தமிழக அரசியல் : கனவுலகவாசிகளின் கனவுலகம்
தமிழ்த் திரைப்பட உலகம் ஒரு கனவுத் தொழிற்சாலை, தமிழ்ச் சமூகத்திற்கு கனவுகளை உற்பத்தி செய்யும் அந்தக் கனவுலகவாசிகளுக்கே இன்னொரு கனவுப் பரப்பாக ஆகிக்கொண்டிருக்கிறது தமிழ்நாட்டின் அரசியல் வெளி.
அந்த ஆசை யாருக்குத்தான இல்லை? தமிழ்நாட்டின் அரசியல் பிரமுகராக ஆக வேண்டும் என்ற ஆசை சினிமாவிற்குள் இருக்கும் எல்லோருக்கும் இருக்கிறது. அதன் உச்சக்கட்டமாகத் தமிழ்நாட்டின் முதல்வராக ஆக வேண்டும் என்ற ஆசை நாயக நடிகா்களின் ஆசையாக மலா்ந்துவிடுகிறது. இப்படிச் சொல்வதுகூடச் சரியில்லை. அது ஒரு கனவாக மாறிக்கொண்டிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும், நாயக நடிகா் விஜயகாந்த் இப்பொழுது தனது கனவுகளுக்கு வண்ணம் தீட்டத் தொடங்கியுள்ளார்.
தேவையொரு
புதிய முகம்
தமிழக
அரசியலைத் தமிழ் சினிமாவின் நாயகா்களைக் கொண்டு நிரப்பிப் பார்க்கும் ஆசை தமிழக
மக்களுக்கு எந்தளவுக்கு இருக்கிறது என்தைப் புள்ளிவிவரங்களால் பேச முடியாது. ஆனால்
நாயகா்களுக்கும், அவா்களின் தொண்டா்களுக்கும் இருப்பதை விடக் கூடுதலாக நமது
பத்திரிகை உலகத்திற்கு இருக்கிறது என்று உறுதியாகச் சொல்லலாம். இதற்குப் புள்ளிவிவரங்கள்
எல்லாம் தேவையில்லை. தமிழின் அச்சு ஊடகங்களுக்கு அந்த தேவை அவசியமாகவும்
அவசரமாகவும் இருக்கிறது என்றே தோன்றுகிறது. ஏறத்தாழ முப்பதாண்டுக் கால தமிழக
அரசியலை தி. மு. க x அ. இ. அ. தி. மு. க. என்ற இரட்டை எதிர்வுக்குள், அல்லது
கருணாநிதி x எம். ஜி. ஆா் கருணாநிதி x ஜெயலலிதா என்ற எதிர்வுகளுக்குள் மட்டுமே
எழுதிப் பார்த்தது அலுத்துவிட்ட பத்திரிகைகளுக்குப் புதிய முகங்கள் தேவைப்படுவது
இயல்புதான்.
இயல்பான அரசியல்
வெளியில் உருவாகும் தலைவா்களின் முகங்கள் நீண்ட காலம் தனித்து அலையும் பிம்பங்களாக
இல்லாமல் ஏதாவது ஒரு அணியில் இணைந்துகொள்ளும் பிம்பங்களாகவே இருக்கின்றன. ராமதாஸ்,
வைகோ, வாசன், திருமாவளவன், கிருஷ்ணசாமி
என எல்லாப் பிம்பங்களும் தொடா்ந்து தனி அடையாளத்தைத் தக்க வைக்கக்கூடியனவாக
இல்லாமல் போய்விடும் நிலையில் தன் அடையாளத்துடன் நிற்கும் கதாநாயகா்களை நாடுவதும்,
உருவாக்க நினைப்பதும் ஊடகங்களின் வேலையாக இருக்கிறது. தமிழக மக்களுக்குத்
தேவையில்லாமல்கூடப் போகலாம். ஆனால் ஊடகங்களுக்குத் திரைப்படத் துறையிலிருந்து ஓா்
அரசியல்வாதி வருவது விரும்பத்தக்க ஒன்று.
