விலக்கலும் உள்வாங்குதலும்
தொழில் கல்லூரிகளில் உயர்கல்வி கற்க விரும்பும் கிராமப் புற மாணாக்கர்களுக்கு நுழைவுத் தேர்வு பெரும் தடையாக இருந்தது. அந்தத் தடை இப்போது இல்லை. அதனால் கிராமப் புற மாணாக்கர்கள் தொழில் கல்விக்குள் நுழைவது எளிமையாக்கப் பட்டுள்ளது. கடந்த ஆண்டை விடவும் இந்த ஆண்டு இன்னும் கூடுதலாகக் கிராமப் புற மாணாக்கர்கள் தொழில் கல்லூரிக்குள் நுழையப் போகிறார்கள். குறைந்த பட்ச மதிப்பெண் அளவு குறைக்கப்பட்டுள்ளது அதற்கான காரணமாக ஆகி இருக்கிறது.
இந்த ஆண்டில் பொறியியல் கல்லூரிகளில் நுழையப் போகிறவர்களில் பாதிப்பேருக்கும் மேல் தமிழ்வழியாகப் பள்ளிக் கல்வியை முடித்தவர்கள் என்ற தகவலும் கூடுதலாகக் கிடைத்துள்ளது. இந்த எண்ணிக்கை இனிவரும் ஆண்டுகளில் மேலும் கூடுதலாகக் கூடும். தொழில் கல்வி நிறுவனங்களில் சேரும் – சேர்க்கப்படும்- மாணவர்களின் ஆசைகளும், அவர்களது பெற்றோர்களின் கனவுகளும் இந்த நேரத்தில் நினைத்துப் பார்க்க வேண்டியவர்களாக இருக்கிறோம். அவர்களின் ஆசைகளும் கனவுகளும் நிறைவேற வேண்டும் என்றால் அனைவரும் படிப்பை வெற்றிகரமாக முடித்து எதிர்காலத்தைச் சரியாக அமைத்துக் கொள்ள வேண்டும். அவர்களின் நுழைவுக்கு இருந்த தடைகள் நீக்கப்பட்ட நிலையில் அவர்களது பயணம் வெற்றிகரமாக முடிவடைவதற்கு ஏதேனும் தடைகள் உள்ளனவா? எனக் கண்டறிந்து களைய வேண்டும்.
தொழிற்கல்வி நிறுவனங்களுக்குள் நுழைந்தவர்களைப் பற்றிப் பேசும் நமது ஊடகங்களும், கல்வி நிறுவனங்களும் படிப்பை முடிக்காமல் திசைமாறியவர்களைப் பற்றிக் கவலைப்படுவதில்லை; கண்டு கொள்வதுமில்லை. நமது பொதுப்புத்தியோ தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்றவர்களையும், முதல் தரமான மாணாக்கர்களையும் மட்டுமே கண்டுகொள்கிறது. வெற்றி பெற முடியாமல் திசைமாறிப் போகும் மாணாக்கர்களைக் குற்றவாளிகளாகக் கருதி ஒதுக்கவே செய்கிறது.
கல்வியைத் தொடர முடியாதவர்கள் பொது இடங்களில் குறிப்பாக வகுப்பறைகளிலும் வீடுகளிலும் தங்களின் இருப்பு கேள்விக்குறியதாக ஆகிவிட்டதாகக் கருதும் போது தங்களைத் தாங்களே காணாமல் ஆக்கிக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். தன்னைச் சார்ந்தவர்களும் சமூகமும் ஏற்படுத்தும் ஒதுக்கல்கள் மூலம் அவர்கள் காணாமல் போய்விடுவார்கள் என்று மட்டும் நினைத்து விட வேண்டாம். உண்மையில் அவர்கள் காணாமல் போய்விடுவதில்லை. ஒதுக்கப்படுவதாக உணரும் நிலையில் தான் இந்த சமூகத்திற்குப் பெரிய அச்சுறுத்தலாக மாறுகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அண்மைக்காலங்களில் ஊடகங்கள் வழியாகக் கவனத்திற்கு வரும் குற்ற நடவடிக்கைகளின் பின்னணியில் தொழில் கல்வி மாணவர்களும், பட்டதாரிகளும், அதனைப் பாதியில் கைவிட்டவர்களும் இருக்கிறார்கள் என்பதைக் காவல் துறையின் ஆவணங்கள் சொல்கின்றன.
