கற்றதனாலாய பயன் : சிவகாமியின் அன்றும் இன்றும் கொல்லான்
தமிழகத்தில் தொடர்ந்து விவாதிக்கப்படும் பொருண்மைகளில் ஒன்று கல்வி. கடந்த ஓராண்டாக சமச்சீர்க் கல்வி என்ற சொற்றொடரைப் பத்திரிகைகள் அச்சிட்டுக் கொண்டே இருக்கின்றன. சமச்சீர்க் கல்வி அனைவருக்கும் சமமான கல்வி வாய்ப்பை வழங்கப் போகிறது என்பது ஒரு புறம் சரியானது தானே என்று தோன்றினாலும், இன்னொரு புறம் இப்போது கிடைக்கும் வாய்ப்பையும் இல்லாமல் ஆக்கி விடுமோ என்ற அச்சமும் உண்டாகாமல் இல்லை.
இரண்டு மூன்று தலைமுறைகளாகக் கல்வியின் பயனை அனுபவித்து அதன் சுவையை ருசித்துக் கொண்டிருக்கும் நடுத்தர வர்க்கத்தை, உலக அளவில் போட்டி போடும் கூட்டமாக மாற்றும் நோக்கத்தோடு தமிழ் நாட்டில் இயங்கும் மெட்ரிக் பள்ளிகளும், மைய அரசுப் பள்ளிகளும் பாடத்திட்டத்தைத் தயாரித்துக் கடந்த பத்துப் பதினைந்து ஆண்டுகளாக நடத்தி வருகின்றன. அவர்களோடு போட்டி போட்டுப் படிக்கவும் முடியாமல், அவர்கள் பேசும் ஆங்கிலத்தில் பேசவும் முடியாமல் கிராமப் புற மாணவர்கள் கல்லூரிகளில் நுழைந்தவுடன் அடையும் தாழ்வு மனப்பான்மையும், தேர்வுகளில் தவறித் திரும்பவும் தொடங்கிய இடத்திற்குச் சென்று அங்கும் பொருந்த முடியாமல் போவது நடந்து கொண்டிருக்கிறது. இந்தப் பின்னணியில் சமச்சீர்க் கல்வி மீதான ஐயங்கள் போக்கப் படவில்லை; ஆனால் அடுத்தாண்டு முதல் அத்திட்டம் முதல் வகுப்பிலும் ஆறாம் வகுப்பிலும் அறிமுகம் ஆகப் போகிறது.
விவாதங்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் ஆனால் பின் வாங்கும் பேச்சுக்கே இடமில்லை- என்ற நிலை சமச்சீர்க் கல்வி குறித்து மட்டும் அல்ல. பொதுவான போக்காகவே இருந்து கொண்டிருக்கிறது. பயிற்று மொழி குறித்து நமது அரசுகளின் முடிவுகள் என்ன? அந்த முடிவுகளை எடுப்பவர்கள் அரசியல் வாதிகளா? அல்லது அதிகாரவர்க்கமா? என்பது தெரியவில்லை ; மொழிப்பாடங்களில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள் பற்றிய தீவிரக் கவனம் செலுத்த நமது கல்வித்துறை முன் வந்ததில்லை.
தொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி வரை அரசியல்வாதிகளும் அதிகார வர்க்கமும் எடுக்கும் முடிவுகளின் பின்னால் இருக்கும் நோக்கங்கள் என்னவாக இருக்கும் என்ற கேள்விக்குப் பலர் பலவிதமாகப் பதிலைத் தரக்கூடும். கல்வியாளர்கள் தரும் பதிலோடு ஒரு படைப்பாளி தரும் பதில் ஒத்துப் போகும் என்று சொல்ல முடியாது. ஒரு பாமரனுக்கும் படைப்பாளிக்கும் கல்வியின் தேவையைப் பற்றிய பார்வையில் கூட வேறுபாடுகள் தவிர்க்க முடியாதது.