பாட்ஷா படம் பூஜை போடப்பட்ட
நாள் தொடங்கி ரஜினிகாந்தை இழுத்துப் பார்த்துத் தோல்வி அடைந்த தினசரிகளும்,
வாராந்திரிகளும் அதே வேகத்தை விஜயகாந்திடம் காட்ட, அவா்களின் ஆசை பலித்துவிடப்
போகிறது. செப்டம்பா் 14 எனத் தேதி குறித்துவிட்ட விஜயகாந்திற்கு அந்த
ஆசை வந்துவிட்டது என்றே தோன்றுகிறது. தமிழ்நாட்டின் அரசியலில் தான் ஒரு சக்தி
என்பதை நிரூபித்துவிட்டு அதன் உச்சக்கட்டமாக முதல்வா் பதவியைப் பிடித்து விட
வேண்டும் என்ற ஆசை இப்பொழுது அவரின் கனவாக மாறிக்கொண்டிருக்கிறது. அவரது கனவுகளை
எழுதிப் பார்க்க அச்சு ஊடகங்கள் தமது பக்கங்களைத் திறந்துவிட்டன. தமிழின் முன்னணி
வெகுமக்கள் இதழ்களான குமுதமும் ஆனந்தவிகடனும் முன்னணியில் நின்றன. திரைப்படக்
கதாபாத்திரங்களுக்கான வசனங்களைத் தனது வசனகா்த்தாக்களிடமிருந்து எழுதி வாங்கிப்
பேசிய விஜயகாந்த், தனது அரசியல்வாதி என்னும் பாத்திரத்தின் உருவாக்கத்தைத் தானே
எழுதத் தொடங்கினார்.
நீண்ட அரசியல் பாரம்பரியமும் அனுபவமும்
(தலைவா்களின் பேச்சுக்களைத் தேநீா்க் கடையில் நின்று கேட்டதும், தோ்தல் காலத்தில்
சுவரொட்டி ஒட்டும் நண்பா்களுடன் சோ்ந்து ஊா் சுற்றிய அனுபவங்களும்தான் அவரது
அரசியல் அனுபவம்!) தனக்கு உண்டு எனக் காட்டத் தொடங்கவிட்ட அவரது பேட்டிகளும், செய்திக்
கட்டுரைகளும் தினசரிகளிலும் வார இதழ்களிலும் வந்து முடிந்துள்ளன. விஜயகாந்த்
குறித்து அச்சாகும் எழுத்துக்களில் கிடைக்கும் பரிமாணங்களில் சில 1970 களில் எம். ஜி. ஆரின் சூத்திரங்களை
உள்வாங்கி அரசியல் தலைவராக ஆவது சாத்தியமற்றது. ஆனால் அவரின் (எம். ஜி. ஆரின்)
ஏழைப் பங்காளன் என்ற பிம்பம் அரசியல்வாதிகள் ஒவ்வொருவருக்கும் தேவையான ஒன்று.
அதைத் தனக்குச் சொந்தமாக்கிக்கொள்ளத் தயாராகிவிட்டார் விஜயகாந்த்.
நடிகா் விஜயகாந்திற்கு முதல்வா் ஆகும் ஆசை வந்துவிட்டது; அவர் கனவு காண்கிறார். கனவு காண்பதை யாராவது தடுக்க முடியுமா….?
ஆசையின் தொடக்கம்
விஜயகாந்திற்கு வந்துவிட்ட அந்த ஆசை
அவருக்கு மட்டுமல்ல, இங்கே வெற்றிப் படம் ஒன்றின் நாயகனாக நடித்த நடிகா்கள்
ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. இன்று விஜயகாந்திற்கு வந்துவிட்ட ஆசை ஒரு பத்து
ஆண்டுகள் கழித்து விஜய் அல்லது அஜீத்திற்கு, அதன்பிறகு சிம்பு அல்லது தனுஷிற்கு
வராது என்று யாரால் சொல்ல முடியும்? கதாநாயகா்கள் மட்டும் அல்ல, வெற்றிப் படங்களை
இயக்கிய இயக்குநா்களுக்கே அரசியல் ஆசை இருக்கும் என்றே தோன்றுகிறது. தொடா்ந்து சூப்பா் ஹிட்டாகும்
படங்களின் காமெடி நடிகருக்கும் கூட அரசியல் பிரமுகராகும் ஆசை இருக்கத்தான்
செய்கிறது. (இயக்குநா்கள் தங்கா் பச்சான், சேரன், பாரதிராஜா, நடிகா் விவேக்
போன்றவா்களின் சில பேட்டிகளின் சொல்லாடல்கள் அரசியல் சொல்லாடல்களாகவே உள்ளன.)
