தமிழில் புனைகதை இலக்கியம் தொடங்கிய காலந்தொட்டே இந்த வேறுபாடு உண்டு. இலக்கியத்தின் நோக்கம் சார்ந்த இந்த வேறுபாடு தமிழுக்கு மட்டும் உரியதல்ல. உலக இலக்கியம் எல்லாவற்றிலும் இருக்கும் ஒன்று தான். அதிலும் உழைப்பு, ஓய்வு என அன்றாட வாழ்க்கையைத் தனித்தனியாகப் பிரித்துப் பார்த்து வாழப் பழகிக் கொள்ளும் நடுத்தர வர்க்கத்தின் தோற்றத்தோடு தொடர்புடைய புனைகதை எழுத்தின் வரவிற்குப் பின் இந்த வேறுபாடுகள் இருப்பது ஆச்சரியம் எதுவுமில்லை. தீவிர எழுத்துக்காரர்கள் ( Serious literature ) வணிக எழுத்துக்காரர்கள் (Commercial ) என்பதாக அணி பிரிந்து போட்ட சண்டைகளே ஒரு காலகட்டத்தில் தமிழின் திறனாய்வாகக் கருதப்பட்டது.அதிகமான வாசக எண்ணிக்கையை நோக்கமாகக் கொண்ட வணிக எழுத்தைக் கறாராக வெறுப்பவர்களாகக் க.நா.சுப்பிரமணியம், சி.சு. செல்லப்பா போன்றவர்கள் அறியப்பட்டாலும், அவர்களுக்கெல்லாம் முன்னோடி புதுமைப்பித்தன் தான். புதுமைப்பித்தன் அவரது காலத்துக் கல்கியை வணிக எழுத்தின் ஆதரவாளராக நிறுத்தி, இலக்கியத்தில் கல்கி வகையறா எழுத்துக்களுக்கு இடமில்லை எனச் சொல்வதற்காகத் தனது எழுத்தையும், தன்னைப் போலவே நிகழ்காலத்தின் மீது அக்கறையும்,...