விளம்பரத்தூதர்களின் முகங்கள்.
பள்ளிக் கூட வாகனத்தில் கண்ணயர்ந்தபடி அசைந்து அசைந்து செல்லும் அந்தச் சின்னப் பெண்ணைக் காட்டும் அந்த விளம்பரத்தை நீங்கள் பார்த்திருப்பீர்கள். பார்க்கவில்லை என்றால் தினந்தோறும் பரபரப்புடன் நடந்து கொண்டிருக்கும் ஐபிஎல் இருபதுக்கு /20 கிரிக்கெட் ஆட்டங்களைப் பாருங்கள்.
சிறுமியைக் காட்டிய காமிரா தூரத்தில் அந்த வாகனத்தைத் துரத்தியபடி நாய்க்குட்டி ஒன்று ஓடி வருவதையும் காட்டும்.அடுத்த காட்சியாகச் சிறுமி திடீரென்று எதையோ மறந்து விட்டோம் என்ற உணர்வுடன் தவிப்பதைக் காணலாம். இப்போது நாய் காமிராவின் அண்மைக் காட்சியில் வாகனத்தை நெருங்கி யிருக்கும்.அதன் வாயில் பள்ளிக்கூடச் சிறுமியின் கழுத்துப் பட்டை தொங்கிக் கொண்டிருக்கும். காட்சிகளைத் தொடர்ந்து உதவிக்கு நன்றி என்ற வாசகம் ஆங்கிலத்தில் விரியும். அத்தோடு இத்தகைய உதவி வேண்டுமானால் உங்களிடம் இருக்க வேண்டியது வோடாபோன் என்பதைக் குறிப்பால் உணர்த்தும் அந்த விளம்பரக்காட்சி.
மறந்து விட்ட கழுத்துப் பட்டையை எடுத்து வர வோடாபோனைப் பயன்படுத்தலாம் என்பது சரித் தான். தபால் தலை ஒட்டும் மென்பசையாக வோடாபோன் எப்படிப் பயன்படும் என்று நாம் கேட்கக்கூடாது. அந்த விளம்பரத்தில் வரும் அந்த நாய் சிறுமிக்கு எச்சில் தந்து தபால் தலை ஒட்ட உதவுகிறது என்ற கதையைப் பார்வையாளன் நம்புகிறான். சொல்லப்படும் கதையை நம்புவதன் மூலம், நம்பிக்கையான கதைக்குப் பின் முன் நிறுத்தப்படும் பொருளை யும் நுகர்வோர் ஏற்றுக் கொள்வார்கள் என்பது வியாபாரத்திலும் விளம்பரத்திலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஓர் உத்தி.
அதிகம் உயரம் இல்லாமல் , பயமுறுத்தும் பார்வையில்லாமல், அலட்டாமல் , மென்மையாக மனிதர்களின் பின்னால் ஓடி வரும் அந்த நாய் பஹ் என்ற இனத்தைச் சேர்ந்தது என நாய்கள் வளர்ப்பதில் ஆர்வம் கொண்ட ஒரு நண்பர் சொன்னார். அவரது வீட்டில் ஜெர்மன் ஷெப்பர்டு, ராஜபாளையம், பொமரேனியன் என வகைக்கு ஒன்றாக மூன்று நாய்களை வளர்ப்பதாகவும், நான்காவதாக இந்தப் பஹ் இன நாயொன்றை வாங்க வேண்டும் என்ற முயற்சியில் அதன் விலையைக் கேட்டு அதிர்ந்து போனதாகவும் சொன்னார். சென்னையில் நாய்கள் வளர்த்து விற்கும் இடங்களில் தொடர்பு கொண்ட போது ஒரு நாயின் விலை 25000 ரூபாய் சொன்னால் அதிர்ச்சி அடையத்தானே செய்வார்.
வீட்டின் பெரியவர்களுக்குப் பிடித்த நாய்கள் மீது அந்த வீட்டின் கடைக்குட்டி சிறுமிக்கு விருப்பம் இல்லை. அவளுக்குத் தோழியாகவும் உதவிகரமாகவும் இருக்க பஹ்¢ இன நாயொன்று வேண்டும். நடுத்தர, உயர்நடுத்தர வர்க்கத்துக் குட்டித்தேவதைகளின் ஆசையை நிறைவேற்ற இருபத்தைந்தாயிரம் ரூபாய் செலவழிப்பதைத் தவிர அவர்களின் பெற்றோர் களுக்கு வழி என்ன இருக்கிறது?