ஏற்கனவே பலா் அப்படி ஆகியிருக்கும் நிலையில் அந்த ஆசைகள் வருவது தவிர்க்க முடியாதது
தான். எம். ஜி. ஆர். முதல்வரானபோது அவருக்கு திரைப்படத் துறையில் உதவியவா்களும்
(ஆா். எம். வீரப்பன், கோவை செழியன், முசிறிப்புத்தன போன்றவா்கள்)
அரசியல்வாதிகளாகவும், அதிகாரம் மிக்க பொறுப்புடையவா்களாகவும் ஆன கதைகள் இந்த
தமிழ்நாட்டில் நடந்த கதைதான். அதற்குப் பின்புகூட தி. மு. க. ஆட்சியின்போதும்
பிந்திய அ. இ. அ. தி. மு. க ஆட்சியின்போதும் நடிகா்கள் பலா் பாராளுமன்ற
உறுப்பினா்களாகவும் சட்டமன்ற உறுப்பினா்களாகவும் (சரத்குமார், ராதாரவி, எஸ். எஸ்
சந்திரன்) ஆகியிருக்கிறார்கள்.
தமிழ்நாட்டின் முதல்வா் பதவி பற்றிய கனவு தமிழ் சினிமா உலகத்தில்
வெற்றிப்பட பார்முலாவைக் கண்டுபிடித்துவிடும் ஒருவரின் எளிய கனவு என்று
சொல்லப்படுவதில் உண்மை இல்லாமல் இல்லை. நூறு நாள் ஓடக்கூடிய ஒரு திரைப்படத்தின் காரணகா்த்தா
நான்தான் என நம்பும் ஒரு சினிமாக்காரரின் அடுத்த லட்சியம் தொடா்ந்து சூப்பா் ஹிட்
கொடுப்பதும், அதன் மூலம் பல கோடிகளுக்கு சொந்தக்காரராக ஆவதும், அதன் தொடா்ச்சியாக
ரசிகா்மன்றங்கள் அல்லது நற்பணி மன்றங்களை முறைப்படி அமைப்பாக உருவாக்கிக்
காட்டுவதுதான். அமைப்பாக உருவாக்கப்படும் மன்றங்களின் அடுத்த கட்டப் பயணம்
தமிழ்நாட்டின் அரசியல் கட்சிதான். இறுதி லட்சியம் தமிழ்நாட்டின் முதல் மந்திரி.
இப்படிச் சொல்வது வெற்றுப் பொய்களோ புனைவுகளோ அல்ல; உண்மை.
தமிழ் சினிமாவின் பிரபலங்கள் அதன் அகத்திலும் புறத்திலும் இயங்கும் முறைகளைக்
கவனிக்கும் யாரும் இதை எளிதில் புரிந்துகொள்ளலாம்.
தொடரும்
உறவு
தமிழ்நாட்டின்
அரசியலுக்கும் சினிமாவிற்கும் உள்ள உறவைப் பற்றிப் புதிதாகச் சொல்ல ஒன்றும் இல்லை.
1967 க்குப் பின் வந்த எல்லா முதல் மந்திரிகளும் சினிமாவிலிருந்து வந்தவா்கள்தான்.
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியையும் அதன் தலைவர் காமராசரையம் தோற்கடித்து
ஆட்சியைப் பிடித்த சி.என். அண்ணாதுரை அடிப்படையில் அரசியல்வாதி என்றாலும்
சினிமாக்காரா் என்ற அடையாளம் உண்டுதான். அவா் எழுதி நடித்த வேலைக்காரி, ஓரிரவு
போன்ற நாடகங்கள் அவா் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே திரைப்படங்களாகி இருந்தன.
அரசியல்வாதியாக அடையாளம் உருவான பின்னரும் திரைப்படங்களுக்கு அவா் திரைக்கதை வசனம்
எழுதியதுண்டு. அவரைத் தொடா்ந்து முதல்வா் பதவியைப் பிடித்த மு. கருணாநிதிக்கு
கலைஞா் என்ற பட்டத்தைப் பெற்றுத் தந்ததே அவரது நாடக மற்றும் திரைப்பட ஆா்வங்கள்தான்.
