ஆணெழுதும் பெண்ணெழுத்து : ஜெயந்தனின் அவள்
ஜெயந்தனுக்கு அந்தக் கதைக்கு ஒரு தலைப்பு வைக்க வேண்டும் என்று கூடத் தோன்றவில்லை. கதையின் தலைப்பே அவள் என்பது தான். தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் ஒரு நிகழ்வாக மாறி விட்ட இலக்கியச் சிந்தனை, 1981 இல் வந்த சிறுகதைகளில் ஆகச் சிறந்த கதையாகத் தேர்வு செய்த கதை இது. தேர்வு செய்தவர் கிராமப் புற மனிதர்களை விதம் விதமாக எழுதிக் காட்டிய கி.ராஜநாராயணன்.ஒரு எழுத்தாளருக்கு வாசகனிடம் ஒரு பாத்திரத்தை முன்னிறுத்தப் பல காரணங்கள் இருக்கக் கூடும்.அந்தக் காரணங்கள் எழுத்தாளருக்கு எழுத்தாளர் மாறுபடுவதன் காரணமாகவே பலவிதமான கதைகள் கிடைக்கின்றன. ஒரு பேருந்தில் பயணம் செய்யும் அத்தனை நபர்களும் பார்த்து முகஞ்சுளித்த ஒரு நிகழ்வு எழுத்தாளரின் கவனத்தில் முன்மாதிரி நிகழ்வாக மாறி விடும் அற்புதத்தை நீங்கள் கதையாக வாசித்திருக்கக் கூடும். ‘இவள் எல்லாம் ஒரு மனுசியா?’ எனக் காரித் துப்பி விட்டுப் போகும் ஒரு பெண்ணைத் தனது கதையின் நாயகியாக வைத்துக் கதை எழுதி வாசகனின் கவனத்தை ஈர்ப்பதில் தான் கதாசிரியனின் வெற்றி இருக்கிறது.
இந்தியப் புராணங்கள் முன் நிறுத்தும் நளாயினி, திரௌபதி, சீதை போன்ற பாத்திரங்களை இந்திய சமூகம் திரும்பத் திரும்ப நினைத்துக் கொள்வது எதற்காக? என்று யோசித்துப் பாருங்கள். அவர்களின் பொறுமைக்காகத் தான். அந்தப் பொறுமை என்பது பொதுவெளியில் காட்டிய பொறுமை அல்ல. ஏனென்றால் நமது மரபான சமூகமும் இலக்கியங்களும் பெண்களுக்கு பொதுவெளிகளையே உண்டாக்கித் தந்ததில்லை. குடும்ப வெளிக்குள் கணவனிடம் காட்டிய பொறுமையே முன்மாதிரியாகக் காட்டப்படும் பத்தினிப் பெண்களின் அடையாளங்கள். கணவனே கண் கண்ட தெய்வம் என்பதிலிருந்து இந்தியப் பெண் விலகிப் போய்விடக் கூடாது என்பதை நினைவு படுத்திக் கொண்டே இருக்கும் முன்மாதிரிகள்.ஒருவிதத்தில் இந்த முன்னிறுத்தல்கள் நிகழ்காலப் பெண்ணைத் தனியாகச் சிந்திக்க விடாமல் ஏற்கெனவே இருக்கும் புராணக் கதாபாத்திரத்தில் நீயும் பொருந்திக் கொள் எனச் சொல்லும் நோக்கங்கள் கொண்டவை.
