பேரங்காடிப் பண்பாடு

"அரிசி குழஞ்சு போயிராதுல்ல” "இல்லங்க ; இது பழைய அரிசி,குழையாது” “ ரொம்பப் பழசுன்னா வேணாம்; வாடை வரும்” “ அய்யோ அவ்வளவு பழசு இல்லீங்க; வடிச்சுப் பாருங்க. மணக்கும்” அரிசிக் கடைக்காரருக்கும் வீட்டுத் தலைவிகளுக்கும் இடையில் நடக்கும் இந்த உரையாடலில் இடையில் புகுந்து “ வடிச்சுப் பார்க்கவா ; குக்கரில் அரிசியைப் போட்ட பிறகு சோத்த வடிக்கிற வேலை எங்கே இருக்கு” கணவர்கள் கேட்டால் சிரித்து விட்டுச் சொல்வார். “எடுத்துட்டுப் போங்க; திருப்தி இல்லையின்னா, திருப்பிக் கொண்டு வாங்க; வேற அரிசி தாரேன்” இந்த வாசகம் வரும் வரை பேசிக்கொண்டு இருப்பது தான் நமது வாடிக்கை. ’அரிசி சீக்கிரம் கொழஞ்சு போகுது’ ன்னு சொல்லி மாற்றி வாங்கி யிருக்கிறோம்; சில சமயம் ’வாடை வருது’ன்னு சொல்லி மாற்றியிருக்கிறோம். சில சமயம் ’பழுப்பு அரிசி நிறைய இருக்குது’ ன்னு சொல்லி; சிலசமயம் ’கல்லு இருக்குது’ன்னு காரணம் காட்டி… அரிசிக்கடையில் அரிசியை மாற்றிக் கொள்ள எதாவது காரணம் கிடைக்காதா என்று தேடித் தேடிச் சொல்லி மாற்றி விடும் குடும்பத்தலைவிகள் இருக்கத் தான் செய்கிறார்கள். அரிசிக் கடையில் மட்டுமல்ல; தேங்காயெ உடைச்சுப் பார்த்து விட்...