தேடும் பறவைகள்: மீரானின் இரைகள்

 இந்த வசதிகள் எல்லாம் இருபது ஆண்டுகளுக்கு முன் இந்திய மக்களுக்குக் கிடைக்காதவை. வளைவுகளற்ற நான்குவழி, ஆறுவழிச் சாலைகளில் வழுக்கிக் கொண்டு போகும் ஆம்னி பஸ்கள், விரைவுப் பேருந்துகள் உட்பட்ட போக்கு வரத்து வசதிகள், விதவிதமாய்க் கல்வியைக் கற்றுத் தரும் கல்விச் சாலைகள், தனித்தனி உறுப்புகளுக்கும் சிறப்பு மருத்துவம் தரும் பாலி கிளினிக்குகள், டிக்கெட் கிடைக்கவில்லையென்று தியேட்டருக்குப் போன பின்பு திரும்பி வரத் தேவையில்லாத அளவுக்கு ஒரே இடத்தில் பல தரப்பட்ட சினிமாக்களைச் சேர்த்து வைத்திருக்கும் மல்டிபிளக்ஸ் திரை அரங்குகள், சாப்பிடும் போதே பிள்ளைகள் விளையாடத் தனி அறைகள், குடும்பமாகச் சாப்பிடும் போது மற்றவர்களுக்குக் கேட்காதவாறு தடுக்கும் இசைக் கோலங்களை உமிழும் ரம்மியமான சூழல் கொண்ட உணவு விடுதிகள், அந்நிய நாடுகளில் மட்டுமே கிடைத்த வண்ண ஆடைகளைக் கட்டித் தொங்க விட்டு அசத்தும் துணிக்கடல்கள், காலனிக் காட்சிக் கூடங்கள், வீட்டுபயோகப் பொருட்காட்சி அரங்குகள் என வசதிகளைக் கொண்டு வந்து சேர்த்து விட்டது உலகமயப் பொருளாதாரம்.

ஒருவர் அலுவலகப் பொறுப்பாளர் என்றால், விடுப்பு எடுத்து வீட்டில் இருந்தாலும் வேலை நடப்பதைக் கண்காணிக்க கைபேசி போதும். ஆம் எல்லா வசதிகளையும் கொண்டு வந்து சேர்த்து விட்டது தாராளமயப் பொருளாதாரமும் அதன் பின் விளைவுகளும். உலகமயமாக்கலின் வெளிப் பாடுகள் சாதாரணமக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற அக்கறை கூட புது வசதிகளின் வழியாகச் சாத்தியமாவதாக நாம் நம்பிக் கொண்டிருக்கிறோம். மனித நேய முகத்துடன் கூடிய உலகமயப் பொருளாதாரம் பற்றி மதிப்பிற்குரிய பிரதமர் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

இன்னின்ன துறைகளில் தான் என்றில்லை. ஒரு ஆட்டோக்காரரை அழைக்க அவை நிற்கும் இடங்களுக்கு போக வேண்டியதில்லை. தையல்காரரிடமும், சலவைக்காரரிடமும் துணிகள் தயாராகி விட்டதா எனத் தெரிந்து கொள்ள அக்கடைகளுக்கும் அலைய வேண்டியதில்லை. கையிலிருக்கும் அலைபேசி மூலம் எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு கிளம்பிப் போகலாம். அதன் உபயோகம் ஆச்சரிய மூட்டக் கூடியதாக மாறி விட்டது. நகரவாசிகள் இன்று அலைபேசியிலேயே அன்றாடத் தேவை களை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். வீட்டுக்குப் பத்துப் பேர் விருந்தினர்களாக அழைக்கப் படும் போதே உணவு விடுதிக்கும் என்ன கொண்டு வர வேண்டும் சொல்லி அனுப்பி விடுகிறார்கள். சரியான நேரத்திற்கு அவை வந்து நிற்கும் விதத்தில் பணியாற்றிட நிறுவனங்கள் தயாராக இருக்கின்றன.

