ஆவணப்படுத்துதலின் அரசியல்: நகரும் நாட்டுப் புறங்கள்
முன்குறிப்பு:
திரும்பவும் எழுத
வந்துள்ள விமலாதித்த மாமல்லன் எழுபதுகளிலும் எண்பதுகளிலும் நடந்த இலக்கிய
சர்ச்சைகளை நினைவூட்டிக் கொண்டே இருக்கிறார். வலைப்பூவிலும் முகப்பனுவலிலும் அவர்
தட்டிவிடும் ஒவ்வொன்றும் மைய உருவாக்கத்தை
அழிக்கும் தடாலடியாக இருக்கிறது. அவர் வேகத்திற்கோ, அவரோடு மோதும் எழுத்து
ஜாம்பவான்களின் வேகத்திற்கோ ஈடுகொடுக்கும் வேகம் என்னிடம் இல்லை. எம்.டி.முத்துக் குமாரசாமியின் தேசிய
நாட்டுப் புறவியல் மையம் செய்து வரும் ”ஆவணப்படுத்துதலின் பின்னணிகள்” பற்றிய குறிப்பொன்றை
எழுதியுள்ளார். மிரட்டிப் பணிய வைப்பது அல்லது பணம் கரந்து விடுவது என்பது
மாமல்லனின் நோக்கமாக இருக்கலாம் என அந்தக்
குறிப்புக்கு உள்நோக்கம் கற்பிக்கும் எம்.டி. எம்.மின் கூற்று அங்கதத்தின் உச்சம்
என நினைத்துக் கொண்டிருந்த போது, ஆவணப்படுத்துதலில் ’சந்தேகங்கள் எழுப்ப
வேண்டியதில்லை’ என, அப்பாவியாகக் கருத்து சொன்ன ராஜன்குறை விலா நோகச் சிரிக்க
வைத்துவிட்டார். தன்னை மானுடவியல் மாணவர் எனச் சொல்லும் ராஜன்குறை அதிலிருந்து
தோன்றிய நாட்டுப்புறவியலைத் தனக்குச் சம்பந்தம் இல்லாத துறையாகச் சொன்னது கண்ணில்
நீரை வரவழைத்து விட்டது.
இந்தக் காட்சிகள்
தான் எனது அரதப்பழைய கட்டுரை ஒன்றை வலையில் ஏற்றும் ஆசையைத் தூண்டியது.
எம்.டி.முத்துகுமாரசாமி இந்தக்கட்டுரையையெல்லாம் படித்திருப்பார் என்பது எனக்குத்
தெரியும். மாமல்லனுக்காகவும் ராஜன்குறைக்காகவும் மட்டுமல்ல; அவர்களோடு சேர்ந்து
கும்மியடிக்கும் இணையக் கும்மியாளர் களுக்காகவும்
இந்தக் கட்டுரை இ.பத்மநாப ஐயர் தொகுத்த பன்னாட்டுத் தமிழ் எழுத்தாளர்கள் பங்கேற்ற தொகுப்பு ஒன்றில் இடம்பெற்ற கட்டுரை. அத்தொகுப்பிற்கு அவர் வைத்த பெயர் யுகம் மாறும். வெளிவந்த ஆண்டு 1999.
சரியாகச் சொல்வதானால் அந்த ஆண்டு எழுதியதும் அல்ல.
1988 இல் தமிழ் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுகள் – முன்னும் பின்னும் என்ற தலைப்பில் ஆராய்ச்சி இதழில் எழுதிய கட்டுரையையே 1999 –ன் சூழலுக்கேற்ப நிகழ்காலத் தகவல்களுடன் மாற்றி எழுதி “ நகரும் நாட்டுப் புறங்கள் “ என்று தலைப்பிட்டேன். இப்போது 2012 இல் வலைப்பூவில் அதை அப்படியே பதிவேற்றம் செய்கிறேன். மாற்றங்கள் எதுவும் தேவையில்லை என்ற உணர்வுடன். இனிக்கட்டுரைக்குள்
நுழையலாம்.
