சி.சு.செல்லப்பாவின் ஜீவனாம்சம் நினைவோட்டங்களின் விலகல் பயணம்


பெண்களை மையப்படுத்தியதாகவே தமிழில் புனைகதை வடிவம் தொடங்கியது. தமிழில் பட்டியலிடப் பட்டுள்ள முதல் ஐந்து நாவல்களில் மூன்று நாவல்கள் பெண்களின் பெயரால்- கமலாம்பாள் சரித்திரம், பத்மாவதி சரித்திரம், முத்து மீனாட்சி -அமைந்த நாவல்கள். தொடங்கி முடிக்கப்படாத பாரதியின் நாவல் முயற்சியான சந்திரிகையின் கதையும் ஒரு பெண்ணை மையப்படுத்திய புனைகதையே. இந்தியாவிற்குள் நுழைந்துள்ள நவீன வாழ்க்கைமுறை பாரம்பரியமான இந்தியப் பெண்களின் வாழ்க்கைப் போக்கில் நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ தாக்குதல் தொடுக்கிறது எனச் சொல்வதின் வழியாகவே நவீனத் தமிழ் இலக்கியம் தன்னை உருவாக்கி நிலை நிறுத்திக் கொண்டது.

முதல் இரண்டு தமிழ் நாவல்களும் அந்தந்த ஆசிரியர்கள் வைத்த தலைப்புக்கு எதிராக இருப்பது என்னும் விநோதமான முரண்பாட்டைக் கொண்டிருக் கின்றன. பிரதாப முதலியார் சரித்திரம்(1879) என நாவலின் தலைப்பை வைத்து விட்டு மாயூரம் வேதநாயகம் பிள்ளை விவரிப்பது பிரதாப முதலியின் மனைவி ஞானாம்பாளின் புத்திசாலித் தனத்தோடு கூடிய வீரதீர சாகசங்களை.அதே போல் கமலாம்பாள் சரித்திரத்தின் (1893). மையப் பாத்திரம் முத்துசாமி அய்யர் தான்; அவரின் மனைவி கமலாம்பாள் அல்ல. தனக்கு அடங்கிய குடும்பப்பெண்ணான கமலாம்பாளுக்கு ஏற்பட்ட அபவாதங்களை முத்துசாமி அய்யரின் புத்திசாலித்தனமும் செயல் பாடுகளும் காப்பாற்றிய விதம் நாவலில் விவரிக்கப்படுகிறது.

தான் எழுதும் நாவலுக்கு குறிப்பான நோக்கத்தோடோ, நோக்கமில்லாமலோ தலைப்பைத் தெரிவு செய்தாலும், நாவலை வாசிப்பவர்கள் அந்தத் தலைப்பு என்ன முன்மொழிதலைக் கொண்டிருக்கிறது என யோசிக்கவே செய்வார்கள். தலைப்பிடுதல் படைப்பாளியின் உரிமை என்றால், அத்தலைப்பிற்குக் குறிப்பான நோக்கம் இருக்கும் எனக் கருதுவது வாசகர்களின் உரிமை சார்ந்தது. புனைகதை ஒன்றிற்கு வைக்கப்படும் தலைப்பின் வழியாகக் கதைப் போக்கையும் நிகழ்வுகளையும் வாசித்துச் செல்லும் வாசகர்கள் அதன் விவாதத் தளங்களுக்குள் நுழைய முடியாமல் தவிக்க நேரிடும் வாய்ப்புகள் நவீன இலக்கியத்தின் பொதுக்கூறு. ஏனென்றால் நவீன இலக்கியம் எப்போதும் பெரும்பான்மைக் கருத்தோட்டத்தோடு அல்லது சமகாலத்தின் மைய நீரோட்டத்தோடு ஒத்துப் போகும் தன்மை கொண்டதல்ல. அதன் காரணமாகவே நவீன இலக்கியம் காலத்தோடு முரண்படும் இயல்பு கொண்டது எனக் கருதப்படுகிறது.