நான்கு மாதக் கர்ப்பத்தின் போதே பிறக்கப் போகும் குழந்தை ஆணா? பெண்ணா? என்று பார்த்துச் சொல்வதோடு எந்தத் தேதியில் குழந்தை பிறக்கும் என்று சொல்லும் வசதி வந்து விட்டது. குழந்தை பெற்றுக் கொள்ளும் பெற்றோர் விரும்பினால் நல்ல நாளில், நல்ல நேரத்தில் குழந்தையை வெளியே எடுத்துத் தரும் அறுவை சிகிச்சைகள் இன்று சாத்தியம். பேறுகால வலி என்பது நவீனப் பெண்ணுக்கு வேண்டாம் என்றாலும் நமது நவீன மருத்துவம் உதவத் தயார். கட்ட வேண்டிய பணம் சில பத்தாயிரங்கள் கூடும்; அவ்வளவு தான்.

விபத்து நடந்தால் ஒரு தொலைபேசி அழைப்பு செய்தால் போதும் ஒரு வசதி மிக்க மருத்துவ மனையின் ஆம்புலன்ஸ் அந்த இடத்தில் வந்து விபத்தில் காயம் பட்டவரை அள்ளிப் போட்டுக் கொண்டு போகிறது. அழைக்காமலேயே ரோந்து சுற்றும் ஆம்புலன்ஸ்கள் நெடுஞ்சாலைகளில் வந்து கொண்டும் போய்க் கொண்டும் இருக்கின்றன. நீங்கள் சொல்லாமலேயே நவீன வசதி கொண்ட எலும்புச் சிகிச்சை மருத்துவமனையில் கொண்டு போய்ச் சேர்த்துவிடும் நிலையும் இல்லாமல் இல்லை. இப்படி இந்திய வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை சாதகங்களை அப்படியே ஏற்றுக் கொண்டு அதனை வரவேற்று அதற்குத் தகுந்தவர்களாக ஆவதில் பெரும்பான்மை மக்கள் வேகமாகப் போய்க் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அதன் மறுபக்கம் தெரிவதில்லை. இந்த வசதி இங்கு எல்லோருக்கும் கிடைக்கிறதா? என்று கேள்வியை அவர்கள் கேட்டுக் கொள்வதில்லை.

தங்களின் சுகமான வாழ்க்கைக்கு உத்தரவாதம் தந்துள்ள அதன் சாதகங்களை மட்டுமே பார்த்துப் பழக்கப் படுத்திக் கொள்ளும் பொதுப்புத்தி கொண்டவன் அல்ல படைப்பாளி. அவன் எதையும் திருப்பிப் போட்டுப் பார்த்துக் கருத்துச் சொல்பவன். திருப்பிப் போட்டு மறுபக்கத்தை மட்டும் என்றில்லை, ஒரு நிகழ்வின் பல பரிமாணங்களையும் பார்ப்பவனே சிறந்த படைப்பாளியாக மதிக்கப்படுகிறான். அப்படிப் பட்ட படைப்பாளிகளில் ஒருவர் தோப்பில் முஹம்மது மீரான் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

தனது கடலோரக் கிராமத்தின் கதை என்னும் முதல் நாவல் மூலம் இலக்கியவாசகனைத் தன்பால் ஈர்த்த தோப்பில் முஹம்மது மீரான் கூனன் தோப்பு, சாய்வு நாற்காலி, துறைமுகம் என அடுத்தடுத்த நாவல்களின் வழி இலக்கிய இருப்பை உறுதிப் படுத்தியவர். இறுக்கமான இசுலாமியச் சட்டங்கள், நம்பிக்கைகள், நடைமுறைகள் மீது காத்திரமான விமரிசன இழைகளைப் படர விடுவதைக் கொண்டு இசுலாமிய விரோதத்தைக் கொண்ட எழுத்துக்காரர் என யாரும் முத்திரை குத்தி விட முடியாது. எந்தவொரு சமயமும் அதனைப் பின்பற்றுபவர்களும் காலதேச வர்த்தமானங்களுக்கேற்பத் தனது நடைமுறைகளையும் இயல்பையும் மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருப்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை இசுலாமியச் சமுதாய வாழ்நெறிக்குள்ளிருந்தே வலியுறுத்தும் எழுத்துகள் அவருடையவை. அவரது நாவல்கள் அளவுக்கு சிறுகதைகள் வாசகனை ஈர்க்கவில்லை என்ற போதிலும் அவரது விமரிசனபாணி எழுத்து என்பது சிறுகதைகளிலும் வெளிப்படவே செய்கிறது. அனந்தசயனம் காலனி என்ற முதல் தொகுப்பை அடுத்து ஒருமரமும் கொஞ்சம் பறவைகளும் என்ற இரண்டாவது தொகுப்பு வந்துள்ளது. அதில் உள்ள ஒரு கதை இரைகள் என்பது. அது உண்டாக்கும் விமரிசனம் இப்போதுள்ள நவீன மருத்துவ மனைகள் இரக்கமற்ற கொலைக்களங்கள் என்பதாகக் குற்றம் சாட்டுகிறது.

