சொல்லும் செயலும் வேறெனக் கொண்டால்..?:சுஜாதாவின் ஒரு லட்சம் புத்தகங்கள்
2009 தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருந்த போது இலங்கைப் பிரச்சினை உறுதியாகத் திசை திரும்பிக் கொண்டிருக்கிறது என்பதை மனம் சொல்லத் தொடங்கியது. தீவிரமாக நடந்த ஈழ யுத்தம் தேர்தலுக்கு முந்திய நாள் ஒரு முடிவுக்கு வந்து விட்டது போலச் சர்வதேச ஊடகங்கள் செய்திகளைச் சொல்லிக் கொண்டிருந்தன.ஒரு வேளை இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சி மாறிப் புதிய ஆட்சி வந்தால் இலங்கைப் பிரச்சினை வேறு வடிவம் எடுக்கக் கூடும் எனக் கருதிய இலங்கை அரசு தீவிரமாகப் போரை நடத்தி முடித்து விட்டுத் தேர்தல் முடிவோடு சேர்த்து சொல்ல வேண்டும் எனக் காத்திருந்தது போல முல்லைத் தீவு வெற்றியைக் காங்கிரஸின் வெற்றியோடு சேர்த்துச் சொல்லிக் கொண்டிருந்தது.எனக்குக் கால் நூற்றாண்டுக்கு முன்பு எழுதப் பட்ட அந்தக் கதையைத் திரும்பவும் எடுத்து வாசிக்க வேண்டும் என்று தோன்றியது. எடுத்து வாசித்து விட்டு அடையாளத்திற்கு ஒரு தாளில், “சொல்லும் செயலும் வேறெனக் கொண்டால்” என எழுதி மூடி வைத்திருக்கிறேன். கதையின் தலைப்பு: ஒரு லட்சம் புத்தகங்கள். எழுதியவர் சுஜாதா. எழுதப் பட்ட ஆண்டு 1982.
பாரதி நூற்றாண்டை ஒட்டி ஆனந்த விகடன் அந்தத் தொடரை வெளியிட்டது. பாரதியின் வரிகளை மையப்படுத்திக் கதைகளை எழுதினார்கள் எழுத்தாளர்கள். மாலன் தொடங்கி வைத்த அந்த வரிசை பாலகுமாரன், ஸ்றீவேணுகோபாலன், வண்ணநிலவன், சுஜாதா, ராஜேஷ்குமார் வைரமுத்து என ஏழு பேருடைய கதைகளுடன் நின்று போனது. பாரதி நூற்றாண்டைக் கொண்டாடும் விதமாக ஆண்டு முழுவதும் ஐம்பத்திரண்டு கதைகளை ஆனந்த விகடன் வெளியிடும் என எதிர்பார்த்தேன். நான் மட்டுமல்ல; என்னைப் போன்ற இலக்கிய மாணவர்களின் ஆசையும் அதுவாக இருந்தது. ஆனால் ஏழு கதைகளை வெளியிட்டதுடன் ஏன் நிறுத்தப் பட்டது என்று தெரியவில்லை. பின்னர் அந்த ஏழு கதைகளும் அதே ஆண்டிலேயே புத்தகப் பண்ணை வெளியீடாக பாரதிநிலையத்தால் வெளியீடப்பெற்றது. தொகுப்பின் தலைப்பு : பாரதி சிறுகதைகள்.
பத்திரிகையில் வந்தபோது வாசித்திருந்தாலும் புத்தகமாக வந்தபோதும் வாங்கி வைத்து அவ்வப்போது வாசித்துப் பார்த்துக் கொள்வேன். ஏழு கதைகளில் இரண்டு கதைகள் எப்போதும் மறக்காத கதைகள் எனச் சொல்வேன். இலங்கைத் தமிழரின் தனிநாட்டுத் தாகம் தீராததன் காரணமாகச் சுஜாதாவின் ஒரு லட்சம் புத்தகங்கள் மறக்காமல் இருக்கிறது என்றால் வண்ணநிலவனின் துன்பக்கேணி நினைவை விட்டு அகழாமல் இருக்கப் பல காரணங்கள் இருக்கின்றன. அக்கதை குறித்துப் பின்னர் எழுதலாம். இப்போது சுஜாதாவின் கதை.