நவீனத் தமிழ் இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளிகளில் ஒருவராகச் சொல்லப்படும் சி.சு. செல்லப்பாவின் ஜீவனாம்சம் அப்படியான முரண் பாட்டைக் கொண்ட நாவலாக எழுதப்படாமல், பழைய மதிப்பீடுகளைத் தூக்கிப் பிடிக்கும் விதமாக எழுதப்பட்டுள்ளது. ஆனாலும் அந்நாவல் நவீனத் தன்மை கொண்டதாக இருக்கிறது. ஏனென்றால் அதன் சொல்முறையும் பின்பற்றப்பட்டுள்ள உத்திகளும் அதுவரை பின்பற்றப்படாதவை. படைப்பாளி தானே ஒரு கதாபாத்திரமாக உள்ளே இருக்கிறார் என்றாலும், ஒட்டு மொத்தமாக இன்னொரு பாத்திரமாக மாறி அதன் மனவோட்டத்தின் வழியாக நாவலின் போக்கையும் நிகழ்வுகளையும் நகர்த்திச் சென்று தான் வலியுறுத்த விரும்பிய ஒன்றை முன் வைத்துள்ளார். அந்த நாவல் இப்படித் தொடங்குகிறது.

“வாசல் ரேழியில் செருப்பு கழற்றப்படும் சப்தம் கேட்டது.‘ மன்னி, அண்ணா வந்துவிட்டான் போலிருக்குது’ என்று பத்துப் பாத்திரங்களைத் தேய்த்து அலம்பிக் கொண்டிருந்த சாவித்திரி தொட்டி முற்றத்தில் இருந்தவாறே, வாசல் ரேழியைப் பார்த்துக் கொண்டே சமயலறைக்குள் கைக் காரியமாக இருந்த தன் மன்னியின் காதுகளில் விழும்படியாக கூறினாள்.
‘ அதுக்குள்ளேயே? போ, இன்றைக்கும் ஈரங்கியை ஒத்திப் போட்டாச்சாக்கும்’ என்று சலித்துக் கொண்டே. சலித்துக் கொண்டிருந்த அரிசிமா தாம்பாளத்தின் மீது சல்லடையை வைத்து விட்டு எழுந்து, புடவை முந்தானையில் பட்டிருந்த மாவை தட்டித் துடைத்துக் கொண்டு கூடத்துக்கு வந்தாள் அலமேலு
இன்றைக்கும் அலைச்சலும் செலவும்தானா மிச்சம், என்று எரிச்சலுடன் கேட்டவாறே கணவன் முகத்தைப் பார்த்தாள் அலமேலு. இந்தக் கோர்ட்டு என்று போனாலே நாயாகத்தான் அலைய வேண்டி இருக்கு’.
‘ அட நாயாக அலைகிறோம் இல்லை, பேயாகத்தான் அலைகிறோம்’ என்று ஆத்திரத்துடன் ஆரம்பித்தான் வெங்கடேஸ்வரன். ‘ உடும்புப்பிடியாகப் பிடித்துக் கொண்டு விட்டது’-,(9-10)
திருமணமாகிக் கணவன் வீட்டுக்குச் சென்ற குறுகிய காலத்திலேயே விதவையாகி விட்டவள் சாவித்திரி. அதனால் தன் பிறந்த வீட்டுக்கு வந்துவிட்டாள். அவளுக்கு ஜீவனாம்சம் கோரும் வழக்கு நீதிமன்றத்தில் நடக்கிறது; அதை நடத்தும் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருப்பவன் அவளின் அண்ணன் வெங்கடேஸ்வரன். அவனது மனைவி அலமேலு. நடந்து கொண்டிருக்கும் வழக்கில் முன்னேற்றம் எதுவும் இல்லை; அதனால் வெங்கடேஸ்வரனுக்கும் அலமேலுவுக்கும் சலிப்பும் ஆத்திரமும் என நாவலின் முக்கியமான பாத்திரங்களையும் நிகழ்வுகளின் பின்னலையும், அவை வளரப் போகும் விதத்தையும் சட்டென உணர்த்தும் விதமாக நாவலின் தொடக்கத்தை எழுதி வாசகர்களைத் தன் வசப்படுத்தும் தன்மை கொண்டதாக அமைந்துள்ளது ஜீவனாம்சம். வழக்கு தொடங்கிய இரண்டரை ஆண்டுக் காலத்தில் நான்கு முறை கோர்ட்டுக்குச் சென்று திரும்பும் அண்ணனின் வருகைக்குப் பின் சாவித்திரியின் மனதிற்குள் ஓடும் எண்ண ஓட்டங்களாகவும், அதன் காரணமாக அவள் தன் அண்ணனோடும் மன்னியோடும் கொள்ளும் உறவும் முரணுமாக விரியும் விதமாக நாவலின் மொத்தப் பக்கங்களும் எழுதப்பட்டுள்ளன.
