திரும்பக் கிடைத்த முகவரிகள்


நிகழ்காலத்தில் நிகழ்கால வாழ்க்கையை வாழ வேண்டும் என நாம் முடிவு செய்தால் தினந்தோறும் கணினியின் திரையைச் சந்திக்காமல் தப்பிக்க முடியாது. துறவு வாழ்க்கையின் மீது விருப்பம் கொண்டு விலகிச் சென்றால் மட்டுமே கணினியிடமிருந்து தப்பிச் செல்லல் சாத்தியம். 

எனக்குக் கணினியின் இயக்கம் குறித்து எதுவுமே தெரியாது என்று சொல்லித் தப்பித்து விடலாம் என்று நினைத்தாலும் கணினி நம்மை விடுவதில்லை. வீட்டுக்குப் பயன்படுத்திய மின்சாரத்திற்குப் பணம் கட்டுவது தொடங்கி பலசரக்குச் சாமான்கள் வாங்கும், உணவு விடுதி, திரையரங்கு என அனைத்தும் கணினி மயமாகிவிட்டன. தொலை தூரங்களுக்குச் செல்லும் பேருந்துகளில், ரயிலில் இடம் இருக்கிறதா? எனப் பார்க்க விரும்பினால், அங்கே வைக்கப்பட்டிருக்கும் தொடுதிரையைத் தடவிப் பார்க்க வேண்டும்.
உங்கள் பயணங்களை முன் திட்டமிட்டுக் கொள்ள விரும்பினால் நாட வேண்டியது கணினியைத் தான் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. அதன் அளப்பரிய பயன்பாட்டால் உண்டாகும் அனுகூலங்களில் ஒன்றையாவது தினசரி சந்திந்தாக வேண்டிய கட்டாயத்திற்குள் மனிதர்களைக் கொண்டு வந்து நிறுத்தி விட்டது கணினி. கணினியிடமிருந்து தப்பிக்க வேண்டுமென்றால் நீங்கள் துறவு தான் மேற்கொள்ள வேண்டும். துறவு வாழ்க்கை என்றவுடன் காவி வேட்டியோ மரவுரியோ கட்டிக் கொண்டு காய்களையும் கனிகளையும் தின்று திரியும் கானக வாழ்க்கை என்று நினைக்க வேண்டியதில்லை. நிகழ்காலத்தில் நிகழ்கால வாழ்க்கையை வேண்டாம் என்று மறுப்பதே துறவு வாழ்க்கை தான். அதற்கு நம்மில் எத்தனை பேர் தயாராக இருக்கிறோம் என்பதுதான் கேள்வி?
கணினி தரும் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அனைவருக்கும் ஒரேமாதிரியானவை அல்ல. அதனை அனுபவித்தவர்கள் சொல்லும் போதுதான் அதன் ஆழம் புரியும். முன்பெல்லாம் எனது சொந்தக் கிராமத்திற்கு அடிக்கடி செல்லும் விருப்பம் இருந்தது. அந்த விருப்பம் கொஞ்சங்கொஞ்சமாகக் குறைந்து தேய்ந்து விட்டது. எனது காலத்து மனிதர்கள் பலரும் வாழ்க்கையைத் தேடிப் பல நகரங்களுக்குப் போய்விட்ட நிலையில் அவர்கள் இல்லாத எனது கிராமம் அந்நியமாகிப் போனதாக நினைப்பது ஒரு முக்கியமான காரணம். 

மனிதர்கள் இல்லையென்றாலும் எனது கிராமத்து மலைகளும் ஓடையும் கிணறுகளும் தோட்டங்களும் இருக்கின்றனவே. அவற்றைப் பார்க்கும் ஆசையை எப்படித் தணிப்பது? இதையும் தீர்த்து வைக்க நான் நாடுவது கணினியின் திரைகளைத்தான்.
இணையத்தளங்களின் வரைபடப் பக்கங்களைத் திறந்து பயணம் செய்தால் சில நிமிடங்களில் எங்களூர் மலையின் உச்சியில் இருக்கும் தாழையூத்து அருவியைப் பார்த்து விட முடிகிறது. ஆம் பார்க்கத்தான் முடிகிறது. ஆனால் குளிக்க முடியாது. குளித்து மகிழ்ந்த அந்த நாட்களையும் உடன் இருந்த நண்பர்களையும் தோழியர்களையும் நினைத்துக் கொள்ளவும் செய்யலாம். கடந்த காலத்தை நினைத்துக் கொள்ள சிறந்த வழி நாட்குறிப்பு எழுதுவது என்று எனது பள்ளிக்கூட ஆசிரியர் கூறிய வாக்கியத்தை இனியும் நான் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. 

