அறிவின் பரிமாணங்கள்: நாஞ்சில் நாடனின் வாய் கசந்தது

ஐரோப்பாவின் அறிவொளிக்காலத்துக் கண்டுபிடிப்புகளும்,தொழிற்புரட்சியும் அவற்றின் விளைவு களான நவீனத்துவ மனநிலையும், உலக மனிதன் என்ற சிந்தனைப் போக்கும் இன்று விமரிசனங்களுக்குள்ளாகிக் கொண்டிருக்கின்றன. நிகழ்காலத்து உலகையும் சமூகங்களையும் புரிந்து கொள்ள ஐரோப்பிய அறிவு வாதம் பயன்படாது எனக் கூறும் விமரிசனங்கள் சில கவனத்தில் கொள்ளத் தக்கனவாக இருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை.

பெரும்பான்மை, பெருங்கூட்டம், என்பனவற்றையே அளவுகோலாகக் கொண்டு மையநீரோட்டச் சிந்தனைகளை உருவாக்கிக் கொண்டு பயணம் செய்யும் அறிவுவாதம், தங்களை முன்னிறுத்துக் கொள்ளும் வல்லமையற்ற சிறியக் கூட்டத்தையும், ஓரத்து மனிதர்களையும் பொருட்படுத்து வதில்லை என்பது முக்கியமான விமரிசனங்களில் ஒன்று. கவனத்தில் வராதவர்களின் கதைகளைப் பேசும் சொல்லாடல்களை வலியுறுத்தும் பின் நவீனத்தும் முன் வைக்கும் ’அறிவின் அதிகாரம்’ என்ற சிந்தனைப் போக்கு முழுமையாக ஏற்புடையதாக இல்லை என்பதையும் சொல்ல வேண்டியுள்ளது.

அறிவாளிகள் எப்போதும் சுயநலவாதிகளாக இருக்கிறார்கள்; தங்களிடம் உள்ள அறிவை அதிகாரத்துக்குச் சேவகம் செய்வதற்காகவும் தங்களின் சொகுசான வாழ்க்கையை உத்தரவாதம் செய்து கொள்வதற்காகவும் மட்டுமே பயன் படுத்துகின்றனர் என்ற வாதத்தில் பேரளவு உண்மைகள் இருந்த போதும், அறிதலின் தொடக்கமே மனிதனின் தன்னிலையை உணர்த்துகிறது என்பதைப் பின்நவீனத்துவம் மறுப்பதில்லை என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

ஐரோப்பிய மையவாதத்தை மறுப்பதாகச் சொல்லிக் கொண்டு அறிவு மறுப்பு வாதம் பேசும் சிலர், இந்தியா போன்ற நாடுகள் பாரம்பரிய அறிவுக்குத் திரும்ப வேண்டும் என்று பேசுவதில் இருக்கும் ஆபத்துக்கள் உணரப்பட வேண்டும். நடைமுறையில் இருக்கும் கல்வி இந்தியர்களின் மூளைக்குள் ஐரோப்பியச் சிந்தனையையும் அதன் வாழ்முறையின் மேன்மையையும் மட்டுமே முதன்மைப் படுத்துகிறது. எனவே அந்தக் கல்வியை நிராகரிக்க வேண்டும் எனப் பேசுகின்றனர். இதுவரை அதற்குள் இழுக்கப் படாமல் இருக்கும் மலைவாழ் இன மக்களையும், நாடோடிக் குழுக்களையும் அப்படியே விட்டு வைப்பதே அவர்களுக்குச் செய்யும் நன்மை என்று கூடப் பேசுகின்றனர்.