முதல் தடவை சலிப்போடு வந்த வெங்கடேஸ்வரனின் வருகைக்குப் பின் சாவித்திரி பலவற்றையும் அசை போடுகிறாள். அந்த நினைவோட்டத்தில் அவளது புகுந்த வீட்டு நினைவுகள் அனைத்தும் -பன்னிரண்டு வயதில் திருமணம் நடந்ததும், ஆறுமாதம் ஆடி, தீபாவளி எனப் பிறந்த வீட்டிலேயே இருக்க நேர்ந்ததும், ஆறுமாதம் கழித்து புகுந்த வீட்டிற்குப் போனதும், தொடர்ந்து அம்மாவின் மரணமும் அந்தத் தீண்டலுக்காக ஒரு வருடம் காத்திருந்ததும் பின்னர் புகுந்த வீட்டுக்குப் போய் நான்கு மாதம் கணவனோடு இருந்த காலமும், புகுந்த வீட்டு மனிதர்கள் காட்டிய அன்பும் பாசமும் என நினைத்துக் கொள்கிறாள். பாசமிக்க மாமனார் தனது அப்பா விசுவநாத அய்யர் வந்து அழைத்ததும், பிறந்த வீட்டுக்கு விருந்தாளியாகப் போனவள், கணவன் கிருஷ்ணமூர்த்திக்கு உடல் நிலை சரியில்லை எனத் தந்தி வந்து கிளம்பியதையும், போய்ச் சேர்வதற்குள் அவளது கணவன் இந்த உலகத்தை விட்டே போய்ச் சேர்ந்து விட்டதையும், கணவன் இல்லாத வீட்டில் இருக்க முடியாது என முடிவு செய்து பிறந்து வீட்டிற்கு அழைத்து வரப்பட்டதுமான அவளது வாழ்க்கையை - மருமகள் வாழ்க்கை முழுவதையும் நினைவின் ஓடையில் நகர்த்தி நகர்த்திக் கொண்டு போகிறாள். அந்த நினைவோடை தன் விருப்பம் இல்லாமலேயே கோர்ட்டுக்குப் போவது என்று அண்ணன் எடுத்த முடிவு வரை நீள்கிறது. தன்னுடைய பிரச்சினையை அப்பா இருந்து முடித்திருக்க வேண்டும்; அவரும் விட்டுவிட்டுப் போய் விட்டதால் தனது அண்ணனுக்கும் மன்னிக்கும் சுமையாகி விட்டோம் என நினைத்துப் பார்ப்பது வரை அந்த நினைவோட்டம் ஓடுகிறது. அந்த நினைவோட்டத்திற்குள் அண்ணனுக்கும் தனது புகுந்த வீட்டுக் காரியக்காரர் சுந்தரம் மாமாவுக்கு இடையே நடந்த இந்த உரையாடலின் முடிவில்
‘எட்டு ரூபாயா!’ அண்ணா இளப்பமாக சிரித்து விட்டான். இதைப் போய் சொல்ல பெரியவர் இவ்வளவு சிரமப் பட்டு வந்திருக்க வேண்டாம் சுந்தரமய்யர். வார்த்தை பேசினால் வார்த்தைத் தான் வளரும். நாம் நேரில் பேசித் தீர்த்துக் கொள்ள முடியாது என்று எனக்குப் படுகிறது என்று அழுத்திச் சொன்னான். .......
‘ தெளிவாகச் சொல்லி விடுகிறேன்,’ என்றான் அண்ணா. ‘கோர்ட்டுக்குப் போய்த்தான் தீரணும் என்று இருந்தால் அப்படியே நடக்கட்டுமே.’ (28,29)
என்று முடிவானதும் வந்து போகிறது.
