விளையாட்டுத் தனமான தேசம்

மக்களுக்கான பொதுப் பேருந்துகளில் பயணம் செய்கிறவர்களாக நீங்கள் இருக்கலாம். அல்லது ஒரு குறிப்பிட்ட அலுவலகப் பணியாளர்களுக்கான சிறப்புப் பேருந்தில் பயணம் செய்கிறவர்களாகவும் இருக்கலாம். செப்டம்பர் 10 முதல் உங்கள் பயணத்தின் போது தென்னாப்பிரிக்காவில் நடக்கும் சாம்பியன் கோப்பைக் கிரிக்கெட் பற்றி
காதில் ஏதாவது செய்தி வந்து விழுவதை நீங்கள் தவிர்த்து இருக்க முடியாது.

வெறும் தகவல்களாகப் பரிமாறிக் கொண்ட பேச்சு 23-09-2010-ல் உற்சாகமான மனநிலைக்கு மாறி இருப்பதை நீங்கள் சந்திந்திருக்கக் கூடும். காரணம் இந்தியாவில் நடந்த ஐ.பி.எல். கோப்பையில் முதல் மூன்று இடத்தைப் பிடித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெங்களூர் ராயல் சேலஞ்சர் அணி, மும்பை இண்டியன் ஆகிய மூன்றும் தென்னாப்பிரிக்காவில் நடக்கும் சாம்பியன் டிராபி கிரிக்கெட் போட்டியின் கலந்து கொண்டன. அம்மூன்றில் இரண்டு அணிகள் இப்போது அரை இறுதிக்குத் தகுதி பெற்றுள்ளன. அதுவே உற்சாகத்திற்கு முக்கியக் காரணம். அந்த உற்சாகம் இறுதிப் போட்டி நடக்கும் 26-09-2010 அன்று இரவுக் கொண்டாட்டதோடு முழுமையை எட்டக்கூடும்.

இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பைப் பெற்றிருக்கும் இரண்டு அணிகளில் ஒன்று சாம்பியன் ஆகிடும் வாய்ப்பு இருக்கிறது என்பதால் கிரிக்கெட் ரசிகர்களின் உற்சாகம் மேலும் கூடுதலாக ஆகி இருந்தது. இரண்டு பிரிவுகளில் ஒரே நிலையில் இருந்தால் இந்த வாய்ப்பு கிட்டியிருக்காது. சென்னை சூப்பர் கிங்ஸ் ஒரு பக்கம் முதல் இடத்தில் இருக்க, பெங்களூர் ராயல்ஸ் இன்னொரு பக்கம் இரண்டாவது இடத்தில் இருந்தது.

அரை இறுதியில் முதல் இடம் பெற்ற அணி ஒன்றும், இரண்டாமிடம் பெற்ற அணி ஒன்றும் மோத வேண்டும் என்பது விதி. இந்த விதிப்படி இரண்டில் ஒன்று வெளியேற ஓர் அணி இறுதிப்போட்டியில் மோதும். ஒருவேளை அதில் இந்திய அணிகளில் ஒன்றாகக் கருதப்படும் அணி வெற்றி பெறவும் வாய்ப்புண்டு. அந்த வெற்றியை இந்திய அணியின் வெற்றியாகக் கருதி, இந்திய விளையாட்டுப் பிரியர்கள் இன்னும் கூடுதல் உற்சாகம் அடையக் கூடும்.

காலனி ஆதிக்கவாதிகளின் சோம்பேறித்தன விளையாட்டாகக் கருதப்பட்ட கிரிக்கெட் காலனி ஆதிக்கத்திலிருந்து விடுபட்ட மக்கள் திரளின் உற்சாக விளையாட்டாக மாறியதின் பின்னணியில் அந்தந்த நாடுகளில் பொறுப்பேற்ற அரசுகளின் வடிவமும், அந்த நாடுகளில் வளர்ச்சியடைந்த ஊடகங்களின் ஆதிக்கமும் இருக்கின்றன என ஊடக ஆய்வாளர்கள் கட்டுரைகள் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

ஓரளவு அரசாங்கத்திற்குப் பதில் சொல்லக்கூடிய வடிவத்தில் இருந்த கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தன்னுடைய பிடியைத் தளரவிட, இந்தியக் கிரிக்கெட்டைத் தனிநபர்களும், கூட்டுவியாபாரிகளும் தங்களின் விற்பனைச் சரக்காக ஆக்கி விட்டனர் என்பதை நாமறிவோம். இப்போது சாம்பியன் கோப்பைப் போட்டியின் அரையிறுதிக்கு வந்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ், இந்தியா சிமெண்ட்ஸ் என்ற தொழில் நிறுவனத்தின் சொத்து; ராயல் சேலஞ்சர் ஆப் பெங்களூர் மதுபானத் தயாரிப்பில் கொடிகட்டிப் பறக்கும் விஜய் மல்லையா என்ற பெருமுதலாளியின் தனிப்பட்ட சொத்து.