இந்தியாவில் கல்வியின் உயர்ந்த பட்ச அறிவாகக் கருதப்படும் ஐ. ஏ. எஸ். தேர்வை எழுதி, அரசாங்கத்தின் கேந்திரமான துறைகளில் பணியாற்றும் போதே தன்னை ஒரு எழுத்தாளராக அடையாளப்படுத்துவதைத் தொடர்ந்து செய்து வந்தவர் சிவகாமி. பழையன கழிதலும்… , ஆனந்தாயி என்னும் முக்கியமான யதார்த்த நாவல்களை எழுதியதின் பின்னனியில் சிறப்பான படைப்பாளியாக அறியப்பட்ட அவர், தனது கதைகளின் களன்களாகவும் பாத்திரங்களாகவும், கிராமத்திலிருந்து நகரத்திற்கு நகரும் நிலையையே எடுத்துக் கொண்டுள்ளார்.கதாபாத்திரங்களில் பலவும் கிராமத்திற்கும் நகரத்திற்கும் இடையே ஊடாடும் பாத்திரங்கள் தான் என்பதை அவரது சிறுகதைத் தொகுப்புகள் காட்டுகின்றன.
தான் படிப்பின் காரணமாக அதிகாரத்தின் உச்சமான அதிகாரியாக திகழ்ந்த நிலையிலும், இந்தக் கல்வியின் மீதான அவரது விமரிசனத்தைக் கூர்மையாகப் பதிவு செய்துள்ளார். நடைமுறையில் இருக்கும் கல்வி, தவறுகளைத் தட்டிக் கேட்கும் குணத்தை அழித்து எல்லாவற்றிற்கும் ஒத்துப் போகும் சகிப்பு மனநிலையையே உருவாக்கும் நோக்கும் கொண்டது என்பது சிவகாமியின் விமரிசனம். அந்த விமரிசன நிலைபாட்டைச் சொல்லும் கதையாக எழுதப்பட்டது அன்றும் இன்றும் கொல்லான் என்ற தலைப்பிட்ட கதை.
கிராமத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் ஒருவனைப்( தனவேல்) படித்தவனின்( கேசவன்) எதிரிணையாக நிறுத்துவதன் மூலம் தனது கல்வி குறித்த விமரிசனக் கருத்தியலைக் கதையாக்கியுள்ளார். நகரத்திலிருந்து கிராமத்திற்கு வந்திருக்கும் தனவேல் சந்திக்கும் மனிதர்களையும், அவர்களின் பிரச்சினைகளில் அவன் எடுக்கும் நிலைபாட்டையும் எழுதிக் காட்டுவதன் மூலம் தனது சார்பினைச் சிவகாமி வெளிப்படுத்துகிறார். அந்தச் சார்பின் வழியாகவே அவரது விமரிசனம் உணர்த்தப்படுகிறது. இனி கதையின் பகுதிகளுக்குள் நுழையலாம்:
பட்டணத்திலிருந்து கேசவன் வந்திருந்தான். கல்லூரியில் பேராசிரியர். அந்தக் கிராமத்துக்கு முன்னுதாரணம். பல குடும்பங்களின் லட்சிய அளவுகோல். சிவந்த மெல்லிய உடம்பு. தீட்சண்யமான பார்வை. கணீரென்ற குரல் பிசிறில்லாத வார்த்தைப் பெருக்கு.
”விடியற்காலையில் திண்ணையில் கட்டில் போட்டு படுத்திருந்தான். செல்லம் செருமிக் கொண்டே வந்தாள்”என்ற அறிமுகத்துடன் தொடங்கும் கதை நேரடியாகப் பிரச்சினைக்குள் அவனைக் கொண்டுபோய்ச் சேர்க்கிறது.
“ ஏந்தம்பி, நீங்கள்ளாம் இப்பிடி பெரியப்படிப்பு படிச்சிட்டிருக்கீங்களே, இந்தப் பயலுக்கு புத்தி சொல்லக் கூடாது? ராத்திரி கூட எவனையோ சினிமாக் கொட்டாயில வாயில ரத்தம் வர்ற மாதிரி இளுத்துப் போட்டு உதைச்சிருக்கான். என்னடா காலை நொண்டிக்கிட்டு வாறானேன்னு பாத்தாக்க, இளுத்து மிதிச்சதுல இவன் காலு சுளுக்கிக்கிட்டாம். எங்கியாவது நடக்குமா? அடுக்குமா?”