========================================================================
இசைஞானி இளையராஜா,
கி.ராஜநாராயணன், நடிகர் நாசர், ந.முத்துசாமி, மீனா சுவாமிநாதன்,தேவிகா, புஷ்பவனம்
குப்புசாமி, கழனியூரன், டாக்டர் விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன், டாக்டர்
கே.ஏ.குணசேகரன், டாக்டர் தே.லூர்து, டாக்டர் மு,ராமசுவாமி,டாக்டர் கு.முருகேசன்- இந்தப்
பெயர்கள் தமிழக நாட்டுப் புறவியல் குறித்த பொதுப்புத்தி சார்ந்த சொல்லாடல் களிலும்
அறிவார்ந்த தளத்துச் சொல்லாடல்களிலும் உச்சரிக்கப்படும் பெயர்கள். இவர்களில் சிலர்
கல்வி நிறுவனங்கள் சார்ந்தவர்கள்: சிலர் வேறு வகையான –அரசுத்துறை சாராத –
நிறுவனங்களைச் சார்ந்தவர்கள்.
மதுரைப் பல்கலைக்கழகத்
தமிழியல் துறை. தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழக நாடகத்துறை, தென்னகப் பண்பாட்டு
மையம், பாளையங் கோட்டை புனிதசேவியர் கல்லூரி நாட்டார் வழக்காற்றியல் துறை. இயல் இசை
நாடக மன்றம், டெல்லி சங்கீத நாடக அகாடமி, சென்னைத் தொலைக் காட்சி நிலையம்,
கூத்துப்பட்டறை, நிஜநாடக இயக்கம், மா.ச. சுவாமிநாதன் பவுண்டேஷன், கலை இலக்கிய
இரவுகள், மதுரை தலித் ஆதார மையம்- இவையெல்லாம் தமிழக நாட்டுப்புறவியலோடு
நேரடியாகவும் மறை முகமாகவும் உறவு கொண்டுள்ள நிறுவனங்கள். சில அரசுத்துறை
சார்ந்தவை. சில வெளிநாட்டு நிதி உதவிகளின் மூலம் இயங்கி வருபவை.
புரிசை, பெருங்களத்தூர்,
சாலியமங்கலம், வாடிப்பட்டி, ஜமீன் கோடாங்கி பட்டி, திருவண்ணாமலை, ரெட்டிப்பாளையம்,
பரவை முனியம்மா, ரங்கராஜன், கண்ணப்பத் தம்பிரான், ராஜகோபால், கொல்லங்குடி
கருப்பாயி, தங்கவேல் கணியான்.. இப்பெயர்களில் சில ஊரைக் குறிப்பன. சில நபர்களைக்
குறிப்பன. மாநில, மத்திய அரசுகளின் கவனிப்பையும் வெளிநாட்டு நிதியுதவியையும்
பெற்றன. சில பெறும் போட்டியில் இருப்பன.
********************************
இன்று மையங்களைக்
கட்டமைப்பதில் தகவல் அறிவியல் முக்கிய வினையாற்றுகிறது. அதன் நிகழ்காலப் பயனை
உடனடியாகப் பெற்றுவிடும் வாய்ப்புடைய பெருநகரங்களும், சிலபல குறுநகரங்களும் ‘
வெளி’ சார்ந்த மையங்களாக மாறி விடுகின்றன. சிலபல அனுகூலங்களால் அல்லது தெரிவுகளால்
ஒரு சில கிராமங்கள் கூடத் தகவல் வலைப் பரப்புக்குள் வந்து விடுகின்றன. தேவைகளும்
விருப்பங்களும் இருந்த போதும் பெரும்பாலான கிராமங்களும் சிலபல நகரங்களும்
விளிம்பிற்குத் தள்ளப்படுகின்றன. மேலும் மேலும் தள்ளப்படும் நிலையில் பல
கிராமங்கள் விளிம்பிற்கு வெளியே ஒதுக்கப்பட்டுக் காணாமல் போவது அல்லது இல்லாமல்
ஆவது என்பதின் தவிர்க்க முடியாத கட்டத்தை நெருங்கி விடுகின்றன. காணாமல் போன
கிராமத்து மனிதர்களின் குடியிருப்புகள் நகரங்களின், பெருநகரங்களின் விளிம்புகளான
சேரிகளை உருவாக்குகின்றன. நகரத்தின் விளிம்புகளாக மாறிய நிலையில், மையத்தின்
அனுகூலங்கள் பலவற்றை அனுபவிப்பதும் கூடச் சாத்தியப் படலாம்.