இரைகள் கதை மட்டும் அல்ல இத்தொகுப்பில் உள்ள பெரும்பாலான கதைகள் தன்மைக் கூற்றுக் கதைகளாக இருக்கின்றன. ஆசிரியரே கதையின் ஒரு பாத்திரமாக நின்று தான் பார்த்த- பங்கெடுத்த நிகழ்வுகளைக் கதை யாக்கித் தந்துள்ளார். இத்தகைய கதைகளில் ஒரு பத்திரிகை யாளனின் விவரிப்புத்தன்மை இருக்கும். அதனால் அது கதையாக இல்லாமல் நேரடி வருணனை யாக மாறி விடும் ஆபத்தைச் சந்தித்து விடும். இதனைக் கதையின் பலவீனம் என்று நினைத்தால் அது உண்டாக்கும் நம்பகத் தன்மையைப் பலம் என்று சொல்ல வேண்டும். கதை சொல்லியாகப் பங்கெடுக்கும் படைப்பாளியின் மொழி ஆளுமை மற்றும் நுட்பமான கவனப் பதிவு ஆகியவற்றால் அந்த நம்பகத் தன்மை உருவாக்கப் படும். மீரான் உண்டாக்கும் நம்பகத்தன்மை தான் இரைகள் கதையைச் சமகால விமரிசனக் கதையாக மாற்றுக் காட்டுகிறது.

இலவச ஆம்புலன்ஸ் உதவிக்குக் கூப்பிட வேண்டிய தொலைபேசி எண்கள் குறிக்கப்பட்ட விளம்பரப் பலகைகள் ஓரங்களில் நாட்டப்பட்ட நெடுஞ்சாலை, சாலை ஓரங்களில் தயார் நிலையில் நிற்கும் பளபளப்பான ஆம்புலன்ஸ்கள் பார்ப்பதற்குக் கவர்ச்சியாகத்தானிருக்கும். அனைத்து வசதிகளும் அமையப் பெற்ற விலை உயர்ந்த வெண்ணிற வாகனங்களை மக்கள் சேவைக்காகச் சாலை ஓரங்களில் நிப்பாட்டியிருக்கும் கருணை உள்ளங்களை, அது வழியாகப் பயணிக்கும் போதெல்லாம் முன்பு வாழ்த்தாமல் இருந்ததில்லை.

இப்படித் தொடங்கி கதையை விரிக்கும் கதைசொல்லி அதை முடிக்கும்போது வேறு மாதிரி சொல்கிறார் கதை சொல்லி: இப்போது பஸ் பயணம் செய்யும் போது, கண்களை இறுக்க மூடிக் கொண்டும் உறங்குவது போல் இருக்கை யில் சாய்ந்து கொள்வேன். ஏனென்றால், சாலையோர ஆம்புலன்ஸ்கள் கண்ணில் பட்டாலே உடன் நடுங்குகிறது. இது கதையின் முடிவு. இடையில் நடந்தது என்ன என்பது தான் கதை.

