பேரங்காடிப் பண்பாடு
"அரிசி குழஞ்சு போயிராதுல்ல”
"இல்லங்க ; இது பழைய அரிசி,குழையாது”
“ ரொம்பப் பழசுன்னா வேணாம்; வாடை வரும்”
“ அய்யோ அவ்வளவு பழசு இல்லீங்க; வடிச்சுப் பாருங்க. மணக்கும்”
அரிசிக் கடைக்காரருக்கும் வீட்டுத் தலைவிகளுக்கும் இடையில் நடக்கும் இந்த உரையாடலில் இடையில் புகுந்து “ வடிச்சுப் பார்க்கவா ; குக்கரில் அரிசியைப் போட்ட பிறகு சோத்த வடிக்கிற வேலை எங்கே இருக்கு” கணவர்கள் கேட்டால் சிரித்து விட்டுச் சொல்வார்.
“எடுத்துட்டுப் போங்க; திருப்தி இல்லையின்னா, திருப்பிக் கொண்டு வாங்க; வேற அரிசி தாரேன்” இந்த வாசகம் வரும் வரை பேசிக்கொண்டு இருப்பது தான் நமது வாடிக்கை.
’அரிசி சீக்கிரம் கொழஞ்சு போகுது’ ன்னு சொல்லி மாற்றி வாங்கி யிருக்கிறோம்; சில சமயம் ’வாடை வருது’ன்னு சொல்லி மாற்றியிருக்கிறோம். சில சமயம் ’பழுப்பு அரிசி நிறைய இருக்குது’ ன்னு சொல்லி; சிலசமயம் ’கல்லு இருக்குது’ன்னு காரணம் காட்டி… அரிசிக்கடையில் அரிசியை மாற்றிக் கொள்ள எதாவது காரணம் கிடைக்காதா என்று தேடித் தேடிச் சொல்லி மாற்றி விடும் குடும்பத்தலைவிகள் இருக்கத் தான் செய்கிறார்கள்.
அரிசிக் கடையில் மட்டுமல்ல; தேங்காயெ உடைச்சுப் பார்த்து விட்டுத் தண்ணி இல்லாமல் இருந்தால் திருப்பிக் கொடுத்து விடுவார்கள். முட்டை , கூமுட்டை யாக இருந்தால் திருப்பிக் கொடுத்து விடலாம். வாங்கிப் போன கைலி முதல் சலவையில் சாயம் போனால் கடைக்காரரிடம் போய் சண்டை போட்டு மாற்றிய காலம் ஒன்று இருந்தது.
வாங்கிய பொருட்களில் திருப்தி இல்லை என்றால் திருப்பி எடுத்துக் கொண்டு போய் சண்டை போட்டபின்னும் நமது வீட்டிற்கு அருகில் இருக்கும் சில்லறைக் கடைக்காரர் சிரித்துக் கொண்டே தான் பேசுவார். “என்னங்க ; கடைப் பக்கமே காணோமே” என்று கேட்ட அடுத்த நாள் நாமும் கடையில் போய் பொருட்களை வாங்கி வந்த காலம் கொஞ்சங் கொஞ்சமாகக் காணாமல் போய்க் கொண்டிருக்கிறது.
அன்றாடத் தேவைகளுக்கு அன்றன்றே பொருட்கள் வாங்கும் கிராமப் புற மக்களும், வாரத்திற்கொரு தடவை பொருள் வாங்கிக் குடும்பம் நடத்தும் சிறு நகர மனிதர்களும் பேரங்காடிப் பண்பாட்டிற்குள் (சூப்பர் மார்க்கெட் கல்ச்சர்) நுழையச் சில ஆண்டுகள் சில ஆகலாம். ஆனால் நகரங்கள் பேரங்காடிகளை உருவாக்கிக் கொண்டிருக்கும் வேளையில் பெருநகரங்கள் பேரங் காடிகளிலிருந்து மகா அங்காடிகளுக்குள் நுழைந்து கொண்டிருக்கின்றன.
நகரவாசிகள் பேரங்காடிப் பண்பாண்டிற்குள் நுழைந்த பின்னணியில் தாராளமயப் பொருளாதாரத்தின் சொர்க்கவாசல்கள் உண்டு. அதன் வழியே நுழையும் நடுத்தர மற்றும் உயர் நடுத்தர வர்க்கங்கள் என்னவாகிக் கொண்டிருக்கிறார்கள் என்பதைச் சுவாரசியமான கதை என்று சொல்வதைவிட வேதனையான விசயம் என்று தான் சொல்ல வேண்டும்.