’சிங்களத்தீவினுக்கோர் பாலம் அமைப்போம்’ என்ற வரியைத் தனது கதைக்கான அடிக்கருத்தாக சுஜாதா தெரிவு செய்திருந்தார். சுஜாதாவின் கதைப்பின்னணியாக யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட ஆகஸ்ட் கலவரத்தில் அரசின் ஆதரவுடன், அதன் போலீஸ்காரர்களால் நூலகம் சிதைக்கப்பட்டதும், தென்கிழக்கு ஆசியாவிலேயே பெரியதான அந்த நூலகத்தின் ஒரு லட்சம் புத்தகங்கள் எரிக்கப் பட்ட நிகழ்வும் இருந்தது. அதை வாசிக்கும் போது சிங்கள அரசின் தமிழ் விரோதம் பளிச்சென வெளிப்படாமல் போகாது. தமிழ் அடையாளத்தின் ஆன்மாவாக இருக்கும் நூலகத்தை எரிப்பது மூலமாக தமிழர்களின் தனி நாடு கோஷத்தை இல்லாமல் ஆக்கி விடலாம் என அந்நாட்டு அரசு கருதியதும் அக்கதைக்குள் விவாதிக்கப் பட்டிருந்தது. அக்கதையை முதலில் வாசிப்பவர்களுக்கு சிங்கள அரசின் தமிழ் விரோதமே முதலில் தோன்றும் என்றாலும், சுஜாதாவின் முதன்மையான நோக்கம் அதுவல்ல என்பதை இன்னொரு முறை வாசிக்கும் போது தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.
கதை நடக்கும் வெளி ஒரு கருத்தரங்க மாநாட்டுக் கூடம். கருத்தரங்கத்தின் பிற்பகல் அமர்வு தொடங்குவதற்கு முன்பு கதை அந்த அமர்வு நடந்து கொண்டிருக்கும் போது கதை முடிந்து விடுகிறது. கதையில் பெயர் குறிப்பிடப் படாமல் பல பாத்திரங்கள் இடம் பெற்றுள்ளன. அவை எதுவும் கதைக்கு முக்கியமில்லை. கதையில் பெயர் குறிப்பிட்டு இடம் பெறும் ஆறேழு பாத்திரங்களும் கூட முக்கியமில்லை. முக்கியமான இரண்டு பாத்திரங்கள் டாக்டர் நல்லுசாமியும் செல்வரத்னமும் மட்டும் தான்.
பாரதி பற்றிய சிறப்புக் கருத்தரங்கில் தலைமை தாங்க வந்துள்ள டாக்டர் நல்லுசாமி. அறியப்பட்ட தமிழறிஞர். பாரதியின் கவிதைகளில் தோய்ந்த புலமையாளர். தமிழ் சார்ந்த மாநாடுகளில் கட்டுரைகள் வாசிப்பதற்காகப் பல நாடுகளுக்கும் சென்று வந்தவர். இந்தக் கருத்தரங்கின் முடிவில் சிறப்புரை ஆற்ற வரும் அமைச்சர் அவரது செயல்பாட்டைப் பார்த்து விட்டு அங்கேயே அவரைப் பாரதி பெயரில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்திற்குத் துணைவேந்தராக ஆக்க உள்ளதாகச் செய்தி அந்த அரங்கில் பரவி உள்ளது. கருத்தரங்கிற்கு வந்த பலரும் அதனை அறிந்து பாராட்டிக் கொண்டிருக் கிறார்கள். அந்த நேரத்தில் தான் அந்த இளைஞன் செல்வரத்னமும் வருகிறான்.
