பனியும் பனியின் நிமித்தமும்


”கதவைத் திற; காற்று வரட்டும்”
நான் தொகுக்க நினைக்கும் நவீனத் தமிழ்க் கவிதைத் தொகுப்பில் பசுவய்யாவின் இந்த கவிதை நிச்சயம் இடம் பெறும். மூடுண்ட இந்திய சமூகத்தின் ஒட்டு மொத்த கதவாக அவர் சொல்லும் கதவை விரிக்காமல் தமிழ்ப் பண்பாட்டுக் காவலர்களின் குறுகிய மனக் கதவைக் குறிக்கவே இக்கவி தையை எழுதினார் என வியாக்கி யானங்கள் சொல்லப்பட்டாலும், நான் அந்தக் கவிதையை இந்தியப் பரப்பிற்கான கவிதையாகவே நினைக்கிறேன். இந்திய சமூகத்தின் பல்வேறு நிறுவனங்களின் மூடுண்ட கதவுகளைத் திறந்து உள்ளிருளைப் போக்கும் அறிவொளியெனும் வெளிச்சத்தையும் உடலில் பரவிச் சுகமளிக்கும் காற்றையும் அனுமதிப்பதற்குச் சாளரங்களின் கதவுகள் திறக்கப்பட வேண்டும் எனச் சொல்வதாகவே நான் வாசித்துக் கொண்டிருக்கிறேன்.
எந்தத் தொகுப்பிலும் இடம் பெறக்கூடிய நவீனத் தமிழ்க் கவிதை என்னும் தீர்மானமான எனது முடிவை ஆட்டிப் பார்ப்பது போல் வார்சாவில் சோதனை ஏற்படும் என்று நினைக்கவில்லை. வந்து சேர்ந்து விட்டது. போலந்தில் என்னிடம் தமிழ் படிக்கும் மாணாக்கர்களுக்கு நவீனத் தமிழ்க் கவிதைகளை அறிமுகப்படுத்த விரும்பி 25 கவிதைகள் அடங்கிய தொகுப்பு ஒன்றைத் தயார் செய்ய நினைத்த போது இந்தக் கவிதையைச் சேர்ப்பதா? தள்ளுவதா? என்று மனம் படாதபாடு பட்டுவிட்டது. தமிழைத் தாய் மொழியாகக் கொண்டிராத ஐரோப்பிய தேசத்து மாணாக்கர்களுக்கு தமிழ்க் கவிதையை அ/றிமுகம் செய்யும்போது உலக மனிதனை மையம் கொண்ட கவிதைகளை இடம்பெறச் செய்வதா? உள்ளூர் மனிதனிடம் பேசும் கவிதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமா? என்ற எதிரிணை என்னை அலைக்கழித்தது. நவீனத்துவம் அடிப்படையில் உலகம் தழுவிய வாழ்நிலை அல்லது மனநிலை என்பதால் உலகப் பரப்பில் அர்த்தமாகும் கவிதைகளை இடம் பெறச் செய்வது சரியாக இருக்கும் என மனம் திரும்பத் திரும்பச் சொல்லியது. அந்த அடிப்படையில் தொகுத்தால் கதவைத் திற; காற்று வரட்டும் கவிதையைத் தொகுப்பில் சேர்க்க முடியாது.
  
நேரடி அர்த்தத்திலும், குறியீட்டு அர்த்தத்திலும் ஒவ்வொரு இந்திய வாசகனுக்கும் புதிய அனுபவத்தையும் சிந்தனைத்தளத்தையும் உருவாக்கித் தரும் அடுக்குகள் அந்தக் கவிதையில் உண்டு ஆகவே இந்திய மொழிகளில் எதிலும் அதை மொழி பெயர்க்கலாம்.. இந்தியப் பல்கலைக் கழகங்கள் எதற்கேனும் நவீன இந்தியக் கவிதைத் தொகுப்பொன்றைப் பாடமாக்கலாம் என நினைக்கும்போது அந்தக் கவிதையைக் கட்டாயம் இடம் பெறச் செய்ய வேண்டும். ஆனால் போலந்தில் அதன் நேரடி அர்த்தம் செல்லுபடியாகுமா என்பதுதான் எனக்குள் எழுந்த பெருங்கேள்வி.
போலந்துக்கு மட்டுமல்ல; ஆறுமாத காலத்தைக் குளிர் காலமாகக் கழிக்கும் ஐரோப்பிய மொழிகள் பலவற்றிலும் அந்தக் கவிதையை மொழி பெயர்த்தால் அதன் நேரடி அர்த்த அனுபவம் சிக்கலுக் குள்ளாகும் ஒன்று. போலந்துக் காரர்களின் நேரடி அர்த்ததிற்கு மாறாக இருக்கிறது என்பதாலேயே அதைக் கவிதையில்லை என்று தள்ளி விடும் ஒற்றைப் பரிமாணம் எனக்கு உடன்பாடு இல்லை. ஆகவே அதனை இந்தியக் கவிதை என்ற வகைப்பாட்டிற்குள் நிறுத்தித் தொகுப்பில் சேர்த்துக் கொண்டேன்.
 
