சமூக இடைவெளிகள்


       இரண்டு நிகழ்ச்சிகளுக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. ஒரேயொரு வேற்றுமை நிகழ்வெளி மட்டும் தான். முதல் நிகழ்ச்சி நடந்தது சென்னையின் நகரப் பேருந்து நிலையம் ஒன்றில். இன்னொன்று திருநெல்வேலி பேருந்து நிலையத்தில். நிகழ்ந்த வெளிகள் பேருந்து நிலையங்கள் என்பதால், பேருந்து நிலையத்தைக் களனாக –நிகழ்வெளியாகக் கொண்ட ஓரங்க நாடகத்தின் இரு வேறு நிகழ்வுகள் என்று சொல்லலாம்.
இரண்டிற்கும் நான் பார்வையாளன். நிகழ்ச்சிகள் நாடகமாவதற்குக் காலம், வெளி, பாத்திரங்கள் என்ற மூன்றுக்கும் இடையே ஒருவிதப் பிணைப்பும், முரண் வெளிப்பாடும் மட்டும் போதாது, அம்முரண்பாட்டிற்கு ஒரு முடிவும் அமைய வேண்டும். அத்தோடு பார்வையாளர்களும் வேண்டும்.
இரண்டு நிகழ்ச்சிகளும் ஒரு மாத கால இடைவெளியில் நடந்தன. முதலில் சென்னை நிகழ்வு. திருவான்மியூர் பேருந்து நிலையம்; இரவு பத்து மணிக்குச் சற்று முன்னதாகவே பேருந்துகள் எல்லாம் பணிமனைக்குள் சென்று அடைந்து கொண்டிருந்தன. பேருந்து நிலையத்திலிருந்து நகரத்தின் மையமான பகுதிகளுக்குச் செல்லும் இரவுப் பேருந்துகள் பத்தரை மணிக்கு மேல் கிளம்பும் என்பது வழக்கமாகச் செல்லும் பயணிகளுக்குத் தெரிந்திருந்ததால் பொறுமையாகக் காத்திருந்தனர். தாங்கள் செல்ல வேண்டிய பகுதிகளுக்கு இரவுப் பேருந்துகள் உள்ளனவா? இல்லையா? என்பதைத் தெரியாதவர்கள் பதற்றத்தில் அலைந்தனர்.
தெரியாதவர்களுக்குச் சரியான பதிலைச் சொல்லும் போக்குவரத்துத் துறையைச் சேர்ந்த காலப் பொறுப்பாளர் யாரும் அங்கில்லை. எதிர்ப்படும் ஓட்டுநர், நடத்துநர் களிடமெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தனர். சிலர் பொறுப்போடு பதில் சொல்ல, சிலர் எந்தப் பதிலும் சொல்லாமல் விலகிச் சென்றனர். அப்போது எனக்குப் பின்னாலிருந்து அந்தக் குரல்கள் கேட்டன.
” பதில் சொல்ல முடியாது”      “ இல்ல; நீ சொல்லித் தான் ஆகணும்”
“ உனக்குச் சொல்லணும்னு அவசியமில்ல”  “ ஏன்.? “ 
“ தண்ணி போட்டுட்டு வம்பு பண்றவனுக்கெல்லாம் சொல்ல முடியாது.”
இந்த வாக்குவாதக் குரல்கள் வழக்கமான அளவை விடக் கூடுதல் ஆன போது கூட்டம் கூடி விட்டது.
ஒரு நடத்துநருடன் பயணி ஒருத்தர் நடத்திய வாக்குவாதம் சுவாரசியமான திருப்பத்தைச் சந்தித்த போது நானும் கூட்டத்தில் ஒருத்தனாக இருந்தேன்.
”தெரியும்னா தெரிந்ததைச் சொல்லுங்க” என்றேன். “ தெரிஞ்சாலும் இந்த மாதிரியான ஆளுகளுக்குச் சொல்ல முடியாது ” என்றார் நடத்துநர்.
”குடித்திருக்கிறார்; அதனால் சொல்ல மாட்டேன் ” என்ற நடத்துநரின் வாதம் சரியானதாகத் தோன்றவில்லை. இப்படி நான் யோசிச்சுக் கிட்டு இருக்கும் போதே, அவரிடம் சண்டை போட்ட அந்தப் பயணி,
“ஒரு பப்ளிக்குக்குப் பதில் சொல்ல வேண்டிய கடமை, ஒனக்கு இருக்கு” எனத் திரும்பவும் குரலை உயர்த்தினார். சுற்றியிருந்த பலரும், ”தெரியும்ன்னா சொல்லுங்க; தெரியலன்னா விட்டுடுங்க; ஏன் நீங்க வம்ப வளக்கிறீங்க.” என்றபோது நடத்துநரின் சுருதி மாறியது.
“நானா வம்பு வளக்கிறேன்; இந்த ஆளு தான் தண்ணிய போட்டுட்டு ஏங்கிட்டெ சண்டைக்கு வாரான்; டைம் கீப்பர்கிட்ட கேட்க வேண்டிய கேள்விய ஏங்கிட்ட கேட்கிறான்” என்றார்.
