தொலைக்காட்சியைப் படித்தல்: பங்கேற்பும் விலகலும்

நிகழ்த்துக்கலைகள் கண்வழிப்பட்டவை; செவி வழிப்பட்டவை. நிகழ்த்துக்கலைகளுள் ஒன்றான நாடகக் கலை, பாத்திரங்களின் வார்த்தை மொழியின் உதவியால் பிற நிகழ்த்துக் கலைகளிலிருந்து தன்னை வேறு படுத்திக் கொள்கிறது. மேடை நிகழ்வில் உற்பத்தியாகும் வார்த்தைமொழி (Verbal language) காட்சி ரூபம் (Visual) ஒலிரூபம் (Sound) என மூன்று நிலைகளில் தன்னை வந்தடையும் குறிகளின் மூலம் பார்வையாளர்கள் மேடை நிகழ்வோடு பரிவர்த்தனை கொள்கிறார்கள். சரியான பரிவர்த்தனை நடக்கும் நிலையில் பார்வையாளன் திருப்தியாக உணர்கிறான். சரியான பரிவர்த்தனைக்கு நாடகக்கலை எப்போதும் நடிகனையே நம்பியுள்ளது. காமிராவின் வழி பார்க்கப்பட்டு, அடுக்கப்பட்ட பிம்பங்களாக உருமாறி, தொழில்நுட்பத்தின் உதவியால் திரையில் உயிர்பெறும் திரைப்பட ஊடகம் கூடப் பார்வையாளர்களோடு பரிவர்த்தனை ஏற்படுத்த, நடிக பிம்பங்களையே அதிகம் நம்புகிறது.