மாம்பழக்கன்னங்கள்; மது ஊறும் கிண்ணங்கள்.



அக்கினி நட்சத்திரத்திற்கும் மாம்பழ சீசனுக்கும் தொடர்பு உண்டா என்று தெரியவில்லை. ஆனால் அக்கினி  வெயில் தான் மாங்காயைப் பொன்னிற மாக்கிப் பழுக்க வைக்கிறது என நினைத்துக் கொள்வேன். அக்கினி முடிந்தவுடன் வாங்க ஆரம்பித்தால் சீசன் முடியும் வரை மாம்பழ வாசம் வீட்டில் கமகமத்துக் கொண்டுதான் இருக்கும். வார்சாவில் இருக்கப் போகும் இந்த இரண்டு ஆண்டுகளில் மாம்பழ மணம் இல்லாமல் கழியப் போகிறது என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் மாம்பழம் அவ்வளவு சுலபமாக விட்டு விடுவதாகத் தெரியவில்லை.அக்கினி முடிந்து ஒரு வாரத்திற்குள் மாம்பழ வாசனை வீட்டிற்கு வந்து விட்டது. 600 ரூபாய் விலையில் வாங்கி வந்து வந்துள்ள ஒரு கிலோ மாம்பழ வாசனையை இந்த சீசன் முழுவதும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் .

”இந்த வாரக் கடைசியில எங்க வீட்டுக்குச் சாப்பிட வாங்க” என்று அழைத்த போது மாணவிகள் பயந்த ஒரே விசயம் உறைப்பு. அவர்களுக்கு இந்திய உணவு புதியதல்ல. வார்சாவில் இருக்கும் இருபதுக்கு மேற்பட்ட இந்திய உணவகங்கள் வழியாக ஏற்கெனவே ருசித்துப் பார்த்திருக் கிறார்கள். நானே நேரில் பார்த்திருக்கிறேன். இந்திய உணவகங்களுக்கு வருவோர் எண்ணிக்கையில் பாதிக்கும் மேல் போலந்துக்காரர்கள். போலந்துக்காரர்கள் பன்னாட்டு விருந்தினர்களுக்குத் தரும் விருந்துகளை இந்திய உணவகங்களில் ஏற்பாடு செய்கிறார்கள். உறைப்பாக இருந்தாலும் அது தரும் ருசிக்காகப் பயந்து கொண்டே சாப்பிடுகிறார்கள்.  செக்கச் சிவந்த மிளகாய் வத்தலின் நிறமும் குவியலும் படத்தில் பார்க்கக் கண்கொள்ளாக் காட்சிதான். நாக்கில் வைத்தால் தான் கண்நிறையக் கண்ணீரைக் கொண்டு வந்து சேர்த்து விடுகிறது என ஒரு மாணவி சிரித்துக் கொண்டே சொன்னாள்.