நூக்கண்ணு , தனது ஒன்றுவிட்ட தம்பியின் மகன் சாவுக்குக் காரணமாக இருந்தது அப்படிப் பட்ட ஆம்புலன்சும், அது கொண்டு போய்ச் சேர்த்த மருத்துவ மனையும் தான். தனது வாப்பா வாங்கித் தந்த புதுச் சைக்கிளில் வாப்பாவிற்கு உணவு கொண்டு போன நூக்கண்ணுவை ஒரு சிவப்பு டொயட்டோ கார் தட்டி விட்டு நிற்காமல் போய்விட்டது. லேசான காயத்துடன் கீழே விழுந்தவனை விரைந்துவந்த அந்த ஆம்புலன்ஸ் யாரையும் கேட்காமல் அந்த ஆஸ்பத்திரியில் கொண்டு வந்து சேர்த்து விட்டுப் போய்விட்டது. பின் தொடர்ந்து வந்த அவனது வாப்பாவால் ஆஸ்பத்திரிக்குக் கட்ட வேண்டிய அட்வான்ஸும் அதன் நடைமுறைகளும் பணம் தேடிக் கொண்டு வரும்படி விரட்டி விடுகிறது. இச்செய்தியை கேட்டு நூக்கண்ணுவைப் பார்க்க வரும் ஆசிரியரின் கூற்றாகவே கதை அமைகிறது. வந்தவர் , “ லேசான காயம்தானா” வரவேற்பாளரான பெண்ணிடம் விசாரித்தேன். நெத்திலிக் கருவாடு போன்ற உடல் அமைப்புள்ள அந்தப் பெண், ஒரு எரிஞ்சு விழுகிற ஜன்மம். ‘ எனக்கு அதுபற்றித் தெரியாது, டூட்டி நர்சிடம் கேளுங்கள். எல்லோருக்கு வழிகாட்டுவதுதான் என் வேலை.’
“தீவிர சிகிச்சைப் பிரிவு எந்தப் பக்கம்?” அருகில் இருக்குமானால் எட்டிப் பார்க்கலாமென்றுதான். ‘நாலாவது மாடியில்’ “ லிப்ட் வழியாக நாலாவது மாடிக்குப் போகலாமா”
‘இதுபார்வை நேரமல்ல; அனுமதிச்சீட்டு இல்லாமல் நாலாவது மாடியில் நுழைய முடியாது’ “அனுமதிச் சீட்டு எங்கே வாங்கனும்” ‘சிகிச்சைக்கு முன்பணம் கட்டி வச்ச பிறகு தான் அனுமதிச் சீட்டு கொடுப்பாங்க. நீங்க பார்க்க வந்த நோயாளிக்குச் சிகிச்சை செய்ய முன் பணம் இன்னும் கட்டல’
பணம் தேடிப் போன தம்பி இன்னும் வரவில்லை. வரும் வரை காத்திருக்கும் ஆசிரியர் அங்கு நடக்கும் நிகழ்வுகளைக் கவனமாக பார்த்துக் கொண்டி ருக்கிறார். அடுத்தடுத்து வந்த ஆம்புலன்ஸ் காயம் பட்ட சில பேரைக் கொண்டு வந்து இறக்கி விட்டுவிட்டுப் போய்க் கொண்டிருக்கிறது. ஆஸ்பத்திரி வேகமாக உயிர்காக்கும் பணிக்காக இயங்கிக் கொண்டிருக்கிறது. இறந்து போன ஒருவரைப் பிணமாகக் கொண்டு போய்ச் சேர்க்க ரூ.4500/- கட்டினால் தான் தூக்கிப் போக முடியும் அதே ஆம்புலன்ஸ் டிரைவர் பேரம் பேசுகிறார்.

போதிய பணமின்றி வந்த நூக்கண்ணுவின் வாப்பா, ‘டாக்டர், டாக்டருடைய இரக்கம் நாடித் தாழ்மையுடன் கூப்பிட்டவாறு, தான் ஒரு கடையில் குமாஸ்தா வேலை செய்யக் கூடியவன், நான் நெனச்சா இவ்வளவு பணம் உடனே ஒரு நாளில் திரட்ட முடியாது, டாக்டர். பல முயற்சிகளும் செய்து பார்த்தேன். கெடக்கல்ல. எப்படியும் பண்டம் கட்டிடுவேன்.. தயவு செய்து..’
“ தயவு தாட்சண்யம் பாத்தா , ஆஸ்பத்திரி நடத்த முடியாது பாய்.. பணம் கட்டி வைங்க. அவசரமாக ஆபரேசன் செய்யணும் . பிறகு எங்க மேல பழி போடக் கூடாது. சொல்லிப் போட்டேன்..” நூக்கண்ணுவின் வாப்பா கட்ட வேண்டிய பணம் ரூ. 35000/-.இது முடியாது என்ற நிலையில் தர்மாஸ்பத்திரிக்குக் கொண்டு போகலாம் என்று முடிவு செய்கின்றனர். டாக்டர் சம்மதிக்கிறார். ஆனால் இதுவரை வைத்திருந்த செலவுக்கான பில்லை முடித்துக் கொண்டு அரசாங்கத்தின் தர்மாஸ்பத்திரிக்குப் போகலாம் என்பது நிலை.

