்மை முரண்பாடுகளின் பின்னணியில் இலக்கிய உருவாக்கம், இலக்கியத்திறனாய்வு, இலக்கியவரலாறு ஆகியனவற்றைக் கவனித்து தனது எழுத்துப் பணியினைக் கவனப்படுத்தி விவாதக்கட்டுரைகளையும் நூல்களையும் தந்தவர்.


கல்வித்துறை சார்ந்து மொழியியல் மற்றும் திறனாய்வுப் புலங்களில் காத்திரமான பங்களிப்பைச் செய்துள்ள நுஃமான் தனது தொடக்ககால ஆர்வமான கவிதை எழுதுவதைக் கைவிடாமல் தக்க வைத்த படைப்பாளியும்கூட. அவரது கவிதைகளை மட்டுமல்லாமல், ஈழத்துக் கவி ஆளுமைகளைத் தமிழ்ப் பரப்பிற்குள் கொண்டு வந்து சேர்த்ததில் அவரது பங்களிப்பு மிக முக்கியமானது. மஹாகவியின் பெரும்பாலான படைப்புகளைப் பதிப்பித்தவர் அவரே. பின்னாளில் பெருங்கவிகளாக அறியப்பட்டுள்ள ஈழத்துக் கவிகள் பலரும் அவர் தொகுத்த 11 ஈழத்துக்கவிஞர்கள் என்ற தொகுப்பில் கவிகளாக அறிமுகமானவர்கள் என்பதை இலக்கிய வரலாறு பதிவு செய்யும். தமிழ்க் கவியாக மட்டுமல்லாமல் பல்வேறு மொழிக் கவிதைகளைத் தமிழுக்குக் கொண்டுவந்த மொழிபெயர்ப்பாளர் என்ற அடையாளமும் நுஃமானுக்கு உண்டு. 30 –க்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ள நுஃமானின் முக்கியமான நூல்களின் விவரங்கள்:


விமரிசன நூல்கள்:
மொழியும் இலக்கியமும் (காலச்சுவடு,2006)


மொழியியலும் இலக்கியத் திறனாய்வும் ( 2001)
மார்க்சியமும் இலக்கியத் திறனாய்வும் (அன்னம்,சிவகங்கை,1987)
திறனாய்வுக் கட்டுரைகள் (அன்னம்,சிவகங்கை 1986)
பாரதியின் மொழிச்சிந்தனைகள்: செளத் விஷன்,சென்னை,1999
இருபதாம் நூற்றாண்டு ஈழத் தமிழ் இலக்கியம், இணைப்பதிப்பாசிரியர், 1979
அடிப்படைத் தமிழ் இலக்கணம், (அடையாளம்,2007)


கவிதை நூல்கள்:
மழைநாட்கள் வரும், (அன்னம்,சிவகங்கை 1983)
அழியா நிழல்கள், நர்மதா, 1982
தாத்தாமாரும் பேரர்களும் -நெடுங்கவிதைகள், கல்முனை,1977
பதினொரு ஈழத்துக் கவிஞர்கள், க்ரியா, 1984


மொழிபெயர்ப்புக் கவிதைகள்
பாலஸ்தீனக்கவிதைகள், முப்பது கவிஞர்களின் 109 கவிதைகள், 
அடையாளம், 2008,
மொகமூத் தர்விஸ் கவிதைகள், அடையாளம், 2008
பாலஸ்தீனக்கவிதைகள், 15 கவிஞர்களின் 71 கவிதைகள், மூன்றாவது மனிதன் வெளியீடு,2000,
காற்றில் மிதக்கும் சொற்கள் ( மலாய் மொழி கவிதைகள்)
.இரவின் குரல் ( இநதோனேசிய மொழி கவிதைகள் )

மொழிபெயர்ப்புக் கட்டுரை நூல்கள்
கடப்பாடு அல்லது சுயாதீனம், இசுலாமியப் பெண்கள் பற்றிய சட்டப் பிரச்சினைகள், கொழும்பு, 2004
இனமுரண்பாடு வரலாற்றியலும் கொழும்பு, 2000


முஸ்லிம் பெண்களும் அரசியல் தலைமைத்துவமும், முஸ்லிம் பெண்கள் ஆய்வு மற்றும் செயல்பாட்டு அமைப்பு, கொழும்பு, 1999


தொகுப்பாசிரியர்
மஹாகவி கவிதைகள், (தொகுப்பாசிரியர்,அன்னம், 1984 )
மஹாகவியின் வீடும் வெளியும், கல்முனை வாசகர் வட்டம், 1973
மஹாகவியின் கோடை, கல்முனை வாசகர் வட்டம், 1970.

-----------------------------------------------
தங்களின் காத்திரமான எழுத்துகள் மூலம் தமிழ் இலக்கியப் பரப்பை விரிவு படுத்தியும் புதிய தளங்களில் இலக்கியம் சார்ந்த தமிழ்ச் சிந்தனையைத் திசைதிருப்பியும் வரும் ஆளுமைகளைக் கௌரவிக்கும் வகையில் தொடங்கப் பெற்றது விளக்கு விருது, 1995 ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் தகுதி வாய்ந்த ஆளுமைகளைக் கண்டறிந்து அடையாளப்படுத்திக் காட்டுவதன் மூலம் விளக்கு விருது அதன் நம்பகத்தன்மையையும் தரம் பேணுவதையும் விட்டுக் கொடுக்காமல் காத்து வந்துள்ளது.