இந்த வாதம் எவ்வளவு தூரம் ஏற்புடையது என்பதை நாம் சிந்திக்க வேண்டும். பாரம்பரியத்தைத் தக்க வைப்பது என்ற பெயரால் மரபான சுரண்டல் முறை தொடர்வதற்கு ஆதரவாக இருப்பதில் தான் இது முடியும் என்பதைக் கருத்தியல் ரீதியாக –ஒரு கட்டுரை எழுதித் தர்க்கரீதியாகச் சொல்லி விளங்க வைக்க முடியும் என்றாலும், அதைக் கதை மூலம் எழுதிக் காட்டும் போது இன்னும் வலிமையாக வாசகனிடம் சென்று சேரும் என்றே தோன்றுகிறது. சிறுகதை ஆசிரியர் நாஞ்சில் நாடன் அதைத் தனது கதை ஒன்றில் செய்திருக்கின்றார். கல்வியின் –அறிவின் முக்கியத்துவத்தை மிக எளிமையாகப் புரிய வைக்கும் அந்தக் கதையின் தலைப்பு வாய் கசந்தது.
நாஞ்சில் நாட்டு இளைஞர்களின் இடப் பெயர்ச்சியைப் பல பரிமாணங்களில் நாவல்களாக எழுதியுள்ள நாஞ்சில் நாடன் எண்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். பெரும்பாலும் அவரது சிறுகதைகள் அனைத்தும் கன்னியாகுமரி மாவட்டம் நாஞ்சில் நாட்டையே கதைக் களனாகக் கொண்டவை. கதைக் களனோடு அக்கதைகளின் மாந்தர்களும் நாஞ்சில் நாட்டுக் கிராமத்து பெருவிவசாயிகளும், கூலிகளும், உதிரித் தொழிலாளர்களும் தான். ஆனால் அக்கதைகளின் வழி அவர் சொல்ல முனையும் சிக்கல்கள் ஓர் உலக இலக்கியத்தின் சிக்கல்கள் என்பதைத் தேர்ந்த வாசிப்பின் வழியாக உணர முடியும். நாஞ்சில் நாட்டுப் பேச்சு மொழியின் வழியாக அதைச் சென்றடைந்துள்ளார் என்பது இன்னுமொரு சிறப்பு.

நிலக்கிழார்களிடம் உழவு, களையெடுப்பு, கதிரறுப்பு, அறுப்படிப்பு போன்ற வேலைகளைச் செய்யும் கூலி விவசாயிகள் சுரண்டப் படுகிறார்கள் என்பதைச் சொல்லும் விதமாக ஏராளமான கதைகள் எழுதப்பட்டுள்ளன. பண்ணையார்களையும், கூலிகளையும் எதிரெதிராக நிறுத்தி- பண்ணையார்களின் சுரண்டலை அம்பலப் படுத்தியும், கூலி விவசாயிகள் சுரண்டப்படும் கொடூரத்தையும் பேசும் முற்போக்குச் சிறுகதைகளை பலரும் வாசித்திருக்கக் கூடும்.