அந்தக் கவிதையின் தலைப்பு தொடங்கி, தொடரும் ஒவ்வொரு வரிக்குள்ளும் எதிர்ப்படும் குறியீட்டுத் தனத்தைத் தமிழ் நாட்டு மாணாக்கர் களுக்குச் சொல்ல முடிந்தது போல போலந்து மாணவர்களுக்குச் சொல்ல முடியுமா? என்று ஐயம் ஏற்பட்டதற்கான காரணங்கள் அகத்தில் இல்லை; புறத்தே விரிந்து கிடக்கிறது வார்சாவில் நான் குடியிருக்கும் அடுக்கு மாடிக் கட்டடத்தின் சாளரக் கதவுகளை மட்டும் அல்ல; எந்தக் கதவையும் திறந்து வைப்பது சாத்தியம் இல்லை. ஒரு வேளை மார்ச் மாதக் கடைசியில் தொடங்கும் வசந்தத்தின் வருகைக்குப் பின்னால் சாளரக் கதவுகளைத் திறந்து வைப்பது சாத்தியமாகலாம்..

அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கு வரும் முற்றத்தின் வாசல்களே இரட்டைக் கதவுகளால் அடைக்கப்பட்டே இருக் கின்றன. பெரும்பாலும் அக்கதவுகள் தடிமனான கண்ணாடிக் கதவுகள். முற்றத்தின் கதவுகள் மட்டுமல்ல மொத்தக் கட்டடமும் இரட்டைப் பெருங்கதவுகளால் அடைக்கப் படுவதே வழக்கமாக இருக்கிறது. காற்றை உள்ளே அனுப்பிவிடக் கூடாது என்ற தீவிர அக்கறையுடன் உருவாக்கப்பட்ட கதவுகள் அவை. இந்தியாவில் வெயிலையும் காற்றையும் கட்டுப்பாட்டுக்குள் நிறுத்தும் ’ஏர்கண்டிஷண்டு’ அறைகளை உருவாக்கிக் கொள்வது பத்தாண்டுகளுக்கு முன்னால் உயர் நடுத்தர வர்க்கத்தின் அடையாளம். இப்போது நடுத்தர வர்க்கத்தின் அடையாளமாக ஆகிக் கொண்டிருக்கிறது. அதற்குப் பதிலாக ஐரோப்பிய நாடுகளில் குளிரைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டிய முறைகளே எங்கும் நிரம்பியிருக்கின்றன. குளிரைக் கட்டுப் பாட்டுக்குள் வைக்கும் வெப்பக் காற்று வசதி வீட்டில் இருக்க வேண்டிய குளியலறை மற்றும் கழிப்பறை வசதிகள் போலக் கட்டாயம். அரசிடம் வீடு கட்ட அனுமதி கேட்கும்போது அந்த வசதியை உருவாக்கும் அமைப்பையும் காட்டியே அனுமதி கேட்க வேண்டும். வீடுகளும் வீட்டின் அறைகளும் மட்டுமல்ல மொத்தக் கட்டடங்களும், கடைகளும், பொதுப் போக்குவரத்து வாகனங்களான பேருந்துகள், டிராம்கள், மெட்ரோ ரயில்கள், வாடகைக் கார்கள் என அனைத்தும் வெப்பக் காற்று ஏற்பாடுகள் இல்லாமல் இயங்க முடியாது. அதுவும் அக்டோபர் மத்தியில் தொடங்கி ஏப்ரல் மத்தியில் முடியும் குளிர் காலத்தில் இரட்டைக் கதவுகளைப் போட்டுச் சாளரங்களை மூட வேண்டும். ரத்த நாளங்களையும் நரம்புகளையும் உறையச் செய்து விடும் குளிர் காற்றை- வெளிக்காற்றை- அறைக்குள் அனுமதிப்பது அப்போது முடியாத காரியம். இந்த அனுபவத்தை உடையவர்களுக்கு அதன் எதிரான நிலைப்பாட்டைச் சொல்லும் கவிதையின் குறியீட்டு அர்த்தம் என்ன உணர்வைத் தரும்? இந்தக் கவிதையை எப்படி விளக்குவது?
ஓர் இந்தியனாகச் சொல்வதானால் போலந்து வந்திறங்கிய முதல் நாளையே – அக்டோபர் 8 இரவையே –கடுங்குளிர் காலம் என்றுதான் குறிப்பிட வேண்டும். ஜெர்மன் நாட்டு பிராங்க்பர்ட்டில் மாலை 06.30 –க்கு இறங்கிய போது விமான நிலையத்தின் வெளியே +10 செண்டிகிரேடு வெப்பம் இருந்தது. தமிழ்நாட்டில் இவ்வளவு குறைவான குளிரில் இருந்த அனுபவமே கிடையாது. 

