எல்லாம் விலை குறித்தனவே ; ஆன்மாவும் கூட .


வரலாறு என்னை விடுதலை செய்யும் - புரட்சியின் வழியாகக் கியூபா நாட்டின் அதிபராகி, நீண்ட நாட்கள் அப்பதவியில் இருந்த    பிடல் காஸ்றோ சொன்ன புகழ் பெற்ற வாசகம் இது.  
ஆயுதம் தாங்கிய விடுதலைப்போராட்டங்கள் மற்றும் கொடுங்கோலர்களுக்கு எதிரான புரட்சிகளின் சின்னமாக இன்றும் கருதப்படும் உலக அடையாளம் சேகுவாரா. அவருடன் இணைந்து ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு தென் அமெரிக்க நாடுகளில் புரட்சியை நடத்திக் கொண்டிருந்தார் காஸ்றோ. புரட்சியைச் சட்டரீதியாகவே அடக்கி விட முடியும் என நினைத்த க்யூபாவின் அப்போதைய அரசுத் தலைவர் பாடிஸ்டா காஸ்றோவின் மீது வழக்குகள் பலவற்றைத் தொடுத்தார். அவ்வழக்குகளின் அடிப்படையில் அவருக்குக் கொலைத் தண்டனை என வழங்கி விட முடியும் என்ற நோக்கம் அவருக்கு இருந்தது.

வழக்குகளை எதிர்கொண்ட காஸ்றோ தனக்கெதிரான குற்றச்சாட்டுக்களை மக்கள் ஆதரவு எனும் ஆயுதத்தால் மட்டுமே எதிர் கொள்வது எனத் தீர்மானித்தார். தான் செய்த ஒவ்வொரு செயலுக்கும் பின்னாலும் மக்கள் நலன் என்ற ஒன்றைத் தவிர வேறெந்தக் காரணமும் இருந்ததில்லை என்று வாதாடினார். நாலரை மணி நேர வாதத்தில் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் பதில் சொல்லிவிட்டு ‘’இதன் பேரில் இந்த நீதிமன்றம் எனக்குத் தண்டனை வழங்கலாம்; ஆனால் மக்கள் மன்றம் என்னை நிச்சயம் தண்டிக்காது. அது இப்போது நடக்காமல் போகலாம். ஆனால் வரலாறு என்னை விடுதலை செய்யும்’’ என்ற உறுதிப் பாட்டை வெளிப்படுத்திப் பேசினார்.

அந்த உறுதிப் பாடும் மக்கள் பக்கம் நின்ற அவரது நேர்மையும் சேர்ந்து மக்கள் சக்தியை அவர் பக்கம் திருப்பியது. அதனால் அவர் வழக்குகளிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். அந்த வாக்குமூலம் பின்னர்- வரலாறு என்னை விடுதலை செய்யும்-History Will Absolve Me- என்ற தலைப்பில் நூலாகவும் வெளி வந்தது.இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நோய்வாய்ப் பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிடல், அங்கிருந்து திரும்பி மக்களைச் சந்தித்த போது திரும்பவும் ஒரு முறை அந்தப் புத்தகத்தை எடுத்து வாசித்தேன். நான்கைந்து தடவைக்கும் மேல் வாசித்துள்ள அந்தப் புத்தகத்தை இந்த முறை வாசித்து முடித்து விட்டுப் புத்தக அலமாரிக்குள் வைக்கவில்லை; இன்னும் வெளியே தான் இருக்கிறது. அந்த வார்த்தையைத் திரும்பவும் ஈழத்தை மையப்படுத்தித் தமிழக அரசியல் வாதிகள் இப்போது அடிக்கடி பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஈழத் தமிழ் மக்களின் 30 ஆண்டுத் துயர வரலாறு யார் யாரைத் தண்டிக்கும் என்பதை இந்தியத் தமிழர்களுக்குச் சொல்லும் இந்த நாடகம் இந்தத் தேர்தலின் முடிவுகளுக்குப் பின்னும் தொடரப் போகிறது என்பது இன்னும் அதிர்ச்சியான உண்மையாக இருக்கிறது.