சாதுவாகவும் நண்பராகவும் வோடாபோன் விளம்பரத்தில் வரும் அந்த நாய்க் குட்டி வோடாபோனின் விளம்பரத் தூதரகளில் ஒன்று. முன்பு ஹட்ச் என்ற பெயரில் இருந்த அலைபேசி வியாபார நிறுவனம் தான் இப்போது வோடாபோன் நிறுவனமாகக் கைமாறி யிருக்கிறது. ஹட்சை வாங்கிய வோடாபோன் அதன் வணிகத் தூதரான அந்த நாய்க் குட்டி யையும் சேர்த்தே வாங்கியிருக்கலாம்.ஹட்ச் நிறுவனத்தின் விலையில் அந்த விளம்பரத் திற்கும் குறிப்பிட்ட விலை பேசப்பட்டிருக்கும். இவையெல்லாம் வியாபாரப் பேரங்களும் ரகசியங்களும் எனப் பொது மக்களாகிய நாம் விட்டு விலகி முடியாது.
இவ்வகை வியாபாரங் களும் அதற்குத் துணை புரியும் விளம்பரங்களும் தனிமனிதர்களில் பணப்பைக்கு மட்டுமே குறி வைப்பன அல்ல. தனிமனிதர்களின் மனங்களையும், அவர்களின் பண்பாட்டு வெளிப்பாடு களையும், கலையியல் ஆர்வம், ஈடுபாடு, சோதனை முயற்சிகள் என அனைத்தையும் குறி வைத்துத் தாக்கிச் சிதைக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
புதிதாகத் தொடக்கப்பட்ட ஒரு தொழிலையையோ, வணிக நிறுவனத்தையோ, நுகர் பொருளையோ அறிமுகப் படுத்தும் நோக்கத்தில் செய்யப்படும் விளம்பரம் வியாபாரத்தின் தேவைகளுள் ஒன்று என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. தங்கள் தயாரிப்பு ஒன்றை நுகர் வோரிடம் கொண்டு செல்ல விளம்பரத்தைப் பயன் படுத்துவது என்ற நிலை யிலிருந்து அடுத்த கட்ட நகர்விற்குத் துணை செய்பவர்கள் விளம்பர மாடல்கள்.விளம்பர மாடல்கள் ஒரே மாதிரியான பொருட்களின் போட்டியில் இதுதான் சிறந்தது என்று சொல்லும் வேலையைச் செய்கிறார்கள்.
விளம்பரச் செலவு என்பது தாராளமயப் பொருளாதாரத்தின் உடன் நிகழ்வு.தொழிலுக்கான முதலீட்டு மூலதனத்தில் சரிபாதியைக் கூட விளம்பரத்திற்கு ஒதுக்கலாம் என்பது நவீன மேலாண்மை நிறுவனங்கள் சொல்லித் தரும் பாடங்களில் ஒன்று. அந்நிறுவனங்களே விளம்பரத்தூதர் என்ற கருத்துநிலையையும் வியாபாரப் போட்டிக்குள் அறிமுகப்படுத்தி யுள்ளன. அறிமுகப் படுத்தியதோடு விளம்பரத்தூதர்களை உருவாக்கும் முறைகளையும் கூடக் கற்றுத் தருகின்றன.
விளம்பரத் தூதர் பிரபலமாக இருக்க வேண்டும் என்பது அதன் பால பாடங்களில் ஒன்று. பிரபலம் என்றவுடன் சாதாரணப் பிரபலம் என்று நினைத்து விட வேண்டாம். ஒருவர் ஈடுபடும் துறையில் முதல் இடத்தில் - நம்பர் ஒன்னாக இருக்க வேண்டும்.கிரிக்கெட் என்றால் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் அல்லது அதிரடித் தோனி; திரைநாயகன் என்றால் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான்/ விஜய் ; சின்னத்திரை என்றால் ரேட்டிங்கில் முதல் இடத்தில் இருக்கும் தொடரின் நாயகி அல்லது ஜோடி நம்பர் ஒன்னில் முதலிடத்தில் வந்த நாயகன்.