25 ஆண்டுகளுக்கு முன்னால் செப்டம்பர் மாதம் ஒன்றில் கொடைக்கானலில் பத்து நாள் தங்கியிருந்தேன். அப்போது +11 டிகிரி வெயிலில் இருந்தது. நான் அனுபவத்த குறைந்த பட்ச குளிர் அனுபவம் அதுதான். ஆனால் வார்சாவில் காலடி வைத்தபோதே 8 டிகிரி. வருகை தரு பேராசிரியராக வார்சா பல்கலைக்கழகத்தின் இந்தியவியல் துறையில் நுழைந்த முதல் நாளில் ஒவ்வொருவரும் எச்சரிக்கை செய்தது அக்டோபர் கடைசியில் தொடங்கும் குளிர்காலம் பற்றித் தான். அக்டோபரில் தொடங்கும் குளிர்காலம் படிப்படியாகக் குறைந்து டிசம்பர் மத்தியில் பூஜ்யத்திற்கும் கீழே போய் கிறிஸ்துமஸ் இரவை வெள்ளைப் பனிப் படுதாவால் போர்த்திவிடும் என்றார்கள். ஒவ்வொரு கிறிஸ்துமஸும் வெள்ளைக் கிறிஸ்துமஸாக இருக்க வேண்டும் என்பது அவர்கள் விருப்பம் அது அவர்களின் அந்தரங்க விருப்பம் என்பதைக் கிறிஸ்துமஸுக்குப் பிந்திய நாட்கள் உணர்த்தின.
கிறிஸ்துமஸ் விடுமுறைக்குப் பின்னர் சந்தித்த ஒவ்வொருவரும் நான் அதிர்ஷ்டக்காரன் என்றார்கள். ”இந்த வருடம் பனிப் பொழிவு இல்லை; நீங்கள் தப்பித்தீர்கள்; உறைபனியில் நடக்கும் ஆபத்துக்களோ, கைகள் விறைத்துப் போகும் நாட்களோ உங்களுக்குக் கிடையாது” என்று எனக்காக மகிழ்ச்சி அடைந்தார்கள். ஆனால் பனிப்பொழிவு இல்லாமல் போய் விட்டதே என்ற வருத்தம் ஒவ்வொருத்தரிடமும் வெளிப்படவே செய்தது. அதனை உணர்ந்தவனாக நான் ஒவ்வொருவரிடமும் ’இது அதிர்ஷ்டம் அல்ல; துரதிர்ஷ்டம் ’ என்று மறுத்துச் சொன்னேன். பனிப்பொழிவை ரசிக்கவும், பனிக்கட்டியில் நடக்கவும் ஆவலோடு காத்திருக்கிறேன். இந்த வருடம் அது கிடைக்காது என்றால் அது எப்படி அதிர்ஷ்டம் ஆகும். புதிய அனுபவம் கிடைக்காமல் தள்ளிப் போவதைத் துரதிர்ஷ்டம் எனச் சொல்லவே விரும்புகிறேன் என்றேன். அடுத்த ஆண்டு அந்த அதிர்ஷ்டம் வாய்க்கட்டும் என வாழ்த்தவும் வேண்டவும் செய்தார்கள்.
 