தொழிற்கல்வியைப் பெறும் ஆசையோடு பெரும்பணத்தைக் கட்டணமாகச் செலுத்திய பிறகும் படிப்பை முடிக்காமல் போவதின் காரணங்கள் பல. தனிநபர் சார்ந்த காரணங்களுக்கு யாரையும் பொறுப்பாக்க முடியாது. தனிநபர் சார்ந்த காரணங்களே கூடச் சமூக இருப்பின் விளைவுகள் தான் எனச் சமூக உளவியல் கூறுகிறது.அரசும், அரசுகளுக்குக் கொள்கை வகுத்துக் கொடுப்பவர்களும் கண்மூடித்தனமாகப் பின்பற்றிய ஒரு நடைமுறை அதிகமான திசை விலகல்களை- டிராப் அவுட்டுகள்- என ஆங்கிலத்தில் சொல்லப்படும் நபர்களை உருவாக்கியது என்பது இப்போது உணரப்பட்டிருக்கிறது.. அப்படி உணர்ந்ததின் வெளிப்பாடாகவே நமது அரசு இனிவரும் ஆண்டுகளில் தமிழ் வழியாகவும் தொழில் கல்வியைக் கற்றுக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது.
தாய்மொழியான தமிழ் வழியாகத் தொழிற்கல்வியைப் பெற்றுக் கொள்ளலாம் என்ற அறிவிப்பைப் பற்றி யோசித்த போது அதனை நன்று எனக் கொண்டாடி ஏற்றுக் கொள்ளலாமா? தீது எனக் கருதித் தள்ளி விடலாமா? என்று உறுதியாகக் கூற முடியவில்லை. ஒரு வேளை திக்குத்தெரியாத காட்டில் தவிக்கும் ஒருவனுக்கு மரங்களுக்கிடையே வரும் ஒளிக்கீற்று என்று மட்டுமே அதனைச் சொல்லலாம் என்று தோன்றுகிறது. ஏனென்றால் அது ஒன்றே முழுமையான தீர்வாக ஆகிவிடும் என்று சொல்வதற்கில்லை.
முழுமையான தீர்வைப் பெற இதனோடு சேர்ந்து நமது கல்வி நிறுவனங்களில் மொழிப்பாடங்களைக் கற்பிக்கும் முறையில் திறமான மாற்றங்களைச் செய்ய வேண்டும் எனக் கூறத்தோன்றுகிறது. அம்மாற்றங்களே முழுமையான பலன்களைத் தரும் –திசைகளைத் தெளிவுறக் காட்டும்- கலங்கரை விளக்கமாக அமையக்கூடும்.
பள்ளிக்கல்விக்குப் பிந்திய தொழிற்கல்விப் பட்டங்கள் நூறு சதவீதம் ஆங்கில வழிப்பாடங்களாக இருந்த நிலை மாறித் தமிழிலும் கற்கலாம் என்பது வரவேற்கத்தக்க ஒன்று என்றாலும், தமிழ்வழிக் கற்றவர்கள் வேறு ஒரு தடையை எதிர்கொள்வார்கள் என்பதையும் மறுக்க முடியாது. இன்று பொறியியல் பட்டதாரிகளுக்குப் பணி வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் பன்னாட்டுக் கம்பெனிகள் அனைத்தும் ஆங்கிலம் தெரிந்தவர்களையே விரும்புகின்றன. காரணம் அத்தகைய நிறுவனங்களின் தொடர்பு மொழியாக ஆங்கிலமே இருக்கிறது. அதனால், தமிழக மாணவர்களின் ஆங்கில மொழிப் பயன்பாடு அவர்களின் விருப்பம் சார்ந்ததாக இல்லாமல் நிர்ப்பந்தம் சார்ந்ததாக ஆகிவிட்டது.