இந்தியச் சமையலின் அடிப்படை ஆதாரமாக இருப்பது காரம். சாம்பாரோ சட்டினியோ நாலு பச்சை மிளகாயைக் கிள்ளிப் போட்டு நுனி நாக்கில் ஊத்திப் பார்த்தால் சுள்ளென்று உறைக்க வேண்டும். இல்லையென்றால் சப்பென்று இருப்பதாக விமரிசனம் வரும். இதை இந்தியக் குடும்பத் தலைவிகள் உணர்ந்தவர்கள். எல்லாவகையான குழம்புகளிலும் கூட்டிலும் பஞ்சம் வைக்காமல் மிளகாய்த்தூளைக் கலக்குவதோடு நிற்பதில்லை; நீளவாக்கிலோ குறுக்காகவோ பச்சை மிளகாயைக் கீறிப் போடுவதையும் தவிர்ப்பதில்லை. வார்சாவில் இது சாத்தியமில்லை என நினைத்த போது கவலைப் பட வேண்டாம்; எல்லாம் கிடைக்கும் என்று சொல்லி இரண்டாவது நாளே அறிமுகமானதுதான் அந்தக் குட்டி இந்தியா. லிட்டில் இண்டியா இந்தியர்கள் இருக்கும் பெரும்பாலான நாடுகளில் இருக்கும் கடை. நான் இருக்கும் சிம்கோவிச் தெருவிலிருந்து  ஒரு கிலோ மீட்டர் தூரத்தில்தான் இருக்கிறது. பனி இல்லாத காலத்தில் நடந்தே போகலாம். கடையை நடத்துபவர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர், தமிழ்நாட்டில் திருவண்ணாமலையில் ஒரு பொறியியல் கல்லூரியில் படித்த பட்டதாரி. மேல் படிப்புக்காக வந்தவர் போலந்துப் பெண்ணோடு சேர்ந்து வியாபாரி யாகி விட்டார். வார்சாவில் இருக்கும் இந்திய உணவு விடுதிகளுக்குத் தேவையான மளிகைச் சாமான்களையும் காய்கறிகளையும் இறக்குமதி செய்து தருவதாகச் சொன்னார். போலந்துப் பணத்தை இந்தியர்களுக்கு இந்திய ரூபாயாக மாற்றி அனுப்பும் பணியையும் செய்கிறார். கடை, அலுவலகம்,வீடு என்ற வேறுபாடுகளைப் பார்க்க முடியாது. எல்லாவற்றையும் பிரித்துப் பிரித்து வைத்து இடத்தை வேண்டி நிற்பது இந்திய மனம். குறைவான இடத்தில் பல வகையான வேலைகளைச் செய்வது ஐரோப்பியர்களின் மனோபாவம். 
இந்தியச் சமையலுக்குத் தேவையான மளிகைச் சாமான்கள் குட்டி இந்தியாவில் எல்லா நாளும் கிடைக்கும். எந்த நாளும் போகலாம் ஆனால் இந்தியக் காய்கறிகள் வாங்க வேண்டும் என்றால் ஒவ்வொரு வாரமும் செவ்வாய், புதனில் போய்விட வேண்டும். பச்சை மிளகாய் வேண்டும் என்றால் செவ்வாய் பிற்பகலிலே போய் விடுவது நல்லது. வந்தவுடனேயே விற்றுப் போவது மிளகாய் தான். நாக்கு ருசிக்குப் பச்சை மிளகாய் வாங்கப்  போனவனுக்கு மூக்கு வியர்த்ததால் மாம்பழ வாசனை பிடித்து விட்டது. குட்டி இந்தியாவுக்குள் நுழைந்தவுடன் போல்ஷிகியில் ‘ஜிந்தாபிரே’ சொல்லும் அவளுக்குத் தமிழில் வணக்கம் சொல்லிவிட்டு எப்போதும் நான் பச்சை மிளகாய் இருக்கும் பெட்டியைத் தான் தேடிச்செல்வேன். இன்று நுழைந்தவுடன்  கண்கள் மாம்பழக்கூடையை தேடிக் கொண்டிருந்தன.

மாம்பழம் கண்ணில் படவில்லை. மாம்பழ நிறக் கன்னத்தோடு போலந்துக்காரி தான் நின்று கொண்டிருந்தாள். காற்றை மூக்கில் உறிஞ்சினால் மாம்பழ வாசம் கம்மென்று உள்ளே நுழைந்தது. மாம்பழ வாசம் பிடிப்பதில் என் மூக்குக்கு இருக்கும் தேர்ச்சியை அவளும் தெரிந்து கொள்ளட்டும் என்று மாம்பழம் வந்திருக்கோ என்று ஆங்கிலத்தில் கேட்டேன். நான் கேட்ட போதே என் நாக்கில் எச்சில் ஊறுவதை அவள் கவனித்து விட்டாள். மஞ்சள் கன்னம் சிவக்கச் சிரித்துக் கொண்டே மாம்பழங்கள் அடுக்கப்பட்ட நாலைந்து பெட்டிகளைத் திறந்து காட்டினாள். அவள் திறக்கத் திறக்கப் பக்கத்தில் இருக்கும் அவளது இந்திய நண்பர் எந்த மாநிலத்து மாம்பழம் என்பதைச் சொல்லிக் கொண்டிருந்தார். உத்தரப் பிரதேசத்து மாம்பழங்களும் ஆந்திரத்துப் பங்கனப் பள்ளி பழங்களும் அதிகம் இருந்தன. தமிழ் நாட்டு மாம்பழம் என்று எதையும் காட்டவில்லை.
திருநெல்வேலியில் இருந்த போது அதிகம் வாங்கியது ராஜபாளையம் சப்போட்டா. செங்கோட் டையிலிருந்து வந்து படித்த மாணவி ஒருத்தி அவர்கள் தோட்டத்திலிருந்து விளைந்த நீலம் கொண்டு வந்ததிலிருந்து நீலமும் வாங்குவேன்.

