பின் வாங்குதல் என்னும் பேராண்மை :கந்தர்வனின் சாசனம்

எல்லோரும் ஓர் விலை; எல்லோரும் ஓர் நிறை எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்பது கவி பாரதியின் கவிதை வரிகள். இத்தகைய கனவு வரிகளின் பின்னணியில் ‘வேறுபாடுகளற்ற சமுதாயம்’ என்னும் பெருங்கனவு இருக்கிறது என்பதை நாமறிவோம். ரசித்து ரசித்துச் சொல்லப்படும் இந்தக் கனவை முன் மொழிந்த உலகச் சிந்தனையாளர்கள் பலருண்டு.

மனித சமுதாயம் தன்னிடத்தில் வைத்திருக்கும் வேறுபாடுகள் பலவிதமானவை. தேசங்களில் வல்லாண்மை மிக்க தேசம் என்பதில் தொடங்கி, பாலினம், மொழி, சமயம் , இனம், வர்க்கம், சாதி எனப் பாரதூரமான வேறுபாடுகள் அதனை அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது. இதனை உணரும் ஒவ்வொரு மனிதனும் அதை மாற்ற வேண்டும்; முடிந்தால் இல்லாமல் ஆக்க வேண்டும் என நினைக்கிற நிலையில் தான் முன்னோக்கிச் சிந்திக்க மனிதர்களாக ஆகிறார்கள். அவ்வாறு இல்லாமல் இருக்கிற வேறுபாடுகளைக் கூர்மைப் படுத்தி, சமூகத்தைப் பிளவுகள் கொண்ட குழுமங்களாக ஆக்கி, ஒன்றோடொன்று மோதிக் கொண்டு ரத்தம் சிந்த வைக்க வேண்டும் என நினைக்கும் மனிதர்கள் அடிப்படை வாதிகள் என அடையாளப்படுத்தப் படுகின்றனர். அவர்கள் சார்ந்த குழுவும் கூட்டமும் உயர்ந்தது எனக் கருதிக் கொள்வதாலும், தங்கள் கூட்டம் மட்டுமே வஞ்சிக்கப் படுகிறது என நம்புவதாலும் அடிப்படை வாதக் கருத்துக்கள் தோன்றுகின்றன. அடிப்படை வாதிகள் மனிதர்களுக்கிடையே இருக்கும் வேறுபாடுகள் தவிர்க்க முடியாதவை எனவும், அவற்றை இல்லாமல் ஆக்குவது என்பது இயலாத காரியம் எனவும் நியாயங்களை முன் வைக்கிறார்கள். இதனை முற்போக்காளர்கள் ஒத்துக் கொள்வதில்லை. வேறுபாடுகளை ஒழிக்கப் பாடுபட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.

இருக்கும் வேறுபாடுகள் நீக்கப் படவேண்டும் எனச் சொன்ன சிந்தனையாளர்களில் சிலர் அதனை எவ்வாறு நீக்குவது என்பதற்கான வழிமுறைகளையும் கூட முன் வைத்துள்ளனர். முன் வைக்கப் பட்ட அந்த வழிமுறைகளில் சில வன்முறையானவை; சில வழிமுறைகள் மென்மையானவை. ஒரு கூட்டம் அனுபவிக்கும் அடிமைத்தளை அல்லது பாரம் என்பது உணரப்படாத வரை ஆபத்தில்லை. அந்தச் சுமையும் வெக்கையும் உணரப்பட்டால், அதன் வெளிப்பாடு கோபமாகவும், வன்முறையாகவும் மாறும் என்பதை எச்சரிக்கையுடன் சொன்னவர் கார்ல் மார்க்ஸ். குறிப்பாகப் பொருளாதார வேறுபாட்டை மையப் படுத்தி, உடைமையாளனுக்கும் இல்லாதவனுக்கும் இடையே இருக்கும் கூர்மையான வேறுபாடு ஒரு கட்டத்தில் வன்முறையாக மாறுவதைத் தவிர்க்க முடியாது. உழைப்பதற்குக் கைகளையும், இழப்பதற்கு அடிமைத்தளை என்னும் விலங்குகளையும் தவிர வேறொன்றும் இல்லாத வர்களுக்குப் பொருளாதார சமத்துவத்தையும், அதிகாரத்தில் பங்கையும் பெற்று தருவதற்கான போராட்டமே புரட்சி என அடையாளப்படுத்தினார் மார்க்ஸ்.