நாஞ்சில் நாடனின் வாய் கசந்தது கதையை வாசிக்கும் போது முற்போக்குச் சிறுகதையின் எந்த அம்சத்தையும் காண முடியாது என்ற போதும், அக்கதை சுரண்டலின் நுட்பத்தையே கருவாகக் கொண்ட கதை என்பதைச் சுலபமாக உணர முடியும். ஆனால் ஒரேயொரு வேறுபாடு இதில் உள்ளது. எந்தவிதக் கேள்வியும் இல்லாமல் சொரிமுத்துவும் அவனையொத்த விவசாயக் கூலிகளும் திருவடியா பிள்ளையின் ஏவலைக் கேட்டு வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இதுவரை எதுவும் உறைக்கவில்லை.
ஆனால் சொரிமுத்துவின் பத்தாம் வகுப்புப் படித்த ஐயப்பனுக்கு மட்டுமே ஒவ்வொரு கணமும் உறைக்கிறது. அவனது உடல் வலியும் மனதிற்குள் ஓடும் நினைவுகளும் கிடைக்கப் போகும் கூலியைப் பற்றிக் கணக்குப் போட்டுக் கொண்டே இருக்கிறது. ஆனால் அவன் போட்ட ஒவ்வொரு கணக்கும் தப்பாகிப் போக, கடைசியில் கிடைத்த நெல்லுக்கான விலையை நினைத்த போது தனது உழைப்பின் பலன் ரொம்பவும் சொற்பமாகத் தோன்றுகிறது. அதனால் அவனது வாயிலிருந்து கசப்புச் சுரக்கிறது என்பதாகக் கதை முடிக்கிறது.
படிப்பும் அது தரும் அறிவும் சிந்தனையும் தான் ஐயப்பனைக் கணக்கிட்டுப் பார்க்கச் செய்கிறது என்பதை இந்தக் கதையைப் படிக்கும் ஒவ்வொருவரும் சுலபமாக உணர முடியும். அறிவின் மறுப்பு பண்ணையாருக்குச் சாதகமாக இருக்க அறிவின் தொடக்கம் அதன் எதிர்நிலைக்கு உணர்வைத் தருகிறது. பாத்திரங்களின் உரையாடல் வழியாகவும் கதை சொல்லியாக இருந்து ஆசிரியர் கூற்றாகவும் கதையை நகர்த்தும் நாஞ்சில் நாடனின் வாய் கசந்தது கதையின் நிகழ்வுகள் பின்னே தொடர்கின்றன:

தைமாதத்து இரவு. அதிகாலை இரண்டரை மணி இருக்கும். இலேசாகப் பனி விழுந்து கொண்டிருந்தது.நேரம் சென்று உதித்த நிலவு, முக்கால் வட்டத்திலிருந்து பாலைக் கொட்டியது. வானம் கழுவித் துடைத்ததுபோல் நீலம் பாரித்துக் கிடந்தது. கொத்துக் கொத்தாக நட்சத்திரங்கள், குலைகுலையாய் முந்திரிக்காய். சுற்றிலும் மண் சுவர் கொண்ட நீள் சதுரமான அந்த அறுத்தடிப்புக் களத்தில் வட்டம் போட்டு இரண்டாவது எடுப்பு கதிர் உதறிக் கொண்டிருந்தனர். கதிர்வட்டம் ஆகையால் காளைமாடுகள் “அவுக் அவுக்” என்று கதிரை மட்டும் கடைவாயில் தறித்து அவசர அவசரமாக விழுங்கின. –இது கதையின் தொடக்கம். இரவு ஒன்றரை மணிக்கு எழுந்தது ஐயப்பனின் நினைவுக்கு வந்தது. வாய்க்குள் கசப்பான ஒரு திரவம் சுரந்தது- இது கதையின் முடிவு.

மிக ரம்மியமான பின்னிரவுக் கட்சியில் தொடங்கிய கதையின் பாத்திரம் ஒன்றின் – ஒரு சிறுவனின் வாய் கசப்புக்கான நிகழ்வுகளே கதை நிகழ்வுகள். அவற்றை நாஞ்சில் நாடன் அடுக்கிக் காட்டும் வரிசை யிலேயே காணலாம்.
####