திண்டுக்கல்லில் படித்த போது அறிமுகமான மாம்பழங்கள் அய்யம் பாளையம் கிளிமூக்கு. சேலத்து மல்கோவாவும், காசாலட்டும். கல்லாமையும் பாண்டிச்சேரியிலிருந்தபோது அதிகம் வாங்குவோம். இவையெல்லாம் வார்சாவுக்கு வரும் என்று எதிர்பார்த்தது கொஞ்சம் அதிகமான ஆசைதான். மாம்பழ ஆசையையும் மாம்பழம் சாப்பிட்ட அனுபவங்களையும் போலந்துப் பெண்ணிடம் விரித்துச் சொல்ல சொல்ல ஆசை தான். மாம்பழக் கவிராயரின் தூது இலக்கியத்தைப் பின்னுக்குத் தள்ளி உள்ளுறையும் வண்டின் வாசம் பற்றி இருண்மை நெளியும் நீண்ட கவிதையைத் தொன்மப் படிமங்கள், சர்ரியலிசக் குறியீடுகளால் நிரப்பி எழுதி  அவளிடம் தந்திருக்கலாம் ஆனால் அவளுக்குத் தமிழ் தெரியாது. அத்தோடு எனக்குக் கவிதை எழுதவும் முடியாது. இரண்டும் சாத்தியமென்றால் கவிதையைக் கொடுத்து ஈடாக ஓர் அட்டைப் பெட்டி மாம்பழத்தை வாங்கியிருக்கலாம். புரவலனிடம் இரவல் நாடும் தமிழ்க் கவிமனம் இல்லாமல் போனதற்கு இப்போது வருத்தப்பட்டு ஒன்றும் ஆகப் போவதில்லை. நான் மூக்கை உறிஞ்சியபோது அட்டைப் பெட்டிகளைத் திறந்து மாம்பழங்களைக் காட்டிக் கொண்டே  இதழோரத்தில் சிரிப்பைக் கசிய விட்டாள். அந்தச் சிரிப்பு மாம்பழ வாசனையைச் சட்டென்று பிடித்த என் மூக்கின் தேர்ச்சியை ரசித்தாள் எனச் சொன்னது. அவளது சிரிப்பில் வழுக்கி விழுந்தபோது நான் கிழக்கோடையில் மாந்தோப்பில் இருந்தேன்.

வடக்கு எல்லையாக இருக்கும் மலையிலிருந்து இறங்கி வரும் இரண்டு ஓடைகளுக்கும் இடையில் தான் என் கிராமம். இரண்டு ஓடைகளின் கரையிலும் பலவிதமான தோப்புகள் அப்போது இருந்தது. எங்கள் தோட்டத்தில் மாந்தோப்பு இல்லை. 20-க்கும் மேற்பட்ட புளியமரங்கள் நிரம்பிய புளியந்தோப்பு இருந்தது எனக்கு நினைவில் இருக்கிறது. மேற்கோடையின் கரைகளில் இருந்த மாந்தோப்புகளைவிட கிழக்கோடையின் கரையில் இருந்த தோப்பு பெரிய தோப்பு. உத்தப்புரத்து முதலாளி  சுப்பையாபிள்ளைக்குச் சொந்தம். அந்தத் தோப்பில் இருநூறு மரங்களுக்கும் மேல் இருக்கும். சில மரங்கள் உயரமாக வளர்ந்து நீண்டிருக்கும். சில மரங்கள் அகன்று விரிந்து பரவித் தரையைத் தொட்டு நீளும். குதிரையாகப் பாவித்து அதன் கிளைகளில் பயணம் செய்த நாட்களின் நினைவோடு அந்தத் தோப்பில் மாங்காய் திருடித் தின்ற நாட்களும் நினைவில் இருக்கின்றன. முப்பது ஏக்கர் பரப்பில் ஒவ்வொரு மரமும் ஒவ்வொரு விதமான மாங்காய்களைத் தரும். கல்லாமை, கிளிமூக்கு, பச்சரிசி, தேங்காய்மூடி, மல்கோவா என ஒவ்வொரு காய்க்கும் பெயர்கள் வைத்துச் சொல்லுவார்கள். அந்தத் தோப்பின் நடுவில் குடில் போட்டு ஒரு காவல்காரக் குடும்பம் இருக்கும். பிள்ளைகுட்டியோடு தங்கியிருக்கும் காவல்காரர் ஒரு புறம் இருந்தால் இன்னொருபுறம் சிறுவர்கள் ஏறி மாங்காயைப் பிடுங்கிக் கொண்டு ஓடிவிடுவார்கள். அப்பிடிப் பிடுங்கிச் சாப்பிட்ட மாங்காய்களும் மாம்பழமும் இன்னும் திருட்டு ஞாபகத்தைச் சுமக்கச்செய்கின்றன.  எங்கள் தோட்டத்தில் இருந்த புளியந்தோப்பை வெட்டிய பிறகு கிணற்றடிக் குண்டில் பத்து மாங்கன்றுகள் வைத்து வளர்த்துப் பார்த்தோம். மாமரங்கள் பூக்கள் பூத்தன. பிஞ்சுகளாக மாறின. ஆனால் பிஞ்சிலேயே உதிர்ந்தும் விட்டன. தொடர்ந்து மூன்று வருடம் இப்படியே தொடர்ந்த போது மாம்பழ ஆசைக்கு முழுக்குப் போட்டு விட்டு மரங்களை வெட்டிக் காளவாசலுக்கு விற்று விட்டோம்.