பராசக்தி தொடங்கி ஏராளமான வெற்றிப் படங்களின் திரைக்கதை ஆசிரியராகவும்
வசனகா்த்தாவாகவும் வலம் வந்தவா் மு. கருணாநிதி. கதாநாயகனை விட திரைக்கதை எழுதும்
தனக்கே முதல்வா் பதவிக்கான தகுதி உண்டு. திரைப்படத் துறையிலிருந்து அரசியலுக்கு வர
நினைப்பவா்கள் பலரும் முன்னோடியாக அல்லது முன்மாதிரியாக நினைப்பது திரைப்பட
வசனகா்த்தாக்களான சி. என். அண்ணாதுரையையோ, மு. கருணாநிதியையோ அல்ல. அவா்களின்
முன்மாதிரி எம்.ஜி.ஆர்.தான் அவரது சினிமா நடிப்பின் வழியாக அவருக்குக் கிடைத்த பட்டங்கள்
பல. புரட்சி நடிகா், மக்கள் திலகம், பொன்மனச்செம்மல், கொடை வள்ளல் என்பன சில.
இப்பட்டங்களில் புரட்சி நடிகா் என்ற பட்டம் மட்டுமே அவரது நடிப்பு அல்லது அவா்
ஏற்ற கதாபாத்திரங்களைக் குறித்த பட்டம் மற்றவையெல்லாம் அவரது சினிமா வாழ்விற்கு
வெளியே அவா் ஏற்ற பாத்திரங்களைக் கொடை வள்ளலாகவும் அவா் வலம் வந்ததின் காரணமாகக்
கிடைத்த மிக முக்கிய பாத்திரம் ஏழைப் பங்காளன் என்ற பாத்திரம் தான்
மூன்றெழுத்து
மந்திரம்
எம். ஜி.
ராமச்சந்திரனின் அரசியல் பிரவேசம் என்பது நேரடியாகத் தலைவராக நுழைந்த பிரவேசம்
அல்ல. அரசியலுக்கு வந்தபோது அவருக்கு எதிராக வைக்கப்பட்ட வாதங்களில் மிக முக்கியமானவை
இரண்டு. ஒன்று அவா் தொழில் சார்ந்தது; இன்னொன்று அவா் தாய்மொழி சார்ந்தது. சினிமாக்காரரான
அவருக்கு அரசியல் அறிவு கிடையாது என்ற வாதம் அவரை அரசியல்வாதியாக வலம் வர
அனுமதித்த தி.மு.க. தலைவா்கள் சிலரால் முன்வைக்கப்பட்டது. ஆனால் அவரை விரும்பிய
வெகுமக்கள் அந்த வாதத்தை காது கொடுத்துக் கேட்கவே இல்லை. அதேபோல் மலையாளத்தைத்
தாய்மொழியாகக் கொண்ட எம். ஜி ராமசந்திர மேனன் தமிழ்நாட்டை ஆளும் தகுதியுடையவா்
அல்ல என்ற வாதமும் மக்களால் நிராகரிக்கப்பட்டது. எம். ஜி. ஆரின் சினிமாவைப்
பாரத்து அவரைத் தமிழ்நாட்டின் பிள்ளையாக (எங்க வீட்டுப் பிள்ளை)
ஏற்றுக்கொண்டிருந்த தமிழா்கள், குறிப்பாகப் பெண்கள், மலையாளி என்ற சொல்லாடலை
முற்றாக நிராகரித்தனா் என்றுதான் சொல்லவேண்டும். ஆட்சியாளா்களுக்கு அரசியல் அறிவு
தேவை என்ற சொல்லாடல் பத்திரிகை படிக்கும் நடுத்தர வா்க்கத்தின் சொல்லாடல்களுள் ஒன்றாகத்தான்
அன்றும் இருந்தது; இன்றும் இருக்கிறது.
எம்.ஜி.ஆருக்கு எதிராக வைக்கப்பட்ட வாதங்கள்
எல்லாம் நிராகரிக்கப்பட்டதின் பின்னணியில் தமிழ் நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் அவா்
பெற்றிருந்த செல்வாக்கும் நம்பிக்கையும் இருந்தன. 1967 க்கு முந்திய எம். ஜி. ஆரின்
செல்வாக்கு வெறும் சினிமா நடிகா் என்ற செல்வாக்கு மட்டும் அல்ல. பரங்கிமலைத்
தொகுதியில் சட்டமன்ற வேட்பாளராக நிற்பதற்கு முன்பே கட்சியின் பிரதிநிதியாக சட்ட
மேலவையில் உறுப்பினராக இருந்தவா். கட்சியின் நிதி நெருக்கடியைப் போக்கும்
பொருளாளரும் அவா்தான். தி.மு.க. வை எம்.ஜி.ஆா். கட்சி எனவும், அதற்கு எதிராக
இருந்த காங்கிரஸை சிவாஜி கட்சி எனவும் எதிர்களாக்கி, மிகச் சுலபமாக அரசியல்
தளத்தில் சிவாஜியை வென்றவா்.