புரட்சி என்பது முறைப் படுத்தி முன்னெடுத்துச் செல்லும் போராட்டம் என்றார் அவர். போராட்டம் புரட்சிகரமானதாக ஆகும் போது வன்முறை நிகழ்வுகள் தவிர்க்க முடியாதது என்றும் கூறினார். ஏனென்றால் உடைமை வர்க்கம் எப்போதும் தன் நலனை மட்டுமே பேணும் இயல்பு கொண்டது என்பதால், அனுபவிக்கும் உரிமைகளையும், சொத்துக்களையும் ஒரு போதும் விட்டுக் கொடுக்காது. அதனை இல்லாதவர்களுக்கும் உரிமையுடையதாக மாற்ற வேண்டும் என்றால் வன்முறை சார்ந்த போராட்டம் தவிர வேறு வழியில்லை என்பது மார்க்சின் சித்தாந்த முடிவு.

மார்க்சின் சிந்தாந்தத்தில் இருக்கும் வன்முறை வழியைப் பலரும் விரும்புவதில்லை. அதற்கு மாறாக மென்மையான முறையில் சமத்துவம் ஏற்படுத்துவது எப்படி? என யோசித்தவர்கள் சிலருண்டு. அவர்களில் உலக அளவில் முக்கியமானவராகக் கருதப்படுபவர் மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி . இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முக்கிய ஆளுமையாக இருந்து, ஆங்கிலேயர்கள் இந்த நாட்டை அடிமைப் படுத்தி ஆள்வது நியாயமற்றது என்பதைப் பேச்சுவார்த்தைகள் வழியாக உணரச் செய்தவர். உலக நாடுகள் பலவற்றைப் பிரிட்டானியர்கள் கைப்பற்றிக் காலனிய நாடுகளாக வைத்திருப்பதில் என்ன நியாயங்கள் இருக்க முடியும்? என்ற தார்மீகக் கேள்வியை அவர்களுக்கு உண்டாக்கி, அவர்களே இங்கிருந்து வெளியேறி விட வேண்டும்; அதுவே நியாயமான நடைமுறை என்று எச்சரிக்கைகள் செய்தவர்கள். இந்த எச்சரிக்கைகளை அவர் முன் வைக்கும் போது வன்முறை வழிக்குப் பதிலாகச் சொந்த நாட்டு மனிதர்களைத் தனக்குப் பின்னால் திரட்டிக் கொண்டு, அதை அகிம்சை மூலமாக முன் வைத்தார். அகிம்சை வழிக்கு ஆங்கிலேயர்கள் செவி சாய்க்கவில்லை என்றால், வன்முறைகள் வெடிக்கும் என்பதையும் மறைமுகமாகவே அவர் உணர்த்தவே செய்தார். ஆங்காங்கே இந்திய சுதந்திரப் போரில் நடந்த வன்முறைப் போராட்டங்களைத் தனது ஆளுமையால் அடக்க முடியும் என்பதை ஆங்கில அரசுக்கு உணர்த்திக் காட்டினார். அதனை அவர்கள் புரிந்து கொண்டு பின் வாங்காவிட்டால் ஏற்படும் பேரழிவுக்குப் பொறுப்பேற்க வேண்டியவர்களாக ஆவார்கள் என்பதையும் வட்ட மேசை மாநாடுகள் வழியாக உணர்த்தினார். அதை உணர்ந்த பிரிட்டானிய அரசு 1947 இல் பின் வாங்கிக் கொண்டு காலனிய இந்தியாவைச் சுதந்திர இந்தியாவாக அறிவிப்புச் செய்து விட்டு வெளியேறியது. இது இந்திய சுதந்திரப் போராட்டத்தின் ஒரு பகுதி வரலாறு.