”வங்காள விரிகுடாவில் 700 கி,மீட்டருக்கு அப்பால் உருவாகியிருக்கும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தின் காரணமாக மேக மூட்டம் காணப்படும்; அதன் காரணமாகச் சில இடங்களில் இலேசானது முதல் பலமான மழை பெய்யலாம் எனச் சொல்லும் வானிலை அறிவிப்புப் பல நேரங்களில் பொய்யாக்கப்படுவது போல இந்த ஆண்டு பனிப் பொழிவு இருக்காது” எனச் சொன்ன வானிலை முன்னோட்டமும் பொய்யாகிப் போனது. டிசம்பருக்குப் பதில் ஜனவரியில் . பனிப்பொழிவு தொடங்கிய போது அந்த மாதத்திலும் பாதி நாட்கள் ஓடி விட்டன. வெள்ளைக் கிறிஸ்துமஸுக்குப் பதிலாக வெண்பொங்கல் கொண்டாடலாம் என்று எனது மாணவிகளிடம் சொன்னேன்.
சர்க்கரைப் பொங்கலோடு வெள்ளைப் பொங்கலும், கரும்பும், மஞ்சளும் வைத்துக் கொண்டாடும் தைத்திருநாள் பற்றி வகுப்பிற்குள் நாங்கள் பேசிக் கொண்டிருந்த போது வெளியே பனிப்பொழிவு தெருவெங்கும் பஞ்சுப் பொதியாய் இறங்கிக் கொண்டிருந்தது. காப்புக்கட்டில் வேம்பு, மாவிலை களோடு இடம் பெறும் கண்ணுப்பீழைப் பூவைப் போல பனித்துகள் மிதந்து வந்து கறுப்புக் கோட்டின் மீதும், கம்பளி ஆடைகளின் மீதும் படிந்து நின்றன. அதனைச் சிறிதும் பொருட்படுத்தாது குதிகால் உயர்ந்த செருப் பணிந்த பெண்கள் நடக்கும் வேகம் கிளர்ச்சியூட்டும் குளிர்மை. மலைச்சாரல் போல் விழும் பனிப்பொழிவை விடக் காற்றில் மிதந்து பஞ்சுத் திரட்சியாய் அசைந்து அசைந்து இறங்கிப் படியும் காட்சியைச் சாளரத்தின் திரைகளை விலக்கிப் பார்த்துக் கொண்டிருப்பதே அழகுதான்.
பனிப் பொழிவு முடிந்து சூரியனின் கால்கள் பட்டு மெல்ல விரியும் பனித்திரட்டுகள் உறைபனிப் படிவங் களாய் மின்னும் போது கவனமாக நடக்க வேண்டும் என்பது திரும் பவும் எச்சரிக்கைகள் கிடைத்தன, பனிப்பொதியில் நடக்கும்போது கால்கள் பதிந்து தரையில் பிடிமானம் கொள்கின்றன. ஆனால் கண்ணாடியாய் மின்னும் பனிப் படிவங்களில் கால்களை நழுவிச் செல்லவே வழுக்கி விழும் ஆபத்து உண்டு என்பதைப் பல நேரங்களில் உணர முடிந்தது. குதிரை லாடம் போல மேடு பள்ளங்கள் கொண்ட ஷூவின் பாதங்களை அந்த நேரத்தில் அணிவது நல்லது என்பதை ஏற்றுக் கொண்டேன். ஐரோப்பியர்கள் பனிக்காலத்தை விரும்புகிறார்களா? வெறுக்கிறார்களா? என உறுதியாகச் சொல்ல முடியாது. தவிர்க்க முடியாத காலம் என்பதால் இயல்பாகவே ஏற்றுக் கொள்ளப் பழகியிருக்கிறார்கள்.