” இந்தப் பதிலை நீங்க முதல்லேயே சொல்லி இருக்கலாமே என்று நான் சொன்னேன். தண்ணி போட்டிருப்பதால் அவருக்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றதால் தானே பிரச்சினை “ என்று நான் சொன்ன போது சுற்றியிருந்தவர்களும் தலையை ஆட்டினார்கள். நடத்துநர் வேறு எதுவும் பேசாமல் போய்விட்டார். சண்டை போட்ட அந்த நபர் தனக்கு ஆதரவு கிடைக்கிறது என்று தெரிந்தவுடன் அங்கிருந்தவர்களிடம் தன்னுடைய நியாயங்களை விளக்கத் தொடங்கினார். அவர் பேசும் போது குடித்திருந்தார் என்பதற்கான வாசனை வந்தது. ஆனால் அவரது பேச்சில் குழப்பம் எதுவும் இல்லை.
”எனக்குப் பக்கத்தில் இருந்த பெண் கேட்ட போது இதே ஆள் வண்டி வரும்; ஆனா அரை மணி நேரம் கழிச்சு வரும் என்று சொன்னான். நான் கேட்ட போது சொல்ல முடியாது என்றான். நான் சொல்லியே ஆக வேண்டும்” என்றேன். ஒரு அரசாங்க ஊழியன் பொதுமக்களின் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாதுன்னு சொல்லலாமா? என்று கேட்டார். அவரது கேள்வியில் ஓரளவு தர்க்கம் இருப்பதாகவே எனக்குப் பட்டது. அவர் குடித்திருந்ததால் அவரோடு உரையாடவும் விரும்பவில்லை.
சாதாரண குடிமக்களுக்கு உள்ள உரிமையைக் குடித்து விடுவதால் ஒரு மனிதன் இழந்து விடுகின்றானா? இப்படி நான் நினைத்துக் கொண்டிருக்கும் போதே அந்த அசம்பாவிதம் நடந்து விட்டது. அங்கிருந்து போன நடத்துநரோடு சேர்ந்து நாலைந்து பேர் வந்தனர். அவர்களும் நடத்துநர்களாகவும் ஓட்டுநர்களாகவும் இருக்க வேண்டும். வந்தவர்கள், நடத்துநரோடு வாக்குவாதம் செய்த அந்த நபரை இங்குமங்குமாகத் தள்ளி விட்டனர்.  ஆனால் அடிக்கவில்லை. ஏற்கெனவே குடித்திருந்ததால் தடுமாறிக் கீழே விழுந்து விட்டார். வந்தவர்கள் திட்டிக் கொண்டே கிளம்பினர். ”குடிச்சுட்டு கலாட்டா செய்றவனுக்கு என்னடா பதில் சொல்ல வேண்டியிருக்கு?” என்ற சத்தமாகச் சொல்லி விட்டுப் போனார்கள்.
தான் செல்ல வேண்டிய இடத்திற்குப் பேருந்து இருக்கிறதா? இல்லையா? என்ற தகவலைத் தெரிந்து கொள்ள முயன்ற ஒருசாதாரணக் குடிமகன் மது அருந்தியதால் குற்றவாளியாக ஆக்கப்பட்டுத் தண்டிக்கப் பட்டதை அனைவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கவே முடிந்தது. பொது இடத்தில் குடித்துவிட்டு நடமாடுவது தண்டனைக் குரிய குற்றம் என்று அரசாங்கம் சொல்லவில்லையே? குடித்தவர்களுக்கான தண்டனையை வழங்கும் பொறுப்பு யாருடையது?
இப்படியான கேள்விகள் எழுந்தன. உரிமைகளைக் கேட்பவர்களுக்கான தண்டனைகள் எப்படியெல்லாம் கிடைக்கின்றன என நினைத்துக் கொண்டிருந்த போது நான் செல்ல வேண்டிய இரவுப் பேருந்து வந்தது. கொஞ்சம் கலக்கத்துடன் ஏறி வந்து விட்டேன்.
அந்த நிகழ்ச்சியோடு ஒத்துப் போகும் இன்னொரு நிகழ்ச்சி  திருநெல்வேலி பேருந்து நிலையத்தில் நடந்த போது தான் சென்னை நிகழ்ச்சியும் நினைவுக்கு வந்தது. ஒரே நாடகத்தின் இரண்டு அரங்கேற்றம் போல மனதில் விரிந்தன.
திருநெல்வேலி பேருந்து நிலையத்தில் அந்தப் பயணியை,  ஒரு ஓட்டுநர் ஊர்ப் பெயர்கள் எழுதப் பெற்ற பலகையால் பின் புறத்தில் தாக்கிய போது தடுமாறிக் கீழே அவர் விழுந்த போது நான் அதன் பார்வையாளன் ஆனேன். நிகழ்ந்த நேரம் இரவு மணி பத்துக்கும் மேல் தான்.