ஒரு சம்பள நாளின் ஒரு மணி நேரத்தில் கண்ணுச்சாமி என்னும் பியூனின் அப்பாவி மனைவியாகிய அவளை ஒரு நிகழ்காலக் கண்ணகியாக ஆக்கிக் காட்டுகிறார் ஜெயந்தன். ஜெயந்தனின் அவள் கதைக்குப் பின்னாலும் இத்தகையதொரு நோக்கம் தான் இருக்குமோ? கதையைக் கொஞ்சம் நினைவுபடுத்திப் பார்க்கலாம்:
பார்ப்பது பியூன் வேலையென்றாலும் கண்ணுச்சாமி சதா தும்பை நிறத்தில் வேஷ்டியும் ஜிப்பாவுமாக, சட்டமும் சவடாலும் பேசிக்கொண்டிருக்கிறவனின் பொஞ்சாதி அவள். அன்று காலை அவளுக்கும் கண்ணுச்சாமிக்கும் இடையே நடந்த சண்டையில் , ‘இன்னிக்கி ஒன் ஆபீஸுக்கே வந்து ஒன் யோக்கித எல்லாத்தையும் எடுத்து வுடலே , நான் பெரியசாமி மக இல்லை ’ என்று சவால் விட்டு அதன்படி அவன் வேலை பார்க்கும் பஞ்சாயத்து ஆபிஸுக்கே போய் சம்பளம் போடும் மானேஜரைப் பார்த்து , ‘இன்னிக்குச் சம்பளத்தெ எங்கையில கொடுங்க, சாமி!’என்று கேட்டு விடுகிறாள். அவள் நிலையைக் கண்டு, சட்டத்திலும் நடைமுறையிலும் அப்படிக் கொடுப்பதற்கு இடமில்லை என்பதால் மானேஜர் கண்ணுச்சாமியை அழைத்துப் பேசி அவர் முன்னாலேயே அவனது சம்பளப் பணத்தே அவளிடம் தரச் சொல்கிறார். ஆனால் அவனிடமிருந்து வந்த பதில் அவரை மலைத்துப் போகச் செய்கிறது.
“அப்படியொண்ணும் எங்குடும்பத்துக்கு நான் குடுக்கிறதுக்கு இன்னொருத்தர சாட்சி வச்சிக்கணும்னு தேவையில்ல சார் ” என்பது அவன் தந்த பதில்.
மானேஜரைத் தூக்கி எறிந்துவிட்ட கண்ணுச்சாமியக் கமிஷனரிடம் காட்டி வழிக்குக் கொண்டு வரலாம் என்று நினைத்தாள். நினைத்துக் கொண்டிருந்த போது கமிஷனர் வெளியே வந்தார். திடுதிப்பென்று அவரைப் பார்த்ததில் அவள் நினைத்ததைச் செய்யவில்லை ; அவர் வெளியே போய்விட்டார். காலையில் புருஷனிடம் விட்ட சவால் நிறைவேறாமல் போய்விடுமோ என்று நினைத்தவளுக்கு என்ன ஆவேசம் வந்ததோ தெரியவில்லை. தனது ஒல்லி உடம்பை வைத்து அவனைக் கிடுக்கிப் பிடி போட்டாள். அத்தனை பேர் முன்னாலும் அவள் இறுக்கிப் பிடித்து மீற முடியாமல் நிறுத்தி விடுவாள் என்பதை எதிர்பார்க்காத கண்ணுச்சாமி வாயால் சண்டை போட்டான். கடைசிவரை அவள் பிடியை விடவில்லை. கடைசியில் பணம் தருவதாகச் சொல்ல அவள் பிடி விலகுகிறது. சொன்னவன் சொன்னபடி செய்வான் என அவள் நினைத்தது எவ்வளவு பெரிய தவறு என்பதை அடுத்த கணமே புரிய வைத்தான் கண்ணுச்சாமி.