கடந்த 15 ஆண்டுகளில் கவிதை, புனைகதை சார்ந்த எழுத்தாளுமைகளே அதிகமாக விளக்கு விருதினைப் பெற்றுள்ளனர் என்பதோடு பெரும்பாலும் தமிழக எல்லைக்குள் இருக்கும் படைப்பாளிகளே கவனத்திர்குள்ளாகி வந்துள்ளனர். இந்த ஆண்டு அந்தப் போக்கிலிருந்து ஒரு விலகல். தமிழுக்குத் தனது திறனாய்வு, மொழியியற்சிந்தனை, கவிதை, மொழிபெயர்ப்பு, கல்வித்துறை சார்ந்த கருத்தியல் உருவாக்கம் எனச் செயல்பெற்ற நுஃமான் அவர்களுக்கு 2011 ஆம் ஆண்டுக்கான விளக்கு விருதினை அளிப்பதின் மூலம் விளக்கு அமைப்பு பெருமை அடைகிறது


=========================================================================பின் குறிப்பு
-------------------
தமிழ் எழுத்துகளுக்கான விருதுகள் எப்போதும் தமிழக எல்லைப் பரப்பை மட்டுமே கவனம் கொள்கிறது. அமெரிக்காவிலிருந்து செயல்படும் நண்பர்களால் அளிக்கப்படும் விளக்கு விருதும் அவ்வாறே தமிழகப் படைப்பாளுமைகளையே விருதுக்குரியவர்களாகத் தேர்வு செய்து பாராட்டிக் கொண்டிருக்கிறது. கடந்து மூன்றாண்டுகளாக விளக்கு விருதுக் குழுவில் ஓர் உறுப்பினராக இருந்த எனக்கு இதில் மாற்றம் வேண்டும் என்று தோன்றியது. இந்த மாற்றுக் கருத்தின் அடிப்படையில் விருதுக் குழுவில் விவாதத்தைத் தொடங்கிய போது மூவரில் இருவரிடம் ஏற்பு உருவானது. மூன்றாமவர் உடன்படவில்லை. இதுவரை ஒருபடித்தான உடன்பாடு கொண்டு விருதுக்குரியவரைத் தேர்வு செய்த முறை இம்முறை சாத்தியமில்லை என்பதை உணர்ந்தேன். தமிழக எல்லைப் பரப்பிற்கு வெளியே – குறிப்பாக இலங்கையைச் சேர்ந்த தமிழ் எழுத்து ஆளுமைகளில் ஒருவர் என்பதில் உறுதியாக இருந்தேன்.

இலங்கைப்படைப்பாளிகள் என்றவுடன் முதலில் கவிகளின் பட்டியலே நீண்டு கொண்டிருந்தது. இதுவரை விளக்கு விருது பெற்றவர்களின் பட்டியலைத் திருப்பிப் பார்த்த போது கவிகளே அந்த விருதினை அதிகம் பெற்றுள்ளனர் என்பது புரிந்தது. அதனால் கவி என்ற ஆளுமையைத் தாண்டி ஒருவரைத் தேர்வு செய்ய வேண்டும் என்ற நினைத்த போது முதலில் நினைவுக்கு வந்த பெயர் நுஃமான் அவர்களின் பெயர் தான். அவருக்கு இந்த ஆண்டு விளக்கு விருது வழங்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக நின்று விவாதங்களில் இறங்கி உறுதி செய்தது விருதுக்குழு.

எம்..ஏ நுஃமான், 1970 களில் ஒரு கவியாகவே இலக்கியப் புலத்திற்குள் நுழைந்தவர். அதே நேரத்தில் பல்கலைக்கழக விரிவுரையாளராகவும் பணியேற்புச் செய்தவர். கல்விப்புலம் சார்ந்து ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டு படைப்பாளியாகச் செயல்படும் ஆளுமைகளுக்குச் சில நெருக்கடிகள் ஏற்படும். தாங்கள் விரும்பும் படைப்புத் துறையில் மட்டுமே தொடர்ந்து கவனம் செலுத்தாமல், அதனோடு தொடர்புடைய பல தளங்களிலும் பங்களிப்பு செய்ய வேண்டிய கட்டாயம் இருந்து கொண்டே இருக்கும். நுஃமானின் எழுத்தாக்கங்களைக் கவனிக்கும் ஒருவர் இந்த நெருக்கடிகளையும், கட்டாயத்தையும் நுஃமான் தாண்டி வந்துள்ளவர் என்பதை முடியும்.