அவன் அந்தச் சூடடிக் குழுவைச் சேர்ந்தவன் அல்ல. அவன் பத்தாவது படிக்கும் பள்ளி மாணவன். அப்பா சொரிமுத்து அந்த சூடடிக்காரர்களில் முழு ஆளங்கொத்து வாங்குகின்ற நல்ல வேலைக்காரர். ஆனால், முன் தினம் ராத்திரியிலே இருந்து அவருக்கு உடம்பு ‘கொது கொது’ என்று இருந்தது. ####
சனி,ஞாயிறு நாட்களில், அப்பா சூடடிக்கும் களத்துக்கு சும்மாவானாலும் பார்க்கப் போனான் என்றால் எவன் பிணையலையாவது வாங்கி உற்சாகமாக நாலு மடக்கு அடிப்பான்… பொழுது போக்காக இதுவரை இதுபோன்ற வேலைகளைச் செய்திருக்கிறானே தவிர, முழுநேர வேலையாக ஐயப்பன் சூடடிக்கப் போனதில்லை. ஆனால் இன்று வேறு வழியில்லை. #####
ஐயப்பனுக்குக் கால்கள் கடுத்தன. இரண்டு மணியிலிருந்து மாடுகளுக்குப் பின்னால் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தான். மணி நாலரை இருக்கும். யாராவது வந்து பிணையலைப் பிடித்து நாலு மடக்கு அடிக்க மாட்டார்களா? கொஞ்சம் உட்கார்ந்து எழுந்தால் போதும். ஆனால் வாய்விட்டு எப்படிக் கேட்பது?
ஆறரை மணி வாக்கில் , மேல் வேட்டியால் போர்த்துக் கொண்டு, ஐயப்பனின் அப்பா சொரிமுத்து களத்தின் வாசலில் எட்டிப் பார்த்தார். வட்டம் வெட்டுகின்ற மாடசாமி கேட்டான்.“ என்னா சொரிமுத்தண்ணேன்… இப்பம் கொள்ளாமா?” “கொள்ளாண்டே… நீ வேணும்னா வீட்டுக்கு போறயாலே மக்கா.. நான் அடிக்கேன்.”
ஐயப்பன் சொன்னான். “ வேண்டாம்பா.. இப்பம் பொணையலு அவுக்க வேண்டியதுதாலா. நீ போ..” #####

நெல் பிணையலடிப்பின் நுட்பங்களை நாஞ்சில் நாடனின் கதை விரிவாகப் பேசினாலும், கதையின் தலைப்பான வாய் கசப்புக்கான நிகழ்வுகள் நெல் அம்பாரத்தை மரக்காலால் அளந்து பொலி போடும் போதுதான் முக்கியப் படுகின்றன. அதனைப் புரிந்து கொள்ள அந்நிகழ்வில் பங்கேற்கும் பாத்திரங்களின் உரையாடல்களும் முக்கியம். எனவே அவ்வுரையாடல்களோடு வாசிக்கலாம்:

“நல்ல சண்டு அற வீசிருங்கடே..” என்று சொல்லிக் கொண்டே, திருவடியாபிள்ளை புளியமர நிழலில் கிடந்த பெஞ்சில் அமர்ந்திருந்தார்.
அம்பாரமாகக் குவிந்திருந்த சம்பாப்பொலியின் முன் நின்று கும்பிட்டு, இரண்டு கையாலும் நெல்லைக் கொஞ்சம் சரித்து, சுருட்டிக் கட்டிய பதினாலு மரக்கால் கோணிச் சாக்கை இருக்கையாக அடை வைத்து- “லாபம்.. ஏ ரெண்டு.. ஆங், ஏ மூணு.. ஆங்”.. நெல்லை மரக்கால் மேல் எத்தனை முடியுமோ அத்தனை அழுத்தி, கூம்பு போல் நிறுத்தி, கையை அணைக்காமல் வலது கையால் மரக்காலின் காலையும் இரண்டு விரலால் மரக்காலின் கழுத்தையும் தொட்டுத் தூக்கி அளப்பது ஒப்பளவு. ஆனால் பொலியை ஒப்பளவில் அளப்பதில்லை. தாங்களவில் தான் அளப்பார்கள்.
நெல் சுமக்கும்போதே ஐயப்பன் மனதில் கணக்குகள் விழுந்தன. இருபத்தெட்டு மரக்கால் விதைப்பாடு என்று காதில் விழுந்திருந்தது. விதைப்பாட்டைப் பற்றிச் சூடடிக்காரர்களுக்குக் கவலை இல்லை. எத்தனை கோட்டை நெல் இருக்கிறதோ அதன் வீதத்தில் கோட்டைக்குக் குறுணி என்று தான் கொத்து. மேனி மறிய பொலி இருக்கும் என்று தோன்றியது. ஒரு முப்பத்தைந்து கோட்டை இருந்தாலும், முப்பத்தைந்து மரக்கால் கொத்து கிடைக்கும். … தனக்கு அரையாளங்கொத்து என்று பார்த்தால், ஒன்பதரைப்படி கொத்து கிடைக்கும் என்று அவன் கணக்குப் போட்டான்.
ஆனால் கோரி, அமுக்கி, தாங்கி அழகமுத்து அளப்பதைப் பார்த்தால், முப்பத்தைந்து கோட்டை நெல்லையும் முப்பது கோட்டையாக அளந்து விடுவான் போலிருக்கிறது. எப்படிப் போனாலும் முப்பது கோட்டையாவது இருந்தால் குறுணி நெல் கிடைக்கும்.
பொலியளவு முடியும் கட்டம். இருபத்தேழு கோட்டை அளந்து நிறுத்தினான் அழகமுத்து. கீழே சுமார் மூன்று கோட்டை நெல் கிடந்தது. கூறுவடி கேட்டார், “அளகமுத்து என்னா நிறுத்தீட்டே..?” அழகமுத்து பண்ணையாரான திருவடியா பிள்ளையைப் பார்த்தான்.பெஞ்சிலிருந்து எழுந்து வந்தவர் சொன்னார்.
“அட,சரிதாண்டே.. கீள என்ன ரெண்டு கோட்டை நெல்லு கிடக்குமா? கொத்து கித்து அளக்கணும்லா..” “சரி உங்க இஷ்டம்” என்று சொல்லி, நாலைந்து பெட்டிகளை நிறைத்துத் தூக்கிவிட்டார் கூறுவடி.