அந்தப் பயணி பேருந்துகள் நிறுத்தப் படும் இடத்தைக் கழிப்பறையாகக் கருதியிருக்கிறார். பலரும் கண்டும் காணாமல் சென்று கொண்டிருக்க, அந்த ஓட்டுநர் ” அவரிடம் இது ஒண்ணும் கக்கூஸ் இல்ல” என்று ஓங்கிக் குரல் கொடுத்துள்ளார். பொது இடத்தைச் சுத்தமாக வைத்துக் கொள்ளத் தூண்டும் விதமாகப் பொதுமக்களிடம் வலியுறுத்தும் அந்த ஓட்டுநரின் செயல் பாராட்ட வேண்டியது என்றாலும், அதனைச் செயல்படுத்த அவர் கையாண்ட முறை மிகவும் கண்டிக்கத் தக்கது.
பயணியின் செயலைச் சுட்டிக்காட்டிய ஓட்டுநரிடம் அந்தப் பயணி ” நீ யாருவே இதெல்லாம் கேக்கிறதுக்கு “ என்று சொன்ன போதுதான் அவர் அப்படிச் செய்தார் என்றாலும் தண்டிக்கும் அதிகாரம் அவரிடம் இல்லை என்பதை அவர் மறந்தது எப்படி?
ஒரு அரசாங்க ஊழியரைப் பார்த்து ஒரு சாதாரண மனிதன் ”நீயார் இதைக் கேட்க?” என்று சொன்ன போது அவரது தன்னிலை தாங்கிக் கொள்ளவில்லை.  கையில் வைத்திருந்த பலகையால் ஓங்கி அடித்தே விட்டார்.
அடிபட்டவர் விழுந்த இடத்திலிருந்து நூறு அடி தூரத்தில் கழிக்கப் பட்ட மலமும் சிறுநீர்த் தடங்களும் திட்டுத் திட்டாகக் கிடந்தன. அந்தப் பேருந்து நிலையத்தின் பல இடங்கள் மலக் குவியல்களாகவும் மூத்திரப் பிறையாகவும் இருப்பதை எந்த நடத்துநரும் ஓட்டுநரும் கண்டு கொண்டதில்லை. அடிபட்டவர் கிடந்த இடத்திற்கும் அக்குவியல்களுக்கும் இடையில் உள்ள தூரம் அதிகம் இல்லை; கொஞ்சம் தான்.  அடிப்பட்டவர் குடித்திருந்தார். குடித்ததால் கழிப்பறையைத் தேடிப் போக வேண்டும் என்று தோன்றாமல் போயிருக்க வேண்டும்
பொதுவாகக் குடிப்பவர்கள் தங்களை மறக்கிறார்கள் என்பது உண்மை. தாங்கள் செய்ய வேண்டியதைச் சரியாகச் செய்வதில்லை; தாங்கள் பேசுவது இடம், பொருள், ஏவல் அறிந்து பேசப்படும் பேச்சல்ல என்பதையும் உணர்வதில்லை. ஆனால் இந்த சமூகத்தில் யார் யாருக்கு என்னென்ன கடமைகள் உள்ளன; தனிமனிதனாகிய அவருக்கு என்ன உரிமைகள் உள்ளன என்பதையெல்லாம் தெளிவாக நினைவில் வைத்துக் கொண்டே  பேசுகின்றனர்.
குடிப்பது உடல் நலத்திற்குத் தீங்கு என்பதும், குடித்துவிட்டுப் பொது இடங்களில் உலாவும்போது தவறிழைக்க வாய்ப்புண்டு என்பதும் இவ்விரு நிகழ்ச்சிகளிலும் வெளிப்பட்ட உண்மை. குடிப் பழக்கம் தீது என்பதை ஒத்துக் கொள்ளலாம். ஆனால் அதே நேரத்தில் குடித்தவர்களுக்கான தண்டனையை யார் வேண்டுமானாலும் வழங்க முடியுமா? அதிலும் அரசாங்க ஊழியர்கள் என்ற அதிகாரத்தை வைத்திருப் பவர்களுக்கு இந்த அதிகாரமும் தரப்பட்டுள்ளதா? குடி தீது; குடித்தவர்களை நமது விருப்பப்படி தண்டிப்பது நன்றன்று; அதைவிடத் தீது. நிச்சயம் அது சட்டமீறல்.
குடித்துவிட்டு உரிமைகளைக் கேட்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்பதை நமது மனம் பொதுப் புத்தி சார்ந்து ஏற்றுக் கொள்கிறது என்பதென்னவோ உண்மை. கேள்வி கேட்கும் உரிமையை இழப்பவர்களாக ஆக்குவதற்காகத்தான் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டுள்ளதோ?.

                                               

கருத்துகள்

குட்டி மணி இவ்வாறு கூறியுள்ளார்…
Ootri kodupathum arasuthaan, onki adipathum arasuthaan.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெரியார்- எப்போதும் பேசுபொருள்

பெரியார்மண்ணும் பிராமணியத்தின் இயக்கமும்.

நாத்திகம் என்னும் ஆன்மீகம்