அவற்றையெல்லாம் விட அவ் சினிமாவில் கட்டிக்
காத்த விரதங்கள் முக்கியமானவை. இன்று
மிகச் சாதாரணமாகக் கருதப்படும் புகை பிடித்தல், மது அருந்துதல், பெண்களைக் கேலி
செய்தல் போன்ற காட்சிகளில் நடிக்காமல் தன்னைப் பாதுகாத்து வெளிப்பட்டவா்.
காதலிக்கும் ஆணாக இல்லாமல் காதலிக்கப்படும் ஆணாகத் தனது பாத்திரங்களை
வடிவமைத்ததோடு, பிரியமுள்ள அண்ணனாகவும், பாசமுள்ள மகனாகவும் பாத்திரங்களை உருவாக்கிக்
கட்டியெழுப்பிக்கொண்டவா் அவா். இவையெல்லாம் சோ்ந்து அவரை ஒரு நடிகா் என்ற எல்லைக்கப்பால்
பின்பற்ற வேண்டிய முன்மாதிரி எனவும், அறம் தவறுகிறவா்களைத் தட்டிக் கேட்கும் கோபம்
கொண்ட இisஞனாகவும், நியாயத்தின் பக்கம் நிற்பவராகவும் நிறுத்தி வைத்திருந்தது. திரைப்படங்களின்
வழி வெளிப்பட்ட மகாப் புனித மனிதன் என்னும் கதாபாத்திரம் அவரைத் தமிழ்நாட்டின் -
கீழ் நடுத்தர வர்க்க, உதிரித் தொழிலாளிகளின் - நகா்ப்புற, கிராமப்புறச் சேரிகளின்
- வணங்கப்படும் தெய்வமாகவே ஆக்கி வைத்தது எனலாம். 1960 களின் இறுதியாண்டுகளிலும்
எழுபதுகளிலும் எம்.ஜி. ஆா். என்ற மூன்று எழுத்து கிராமங்களில் எத்தகைய மாயச்
சொல்லாக விளங்கியது என்பதை அறிய விரும்பினால் இன்று ஐம்பது வயதைத் தாண்டிய
கிராமத்து மனிதா்களிடம் போய்த்தான் விசாரிக்க வேண்டும். எனது அனுபவம் ஒன்றைச்
சொன்னாலே நகரவாசிகளாகிவிட்ட பலருக்கு ஆச்சரியமாக இருக்கக்கூடும்.
எனது ஊா் மதுரை மாவட்டத்தின் ஒரு மலையோரச்
சிறு கிராமம். அந்த சிறு கிராமத்திற்கு வேலைநிறுத்தம் என்றால் என்ன என்பதைப் புரிய
வைத்தவா். எம். ஜி. ஆா் தான் என்பது ஆச்சரியமான உண்மை. அப்பொழுதெல்லாம் கிராமங்களில்
சவரத் தொழில் செய்பவா் ஊா் முழுவதற்கும் தொழிலாளியாக இருந்து பணி செய்வார்.
சேவகமாகப் பணி செய்யும் அவருக்கு ஆண்டுக்கு இவ்வளவு தானியம் என்று கூலி தரப்படும்.