நாட்குறிப்புகள் எழுதும் பழக்கத்தைக் கைக்கொள்ள வேண்டும் என முயன்று தோற்றவர்கள் பலருண்டு. ஒவ்வொரு புத்தாண்டின் போதும் புதிதாக ஒரு நாட்குறிப்பேடு வாங்கி எழுதத் தொடங்கிப் பின் நிறுத்தப்பட்ட டைரிகள் இன்றும் கூட நமது புத்தக அடுக்குகளுக்கிடையில் இருக்கக் கூடும். நாட்குறிப்பு எழுதுவது வெறும் எழுத்துப் பழக்கம் மட்டும் அல்ல; ஒவ்வொரு நாளும் நாம் செய்த காரியங்களை மறுபடியும் நினைத்துப் பார்க்கும் மனநிலையும் கூட. நினைத்துப் பார்க்கும் போது நல்லனவற்றை மறுநாளும் தொடரவும், மோசமானவற்றை அன்றே விட்டொழிக்கவும் வாய்ப்பளிக்கும் ஒரு வாழ்க்கை முறைக்கான பயிற்சியும் கூட. இப்படிச் சொல்லி நாட்குறிப்பு எழுதும் ஆசையைத் தூண்டி விட்டவர் எனது பத்தாம் வகுப்பு வரலாற்றாசிரியர். 

கணினியின் வழி உருவாக்கப்பட்டுள்ள இணையம் நாட்குறிப்புகளின் பயனை இல்லாமல் செய்து விட்டது.கடந்த காலம் காட்சி வழி உருவாக்கப்படும் போது எழுத்து வழி உருவாகும் நினைவுகள் காணாமல் போகின்றன. 

நினைத்து முடிவு எடுத்து விட்டால் சொந்த ஊருக்குப் போய்த் திரும்பி விடலாம் என்ற நிலையில் இருக்கும் நகரவாசிகளுக்கே இணையம் தரும் இன்பம் இவ்வளவு என்றால் நாடுகள் கடந்து, கண்டங்கள் கடந்து வாழும் மனிதர்களுக்கு அது தரும் பயன்களின் அளவைச் சொல்ல முடியாது. இணையத்தில் இணைக்கப்பட்டுள்ள காமிராக்கள் வழி பிரான்சில் இருக்கும் மகனுக்கும் மருமகளுக்கும் சமையல் குறிப்புகளைச் சொல்லியபடி சமைத்துக் காட்டுகிறார்கள் நடுத்தர வர்க்க அம்மாக்கள். இதையெல்லாம் விட எனது நண்பர் ஒருவர் சொன்ன சொந்த அனுபவம் தான் கணினியின் இருப்பை- தேவையைப் பல மடங்கு உயர்வானதாக ஆக்கியது.
அவர் இலங்கையின் யாழ்ப்பாணத்திலிருந்து இருபது வருடங்களுக்கு முன்பு புலம் பெயர்ந்து கனடாவில் குடியேறியவர். அவ்வப்போது சொந்த நாட்டையும் சொந்த ஊரையும் பார்த்து விடலாம் என்ற ஆசையில் இலங்கைக்குச் செல்வார். அப்படிச் செல்லும் போது அல்லது திரும்பும்போது இந்தியாவுக்கும் வருவார். வந்து என் போன்ற நண்பர்களைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்து விட்டுப் போவார்.

யாழ்ப்பாணப் பகுதியில் இருந்தது அவரது சொந்த கிராமம். அந்தக் கிராமத்திற்குச் செல்லும் பயண வழிகள் இரண்டு. ஒன்று சாலைப் பயனம் இன்னொன்று ஏரிவழிப் பயணம். சாலை வழியாகப் பயணம் செய்தால் ஒரு பெரிய பாலம் ஒன்றைக் கடந்து செல்ல வேண்டுமாம். பாலம் ஆழமான ஒரு பள்ளத்தாக்கையும் மலைச்சரிவையும் இணைத்துப் போடப்பட்ட பாலம். பாலம் இல்லாமல் அந்த இடத்தைக் கடப்பதற்கு ஏற்ற பாதை என்றால் ஏரி வழியாகச் செல்லும் படகுப் பயணம் தான்.
முப்பதாண்டுக் காலம் நடந்த போரில் முதல் காலகட்டத்திலேயே அந்தப் பாலம் துண்டிக்கப்பட்டது. அவர் அந்த ஊரை விட்டு வெளியேறியது ஏரி வழியாகப் படகு பயணத்தின் மூலம் தான். வெளியேறி இருபது ஆண்டுகள் ஓடி விட்டது. இதுவரை சொந்தக் கிராமத்தைப் பார்த்து விட வேண்டும் என்ற ஆசையில் நான்கு முறை போயிருக்கிறார். ஒரு முறை கூட அந்தக் கிராமத்திற்குச் செல்ல முடியவில்லை.