அடுத்த நாள் ஆசிரியருக்கு வந்த தொலைபேசி சொல்கிறது. இப்போதும் கட்ட வேண்டிய பணம் ரூபாய் 35000/- என்ற போது அதிர்ந்து போகிறார். வைத்தியமே செய்யாமல் அதே தொகை கட்ட வேண்டும் என்றால் அதிராமல் என்ன செய்வார். வேறு வழியின்றி பணத்தைக் கட்டிய பிறகு மருத்துவமனை நர்சு சொல்கிறாள். நேற்று இரவு நூக்கண்ணுவிற்கு உடம்பு சீரியஸ் ஆன தாகவும், ஆபரேசன் செய்ய எடுத்துப் போகும் போது அவன் இறந்து விட்டான் என்று.

மருத்துவம் செய்யாமல், வைத்திருந்தது மட்டுமல்லாமல், அவனது சாவுக்குக்காரணமான அந்த மருத்துவமனை நிர்வாகம் எந்தவிதக் குற்றவுணர்வும் கொள்ளாமல் பணம் பிடுங்குவதில் குறியாய் இருந்ததைப் படம் பிடிக்கும் தோப்பில் , இத்தகைய மருத்துவமனைகள் விபத்தில் காயம் பட்டவர்களைத் தேடி அலையும் ஆம்புலன்ஸுகளை வைத்திருப்பது போல விபத்துக்களை உண்டாக்கும் டொயட்டோ கார்களையும் குவாலிஸ் வண்டிகளையும் கூடச் சாலைகளில் நிறுத்தி வைத்திருக்கின்றனவோ என்ற ஐயத்தை உண்டாக்குகிறார்.

இப்படி நடப்பதை பொதுப் புத்தி சார்ந்த மனிதன் ஏற்காமல் போகலாம். இவையெல்லாம் இன்று சமூகத்தில் நிகழாத ஒன்று என்று சொல்லி விட முடியாது என்பதுதான் நிதர்சனம். பல கோடி விலையில் வாங்கிப் போடும் நவீன மருத்துவக் கருவிகளுக்கான இரைகளைத் தேடித் தர வேண்டிய கட்டாயம் அந்த நிர்வாகங்களுக்கு இருக்கிறது என்பதை உணர்ந்தால், அதற்காக விபத்துக்களை உருவாக்கும் அறமற்ற செயலை அவர்கள் செய்யவும் தயங்க மாட்டார்கள் என்பதையும் ஒத்துக் கொள்ளத் தான் வேண்டும்.

நவீனக் கருவிகளை வாங்கிப் போட்டு பத்திரிகை நடத்தும் அச்சு ஊடக நிறுவனங்கள், அவற்றிற்குத் தீனி போட ஒவ்வொரு நாளும் –ஆன்மீகம், குடும்பம், பக்தி, ஜோதிடம், வணிகம், பெண்கள், விளையாட்டு, பங்கு வர்த்தகம் என ஒவ்வொருதுறைசார் பத்திரிகைகளைக் கொண்டு வந்து , சமூகத்தைப் பின்னிக்கு இழுக்கும் வேலையைச் செய்வது போல , செயற்கைக் கோள் தொலைக் காட்சிகளின் வழியே செய்யப்படும் மனக்கொலைகளின் பின்னணியில் எந்த அறமும் இல்லை என்பதும் உண்மை தானே. ஊடகங்களை நடத்துபவர்கள் ஒவ்வொரு நாளும் மனக்கொலைகளைத் திட்டமிட்டுச் செய்யத் தயங்காத நிலை தொடரும் நிலையில் நவீன மருத்துவ மனைகள் உடல் கொலைகள் செய்யும் என்பதையும் நம்பித் தான் ஆக வேண்டும். அப்படியொரு எண்ணத்தை உண்டாக்குவதில் மீரானின் கதை இரைகள் முழுவெற்றி பெற்றுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்