அன்றாடத் தேவைக்குத் தினசரி பொருட்கள் வாங்கக் கடைகளுக்குச் செல்ல முடியாத நடுத்தர வர்க்கத்திற்கு பொருட்கள் வாங்குவதை ஒரு களிப்பூட்டும் நிகழ்ச்சியாக மாற்றித் தருவதன் மூலம் பேரங்காடிகள் விருப்பம் போல வைக்கும் விலையைக் கேள்வி கேட்காமல் கொடுத்து விட்டுப் போகின்றவர்களாக மாற்றுகின்றன . ஒரு பேரங்காடிக்கும் இன்னொரு பேரங்காடிக்கும் ஒரு பொருளின் மீதான விலையில் வித்தியாசம் இருந்தால் கூட அங்கு கிடைக்கும் பிற வசதிகளை மனதில் கொண்டு அந்த விலையை ஏற்றுக் கொள்ளும் மனநிலைக்குத் தயாராகின்றனர் நுகர்வோர்.
அவசர வாழ்க்கைக்குப் பழக்கமாகி வரும் நடுத்தர வர்க்கத்திற்கு இந்தப் பேரங்காடிகள் ஒரு வரப்பிரசாதம் தான். பொது இடத்தில் சத்தமாகப் பேசுவதையே நாகரிகக் குறைவு எனக் கருதத் தொடங்கி விட்ட நடுத்தர வர்க்கத்துக்கு கடைக்குச் செல்லுதலை- ஷாப்பிங் செய்வதை- ஒரு களிப்பூட்டும் நிகழ்வாக மாற்றிக் கட்டமைக்க அவை பின்பற்றும் உத்திகள் விதம் விதமானவை.
குளிரூட்டப் பட்ட பேரங்காடிகளுக்குள் ஒரு தள்ளுவண்டியை உருட்டிக் கொண்டே பொருட்களை எடுத்து வைத்துத் தள்ளிக் கொண்டே வரலாம். பின்னணியில் ஒலிக்கும் மெல்லிய இசைக் கோலங்களை ரசித்தபடி நீங்கள் நகரலாம். எடுத்து வைப்பது சிரமமாக நினைத்தால் கையில் இருக்கும் பொருட்களின் பட்டியலை விற்பனையாளராகப் பணியில் இருக்கும் யுவதியிடம் கொடுத்து விட்டால் ஒவ்வொரு பொருளாக எடுத்து உங்கள் சம்மதத்தோடு வண்டியில் இருக்கும் பெட்டியில் போட்டுக் கொண்டே வருவார். உங்களுடன் வரும் குழந்தைகள் விளையாட தனியாக இடங்கள் உண்டு. எல்லாம் முடிந்தபின் உட்கார்ந்து சிற்றுண்டி சாப்பிட்டு விட்டுப் போகலாம்.
நீங்கள் விரும்பினால் அவர்களே தங்கள் சரக்கு வண்டியில் கொண்டு வந்து வீட்டில் தந்துவிடுவார்கள். இவையெதுவும் செய்யாமல் வீட்டிலிருந்தே தொலைபேசியில் பட்டியலைச் சொல்லி விட்டால் நேரடியாக வீட்டிற்கே பொருட்கள் கொண்டு வரும் வசதிகள் கூட உள்ளன. ஆனால் எல்லாவற்றிற்கும் தனியாகக் கட்டணம் உண்டு என்பதுதான் தெரிந்து கொள்ள வேண்டிய சங்கதி.
கடைக்குச் சென்று நமக்குத் தேவையான பொருட்களை வாங்கும் ஒரு நுகர்வோர், களிப்பூட்டும் பொழுது போக்கு அரங்கு போன்ற பேரங்காடிகளுக்குள் நுழையும் போது அவனது நுகர்வோர் பாத்திரம் மட்டும் அழிக்கப்படுகிறது என்பதாக நினைக்க வேண்டியதில்லை. அந்தப் பாத்திரத்திற்குரிய உரிமைகளும் திசைமாறுகின்றன என்பதை இங்கே பலரும் உணர்வதில்லை. தன்னுணர்வுள்ள மனிதனர்களாக அவர்களது விருப்பங்களும், உரிமைகளும் களவாடப்படுகின்றன என்பதை அறிவதில்லை. ஒரு பேரங்காடிக்குள் நுழைந்து விட்டால் அங்கே இருக்கும் பொருட்களையே வாங்க வேண்டும் நிர்ப்பந்தம் நம்மை அறியாமலேயே உருவாக்கப்படுகிறது என்பதை யாரும் மறுத்துவிட முடியாது. விலை பேசி வாங்குவது அல்லது மறுப்பது என்ற நிலையும் அங்கே இல்லை. எல்லாவற்றிற்கும் மேலாகப் பொருட்களின் தரம், அளவு போன்றவற்றில் குறைகளும், திருப்தியின்மையும் இருந்தாலும் திருப்பிக் கொடுத்து விட்டு மாற்றிக் கொள்ளும் அந்த நுகர்வோர் உரிமை முற்றிலும் இல்லாமல் போய் விட்டது.