இப்படி முதல் இடத்திற்கான போட்டிகளை உருவாக்குவதும் இந்தத் தொழில் நிறுவனங்கள் தான் என்பதை ஊடகப் பார்வையாளர்கள் உணர்ந்திருக்கக் கூடும். நிறுவனங்கள் உருவாக்கும் போட்டிக் களத்தில் ஈடுபடும் தனிநபர்கள் தங்களைப் பிரபலப்படுத்திக் கொள்வதற்காகப் பின்பற்றும் உத்திகளும் சமரசங்களும் தங்களது தனிமனித ஆளுமைக்கு ஏற்படுத்தும் பங்கத்தை அறிந்துள்ளனரா ? என்ற சந்தேகம் எழுகிறது.
இதை நினைத்துப் பார்த்தால் மானாட .. மயிலாட.. போன்ற நிகழ்ச்சிகளில் இப்படியான ஆட்டங்களைப் போட மாட்டார்கள். இத்தகைய ஆட்டங்கள் முன்பு கிராமங்களின் திருவிழாக் களில் ரிகார்ட் டான்ஸ் என்ற பெயரில் நடந்த ஆட்டங்களின் நகல்களாகத் தான் இருக்கின்றன. அதில் வெளிப்படுவது நடனமோ, திறமையோ அல்ல; ஆசைகள் மட்டும் தான்.
வியாபார நிறுவனங்களுக்காகப் பிரபலங்களை உருவாக்கும் போட்டியில் முதலிடம் வகிக்கும் விஜய் தொலைக் காட்சி தொடர்ந்து மனிதர்களைத் தன்னிலை அற்றவர்களாக மாற்றிப் பிரபலமாகும் போட்டிக்குள் தள்ளிக் கொண்டே இருக்கிறது. அதைப் பார்த்து மற்ற தொலைக் காட்சி அலைவரிசைகளில் பங்கேற்பவர்களும் அந்தப் பாதையிலேயே பயணம் செய்கிறார்கள். போட்டி நிகழ்ச்சிகளில் நடுவர்களாக இருப்பவர்களுக்கும், பங்கேற்பாளர்களுக்கும் இடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகள், சச்சரவுகள், சண்டைகள் போன்றன பார்வையாளர்களுக்குக் காட்டப்பட வேண்டியன அல்ல. சிம்புXபப்லு; சிம்ரன்Xவிஜய் ஆதிராஜ்; எஸ்.ஜே. சூர்யா X போட்டியாளர்கள் என உருவாக்கிக் காட்டப்பட்ட மோதல்கள் உண்மையான மோதல்களா? பிரபலங்களை உருவாக்கும் உத்தியா என்பது விடை தெரியாத மர்மங்களே.
கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீசாந்தை அடித்த ஹர்பஜன் மோதல் காட்சி கூட திட்டமிட்டு உருவாக்கப் பட்ட காட்சி தானோ என்ற ஐயங்களை நமது ஊடகங்கள் எழுப்பியதை நினைவுக்குக் கொண்டு வந்தால் இது புரியலாம்.தாராளமயப் பொருளாதாரம் பெரும் லாபத்தை நோக்கமாகக் கொண்டது.பெரும் லாபத்திற்கு தேவை விளம்பர மாடல்கள் மட்டும் அல்ல. விளம்பரத்தூதர்கள் தான் முக்கியத்தேவை. அதற்குத் தேவை பிரபலங்கள். மனதில் நிற்கும் பிரபலங்கள்.பிரபலங்கள் நாய்க்குட்டிகளாகவும் இருக்கலாம்; மனிதர்களாகவும் இருக்கலாம்.
விளம்பரத்தூதராக ஆக்கப்பட்ட நாய்க்குட்டி தன் இனத்துக்கு விலையையும் மதிப்பையும் கூட்டியது போல விளம்பரத்தூதர்களாக ஆகும் மனிதர்கள் செய்வதில்லை. அதற்குப் பதிலாகத் தொடர்ந்து தான் பரிந்துரைக்கும் பொருளை மதிப்புடையதாக ஆக்குவார்கள் என்பதால் தான் மனிதர்கள் விளம்பரத் தூதர்களாக ஆக்கப்படுகிறார்கள். 04-05-08
கருத்துகள்