முதல் தடவையைப் போலவே இரண்டு, மூன்று, நான்கு என ஒவ்வொரு தடவையும் வெங்கடேஸ்வரன் கோர்ட்டுக்குப் போய்விட்டு வந்து வாய்தா வாங்கப்பட்ட செய்தியைச் சொல்வதோடு சாவித்திரியின் புகுந்த வீட்டுச் செய்திகளையும் கொண்டு வருகிறான். சாவித்திரியின் மாமனாருக்கு உடம்பு சரியில்லை என்பதற்காக வாய்தா வாங்கப்பட்ட நிலையிலேயே அவளது மனம் மெல்லமெல்ல பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீட்டை நோக்கி நகர ஆரம்பிக்கிறது. தனது அண்ணனும் மன்னியும் தன்னை ஒரு சுமையாகக் கருதுகிறார்கள் என்பதை உணர ஆரம்பித்தவளுக்குப் புகுந்து வீட்டு மனிதர்கள் அவளைத் தாங்கிய விதமும், தங்கள் வீட்டுப் பெண் என நினைத்ததற்கு மாறாக வேற்றாளாக நினைக்கவில்லை என்பதும் உரைக்க ஆரம்பிக்கிறது. ஆனால் அதையெல்லாம் சொல்லி அண்ணனின் விருப்பத்தை – நீதிமன்றத்தின் வழியாக ஜீவனாம்சம் வாங்கி விடும் விருப்பத்தை மாற்ற முடியாது என்பதும் தெரிந்ததால் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்கிறாள்.
ஆனால் கடைசி வாய்தாவுக்குப் பின்
“ உனக்கு தீண்டல்,’ மன்னி இழுத்துச் சொன்னாள். ஏதோ மூன்றாம் மனிதர்களிடம் பேசுகிற மாதிரி ஒரு பாவனை. ‘ தீண்டலா?’ சாவித்திரி பதறியே கேட்டாள்.’ யாருக்கு என்ன, விஷயத்தை சொல்லு மன்னி என்று அரட்டுகிற மாதிரி பார்வை. தனக்கு மட்டும் சம்பந்தப்பட்ட ஒன்றா. அண்ணா மன்னிக்கு எதுவும் சம்பந்தமில்லாமல், ‘ யார் மன்னி’ குரல் நடுங்கியது.
மன்னி மென்று முழுங்கி ஆரம்பிப்பதற்குள் அங்கே வந்த அண்ணா குரல் முந்திக் கொண்டது. ‘உன் மாமனார் போயிட்டார் சாவித்திரி’.
‘ என்ன , அப்பாவா? வாய்விட்டு சாவித்திரி கேட்டு விட்டாள். அண்ணா நின்று அவள் கலவர முகத்தைப் பார்த்தாள். மன்னியும் சாவித்திரி முகத்தை பார்த்துவிட்டு கணவன் முகத்தைப் பார்த்தாள்.(120-121)
என்பதாக நடக்கும் இந்த உரையாடலும் அதன் பின் நிகழும் காட்சிகளும் சாவித்திரியின் மனம் எதை நோக்கிப் பயணம் செய்கிறது; எத்தகைய முடிவை எடுக்கப் போகிறது என்பதைக் குறிப்பாகக் காட்டும் விதமாக எழுதப்பட்டுள்ளது. அவளது மாமனாரின் மரணம் இன்னும் அவளுக்குத் தீண்டல் என்றால் இன்னும் – இந்த நாள் வரை- தன்னை அந்த வீட்டுப் பெண்ணாகத் தானே மன்னியும் அண்ணனும் கருதுகிறார்கள் என்பது சாவித்திரிக்குப் புரிகிறது. துக்கத்துக்குப் போய்விட்டுத் திரும்ப வந்தவுடன் அங்கேயே போய்விடுவேன் என்ற குறிப்பை உணர்த்தி விட்டுச் சாவித்திரி கிளம்புகிறாள்.