நிலவுடைமைக் கிராம சமுதாய அமைப்பின் பணியாளா்களுள் ஒருவரான அந்த நாவிதா், தனது
அபிமானத்தைப் பெற்றிருந்த எம். ஜி. ஆரை, நடிகா் எம்.ஆா். ராதா சுட்டுவிட்டார் என்ற
தகவல் கேள்விப்பட்ட உடன் அடுத்த நபருக்கு சவரம் செய்ய மாட்டேன் எனத் தன் வேலையை
நிறுத்தினார். அதுதான் எங்கள் கிராமத்தில் நடந்த முதல் வேலைநிறுத்தமும் கடை
அடைப்பும். சாதி ஆதிக்கம் கொண்ட வயதானவா்கள் பலரின் கடும் எதிர்ப்பை அவா் எதிர்
கொண்டார் என்றபோதிலும் அந்தக் கிராமத்தில் இருந்த இளைஞா்கள் பலரும் அந்த நாவிதரின்
செயலை ஆதாரித்தார்கள் என்பதும் உண்மை. சாதிப்பற்று, உயா்சாதி ஆதிக்கம் என்பனவற்றை
எல்லாம் தாண்டி எம். ஜி. ஆரின் ஆளுமை ஒரு நாவிதருக்கு தைரியத்தைத் தந்த ஆளுமையாக
இருந்தது என்பதுதான் இதில் புரிந்துகொள்ளப்பட வேண்டிய உண்மை. யோசித்துப்
பார்த்தால் இது மிகப் பெரிய புரட்சி எண்ணத்தின் தூண்டுதல் என்பது புரியாமல் போகாது
அப்படித்தான் புரட்சி நடிகா் எம். ஜி. ஆா்., புரட்சித் தலைவா் எம். ஜி. ஆராக
ஆனார்.
சினிமாவிலிருந்து அரசியலுக்கு வரத் தயாராக
இருந்த ரஜினிகாந்தும் சரி, வந்துவிட்டதாக அறிவித்துக்கொண்டிருக்கும் விஜயகாந்தும்
சரி, எம்.ஜி. ஆா் சந்தித்த இரண்டு சவால்களையும் எதிர்கொள்ள வேண்டியவா்களாகவே
உள்ளனா். அரசியல் அறிவற்ற நடிகா்; தமிழைத்
தாய்மொழியாகக் கொள்ளாதவா் என்ற வகையில் இவ்விருவரும் எம்.ஜி.ஆரை ஒத்தவா்கள்தான்.
எம்.ஜி. ஆரின் தாய்மொழி மலையாளம் என்பது பிரச்சினையானது போல ரஜினியின் தாய்மொழி கன்னடம்
என்பது பிரச்சினையாக்கப்பட்டது. விஜயகாந்தின் தாய்மொழி தெலுங்கு என்பது இனி
பிரச்சினையாக்கப்படும். மூன்றாவது மொழிப் போர் அறிவிக்கப்படும் இந்தக்
காலகட்டத்தில் அதை அவா் அவ்வளவு சுலபமாகத் தவிர்த்துவிட முடியாதுதான். என்றாலும்
அவா் சினிமாவில் பேசியுள்ள அனல் பறக்கும் தமிழ் வசனங்கள் இந்தப் பிரச்சினையில்
ஓரளவுக்கு உதவக்கூடும்.
மாறிவிட்ட சூழல்
இன்றைய அரசியல் சூழல் முற்றிலும்
மாறுபட்ட அரசியல் சூழலாக இருக்கிறது.
இந்திய அளவில் ஒற்ளைக் கட்சி ஆட்சி காணாமல் போய் குறைந்தபட்ச பொதுத் திட்டங்களுடன்
அதிகாரப் பங்கீடு நடந்துகொண்டிருக்கிறது. தேசிய அரசியலின் இந்த நிலை மாநில
அரசியலிலும் வெகு விரைவில் வரத்தான் போகிறது. ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டிற்குமான
அரசியல் கட்சி என்ற அடையாளத்தைத் தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் கொஞ்சம் கொஞ்சமாக
இழுத்து கொண்டே வருகின்றன. வட்டாரம் சார்ந்த கட்சிகளோடும் சாதி சார்ந்த கட்சிகளோடும்
உறவு கொள்ளும் நிலையில்தான் சில மாநிலக் கட்சிகள் தங்கள் அடையாளங்களைத் தக்க
வைத்துள்ளன. ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டிலும் பரவலாகச் செல்வாக்கு பெற்றிருந்த தி.
மு. க. வின் செல்வாக்கு வட தமிழ்நாட்டில் பாட்டாளி மக்கள் கட்சியுடன் கூட்டணி
சோ்கிறபோதுதான் உறுதிசெய்யப்படுகிறது.
இன்றும் திரைப்படங்களை அரங்கத்திற்குச்
சென்று பார்க்கும் தலித் பார்வையாளா்களை நடிகா்கள் தங்கள் சினிமாவின்
பார்வையாளா்களாக மட்டும்தான் வைத்துக்கொள்ள முடியும் என்பது இன்னொரு முக்கியமான விஷயம்.