இதைச் சரியாகப் புரிந்து கொண்டுள்ள சில கல்வி நிறுவனங்கள் ஆங்கில மொழியைத் தொடர்பு மொழி என்ற அளவில் கற்பதற்கான வழிகளை உருவாக்கி அதையும் வெற்றிகரமான வியாபாரமாக நடத்திக் கொண்டிருக்கின்றன. எல்லாவற்றையும் வணிகமாகப் பார்க்கும் போக்கு மிக மிக ஆபத்தானது. தமிழ்நாட்டு மாணவர்களின் மொழிப் பிரச்சினைக்கு முழுமையான தீர்வை முன் வைப்பது அரசுக்கு ஆலோசனைகளை வழங்கும் கல்வியாளர்களின் முக்கியக் கடமை மட்டும் அல்ல; அவசரத்தேவையும் கூட.
நடைமுறையில் உள்ள பள்ளிக் கல்வியில் ஆங்கில வழியில் படிக்கும் ஒரு மாணவர் பன்னிரண்டு ஆண்டுகள் தாய்மொழியாகிய தமிழையும் ஒரு பாடமாகப் படிக்கிறார். அதே போல் தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களும் ஆங்கிலத்தை ஒரு மொழியாகப் படிக்கவே செய்கின்றனர். ஆனால் பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின்னும் அவர்கள் நினைக்கிற ஒரு கருத்தைத் தாய் மொழியான தமிழிலும் சொல்லத்தெரியவில்லை. மொழிப்பாடமாகக் கற்ற ஆங்கிலத்திலும் சொல்ல முடியவில்லை.
இந்தப் பிரச்சினை வெறும் மொழிப்பிரச்சினை என்ற எல்லையைத் தாண்டி தரமான கல்வியைத் தர முடியாமல் தவிக்கும் உயர்கல்வியின் தலையாய பிரச்சினை எனக் கருத வேண்டும். பள்ளிக் கல்வியில் முதன்மைப் பாடங்களான கணிதம், உயிரியல், வேதியியல், இயல்பியல் போன்றவற்றிற்குத் தரும் முக்கியத்துவத்தை விடவும் கூடுதல் கவனத்துடன் மொழிக் கல்வியைக் கற்பிக்க வேண்டும். மொழியைக் கற்பிப்பதற்கும் கற்பதற்கும் ஏராளமான புதிய உத்திகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. அவற்றை நமது பள்ளிகளின் மொழி ஆசிரியர்கள் அறிய வேண்டும். அதற்கான பயிற்சி வகுப்புகளுக்கு அவர்கள் அனுப்பப் பட வேண்டும்.
தாங்கள் கற்ற கல்வியை- பாடங்களை ஆங்கிலத்திலும் தமிழிலும் சொல்லக் கூடியவர்களாக மாணவர்களை மாற்றுவது என்பது மொழி ஆசிரியர்களின் முக்கியமான கடமை. அக்கடமை அவர்கள் வாங்கும் சம்பளத்திற்கான கடமை அல்ல; இந்தச் சமூகத்திற்கும் தேசத்தின் எதிர்காலத்திற்கும் அவர்கள் செய்ய வேண்டிய கடமை. அவர்களைச் செய்யத்தூண்ட வேண்டியதும், செய்ய முனைபவர்களுக்குத் தேவையான ஊக்கத்தை அளிக்க வேண்டியதும் அரசு மற்றும் அதிகாரத்துவ நிறுவனங்களின் கடமை. இக்கடமை உணரப்படாத நிலையில் தமிழ் வழியில் தொழில் கல்வி பெறலாம் என்ற அனுமதி மட்டுமே கிராமப்புற மாணவர்களின் வாழ்க்கையில் ஒளி விளக்காக அமைந்து விடும் எனச் சொல்ல முடியாது.
கருத்துகள்