இந்த உண்மை கிரிக்கெட் ரசிகனுக்கு முக்கியமல்ல. அணியின் பெயரில் சென்னை இருப்பதால் அந்த அணியைத் தமிழ் நாட்டு அணியாகக் கருதிக் கொண்டு அதன் வெற்றியில் தமிழர்கள் மானம் இருப்பதாகக் கருதிக்கொள்கிறான். பெங்களூரின் பெயரை ராயல் சேலஞ்சர் தன்னோடு சேர்த்துக் கொண்டதால் கர்நாடக அணியாக அந்த அணி அடையாளப்படுத்தப்படுதல் நடந்து விடுகிறது.

விளையாட்டுகள் எப்போதும் வெளிசார்ந்த அடையாளத்தோடு தான் புரிந்து கொள்ளப்படுகின்றன என்பதோடு அந்த அணிக்காக விளையாடும் விளையாட்டு வீரர்களும் அந்தந்தக் குறிப்பிட்ட வெளியின் மனிதர்களாகக் கருதப்படுகிறார்கள் என்பதும் கண்கூடு. ஜார்க்கண்ட மாநிலத்தைச் சேர்ந்த மகேந்திரசிங் தோனி தமிழ்நாட்டின் “தல’’யாகக் கருதப்படும் பின்னணியைப் புரிந்து கொள்ள, விளையாட்டுக்கும் வெளிக்கும் உள்ள தொடர்பைப் புரிந்து கொள்ளுதல் அவசியம்.

பாரம்பரியமான இந்திய விளையாட்டான கபடியில் கூட சிறப்பாக விளையாடும் ஒரு வீரனைத் தங்கள் ஊர் அணியில் சேர்த்துக் கொண்டு தங்கள் ஊருக்குப் பெருமை சார்ந்த கதைகள் நமது கிராமங்களில் உண்டு. அந்த வரிசையில் தான் ஊரின் பெயரைத் தனிநபர்கள் தாங்கள் உருவாக்கும் கிரிக்கெட் அணியின் பெயரோடு சேர்த்து மாநில உணர்வை அல்லது தேச உணர்வை உண்டாக்குவதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

தனிநபர்களுக்கும், அவர்களால் வாங்கப்பட்ட கிரிக்கெட் வீரர்களுக்கும் பெரும் புகழையும் பணத்தையும் பெற்றுத்தரும் கிரிக்கெட் உண்டாக்கும் உணர்வும், அடையாளமும் இன்று காட்சி ஊடகங்களின் விற்பனைப் பண்டங்களாகவும் ஆகிக் கொண்டிருக்கின்றன. தனியார் வசம் உடைமையாகும் எந்தப் பண்டமும் கூடுதல் முதலீட்டியத்திற்கான உற்பத்தி சக்தியாக மாற முடியும் என்ற பொது விதிக்கேற்பக் கிரிக்கெட் என்னும் சரக்கும் முதலீட்டியக் கருவியாக மாறிக் கொண்டிருக்கிறது.

ஒரு நாட்டில் இன்று கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது என்றால் அந்த நாட்டிற்கும், விளையாட்டு வீரர்களுக்கும் பலவிதமான லாபங்கள் இருக்கின்றன. விளையாட்டிப் போட்டிகள் முன்பிருந்தது போல் வெறும் சுற்றுலாப் பொருளாதாரம் என்ற ஒற்றைப்பரிமாணத்தில் மட்டும் இல்லை. ஊடகப் பொருளாதாரம் மூல பலதளங்களிலும் விளையாட்டின் வீச்சுகள் நுழைந்து விட்டன.வியாபாரப் பொருளாக மாறினாலும் நமது தேச அடையாளத்தை உருவாக்குவதிலும், தேசப்பற்றை வளர்ப்பதிலும் கிரிக்கெட் விளையாட்டும் கிரிக்கெட் வீரர்களும் முக்கியக் காரணிகளாக இருக்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை.