மிராசுதார் ராமசாமி அய்யர், தாசில்தார் விசுவநாத அய்யர் என இரண்டு வசதியான பிராமணக் குடும்பங்களை ஒரு வகைமாதிரியாக எடுத்துக் கொண்டு இளம் விதவையின் மனம் புகுந்த வீடு x பிறந்த வீடு என்ற எதிர்வுகளுக்குள் பிறந்த வீட்டை நிராகரித்துப் புகுந்த வீட்டின் அன்பையும் நேசத்தையும் விரும்பியது என நாவலின் நிகழ்வுகளை நகர்த்துகிறார் சி.சு.செல்லப்பா. தாம்பத்திய வாழ்க்கையைப் பொருளியல் சார்ந்த ஒன்றாகப் பார்க்கும் போதுதான் அதைக் கணக்குப் போட்டுப் பார்க்கத் தோன்றும்; கேட்கும் கணக்கைப் பெறுவதற்காக நீதிமன்றத்தை அணுகத் தோன்றும். அதற்கு மாறாக இரண்டு குடும்பங்களின் உறவாகவும் விட்டுக் கொடுத்தலாகவும் குடும்ப அமைப்பையும் தாம்பத்திய வாழ்க்கையைப் பார்க்கும் பார்வை இருந்தால் ஜீவனாம்ச வழக்குகள் விசாரணைக்கு வரப் போவதில்லை என்பது நாவலாசிரியர் சி.சு.செல்லப்பாவின் கருத்தியல். அந்தக் கருத்தை சாவித்திரியின் விருப்பமாக மாற்றிச் சொல்ல அவர் பயன்படுத்தும் உத்தி நினைவோட்ட உத்தி. எல்லாவற்றையும் சாவித்திரி என்னும் பெண்ணின் பார்வையில் நகர்வதாகக் காட்டி, அவளது மனவோட்டம் தான் இந்தமாதிரியான ஒரு முடிவை எடுக்கிறது என வாசிப்பவர்களிடம் தனது முடிவைத் தள்ளிவிடுகிறார். அதற்கேற்றதாக அந்த உத்தியை மிக நுட்பமாகப் பயன்படுத்தியிருக்கும் விதத்தை நாவலை வாசிப்பதின் வழியாகவே உணர முடியும். ஆனால் ஜீவனாம்சம் என்னும் சொல் அவ்வளவு சுருக்கமாக அர்த்தப்படும் ஒன்றல்ல என்பது நவீன இந்திய சமூகத்தின் வரலாறு.
ஜீவனாம்சம் என்னும் சொல், உயிர் வாழ்வதற்கான அடிப்படைத் தேவை என்னும் அர்த்தத்தை வெளிப்படுத்தும் இரு சமஸ்கிருதச் சொற்களின் சேர்க்கை. பொது நிலையில் இந்த அர்த்தமே எல்லாக் காலகட்டத்திற்கும் உரியது என்றாலும் இந்திய சமூகம் நவீன வாழ்க்கைக்குள் நுழைந்த பின் இந்தச் சொற்களுக்கான அர்த்தம் பொது நிலையிலிருந்து நழுவிக் குறிப்பான அர்த்தத் தளம் கொண்டதாக மாறிவிட்டது. ஜீவன் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவாக இருந்த அந்தச் சொல், பெண்களின் வாழ்க்கையோடு அதிலும் குறிப்பாகக் கணவனை இழந்து விதவையாகி விட்ட பெண்களின் வாழ்க்கையோடு நெருங்கிய உறவு கொண்ட சொல்லாக மாறியது 19 ஆம் நூற்றாண்டில்.
பிரிட்டானிய ஆட்சியாளர்களின் ஆதிக்கத் திலிருந்து விடுபட வேண்டும் எனப் போராட்டங்கள் நடத்திய இந்தியர்கள், விடுதலைக்குப் பின் எவற்றையெல்லாம் திரும்பக் கொண்டு வர வேண்டும்; எவற்றையெல்லாம் மாற்ற வேண்டும் என நினைத்தார்கள் என விவாதிப்பது நாவல் இலக்கியம் சார்ந்ததல்ல. ஆனால் விடுதலைப் போராட்ட காலத்தின் கருத்தியல் தளங்களைத் தனது விவாதப்பொருளாக ஆக்கும் படைப்பை அதன் தோற்றக் காரணத்தோடு விவாதிப்பதை நாவல் திறனாய்வுக்கு அப்பாற்பட்டது என ஒதுக்கி விடவும் முடியாது. பால்ய விவாகம், கைம்மை மறுப்பு, இயல்பான பாலுணர்ச்சியைத் தடுக்கும் விதவைக் கோலத்தின் குரூர யதார்த்தம், விதவை மறுமணம் போன்றன விடுதலைப் போராட்ட காலத்தில் ராஜாராம் மோகன்ராய் போன்ற பண்பாட்டுச் செயலாளிகளின் சொல்லாடல்களில் விவாதிக்கப்பட்ட சொற்கள். அச்சொல்லாடல்களின் தொடக்க நிலையில் விதவைப் பெண்களுக்கு மறுமணம் என்பதற்கு மாறாக அவள் கடைசி வரை உயிர் வாழ்வதற்கான ஆதாரத்தை - பொருளைத் தர வேண்டியது கணவன் வீட்டாரின் கடமை என்பதும், அதனைச் சட்டம் உறுதி செய்ய வேண்டும் என்பதும் விடுதலைப் போராட்ட காலத்தின் பகுதியாகவே விவாதத்தில் இருந்தன. இதைப் போலப் பல சொற்கள் பல்வேறு மொழிகளிலும் வெவ்வேறு காலகட்டத்தில் பொதுத் தளத்திலிருந்து குறிப்பான அர்த்தத்தளத்திற்கு மாறும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டியது இலக்கிய வாசிப்பின் ஒரு பகுதி.