பேரங்காடிகளில் தனது நுகர்வோர் உரிமையைக் கறைத்து விடும் ஆபத்தை விடக் காட்சி அரங்குக் கடைகளில் – ஷோ ரூம்களில் – நமது நடுத்தர வர்க்கம் இழந்து நிற்கும் உரிமைகளும் பணமும் அதிகமானவை. பெருநிறுவனங்கள் நடத்தும் காட்சி அரங்குக் கடைகளில் போய், சலவைப் பெட்டி, தொலைக்காட்சிப் பெட்டி அல்லது குளிர்பதனப் பெட்டி என வீட்டிற்குத் தேவையான (?) பொருட்களை வாங்கும் போது இதனை உணரலாம்,
உள்ளே நுழைந்து விட்ட வாடிக்கையாளர்களுக்கு உடனடியாகப் பானங்கள் கொடுத்து உபசரிப்பதில் தொடங்கி பொருட்களை வண்டியில் ஏற்றி அனுப்புவது வரை கவனிப்போ கவனிப்பு என அப்படிக் கவனிப்பார்கள். ஏனென்றால் நீங்கள் வாங்கும் ஒவ்வொரு பொருளின் மேலும் அவர்களுக்குக் கிடைக்கப் போகும் 40 சதவீதத்திலிருந்து 50 சதவீதம் என்பதை நுகர்வோர் அறிவதில்லை. அப்படிக் கவனித்தவர்களிடம் ஒரு வாரம் கழித்து வாங்கிய பொருள் சரியாக இல்லை என்ற குறையோடு போய் நின்று பாருங்கள்;அல்லது தொலைபேசி வழியாகப் பேசிப் பாருங்கள் . கிடைக்கும் பதிலைக் கண்டு அதிர்ச்சி அடையாமல் இருந்தால் நீங்கள் திடமான மனம் படைத்தவர் என நினைத்துக் கொள்ள வேண்டும்.
என்னுடைய அனுபவங்களே பலவிதமானவை. முதலில் ஒரு அனுபவம். நான்கு வருடங்களுக்கு முன்பு நடந்தது இது. வாங்கிய சலவை எந்திரம் வாங்கிய ஒரு மாதத்தில் பழுதடைந்து விட்டது, நான் வாங்கிய காட்சி அரங்க மேலாளரிடம் தொலைபேசியில் பேசிய போது அவருக்கும் அந்த எந்திரத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது போலப் பேசினார். ஒரு மாதத்திற்கு முன்பு தான் எனது சம்பளத்தில் பாதியைக் கொடுத்து வாங்கியிருந்தேன். ஆனால் அவர் நான் வாங்கிய சலவை எந்திரத்திற்கான சேவை மையத்தின் தொலைபேசி எண் உத்தரவாத அட்டையில் இருக்கிறது; அங்கே தொடர்பு கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டு தொலைபேசியை மூடி விட்டார்.
ஒரு மாதத்தில் பொருள் பழுதடைந்ததால் ஏமாற்றப் பட்டதாகக் கருதி நேரடியாகச் சென்றேன். போய்ச் சொன்ன உடன் மேலாளர் ஒரு இளைஞனைக் கூப்பிட்டுப் பேசச் சொன்னார். விலை உயர்ந்த ஆடைகளோடு கழுத்துப் பட்டையைச் சரி செய்தபடி ஆங்கிலத்தில் பேசிய அவரது பேச்சின் சாரம் இதுதான். ”ஒரு பொருள் விற்கப் படுவதுடன் இங்கே வேலை முடிந்துவிடுகிறது. அதன் பிறகு அதன் பேரில் ஏற்படும் குறைகள், பழுதுகள் போன்றவற்றிற்கு பழுது நீக்கும் சேவை மையத்தையும், அவர்கள் வழியாக அதனைத் தயாரித்த நிறுவனத்தையும் தான் தொடர்பு கொள்ள வேண்டும்” லாவகமான ஆங்கிலத்தில் சொல்லிப் புரிய வைத்து என்னை அனுப்பி விட்டார்.
