எல்லோரும் ஓர் விலை; எல்லோரும் ஓர் நிறை எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்பது கவி பாரதியின் கவிதை வரிகள். இத்தகைய கனவு வரிகளின் பின்னணியில் ‘வேறுபாடுகளற்ற சமுதாயம்’ என்னும் பெருங்கனவு இருக்கிறது என்பதை நாமறிவோம். ரசித்து ரசித்துச் சொல்லப்படும் இந்தக் கனவை முன் மொழிந்த உலகச் சிந்தனையாளர்கள் பலருண்டு. மனித சமுதாயம் தன்னிடத்தில் வைத்திருக்கும் வேறுபாடுகள் பலவிதமானவை. தேசங்களில் வல்லாண்மை மிக்க தேசம் என்பதில் தொடங்கி, பாலினம், மொழி, சமயம் , இனம், வர்க்கம், சாதி எனப் பாரதூரமான வேறுபாடுகள் அதனை அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது. இதனை உணரும் ஒவ்வொரு மனிதனும் அதை மாற்ற வேண்டும்; முடிந்தால் இல்லாமல் ஆக்க வேண்டும் என நினைக்கிற நிலையில் தான் முன்னோக்கிச் சிந்திக்க மனிதர்களாக ஆகிறார்கள். அவ்வாறு இல்லாமல் இருக்கிற வேறுபாடுகளைக் கூர்மைப் படுத்தி, சமூகத்தைப் பிளவுகள் கொண்ட குழுமங்களாக ஆக்கி, ஒன்றோடொன்று மோதிக் கொண்டு ரத்தம் சிந்த வைக்க வேண்டும் என நினைக்கும் மனிதர்கள் அடிப்படை வாதிகள் என அடையாளப்படுத்தப் படுகின்றனர். அவர்கள் சார்ந்த குழுவும் கூட்டமும் உயர்ந்தது எனக் கருதிக் கொள்வதாலும், தங்கள் கூட்டம் மட்ட...