மானேஜரைத் தூக்கி எறிந்துவிட்ட கண்ணுச்சாமியக் கமிஷனரிடம் காட்டி வழிக்குக் கொண்டு வரலாம் என்று நினைத்தாள். நினைத்துக் கொண்டிருந்த போது கமிஷனர் வெளியே வந்தார். திடுதிப்பென்று அவரைப் பார்த்ததில் அவள் நினைத்ததைச் செய்யவில்லை ; அவர் வெளியே போய்விட்டார். காலையில் புருஷனிடம் விட்ட சவால் நிறைவேறாமல் போய்விடுமோ என்று நினைத்தவளுக்கு என்ன ஆவேசம் வந்ததோ தெரியவில்லை. தனது ஒல்லி உடம்பை வைத்து அவனைக் கிடுக்கிப் பிடி போட்டாள். அத்தனை பேர் முன்னாலும் அவள் இறுக்கிப் பிடித்து மீற முடியாமல் நிறுத்தி விடுவாள் என்பதை எதிர்பார்க்காத கண்ணுச்சாமி வாயால் சண்டை போட்டான். கடைசிவரை அவள் பிடியை விடவில்லை. கடைசியில் பணம் தருவதாகச் சொல்ல அவள் பிடி விலகுகிறது. சொன்னவன் சொன்னபடி செய்வான் என அவள் நினைத்தது எவ்வளவு பெரிய தவறு என்பதை அடுத்த கணமே புரிய வைத்தான் கண்ணுச்சாமி.
தன் உடல் வலிமையை வீழ்த்திக் காட்டிய மனைவியை வெற்றி கொள்ள வேண்டுமென்று நினைத்தானோ என்னவோ, ‘பொது இடத்தில் இப்படி அடிக்கிறோமே’ என்ற நினைப்பே இல்லாமல் வலுவாகத் தாக்கி வீழ்த்தினான். அவனைத் தடுத்து நிறுத்தி விடலாம் என்று வந்த வாட்ச்மேன் போன்றவர்களுக்கோ ஏச்சு. விலகிப் போய்விட்டனர். மூர்க்கங்கொண்டவளாய் அவள் பின்னிருந்து அவனைத் தாக்கிச் சட்டையைப் பிடித்து, “என்னையும் எம் புள்ளைங்களையும் கொன்னு போட்டுட்டுப் போயிடு” என்று மறிக்கிறாள்.
அதற்கு அவன் தந்த பதில் “ சாவுங்க” என்று வயிற்றில் ஓங்கிக் குத்திய குத்து தான். தொடர்ந்து அவன் குத்த எத்தனித்த போது, ‘ராஸ்கல் , தாலி கட்டிட்டா கொன்னுடலாம்னு நெனப்பா?’ என்ற படி ஒரு அடி விழும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. அப்படி அடித்தவர் கிராமசேவகர் சிதம்பரம். முரட்டு ஆசாமி. தனக்குச் சம்பந்தமில்லாத பல விசயங்களில் தன் கைவரிசையைக் காட்டியதால் அவருக்குக் கிடைக்க வேண்டிய பதவி உயர்வுகளையெல்லாம் இழந்தவர்.அதை உணர்ந்து கொஞ்ச காலமாகத் தானுண்டு தன் வேலை யுண்டு என்று இருந்தவர் அப்படி இருந்தவரையே கண்ணுச்சாமியின் அந்த அடாவடித் தனம் கலைத்துப் போட்டு விட்டது.
தனது அடியை வாங்கிக் கொண்டு கண்ணுச்சாமி சும்மா இருக்க மாட்டான்; எதிர்த்து நிற்பான் எனக் கருதிய சிதம்பரம் கொஞ்சம் கூடுதலாகவே முரட்டுத்தனம் காட்டினார். அதை வரவேற்று அவள், “ அப்படிப் போடுங்க , சாமி.. மவராசன் நீங்க நல்லா இருப்பீங்க. சாவட்டும்.கொலைகாரப் பாவீ..!” என்று சொல்லி வரவேற்றாள். அவளது ஆதரவும் கிடைத்த விட்ட நிலையில் மேலும் இரண்டு அடி போட்டு கண்ணுச்சாமியை மேனஜருக்குப் பக்கத்தில் உட்கார வைத்து விட்டுத் தொலைபேசியை எடுத்துச் சுழற்றிக் காவல் நிலையத்தில் அவனை ஒப்படைப்பது என்று தீர்மானித்தார் சிதம்பரம்.