கடுமையான உழைப்பு,
நகரத்தின் நெருக்குதல்களைப் புரிந்து கொள்ளும் லாவகம், கிராமம் சார்ந்த மதிப்புகளை
இழந்து, நகரம் சார்ந்த மதிப்பீடுகளை உருவாக்கிக் கொள்ளுதல் என்பதன் மூலம்
மையத்திற் கேற்றவர்களாக மாறிவிடும் விளிம்பு மனிதர்கள் அதிவேகமான எண்ணிக்கையில்
வளர்ந்து வருகின்றனர். இதை விடவும் அதிவேகமான எண்ணிக்கையில் கிராமத்து விளிம்பு
மனிதர்கள் காணாமல் போய்க் கொண்டும் இருக்கின்றனர்.பன்னாட்டு மூலதன வருகையின்
விளைவுகள், விளிம்பு மனிதர்களை மையத்தை நோக்கியும், விளிம்பிற்கு வெளியேயும்
சிதறடித்துக் கொண்டிருக்கின்றன. கிராமம் என்னும்‘ வெளி’ சார்ந்த நகர்வுகள் அதன்
பண்பாடு சார்ந்த உற்பத்திகளான நாட்டுப்புற வழக்காறுகளுக்கும் பொருந்தி நிற்கும்;
நிற்கின்றன.
********************************
சுதந்திரத்திற்கு முன்னும்
பின்னும் நாட்டுப்புற வழக்காறுகள் வெவ்வேறு காரணங்களால் கவனிப்புக்குள்ளாயின.
எட்கர் தர்ஸ்டன், பெர்சி மார்க்யூன் போன்றவர்களின் ஆய்வுகள் காலனி
ஆட்சியாளர்களுக்கு இந்தியா விலிருந்த சிறுசிறு சமூக வேறுபாடுகளை அறிந்து கொள்ளவும்,
அவற்றைப் பெரிதுபடுத்தி, பிளவு படுத்தி ஆளும் வல்லமைக்கும் உதவின. சுதந்திர
இந்தியாவில் 1970களில் நாட்டுப்புறவியல் கூடுதலான கவனத்துக்குள்ளானது. மொழிவாரி
மாநிலங்களின் தோற்றம், ஜனநாயகத்தைப் பரவலாக்குவது, தேசிய இன அடையாளங்களைக்
கண்டறிவது, பழமையிலிருந்து அதன் தொடர்ச்சியாகப் புதுமையையைக் கட்டமைப்பது எனப்
பல்வேறு நோக்கங்களோடு நாட்டுப்புற வழக்காறுகள் குறித்த தேடல்களும் ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டன.
இந்தியப் பல்கலைக் கழகங்கள் நாட்டுப்புறவியலைக் கற்பதற்குரிய பாடமாக ஏற்றுக் கொண்டு
பட்டங்கள் வழங்கின. தமிழகப் பல்கலைக்கழகங்களும் விதிவிலக்குகள் அல்ல. தமிழகப் பல்கலைக்கழகங்கள்
நாட்டுப் புறவியலுக்குப் பட்டங்கள் வழங்கி அங்கீகரித்ததில் ஆச்சரியமான ஒரு
வேறுபாடு உண்டு. மிக உயர்ந்த பட்டங்களான பிஎச்.டி., எம்.லிட்., எம்.ஃபில்.