பழுது நீக்கும் மையத்தை தொடர்பு கொண்டேன். ஒருவர் வந்து பார்த்தார்; சலவை எந்திரத்தை பழுது நீக்கும் மையத்திற்கு எடுத்து வரச் சொன்னார். எனது செலவில் எடுத்துப் போனேன். பார்த்து விட்டு முக்கியமான பொருள் ஒன்றை மாற்ற வேண்டும்; அப்பொருள் பெங்களூரில் இருந்து வர வேண்டும் என்றார். ஏனென்றால் நான் வாங்கிய அந்தப் பெட்டியைத் தயாரிக்கும் அந்த நிறுவனம் அங்கு தான் இருக்கிறது. வாங்கி ஒரு மாதத்தில் பழுது அடைந்தால் முழுமையாக மாற்றித் தர மாட்டீர்களா? என்று கேட்டேன். அப்படிச் செய்வது வழக்கமில்லை. பழுதடைந்த பாகத்தை மாற்றித் தருவோம் என்றார். அப்படி மாற்ற எடுத்துக் கொண்ட காலம் இரண்டு மாதம்.
போனவருடம் அதன் உத்தரவாதக் காலம் முடிந்தபின்பு ஏற்பட்ட பழுதை நீக்கச் சொன்ன போது அவர்கள் சொன்னது இன்னும் அதிர்ச்சியானது. அந்தப் பழுதை நீக்குவதற்கு ஆகும் செலவோடு இன்னும் ஒரு 20 சதவீதம் கூடுதல் செலவழித்தால் புதிய சலவை எந்திரம் வாங்கி விடலாம். ஏன் நீங்கள் அப்படிச் செய்யக் கூடாது என்றார். அதிர்ச்சி அடைந்ததுதான் மிச்சம்.
சலவை எந்திரம் என்றில்லை. நம் வீட்டில் இருக்கும் தொலைக்காட்சிப் பெட்டிகள், குளிர்பதனப் பெட்டிகள், அரவை எந்திரங்கள், கணினிகள் என எலக்ராடினிக் எந்திரங்கள் விற்கும் கடைக்கும் வாங்கும் நுகர்வோருக்கும் இடையில் நிற்கும் பழுது நீக்கும் மையங்கள் யாருக்குப் பொறுப்புடையன என்று கேள்வியை கேட்டுக் கொண்டு விடை தேடினால் கிடைக்கும் விடை என்ன? அவர்களை நாம் நெருக்கிப் பிடிக்க முடியாது. ஏனென்றால் நேரடியாக அவரிடம் பணம் கொடுத்து வாங்கவில்லை. பணம் பெற்றுக் கொண்டவர்கள் கைகாட்டி விட்டு ஒதுங்கிக் கொள்ளும் வியாபார உத்தியை எப்படிப் புரிந்து கொள்வது?
சில்லறைக் கடைகளில் சொற்ப விலையில் நமது தேவைகளுக்கான பொருட்களை வாங்கும் நிலையில் இருந்தவரை, கடைக்காரரோடு சண்டை போட்டுத் திருப்பித் தரும் உரிமையை நிலை நாட்டிக் கொண்டே இருந்தோம். இன்று நுகர்வோருக்குப் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் இல்லாத வியாபாரத்தை பேரங்காடிகளும், மகா அங்காடிகளும், காட்சி அரங்க அங்காடிகளும் உருவாக்கி விட்டன. அந்தப் பண்பாடு தரும் சுகத்தில் நுகர்வோன் தன்னை நுகர்வோனாகக் கூட உணராமல் தொலைந்து கொண்டிருக்கிறான். யோசித்துப் பார்த்தால் வியாபாரத்தின் அமைப்பே மாறிப்போன உண்மை புரிய வரலாம்.
.
கருத்துகள்
நான் என்ன வாங்கினாலும் கிரெடிட்கார்டில்தான் வாங்குவேன் காரணம் நாம் ஏமாற்றப்பட்டதாக கருதினால் உடனே க்ரெடிட் கம்பெனியை கூப்பிட்டு dispute செய்துவிடுவேன் அவர்கள் பிரச்சனை தீரும் வரை பணத்தை லாக் செய்துவிடுவார்கள் அது வியாபாரிக்கு மிகவும் பிரச்சனையாகும்