வாகனங்கள் செல்லும் முக்கியச் சாலைகளும், அதிக நடமாட்டம் உள்ள குறுஞ்சாலைகளும் அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் பனிக்கட்டிகள் விலக்கப்பட்டுத் தயாராக இருக்கின்றன. உப்புக்கரைசலை விசிறியடித்துச் செல்லும் வாகனங்கள் முன்னே செல்ல பின்னால் வரும் இன்னொரு வாகனம் பனிக்கட்டிகளைச் சாலையின் இருபுறமும் தள்ளிப் போட்டுக் கொண்டே போகின்றது. நடைபாதைகளை உருவாக்கக் கையினால் இயக்கும் எந்திரங்கள் பயன்படுகின்றன. நகரத்தைச் சுத்தமாக்கும் பனியாளர்கள் அதிகாலை மூன்றரை மணிக்கெல்லாம் இந்த வேலையைத் தொடங்கி விடுகிறார்கள். குப்பை அள்ளும் லாரிகள் வந்து அள்ளிக் கொண்டு போவது போலப் பனிக்கட்டிகளை அள்ளிக் கொண்டு போவதில்லை.
ரோட்டோரங்களில் குவிக்கப்பட்ட பனிக்கட்டிகள் கொஞ்சங்கொஞ்சமாக நிறம் மங்கிக் கறுப்புப் படிவமாக மாறுகின்றன. பழுப்பு நிலக்கரிக் குவியல் போலக் கிடக்கும் அவை உருகி ஓடாமல் தரைக்குள்ளேயே இறங்கி விடுகிறது பனிக்காலம் என்பதற்காக எந்த வேலையும் நின்று போவது போலத் தெரிய வில்லை. கட்டிடங்களுக்குள் எப்போதும் இருப்பது போன்ற மிதமான வெப்பம் இருப்பதால் நடக்க வேண்டிய வேலைகள் நடந்து கொண்டே இருக்கின்றன. வீட்டில் நுழைவதற்கு முன்னால் காலணிகளை வைப்பதற்கான வசதிகளை உருவாக்கி வீடு கட்டும் நடைமுறைகளைப் போல இங்கே குளிர்கால உடைகளைத் தொங்க விடுவதற்கான வசதிகள் கொண்ட அமைப்புகள் உள்ளன. வீட்டில் உள்ளவர்களுக்கு மட்டுமல்லாமல், வீட்டிற்கு வரும் விருந்தாளிகளுக்காகவும் கூட அத்தகைய வசதிகள் இடம் பெற்றிருக்கின்றன. அதே போல் வாடகைக்கு வரும் மனிதர்கள் மிகக்குறைவான பொருட்களோடு -அன்றாடத் தேவைக்கான பலசரக்குகள், ஆடைகள் கொண்டு வந்தால் போதும். கட்டில், சாப்பாட்டு மேசை, உட்காரும் நாற்காலிகள், மின்சார அடுப்பு, சலவை வசதி போன்ற நடுத்தர வர்க்கத் தேவைகள் வீட்டில் நிலையாகவே இருக்கின்றன. அடுப்படிப் பாத்திரங்களும் சாப்பாட்டுத் தட்டுகளும், மது அருந்தும் கோப்பைகளும் பல வீடுகளில் இருக்கவே செய்கின்றன. மின்சார வசதி அடிப்படையாக இருப்பது போலத் தொலைபேசியும், இணையதள வசதியும் கூடக் கிடைக்கவே செய்யும். பயன்படுத்துவதும் தவிர்ப்பதும் உங்கள் விருப்பம் சார்ந்தது. வாடகை ஒப்பந்தத்தில் எவையெல்லாம் என்ன நிலையில் இருக்கிறது என்பதைக் குறிப்பிட்டு ஒப்பந்தம் செய்கிறார்கள். திரும்ப ஒப்படைக்கும்போது அவை அப்படியே இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். உடைக்கப்படும் பொருட்கள் ஈடு செய்யப்பட வேண்டும்.
 