கேசவன் சலித்துக் கொண்டே, “ கல்யாணமாகி மூணு புள்ளங்க பெத்தவனுக்கு நான் என்னம்மா புத்தி சொல்றது?” என்று வேறுபக்கம் திரும்பி படுத்தான்.
ஆனாலும் அவன் விலகிப் போய்விடவில்லை. தனவேலின் வீட்டிற்குச் செல்கிறான்.
தனவேலின் மனைவி செல்வி அவித்துத் தாளித்த தட்டை பயிறை கேசவன் முன் வைத்துவிட்டு தன் எட்டு மாதக் குழந்தைக்கு வசம்பைக் குழைத்து திருஷ்டிப் பொட்டு வைக்கக் கிளம்பினாள்.
“இருக்கட்டும், எதுக்கு இதெல்லாம்?” கேட்டுக் கொண்டே ஒருவாய் தட்டைப் பயிறை அள்ளி வாயில் போட்டுக் கொண்டான் கேசவன். அந்நேரத்தில் தன்னிலிருந்து விடுபட்டுப் போன கிராமம் தன் பழைய மனத்தோடு தன்னை ஆகர்ஷிப்பதை உணர்ந்தான்.
“சொல்லு தனவேல். ஏன் பேசாமலிருக்க?”
“ என்னத்தண்ணே பேசுறது? நீங்கதான் என்னை அயோக்யன்னு முடிவு பண்ணிட்டுப் பேசுறீங்க, என்ன பண்ணட்டும் சொல்லுங்க? – அன்னைக்கு ராத்திரி மொதாட்டம் சினிமா கலஞ்சு வெளிய வாறேன்… ஒரு அசலூர்க்காரப் பயல் குடிச்சிட்டு லுங்கியைத் தூக்கிட்டு பொம்பளங்க முன்னாடி அசிங்கமா பேசிட்டு வாறான். எல. சர்தாம் போடான்னு தள்ளியுட்டாக்க, என்னடா.. மயிலு கைலுன்னு பச்சையாப் பேசிட்டு.. வந்து பார்றா வந்து பார்றாங்கறான்.. பொறுத்து பார்த்தேன்.. தாங்கல.. வந்துச்சீ செனம்… ஐயோன்னு கையெடுத்து அளுகிற வரைக்கும் மிதிச்சுத் தள்ளுனேன்..”
“ இங்கியே இந்த எகிறு எகிறானே,, பார்த்தீங்களா தம்பி” செல்லம் குறுக்கிட்டாள்.
“ சரி.. ஏதோ குடிச்சிட்டு உளறியிருக்கான். அதுக்குப் போய் ரத்தம் வர்ற மாதிரி அடிக்கணுமா?”
“ இங்கியே இந்த எகிறு எகிறானே,, பார்த்தீங்களா தம்பி” செல்லம் குறுக்கிட்டாள்.
“ சரி.. ஏதோ குடிச்சிட்டு உளறியிருக்கான். அதுக்குப் போய் ரத்தம் வர்ற மாதிரி அடிக்கணுமா?”
“ என்னண்ணே இவ்வளவு சாதாரணமாச் சொல்றீங்க. குடிச்சா தன்னை மீறிப் பேசணுமா? வந்து பார்றா வந்து பார்றான்னு துள்ளுறான். மேல ரெண்டு அடி விழுந்ததும் ஐயோ சாமின்னு கெயையெடுத்துக் கும்பிடறானே, அது எப்பிடி?”
அடுத்த நாள் பட்டணம் கிளம்ப முடிவு செய்திருந்தான் கேசவன். தம்பி இட்லிக்காரக் கிழவி உன்னைப் பாக்கணுமாம்.” கேசவனின் அம்மா மெதுவாகச் சொன்னாள்.
“எதுக்காம்?”