தேச அளவில் நடக்கும் இத்தகைய வரலாறுகளைப் போல ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு உடைமையாளனும் நடந்து கொண்டால் சமத்துவம் என்னும் பொன்னுலகக் கனவு தானாகவே நடந்து விடத்தானே செய்யும் எனக் கனவுகள் கண்ட எழுத்தாளர்கள் பலருண்டு.
வேறுபாடுகள் அற்ற சமத்துவ உலகத்தை உருவாக்குவதில் தங்களின் எழுத்தும் பங்காற்ற வேண்டும் என்ற இலக்கியக் கொள்கையை வரித்துக் கொண்டு எழுதும் முற்போக்கு எழுத்தாளர்களுள் முக்கியமான சிறுகதைகளை எழுதியவர் கந்தர்வன்.

பொருளாதார வேறுபாடு என்ற மையப்புள்ளியையும், இல்லாமையின் காரணமாக அனுபவிக்க நேரிடும் துயரங்களையும் தனது கதைப் பொருளாகக் கையாண்டதில் தனி முத்திரை பதித்தவர் அவர். அவரது மரணத்துக்குப் பின் அவருடைய எல்லாக் கதைகளையும் உள்ளடக்கிய தொகுதியாக கந்தர்வன் கதைகள் வெளிவந்துள்ளது. அந்தத்தொகுப்பில் உள்ள சாசனம் என்னும் கதையை இயக்குநர் மகேந்திரன் இந்திய அரசின் நிதி உதவியுடன் திரைப்படமாக ஆக்கியிருக்கிறார். அந்தக் கதை இப்படித் தொடங்குகிறது:

அப்பா வெளியூருக்கு போகையில் வண்டிக்குள் யார் பேச்சுக் கொடுத்தாலும், எவ்வளவு முக்கியமாக அது இருந்தாலும் தலையை வெளியே நீட்டி அந்தப் புளிய மரத்தை ஒரு தடவை பார்த்துக் கொள்வார். ஊர்க்கோடியில் குறவர் குடிசைகளுக்கு மத்தியில் பிரம்மாண்டமான மரம் அது. அடியில் பன்றிகள் அடைந்து உரம் கொடுக்க ஊர் பூராவிலும் உள்ள மரங்களில் செழித்துக் கொழித்து நிற்கும் அது. அப்பாவுக்குச் சொந்தமான மரம்.
ஒரு புளிய மரத்தை மையமாக்கித் தொடங்கும் அந்தக் கதையின் முடிவு இவ்வாறு இருக்கிறது.: கூட்டி வந்த ஆள்களைத் திருப்பியழைத்துக் கொண்டு தலையைச் சாய்த்து குனிந்து நடந்து வீடு வந்து சேர்ந்தார். அதற்கப்புறம் அப்பா ஆள்பத்தி அறைக்குள் நுழைந்து பெட்டியைத் திறந்து சாசனம் எதையும் எடுத்துப் பார்க்கவே இல்லை.

கதையைச் சொல்லும் இளைஞன், தனது தாத்தாவுக்கு எப்படிச் சொத்துச் சேர்ந்தது; அதை எப்படித் தனது தந்தை உரிமையாகவும் உடைமையாகவும் ஆக்கினார் என்று விவரிக்கும் விதமாகக் கதை விரிந்து நீள்கிறது.