முதலில் அவருக்கு அவனை அடையாளம் தெரியவில்லை என்ற போதிலும், அவர் இலங்கை வந்த போது தனது வீட்டிற்கு வந்தது; விருந்துண்டது; இலங்கையில் இருக்கும் தமிழர்கள் இரண்டாம் தரக்குடிகளாகக் கருதப்படும் நிலை பற்றி உரையாடியது எனப் பழையனவற்றைச் சொன்னபின் நினைவுகள் திரும்பியவராய் அன்புடன் அளவளாவுகிறார். அவனது குடும்பம் பற்றியும்,வீட்டிற்குப் போன போது நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி என்ற பாரதியின் கவிதையைப் பாடலாகப் பாடிய அவனது தங்கச்சியையும் விசாரிக்கிறார். அங்கே நடந்த கலவரம் பற்றி அறியாமல் இருந்த அவருக்கு யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டது; இளைஞர்கள் கொல்லப்பட்டது; இளம்பெண்கள் கற்பழிக்கப்பட்டது பற்றிச் சொன்ன அவன், அந்தக் கலவரத்தில் அவன் குடும்பத்தில் அவன் மட்டுமே மிச்சமிருப்பதாகவும், அவன் தங்கை நடுவீதியில் துகிலுரியப்பட்டதையும் ஆவேசத்துடன் சொல்கிறான்.
கேட்டவர் பரிதாபப்பட்டு உங்களுக்கு எந்த வகையிலாவது எனது உதவிகள் தேவையா? எனக் கேட்கிறார். அதற்கு எனது சொந்த சோகத்தை விடவும் தமிழ் மக்களின் துயரமே இங்கு சொல்லப்பட வேண்டும். தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் அந்த நிகழ்வுகளைச் சொல்ல விரும்புகிறேன். தமிழர்கள் இலங்கைத் தமிழர்கள் மீது கொண்டிருக்கும் பற்று உண்மை யானதல்ல; வெறும் பேச்சளவில் தான் அவர்களது பற்று உள்ளது. உண்மையில் தமிழகத் தமிழர்களின் ஈழப்பற்று என்பது சுயநலம் சார்ந்தது; எதிர்பார்ப்புகளுடன் கூடியது. இதையும் அவன் சொல்லப் போவதாகவும், சொல்லி முடித்தபின் தமிழ்நாட்டுத் தமிழர்கள் சொல்லையும் செயலையும் பிரித்து வைத்திருக்கும் விநோதத்தைச் சுட்டிக் காட்டி இந்தக் கருத்தரங்க மலரை தனது பேச்சின் முடிவில் எரிக்கப் போவதாகவும் கூறுகின்றான்.
அவருக்கு அது உவப்பானதாகப் படவில்லை. காரணம் அவரது பேச்சு மட்டுமே அன்று சிறப்பானதாகக் கவனிக்கப்பட வேண்டும் எனக் கருதுகிறார். இடையில் இவன் இப்படிப் பேசி எதையாவது செய்வதால், கருத்தரங்கம் திசை மாறி அமைச்சர் கோபம் கொள்ளக் கூடும். அதனால் தனக்குக் கிடைக்க இருக்கும் துணைவேந்தர் பதவி கூடக் கிடைக்காமல் போகும் வாய்ப் பிருக்கிறது எனக் கருதுகிறார். தனது மென்மையான பேச்சின் வழியாக அதைத் தடுக்கும் விதமாகப் பேசிப் பார்க்கிறார். நடப்பது பாரதிபற்றிய கருத்தரங்கம்; அதனால் அவனைப்பற்றிய கருத்துக்களைப் பேசுவதே சரியாக இருக்கும். இந்த மேடையை உங்கள் ஆவேசத்திற்குரியதாக மாற்றி விட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறார். ஆனால் அவன் பாரதியின் மனிதநேயக் கருத்துக்களை- பிஜித் தீவு மக்களுக்கும், பெல்ஜியத்திற்கும் புதிய ருஷியாவிற்கும் வரவேற்பு சொன்ன சர்வதேசக் கவிஞன். அவன் இருந்திருந்தால் ஈழத்தமிழர்களுக்காகக் கதறவே செய்திருப்பான். ஒரு லட்சம் புத்தகங்கள் எரிந்து விட்டது.நாடற்றவர்களாக நிற்கும் ஆறு லட்சம் மனிதர்கள் எங்கே போவார்கள். எனவே இங்கே சொல்வதே சரியானது என உறுதியாகச் சொல்லி விட்டுச் செல்கிறான்.