“ எதுக்கு நிலத்தகராறு தான்! நான் தான் சொன்னேன். நீ ஏன் அங்க இங்க போயி அவஸ்தைப் படுற. தம்பிக்கிட்ட சொல்லு. எல்லாம் சரியாயிடும்னு. பத்திரம் பாண்டு எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு வந்திருக்கு”
“ நம்ப தம்பியாம்மா!” முதல் தடவையாகப் பார்ப்பதுபோல் மேலிருந்து கீழாக அளந்தாள் கிழவி. மல்யுத்த களத்தில் ஒரு வீரனுக்குப் பதிலாக ஓய்ந்து போன கிழவனைப் பார்த்து விட்டவள் ஏமாற்றமடைந்தாள். அவனைப் பார்த்து கும்பிட வேண்டும் என நினைத்துக் கொண்டு வந்தவள் கையெடுக்காமல் சுவரில் சாய்ந்து உட்கார்ந்தாள். “ தம்பி, நம்ப தம்பி தான்” என்று ஊக்கம் கொடுத்தாள் கேசவனின் அம்மா.
“ இந்த மாதிரி சின்னச் சின்னச் சண்டையெல்லாம் பெரிசு படுத்தக் கூடாது”
“ அப்புறம் பாரும்மா ..அந்தப் பயலுங்க கொடுவாள நோங்கிட்டு வாறானுங்க. இது சின்னச் சண்டையாம்.”
“ அந்தப் பொடிப்பயலுங்கள அடக்கிறதுக்கு ஊர்ல ஆளே இல்லியா?”
“ எல்லாம் அதுண்டு அது வேலயுண்டு போவுதுவளே. இந்தக் கிழவி செத்துத்தான் என்னா பொழைச்சாத்தான் அவங்களுக்கென்னா? நம்ப தனவேல் தம்பி வந்து, “ எலய் பசங்களா”ன்னா போதும். ‘ கப்சிப்’னு அடங்கிடுவானுங்க. அந்தத் தம்பி கூட இந்தத் தக்கம் ஏனோதானோன்னு போவுது. நீங்கான் அதுங்கிட்ட எடுத்துச் சொல்லணும். ஒண்ணும் வேண்டாம். அந்தப் பாதை வழியா ரெண்டுல மூணுல நடந்து வந்து, ‘ ஏ கிழவி’ன்னு குரல் குடுத்துட்டு போனாப் போதும்.
கிழவி பத்திரத்தை அடிமடியில் வைத்து முந்தானையால் சுற்றிக் கொண்டு எழுந்து நடந்தாள். கேசவன் தனவேல் பற்றிய யோசனையோடு எழுந்தான்.
கதையின் முடிவில் படித்த கேசவன் தனவேலின் செயல்பாடுகளைச் சரியானவை அல்ல என்று சொல்ல முடியாமல் தவிக்கும் நிலையில் நிறுத்திக் காட்டுகிறார்.அப்படி நிறுத்திக் காட்டுவதன் மூலம் இன்றைய தேவைகள் கேசவன் அல்ல; தனவேல்களே என்பதை மறைமுகமாகச் சுட்டிக்காட்டுகிறார் கதாசிரியர். பொதுவாகப் படித்து அரசாங்க வேலைக்கோ, தனியார்துறைக்கோ வேலைக்குச் செல்லும் வாய்ப்புக் கிடைப்பதன் மூலம் நடுத்தர வர்க்கமாக மாறிவிடும் மனிதர்கள் தொடர்ந்து தங்களைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறார்கள் என்பது வெளிப்படையான உண்மை.
நடுத்தர வர்க்கக் குணத்தைக் கிராமத்திற்குரியதாக ஆக்க வேண்டியதில்லை என்பதைச் சொல்லும் இந்தக் கதை சிவகாமியின் முக்கியமான கதைகளுள் ஒன்று என்பதை உணர்ந்தே எழுத்தாளர் வல்லிக்கண்ணனும் பேரா. ஆ.சிவசுப்பிரமணியனும் இணைந்து தொகுத்த சமீபத்திய தமிழ்ச் சிறுகதைகள் என்ற தொகுப்பில் இடம் பெறச் செய்துள்ளனர்.
கருத்துகள்