எனத் தொடங்கிக் கீழ்நோக்கிய அங்கீகாரம் அது. (இந்தியப் பல்கலைக் கழகங்கள்
நாட்டுப்புறவியலை அரவணைத்ததின் பின்னணியில் அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் இருந்தன
என்பது தனி ஆய்வு. காண்க. தமிழ்நாட்டுப்புறவியல் ஆய்வுகள்: முன்னும்பின்னும்,
நாவாவின் ஆராய்ச்சி, 27/ 1988)
கல்வித்துறை மையங்கள்
பட்டங்கள் வழங்குவதன் மூலம் நாட்டுப் புறவியலை விளிம்புகளிலிருந்து நகரச் செய்தன
என்றால், மற்ற நிறுவனங்கள் வெவ்வேறு உத்திகளைப் பின்பற்றுகின்றன. ‘கலைமாமணி’
‘சங்கீத நாடக்’ போன்ற கௌரவங்கள் ஒரு வகை உத்தி. மாநிலங்களுக்கிடையிலான பரிவர்த்தனை
என்பன இன்னொருவகையான உத்தி. விழாக்களை ஏற்பாடு செய்தல், பரிசோதனைகளை ஊக்குவித்தல்,
தொகுத்துப் பாதுகாத்தலுக்கு உதவுதல், மேடைகளை உருவாக்கித் தருதல்,
ஊடகங்களில் இடம் பெறச்செய்தல் எனப் பல்வேறு உத்திகள் மூலம் விளிம்புநிலைக்கலைகளான
நாட்டுப்புறக்கலைகள் மையங்களை நோக்கி நகர்த்தப்படுகின்றன. கவனிக்கப்படுதல்,
பேசப்படுதல், நிதியுதவி பெறுதல், வாய்ப்புகள் வருதல், அங்கீகாரத்தை அடைதல் என்கிற
படிநிலையான புள்ளிகளைத் தாண்டி இன்று தெருக்கூத்து, தேவராட்டம், பறை ஆட்டம்,
நாட்டுப்புறப்பாடல், கதைகள் என்பன மையத்தை நோக்கி நகர்ந்துள்ளன.
அயல் நாட்டினர்
சிலருக்கும், தமிழ்நாட்டில் சிலருக்கும் ஆய்வுப் பட்டங்கள் பெறக்காரணமான
தெருக்கூத்து, தமிழர்களின் அரங்கக் கலை வடிவமாகப் பரிந்துரை செய்யப்படும் ஒன்று.
மைய அரசின், கலாசாரத்துறையின் மிக உயர்ந்த விருதான ‘சங்கீத் நாடக்’ விருதைப்
பெற்றுள்ள கலைமாமணி புரிசை கண்ணப்பத் தம்பிரான் தெருக்கூத்து மன்றம் பல முறை
மாநிலங்களுக்கிடையேயான பரிவர்த்தனையிலும், பிரான்சு, சுவீடன், கொலம்பியா போன்ற
நாடுகளுக்கும் பயணங்கள் செய்யும் வாய்ப்பைப் பெற்றுள்ளது. இக்குழுவின் பின்னணியில்
ந.முத்துசாமி என்ற பெயர், கூத்துப் பட்டறை என்ற நாடகக்குழு, போர்டு பவுண்டேஷன்
என்ற நிதி நல்கை நிறுவனம் போன்றவற்றின் உதவும் கரங்கள் உண்டு.