பனிக்காலம் தேசப் பொருளாதாரத்தைத் தீர்மானிக்கும் ஒன்றாக இருக்கிறது. ஆறுமாதம் மட்டுமே வேளாண்மைக் காலம் என்பது கூட பனியின் வருகையோடு தொடர்புடையதுதான். வேளாண்மையில் ஈடுபட்ட வர்கள் பனிக்காலத்தைக் கால்நடைகளின் கவனிப்புக்கான காலமாக நினைக்கிறார்கள். பனிப்பாதுகாப்போடு கூடிய கால்நடைப் பண்ணைகளோடு தான் வீடுகளும் விவசாய நிலங்களும் இருக்கின்றன. போலந்தில் அதிகம் விளையும் உருளைக்கிழங்கும் ஆப்பிளும் பாதுகாக்கப்பட்டுப் பனிக்காலத்தில் புத்தம் புதிதாகப் பயன்பாட்டுக்கு வருகின்றன. ஆனால் அவை விளையும் காலம் இதுவல்ல.

போலந்து அரசாங்கத்தின் முக்கியச் செலவினங்களில் ஒன்றாகப் பனி விலக்கம் இருக்கிறது. தொடர்ச்சியாக பூஜ்யத்திற்குக் கீழ் வெப்பம் இருப்பது தொடர்ந்தால் பனிக்கட்டுகள் உருகாமல் கெட்டி தட்டிப் போய் விடுமாம். தரைப் பகுதிகள் அப்படி ஆனால் சிக்கல் எதுவும் இல்லை. கட்டிடங்களின் மாடிகளில் பனிக்கட்டிகள் நீண்ட நாட்களுக்கு உருகாமல் இருந்தால் பலவிதமான ஆபத்துகள் உருவாகும் என்ற அச்சம் இருக்கிறது. கோடை காலத்தில் இந்தியக் குடிசை வீடுகள் தானாகத் தீப்பற்றிக் கொள்வது போல பனிக்கட்டிகளுக்குள் அமுங்கிப் போகும் ஆபத்து அவற்றுள் ஒன்று. போலிஷ் செய்தித்தாள்களில் அத்தகைய செய்திகளைப் படிக்க முடியும் என்றார்கள். பொதுவுடைமைக் கால அரசாங்கங்கள் பனிக்காலத்தைத் திறம்படக் கையாள முடியாமல் திணறியதாகப் பலரும் சொல்கிறார்கள். மக்கள் நடப்பதற்கான பாதையை உருவாக்கத் தரமுடியாத சூழலில் தான் அவர்கள் தெருவில் இறங்கிப் போராடினார்களாம். கம்யூனிச சித்தாந்தத்தைப் பின்பற்றுவதாகச் சொன்ன அரசாங்கத்தின் வீழ்ச்சியில் பனியும் பனிசார் நிகழ்வுகளும் முக்கியப் பங்காற்றியதாக இலக்கியப் பதிவுகள் இருக்கின்றன
.

பனிக்காலமே ஐரோப்பிய நாடுகளில் சேரிகள் உருவாகாமல் தடுக்கிறது. குளிரிலிருந்து பாதுகாக்கும் வசதிகள் இல்லாத வீட்டில் ஒருநாள் இரவைக் கழித்துவிட முடியும் என எந்தவொரு மனிதனும் நினைத்து விட முடியாது. வறுமையும் ஏழ்மை யும் இருந்தாலும் வீடற் றவர்களாய் ரோட்டில் படுத்துறங்குவதும், சாலை யோரங்களில் படுதாவைச் சாய்த்துக் குடில் உருவாக்கிக் கொள்வதும் இந்தியப் பரப்பில் மட்டுமே சாத்தியம்; இங்கு சாத்தியமே இல்லை. போலந்தின் குறுக்காக ஓடும் விஸ்துலா ஆறும் உறையப் போகிறது. மேலே மிதக்கும் பனிக்கட்டியில் ஓட்டை போட்டுத் தூண்டிலை இறக்கி மீன் பிடிக்கும் காட்சி ஒன்றை எனது மாணவி வகுப்பில் விவரித்துச் சொன்னாள். நான் அத்தகைய காட்சியை இன்னும் பார்க்கவில்லை. ஆனால் இன்று பார்த்து விடுவது எனக் கிளம்பி விட்டேன். நேற்று இரவு – 25 டிகிரியாக இருந்த குளிர் பகல் 11 மணிக்கு – 22 டிகிரியாக உயர்ந்து விட்டது. கார் ஒன்றைப் பிடித்துக் கொண்டு உள்ளே இருந்தபடியே வார்சாவின் குறுக்காக ஓடு விஸ்துலா ஆற்றைப் படம் பிடிக்கப்போகிறேன். உங்கள் பார்வைக்குத் தருகிறேன்.
06-02-2012


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

இவை ஒரு நகரத்தின் கவிதைகள்