சமூக மாற்றத்தில் அக்கறை கொண்ட சமூகப் போராளிகள் முன் வைக்கும் கருத்தியலை ஏற்று பெரும்பான்மை மக்களை அதன் பக்கம் திருப்பும் வேலையைச் செய்வது படைப்பாளியின் கடமை என இலக்கியத்திறனாய்வு பல காலங்களாக வலியுறுத்தி வருகின்றது. அப்படிப் பட்ட இலக்கியத்தை சமூக மாற்றத்தில் அக்கறை கொண்ட இலக்கியமாகவும், அத்தகைய பார்வை கொண்ட படைப்பாளியை முற்போக்குப் பார்வை கொண்ட படைப்பாளி எனவும் அடையாளப் படுத்துகிறது. ஆனால் சி.சு. செல்லப்பாவிற்கு அத்தகைய பெயர்களை வாங்க வேண்டும் என்ற விருப்பமெல்லாம் இல்லை என்பதை ஜீவனாம்சத்தின் வழியாக உணர்கிறோம். ஏனென்றால் அந்நாவலில் அவர் வெளிப்படுத்தும் மனப்போக்கு தனித்துவம் கொண்ட படைப்பாளியின் மனப்போக்கு என்பதை விடப் பெரும்பான்மை மக்களின் மனப்போக்கோடு உடன்பட்டு, இருப்பைத் தக்க வைக்கும் நோக்கம் கொண்ட மனப்போக்கு எனலாம்.
கருத்தியல்ரீதியாகப் பிற்போக்குத் தன்மை கொண்ட ஜீவனாம்சம், சொல்லப்பட்ட விதத்தாலும், பயன்படுத்திய உத்தியாலும் நவீனத்தன்மை கொண்ட படைப்பாகப் பல விமரிசனங்களைப் பெற்றுள்ளது. நானும் கூட அதில் பின்பற்றப்பட்டுள்ள உத்திக்காகவும், சொல்முறைக்காகவும் ஒன்றுக்கு மேற்பட்ட முறை வாசித்திருக்கிறேன். தமிழ் இலக்கியத்தின் முகத்தை - கவிதை, சிறுகதை, நாடகம், திறனாய்வு என அனைத்து வகைப் பாட்டிலும் நவீனத்தன்மை கொண்டதாக மாற்றும் நோக்கம், எழுத்துப் பத்திரிகையைத் தொடங்கிய சி.சு. செல்லப்பாவிற்கு இருந்தது. அதே நேரத்தில் சமூகத்தளத்தில் எதிர்மறை நிலைபாட்டுடன் வெளிப்பட்டுள்ளது. இதை விநோதமான முரண் என்று தான் சொல்ல வேண்டும். அத்தகைய முரணைக் கொண்டது என்றாலும், ஜீவனாம்சம் என்னும் நாவல் இந்திய சமூகம் ஒரு நூற்றாண்டிற்கு முன்பு சந்தித்த முக்கியமான ஒரு சிக்கலை விவாதித்த நாவல் என்பதற்காக வரலாற்றில் இடம் பிடிக்கும் நாவல் எனச் சொல்வதை அதன் வாசகர்கள் உணர முடியும். ஏற்கெனவே வாசிக்கவில்லை என்றாலும் இப்போது வாசித்துப் பார்த்தாலும் அந்த விவாதத்தில் நாம் பங்கெடுக்க முடியும்.

நன்றி: குமுதம் தீராநதி/செப்டம்பர்,2011

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்