தன் கணவனை அடித்த போது நன்றாகப் போடுங்கள் என்று சொன்ன அவள் அடுத்துச் செய்த செயலை யாரும் எதிர்பார்க்கவில்லை; அவள் சிதம்பரத்தை நோக்கி ஓடி வந்தாள். இரண்டு கைகளையும் விரித்து, ‘ஐயோ வேணாம் சாமி, சொல்லாதீங்க. சொல்லிடாதீங்க’ என்றபடியே அவரது காலிலேயே விழுந்து விட்டாள். “போலீசில் மட்டும் பிடிச்சுக் கொடுத்திடாதீங்க; ஏற்கெனவே குடிச்சுட்டுப் போலீஸ்கிட்ட பண்ணியிருக்கிற தகராறுக்கு அவங்க அவரைக் கொன்னுப் போட்டுடுவாங்க ”
அடிச்சு அடக்கிய சிதம்பரம், இரண்டு மனசாக இப்போது சட்டம் இருக்கும் நிலையில் இவன் வேலை போனாலும் போய்விடும் என்று பரிதாபப் பட்டு விலகிப்போகிறார்.அப்போது கண்ணுச்சாமி சொல்லும் வார்த்தைகள் கவனிக்க வேண்டியவை. “ ஆளு வச்சு அடிக்கிற? இரு. வீட்டுக்குத் தாண்டி வருவே.. வா. அங்க வந்து இந்தக் கண்ணுச்சாமி யாருனு பாரு” அவளின் துயரம் தொடரப் போகிறது என்பதைக் காட்டும் வாக்கியம் அது.
அந்த வாக்கியங்களைக் கேட்டபடியே இவன் திருந்தப் போவதில்லை என எல்லோரும் நகர்ந்து போய்விடுகிறார்கள். கதையையும் இங்கே முடித்துக் கொள்கிறார் ஜெயந்தன்.ஜெயந்தன் தனது கதைக்கு மட்டும் தலைப்பு தரவில்லை என்று நினைக்க வேண்டாம். கதையின் தலைப்பாக ஆன அவளுக்கும் ஒரு பெயரையும் கூடத் தர வேண்டும் என நினைக்கவில்லை.
இப்படி நினைப்பதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. ஏனென்றால் இந்த "அவள்" ஒரு பெண் அல்ல. இந்தியப் பெண்களின் பெருங்கூட்டத்தின் ஒரு மாதிரி அவள்.
கதை நடந்த நேரம் மிகக் குறுகிய காலம். சரியாகக் கணக்கிட்டால் ஒரு மணி நேரம் இருக்கலாம். கதை நிகழும் இடம் 100 பேருக்கும் மேல் வேலை பார்க்கும் ஒரு பஞ்சாயத்து அலுவலகம். யோசித்துப் பார்த்தால் இந்தக் கதையின் நிகழ்வெளியாக இருக்க வேண்டிய இடம் இதுவல்ல. கணவனுக்கும் மனைவிக்கும் இடையே நடக்கும் சண்டையை வாசகர்களின் பார்வைக்கு வைக்கும் அந்தக் கதையின் நிகழ்வுகள் அந்த அலுவலகத்தில் நடக்க வேண்டி யவை அல்ல;அவர்களின் வீட்டில் நடந்திருக்க வேண்டிய நிகழ்வுகளே.