பித்தளைப்பூண்போட்ட பொலியளவு மரக்காலைத் தூக்கி மாடு மேய்ச்சிப் பயலிடம் கொடுத்தார் திருவடியாபிள்ளை. ‘இதைக் கொண்டு வீட்டிலே வச்சிட்டு, கொத்து மரக்காலை வாங்கீட்டு சட்டுணு ஓடியா..” சில நிமிடங்களில் கொத்து மரக்கால் வந்தது.
பொலியளவு மரக்கால் குறுணிக்கு எட்டுபடியானால், இது ஆறுபடி கொள்ளுமா என்று தனக்குள்ளே, கேட்டுக் கொண்டான்.
இருபத்தேழு மரக்கா கொத்துண்ணா ஆறுவிடி கொள்ளும் மரக்காலுக்கு –இருவத்தாறு. நூத்திருபது. ஏளாறு நாப்பத்திரண்டு. நூத்திருவதும் நாப்பத்திரண்டும் நூத்தி அறுவத்திரண்டு. பதினஞ்சாளங்கொத்து பதினஞ் சொண்ணு பதினஞ்சு.. மிச்சம் ஒண்ணு ரெண்டை இறக்கினா பந்திரண்டு. பதினஞ்சு போகாது. ஆக முழு ஆளுக்கு பத்தே முக்காப் பிடிக்குக் கொஞ்சம் குறை.

‘அப்பம் அரையாளுக்கு அஞ்சேகால் படியும் ஒரு சொரங்கை நெல்லும் கிடைக்கும்.. உத்தேசமா அஞ்சரைப் பிடிண்ணு வச்சிக்கிட்டாலும் ரெண்டே முக்காப் பக்கா.. பக்காவுக்கு எம்பது பைசா. அப்படியானா ரெண்டு ரூவாயும் இருவது பைசாவும்..’
இரவு ஒன்றரை மணிக்கு எழுந்தது ஐயப்பனின் நினைவுக்கு வந்தது. வாய்க்குள் கசப்பான ஒரு திரவம் சுரந்தது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சம்ஸ்க்ருதம் : செவ்வியல் மொழியாகவும் ஆதிக்கமொழியாகவும்

தங்கலான்: விடுதலை அரசியலின் கருவி

எஸ். ஜே. சூா்யா :தீராத விளையாட்டுப்பிள்ளை