டாக்டர் இப்போது அதைத் தடுத்தாக வேண்டும் என நினைக்கிறார். மறைமுகமாக அதைத் தடுக்கும் முயற்சியில் இறங்கி வெற்றி அடைகிறார். அவரது மனைவிக்குத் தொலைபேசியில் பேசி, அவளது அண்ணனை வைத்துப் போலீசுக்குப் பேசி,செல்வரத்னம் அவனது உரையை நிகழ்த்தாத வாறு தடுத்து விடுகிறார். அடுத்த நாள் செய்தித்தாளில் டாக்டர் நல்லசாமியை பாரதி விழாக் கூட்டத்தில் துணைவேந்தராக அறிவித்த செய்தி வந்திருக்கிறது. ஆனால் செல்வரத்னத்தின் விசா ரத்து செய்யப்பட்டு உடனடியாகத் திருப்பி அனுப்பப் பட்ட செய்தி வரவில்லை என்பதாகக் கதையை முடித்துள்ளார்.
இந்தக் கதை எழுதப் பட்ட 1982-க்குப் பிறகு ஈழப் போராட்டம் பலவிதமான பரிமாணங்களைத் தாண்டி விட்டது. ஒரு லட்சம் புத்தகங்கள் எரிக்கப் பட்ட இடத்தில் ஒரு லட்சம் மனிதர்கள் கொல்லப்பட்டு விட்டார்கள். அதற்கும் மேலான எண்ணிக்கையில் நாடற்றவர்களாக - அகதிகளாகத் தமிழர்கள் புலம் பெயர்ந்து அலைந்து கொண்டிருக்கிறார்கள். வழி நடத்திய தலைவர்கள் சோரம் போனார்கள் அல்லது கொல்லப்பட்டார்கள். இறுதியாக இரண்டு லட்சம் பேர் கம்பி வேலிக்குள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். என்றாலும் ஈழ ஆதரவுக் கோஷங்கள் இன்னும் வெற்றுக் கோஷங்களாகவே இருக்கின்றன. இலங்கை அரசை எதிர்த்து இங்கே உண்ணாவிரதப் போராட்டங்களும் கண்டனப் பேரணிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்திய அரசு இலங்கை அரசை ஆதரிக்கிறது எனக் கூறி, அதனை எதிர்த்துக் கண்டனப் பேரணி நடத்தவோ, இந்திய அரசின் நிலைபாட்டிற்கு எதிராக ஒரு உண்ணாவிரதத்தை நடத்திடும் தைரியம் ஒருவருக்கும் கிடையாது.
தீர்மானமான நிலைபாடுகளைச் சொல்லாமல் ஈழத் தமிழர்களை ஏமாற்றும் அரசியல்வாதிகளும் பற்றாளர்களும் திரும்பத் திரும்பச் செய்யும் மோசடிகளை இன்னும் இலங்கைத் தமிழர்கள் உணராமல் இருக்கிறார்கள்.முன்னணிப் படையாகத் தங்களைக் காட்டிக் கொள்ளும் ஈழ ஆதரவாளர்களின் தமிழ்ப் பற்றும், ஈழப் பற்றும் எப்போதும் சுயநலம் சார்ந்ததாகவே இருக்கிறது என்பதை மறைமுகமாகச் சொல்லும் இந்தக் கதை எப்போதும் அதற்குச் சாட்சியாக இருக்கப் போகிறது.
00000000
https://azhiyasudargal.blogspot.com/2012/06/blog-post.html
கருத்துகள்