கிரிக்கெட்டைப் பற்றிப் பெருமையாகப் பேசிக் கொண்டிருக்கும் இதே நடுத்தர வர்க்கம் தேசத்தின் அடையாளத்தையே அழித்துவிடக் காத்திருக்கும் அப்பெரும் நிகழ்வில் நடக்கும் குளறுபடிகளைக் கண்டுகொள்ளாமல் இருப்பதை என்னென்று சொல்ல? இத்தனைக்கும் கிரிக்கெட் செய்திகளைத் தரும் அதே ஊடகங்கள் தான் காமன்வெல்த் போட்டிகளைப் பற்றிய செய்திகளையும் சொல்லிக் கொண்டிருக்கின்றன.

இன்னும் பத்து நாளில் தொடங்க வேண்டிய காமன்வெல்த் போட்டிகள் இந்தியத் தலைநகராம் புதுடெல்லியில் தொடங்குமா? தொடங்கினாலும் முறையாக நடந்து முடியுமா? என்ற ஐயங்களை எழுப்பிக் கொண்டிருக்கிறது. அந்நிய நாட்டுச் சதியாலோ, உள்நாட்டுத் தீவிரவாதத்தாலோ அப்பெரு நிகழ்வு தடைபடப் போகிறது என்று சொல்லித் தப்பித்து விட முடியாத அளவுக்குக் காமன்வெல்த் போட்டிகள் பற்றிச் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. கலந்து கொள்வதாகச் சொன்ன பல வீரர்கள் தனிநபர்களாகவே பின்வாங்குகிறார்கள். சில நாடுகள் மொத்தமாகவே தங்கள் நாட்டு வீரர்களை நிறுத்திவிடக்கூடும் என்ற செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன.

இந்தியா போன்ற வளரும் நாடு ஒன்று சில ஆயிரங்கோடி ரூபாய் பணத்தைச் செலவிட்டுக் காமன்வெல்த் போட்டிகள் போன்ற மாபெரும் நிகழ்வை நடத்த வேண்டுமா? என மணிசங்கர அய்யர் போன்றவர்கள் குரல் எழுப்பிய போது தேசப்பற்றுடன் அதனை எதிர்த்தவர்கள் கூட இப்போது நடக்கும் நிகழ்வுகளைப் பார்த்துப் பயந்து போய் இருக்கிறார்கள். வழக்கமல்லாத வழக்கமாக இந்த ஆண்டு பெய்த பெருமழையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் விளையாட்டுக் கிராமம் ஆரோக்கியமற்ற இருப்பிடமாக மாறிவிட்டது. செய்ய வேண்டிய வேலைகளில் பாதிகூட முடிக்கப்படவில்லை.அவசர கதியில் கட்டப்பட்ட பாலங்களும், விளையாட்டுத்திடல் கூரைகளும் இடிந்து விழுகின்றன.

காமன்வெல்த் போட்டிகள், கிரிக்கெட் போட்டிகளைப் போலப் பெரும் லாபத்தை அளிக்கும் வாய்ப்புகள் இல்லாதவை என்றாலும் நமது அரசாங்கங்கள் அவற்றை நடத்த வேண்டும் என விரும்புகின்றன. வருடக் கணக்கில் திட்டமிட்டு ஆயிரக்கணக்கான கோடி செலவில் நடக்கும் இந்நிகழ்வை நடத்துவது ஒரு தேசத்தின் வலிமையும் இருப்பையும் பறைசாற்றும் முனைப்பு தான். இது போன்ற மகாநிகழ்வை நடத்தி நமது தேசத்தின் பெருமையை உலகிற்கு உணர்த்த வேண்டும் என்ற நோக்கம் இந்திய அரசாங்கத்திற்கு இருப்பது ஆச்சரியமான ஒன்றல்ல. ஏனென்றால் உலக வல்லரசுகளுள் ஒன்றாக தன்னை ஆக்கிக் காட்டி, ஐ.நா. சபையின் பாதுகாப்புக்குழுவில் ஓரிடம் பெற வேண்டும் என நினைப்பில் நமது ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள் என்பது அறிந்த ஒன்று.