படைப்பு முயற்சிகளோடு, இலக்கியத் திறனாய்வு சார்ந்த கற்றல், கற்பித்தல் தவிர்க்க முடியாத ஒன்றாக முன் நிற்கும். அதனால் தமது காலத்தில் உலக அளவில் விவாதத்துக்குள்ளாகும் கருத்தியல் மற்றும் சிந்தனைப் போக்குகளை முகம் கொள்ள வேண்டி வரும். படைப்பாளியாகவும் கல்வியாளராகவும் ஒரே நேரத்தில் செயல்படுத்தத் தொடங்கிய நுஃமான் தன் காலத்தில் அதிகம் விவாதிக்கப் பெற்ற மார்க்சிய இலக்கியத் திறனாய்வின் புதிய போக்குகளோடு விவாதங்களை நடத்தியவர். அவருக்கு முன்பு தமிழில் மார்க்சியத் திறனாய்வில் பங்களிப்புச் செய்த ஆளுமைகளான தொ.மு,சி.ரகுநாதன், க.கைலாசபதி கோ.கேசவன் ஆகியோரது திறனாய்வு முறையில் இருந்த பயன்பாட்டு வாதம் மற்றும் வரலாற்றுவாதத்தை முழுமையாகக் கைக்கொள்வதிலிருந்து விலகிப் படைப்பின் சூழலையும், படைப்பாளியின் அகநிலையையும் இணைத்துப் பார்க்கும் மார்க்சியத் திறனாய்வு முறையை முன் வைத்தவர். இதன் தொடர்ச்சியாக அமைப்பியல், தொடர்பாடல், பெண்ணியம் போன்றவற்றின் வரவை மனமுவந்து வரவேற்றவர். இதனால் கீழைத் தேயவியல்x மேலைத்தேயவியல், சிறுபான்மைx பெரும்பான்மை முரண்பாடுகளின் பின்னணியில் இலக்கிய உருவாக்கம், இலக்கியத் திறனாய்வு, இலக்கியவரலாறு ஆகியனவற்றைக் கவனித்து தனது எழுத்துப் பணியினைக் கவனப்படுத்தி விவாதக் கட்டுரைகளையும் நூல்களையும் தந்தவர்.


கல்வித்துறை சார்ந்து மொழியியல் மற்றும் திறனாய்வுப் புலங்களில் காத்திரமான பங்களிப்பைச் செய்துள்ள நுஃமான் தனது தொடக்ககால ஆர்வமான கவிதை எழுதுவதைக் கைவிடாமல் தக்க வைத்த படைப்பாளியும்கூட. அவரது கவிதைகளை மட்டுமல்லாமல், ஈழத்துக் கவி ஆளுமைகளைத் தமிழ்ப் பரப்பிற்குள் கொண்டு வந்து சேர்த்ததில் அவரது பங்களிப்பு மிக முக்கியமானது. மஹாகவியின் பெரும்பாலான படைப்புகளைப் பதிப்பித்தவர் அவரே. பின்னாளில் பெருங்கவிகளாக அறியப்பட்டுள்ள ஈழத்துக் கவிகள் பலரும் அவர் தொகுத்த 11 ஈழத்துக்கவிஞர்கள் என்ற தொகுப்பில் கவிகளாக அறிமுகமானவர்கள் என்பதை இலக்கிய வரலாறு பதிவு செய்யும். தமிழ்க் கவியாக மட்டுமல்லாமல் பல்வேறு மொழிக் கவிதைகளைத் தமிழுக்குக் கொண்டுவந்த மொழிபெயர்ப்பாளர் என்ற அடையாளமும் நுஃமானுக்கு உண்டு.
தங்களின் காத்திரமான எழுத்துகள் மூலம் தமிழ் இலக்கியப் பரப்பை விரிவு படுத்தியும் புதிய தளங்களில் இலக்கியம் சார்ந்த தமிழ்ச் சிந்தனையைத் திசைதிருப்பியும் வரும் ஆளுமைகளைக் கௌரவிக்கும் வகையில் தொடங்கப் பெற்றது விளக்கு விருது, 1995 ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் தகுதி வாய்ந்த ஆளுமைகளைக் கண்டறிந்து அடையாளப்படுத்திக் காட்டுவதன் மூலம் விளக்கு விருது அதன் நம்பகத்தன்மையையும் தரம் பேணுவதையும் விட்டுக் கொடுக்காமல் காத்து வந்துள்ளது.


கடந்த 15 ஆண்டுகளில் கவிதை, புனைகதை சார்ந்த எழுத்தாளுமைகளே அதிகமாக விளக்கு விருதினைப் பெற்றுள்ளனர் என்பதோடு பெரும்பாலும் தமிழக எல்லைக்குள் இருக்கும் படைப்பாளிகளே கவனத்திற்குள்ளாகி வந்துள்ளனர். இந்த ஆண்டு அந்தப் போக்கிலிருந்து ஒரு விலகல். தமிழுக்குத் தனது திறனாய்வு, மொழியியற் சிந்தனை, கவிதை, மொழிபெயர்ப்பு, கல்வித்துறை சார்ந்த கருத்தியல் உருவாக்கம் எனச் செயல்பட்ட நுஃமான் அவர்களுக்கு 2011 ஆம் ஆண்டுக்கான விளக்கு விருது வழங்கப்பட வேண்டும். வழங்கப்பெற்றது. மகிழ்ச்சியாக இருக்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்