அப்பா நடந்திருக்க வேண்டிய நடையையெல்லாம் தாத்தா நடந்தார். சமஸ்தானத்தில் தாத்தா இந்தப் பிரதேசத்தின் பேஷ்கார். மஹாராஜா இந்தப் பக்கமாய் ஒரு முறை திக்விஜயம் செய்தபோது தாத்தா ஒவ்வொரு வேளை விருந்தையும் ஒரு உற்சவமாய் நடத்தியிருக்கிறார். மஹாராஜாவின் நாக்கு அதுவரை அறிந்திராத ருசியும் பண்டமும் விருந்துகளில். பரிவாரங்கள் தங்கள் வயிறுகளைத் தூக்கிச் சுமக்க வேண்டிய நிலை.

மரியாதை காட்டி வெகுவாய்ப் பின்னால் வந்து கொண்டிருந்த தாத்தாவை அழைத்து விரலை அவ்வப்போது நீட்டிக் கொண்டே வந்தார் மஹாராஜா. பின்னால் அந்த நிலங்களெல்லாம் தாத்தாவுக்குச் சாசனமாய் வந்தன.

தாத்தா அரண்மனைக்குப் போய் சாசனங்களையும் பட்டயங்களையும் வாங்கி வந்த நாளிலிருந்து எட்டு நாட்களுக்குள் இருபத்தோரு கிராமங்களில் ஆள்களைத் திரட்டினார். தங்களுடையதென்று எண்ணி உழுதுகொண்டிருந்த குடியானவர்களை நிலங்களிலிருந்தும் ஊர்களிலிருந்தும் மஹாராஜாவின் சாசனங்களைக் காட்டி விரட்டினார். அடிதடிகளும் நாலு கொலைகளும் நடந்ததாகப் பேச்சுண்டு.

தாத்தா கையைப் பிடித்துக் கொண்டு அப்பா நடக்கையிலேயே மஹாராஜா இந்தியப் பிரஜையாகி விட்டார். சாசனங்களையும் பட்டயங்களையும் அப்பா கையில் ஒப்படைத்துவிட்டுத் தாத்தா கிழக்குக் காட்டில் எரிந்த போது முதல் தேர்தல் முடிந்து ஓட்டுக்களை எண்ணிக் கொண்டிருந்த நேரம்.

இரும்புப் பெட்டி அறையின் கிழக்கு மூலையில் இருக்கிறது. அப்பா உத்திரத்தையோ தூணையோ நிலைப் பாய்ச்சாகக் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தால் ஆழமான யோசனையிலிருக்கிறாரென்று அர்த்தம். அது முடிந்ததும் அறைக்குள் நுழைந்து அந்த இரும்புப் பெட்டியைத் திறப்பார். அதற்குள்ளிருந்து பழைய சாசனங்களையும் பட்டயங்களையும் பத்திரங்களையும் பூக்களை எடுப்பது போல எடுப்பார். மேல் துண்டால் தூசி தட்டுவார்.

ஊர்க்கோடி புளிய மரம் தளதளவென்று நிற்கிறது. அதிலிருந்து தான் வருசத்திற்குண்டான புளி வருகிறது. ஆனால் ஒப்படைத்துவிட்டுப் போன சாசனங்கள் பத்திரங்கள் எதிலும், ஏன் ஒரு சின்னத்துண்டுக் காகிதத்திலும் கூட இந்த மரத்தைப் பற்றி ஒரு வார்த்தை இல்லை.
அப்பாவின் குரலைக் கேட்டதும் குடிசைக்குள்ளிலிருந்து ஒரு கிழவி கண்ணில் பூ விழுந்து பார்வை தெரியாமல் கம்பூன்றி வெளியில் வருவாள். குறவர் கூட்டத்திலிருந்து விலகித் தனியாய் ஆகாயத்திலிருந்து வந்து பிறந்தது போல் கிழவியின் மகள் தாத்தா ஜாடையில் தாத்தா நிறத்தில் வந்து நிற்பாள். அப்பாவுக்கும் அந்தப்பொம்பிளைக்கும் பதினைஞ்சு வயது வித்தியாசமிருக்கும்; சின்னவள்.