அத்தகைய அங்கீகாரத்தை
நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் ‘கட்டைக்கூத்து’ பெருங்களத்தூர் ராஜகோபாலின்
பின்னணியில் மா.ச.சுவாமிநாதன் பவுண்டேஷன் என்னும் நிதி நல்கை நிறுவனம், ஹன்னா என்ற
ஒல்லாந்துப் பெண் ஆய்வாளர், பல்கலை அரங்கம்(மங்கை அரசு போன்றோர் செயல்பட்ட ) என்ற
நாடகக்குழு போன்றன இருந்தன. தலித் இயக்கங்களின் எழுச்சிக்கு முன்னதாகவே ‘ நந்தன்
கதை’ என்னும் நாடகத்தின் மூலம் அறிமுகம் கிடைத்த ரங்கராஜன் என்னும் பறை ஆட்டக்
கலைஞர் இன்று தமிழ்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பயணங்கள் செய்பவர். அவரது நகர்வின்
பின்னணியில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக நாடகத் துறை, கூத்துப் பட்டறை, கிராப்ட்
பவுண்டேஷன், போன்றனவும் இருந்தன; இருக்கின்றன.
தேவராட்டத்தை ஜமீன்
கோடாங்கிபட்டியிலிருந்து சென்னை நகரப் பள்ளிக்கூடங்கள் வரை கொண்டுவந்த பயணத்தின்
தொடக்கப்புள்ளியாக மதுரை நிஜநாடக இயக்கம் இருந்தது. “ஆயனா” என்ற பெயரில் மகா
நிகழ்வை அரங்கேற்றிய தேவிகா வெளிநாடு ஒன்றில் தேவராட்ட நிகழ்வு விளக்கவுரைஞராக(
)ப் பங்கேற்க உதவியுள்ளது. சங்கீத நாடக அகாடமியின் வேர்களைத் தேடும்
பரிந்துரைக்குப் பின்னர் தயாரிக்கப்பட்ட புதிய நாடக முயற்சிகளின் அரங்க மொழியை
உருவாக்குவதில் தெருக்கூத்து, தேவராட்டம், பறை ஆட்டம், கணியான் ஆட்டம்,கோலாட்டம்,
கும்மியாட்டம் சாமியாட்டம், பேயாட்டம், ராஜாராணி ஆட்டம் போன்ற பல்வேறு ஆட்டங்களும்
பங்கு வகித்துள்ளன என்ற போதும், தெருக்கூத்திற்கும், தேவராட்டத்திற்கும் பறை
ஆட்டத்திற்கும் மட்டுமே மையத்தின் கூடுதல் கவனம் கிடைத்ததின் பின்னணிகள் என்ன..?
இந்த வளர்ச்சி
எல்லாக்கலைகளுக்கும் இலக்கியங்களுக்கும் கிடைக்காமல் போனது ஏன்? இந்தக்
கேள்விகளுக்கான பதிலைப் பெறுவதற்கு முன்பாக நாட்டுப்புறவியலின் வேறு சில
நகர்வுகளையும் காணலாம். தெரிவு செய்யப்பட்டு சிறந்தது என முத்திரை குத்துவதற்கு
வசப்படாதவை நாட்டுப் புற இலக்கியங்களான பாடல்களும் கதைகளும். ஒட்டுமொத்தமான
அங்கீகாரம் சாத்தியப்படும் இவ்விரு துறைகளிலும் மையம் வேறு சில உத்திகளைப்
பின்பற்றி, நாட்டுப்புற பாடல்களுக்கும் கதைகளுக்கும் உரியவர்களை விளிம்பிலேயே
நிறுத்தி விட்டது. ஆனால் அதன் பிரதிநிதிகளாகச் சிலரை அங்கீகரித்ததன் மூலம் அவற்றை
மையங்களுக் குரியதாக மாற்றிக் கொண்ட தந்திரத்தையும் கைக் கொண்டுள்ளது என்று
சொல்லலாம்.