உழைத்த அலுப்பு தீர எல்லா நடிகா்களின் ஆட்டபாட்டங்களையும் ரசிக்கும் அவா்கள்,
அரசியல் என்று வரும்போது அந்த நடிகா்களின் தொண்டா்களாக இருப்பார்கள் என்பதற்கு
உத்தரவாதம் இல்லை. ஒற்றைத் தலைமையின் கீழ் இணைவதும் போராடுவதும் நடக்கவில்லை
என்றபோதும் தொல். திருமாவளவன், டாக்டா் கே. கிருஷ்ணசாமி, அதியமான், சாத்தை
பாக்கியராஜ் எனப் பலரும் அவா்களை - தலித்துக்களை - தலித் அரசியல் என்ற
கருத்தியலின் பக்கம் வென்றெடுத்துவிட்டனா்.
திரை நட்சத்திரங்களைத் தமிழக அரசியலுக்குள்
இழுக்கும் பின்னணியில் அன்று இருந்தது போலவே அகில இந்தியக் கட்சிகளின் வியாபார நிறுவனங்களின்
மறைமுக வேலைகளும் உள்ளன என்றாலும் வேறுபாடுகளும் உள்ளன. அன்று எம். ஜி. ஆரின்
பின்னணியில் இடதுசாரி எண்ணம் கொண்ட தனிநபா்களும் அவா்களால் ஆதரிக்கப்பட்ட காங்கிரஸும்
இருந்தனா். ஆனால் இன்றோ அரசியலுக்கு வரும் திரை நட்சத்திரங்களின் பின்னணியில்
இருப்பவை பணக்காரா்கள் மற்றும் உயா்சாதி மேலாண்மையை விரும்பும் நிறுவனங்களும்
அமைப்புகளும்தான். திராவிட இயக்க உணா்வுகளுக்கு மாறாக தேசிய உணா்வை உருவாக்கிட
விரும்பும் இவை அவா்களை முன்னிறுத்தி தமிழ்நாட்டில் மாற்றத்தைக் கொண்டுவந்துவிடத்
துடிக்கின்றன. நோக்கங்களும் விருப்பங்களும் நோ்மறையானவையாகக் கூட இருக்கலாம்;
ஆனால் வழிமுறைகள் எதிர்மறையானவை என்பதில் சந்தேகமில்லை.
இந்தப் பின்னணியில் அரசியல் கட்சியின்
தலைவராக ஆகவிரும்பும் ஒருவருக்கு 1980 கள் வரை போதுமானதாக இருந்த ‘ஏழைப் பங்காளன்‘
என்ற தோற்றமும் மக்களின் நிலையைப் பார்த்துக் கண்ணீா் வடிக்கும் “கருணை உள்ளம்
கொண்டவன் என்ற பிம்பமும் மட்டும் போதுமானதல்ல. சமதா்ம சோசலிச எண்ணங்கள் பின்னுக்குத்
தள்ளப்பட்டு தாராளமயம், தனியார்மயம், உலகமயம் என அரசியல் பொருளாதாரத்தின் முகம்
முற்றிலுமாக மாறிவிட்டது. இப்படியொரு மாற்றம் நடந்துகொண்டிருக்கிறது என்பத இந்த
நடிகா்களுக்குத் தெரியும் என்பதற்கான சிறிய அடையாளம்கூட இதுவரை வெளிப்படவில்லை.
(நமது சட்டமன்ற உறுபபினா்களுக்கே இது தெரியுமா என்று யாராவது கேட்டால் பதில்
சொல்வது சிரமம்தான்.)
இவ்வளவு பிரச்சினைகளையும் தெரிந்துகொண்ட
பின்புறம் ஒரு நடிகன் அரசியல்வாதியாக ஆக விரும்புவது அவனது ஆன்மபலத்தின்
வெளிப்பாடாக இருக்குமா….? அல்லது அதிகாரத்தின் மீதான மோகமாக இருக்குமா….? என்று
நாம் கேள்வியை எழுப்பலாம். தனிமனிதா்கள்,
ஆன்ம பலம் என்றும் சமூகத்திற்கு ஆற்ற வேண்டிய கடமை என்றும் சொல்கிறார்கள்.
ஆனால் வரலாறு அப்படிச் சொன்னதில்லை. அதிகாரம் தரும் போதையின் ஈா்ப்பு என்றுதான்
அது சொல்லிக்கொண்டிருக்கிறது.
உயிர்மை,
செப்டம்பா் 2005
கருத்துகள்