தொடர்ந்து காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து இலங்கைத் தமிழர்களை ஏமாற்றும் கபட நாடகத்தை வெற்றிகரமாக நடத்தும் கருணாநிதியை வரலாறு மன்னிக்காது என வைகோ பேசியதை ஏற்றுக் கொண்டு அப்படியே ஜெயலலிதா சொன்னவுடன் நாவன்மையும் ஞாபக சக்தியும் ஒருங்கே கொண்ட கருணாநிதி,யுத்தம் ஒன்று நடந்தால் மக்கள் சாவது தவிர்க்க முடியாது எனச் சொன்ன ஜெயலலிதாவை நோக்கி வரலாறு உங்களை மன்னிக்காது எனச் சொன்னார். அவர் கூடுதலாக இன்னொரு காரணத்தையும் சொன்னார். பிரபாகரனைக் கைது செய்து இந்தியாவிற்குக் கொண்டு வந்து விசாரிக்க வேண்டும் எனவும் சொன்னவர் இந்தச் ஜெயலலிதா தான்; எனவே அவரை வரலாறு மன்னிக்கவே மன்னிக்காது; நிச்சயம் தண்டிக்கும் எனச் சொன்னார்.

ஈழமக்களின் விடுதலைக்கு எதிராக இருக்கும் காங்கிரஸ் ஆட்சியின் அதிகாரத்தைப் பயன் படுத்தி, நான்கு வருடம் 11 மாதகாலம் எல்லாச் சலுகைகளையும் பெற்று கட்சியின் தேவைகளையும் சொந்தத் தேவைகளையும் தனது அன்புக்குரிய மகன் அன்புமணி மற்றும் ரயில்வேத் துறை இணை அமைச்சர் வேலு ஆகியோர் மூலம் நிறைவு செய்து கொண்ட மருத்துவர் ராமதாஸ் இந்த நேரத்தில் இடை புகுந்து இலங்கைத் தமிழர்களுக்காகத் தனது பதவியையும் தங்கள் ஆட்சியையும் இழக்க முன்வராத கருணாநிதியையையும் அவரது கட்சியையும் வரலாறு மன்னிக்காது; தண்டிக்கும் எனச் சொல்கிறார்.

அப்படிச் சொன்னவரைத் தாக்கத் திமுகவின் பக்கம் ஆளில்லாமல் இல்லை. இலங்கைத் தமிழர்களின் நலனுக்கு எதிராகத் தொடர்ந்து கருத்துக்கள் சொல்லி வந்த அம்மையார் ஜெ.ஜெயலலிதா வின் அ.இ.அதிமுகவுடன் கூட்டுச் சேர்ந்ததற்காக மருத்துவர் ராமதாஸையும் அண்ணன் வைகோவையும் வரலாறு மன்னிக்காது எனத் தொல். திருமாவளவன் திருப்பித் தாக்கவே செய்தார்.திருமாவளவன் தங்களோடு சேர்ந்து வரவில்லை; திமுக கூட்டணியிலேயே நின்று விட்டார் என்பதற்கான தண்டனையை வரலாற்றிடமிருந்து பெற்றுத்தான் ஆக வேண்டும் என நெடுமாறன், கொளத்தூர் மணி, இயக்குநர் சீமான் போன்ற ஈழ விடுதலைப் புலிகளின் அதிதீவிர ஆதரவாளர்கள் சாபமாகத் தந்து கொண்டிருக்கிறார்கள்.