கதை நடந்த நேரம் மிகக் குறுகிய காலம். சரியாகக் கணக்கிட்டால் ஒரு மணி நேரம் இருக்கலாம். கதை நிகழும் இடம் 100 பேருக்கும் மேல் வேலை பார்க்கும் ஒரு பஞ்சாயத்து அலுவலகம். யோசித்துப் பார்த்தால் இந்தக் கதையின் நிகழ்வெளியாக இருக்க வேண்டிய இடம் இதுவல்ல. கணவனுக்கும் மனைவிக்கும் இடையே நடக்கும் சண்டையை வாசகர்களின் பார்வைக்கு வைக்கும் அந்தக் கதையின் நிகழ்வுகள் அந்த அலுவலகத்தில் நடக்க வேண்டி யவை அல்ல;அவர்களின் வீட்டில் நடந்திருக்க வேண்டிய நிகழ்வுகளே.
தினசரி வாழ்வில் அந்த அவளும் அவளது கணவனும் அவர்கள் குடியிருக்கும் குடிசையில் போட்டுக் கொள்ளும் சண்டை இடம் பெயர்ந்ததால்- இடம் பெயர்ந்ததைக் கவனித்து எழுதியதால் தான் ஜெயந்தனின் கதை கவனிக்கத் தக்க கதையாக ஆகியிருக்கிறது. அவனது மனம் மாறும் விதமாக யாராவது தன் கண் முன்னே தண்டனை கொடுத்தால் அதை வரவேற்கும் நிலையில் இருக்கும் அவள், தன் கணவனைக் காவல் நிலையத்திற்கு அனுப்பக் கூடாது என்பதில் பிடிவாதம் காட்டுவது ஏன்? நம் காவல் நிலையங்கள் மேல் அவளுக்கு என்ன பயம். அவர்கள் அடித்தே கொன்று போடக் கூடும். அவர்கள் இவனைக் கொல்ல இந்த நிகழ்வு மட்டுமே காரணமாக இருக்கும் என்பதில்லை. ஏற்கெனவே அவன் செய்திருக்கும் அடாவடித்தனங்கள் ஏராளம்.
தன் புருஷன் தன்னைக் காப்பாற்ற வேண்டும் என்று கேட்டு அவனது அலுவலகம் வரை போனதோடு அவனைக் கிடுக்கிப் பிடி போட்டு அடக்கி விட நினைக்கும் அவள் நிச்சயம் புராணக் கதாபாத்திரங்களின் மாதிரி அல்ல. அத்தோடு அங்கேயே அவன் மனம் மாறும் படி தண்டனை கொடுப்பது கூட அவசியம் என நினைக்கும் போது நிச்சயம் இவள் இதுவரை எழுத்தில் எழுதப்படாத பாத்திரம் தான் என்று தோன்றுகிறது. அடுத்த கணமே, தனக்குக் கட்டாயம் புருஷன் உயிரோடு வேண்டும் என நினைக்கும் போது அவளும் ஒரு புராணக் கதாபாத்திரமாக- மரபான பெண்ணாக ஆகிப் போகிறாள். இப்படி நினைப்பதில் தான் இந்தியப் பெண்களின் பொது உளவியல் இருக்கிறது போலும்.
இந்தியப் பெண்களின் பொது உளவியலை எழுதி, அவர்களின் பொறுமையை, தியாகத்தை , விட்டுக்கொடுத்தலை, அன்பைப் பேசுவது பெரும்பாலும் ஆண்களாகவே இருக்கிறார்கள். ஏராளமான பெண்கதாபாத்திரங்களை எழுதிக் காட்டிய ஆண்களிலிருந்து பெண்கள் எங்கே வேறுபடுகிறார்கள் என்றால், அவர்கள் பேசுவது பெண்களின் கோபத்தை, பொறுமையின்மையை, பற்றைத் துறந்து விலகிச் செல்வதை, தங்களின் சுதந்திரத்தை விட்டுக் கொடுத்துக் குடும்ப அமைப்பைக் காக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்பதைச் சொல்வதை. இந்த வேறுபாட்டை உணரும் போது ஆணெழுதும் பெண்ணெ ழுத்துக்கும்,பெண்ணெழுதும் பெண்ணெழுத்துக்கும் இடையேயுள்ள வேறுபாடுகளும் புரியலாம்.
கருத்துகள்