வயல் வெளிகளிலும் களத்து
மேடுகளிலும் காற்றில் மிதக்கும் கவிதை களாய்க் கரைந்த நாட்டுப்புறப்பாடல்கள்
ஒலிநாடாக்களில் விற்பனைக்குரிய பண்டங்களாக ஆகி விட்டன. கட்சி மாநாடுகளிலும்,
திருமண வரவேற்பு களிலும் மெல்லிசைக்கச்சேரிகளுக்கு மாற்றாக ஒலிக்கத் தொடங்கிய
நாட்டுப்புறப் பாடல்கள் அயல் நாட்டுத் தமிழர்களுக்கு தமிழ்ப் பண்பாட்டின்
அடையாளங்களாக நகரத்தொடங்கியுள்ளன. கலைமாமணி பட்டங்களுக்காக மோதத்தொடங்கியுள்ளன.
விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன், புஷ்பவனம் குப்புசாமி, கே.ஏ.குணசேகரன் எனப் பரவலான
அறிமுகம் கிடைத்துள்ள சிலரோடு கொல்லங்குடி கருப்பாயி, பரவை முனியம்மா,
தேக்கம்பட்டி நடராசன், சிவகங்கை கோட்டைச்சாமி என மறந்து போன , மறக்கப்படும்
பெயர்களும் உண்டு. தனித்த அடையாளங்களைச் சிதறடிக்கும் இசை வெளிப்பாட்டுப்
பிம்பங்களான ஏ.ஆர்.ரஹ்மான், சிற்பி போன்றவர்களின் சப்தக்கலவைக்குள் ஒரு
பகுதியாகவும் நாட்டுப்புறப்பாடல்களின் உற்பத்தியாளர்களும், அதன் இசை லாவகத்தை
இட்டுக்கட்டியவர்களும் மையத்தை நோக்கி நகராமல் – நகருவது சாத்தியம் என்பதை
அறியாமல் – விளிம்பிலும், விளிம்பிற்கும் அப்பாலும் ஒதுங்கி விட, அவர்களிடம்
பாட்டு கேட்கப்போனவ ஆய்வாளர்களும் அவர்களின் ஆசியர்களும் அவர்களின் பிரதிநிதிகளாக
மையங்களுக்குள் நுழைந்து கொண்டனர். உடனடியாக மையங்கள் தெரிவு செய்யும் உத்தியைப்
பின்பற்றும் போட்டிகளைத் தயாராக வைத்திருந்ததை அறிந்து அவர்கள் வலதுசாரிகளாகவும்
இடதுசாரிகளாகவும் நகர்ந்து கொண்டுள்ளனர்.
இதை விடவும் கூடுதலான
அம்சம் ஒன்றை நாட்டுப்புறக் கதைகளின் நகர்வில் காணலாம். வட்டார மொழியின்
நகாசுத்தனத்தோடு நாட்டுப்புறக் கதைகளைப் பல்வேறு வாட்டாரங்களிலிருந்தும் சேகரித்து
ஆய்வாளர்கள் பதிப்பித்துள்ளனர். என்றாலும் பெரும்பத்திரிகை என்னும் மையம்
அங்கீகரித்துள்ள நாட்டுப்புறக் கதையாளர் கி.ராஜநாராயணன் மட்டுமே. மாஸ்கோவின்
முன்னேற்றப்பதிப்பகம் பதிப்பித்துள்ள நாட்டுப்புறக் கதைகளை வாசித்திருந்த கி.ரா.,
தமிழக நாட்டுப்புறக் கதைகளின் தொகுதி ஒன்றை முதன் முதலில் நியூசெஞ்சுரி புத்தக
நிறுவனத்தின் மூலம் பதிப்பித்தார். தனது ‘கரிசல் காட்டுக்கடுதாசி’ என்னும்
சித்திரிப்புத் தொடர் மூலம் பெரும்பத்திரிகை மையத்திற்குள் நுழைந்த கிராவை,
சிறுபத்திரிகைகள் சார்ந்த சிறுகதையாளர் கி.ரா.வை அங்கேயே தங்கிவிடச் செய்தவை
நாட்டுப்புறக் கதைகள் தான்.