வரலாறு என்னை விடுதலை செய்யும் என்னும் காஸ்றோவின் வார்த்தைகளின் சாயல் கொண்ட வரலாறு மன்னிக்காது என்ற வாசகத்தை நமது தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் பயன்படுத்தும் போதெல்லாம் என் மேசை மீதுள்ள அந்தப் புத்தகம் என்னைப் பார்த்துச் சிரிப்பதாக நான் நினைத்துக் கொள்கிறேன். சேகுவோராவையும் பிடல் காஸ்றோவையும் முன்னோடியாகவும் அவர்கள் நடத்திய கொரில்லாத் தாக்குதல் யுத்தமுறைகளை முன்மாதிரியாகவும் கொண்ட ஈழ விடுதலைக் குழுக்கள், நமது தமிழ் நாட்டு அரசியல் வாதிகளை என்ன காரணம் பற்றி நம்பத் தொடங்கினார்கள் என்ற வரலாறு இன்னமும் புரியவில்லை. அதிலும் திரும்பத்திரும்பச் சேகுவோராவின் பெயரை உச்சரிக்கும் புலிகள் தமிழக அரசியல் வாதிகளின் பேச்சுக்களையும் செயல்பாடுகளையும் இவ்வளவு காலமும் நம்பியது தான் ஆச்சரியமாக இருக்கிறது. அப்படி ஆச்சரியப்படும் போதெல்லாம் நிகழ் கால இந்திய மற்றும் தமிழக அரசியல் வாதிகளின் ஆன்மா தொலைந்த விதம் பற்றிய பெரிய கேள்வியும் பெரிதாக முன் வந்து நின்று விடுகிறது.

இன்றைய தேதியில் பொதுவாக இந்திய அரசியலிலும் குறிப்பாகத் தமிழக அரசியலிலும் நடக்கும் செயல்பாடுகள் மக்கள் நலன் சார்ந்தது என்ற அடையாளம் கொண்ட எதாவது இருக்கிறதா? என்று யோசித்துப் பாருங்கள். மக்களின் நலனில் அக்கறை கொள்வது என்பதைக் கூட விட்டு விடலாம். மக்கள் இதனையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்; அவர்களுக்கும் இதில் பங்கேற்கும் உரிமை இருக்கிறது என்று நினைத்ததாகக் கூடத் தெரியவில்லை. தமிழகத்திலும் பாண்டிச்சேரியிலும் இருக்கும் நாற்பது நாடாளுமன்றத் தொகுதிகளில் பெரும்பாலான எண்ணிக்கையில் வெற்றி பெறுவது மட்டுமே முன் நிற்கும் ஒரே நோக்கம். அதன் மூலம் நடக்கும் கூட்டல் கழித்தல்கள், கணக்குகள் பேசும் தகைமை யுடையனவாக இல்லை. அதன் வழியாக அரசாங்கத்தை அமைத்து விட வேண்டும்; அதிகாரத்தைக் கைப்பற்றி விட வேண்டும்; அதில் தமது கட்சியும் அங்கம் வகிக்க வேண்டும் என்ற ஒற்றை குறிக்கோள் மட்டுமே முன் நிற்கும் போது காணாமல் போவது தனிமனித ஆன்மா மட்டும் அல்ல; அறம் சார்ந்த அரசியல் தேவை களும் கூடத் தான். ஆன்மாவைத் தொலைப்பது தனிமனிதர்களுக்கு மட்டுமே ஆபத்தானதல்ல; தேசத்திற்கும் கூட ஆபத்துத்தான்.

கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் ஆன்மா என்பதும், அதன் தேடலும் சமயம் சார்ந்த சொல்லாடல் அல்ல என்பது புரியலாம். மனிதனின் தன்னிலை குறித்த தேடலும் அதனைச் சரியானதாகக் காப்பாற்றிக் கொள்ள முயலும் முயற்சிகளும் தான் ஆன்மாவின் தேடல். அதனால் ஆன்மத் தேடல் என்பதைத் தனிமனிதப் பிரச்சினை என்று சொல்லி ஒதுக்கி விடவும் முடியாது; அது மக்கள் நலன் என்ற பொதுநிலையின் ஊடாகவும் தேடப்படு வதாகவும், தக்க வைக்கப்படுவதாகவும் இருக்கத்தான் செய்கிறது. ஆன்மா என்பது இங்கே சமயச் சொல்லாடலாக மாற்றப்பட்டு அர்த்தமிழந்து போனதாக மாறி இருக்கிறதென்னவோ உண்மை. அதற்காக அந்த வார்த்தையைத் தவிர்த்து விட முடியுமா என்ன? இந்த இடத்தில் இன்னொன்றையும் ஒவ்வொரு மனிதர்களும் நினைவில் கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம். நமது சமயங்கள் எதையெதையோ சொல்லிப் பயமுறுத்தியும் கூட ஆன்மா என்பது தொலைக்கப்படும் பண்டமல்ல என்பதை வலியுறுத்தி நிறுவ முடியவில்லை. எல்லாம் விலை குறித்தனவே என்ற கோஷத்தில் ஆன்மாவும் விலை குறித்ததாக ஆக்கப் பட்ட சோகம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

நமது ஜனநாயகம் கட்சி அடிப்படை ஜனநாயகம். வெற்றி பெறும் கட்சியின் தலைவருக்கே பதவி என்பது அதன் அடிப்படை. ஆனால் தேர்தல் முடிந்து தனியொரு கட்சி அரசமைக்க முடியாத சூழலில் திரும்பவும் தேர்தல் நடத்துவதை தவிர்க்க நமது அரசியல் நிர்ணயசபை ஒரு மாற்று ஏற்பாடொன்றை முன் வைத்தது. பெரும்பான்மையோர் ஏற்கும் நபருக்குத் தலைமைப் பதவியை அளிப்பது என்பது தான் அந்த ஏற்பாடு. நடந்து முடியப் போகும் தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களில் பெரும்பாலோர் விரும்பும் அல்லது பெரும்பாலோரின் ஆதரவைப் பெறும் ஒரு நபர் அரசு அமைக்கும் வாய்ப்பைப் பெறலாம் என்பது சிக்கலான காலத்திற்காக உருவாக்கப் பட்ட விதி. இந்த விதி மூலம் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறாத ஒருவர் கூட ஆட்சி அமைக்கும் வாய்ப்பு உண்டு. இதன்படி ஆட்சிப் பொறுப்பேற்றவர்கள் பலருண்டு. அப்படி ஒரு வாய்ப்பு இருப்பதால் தான் மன்மோகன் சிங் போன்ற படிப்பாளிகளும், ஐ.கே.குஜ்ரால் போன்ற பரபரப்பில்லாத அரசியல்வாதிகளும் நாட்டின் பிரதமர்களாக ஆக முடிந்தது . சி.என். அண்ணாதுரை முதல் மந்திரியாகப் பதவி ஏற்றது கூட இந்த விதி இருந்ததால். சரிபாதிக்கும் மேற்பட்ட உறுப்பினர்களின் ஆதரவு பெற்ற நபருக்கு ஆட்சி அமைக்கும் உரிமை வழங்கலாம் என்ற தற்காலிக விதியை- சிறப்பு விதியை- பொது விதியாக மாற்றிக் காட்டிவிட்டது கூட்டணிக் கால அரசியல் அரங்கம்.

காங்கிரசுக்கு மாற்றாக அரசியலில் தனித்தன்மையையும் தேசியவாதத்தையும் முன் வைத்த பா.ஜ.க., தொடர்ந்து பல மாநிலங்களில் கூட்டணி அரசியலாலும், கொள்கை அடிப்படை யிலான முடிவுகளை எடுக்காததாலும் தான் அதன் அடையாளத்தை இழந்தது என்பது அதன் தலைவர்களுக்குப் புரியாமல் போன ஒன்றல்ல. முதன்மை இடம் கிடைக்கா விட்டாலும் பரவாயில்லை;கூட இருந்தாவது அரசதிகாரத்தைப் பயன்படுத்திக் காரியங்கள் சாதித்துக் கொள்ளவேண்டும்; தொண்டர்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற வேண்டும் எனச் சமாதானங்கள் கூறி எடுக்கும் முடிவுகளின் கடைசி எல்லை அரசியல் இயக்கங்களின் ஆன்மா தொலைவதாக ஆகி விடுகிறது.