எட்டாம் வகுப்பு முடித்துத் திண்டுக்கல்லில் போய்ச் சேர்ந்தபோது மாம்பழம் சாப்பிடும் பழக்கம் அதிகமாகி விட்டது. கொடைக்கானல் மலையின் ஓரத்தில் இருக்கும் தாண்டிக்குடி, பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையம், செம்பட்டி, சித்தையன்கோட்டையெல்லாம் மாந்தோப்புகள் நிரம்பிய ஊர்கள். அங்கிருந்து திண்டுக்கல் வழியாகவே பல ஊர்களுக்கும் மாம்பழங்கள் போகும். சீசனில் திண்டுக்கல்லில் எங்கு பார்த்தாலும் மாம்பழ வண்டிகள் நகர்ந்து கொண்டே இருக்கும். வெளியில் போய்விட்டு விடுதிக்குள் நுழையும்போது விடுதிக் காப்பாளரைப் பார்த்துவிட்டுத் தான் அறைக்குப் போக வேண்டும். அவர் அறைக்குப் போகும் ஒவ்வொருவரையும் கையை மோந்து பார்ப்பார். மாம்பழம் சாப்பிட்டவனின் கையில் நாலடி கொடுப்பார். வெயில் காலத்தில் அதிக மாம்பழம் சாப்பிட்டால் உடம்புக்கு ஆகாமல் போய்விடும். மாம்பழச் சூடு வயிற்றுப் போக்கை உண்டாக்கும் என்பதால் மாணவர்களின் நன்மைக்காகவே அவர் எச்சரிக்கை விடுவார்.

திண்டுக்கல், மதுரை, பாண்டிச்சேரி, திருநெல்வேலி என வாழிடங்கள் மாறினாலும் மாம்பழப் பருவத்தில் மாம்பழம் சாப்பிடும் பழக்கத்தை விட்டதில்லை. போனவருடம் திருநெல் வேலியில் கடைசியாக மாம்பழம் வாங்கிச் சாப்பிட்ட போது நானும் மனைவியும் பேசிக் கொண்டது நினைவுக்கு வந்தது. ”நல்லா சாப்பிடுங்க; இரண்டு வருசத்துக்கு மாம்பழத்த நினைச்சுப் பார்க்க முடியாது”ன்னு சொன்னாள். நினைச்சுப் பார்க்கிறது என்ன? சாப்பிட்டே பார்க்கலாம் என்று குட்டி இந்தியா சொல்லியது. 
போலந்துப் பெண் திறந்த பெட்டிகளுள் ஒன்றில் நாலு மாம்பழங்கள் இருந்தன. அந்நான்கும் ஆந்திரப்பிரதேசத்துப் பங்கனப்பள்ளி. இன்னொன்றில் ஆறு அல்போன்சா மாம்பழங்கள் இருந்தன. நாலு பழமானாலும்சரி, ஆறு பழமானாலும்சரி ஒரே விலை தான்.  போலந்துப் பணமான ஜுலாட்டியில் 35 கொடுத்தாள் பெட்டி கைமாறி விடும். கடைசியாகத் திருநெல்வேலியில் சீசன் முடியும்போது 120 ரூபாய்க்கு  வாங்கியது நினைவுக்கு வந்தது. இந்தப் பெட்டியில் இருக்கும் ஆறு பழங்களும் சேர்ந்து ஒரு கிலோவுக்குக் கொஞ்சம் கூடுதலாக இருக்கும். ஒருகிலோ 35 ஜுலாட்டி என்றால் 600 இந்திய ரூபாய்கள். அந்நியச் செலாவணிச் சந்தையில் இன்றைய இந்திய ரூபாயின் மதிப்பு ஒரு டாலருக்கு 56 ரூபாய். போலந்து ஜுலாட்டியின் மதிப்பு 3.4. ஒருபுறம் மனம் இந்திய ரூபாயில் கணக்குப் போட்டுப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே கை அல்போன்சா மாம்பழங்களை வாங்கிப் பைக்குள் வைக்குள் வைத்துக் கொண்டது. கையின் செயல்கூட அனிச்சைச் செயலாக மாறிப் போனது. 15 ஜுலாட்டி கொடுத்து ஒரு கிலோ காய்கறிகளையும் வாங்கிக் கொண்டு வெளியில் வந்தேன். 

மாம்பழக்கன்னங்கள்; 
மது ஊறும் கின்னங்கள் 
என்ற பாடலின் ஒலிக்கோர்வை வார்சாவின் விலானோவ்ஸ்காவில் எப்படிக் கேட்கும் என நின்று கேட்டேன், அக்கோர்வை அடிவயிற்றிலிருந்து வருகிறதா? அடிநாக்கிலிருந்து வந்ததா? என்று தெரியாமல் குழம்பிக் கொண்டிருக்கிறேன். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்