தானே சேகரித்த
கதைகளிலிருந்தும், தனக்குப் பலரும் சேகரித்துத்
தரும் கதைகளிலிருந்தும் பெரும் பத்திரிகைகளின் தேவைகளுக்கேற்பக் கதைகளைத்
தெரிவு செய்வது, நகாசு செய்வது, விளக்கங்கள் தருவது எனத்தானே ஒரு மாறியும்
விட்டார். இதன் மறுதலையாக அசலான நாட்டுப்புறக் கதைகளும், கதைசொல்லிகளும்
விளிம்புகளிலேயே தங்கிவிடக் காரணமாகவும் ஆகி விட்டார். இவரது பாணியைப் பின்பற்றி,
அவருக்காகக் கதைகள் சேகரித்து அனுப்பிய கழனியூரனும், பாரததேவியும் பெரும்
பத்திரிகை மையங்களுக்குள் நுழையும் வாய்ப்பு உண்டாகிவிட்டது. இனிப் போட்டிகள்
தொடங்கலாம்.
*************************************
அங்கீகாரம் அளித்தல்,
நிதியுதவி தருதல் என்கிற கடிவாளங்களைத் தன் வசம் கொண்டுள்ள மையம் சிறந்தனவற்றைத்
தெரிவு செய்யப்போட்டிகளை நடத்திக் கொண்டே இருக்கிறது. அப்போட்டிகளும் ஜனநாயக
அடிப்படையிலேயே நடப்பதாகவும் பாசாங்கு செய்கிறது.எந்தவித அடிப்படைகளையும்
பின்பற்றாமல். மையங்களோடு தொடர்பு கொண்டவர்களின் பரிந்துரைகளின் பேரில்
குழுக்களையும் நபர்களையும் தெரிவு செய்கின்றன என்பதே நடப்பு இப்படித் தெரிவு
செய்யப்படும் குழுக்களும் நபர்களும் ஆகச்சிறந்தவைகளாக- சிறந்தவர்களாக முன்
நிறுத்தப்படுகின்றனர். அவற்றை மையங்களுக்கேற்பத் தகவமைத்து அவற்றையே
உதாரணங்களுக்காக்குகிறது மையம். அவற்றின் வண்ணங்களும் லாவகங்களும் நகாசுத்தனமும் அவற்றுக்கு
மட்டுமே உரியதல்ல என்று மாற்றப்படும் எதிர்வினைகளும் அதனோடு சேர்ந்தே நடைபெறும்.
தெருக்கூத்தின் ஒப்பனைப் புள்ளிகளும்,
கோடுகளும் ஜெர்மானிய ஒப்பனையின் புள்ளிகளாகவும் கோடுகளாகவும் ஆகலாம். பறையின்
அதிர்விசையை சிந்தசைஸ்ஸரின் விசைப் பலகைக்குள் சிறைப் பிடிக்கலாம். ராஜஸ்தானத்து
“காக்ரா” ஆடை அமெரிக்கத் துணி வர்த்தகத்திற்குள் நுழைந்து விடுவதில் நமக்குப்
பெருமையா? வருத்தமா? – இதுதான் நம்முன் உள்ள கேள்வி.
==============================================================================
பின்குறிப்பு:
எம்.டி.முத்துகுமாரசாமி
முன்பு ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் பாளையங்கோட்டை புனித சேவியர் கல்லூரி
நாட்டார் வழக்காற்றியல் துறை , அமெரிக்காவின் போர்டு பவுண்டேஷனிடமிருந்து பெருந்தொகையை நிதி நல்கையாகப் பெற்றது.
ஆவணப்படுத்துதல் பணி முடிந்தவுடன் நிதி நல்கை நிறுத்தப்பட்டது.
கருத்துகள்