பாரதீய ஜனதா கட்சி மட்டும் தான் அறம் சார்ந்த அரசியல் ஆன்மாவைத் தொலைத்த கட்சி என்றில்லை. அணுசக்தி உடன்பாடு 123 என்பதைத் தடுத்து நிறுத்த வேண்டும் எனத் தீவிரமாக முனைப்புக் காட்டிக் காங்கிரஸைக் கதி கலங்க வைத்த இடதுசாரிகள், இந்திய நகரங்களில் வந்திறங்கிய பன்னாட்டுக் கம்பெனிகளின் வரவைத் தடுக்க அத்தகைய தீவிரத்தைக் காட்டாமல் இருந்தது ஏன்? குறிப்பாகத் தமிழகத்தில் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை முன்னின்று நடத்தித் தரும் தமிழக அரசின் திட்டங்களை விமரிசிக்கவோ, தடுத்து நிறுத்தவோ முயற்சிக்காமல் வாய்மூடி இருந்து விட்டு இப்போது மாற்று அணிக்குப் போன பின்னணி என்னவாக இருக்கும்? இப்படிக் கேள்விகளைக் கேட்டுக் கொண்டே போகலாம்.

தங்களின் ஒவ்வொரு நடவடிக்கையையும் அரசதிகாரத்தைக் கைப்பற்றத் துடிக்கும் ஆவலுடன் வெளிப்படுகின்றன என்பதில் அரசியல்வாதிகளுக்குக் கூச்ச நாச்சமே இல்லை. ஆனால் அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர் இவர்கள் போடப் போகும் வேடம் மக்கள் நல அரசாங்கத்தை நடத்துவது என்பதாகத் தான் இருக்கப் போகிறது. இவர்களுக்கெல்லாம் மனம் என்று இருக்கிறதா என்றும், அதில் ஆன்மாவின் தேடலும் அதன் பயணப்பாதையும் தெளிவாக இருக்கிறதா? கேள்வி கேட்டால் நிச்சயம் ஒருவர் கூடத் தெளிவான பதிலைக் கூறமாட்டார்கள் என்றே தோன்றுகிறது.


ஆன்மாவைப் பண்டமாகக் கருதித் தொலைத்து விட்ட நமது தலைவர்கள் அதன் இடத்தை அதிகாரத்திற்குக் கொடுத்து விட்டு அதன் பின்னால் தலைவிரி கோலமாக அலைகிறார்கள் என்பது நிகழ்கால உண்மை. வரலாறு என்னை விடுதலை செய்யும் என்ற காஸ்றோவின் அந்த புகழ் பெற்ற வாக்கியத்தைச் சொல்லவும் தங்கள் செயல்களை மக்கள் நலன் என்ற அறத்தின் பெயரால் நியாயப்படுத்தவும் நிகழ்கால இந்திய அரசியல்வாதிகள் யாருக்காவது தகுதி இருக்கிறதா ? என்ற எனக் கேட்டால் ஒருத்தருக்கும் இருக்காது என்று தான் தோன்றுகிறது. மனம் என ஒன்றும் அதற்குப் பதில் சொல்ல வேண்டிய கடமையும் தங்களுக்கு இருக்கிறது என நம்பும் மனிதர்களாக நமது அரசியல்வாதிகள் இல்லாமல் போய் நீண்ட காலமாகி விட்டது. மனத்தைத் தொலைப்பது என்பது தான் ஆன்மாவை விற்றல் என்பதாக உருமாறி இருக்கிறது. இவர்களை நோக்கி வரலாறு உங்களை விடுதலை செய்யாது; தண்டிக்கவே செய்யும் என்று கூறத் தோன்றுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்