ஏரியின் வழியும் அடைபட்டு விட்டது. ஏரிக்குள் கண்ணி வெடிகள் போடப்பட்டு ஆண்டுகள் பல ஓடி விட்டன. அந்தக் கண்ணி வெடிகள் இன்னும் உயிர்ப்புடன் இருக்குமா? என்று தெரியாது. ஆனாலும் படகோட்டிகள் உயிரைப் பணயம் வைத்துச் செல்ல விரும்புவதில்லை. அதனால் படகுப் பயணங்கள் சாத்தியமில்லாமல் ஆகி விட்டன. ஒவ்வொரு முறையும் அந்தப் பெரிய பாலத்தின் இக்கரையில் இருந்து ஊரைப் பார்த்து விட்டுத் திரும்பிய கதையைச் சொல்லுவார். அப்படிச் சொல்லும் போது திரளும் கண்ணீரை அவரால் தடுக்க இயலாது தவிப்பார். சொல்லும் போது திரண்டு விழும் கண்ணீரின் அளவே இவ்வளவு என்றால் அந்தப் பாலத்தின் கரையில் எவ்வளவு கண்ணீரைச் சிந்தியிருப்பார். 

போனவாரம் அந்த நண்பரிடமிருந்து எனக்கொரு கடிதம் வந்தது. இணையவழிக் கடிதம் தான். தனது இருபது வருட ஆசை நிறைவேறி விட்டது; எமது கிராமத்தையும் எனது வீட்டையும் பார்த்து விட்டேன் என்று மகிழ்ச்சியின் உச்ச கட்டத்தில் அந்தக் கடிதத்தை எழுதியிருந்தார். மகிழ்ச்சி வார்த்தைகளில் வெளிப்பட்டது.
இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்து விட்டதால் பாதைகள் சரி செய்யப்பட்டு விட்டது போலும் என்று நினைத்தேன். இவ்வளவு வேகமாக புனர் நிர்மாணப் பணிகள் நடக்கிறது என்றால் இலங்கைக்கும் அங்கே வாழும் தமிழர்களுக்கும் ஓரளவு விடிவுகாலம் வந்து விடும் என மனம் சொல்லியது. உடனே நான் “ எப்போது நாட்டிற்குப் போனீர்கள்? ; சொல்லாமல் கொள்ளாமல் சொந்த ஊருக்குப் போய்விட்டீர்களே” என்று செல்லக் கோபத்தோடு நானும் கடிதம் அனுப்பினேன். எனது கடிதமும் இணையம் வழியாகத் தான் சென்றது.
“நான் எங்கே சென்றேன்; கூகுள் கடவுள் தான் எங்கள் கிராமத்தை என் வீட்டிற்குக் கொண்டு வந்து சேர்த்தான்; கனடாவில் இருந்த படியே எங்கள் கிராமத்துப் பாலத்தையும் ஏரியையும் கடந்து வீடிருந்த தெருவுக்குச் சென்றேன். தெருக்கள் இருக்கின்றன; வீடுகள் இல்லை. மரங்கள் இருக்கின்றன; மனிதர்கள் இல்லை” என்று திரும்பவும் சோகத்திற்குள் சென்று விட்டார்.
கூகுள் எர்த் என்ற இணையதளம் உலகத்தின் அனைத்துப் பகுதிகளையும் செயற்கைக்கோள் வழியாகக் கணினிக்குக் கொண்டு வந்து சேர்த்து விட்டது. சொந்த ஊரைப் பார்க்கும் ஆசை முடிந்து விட்டது; இனிப் போய்ப் பார்ப்பது சாத்தியமே இல்லை; எனது முகவரி தொலைந்தே விட்டது என நினைத்த அந்த நண்பர் கூகுள் இணையதளத்தையும் அதனைக் கண் முன்னே காட்டும் கணினியையும் கடவுள் என்று சொன்னது புரிந்தது. 

’நிகழ்காலத்தை மறுதலித்தல் துறவு’ என்று சொன்னால், நிகழ்கால வளர்ச்சியைப் பயன்படுத்துதலைக் கடவுளைக் கண்டடைதலாகச் சொல்லலாம் தானே. கடவுளை நாம் தானே உருவாக்க வேண்டும். உருவாக்குபவர்களுக்கு ஆச்சரியம் ஊட்டும் ஒன்று கடவுள் என்றால் , நிகழ்காலத்தின் கடவுள் தரிசனம் கணினியின் திரைகள் என்று நம்புவதை தவறெனச் சொல்ல முடியாதுதான்.

கருத்துகள்

ராம்ஜி_யாஹூ இவ்வாறு கூறியுள்ளார்…
அருமை, நன்றிகள்.

மின்சாரம், பேருந்து, ரயில் போன்ற கண்டுபிடிப்புக்கள் போலவே இணையமும், கணினியும் மிக சிறந்த பயனுள்ள கண்டுபிடிப்புக்கள் என்று சொன்னால் மிகை ஆகாது
குட்டி மணி இவ்வாறு கூறியுள்ளார்…
"therukal irukinrana weedukal illai, marankal irukainrana manaitharkal illai" warikal manathai neruda waikanrana

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெரியார்- எப்போதும் பேசுபொருள்

பெரியார்மண்ணும் பிராமணியத்தின் இயக்கமும்.

நாத்திகம் என்னும் ஆன்மீகம்