வருசா வருசம் புளியம்பழ உலுக்கல் அப்பா முன்னால் விமரிசையாய் நடக்கிறது. மூடை மூடையாய்ப் புளி வீட்டுப் பட்டாளத்துக்கு வருசத்துக்கு. புளியம்பழ உலுக்கலுக்கு முதல் நாளே அப்பா ஆள் சொல்லி விடுவார். மறுநாள் காலை அப்பா போகுமுன்னால் பன்றிக் கழிவுகளைக் கூட்டிப் பொட்டலாக்கி வைத்திருப்பார்கள்.

ஒரு வருசம் உலுக்கலின் போது கிழவி மரத்தைத் தொட்டு அழுது கொண்டிருந்த போது மகள் புருசன், “ஒங்க ஆத்தாளை இங்கிட்டுக் கூப்பிடு, அசிங்கமாயிருக்கு; சனம் பூராவும் வேடிக்கை பார்க்குது” என்று கோபமாய்ச் சொன்னான். அந்தப் பொம்பிளை தயங்கியது. “ கூட்டிக் கிட்டு வரப்போறியா இல்லையாடி” என்று எல்லோருமிருக்கக் காலால் ஒரு உதை விட்டான்.


அடுத்த வருசம் வழக்கம் போல் மறுநாள் புளியம்பழம் உலுக்க வரப்போவதாகச் சொல்லியனுப்பியிருந்தார் அப்பா. மறுநாள் பத்துப் பேரோடு மரத்தடிக்குப் போகையில் தரையெங்கும் பன்றிக் கழிவுகள் எங்கும் அசிங்கமும் நாற்றமும். கயிற்றுக் கட்டிலில் கிழவி உட்கார்ந்திருந்தாள். யாரோ வம்பாய் உட்கார்த்தி வைத்திருப்பது போலிருந்தது.அந்தப் பொம்பிளை “ இனிமேற்பட்டு இந்த மரத்தை நாந்தான் உலுக்குவேன். இதிலே எனக்கு பாத்தியதை உண்டு..” என்று பேசத் துவங்கியது. அப்பாவுக்குக் கால் நடுங்கியது. “ போதும் போதும். பேச்சை நிறுத்து” என்று அதற்கும் அப்பால் அந்தப் பொம்பிளை பேசப் போவதை பதறிப்போய் நிறுத்தினார்.

பெருந்தனக்காரக் குடும்பத்தின் நிகழ்காலத் தலைமுறை இளைஞர்களைக் கதைசொல்லிகளாக ஆக்கிய பல எழுத்தாளர்கள், அத்தகைய குடும்பத்தின் வீழ்ச்சியின் சோகத்தை வாசகர்களிடம் கொண்டு போய்ச்சேர்த்து அனுதாபம் தேடும் தன்மை கொண்ட கதைகளை எழுதியுள்ளனர். ஆனால் கந்தர்வனின் இந்தக் கதை தங்கள் குடும்பத்தின் உடைமைகள் பாடுபட்டுச் சேர்த்தன அல்ல என்பதைச் சொல்வதோடு, உடைமையாளர்களாக இருந்ததனால், பாவப்பட்ட மனிதர்களிடம் பாலியல் சார்ந்து அதிகாரம் செலுத்தியவர்களாகவும் இருந்தனர் என்னும் விமரிசனத்தையும் வைக்கிறது.

சொந்த சாதி விமரிசனமும், சொந்த பந்தங்களின் அதிகாரத்தைக் கேள்விக்குள்ளாக்கிப் பின் வாங்குபவர்களாக அவர்களைப் படைப்பதுமே நிகழ்காலத்தின் தேவை. அந்தப் பின் வாங்கல் சாத்வீகமாகவே நடந்தது எனக் காட்டும் கந்தர்வனின் சாசனம் தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ள கதைகளுள் ஒன்று.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெரியார்- எப்போதும் பேசுபொருள்

பெரியார்மண்ணும் பிராமணியத்தின் இயக்கமும்.

நாத்திகம் என்னும் ஆன்மீகம்