வல்லரசுக் கனவுகளும் வளர்ச்சி அடைந்த நாடு என்று காட்டுவதிலும் இருக்கும் அக்கறைகளை நமது ஆட்சியாளர்கள், அமைப்புகளைச் சீர்படுத்துவதில் காட்டாமல் போவதில் தான் பிரச்சினைகளே ஆரம்பிக்கின்றன. இருக்கிற அமைப்புகளைக் கைப்பற்றும் தனிநபர்கள், தேச நலன், மக்கள் நலன் என்ற முக்கியமான காரணிகளைக் கைவிட்டு விட்டு சொந்த நலனையும், தாங்கள் சார்ந்த கட்சிகளின் நலனையும் மட்டுமே கவனத்தில் கொள்ளும் போது என்ன நடக்கும் என அறிய விரும்பினால் நிகழ்காலத்தில் ஊடகங்களில் அதிகம் உச்சரிக்கப்படும் இரண்டு பெயர்களைப் பற்றிய விவரங்கள் நமக்கு வேண்டும். ஒரு பெயர் லலித்மோடி. இன்னொரு பெயர் சுரேஷ் கல்மாடி.

கிரிக்கெட் விளையாட்டின் வடிவத்தை மாற்றிப் பெரும்பணம் புழங்கும் வியாபாரமாக மாற்றியதில் லலித் மோடிக்குப் பெரும்பங்கு உண்டு என்பது மட்டுமே பலருக்கும் தெரிந்த செய்தி. இதன் உடன் நிகழ்வாகவே லலித் மோடி பல ஆயிரங்கோடிகளுக்கு அதிபதியாகவும், பல தொழில் நிறுவனங்களின் உரிமையாளராகவும் ஆனார் என்பதும் அறிய வேண்டிய ஒன்று. அவர் தான் விளையாட்டை அதன் ஆன்மாவான வெற்றி/ தோல்வி என்பது முக்கியமல்ல, பார்வையாளர்களின் காட்சி இன்பமே முக்கியம் என ஆக்கியவர். இன்று விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார். அந்த வகையில் லலித் மோடி கிரிக்கெட்டின் எதிரி. ஆனால் காமன்வெல்த் போட்டிகளுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்குக் காரணமான சுரேஷ் கல்மாடி ஒட்டுமொத்த தேசத்தின் எதிரியாகத் தோன்றுவது ஆச்சரியமானதல்ல.

சுரேஷ் கல்மாடி நீண்ட காலமாக இந்திய விளையாட்டோடு தொடர்பு கொண்டவர் மட்டுமல்ல; ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியோடும் தொடர்பில் இருப்பவர். இவ்வளவு குழப்பங்களுக்குப் பின்னும், அசைவின்மைக்குப் பின்னும் கல்மாடி மீது ஆட்சியாளர்களின் கோபமோ, கண்டிப்போ திரும்பவில்லை என்பதை நினைத்துப் பார்த்தால் காரணம் கல்மாடி மட்டுமல்ல; அவரை அரவணைக்கும் காங்கிரஸ் பேரியக்கமும், அக்கட்சி தலைமை ஏற்று நடத்தும் மைய அரசாங்கத்தின் பொறுப்பின்மையும் கூடக் காரணங்கள் என்பது புரிய வரலாம்.

எல்லா நிகழ்வுகளின் வழியாகவும் தனிநபர்களுக்கும் அவர்கள் சார்ந்த கட்சிகளுக்கும் சேர வேண்டிய பங்கு மட்டுமே ஜனநாயகத்தில் முக்கியமாக நினைக்கப்படுகிறது என்பதை மக்கள் உணரும்போது லலித் மோடிகளும் சுரேஷ் கல்மாடிகளும் தேசத்தின் எதிரிகளாக மட்டுமல்ல; மக்களின் விரோதிகளாகவும் அடையாளப்படுத்தப்படுவார்கள். அதுவரை எல்லாமே இங்கே விளையாட்டாகவே தோன்றும்.

கருத்துகள்

குட்டி மணி இவ்வாறு கூறியுள்ளார்…
Iyaa,
"THESATHIN ETHIRIKALAI PADAM PIDITHU KAANPIPATHU NETRI ADI" ARUMAIYAAKA ULLATHU
குட்டி மணி இவ்வாறு கூறியுள்ளார்…
IYAA,
"THESATHIN EHTIRIKALAI INAM KAANUM IM MUYARCHI WARAWERKATHAKATHU"
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Paste this HTML link in comment form message box in your blogger blog

http://ramasamydemo.blogspot.com/2010/09/paste-this-html-link-in-comment-form.html

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெரியார்- எப்போதும் பேசுபொருள்

பெரியார்மண்ணும் பிராமணியத்தின் இயக்கமும்.

நாத்திகம் என்னும் ஆன்மீகம்